இணைய இதழ் 115தொடர்கள்

காலம் கரைக்காத கணங்கள்- 20; மு.இராமனாதன்

தொடர் | வாசகசாலை

சீன மண்ணில் தமிழ்க் கல்வி

           ஹாங்காங் நகரின் பரபரப்பான பகுதி சிம்-ஷா-சுய். அதன் நடுநாயகமாக அமைந்திருக்கிறது ராயல் பசிபிக் அரங்கம். 2025, ஜூன் 21ஆம் நாள் அந்த அரங்கு தமிழால் நிரம்பியிருந்தது. அது ஹாங்காங் தமிழ் வகுப்புகளின் 21ஆம் ஆண்டு விழாக் கூட்டம். தமிழ் வகுப்புகளில் பயிலும் சுமார் 100 சிறார்கள், அவர்தம் பெற்றோர், ஆசிரியர்கள்,  அமைப்பாளர்கள், நலம் விரும்பிகள், பிரமுகர்கள் அனைவரும் குழுமியிருந்தனர். மேடையில் ஹாங்காங்கின் இந்தியத் தூதரும் நகராட்சியின் சீனப் பிரதிநிதிகளும் அமர்ந்திருந்தனர்.

இந்தத் தமிழ் வகுப்புகளை, ‘இளம் இந்திய நண்பர்கள் குழு’ (Young Indian Friends Club-YIFC) எனும் அமைப்பினரின் ‘YIFC கல்விக் கழகம்’ (YIFC Academy for Education and Enrichment) நடத்தி வருகிறது. இதன் 21ஆண்டு காலப் பயணம் சாத்தியமான கதையை அந்த அரங்கம் எடுத்துக் கூறுவதாக எனக்குத் தோன்றியது.

ஹாங்காங் தமிழ்ச் சமூகம், ஹாங்காங்கின் சிறுபான்மைச் சமூகங்களில் ஒன்று. எந்த விதமான நல்கைகளோ நிதி உதவியோ கணிசமான மனித வளமோ இல்லாத நிலையிலும் YIFC கல்விக் கழகம்  தாய் மொழியைத் தனது இளம் தலைமுறையினருக்குக் கற்பித்து வருகிறது. கழகத்தின் அமைப்பாளர்களில் யாரும் தமிழ்ப் பண்டிதர்களில்லை. ஆனால் தமிழின்பால் பற்றுடையவர்கள். இதன் ஆசிரியர்கள்  எல்லோரும் தன்னார்வலர்கள் (பட்டியல் பின்னால் வரும்); இவர்களில் பலரும் ஆசிரியப் பயிற்சி பெற்றவர்களல்லர்; ஆனால் இளைய சமுதாயத்திற்குத் தாய்மொழியைக் கற்றுக் கொடுப்பதை விரும்பிச் செய்பவர்கள்.  இந்த வகுப்புகளுக்கு பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர் யாரும் தமிழ் படித்தால் பொருளீட்ட முடியுமா என்று கேட்பதில்லை. பிள்ளைகளும் ஆர்வத்தோடும் உற்சாகத்தோடும் தமிழ் கற்று வருகிறார்கள். இந்தத் தமிழ் வகுப்பின் தொடர் பயணத்திற்கு  ஹாங்காங்கின் பெரும்பான்மை சீனச் சமூகம், சிறுபான்மை தமிழ்ச் சமூகத்திற்கு வழங்கி வரும் ஆதரவும் ஒரு காரணம்.

தமிழ் வகுப்புகள் தொடங்கப்பட்ட 2004ஆம் ஆண்டு முதல் நான் இந்த வகுப்புகளின் ஆலோசகர்களில் ஒருவனாக இருந்து வருகிறேன். இந்தப் பணி எளிதானது. ஆனால் சிரமமானது என்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க வேண்டும். அந்த சூட்சுமத்தைப் பின்னால் சொல்கிறேன். முதலில் இந்த வகுப்புகளின் பயணத்தைப் பார்க்கலாம்.

புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களில் கணிசமானோர் தமது பாரம்பரியத்தின் வேர்கள் தாய் மொழியில் இருப்பதை உணர்ந்திருக்கிறார்கள். ஆதலால் தமது பிள்ளைகள் தமிழ் மொழியைக் கற்க வேண்டுமென்று விரும்புகிறார்கள். ஆனால் பல நாடுகளில் இது நடைமுறைச் சாத்தியமாக இருப்பதில்லை. ஹாங்காங்கிலும் அப்படித்தான் இருந்தது. ஆனால் இருபதாண்டுகளுக்கு முன் நிலைமை மாறியது.

YIFC கல்விக் கழகத்தின் தமிழ் வகுப்புகள் 2004ஆம் ஆண்டு துவங்கப்பட்டபோது தமிழ்நாட்டில் தமிழ் ஒரு கட்டாயப் பாடமாக இல்லை. 2006 முதல் தமிழைத் தாய் மொழியாகக்கொண்ட பிள்ளைகளுக்குத் தமிழ்க் கல்வியைக் கட்டாயப் பாடமாக்கியது தமிழக அரசு. இது படிப்படியாக அமலாகியது. விளைவாக, 2016 முதல் தமிழகமெங்கும் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதிய பிள்ளைகளில் பலர், தமிழை ஒரு பாடமாகவேனும் படித்திருந்தார்கள். ஆனால் எவ்விதமான வற்புறுத்தலும் இல்லாமல் கடந்த 21 ஆண்டுகளாக ஹாங்காங் தமிழ்ப் பிள்ளைகள் தாய் மொழியைக் கற்று வருகிறார்கள். இது எங்ஙனம் சாத்தியமானது?

ஏன் படிக்க வேண்டும் தமிழ்?

புலம்பெயர்ந்து வாழும் சிறார்களைச் சுற்றித் தமிழ் இல்லை, தமிழ்க் கலாச்சாரம் இல்லை, தமிழ் ஊடகங்கள், தமிழ்த் திரைப்படங்கள், தமிழ்ச் சுவரொட்டிகள், தமிழ் அறிவித்தல்கள் இல்லை. அவர்கள் அன்னியக் கலாச்சாரத்தைச் சுவாசிக்கிறார்கள்; ஆங்கிலம் வழி கற்கிறார்கள்; காலப்போக்கில் தாய்மொழியை வீட்டு மொழியாகப் பயன்படுத்துவதைக்கூடப் படிப்படியாகக் குறைத்துவிடுகிறார்கள்.

அ.முத்துலிங்கத்தின் சிறுகதையொன்றில் வரும்  சிறுவன், கனடாவில் வசிப்பவன், அவனது தாய் சனிக்கிழமைத் தமிழ் வகுப்புக்குப் போகச் சொல்லி வற்புறுத்தும்போது சொல்லுவான்: “அம்மா, நான் இரண்டு நாட்டுக்குக் குடிமகனாக இருக்க முடியாது.” இந்தச் சிக்கலை YIFC கல்விக் கழகம் எப்படிக் கையாள்கிறது?

ஹாங்காங்கில் வளரும் தமிழ்ச் சிறார்களுக்கு இந்த நகரம்தான் அவர்களது வாழிடம், அவர்களது இல்லம். ஆகவே அவர்கள் ஹாங்காங்கின் பண்பாட்டை உள்வாங்க வேண்டும். ஆதலால் தாய் மொழிக் கல்வியுடன் அவர்களுக்கு ஹாங்காங்கில் நிலவும் சட்டத்தின் மாட்சிமையும் செழுமையான சீனக் கலாச்சாரமும் பயிற்றுவிக்கப்படுகிறது. இது ஹாங்காங்கைப் புரிந்து கொள்ளவும், இந்தப் பண்பாட்டோடு தங்களைப் பொருத்திக்கொள்ளவும், ஹாங்காங்கின் பொறுப்புள்ள குடிமக்களாக வளரவும் உதவுகிறது. அதே வேளையில் மாணவர்கள் தாய் மொழியைக்  கற்றுக்கொள்வதன் அவசியமும் அவர்களுக்கு உணர்த்தப்படுகிறது. தாய்மொழிதான் அவர்களது அடையாளம், முகவரி. தாய் மொழி தெரியாது என்பவரை எந்த நாட்டிலும் யாரும் மதிக்கப் போவதில்லை. அவர்களுக்குத் தாய்மொழியைக் கற்பிப்பதற்கு முன்பாக தாய்மொழிக் கல்வியின் அவசியத்தை உணரச் செய்ய வேண்டும். ஹாங்காங் தமிழ் வகுப்பு அதைச் செவ்வனே செய்து வருகிறது. முக்கியமாக, வீட்டில் பெற்றோர்கள் எப்போதும் தமிழில் பேச வேண்டும்.

ஹாங்காங்கில் இந்திய மாணவர்கள் தத்தமது தாய் மொழியை ஒரு பாடமாகக் கற்கிற வாய்ப்பு மிகக் குறைவுதான். இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் நேபாளிகளும் அதிகமாகப் பயிலும் எல்லிஸ் கடோரி என்கிற அரசுப் பள்ளியில் இந்தியும் உருதும் கற்பிக்கப்படுகிறது. குரு கோவிந் சிங் கல்வி அறக்கட்டளை சீக்கிய மாணவர்களுக்குப் பஞ்சாபி கற்பிக்கிறது. இவற்றைத் தவிர ஹாங்காங்கில் முறையாகவும் தொடர்ச்சியாகவும் கற்பிக்கப்படும் இந்திய மொழிக் கல்வி என்கிற பெருமை இந்தத் தமிழ் வகுப்பையே சேரும்.

ஹாங்காங்- உலக நகரம்

கிழக்கும் மேற்கும் சந்திக்கிற புள்ளியாக ஹாங்காங் எப்போதும் கருதப்பட்டு வந்திருக்கிறது. இங்கு சீனக் கலாச்சாரத்தோடு வளர்ந்த நாடுகளின் வசதிகளும் உள்கட்டமைப்பும் இணைந்து விளங்குகின்றன. ஹாங்காங்கின் மக்கள் தொகை 75 இலட்சம். இதில் 92% சீனர்கள்தாம். வெளிநாட்டினரில் பிலிப்பைன்ஸினர், இந்தோனேசியர் ஆங்கிலேயர்களுக்கு அடுத்தபடியாக சுமார் 42,000 இந்தியர்கள் (மொத்த மக்கள் தொகையில் 0.6%, 2021 கணக்கெடுப்பு) வசிக்கிறார்கள். இன்னும் நேபாளம், தாய்லாந்து, பாகிஸ்தான் மக்களும் ஹாங்காங்கின் பன்முகக் கலாச்சாரத்தில் பங்கு பெறுகிறார்கள். எல்லாச் சமூகத்தினரும் தத்தமது அடையாளங்களைப் பேண முடிகிறது. ஹாங்காங் இந்தியர்களிடையே தமிழர்களின் எண்ணிக்கை சிந்திகளையும் குஜராத்திகளையும்விடக் குறைவு. ஹாங்காங்கில் சுமார் 2000 தமிழர்கள் இருக்கலாம். 25 ஆண்டுகள் முன்புவரை கணிசமான தமிழர்கள் நவரத்தின வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். பின்னால் வந்தவர்கள் நிதி, வங்கி, தகவல் தொழில்நுட்பம் முதலான துறைகளில் பணியாற்றுகிறார்கள்.

இந்தச் சிறிய தமிழ்ச் சமூகத்தினரிடமிருந்துதான் சுமார் 100 மாணவர்கள் சனிக்கிழமை தோறும் தமிழ் வகுப்புகளுக்கு வருகிறார்கள். ஹாங்காங்கில் உள்ள ஆரம்பப் பள்ளிக்குச் செல்லும் தமிழ்க் குழந்தைகளில் பெரும்பாலானோர் இந்த வகுப்புக்கு வருகிறார்கள் எனலாம். ஆனால், YIFC கல்விக் கழகத்திற்கு இந்த இடத்திற்கு வந்து சேர்வது அத்தனை எளிதாக இருக்கவில்லை.

முன் கதை

தமிழ் வகுப்புகள் 2004ஆம் ஆண்டு துவக்கப்பட்டதும், செய்தி செவிவழியாகப் பரவியது. 30 குழந்தைகள் சேர்ந்தார்கள். தமிழ்ச் சமூகத்தின் புரவலர்களில் ஒருவர் டாக்டர் ஜவஹர் அலி (1945-2019), அவருடைய உணவகத்தில் சனிக்கிழமை மதியம் தோறும் இடமளித்தார். ‘அலாடின் கார்மே’ என்ற அவருடைய உணவகம் ‘சுன் கிங் மேன்ஷன்ஸ்’ என்ற கட்டிடத்தின் ஒன்பதாவது தளத்தில் இருந்தது. ‘சுன் கிங் மேன்ஷன்ஸ்’ தெற்கு ஆசியர்கள், மத்திய கிழக்கினர், நைஜீரியர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் சந்திக்கும் இடமாக இருந்து வருகிறது. அந்தப் பதினேழு மாடிக் கட்டிடத்தில் ஐந்து தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு தொகுதிக்கும் இரண்டு மின் தூக்கிகள் மட்டுமே. சுன் கிங் கட்டடம் ஐம்பது வருடங்களுக்கு முன்பு, அன்றைய காலகட்டத்தின் தேவைகளைக் கருத்தில் கொண்டு கட்டப்பட்டிருந்தது. ஆனால், இன்று அதைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாகிவிட்டது. அதனால் மின்தூக்கியில் ஏறுவதற்கு ஒருவர் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டும். தமிழ் வகுப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் குழந்தைகளை, ‘சுன் கிங் மேன்ஷன்ஸ்’ வாயிலிலிருந்து அழைத்து வந்து மின்தூக்கியில் ஏற்றி, தற்காலிக வகுப்பறையில் இருத்தி, பின் வகுப்பு முடிந்த பின்பும் இதே போல் மேன்ஷன்ஸ் வாயிலில் உள்ள நேத்தன் சாலை வரை அழைத்துச் செல்வார்கள்.

முதன் முதலாக வகுப்பு தொடங்கியபோது, மாணவர்கள் அட்டைகளை மடியில் வைத்துக்கொண்டு அதன் மீது எழுதினார்கள். பின்பு உணவகத்தின் மேசைகள் மாற்றி அமைக்கப்பட்டன. ஆசிரியர்களும் மாணவர்களின் நோட்டுப் புத்தகங்களிலேயே பாடங்களையும் பயிற்சிகளையும் எழுதிக் கொடுத்தார்கள். பின்னர் ‘மார்க்கர்’ பேனாவுடன் கூடிய வழவழப்பான வெண்பலகைக்கு மாறினார்கள். உணவகத்தின் ஒரு சிறிய பகுதியில் தொடங்கிய வகுப்புகள் பின்னர் சமையலறையைத் தவிர எல்லா இடங்களையும் ஆக்கிரமித்தன. மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இடப் பற்றாக்குறை காரணமாக மாணவர்கள் சேர்க்கை ஒரு கட்டத்தில் நிறுத்தப்பட்டது.

கூடுதல் வகுப்பறைகளுக்கான அவசியம் உணரப்பட்டது. 2007இல் Democratic Alliance For Betterment of Hong Kong (டி.ஏ.பி) என்ற அரசியல் கட்சியின் உதவியுடன் யாவ்-மாவ்-தை பகுதியிலுள்ள நியூமேன் கத்தோலிக்கக் கல்லூரியில் நான்கு வகுப்பறைகள் கிடைத்தன. நீண்ட தாழ்வாரங்கள், விசாலமான வகுப்பறைகள், பல்லூடக வசதிகள், இருக்கைகளுக்கு நடுவே நடந்து செல்ல இடம் என எல்லாம் ஒரே சமயத்தில் கிடைத்தது. கனவு நனவானது போல் இருந்தது. நான்காம் ஆண்டு 56ஆக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை அடுத்த ஆண்டு 70ஆக உயர்ந்தது.

2014 முதல் கழகத்தின் வாரந்திரத் தமிழ் வகுப்புகள் யாவ்-மா-தை பகுதியில் அமைந்திருக்கும் வா-யூன் கல்லூரி வளாகத்தில் நடந்து வருகிறது. ஹாங்காங் பள்ளிகளின் நவீன வசதிகள் தமிழ் வகுப்புகளுக்கும் கிடைத்து வருகிறது. வகுப்புகளைத் தவிர பெற்றோர்-ஆசிரியர் சந்திப்புகள், பொங்கல்-ரம்ஜான்-புத்தாண்டுக் கொண்டாட்டங்கள், சிறப்புக் கூட்டங்கள் போன்றவையும் பள்ளி வளாகத்திலேயே நடந்து வருகின்றன. தமிழ் வகுப்பு அன்னியில் மாணவர்களுக்குக் கல்விச் சுற்றுலா, அறிவியல் கருத்தரங்குகள், விளையாட்டுப் போட்டிகள்  முதலானவையும் நடந்து வருகின்றன.

மாணவர்கள் ஆறு நிலைகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு நிலைக்கும் இரண்டு தன்னார்வ ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். இந்த வகுப்புகளின் முன்னாள் மாணவர்கள், இப்போது பள்ளி இறுதி ஆண்டிலும் கல்லூரியிலும் படித்து வருகிறார்கள். இவர்கள் உதவி ஆசிரியர்களாகப் பணியாற்றுகிறார்கள். தமிழ் வகுப்பின் அமைப்பாளர்கள் பதின்மர். இந்த ஆசிரியர்களும் அமைப்பாளர்களும் தங்களது நேரத்தையும், சக்தியையும் தமிழ் வகுப்பிற்காகச் செலவிடுகிறார்கள். எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல் கடுமையாக உழைக்கிறார்கள். ஹாங்காங் தமிழ்ச் சமூகத்தைப் போலவே தமிழ் வகுப்புகளிலும் இந்துக்களும் இஸ்லாமியர்களும் நல்லிணக்கம் பேணுகிறார்கள்.

பாடமும் திட்டமும்

சுவர் இருந்தால்தான் சித்திரம் தீட்ட முடியும். அந்தச் சுவர்தான் உள்கட்டமைப்பு. அதாவது வகுப்பறைகளும் இன்னபிற வசதிகளும்; இது மெதுவாக உருக்கொண்டது. உள்ளடக்கம்தான் சித்திரம். அதாவது பாடத்திட்டம். வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டபோது குறிப்பிட்ட பாடத்திட்டம் இல்லை. எழுத்துக்கள், வார்த்தைகள், வாக்கியங்கள் எல்லாவற்றையும் ஆசிரியர்கள் நோட்டுப் புத்தகங்களில் எழுதி, அதைப் பார்த்து மாணவர்கள் எழுதினார்கள். பிற்பாடு தமிழ்நாட்டுப் பாடநூல்களின் ஒளிநகல்கள் பயன்படுத்தப்பட்டன. பல்வேறு பாடத்திட்டங்களைப் பரிசீலித்த பிறகு சிங்கப்பூரின் தமிழ்ப் பாடப் புத்தகங்கள், பல்வேறு கலாச்சாரம், பல இனங்களைக் கொண்ட சமுதாயத்திற்காக உருவாக்கப்பட்டிருந்தது. அதனால் அவை ஹாங்காங் சூழலுக்கும் பொருத்தமாக இருந்தது. இரண்டாம் ஆண்டு முதல், அதாவது 2005ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரின் ‘தமிழோசை’ நூல்களையே மிகுதியும் பயன்படுத்துகிறோம். கூடவே, தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள் வெளியிட்டிருக்கும் பயிற்சிப் புத்தகங்களையும் இலக்கண நூல்களையும் பயன்படுத்துகிறோம்.

இன்னொரு பிரச்சினையும் இருந்தது. இந்தியாவில் மொழியைப் படிப்பதில் எழுதும் திறனுக்கே மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆனால், மொழி அறிவு நான்கு முக்கியத் திறன்களை உள்ளடக்கியது. அதாவது, கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் ஆகியன. ஹாங்காங் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இவ்வகையான மொழிக் கல்வியே போதிக்கப்படுகிறது. மாணவர்கள் இந்த நான்கு திறன்களிலும் தேர்ந்து, முழுமையான மொழியறிவு பெற வழி வகை செய்கிறது.

ஹாங்காங் தமிழ் மாணவர்கள் ஆங்கிலத்தையும் பிற மொழிகளையும் இந்த முறையிலேயே படிக்கிறார்கள். அதனால் தமிழையும் இதே முறையில் பயில விரும்பினார்கள். இந்த முறைக்கு ஏற்றாற் போல் பாடத்திட்டம் அமைக்கப்பட்டது. இது மனப்பாடம் செய்யும் முறை அல்ல. வகுப்புகள் இறுதித் தேர்வை மட்டும் குறிக்கோளாகக் கொண்டவையல்ல. வாய்மொழித் தேர்வுகளும் சொல்லி எழுதும் தேர்வுகளும் உண்டு. வகுப்பறையில் குழந்தைகளின் திறன் தொடர்ந்து பரிசீலிக்கப்படுவதால் ஆண்டிறுதியில் வரும் எழுத்துத் தேர்வின் முக்கியத்துவம் குறைக்கப்படுகிறது.

மாணவர்களின் தமிழ்க் கல்விக்கே முக்கியத்துவம் வழங்கப்பட்டதால் புறமே நடத்தப்படும் தேர்வுகளில் அமைப்பாளர்கள் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் பலருக்கும் இது ஒரு குறையாக இருந்தது. நமது பிள்ளைகளின் கல்வித் தரத்தை வேறு உரைகல்களில் உரசிப்பார்க்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். தமிழக அரசின் தமிழ் இணையக் கல்விக் கழகம் (TVA) மூலம் ஆரம்பக் கல்வி (சான்றிதழ்), உயர் நிலை (மேற்சான்றிதழ்), பட்டயம், பட்டம் என்று பல நிலைகளில் தமிழைக் கற்க முடியும். ஹாங்காங் YIFC கல்விக் கழகம், தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் தேர்வு மையமாகப் பதிவு செய்துகொண்டது. 2016 முதல் விருப்பமுள்ள மாணவர்கள் இணையக் கல்விக் கழகத்தின் தேர்வையும் எழுதுகிறார்கள். தேர்ச்சி விகிதம் இதுவரை எல்லா ஆண்டுகளிலும் 100%.

கட்டுரையின் தொடக்கத்தில் நான் ஆலோசகராகத் தொடர்வதின் சூட்சுமத்தைப் பற்றிச் சொல்லியிருந்தேன். அமைப்பாளர்கள் என்னை அவ்வப்போது அணுகி ஆலோசனை கேட்பார்கள்.  அவர்கள் கேட்டாலும் கேட்காவிட்டாலும் நான் பலப் பல ஆலோசனைகளை வழங்குவேன். அவற்றில் சிலவற்றை அமைப்பாளர்கள் காலப்போக்கில் செய்துவிடுவார்கள். வகுப்பறை மாற்றம், சிங்கப்பூர் பாடப் புத்தகம், நான்கு திறனுக்கும் பயிற்சிகள், இணையதளம், TVA தேர்வுகள் முதலானவை அப்படியானவை. அப்படி அவர்கள் செய்யும்போது நான் மறக்காமல் நினைவூட்டுவேன்: ‘நான்தான் சொன்னேன்!’ இப்படியாகத்தான் நான் 21 ஆண்டுகளாக அலோசகராகத் தொடர்ந்து வருகிறேன்.

தொன்மையும் தொடர்ச்சியும்

கா. சிவத்தம்பி ஒருமுறை குறிப்பிட்டார்: “தமிழின் மேன்மை, அதன் தொன்மையில் இல்லை; அதன் தொடர்ச்சியில் இருக்கிறது.” ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு செம்மொழி, இன்னும் பயன்பாட்டில் இருக்கும் ஒரு நவீன மொழி, நம்முடைய தாய்மொழியாக அமைந்தது எதேச்சையாக இருக்கலாம். ஆனால் அது பெருமைக்குரியதல்லவா? அந்த மொழியை அடுத்த தலைமுறைக்குக் கைமாற்றுவது நமது கடமை. அதன் இலக்கியச் செழுமையை அவர்கள் கற்றுணர வகைசெய்ய வேண்டாமா? அதைத்தான் ஹாங்காங் தமிழ் வகுப்புகள் செய்துவருகின்றன. தமிழ் மொழியைப் போலவே ஹாங்காங் தமிழ் வகுப்புகளும் அதன் தொடர்ச்சியினால்தான் பெருமையடைகிறது.

தொடரும்…

Mu.Ramanathan@gmail.com

**

ஆசிரியர்கள்:

கலைச்செல்வி அருணாச்சலம் (2004-2025), ஷஃபீனா அப்துல் ரஹ்மான் (2008-2025),  அனுராதா ரங்கநாதன் (2012-2025), சாமு பாத்திமா இஸ்மாயில் (2016-2025), செய்யது கதீஜா அப்துல் கப்பார் (2014-2023), அலமேலு இராமனாதன்(2005-2017), ராதா மணி (2008-2019), ஶ்ரீபிரியா பூவராகவன் (2012-2019), கவிதா மோகன் (2012-2018), சுதா ரவி (2012-2018), நஃபிஸா நஸீரா புஹாரி (2020-2025), ஜஹரா ஷஹ்மா புஹாரி (2016-2021), கதீஜாத்து ஃபத்ஹிய்யா அபுல் காசிம் (2017-2022), செல்வலெட்சுமி சதிஷ்குமார் (2017-2022), மணிமேகலை செந்தில்குமார் (2014-2023), மீனாட்சி வெங்கட சுப்ரமணியன் (சித்ரா GKV) (2012-2017), சித்தி ஹவ்வா மரைக்கார் (2005-2024), ஷிபு டேனியல் (2006-2013), கண்மணி செல்வம் (2012-2015), சுகந்தி பன்னீர்செல்வம் (2008-2014), பிரதூஷா வெங்கடேஷ்(2018-2021), மர்யம் ஹாபிரா ஹபீப் (2015-2019),  சாந்தி சுரேஷ் (2023-2025), நித்யகல்யாணி கண்ணன்  (2023-2025),  பவித்ரா ராஜ்குமார் (2023-2025), ரேவதி செல்வகுமார் (2023-2025), தனஞ்ஜெயன் (2016-2018),  வெங்கடகிருஷ்ணன் (2004-2006), முயினா ஷாமு (2005-2007)  ராதிகா தமிழ்ச்செல்வன் (2019-2021), ரிஹானா அஜிமுல்லா (2019-2021), வத்சலா மிருணாளினி (2008-2010), அனிதா வினோத்குமார் (2024-205), பத்ரு மஹ்பூபா அப்துல் காதர் (2024-2025), சதீஷ் பாலகிருஷ்ணன் (2008-2009), செந்தில் குமார்  (2008-2009), ஹரிதாஸ் நாராயணன் (2013-2014),  ஹுசைன் அலி (2007-2008), அஹமது அலி பாத்திமா (2022-2023),  கதீஜா ஹசன்(2014-2015), கஸ்தூரி ராஜ்குமார் (2022-2023), சித்ரா சிவகுமார் (2013-2014), சுகீதா சந்தோஷ் (2019-2020), நளினா ராஜேந்திரன் (2006-2007), பிரசன்னா ரவி (2016-2017), பிரியங்கா செல்வகுமார் (2017-2028), பிருந்தா பிரிட்டோ ரெய்மன்ட் (2022-2023), பூங்குழலி சுந்தரமூர்த்தி (2015-2016), மானசா ஶ்ரீகணேஷ் (2022-2023), ஜூலி அருள் விவியன் போயஷ் (2021-2022), ஜென்சி சேவியர்  பெர்ணான்டோ (2021-2022)

 துணை ஆசிரியர்கள்:

ரஸ்மியா செய்க் (2016-2024), ஷலினா செய்யது அஹமது (2018-2025), முத்து ஆஷியா மப்ரூக்கா சுஐபு நூஹு (2018-2025). முர்ஷிதா ஷிரின், (2013-2019), ஷாஹிதா ருக்‌ஷானா,  (2013-2019), ஃபாத்திமா ஜெரினா புஹாரி (2019-2025), ஜுலைஹா ஜஃப்ரின் புஹாரி (2019-2025), கதீஜா முஸ்ரிஃபா அப்துல் காதர் நெய்னா (2019-2024), ஃபாத்திமா இஃபாஜா உபைதுல்லா (2020-2025), ராபியா ஜுமைனா சாகுல் ஹமீது (2019-2025), ஜுலைஹா குல்தும் புஹாரி (2021-2025), ஜுலைஹா செய்யது அஹமது (2022-2025), வாவு ஆமினா யாசிர் (2022-2025), நத்ரா ஆயிஷா இஸ்மாயில் (2022-2025), கதீஜா ஹபீப் (2017-2019), அஸ்வதரக்ஷா சதீஷ்குமார் (2020-2022), சலிமா புஹாரி (2023-2025), அக்‌ஷா சபியுர்ரஹ்மான் (2023-2025), நுஹா பாத்திமா செய்யது நஸூருல்லா (2023-2025), வாவு நூரி ஷஜாதி காமில் (2023-2025), கதீஜா அஃபீபா அஹமது (2023-2025), ரஸினா நிலோபர் (2015-2016), மர்ஜான் (2017-2018), அச்சுதபாலா சதீஷ்குமார் (2019-2020), கதீஜா நபவிய்யா (2024-2025)

ஆலோசகர்கள்:

முஜிபுர் ரஹ்மான், ஜே.வி. ரமணி, மு. இராமனாதன்

அமைப்பாளர்கள்:

தைக்கா உபைதுல்லாஹ் (நிறுவனத் தலைவர்), அப்துல் அஜீஸ் (தலைவர்),ஹபீப் முஹம்மது அம்ஜத், காழி அலாவுதீன், முபாரக், பிரபு சுஐபு, ஷேக் அப்துல் காதர், சதக் மீரான், செய்க் மொஹுதூம், செய்யது அஹமது

நினைவில் என்றும்:

ஆலோசகர்கள்: ஜவஹர் அலி (1945 -2019), அ. நஜிமுதீன் (1945-2021), எஸ்.எம்.உஸைர் (1944-2022); அமைப்பாளர்கள்: அப்துல் காதர் (1972-2018), ஹபீப் முஹம்மது (1967-2024)

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button