சாப்பிடும் போது என்ன பேச்சு என்று கண்டித்தார்களோ என்னவோ சாப்பிடும் போது என்ன படிப்பு என்று அந்தக் குடும்பத்தில் யாரும் கண்டிக்கவில்லை. எல்லோருக்கும் அதே பழக்கம்.பணி மாறுதல் காரணமாக ஊர் ஊராய்ச் சென்று கொண்டிருந்த அந்த எல்.எம்.பி மருத்துவரின் குடும்பம், ராணுவப் பணியில் இருந்த மூத்த மகன் சென்னைக்கு மாற்றலாகி வந்த பொழுது அங்கு நிலை கொண்டது.
நான்கு ஆணும் ஐந்து பெண்ணுமாகப் பெரிய குடும்பம். அதில் 22.4.61 ல் பிறந்த பெண்ணைப் பற்றித்தான் நாம் இங்கு பேசுகிறோம். நான்கு அக்கா, மூன்று அண்ணா, ஒரு தம்பி எனப் பெண்களில் கடைக்குட்டியானவருக்குப் பத்மாவதி எனப் பெயர் சூட்டியிருந்தனர் டாக்டர் சேதுராமன் – சியாமளா தம்பதியர். அந்தப் பெண் ‘பத்மா’ என்று வீடு சுருக்கியதையும் சுருக்கி ‘மா’ என்ற பெயரில் எழுதப் போவதை தந்தை அறியவில்லை. தந்தை தொழுதூரில் இருக்க ஐந்தாம் வகுப்பு மாணவியான பத்மா சென்னைவாசியாகி விட்டார்.
வாசிப்பும் விளையாட்டில் ஈடுபாடும் சகோதர, சகோதரியரில் அநேகரின் ஈடுபாடாக இருந்தது. அதில் ஒரு அக்கா விளையாட்டு ஆசிரியராகவே உருவானார். இரண்டு அண்ணன்கள் மிகத் தீவிர வாசகர்கள். அவர்கள் வாசிப்பும் கருத்துப் பரிமாற்றங்களும் பத்மாவையும் தாக்கின. ஏழு, எட்டு வகுப்பிலேயே எழுத்து பற்றிக் கொண்டது. கல்லூரி நாட்களில், கதை, கவிதை படைக்கலானார்.
மிகப் பெரிய நண்பர் குழாம் உள்ள குடும்பம். நடைமுறையில் கண்டிப்பாக இருப்பதில் மூத்த அண்ணன் கறார் என்ற போதும் ஆர்வங்களுக்குக் கட்டுப்பாடில்லை. இரவுகளில் பாடல் கேட்பது, வானொலி ரசனை, பாடும் வழக்கம், கேரம் விளையாட்டு, கடற்கரைக்கு நண்பர்கள் புடை சூழ பத்துப் பதினைந்து பேராகச் செல்வது என்று வசதி குறைவாக இருப்பினும் உற்சாகமாகவே வாழ்வு தொடர்ந்தது. கல்கியில் வேலை பார்த்த உறவினர் ஒருவர் மூலம் சங்கீத சீசனில் நிகழ்ச்சிகளுக்கு சீசன் டிக்கெட் கிடைக்கும். தடையின்றி ரசனைகள் வளர்த்துக் கொள்வதையே குடும்பம் வளர்ப்பு முறையாக வைத்தது.
வருமானத்தைப் பெருக்கியாக வேண்டி வீட்டில் அனைவருமே பகுதி நேரமாகவோ, முழு நேரமாகவோ வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். இளமையில் பட்டுப் பாவாடை ஆசை இருந்ததுண்டு ஆனால் பெரிய குடும்பத்தில் அதைப் பற்றி நினைக்கவே முடியாது. தீபாவளி, அவரவர் பிறந்தநாள் என வருடத்திற்கு இரண்டு உடைகள், மூன்று வேளையும் சோறு-ஞாயிறு ஒருநாள் டிபன் கிடைக்கும். ஞாயிறன்று அவரவருக்கும் வரையறுக்கப்பட்ட வேலைகள், வீட்டுத் தூய்மைப்பணி என்று அண்ணனின் நெறிமுறைகள். அவரிடம் நெருங்கிப் பேசவே எல்லோருக்கும் பயம்… “இவ்வளவு காலமும் அப்படியே போக, சமீப வருடங்களில் அவர் பிள்ளைகள் திருமணத் தருணத்தில்தான் பயம் குறைந்து அவரிடம் பேசினோம்” எனச் சிரிக்கிறார் பத்மா.
கல்லூரி காலத்தில் எறி பந்து, வட்டு எறிதல் விளையாட்டுகளில் மாநில அளவிலான பரிசு பெறும் வீராங்கனை பத்மா.
காயிதே மில்லத் கல்லூரியில் இளங்கலை பௌதிகம் படித்த பத்மாவுக்கு முதுகலை இதழியல்தான் படிக்க வேண்டும் என்ற தீவிர ஆர்வம் பிறந்தது. வீட்டில் ஒன்பது பேரில் இளங்கலை தாண்டிய ஒரே பெண் ஆனார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் இதழியல் பயிலும் நாட்களில்தான் வாழ்வின் முக்கிய திருப்பம் நேர்ந்தது.
முக்கிய இதழியலாளரும், நாடகக் கலைஞருமான ஞாநியுடன் நேசம் மலர்ந்தது. பத்மாவின் அண்ணன், ஞாநி நடத்திய “பரீக்ஷா” நாடகக் குழுவில் இருந்தார். பத்மாவுக்கும் அவர் தோழிகளுக்கும் இதழியல் குறித்த வழிகாட்டல்களை ஞாநி வழங்குவதுண்டு.அப்போது எதிரொலி பத்திரிகையில் பணியாற்றி வந்த ஞாநி வகுப்பு முடியும் நேரம் சரியாக வந்து சேர இருவரும் பேசியபடியே பல்கலையிலிருந்து மைலாப்பூர் வரை நடந்த நாட்கள் …பின்னாளில் இந்த சுவாரஸ்யத்தில் என் முதுகலைக் கல்லூரி வாழ்வின் சுவாரஸ்யங்களை அவ்வளவாக அனுபவிக்கவில்லை எனத் தோன்றுகிறது என்கிறார் பத்மா.
81-83 முதுகலைப் படிப்போடு காதலும் வளர்ந்தது. பத்மாவின் படிப்பு முடியும் போது ஞாநியின் தாய் இறந்து விட்டதால் திருமணம் செய்து கொண்டு விடலாம் என்ற முடிவெடுத்தனர்.
காதலிக்கும் காலத்திலேயே பத்மாவின் அண்ணாவிடம் தங்கள் காதலை ஞாநி சொன்ன பொழுது அவர் கன்னத்தில் பளார் என்று அறைந்து she deserves a better person என்று சொன்னாராம் அண்ணன். ஞாநியின் தங்கையைக் காதலித்து மணந்தவர் அந்த அண்ணன். அவருக்கு தன் சகோதரிகளிலேயே பத்மாவை மிகவும் பிடிக்குமாம். வருமானத்தைப் பற்றி அக்கறைப்படாத ஞாநி மாதிரி ஒருவரைத் திருமணம் செய்தால் தன் தங்கை சிரமப்பட வேண்டியிருக்கும் என்று ஞாநியின் தங்கையிடம் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார்.
பிறகு வீட்டில் பேசிய போது பத்மாவின் மூத்த சகோதரர் சம்பிரதாய முறைப்படி திருமணம் செய்து வைக்க விரும்பினார். சம்பிரதாயங்களைப் பின்பற்றாத ஞாநியின் விளக்கங்களைப் பத்மாவும் ஏற்றார்.
பரீக்ஷாவின் “தேடுங்கள்” நாடகம் ம்யூசியம் தியேட்டரில். நாடகம் தொடங்குவதற்கு முன் மாலை மாற்றித் திருமணம்.பத்மாவுக்குப் பிடித்த “தேடுங்கள்” நாடகம் தொடர்ந்தது. திருமணத்தில் பங்கேற்ற குடும்ப உறவுகள் குறைவு, நண்பர்கள்தான் அதிகம். புகைப்படங்கள் எடுத்தவர் எழுத்தாளர் அசோகமித்திரன் .
திருமணத்தின்போது ஞாநி வேலை பார்க்கவில்லை. ஜூனியர் விகடனில் எழுதிக் கொண்டிருந்தார். பத்மா திருமணத்துக்குப் பின் சிலகாலம் வேலைக்குச் சென்றார். பின்னர் மகன் மனுஷ் நந்தனுக்கு ஐந்து வயதானபோது வேலையில் சேர்ந்தார். இருபத்திரண்டு வயதில் திருமணம். மறுவருடம் குழந்தை.
பிரசவ வலி வந்தவுடன் தானே ஆட்டோ பிடித்து மருத்துவமனையில் சேர்ந்து கொண்டு, பிள்ளை பெற்ற ஒரு வாரத்திலேயே வீட்டைக் கவனிக்கவேண்டிய சூழல். ஞாநியைப் பொறுத்தவரை எப்போதும் வீடு நிரம்பிய நண்பர்கள். விவாதங்கள். ஒத்திகைகள். வருமானம் இருக்கும். இல்லாமலும் இருக்கும்.
சிக்கனத்துக்குப் பிரச்சினை இல்லை பத்மாவிடம். திருமணத்துக்கு முன்பே அண்ணன்மார்கள் கொடுத்த பணத்தில் நான்கைந்துபேர் கொண்ட குடும்ப நிர்வாகத்தைக் கையிலெடுத்துப் பழகியவர்தான்.
மனுஷ் பள்ளி செல்ல ஆரம்பித்தவுடன் வேலைக்குப் போக வேண்டும் என்று முடிவெடுத்தார். அதற்கு முன்பே மூன்று வயது தொடங்கியே தனியாகக் கடைக்கு, சலூனுக்கு அனுப்புவது, தன் வேலையைத் தானே கவனித்துக்கொள்வது என மகனைப் பழக்கியிருந்தார்.
89 -91 விகடனில் வேலை. அதையடுத்து 92-95 MSSRFல் பணிபுரிந்தார். மீனா சுவாமிநாதனுடன் வேலை தொடர்பாக மட்டுமல்லாது, குடும்ப சிக்கல்கள், குழந்தை வளர்ப்பு, பொருளாதாரம் என எது வேண்டுமானாலும் பகிரக்கூடிய நல்ல நட்பும் இருந்தது.
இந்தச் சூழலில் இரண்டு அண்ணன்களின் குடும்பம் பயணித்த கார் விபத்துக்கு உள்ளானது. அவர்களைப் பராமரிப்பதற்காக வேலையை விட்டார் பத்மா. ஆறுமாத காலம் அப்படிப் போக பின்னர் மக்கள் தொகையியல் கல்வி குறித்த M.Phill படிப்பில் சேர்ந்தார்.
சென்னைக் கல்லூரிகளில் 1997–ல் இதழியல் பாடப்பிரிவு தொடங்கப்பட்ட பொழுது விரிவுரையாளராக வைஷ்ணவா கல்லூரி, மகளிர் கிறிஸ்தவக்கல்லூரி, சென்னை கிறிஸ்தவக்கல்லூரி, எம்ஜியார் ஜானகி மகளிர் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் என பத்மாவின் பணி தொடர்ந்தது.
தனியார் தொண்டு நிறுவனங்களுக்கான ஆய்வுப் பணிகள், மொழிபெயர்ப்பு என்று பத்மாவின் சிறகுகள் விரிந்தன. MS சுவாமிநாதன் ஆய்வு நிறுவனத்துக்காக பத்மா உருவாக்கிய ‘தவிப்பு’ என்ற வேலைக்குச் செல்லும் பாலூட்டும் தாய்மார்கள் பற்றிய வீடியோ பெரிய வரவேற்பைப் பெற்றது. நாடெங்குமுள்ள இருநூறுக்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள் இதன் பிரதியை வாங்கினார்கள். திருவனந்தபுரத்தில் நடைபெற்ற சர்வதேச முதல் வீடியோ பட விழாவிலும் திரையிடப்பட்டது.
சிறார் நலம் சார்ந்த ஒலிச்சதங்கைகள் பலவற்றையும் MS சுவாமிநாதன் ஆய்வு நிறுவனத்தின் வானொலி நிகழ்ச்சிகளுக்காக உருவாக்கினார்.
இதனிடையே 99-2000 மீண்டும் விகடன் பணி. தொடர்ந்து முன்பருவ மழலைக் கல்விச் சுமை குறித்தும், மகளிர் நலம் குறித்துமான வீடியோக்களை உருவாக்கி வந்தார். விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு குறித்த தொலைக்காட்சித் தொடர் உருவாக்கத்திலும், ஆடை வடிவமைப்பிலும் பங்கு வகித்தார். மகளிர் சுகாதாரம் குறித்து ஒரு நூல், தொடர்ந்து எழுதப்பட்டு வந்த கட்டுரைகளின் தொகுப்பாக “பெண்மொழி” வெளியீடு.
என் வாழ்வை 2005-க்கு முன் 2005-க்குப் பின் என்று பிரித்துப் பார்க்கலாம் என்கிறார் பத்மா.
2005-ல் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கத்தில் இணை இயக்குநராகப் பணியில் சேர்ந்தார். அங்குதான் வளரிளம் பருவத்தினருக்கான வாழ்க்கைத்திறன் கல்வியின் பொறுப்பாளர் ஆனார். பயிலரங்க நூல்கள், திட்ட உருவாக்கங்கள், செயலாக்குதல், பயணங்கள், கூட்டங்கள் எனப் பரபரப்பான மூன்றாண்டுகள். மூன்றாண்டு ஒப்பந்த காலம் முடிந்த பிறகு RED RIBBON EXPRESS ரயிலின் தமிழக வருகை இருந்ததால் யுனிசெப் ஆலோசகராக 3 மாதங்கள் ரயிலோடே வாழ்ந்தார்.
Red Ribbon Express Train-ல் ஒவ்வொரு நாளும் ஒரு சவால். முதல் நாள் ரயில் காட்பாடி வந்து சேர்ந்த அன்றே கலைக் குழுவிலிருந்த ஒருவர் சாலை விபத்தில் மரணமடைய சமாளித்து நிகழ்ச்சி தொடர்ந்தது. முதல் நாளே பயணத் திட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தை அடைந்து முன்னேற்பாடுகளை செய்வது உள்ளிட்டவை திட்ட ஆலோசகர் பத்மாவின் பணிகள். ஒரு சில இடங்களில் ரிப்பன் வெட்டித் திறக்க வேண்டிய பிரமுகர் வராவிட்டால் பள்ளிப் பிள்ளைகள் காத்திருக்க வேண்டாம் என அவர்களை அனுமதித்து விட்டு, பிரமுகர் வரும்போது, திறப்பு விழாவை நடத்திக் கொள்ளலாம் என ஏற்பாடு செய்து விடுவது பத்மாவின் வழக்கம்.
ரயிலை இரண்டு நாட்கள் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்க வேண்டும் என்பதால், சில ரயில் நிலையங்களில் தள்ளி ஒதுக்குப்புறமாக உள்ள இருப்புப் பாதையை ஒதுக்குவார்கள். அதற்காக, ஒரே நாளில் தனியாகப் படிக்கட்டுகளை உருவாக்கச் சொல்லி அவற்றையும் பிரித்து எடுத்து ஊர் ஊராய்க் கொண்டுபோனது ஒரு அனுபவம்.
RED RIBBON EXPRESS வண்டியில் ஒவ்வொரு பெட்டியிலும் சோதனையகம், பயிற்சி, ஆலோசனை என்றெல்லாம் அமைக்கப்பட்டிருக்கும். பார்வையாளர்கள் ஒவ்வொரு பெட்டியாகக் கண்டு வருவது வழக்கம். பெரும்பாலும் பள்ளியிறுதி வகுப்புகளில் உள்ள மாணவர்கள் வருகை தருவார்கள். விவரமின்றி வயது வரம்பு தொடாத குழந்தைகளைப் பள்ளியினர் கூட்டி வந்து விட்டாலும் விளக்கங்கள் வேண்டாம்: அவர்கள் ரயிலில் ஏறி இறங்கிப் போகட்டும். பின்னாளில் அவர்களின் நினைவுப் பேழையில் அந்த அனுபவம் இருக்கும் என்று சொல்லி விடுவார் மா. இந்தப் பயணத்தில் சந்தித்த ஒரு சிறுவன் பரிசாகத் தந்த குட்டி ஓலைப்பெட்டியை இன்றும் பாதுகாத்து வருகிறார்.
TANSACS பணிக்காலத்தில் தொடங்கிய பத்மாவின் வாழ்க்கைத்திறன் பயிற்சி செயல்பாட்டின் எல்லைகள் விரிந்து கொண்டே போயின. பள்ளி மாணவர்களோடு ஆரம்பித்த வாழ்க்கைத்திறன் கல்வி பயணம், ஆசிரியர்கள், சிறார் சீர்திருத்தப்பள்ளியில் இருந்த இளம் சிறார்கள், பாலியல் தொழிலாளர்கள், மாற்றுப் பாலினத்தவர் என நீண்டது .
தமிழக அரசின் புதுவாழ்வு திட்டத்திற்காக சமூக பாலினம் (GENDER) மற்றும் வாழ்க்கைத்திறன் கல்வி குறித்த பயிற்சி வகுப்புகளுக்காக 22 மாவட்டங்களைச் சேர்ந்த சுய உதவிக் குழு பெண்களைச் சந்தித்தது நகரம், கிராமம், மலைப்பகுதிகள் என பல்வேறு தரப்பட்ட பெண்களின் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள மிகவும் உதவியது என்கிறார். குழந்தை வளர்ப்பு குறித்து தமிழக அரசின் புதுவாழ்வு திட்டமும்- UNICEFம் இணைந்து நடத்திய பயிற்சிக்கான திட்டமிடல், பயிற்சிக் கையேடுகளை உருவாக்குதல், பயிற்சியாளர்களுக்கு வழிகாட்டுதல் எனப் பத்மாவின் பணி தொடர்ந்தது. இரண்டு மாவட்டங்களுக்கான முன்னோடி திட்டம் அது.
MSSRF போன்ற தொண்டு நிறுவனங்கள், அரசு அமைப்புகள் எனப் பல அமைப்புகளுக்காகவும் வாழ்க்கைத்திறன்கள், பாலின சமத்துவம், உடல்நலம், பாலின வன்முறைச் சிக்கல்கள் போன்ற தலைப்புகளில் இது போன்ற பயிற்சித் திட்டங்களை வடிவமைத்து நடத்தியும் இருக்கிறார்.
UNICEF, TANSACS போன்ற நிறுவனங்களின் வழிகாட்டல் புத்தகங்கள், தொண்டு நிறுவனங்களுக்கான மொழிபெயர்ப்புகள், NIMHANS மருத்துவமனைக்காக சுனாமியால் பாதிக்கப்பட்டோரின் மனநலம் காப்பது குறித்த கையேடு, RGNYID நிறுவனத்துக்காக வாழ்க்கைத்திறன் கையேடு எனப் பத்மா செய்தவற்றுள் UNIVERSITY COLLEGE OF LONDON (UCL) பாடத்திட்டத்துக்காக சமூகவலைதளங்கள் குறித்த மொழிபெயர்ப்பும் அடங்கும்.
வாழ்க்கைத்திறன் கல்வி வழங்கும் இவர் படைப்புகள் பாடத்திட்டத்திலும் இடம் பெற்றுள்ளன.
வளரிளம் பருவத்தினருக்கான வழிகாட்டலை வழங்கும் ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கியது, அந்த வயது மாணவர்களோடு இயங்கியது மறக்க முடியாத அனுபவம் என்கிறார் பத்மா. AIDS குறித்த விழிப்புணர்வும் இதில் இடம்பெறும் என்பதால், “AIDS டீச்சர்னு சொல்றாங்க… நா வரமாட்டேன்.” என்று வருந்திய ஆசிரியர்களுக்குப் புரிய வைக்க வேண்டியிருந்தது என்கிறார்.
இதழியல் கற்பிக்கும் பகுதி நேரப் பணியில் இருந்த போது மாணவிகளிடம் கமலாதாஸ் SEXUALITY பற்றிப் பேசியதைப் பகிர்ந்து கொண்டதைக் குற்றமாகக் கருதிய ஒரு கல்லூரி நிர்வாகத்தினரை நினைவு கூர்கிறார் பத்மா. சிலபஸ் தாண்டி இது பற்றி எல்லாம் ஏன் பேசினார் என அவர்கள் விளக்கம் கேட்க அந்தப் பணியைத் துறந்தார்.
“எனது குறைகளை யாரும் சுட்டினால் ஒழுங்கு செய்து கொள்ளத் தயங்க மாட்டேன். ஆனால் அடக்குமுறையை ஏற்பதில்லை” எனத் தன் இயல்பை விளக்குகிறார். நம் சமூகச் சூழலைப் புரிந்து கொள்ள ஏற்கனவே இருந்த அனுபவங்கள் உதவின.
“சிறு வயதில் கிருத்திகை அன்று பள்ளி இடைவேளையில் கோயிலில் பாடும் ஆளாக இருந்து பின் கடவுள் நம்பிக்கையை விட்டேன்” என்கிறார். “கல்லூரி நாட்களில் கிரிக்கெட் விளையாட பேண்ட் போட வேண்டுமே எனத் தயங்கி கேலிக்கு ஆளான பெண்ணாகத்தான் இருந்தேன்” என்கிறார்.
உளவியல் மாணவர்களுக்கான வகுப்பு ஒன்றில் பாலியல் குறித்த உரையாடல். ஒவ்வொருவரும் பாலியல் தொடர்பான தங்கள் இச்சை பற்றியும் , தங்களுக்கு நேர்ந்த சீண்டல் ஒன்றையும் எழுத வேண்டும். ஆனால், இந்தப் பயிற்சியில் மாணவர்கள் எல்லோரும் இச்சை பற்றி மட்டும் எழுத, மாணவியர் அனைவரும் தாங்கள் சந்தித்த பாலியல் சீண்டலை மட்டும் எழுதியிருந்தனர். இது நமது பொதுவான மனப்போக்கில் ஆண்களுக்கு சீண்டல் நேர்வதில்லை என்றும் பெண்ணுக்கு பாலியல் சார்ந்த விருப்பம் இருக்கக் கூடாது அல்லது வெளிப்படுத்தக் கூடாது என்றும் பதிந்திருப்பதன் விளைவு என்பதை எடுத்துக் கூறி இருதரப்பும் இரண்டையும் எழுத வேண்டும் எனப் புரிய வைத்தார்.
இதுபோல் மற்றொரு பயிற்சியில் தொடர்ந்த உரையாடல்களுக்குப்பின் ஒரு ஆசிரியர், தன் கணவரே தன் மகளிடம் அத்து மீறி நடந்து கொள்வதைச் சொல்லி அழுததும், தாயை மயக்கத்துக்கு ஆட்படுத்தி மகன் உறவு கொண்டதும், தந்தை மகளிடம் உறவு கொண்டதுமான சமூகத்தில் நிலவும் பாலியல் அத்து மீறல்களைப் பகிர்ந்தவர்களை நினைவு கூறுகிறார். நடைமுறை வாழ்வில் எவ்வளவு விஷயங்கள் வெளிப்படாது இருக்கின்றன என்பதை வெளிக்கொண்டு வரவும், அவர்களுக்கு, நிஜத்தைச் சந்திக்கும் துணிவை ஊட்டவும் வாய்ப்பாகின இந்த காலங்கள்.
சிறார் சீர்திருத்தப்பள்ளியில் விழிப்புணர்வுப் பயிற்சி வகுப்பு எடுப்பதென்றால் ஒரு சமயத்தில் பத்து மாணவர்களிடம்தான் பேச முடியும். அதற்கு மேல் எண்ணிக்கை இருந்தால் சமாளிக்க முடியாதாம் அதுவும் இவரையும் உள்ளே வைத்துப் பூட்டி விடுவார்கள். வகுப்பு முடிந்துதான் இவருக்கும் விடுதலை. ஒருமுறை பயிற்சி முடிந்தபின் ஒரு மாணவன், பெரியவனாகி அம்மா (பத்மா) சொன்னபடி என் மனைவிக்கு எல்லாம் வாங்கிக் கொடுப்பேன் என்று எழுதியிருந்தானாம். சற்றே குழம்பி அப்படி எங்கே சொன்னோம் என்று விசாரித்தால் வெட்கத்துடன் அவன் குறிப்பிட்டது சானிடரி நாப்கின்னை.
இவருடைய வாழ்விலும் இந்த சாயலில் ஒரு சம்பவம் நடந்தது. மகன் கல்லூரியில் படித்த போது ஒருநாள் அவர் வகுப்புத் தோழி வீட்டுக்கு வந்திருந்தாள். ”மகனை நன்றாக வளர்த்திருக்கிறீர்கள் அம்மா “என்று அவள் சான்றிதழ் தர, விளக்கம் கேட்டபோது “கல்லூரியில் மாதவிலக்கு சிக்கல் காரணமாக நான் துவண்டிருந்தபோது, ஏதும் சொல்லாமலே குறிப்பறிந்து நாப்கின் வாங்கி வர வேண்டுமா எனக் கேட்டு உதவினார். அதுகுறித்து எந்தக் கேலியும், அசூயையும் இல்லாது இயல்பாக இதைச் செய்யுமளவு தெளிவு படுத்தியிருக்கிறீர்கள் “ என்று கூறினாளாம்.
HIV தொற்று கொண்டவர்கள் நடுவே பணி புரியும்போதும், சிறார் குற்றவாளிகளை அணுகும்போதும் முன்முடிவுகளோடு அணுகாது, பாதித்தவர், பாதிக்கப்பட்டவர் இருதரப்புக்கும் ஒரு குரல் உண்டு என்ற பார்வையோடு இருப்பது முக்கியம் என்பதை உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார் மா. தர்மபுரியில் நடைபெற்ற குழந்தைத் திருமணங்களைத் தடுப்பதற்கான திட்டத்தில் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆசிரியர்களோடு பழகியது மனதுக்கு நெருக்கமான அனுபவம். பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர்கள் உட்பட மாணவர்கள் வாழ்க்கைத் திறன்களை அறிந்து பயன்படுத்தியது பற்றி பகிர்ந்ததைக் கேட்டது, தொடர்ந்து வாழ்க்கைத் திறன்கள் குறித்தே தன் பயணம் தொடர வேண்டும் என்ற உத்வேகத்தைத் தந்தது என்கிறார். ஒவ்வொருவரின் பதிவுகளையும் கேட்கக் கேட்க இதுதான் வாழ்வா என உணர்வுமயமாக உணர்ந்திருக்கிறார். வாழ்க்கைத் திறன் கல்வி அது தொடுபவர்களை மாற்றும் மந்திரக் கோலோ என வியப்பு ஏற்பட்டது என்கிறார்.
பழங்குடிப் பெண்கள் உட்பட சுய உதவிக் குழு மகளிருக்கான பல்வேறு பயிற்சிகள், மாற்றுப் பாலினத்தவர், பள்ளிப்படிப்பைக் கைவிட்ட சிறார்கள், பாலியல் தொழிலாளிகள் என விளிம்பு நிலை மனிதர்களுக்கான பயிற்சிகளைத் திட்டமிடும் பல்வேறு அமைப்புகளும் கையேடுகள், வழிகாட்டல் குறிப்புகள், திட்ட அறிக்கைகள் உருவாக்கும் நிலையிலிருந்து, பயிற்சியாளர்களுக்குப் பயிற்சியளிப்பது, கள ஆய்வு என ஒவ்வொரு நிலையிலும் பத்மாவின் அனுபவத்தை மெருகேற்றியது நிதர்சனம். இதில் அரசு சாரா தொண்டு நிறுவனங்களும்,தமிழக அரசு நிறுவனங்களும், சர்வதேச அமைப்புகளும் அடங்கும்.
இவர் அளித்து வரும் வாழ்க்கைத் திறன் பயிற்சிகள் எண்ணற்றவர்களின் வாழ்வில் தாக்கத்தைக் கொண்டு வந்திருப்பதை வாழ்வின் பயனாகக் கருதுகிறார்.
ஞாநி விகடனில் எழுதிய “அறிந்தும் அறியாமலும்” தொடரின் பல சம்பவங்கள் பத்மாவின் பயிற்சிகளிலும், பயணங்களிலும் அறிந்து கொண்டவை.
எந்த பயிற்சியிலும் தகவல்களைப் பரிமாறுவதை விட வாழ்க்கையை எப்படி அணுகுவது என்பது பற்றிய அவர்களது பார்வையைப் பார்க்கச் செய்வதே முக்கியம் என்பதே பத்மாவின் நிலைப்பாடு.
பணி புரிந்த காலத்திலும் சரி, ஒப்பந்தங்களை ஏற்ற போதும் சரி உயர்மட்ட அதிகாரியாயிற்றே என்று எவரிடமும் கருத்துகளைத் தெரிவிக்கத் தயங்கியதில்லை.விஜயகுமார், ஜெயஸ்ரீ ரகுநந்தன், சுப்ரியா சாஹூ போன்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் பத்மாவின் இயல்பையும், உழைப்பையும் புரிந்து கொண்டு சுதந்திரமாகச் செயல்பட வாய்ப்பளித்தனர். இன்றும், இவருடைய நலம் விரும்பிகளாக அவர்களுடன் நல்லுறவு தொடர்கிறது.அவர்கள் உருவாக்கிக் கொடுத்த வாய்ப்பால் பயிற்சிகள், களப்பணிகள் எனச் சந்தித்த சக சாமான்யர்களிடம் உள்ளொளி தரும் அனுபவங்கள் கிட்டின என்கிறார்.
கள ஆய்வுக்குப்பின் உள்ளாட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் உறுப்பினர்கள்/ தலைவர்களின் சிக்கல்களை விவரித்த “கல்கி” தொடர், சுய உதவிக்குழு பெண்களுக்காக வடித்த தாய்-சேய் உரிமைக் கையேடு, ‘என் வாழ்க்கை என் கையில்’ என்ற வாழ்க்கைத் திறன் நூல், பாலின அறிமுகம் செய்ய புனைவு கலந்து எழுதிய ‘நீ யார் -நான் யார்’ புத்தகம், வாழ்க்கைத் திறன்கள், நேர்மறை அணுகுமுறை, மீண்டெழுதல், எதிர்கொள்ளும் திறன் போன்றவற்றை வலியுறுத்தி மாயாடீச்சர் என்ற கதாபாத்திரத்தை உருவாக்கி எழுதிய, ‘சிலையும் நானே சிற்பியும் நானே’ , ‘கேள்வி கேள் பதில் தேடு ‘, ‘சிந்தனை செய் மனமே ‘ ஆகிய மூன்று புத்தகங்களும் SRV பள்ளிகளில் பாடத்திட்டமாக உள்ளன. ‘சிலையும் நானே சிற்பியும் நானே’ இப்போது ஆங்கில வடிவிலும் வந்திருக்கிறது. சமீபத்தில் ஓராண்டு காலம் ‘இந்து தமிழ்’ நாளிதழின் ‘பெண் இன்று’ இணைப்பில் எழுதிய “கற்பிதம் அல்ல பெருமிதம்“ தொடர் என ‘மா”வின் எழுத்துப்பணி தொடர்கிறது.
இதனிடையே “ஒரு காலத்தில் அண்ணனுக்குக் கடிதம் எழுதும் போது பரீட்சை என்பதைத் தவறாக எழுதிவிட்டதற்காக நூறு முறை எழுதியிருக்கிறேன் “ என்கிறார் வேடிக்கையாக.
எழுத்து,மொழிபெயர்ப்பு போலவே கல்வி,குழந்தைகள் உரிமைகள், சுகாதார விழிப்புணர்வு, பாலியல் தொழிலாளர் வாழ்வு,எய்ட்ஸ் விழிப்புணர்வு, மாற்றுப் பாலினத்தவர் நலன், பெண் சீண்டல், இளைஞர் வழிகாட்டல் எனப் பல மையக் கருக்களில் உருவாக்கப்பட்ட வீடியோ, குறும்படம், ஆவணப்படங்களைத் தாமே இயக்குதல், உதவி இயக்குநர், ஆலோசகர், போன்ற நிலைகளில் பங்களித்திருக்கிறார்.
எச் ஐ வி தொற்று உள்ள தாய்மார்களுக்கு அறுவை சிகிச்சை செய்யும்போது உலகளாவிய நிலையில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இவர் இயக்கிய ஆவணப்படம் இந்திய மக்கள் தொடர்பு அமைப்பின் விருதினை வென்றது.
தூர்தர்ஷனுக்காக உருவாக்கப்பட்ட பெரியார் பற்றிய “அய்யா” தொடரில் தயாரிப்பு நிர்வாகி, ஆய்வாளர், உடை அலங்காரம் போன்ற பொறுப்புகளைச் செய்ததோடு பெரியாரின் அம்மாவாகவும் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் இவர் உருவாக்கிய எச்.ஐ. வி தொற்றாளர், மாற்றுப் பாலினத்தவர், போதை ஊசி பயன்படுத்துகிறவர்களுக்கான மனித உரிமைகள் குறித்த படம் வியன்னாவில் திரையிடப்பட்டது.
மாற்றுப் பாலினத்தவர்களுக்கான பாலியல் உரிமைகள் குறித்த படம் ஒன்றையும் சமீபத்தில் முடித்துள்ளார்.
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் பயிற்சி அமைப்புக்கான படங்களையும் உருவாக்கி வருகிறார்.
‘Film society படங்களாகப் பார்த்துத் தள்ளும், புனைவு எழுதும் பத்மா எங்கே?
கவிதைகள், சிறுகதைகள் என்றுதானே பத்மாவின் பயணம் தொடங்கியது. இப்போது என்னால் புனைவு எழுத்தாளராக இருக்க முடியுமா… தெரியவில்லை.” எனச் சிரிக்கிறார் பத்மா. “இவ்வளவு ஏன்…நகர மத்தியில் சிறுநீர்கழிக்க ஒரு கர்ப்பிணிப் பெண் படும் அவஸ்தையை மையமாகக் கொண்ட எனது கதை ஒன்றைக் குறிப்பிட்டு பாலு மகேந்திரா படமாக்கக் கேட்டார்.அதையே ஏனோ நான் எடுத்துக் கொடுக்கவில்லை…படம் இயக்கும் ஆசை உண்டு. ஏன் கனவுகளைத் துரத்தவில்லை என வருந்திய நாட்களும் உண்டு. புனைவு எழுதுவோருக்கு உள்ள அங்கீகாரம் கட்டுரைகள் எழுதுபவர்களுக்குக் கிடைப்பதில்லை.” என்ற கசப்பான உண்மையையும் சுட்டுகிறார்.
TANSACS ல் பணிபுரிந்தபோது, உலக வங்கிக் குழுவினரோடு ஒரு கிராமத்துக்குச் சென்றிருந்தனர். அங்கு போதுமான நாற்காலிகள் இல்லை. பத்மா கிராம மக்களோடு தரையில் சட்டென உட்கார்ந்துவிட்டார். இதைச் சுட்டிக்காட்டிய இவரது இயக்குநர், நீங்கள் இப்போது பத்மா இல்லை. இணை இயக்குநர் என்ற பதவியில் இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறார்.
“விரும்பாததைச் செய்ய மாட்டேன்; பதவியில் இருக்க வேண்டுமென்றோ வாய்ப்புகள் கிடைக்க வேண்டுமென்றோ எதையும் விட்டுக் கொடுப்பதில்லை.” என்கிறார். இதற்கு இவரது தனி வாழ்வும் உதாரணம்தான். காதல் மணம் புரிந்த பதினான்கு வருடங்களில் பிரியலாம் என்ற முடிவை ஞாநி தெரிவித்தபோது, வற்புறுத்தவோ வருந்தவோ செய்யாமல் அம்முடிவை ஏற்றார் பத்மா. மகன் மனுஷ்நந்தன் எட்டாம் வகுப்பு மாணவர்.
பிரிந்திருந்தாலும் மகனிடம் ஒருவர் மேல் மற்றவர் எவ்வித வெறுப்புணர்வோ, கசப்போ திணிக்காத, மகனின் வளர்ச்சியில் பரஸ்பரம் அக்கறை காட்டும் நண்பர்களாகவே வாழ்ந்திருந்தனர். ஒருவர் மற்றவர் வீட்டுக்குச் செல்வது எப்போதும் இருந்தது. ஒரே வீட்டில் மேலும் கீழுமாகக் குடியிருந்தது கூட உண்டு. அவரவர் சுதந்திரத்தின் எல்லை மற்றவரைக் காயப்படுத்திவிடாத கவனம்.
தொடர் உரையாடல்களாலும், கருத்துப் பரிமாற்றங்களாலும், கலை இலக்கியச் செயல்பாடுகளாலும் என்னை மேம்படுத்தியவர் என்ற இடத்தில் ஞாநி இறுதிவரை இருந்தார் என்கிறார் பத்மா. திரைப்படக் கல்லூரியில் பயின்று பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரனிடம் உதவியாளராகச் சேர்ந்தார் மனுஷ்நந்தன். இன்று மும்பையிலிருந்து இயங்கும் பிரபல ஒளிப்பதிவாளராகிவிட்டார்.
தனக்கான இயங்குவெளியும்,சுதந்திரமும் விட்டுக்கொடுக்காது, தனி வீட்டில் இருந்தபோதும், ஞாநிக்கு 2009ல் இதயநோய் வந்தது முதல், அவர் வீட்டின் அருகே இருக்கும்படி தனது குடியிருப்பை அமைத்துக் கொண்டார் பத்மா. தாயும் மகனுமாக ஞாநியின் ஆரோக்கியம், விருப்பம், செயல்பாடு இவற்றில் குறை வராது கவனித்துக் கொண்டனர். சிறுநீரக பிரச்னை வந்து ஞாநி காலமாகும்வரை இது தொடர்ந்தது.
ஞாநி உருவாக்கிய ‘பரீஷா’வின் ரசிகையாக திருமணத்துக்கு முன் இருந்த பத்மா பின் ஆதரவாளரானார். இப்போது ஞாநிக்குப்பின் தொடர்ந்து குழுவினரின் அர்ப்பணிப்புக்கு ஈடு கொடுப்பதாக சொல்கிறார்.
பத்மாவின் பணிப்பட்டியலில் சிறார்களுக்கான நாடகப் பயிற்சிப் பட்டறைகள் நடத்தியதும் இடம் பெறுகிறது.
97ல் அஸ்மிதா சார்பில் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒருமாதப் பயிற்சியில் பங்கேற்று பல்வேறு பெண் தலைமையாளர்களை சந்தித்தது மிகச்சிறந்த அனுபவம். “இவர்தான் என் Role Model என்று ஒருவரைக் குறிப்பிட்டு சொல்ல முடியாது. நான் சந்தித்த ஒவ்வொருவரிடமிருந்தும் சில குணங்கள், கூறுகளை சுவீகரித்துக்கொள்ள விரும்பினேன்.” என்கிறார்.
மீனா சுவாமிநாதனிடமிருந்து திட்டமிடலைக் கற்றுக் கொண்டது, 2005 ல் அறிமுகமான மகப்பேறு மருத்துவர் அமுதா ஹரி (எச் ஐ வி தொற்றுள்ள கர்ப்பிணிகளுக்குப் பாதுகாப்பாக பிரசவம் பார்ப்பதில் புகழ் பெற்றவர்) “ஒரு விஷயம் நடந்தால் நல்லது – நடக்காவிட்டால் மிக நல்லது என்ற அவருடைய வாக்கு, மந்திரம் போலப் பிடிக்கும்.”
அன்புப்ரியா என்ற தோழியின் நட்பு நிதானத்தைக் கற்பித்தது. எழுத்தாளர் திலீப்குமார் எண்பதுகள் தொடங்கி நிறைய உரையாடும் நண்பர். கவிஞர் சுகுமாரனும் கூட.
வயதுவந்தோர் கல்வி மற்றும் மழலையர் கல்வி குறித்த புகழ்பெற்ற ஆய்வாளர் எல்.எஸ்.சரஸ்வதியின் நட்பும் வழிகாட்டலும் முக்கியமானது.
“2005ல் அறிமுகமான TANSACS ல் திட்ட நிர்வாகியாகவும் ஆலோசகராகவும் இருந்த நண்பர் பிரமோத்தின் ஆற்றுப்படுத்துதல் என் உணர்வுகளைச் சீரமைக்க உதவியது.1992 ல் தமிழ்ச்செல்வியுடன் ஏற்பட்ட நட்பு இருபத்தெட்டு வருடங்களாகத் தொடர்கிறது. ஒருநாளைக்கு ஆறேழு முறையாவது பேசிவிடுமளவு நெருக்கம்.
அசோகமித்திரனின் பேத்தி சீதா ஜனனி வளர்ப்பு மகள் போல அத்தனை பிரியம். மகன் மிக நல்ல புரிந்துணர்வு கொண்ட, தனித்தன்மையை மதிக்கும் நண்பன். “என் வாழ்க்கையை இனிமையாக்கியவன் மனுஷ்” என்கிறார். மருமகள் கௌரியிடம் மிகுந்த பாசம் பத்மாவுக்கு.
“சகோதர சகோதரிகளின் கருத்துப் பரிமாற்றங்களே தெம்பூட்டுபவைதான்.அதிலும் ஒரு சகோதரியை அவருடைய பண்படுத்தும் வழிகாட்டலுக்காக kofi annan என்று புனைப்பெயரிட்டு குடும்பக் குழுவில் அழைப்பது வழக்கம். கணக்குப்புதிர்கள் போடும் ஆர்வம் என்றும் உண்டு.நான்கைந்து வீடுகள் தள்ளி இருக்கும் அண்ணனோடு தினமும் அலைபேசிவழி புதிர் போடுவதும் நான்கைந்து முறையாவது உரையாடுவதும் பிடித்தமானது.
சில காலம் முன்புதான் ஒரு மெல்லிய சங்கிலி வாங்கினேன்.எப்போதும் பருத்திப் புடவையோ சுடிதாரோதான் அணிவது. ஒரு காலத்தில் என்னிடம் பிரவுன்,கருப்பு,வெள்ளை ரவிக்கைகள் மட்டுமே இருக்கும். சகோதரிகளின் சேலைகளுக்கும் ஏற்றாற்போல் அணிந்துகொள்வேன். யோசித்துப் பார்த்தால் நீலம்,பச்சை நிறங்களில் ரவிக்கை தைப்பதில்லை என்பது நினைவுக்கு வருகிறது. எல்லாவற்றுக்கும் போட முடியாதல்லவா…ஒருமுறை பணம் கிடைத்தால் அடுத்து வரும்வரை தாங்க வேண்டுமே என ஒவ்வொரு செலவையும் யோசித்து யோசித்துதான் செய்வேன்.ஒரு லிட்டர் எண்ணெய் வாங்கி ஒன்றரை மாதம் வைத்துக் கொள்வேன்.” என்கிறார்.
மகன் ஒருமுறை கல்லூரிக் காலத்தில், “எங்கள் வீட்டில் பூரி – டிபன்” என சக மாணவி சொல்ல, “பூரி எல்லாம் வீட்டில் கூட செய்வாங்களா?” எனக் கேட்குமளவு இருந்தேன் என்கிறார். “அதிகபட்சமாக, நான் செய்த ஆடம்பர செலவென்றால் எப்போதும் ஆட்டோவில் பயணிப்பதுதான் : பேருந்தில் சென்றது கிடையாது. கல்யாணத்துக்கும் ஆட்டோவில் கிளம்பிதான் போனேன்.பிரசவத்துக்கும் கூட…” எனச் சிரிக்கிறார். மகன் தலையெடுத்து ஞாநியும் இவரும் பயன்படுத்த ஒரு கார் வாங்கித் தந்து ஓட்டுநரையும் நியமித்து வழக்கத்தை மாற்றினார்.
இப்போதும் குழந்தைகளுக்காக, பெண்களுக்காக எழுதுவது, பயிற்சிகளைத் திட்டமிடுவது ,மொழிபெயர்ப்பு கையேடுகள் தயாரிப்பு என்று தொடர்ந்து இயங்குகிறார் .INDIAN ASSOCIATION FOR LIFE SKILLS அலுவலகப் பொறுப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார். “ஒவ்வோராண்டும் நடக்கும் கூட்டங்கள் மனதில் முக்கிய இடம் பிடிக்கின்றன.” என்று இப்போதுதான் தொடங்கியவர் போன்ற ஆர்வத்துடன் சொல்கிறார். வளரிளம் பருவத்தினருக்கான UNICEF மேம்பாட்டுத் திட்டத்தில் ஆலோசகராக, அகரம் பவுண்டேஷன் நடத்தும் அரசுப்பள்ளிக் குழந்தைகளுக்கான வாழ்க்கைத்திறன் கல்வித்திட்ட பயிற்சிகள் என்று பணிகள் தொடர்கின்றன.
பல நிறுவனங்கள், நிர்வாகங்கள் இவரது அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்பி அழைக்கின்றன.பாரதிதாசன் பல்கலைக் கழகம் இவரது பணிகளைப் பாராட்டி விருது அளித்து கௌரவித்தது. சேலம் தமிழ்ச் சங்கம் ‘தமிழ்வாகைச் செம்மல்’ என்ற பட்டமளித்து வாழ்த்தியது.
எப்போதும் பிரச்னையை பிரச்னையாகப் பார்க்காமல் சவாலாகப் பார்ப்பதுதான் வழக்கம். “இன்னும் செய்யவேண்டியது நிறைய இருக்கிறது.” என்று கம்பீரமாகப் புன்னகைக்கிறார் ஏ.எஸ்.பத்மாவதி (எ) பத்மா(எ) மா(எ) மாயா டீச்சர்.
தொடரும்…