
நாவல் வடிவம் வாழ்வின் மீதான முழுமையான பார்வையை அளிக்க வல்லது. அது இரண்டு வகையாகச் செயல்படுகின்றது. ஒன்று மையக் கதாபாத்திரத்தின் முழு வாழ்வைப் பேச முயல்கின்றது. இரண்டாவது வகைமை மையக் கதாபாத்திரத்தின் குறிப்பிட்ட பருவத்தின் மீது அல்லது குறிப்பிட்ட காலத்தில் நிகழும் சம்பவங்களின் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது. அந்த சூழலில் கதாபாத்திரத்தின் சிந்தனைப் போக்கு வாழ்க்கை மீதான பார்வையை வெளிப்படுத்தும் தன்மையைப் பறைசாற்றுகின்றது. வாசகரின் மனதில் பதியும் கதாபாத்திர குணவார்ப்பும், சிந்தனைப்போக்கும் எவ்விதமான சூழ்நிலையிலும் அக்கதாபாத்திரம் எப்படியெல்லாம் வினையாற்றக்கூடும் எனும் கற்பனைக்கு விதை அளிக்கிறது. சிறந்த நாவல்கள் அதன் பேசுபொருட்களை நுட்பமாக விவரிப்பதன் வழியே வாசகர்களின் அன்றாடச் சிக்கல்களுக்கும், உலகலாவிய பார்வைக்கும் உரையாடும் தன்மையைப் பெற்றுத்தருகின்றன. கதையைக் கடந்த உரையாடலையும், மையப்பொருளைக் கடந்த சிந்தனையையும் விதைக்கும் தன்மையைப் பெறுகின்றன. மேற்கூறிய தன்மையைப் பெருவதே நாவல் வடிவத்தின் பெரும் சவால். அதை மிக எளிமையாக எட்டுகிறது மாஜிதாவின் “பர்தா” நாவல்.
இலங்கையில் எழுதப்படும் கதைகள் பெரும்பான்மையாக போர்ச்சூழலை ஒட்டி எழுதப்படுகின்றன. அம்மண்ணின் கதைமரபில் அவை தவிர்க்கமுடியாதவை. சில நேரங்களில் அவற்றைக் கடந்து வேறு சிக்கல்கள் இல்லையா என்றும் யோசித்ததுண்டு. இந்த நாவல் இலங்கையில் இசுலாமிய சமூகம் சந்திக்கும், அதிலும் குறிப்பாக இசுலாமியப் பெண்கள் சந்திக்கும் பண்பாட்டுச் சிக்கலை மிக விரிவாக ஆணுகுகிறது. மிக மெல்லிய சரடாக மட்டுமே இலங்கையில் போர் குறித்த தகவல்கள் வந்துசெல்கின்றன.
பண்பாட்டளவில் ஈரானும் இலங்கையும் ஒன்றிணையும் சமயத்தில் பர்தா இலங்கைக்குள் நுழைகிறது. இசுலாமிய மதவாதிகள் அதை நிறுவனப்படுத்த முயலும்போது சில எதிர்ப்பு குரல்கள் கிளம்புகின்றன. அவற்றையும் மீறி பர்தா காலாச்சாரம் சமூகத்தின் இயல்பாக மாறுகிறது. பர்தா எனும் ஆடையின் அறிமுகத்திலிருந்து அது இயல்பாகும் வரையிலான பயணமே இந்த நாவலின் கதை.
ஆடையைப் பற்றிய கதை எனினும் அதன் வழியே ஒரு அதிகாரத்தின் வேட்கையை நாவல் முழுக்க உணர முடிகிறது. பெண்ணின் சுதந்திரம் ஆண் மதவாதிகளின் முடிவால், மதத்தின் பெயரால் சுரண்டப்படுகிறது. எதிர்க்கும் பெண்கள் மதச் சடங்குகளிலிருந்து விலக்கம் அளிக்கப்பட்டு ஒதுக்கப்படுகிறார்கள். பள்ளிகளில், பள்ளிவாசல்களில் என்று மதநிறுவனங்களின் துணைகொண்டு பர்தா பற்றிய விழிப்புணர்வு மதவாதிகளால் பரப்பபடுகிறது. மேலும் அதன் மீதான மரியாதையை மூத்த பெண்களிடம் விதைப்பதன் வழியே அடுத்த தலைமுறைக்கு எளிதாக கடத்தப்படுகிறது.
கதையின் நாயகி சுரையாவின் சிறுவயது பிராயத்திலிருந்து கதை தொடங்குகிறது. விளையாட்டுத்தனங்களும், குடும்பத்தின் கட்டுப்பெட்டித்தனங்களும், சிறுபிராயத்திற்கே உரிய ஆசையுடன் இருக்கும் சிறுமியாக சுரையா அறிமுகப்படுத்தப்படுகிறாள். அவளுடைய ஆசைகளுக்கேற்ப முடி திருத்திக்கொள்வதும் ஆடைகள் அணிந்துகொள்வதுமாக கதை தொடங்குகிறது. அவளுடைய தந்தை லெப்பை மதவாதிகளிடையே நற்பெயர் பெற்றவர். மேலும் சமூகத்தின் மக்களிடையேவும் நன்மதிப்பை பெற்றிருப்பவர். அவருடைய பேச்சிற்கு இணக்கமாக செல்லக்கூடியவர்கள் நிறைய பேர் இருந்தனர். அவர் வழியே புர்கா சுற்றத்திற்குள் அறிமுகப்படுத்தப்படுகிறது. பரப்புவதற்கான அறிவுரையும் வழங்கப்படுகிறது.
ஆண்கள் ஏன் பெண்களின் ஆடைகளைத் தீர்மானிக்க வேண்டும் எனும் கேள்வியை இரண்டு நபர்கள் நாவலில் எழுப்புகிறார்கள். இரண்டு பேருமே சுரையாவின் பார்வையில் போராளிகளாக, புரட்சிக்காரர்களாக தென்படுகிறார்கள். சுரையா திருமணமாகி பெண்ணிற்கு தாயாகும் வரை நாவலின் காலம் நகர்கிறது. வெவ்வேறு பருவங்களில் பர்தா சம்மந்தமாக நிகழும் மாற்றங்களை சுரையா அவதானிக்கவும், வாசகர்களிடையே அதன் நெடிய பண்பாட்டு பயணத்தை உணர்த்தவும் கதைப்போக்கு வழிவகுக்கிறது.
இந்த சிக்கலிலிருந்தான விடுதலையாக கல்வியையே சுரையா உணர்கிறாள். மேற்படிப்பிற்காக வெளியூருக்கு செல்ல தீவிரமாகப் படிக்கிறாள். கல்லூரியிலும் புர்காவின் தாக்கம் நீள்கிறது. விழுமியங்களை எதிர்க்கும் தன்னைவிட மூத்த பெண்ணுடன் உரையாடுகிறாள். இந்த சமர் காலம் முழுக்க சுமக்க வேண்டிய ஒன்று என்று உணர்கிறாள்.
புர்கா, ஹபாயா என்று இரு வகையான உடைகளிடையே தேர்வு செய்யும் உரிமை பெண்களுக்கு கிடைக்கிறது. அதிகாரத்தின் நூதனமான நடவடிக்கையாக இதைக் காணமுடிகிறது. புர்கா அணிவது, அணிய மறுப்பது எனும் வாய்ப்பிலிருந்து எவ்வகையான புர்கா அணிவது எனும் வாய்ப்பை வழங்குவதன் வழியே ஆண் மதவாதத்தின் அதிகாரம் நிலைப்படுத்தப்படுகிறது. ஆடைக்குள் ஒடுக்கும் அம்சத்திலிருந்து விடுதலையை எண்ணவே முடியாத சுழலுக்குள் பெண்கள் செல்கின்றனர்.
திருமணமானபின் வெளிநாட்டிற்கு செல்லும் சுரையா புர்காவினால் ஏற்படும் மற்றொரு சிக்கலை சந்திக்கிறாள். வெளிநாட்டினர் புர்கா அணிந்திருப்பவர்களை மற்றொரு எதிர் கருத்தியலுடன் இணைத்து புரிந்துகொண்டு எதிர்ப்பைத் தெரிவிக்கின்றனர். சுரையாவினுள் எழும் கேள்விகள் புர்கா சொந்த நாட்டிலிருந்து, மதத்திலிருந்து, இணக்கமாக வாழ வேண்டிய சூழலிலிருந்து விலக்கத்தைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது எனில் இந்த ஆடையின் நோக்கம் என்ன என்பதே. பதிலற்று கிடக்கும் கேள்வியின் அலைச்சலில் மீண்டும் ஊருக்கு வருகிறாள். அங்கே புர்கா புதியதொரு அர்த்தத்தை அளிக்கிறது.
புர்காவை பின்பற்றும் பெண்களுக்கு சமூக வர்த்தக சந்தையில் வாய்ப்புகள் கிடைக்கின்றன. சமூகத்துடன் இணக்கமாக வாழ புர்கா அத்தியாவசிய ஒன்று எனும் அம்சத்தை, அடையாளத்தைப் பெற்றிருப்பதை அறிகிறாள். பால்யகால தோழியுடன் பேசுகையில் குடும்பத்துடன், அன்றாடம் புழங்கும் நிறுவனங்களுடன், ஆண்களுடன் என்று சமர் புரிய வேண்டிய வட்டங்கள் நிறைய இருக்கின்றன. சமரில் வாழ்க்கையை இழப்பதற்கு புர்காவை அணிந்து கொள்ளலாம் எனும் சமரசம் சுரையாவின் மனதில் சுயமரியாதையை இழக்கும் இடமாக அச்சாகிறது.
நாவலின் இறுதிப்பகுதி சுரையாவின் சித்தாந்தங்களுக்கு எதிர்முனையில், யதார்த்தவாத விழுமியங்களில் நிற்பது மிகச்சிறப்பான முடிவாகிறது. பெரும்பான்மையிடமிருந்து கேள்விகள் முளைக்காத பட்சத்தில் காலப்போக்கில் பெரு விருட்சமாக மாறும் அம்சமென புர்கா உருமாறுகிறது. தவிர்க்க முடியாத அன்றாடமாக, சுமை என்று உணராத வகையில் இயல்பாக மாற்றம் கொள்ளும் புர்கா ஒடுக்கப்படுதலின் அடையாளமாக நாவலில் எஞ்சுகிறது.
சிறந்த நாவலாக பரிணமிப்பதற்கு சில முக்கிய கூறுகள் நாவலில் உள்ளன. நாவல் எங்குமே அரசியல் பேசவில்லை. கையில் எடுத்துக்கொண்ட கதையிலிருந்து வழுவாமல் நகர்கிறது. அதற்குள்ளாக பல்வேறு பண்பாட்டு அம்சங்கள் பேசப்படுகின்றன. அன்றைய காலட்டத்தின் பால்ய நினைவுகள், ஊரின் கட்டுமானங்கள், பண்டிகைக்கால பழக்கங்கள், உணவு பதார்த்தங்கள், சமூக இணக்கத்தின் அடையாளங்கள் என்று மிக அழகாக விவரிக்கப்படுகிறது. புர்கா நாவலில் அறிமுகமாவதிலிருந்து அதன் சிறப்பு அம்சங்கள் வெளிப்படுகின்றன. புர்கா உரையாடலின் பகுதியாக பரிணமிக்கும் இடங்களில் அவை பொது உரையாடலை மேலெழும்பச் செய்யும் தொனியை அடைகிறது. பெண்களின் சுதந்திரம், ஒடுக்கப்படும் அம்சங்கள் எனும் பொது அம்சத்தின் கிளையாக நாவல் தன்னை உருவகப்படுத்த துவங்குகிறது. எந்த நாட்டவர் வாசிக்க நேரிடினும், எந்த அமைப்பின் பகுதியினர் வாசிக்க நேரிடினும் அவர்கள் சந்திக்கும் பெண்களுக்குள்ளான சட்டகங்களுடன் இணைந்து புரிந்துகொள்ளும் வாய்ப்பை நாவல் அளிக்கிறது.
பண்பாட்டு உரையாடல்களில் எழுதப்படும் நாவல்கள் அதன் அர்த்தங்களில் நீர்த்துப் போவதில்லை. அதன் மற்றொரு சிறப்பான பிரதி மாஜிதாவின் “புர்கா”.
புர்கா | மாஜிதா | நாவல் | எதிர் வெளியீடு