இணைய இதழ்இணைய இதழ் 63சிறுகதைகள்

ஜி.பி திரையரங்கம் – மிதுன் கௌசிக்

சிறுகதை | வாசகசாலை

-நன்றி –

‘ஆருயிர் அண்ணன், ஆசான்’
 சக்திவேல் .வி,
‘சினிமா மேஜிக்’ சிடி / டிவிடி கடை, 
வாழப்பாடி, சேலம். 

திரைப்படத்தின் துவக்கத்தில் முதல் ‘டைட்டில் கார்டில்’ இதைப் பார்த்தவுடனே அவனாகத்தான் இருக்குமோ என்று தோன்ற ஆரம்பித்தது. நான் திரையரங்கிற்குச் சென்று படம் பார்ப்பதே இப்போதெல்லாம் அரிதாகிவிட்டது. கார்ப்பரேட் நெருக்கடிகளும், குடும்பப் பொறுப்புகளும் என்னை இயந்திரம்போல சுழற்றிக்கொண்டிருந்தன. கொரோனாவிற்குப் பிறகு நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது. தினமும் 12 முதல் 14 மணி நேர வேலை. வீட்டிலிருந்தே வேலை செய்வது பெரு நிறுவனங்களுக்கு பணியாளர்களின் உழைப்பைச் சுரண்ட இன்னும் வசதியாகிவிட்டது. இது போக வீடு மற்றும் வாகனக் கடன்கள் என எதற்காக யாருக்காக வேலை செய்கிறேன் எனத் தெரியாமல் இலக்கற்று ஓடிக் கொண்டிருக்கிறேன். ஆனால், நல்ல சம்பளம். அந்த ஒன்றிக்காகத்தான் இவ்வளவு ஓட்டங்களும். 

பல மாதங்கள் கழித்து கோவைக்கு மனைவி வீட்டிற்கு வந்திருந்தோம். வெளியாகி இரண்டு வாரங்கள் ஆகி சிறப்பான விமர்சனங்களையும், வரவேற்பையும் பெற்று ஓடிக்கொண்டிருந்த இந்தத் திரைப்படத்திற்குப் போயே ஆக வேண்டும் என்று மனைவி வற்புறுத்தியதால், இந்தப் படத்திற்கு வந்திருந்தோம். புதிய இயக்குநர், புதிய நடிகரின் படமென்றாலும் நல்ல கூட்டம். பல நாட்கள் கழித்து என்னை மறந்து மகிழ்ச்சியாக இருந்தேன். 

படம் முடித்து காரில் வந்துகொண்டிருந்த போதுதான் அதைக் கவனித்தேன். பழைய ‘ஜி.பி ப்ரீத்தம்’ திரையரங்கு இப்போது ‘ஜி.பி’ கல்யாண மண்டபமாக மாறி இருந்தது. மறக்க முடியாத வேடிக்கையான நினைவுகள். திரும்பவும் சக்திவேலைப் பற்றிய சிந்தனைகள் எழ ஆரம்பித்தன.

அப்போது கல்லூரி ஆரம்பித்து சரியாக பத்து நாட்கள்தான் ஆகியிருந்து. சனிக்கிழமை மதியம் உணவு இடைவேளைக்குப் பிறகு வரும் முதல் வகுப்பில் ‘மின் மற்றும் மின்னணுவியல்’ பேராசிரியர் மின் சுற்றுகளை கரும்பலகையில் வரைந்து பாடம் நடத்திக் கொண்டிருந்தார். இயந்திரவியல் துறை மாணவர்களுக்கு மின் துறையில் ஒரு அடிப்படை அறிவு வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் பாடம். வெறுப்பாக இருந்தது.

அதிலும் இந்தப் பேராசிரியர் நடத்த ஆரம்பித்தால் ரயில் வண்டிபோல் இரண்டுமணி நேரம் கனநொடி கூட இடைவெளி விடாமல் போய்க்கொண்டே இருப்பார். அவர் கரும்பலகையில் எழுதும் போது குறிப்புகள் எடுக்க வேண்டும், பேசும் போது அவரையே கவனிக்க வேண்டும். மீறினால் வகுப்பை விட்டு வெளியேயெல்லாம் அனுப்ப மாட்டார்.. உள்ளேயே இரண்டு மணி நேரம் உட்கார வைத்துவிட்டு வருகைப் பதிவேட்டில் ஆள் வரவில்லையெனக் குறித்து விடுவார். எங்களுக்கு வரும் ஒரே பெண் பேராசிரியர் இவர்தான், வகுப்பில் இருக்கும் ஒரே பெண்ணும் இவர்தான். 

90% முதலாம் ஆண்டு பொறியியல் துறைகளுக்கு சனிக்கிழமை வகுப்புகள் கிடையாது. மீதியுள்ள துறைகளில் எங்களைத் தவிர மற்ற அனைவருக்கும் சனிக்கிழமை அரை நாள்தான். பெரும் வேதனையாக இருந்தது.

கடந்த ஆண்டு பார்த்த ‘சில்லுனு ஒரு காதல்’ திரைப்படத்திலும், சில ஆண்டுகளுக்கு முன் பார்த்த ‘மின்னலே’ திரைப்படத்திலும் வரும் பொறியியல் கல்லூரி வாழ்க்கையும், அதில் இயந்திரவியல் துறை மாணவர்களாக வரும் கதாநாயகர்களும், எனக்குள் ஒரு ஏகாந்த பிம்பத்தையும் ஏதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருந்தன. அந்த பிம்பம் இப்போது சுக்குநூறாக உடைந்துபோயிருந்தது. திரைப்படங்களில் வரும் பொறியியல் கல்லூரிக்கும் நிஜ வாழ்க்கையில் இருக்கும் பொறியியல் கல்லூரிக்கும் எந்தச் சம்மந்தமுமில்லை என்ற பேருண்மையை இந்த நாட்களில் அறிந்து கொண்டிருந்தேன். சிறுவயதிலிருந்து ஆண்கள் பள்ளியில் படித்து, பின்பு கல்லூரிக்கு வந்தால் இங்கேயும் அனைவரும் ஆண்கள். அப்போது உச்சத்தில் இருந்த தகவல் தொழில்நுட்பத் துறையிலேயே சேர்ந்திருக்கலாமோ என்று உள்ளுக்குள் வருத்தப்பட்டுக்கொண்டிருந்தேன். பனிரெண்டாம் வகுப்பில் கணினி அறிவியல் பாடம் எடுத்த சாரதா மிஸ்ஸை எனக்கு சுத்தமாகப் பிடிக்காது. அதனாலேயே அந்தப் பாடத்தின் மேல் ஒரு வெறுப்பு வந்துவிட்டது. அதேவேளையில் இயந்திரவியல் துறையின் மீது எல்லாம் எனக்கு ஒரு ஆர்வமுமில்லை. எனக்கு எதில் ஆர்வமென்று எனக்கே தெரியாது. சொல்லப்போனால் எனக்கு எதிலுமே ஆர்வம் கிடையாது. பெரும்பாலானோர் பொறியியல் துறையை தேர்வு செய்தார்கள்; அதனால் நானும் செய்தேன். அவ்வளவுதான்.

இந்தக் கடுப்பும், மத்தியான நேர மந்த நிலையும், தொடர் சொற்பொழிவும், மின் சுற்றுகளும் மண்டைக்குள் குடைச்சலை ஏற்படுத்திக்கொண்டிருந்தன. பத்து நாட்கள்தான் ஆகியிருந்ததால் சக மாணவர்களின் பெயர்கள் கூட இன்னும் முழுதாக பரிட்சயமாகவில்லை. ஒரே பள்ளியிலிருந்து, ஒரே ஊரிலிருந்து, ஒரே மாநிலத்திலிருந்து வந்தவர்களெல்லாம் நட்பாகி இருந்தார்கள். எனக்கு அப்படி எதும் அமையவில்லை. கல்லூரிக்கு எதிரில் சாலையைக் கடந்தால் விடுதி. பெரும்பாலும் தனியாகவே போய் வந்துகொண்டிருந்தேன். வகுப்பில் தினமும் வெவ்வேறு ஆட்களின் அருகில் அமர்ந்துகொள்வேன். 

அன்று சக்திவேல் அருகில் அமர்ந்திருந்தான். வகுப்பை உன்னிப்பாக கவனித்து குறிப்புகள் எடுப்பது போலவே முகபாவனையும் உடல்மொழியையும் வைத்துக்கொண்டு நோட்டில் ஆபாசப் படங்களை பக்கம் பக்கமாக வரைந்து கொண்டிருந்தான். கலைக்கண்ணோடு பார்த்தால் அவை நல்ல கலைநயமான அழகான ஓவியங்கள்தான். நான் அவற்றை ரகசியமாகப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தேன். நான் அதைப் பார்த்து என்ன நினைக்கப்போகிறேன் என்பதைப் பற்றி எந்தக் கவலையும் அவனுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. அவன் என்னைப்பார்த்து புன்னகைத்தான், நானும் மெலிதாகப் புன்னகைத்தேன். அடுத்த ஒரு மணிநேர வகுப்பை அந்த ஓவியங்களை ரசித்தபடி ஓட்டிவிட்டேன்.

சக்திவேல் தஞ்சை அரசு வேளாண் கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் படித்துவிட்டு பிறகு அதை பாதியிலேயே விட்டுவிட்டு இங்கு வந்து சேர்ந்திருந்தான். அந்த ஆண்டுதான் பொறியியல் படிப்பிற்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டிருந்ததால்தான் இவனைப்போன்ற மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு அமைந்தது. பொறியியல் படிப்பது மட்டும்தான் வாழ்க்கையில் முன்னேற ஒரே வழி என்று யாரோ அவனது உறவினர் கட்டாயப்படுத்தியதால் இங்கு வந்து சேர்ந்திருக்கிறான். அவனது உடல் மொழியே வேறுமாதிரி இருக்கும். கல்லூரி வாழ்க்கைக்குப் புதிது என்பதால் எந்த விதிகளை மீறலாம், எதை மீறக்கூடாது என்ற தயக்கங்கள் என்னைப் போன்றவர்களுக்கு இருந்தது. ஆனால், ஏற்கனவே இரண்டு ஆண்டுகள் கல்லூரியில் படித்து வந்ததால் அவனுக்கு அந்தத் தயக்கங்களோ பயங்களோ ஏதும் இல்லாமல் இருந்தது. 

வகுப்பு முடிந்து நான் வெளியே வந்தேன். சனிக்கிழமை மாலை நான்கு மணி. என்ன செய்வது, எங்கே போவது என்று தெரியவில்லை. ஊரும் புதிது, நண்பர்களும் இல்லை. நாளை ஒரு நாள்தான் விடுமுறை என்றாலும் சில புதிய மாணவர்களுக்கு தங்கள் வீட்டு ஞாபகம் தாங்காமல் ஊருக்கு பையை தூக்கிக்கொண்டு போய்க்கொண்டிருந்தார்கள். சக்திவேல் டீக்கடையில் நின்று புகை பிடித்துக் கொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும் அதை நீட்டினான். நான் மறுத்துப் புன்னகைத்தேன். இருவரும் சாலையில் வேறு துறைப் பெண்கள் போவதை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தோம். “படத்திற்குப் போலாமா?” என்று சத்திவேல் கேட்டான். எப்படி நேரத்தைக் கழிப்பது என்று தெரியாத நான் யோசிக்காமல் சரியென்றேன். எந்தப் படத்திற்குப் போகலாம் என்று நாங்கள் பேசிக்கொண்டிருக்கையில் எங்கள் வகுப்பைச் சேர்ந்த பாலுவும் சங்கரும் அங்கு வந்தார்கள். ஒரே பள்ளியில் படித்தவர்கள். பாலுவை பெயர் அளவில் தெரியுமே தவிர, பெரிதாகப் பழக இன்னும் வாய்ப்பு அமையவில்லை. சங்கரிடம் ஒருதடவை பேசியிருந்த அறிமுகம் இருந்தது. 

நாங்கள் படத்திற்கு போகத் திட்டமிடுவதைத் தெரிந்து கொண்டு தாங்களும் வருவதாகக் கூறினார்கள். ஆனால், எங்களால் எந்தப் படத்திற்குப் போவது என்று ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. அது ஜூன் மாதம். பெரிதாக நல்ல படங்கள் எதுவும் வெளியாகவில்லை. திரும்பி விடுதிக்கு போகும் மனநிலையில் நாங்கள் துளியும் இல்லை. நான்கு இளைஞர்கள் செல்வதற்கான இடம் திரையரங்குகளைத் தவிர வேறு என்ன இருக்கப்போகிறது? அமைதியாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தோம். அப்போது அவனது இயல்பான சலனமில்லா தொனியில், “பிட்டுப் படத்திற்குப் போலாமா?” என்று சக்திவேல் கேட்டான். நாங்கள் மூவரும் சற்று திகைத்து விட்டோம். அவர்கள் இருவரும் ஏதோ கேட்கக் கூடாததைக் கேட்டதுபோல முகபாவனையை வைத்துக்கொண்டிருந்தனர். உள்ளுக்குள் குறுகுறுப்பான ஆசை இருந்தாலும் என்ன சொல்லவதென்று நான் தயங்கி நின்றேன். சக்திவேல் அதைச் சரியாக கணித்தவனாக என்னைப் பார்த்து, “போலாமா?” என்று கேட்டான். நான் இதுவரை சென்றதில்லை என்று தயங்கினேன். தான் பலமுறை சென்றிருப்பதாக அவன் கூறினான். பாலுவும் சங்கரும் சக்திவேலை அதிசயமாகப் பார்த்தார்கள். ஒரு அனுபவசாலி உடன் இருப்பதால் போகலாம் என்று நான் முடிவுசெய்துவிட்டேன். பாலுவும் சங்கரும் எந்த ஆர்வமும் காட்டவில்லை.

காந்திபுரம் பேருந்துநிலையம் அருகில் எதோ ஒரு திரையரங்கில் பலான படம் ஓடுவதாகவும், அதை ஊரிலிருந்து வரும்போது பார்த்ததாகவும் சக்திவேல் சொன்னான். நான் சரி என்று தலையை ஆட்டினேன். காந்திபுரம் போகும் பேருந்து எண்ணை விசாரிக்க சத்திவேல் சென்றான். பாலுவும் சங்கரும் அவர்களுக்குள்ளேயே ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். ஒருவேளை வகுப்பில் அனைவரிடமும் சென்று இந்த விசயத்தை சங்கூதிவிடுவார்களோ என்று எனக்கொரு பயம் வந்தது.

“ரொம்ப யோசிக்காதீங்கடா. எனக்கும் இதுதான் மொத தடவ. யாருக்கும் தெரியாம போயிட்டு வந்துடலாம்டா” என்றேன். 

அவர்கள் சற்று யோசிப்பதுபோல தெரிந்தது. 

“என்ன இருந்தாலும் பெரிய ஸ்கிரீன்ல பாக்குற மாதிரி வருமா? என்று சில ஆசை வார்த்தைகளை ஏவிவிட்டேன். 

ஆனால், எதுவும் பலனளிக்கவில்லை. சக்திவேல் வரவும், நானும் முழுதாக நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்று இவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் பேருந்து நிறுத்தத்தை நோக்கி அவனுடன் நடக்க ஆரம்பித்தேன். பாலுவும் சங்கரும் தாங்களும் காந்திபுரம் வருவதாகவும், பிறகு அங்கிருந்து ‘சென்ட்ரல்’ திரையரங்கிற்குச் சென்று அங்கு ஏதோவொரு ஆங்கிலப்படம் பார்க்கப்போவதாகவும் சொன்னார்கள். சரியென்று நான்கு பேரும் காந்திபுரம் செல்லும் பேருந்தில் ஏறினோம். பள்ளி காலத்தில் ‘சிஃபி ஐ-வே’ (sify i-way) பிரௌசிங் மையங்கள் புதிதாக வந்த சமயத்தில், ஒருமணி நேரத்திற்கு பத்து ரூபாய் குடுத்து பலான படங்கள் பார்த்த அனுபவங்கள் இருந்தாலும் திரையரங்கிற்குப் போய் பார்ப்பது வேறு அனுபவம்தானே. நீண்ட நாள் ஆசையும்கூட. எனக்கு சற்று ஆவலாகவும் பதட்டமாகவும் இருந்தது. 

பேருந்து அரசு பெண்கள் பாலிடெக்னிக் பேருந்து நிறுத்தத்தை நெருங்கும்போதுதான் நான் அதைப் பார்த்தேன். ஓடையிலிருந்து ஒரு இளம் பெண் நிர்வாணமாக எழுந்து வருவதுபோன்ற சுவரொட்டி. அந்தப் பெண்ணின் மேல் பாகம் ‘அமேசான் அழகிகள்’ என்ற திரைப்படத்தின் பெயரையும், கீழ்பாகம் ‘ஜி.பி ப்ரீத்தம்- தினசரி 4 காட்சிகள்’ என்ற எழுத்துக்களையும் கொண்டு கனக்கச்சிதமாக மறைக்கப்பட்டிருந்தது. மனித உளவியலைச் சீண்டும் வியாபார தந்திரம் போல. ‘அவற்றைப் பார்க்க வேண்டுமென்றால் திரையரங்கிற்கு வா’ என்ற அழைப்பு. ‘இதோ அங்குதான் வந்துகொண்டிருக்கிறேன்’ என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டேன்.

காந்திபுரத்தில் இறங்கியதும் பாலு, “எந்தப் படத்திற்குப் போறீங்க?” என்று என்னைக் கேட்டான். “அமேசான் அழகிகள் போஸ்டரைப் பார்த்தால் இங்கிலீஷ் டப்பிங் பிட்டுப் படம் போலத்தான் இருக்கு” என்று நான் சொன்னேன். 

பாலுவும் சங்கரும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு தாங்களும் வருவதாகச் சொன்னார்கள். நான் அவர்களை ஆச்சரியமாகப் பார்த்தேன். சங்கர் , “இதுவும் இங்கிலீஷ் படம்தானே” என்றான். சக்திவேல் இதை ஏற்கனவே எதிர்பார்த்தது போல, ‘‘சரி வாங்க’’ என்று சொல்லிவிட்டு முன்னே நடந்தான். நாங்கள் சீடர்களைப் போல பின்தொடர்ந்தோம். 

காட்சி ஆரம்பிக்க இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருந்தன. திரையரங்கிற்கு எதிரில் உள்ள டீக்கடையில் தஞ்சமடைந்தோம். திரையரங்கு வாயில் காலியாக இருந்தது. படம் ஓடுவதற்கான எந்த அறிகுறியும் இல்லாதது போலத்தான் இருந்தது. மணி 5:55 ஆகிவிட்டது. 

நான், “என்ன யாரையும் காணோம். நாம போலாமா? போய் டிக்கெட் எடுக்கனுமல்ல?’’ என்று சக்திவேலிடம் கேட்டேன். 

“இது என்ன ரஜினி படமா? முன்னமே போய் வரிசைல நின்னு டிக்கெட் வாங்க. இந்த மாதிரி படத்திற்கு வர்றவங்க எல்லாரும் இங்க பக்கத்துலதான் இருப்பாங்க. சரியா 6 மணிக்கு பெல் அடிச்சதும் வருவாங்க பாரு.” என்றான். 

அதேமாதிரி மணி அடித்ததுதும் நாற்பது ஐம்பது பேர் உள்ளே நுழைந்தார்கள். எனக்கு வியப்பாக இருந்தது. 

“ஒருவேள உள்ள நம்மள விசாரிச்சா காலேஜ் பைனல் இயர், வயசு 20னு சொல்லிடுங்கடா” என்று சக்திவேல் சொன்னான். 

எங்கள் மூவருக்கும் 18 வயது நெருங்கியும் நெருங்காமலும் இருந்தது . அவனுக்கு 20. எனக்கு பயம் வந்துவிட்டது. வயதைக் கேட்டு விடுவார்களோ; ‘ஐடி- கார்டை’ காட்டச் சொல்லிவிட்டால், நங்கள் மாட்டிக் கொள்வோமோ, அவமானப்படுத்தித் திருப்பி அனுப்பிவிடுவார்களோ, அதுகூட பிரச்சினையில்லை, கல்லூரிக்கோ வீட்டிற்கோ தொடர்புகொண்டு சொல்லிவிட்டால் என்ன ஆவது என எனது சிந்தனைகள் எங்கெங்கோ சென்றுவிட்டன. கல்லூரியில் சேர்ந்து பத்து நாட்கள்தான் ஆகியிருக்கிறது, இது தேவைதானா என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டேன். பாலுவும் சங்கரும் என்னைவிட பீதியில் இருந்தனர். 

“டேய், ரொம்ப யோசிக்காதீங்கடா. பலதடவை இந்த மாதிரி படத்துக்குப் போனவன் எப்படி ஒரு தோரணைல போவானோ, அந்தமாதிரி போன யாரும் ஏதும் கேக்கமாட்டாங்கடா” என்று நம்பிக்கையளித்தான் சக்திவேல். 

வாழ்க்கையில் எதைத் தவறு என்று சொல்கிறார்களோ, எதை எந்தவொரு விளக்கமும் தராமல் செய்யவே கூடாது என்று கட்டளை இடுகிறார்களோ, அதை எப்படியாவது மீறி செய்து பார்த்துவிடத் தோன்றுவதுதான் மனித இயல்பு. அதுதரும் குறுகுறுப்பும் திகிலும் வேறுதான்.

நாங்கள் சாலையைக் கடந்து திரையரங்கை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். யாரையும் கண்ணோடு கண் பார்ப்பதைத் தவிர்க்குமாறு எங்களிடம் சக்திவேல் சொன்னான். எதோ ‘கமாண்டோ மிஷன்’க்குச் செல்வது போல எங்களை அவன் வழிநடத்தினான். அதிலொரு பெருமிதம் அவனுக்கு. நங்கள் திரையரங்கை இயல்பாக கடந்துசெல்வது போல நடந்து, யாரும் கவனிக்காத நேரத்தில் அப்படியே உள்ளே நுழைந்ததாய் நினைத்து பெருமைப்பட்டுக்கொண்டோம்.

நேராக சீட்டு வாங்கும் இடத்திற்குச் சென்று வரிசையில் நின்று கொண்டோம். பெரும்பான்மையானோர் நடுத்தர வயது ஆண்களாகத்தான் இருந்தனர். எங்களைத் தவிர எல்லோரும் தனியாக வந்திருந்தனர். நாங்கள் மட்டும்தான் மந்தை ஆடுகள் மாதிரி கூட்டமாக இருந்தோம். சீட்டைக் கிழித்து உள்ளே அனுப்பினார்கள். 

“என்னடா யாரும் எதும் கேக்கல?” என்று பாலு தலையைக் குனிந்தவாறே கேட்டான். 

“கூட்டம் கம்மியாத்தான் இருக்கு. நம்மள வெளியே அனுப்பிச்சா நாலு டிக்கெட் காசு அவனுக்கு நட்டம் ஆகிடுமெல்ல. அதனாலேயே கண்டுக்கமாட்டாங்க” என்றான் சக்திவேல். இவன் உண்மயையாலுமே விஷயம் தெரிந்தவன்தான் என்று நினைத்துக்கொண்டேன். உள்ளே எங்களைத்தவிர அனைவரும் அங்கொன்றும் இங்கொன்றுமாக தனித் தனியாக அமர்ந்து கொண்டிருந்தனர்.

நகரத்திலிருந்து மூன்று பெண்கள், ரெண்டு ஆண்கள் என சுற்றுலாவுக்கு வரும் ஒரு கூட்டம் அமேசான் காடுகளில் தொலைந்து விடுகின்றனர். பிறகு பழங்குடி மனிதர்கள் அவர்களை மீட்டெடுத்து அடைக்கலம் தருகிறார்கள். மீட்க யாரும் வராததால் நகர மக்கள் அவர்களுடனே வாழ்ந்து வருகின்றனர். இதுதான் இடைவேளை வரையிலான கதை. நாங்கள் எதிர்பார்த்தது துளியும் வராததால் ஏமாற்றத்துடம் நாங்கள் வெளியே வந்தோம்.

வழக்கமாக இந்தமாதிரிப் படங்களில் இடைவேளைக்குப் பிறகு வரும் காட்சிகளிலும், படத்தின் இறுதிக் காட்சியிலும்தான் பலான காட்சிகள் வரும் என்று சக்திவேல் சொன்னான். அது சற்று நம்பிக்கை அளித்தது. கேண்டீன் பகுதியில் யாரும் யாருடனும் பெரிதாகப் பேசவில்லை. திரையரங்கில் ஒரு இடைவேளை நேரம் இவ்வளவு அமைதியாக இருப்பது எனக்கு வித்தியாசமாக இருந்தது. 

இடைவேளை முடிந்து, வெகு நேரம் கழித்துதான் கதையின் நாயகி குளித்துவிட்டு ஆற்றிலிருந்து எழுந்து நடந்து வரும் அந்தக் காட்சி வந்தது. சுவரொட்டியில் பார்த்த அதே காட்சி. அங்கு எழுத்துக்களால் மறைக்கப்பட்டிருந்த இடத்தில் இப்போது இலை தழைகள் இருந்தன. இறுதியில் கடற்படையினர் வந்து அவர்களை மீட்டுச் சென்றுவிடுகின்றனர். அவ்வளவுதான் படம் முடிந்துவிட்டது. நாங்கள் யாரும் எதுவும் பேசவில்லை. நாங்கள் அமைதியாகப் பேருந்தில் விடுதிக்கு திரும்பிக்கொண்டிருந்தோம். 

“நானே இதுதான் மொத தடவ இங்கிலீஷ் படம் பாக்குறேன்டா. மலையாளப் படம்னா நிச்சயம் ஏதோ ஒன்னு கண்டிப்பா இருந்திருக்கும்.” என்றான் சக்திவேல். பாலுவும் சங்கரும்தான் என்னைவிட மிகுந்த ஏமாற்றத்துடன் இருந்தனர்.

பிறகு நாங்கள் எங்களுக்குள் இதைப் பற்றி பேசிக்கொள்ளவில்லை, வேறு யாரிடமும் சொல்லவுமில்லை. நாட்கள் கடந்தன. திரும்பவும் அந்த மாதிரி படங்களுக்கு நான் போகவில்லை. ‘ஸ்மார்ட் ஃபோன்’களின் வருகை, இண்டர்நெட்டின் அபாரமான வளர்ச்சி போன்றவை அதற்கான அவசியத்தை ஏற்படுத்தவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆனால், சக்திவேல் வாராவாரம் ஏதோவொரு படத்திற்குச் சென்றுவிடுவான். பலான படங்களைத் தாண்டி மொழி பேதமின்றி அனைத்து விதமான உலக, உள்ளூர் திரைப்படங்களையும் பார்த்துக் கொண்டிருப்பான். பாடப் புத்தகங்களைத் தவிர எல்லாவிதமான புத்தகங்களும் படித்துக் கொண்டிருப்பான். கல்லூரி நாடகங்களுக்கு கதைகள் எழுதித் தருவான். ஆனால், வகுப்பிற்கு எப்போதாவதுதான் வருவான். கிட்டத்தட்ட அனைத்து பாடங்களிலும் ‘அரியர்’ வைத்திருந்தான். இப்படியே சென்றால் அவன் பொறியியல் படிப்பை முடிப்பது கடினம் என்று தலைமைப் பேராசிரியர் எச்சரிக்கை செய்ய, அவனது அப்பா கல்லூரிக்கு வந்திருந்தார். 

“ஏன்டா, உனக்கு என்னதான் பிரச்சனை? படிக்கிறதத் தவிர வேற என்ன வேல உனக்கு? எவ்வளவு கஷ்டப்பட்டு உன்ன நான் படிக்கவைக்குறேன்.” என்றார் அவர். 

“நானா கேட்டேன்? நீ ஏன் கஷ்டப்படுற?” என்றான் சக்திவேல். 

“தமிழ்நாட்டுலயே நல்ல இன்ஜினியரிங் காலேஜ்ல இதுவும் ஒன்னு, இங்க இடம் கிடைக்குறதே பெரிய விஷயம். ஏன்டா வீணாக்குற?” என்றேன் நான்.

“எனக்கு இன்ஜினியரிங் விருப்பமில்லடா. நான் அப்பவே வேண்டாம்னு சொன்னேன். என்னால புடிக்காம எல்லாம் ஒரு விசயத்தை செய்யமுடியாதுடா.” என்றான் அவன். அவன் அப்பா அவனைப் பரிதாபமாகப் பார்த்தார். 

“நீ ஒன்னும் கவலைப்படாத. என் வாழ்க்கையை நான் பாத்துப்பேன்.” என்று சக்திவேல் தனது அப்பாவிடம் கூறினான். அவர் எதுவும் பேசாமல் எக்கேடோ கெட்டுப் போகட்டும் என்று சென்றுவிட்டார்.

அதன் பிறகும் அவனிடம் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. பெரும்பாலும் தனியாகவே சுற்றிக் கொண்டிருந்தான். இரண்டு வருடம் கழித்து படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டுச் சென்றுவிட்டான். அவன் ஊரான வாழப்பாடியில் எதோ சிடி / டிவிடி கடை வைத்திருந்ததாகவும், பிறகு இண்டர்நெட்டின் வளர்ச்சியால் சிடி / டிவிடிகள் வழக்கொழிந்து போக, அந்தக்கடையையும் மூடி விட்டான் என்பது தான் கடைசியாக அவனைப் பற்றி நான் கேள்விப்பட்ட செய்தி. 

இந்த நினைவுகளுடனே வீட்டிற்கு வந்ததும் நான், பாலு, சங்கர் என மூவரும் வீடியோ காலில் இணைந்தோம். பாலு அமெரிக்காவிலும், சங்கர் சவுதியிலும் பெரு நிறுவனத்தில் வேலையில் இருந்தனர். வழக்கம் போல எங்கள் பரபரப்பான, சலிப்பான, இலக்கற்ற வாழ்க்கையைப் பற்றிப் புலம்பிவிட்டு, பிறகு அவரவர் சமீபத்திய விலையுயர்ந்த முதலீடுகளைப் பற்றிப் பெருமை பேசிக்கொண்டிருந்தோம். பிறகு, நான் திரையரங்கில் பார்த்ததைச் சொன்னேன். 

“அது அவனேதான்டா. எதோ அந்தப் பட டைரக்டரும் வாழப்பாடிதான் போல. சக்திவேல்தான் அவன் கடையில இருந்த படம் சிடி / டிவிடி எல்லாம் சும்மாவே குடுத்து சினிமா ஆசைய தூண்டிவிட்ருப்பான் போல. அந்த டைரக்டர் ஒரு இண்டர்வியூல சொன்னான். பாத்தேன்” என்றான் சங்கர். 

“ஆமா சக்திவேல் கூட அப்போவே சினிமா சினிமானு இருந்தானல்ல.” என்று கேட்டான் பாலு. 

“ஆமாடா. எதோ பத்து வருசமா சினிமானு சென்னைலதான் சுத்திட்டு இருக்கானு கேள்விப்பட்டேன்” என்றான் சங்கர். 

“என்ன சுத்தி என்ன பண்றத. லட்சியம் ஆசைனு வாழ்க்கையத் தொலைச்சுட்டான்.” என்றான் பாலு.

“அதுசரிதான். நமக்கெல்லாம் ஆசை லட்சியமெல்லாம் இல்லையா என்ன? அதையெல்லாம் பண்ணுறோம்னு போயிட்டு இருந்தா நாமெல்லாம் இப்படி வசதியா இருக்க முடியுமா ?” என்றேன் நான்.

“எதோ படம் ஒன்னு ஆரம்பிச்சு பத்து நாள்லயே நின்னு போச்சாமாடா… நாலு வருஷம் முன்ன. அதுக்கு அப்பறம் ஒரு தகவலும் இல்ல. சினிமாலயெல்லாம் ஒரு தடவ தோத்துட்டா அவ்வளவுதானாம். “ என்றான் சங்கர். 

“இனி அவனெல்லாம் எடுத்தா, பிட்டுப் படம் எடுத்தாத்தான் உண்டு” என்றேன் நான். மூவரும் ஏளனமாக சிரித்துக்கொண்டிருக்கும்போதே எனக்கு அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்துவிட்டது. நேரம் 1:30, நடுநிசி இரவு, ஞாயிற்றுக்கிழமை. எனது ஓட்டம் தொடங்கிவிட்டது. 

******

mkr2030@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button