![](https://vasagasalai.com/wp-content/uploads/2019/08/vijay-1200-780x405.jpg)
சில நாட்களுக்கு முன்பு ஒரு தெளிவிற்காக முகநூலில், “தமிழ் சினிமாவில் பெண்களைத் திட்டி அல்லது அவமானப்படுத்தும் விதமாக வெளியான பாடல்கள் என்னென்ன?” என ஒரு பதிவு போட்டேன். நிறைய பேர் ஏராளமான பாடல்களை கமெண்ட் செய்தனர். அதில் பெரும்பாலான பெண்களின் பின்னூட்டம், “தனியா சொல்ல என்ன இருக்கு? 90% பாடல்கள் அப்படித் தான் வருகின்றன.” என்பதாக இருந்தது. இதை ஒரு ஓரமாக வைத்துக் கொள்வோம்.
தமிழ் சினிமாவின் நீண்ட நெடிய வரலாறு நாம் அனைவரும் அறிந்தது தான். அந்தந்த காலங்களில் பொது சமூகத்திற்கு இருக்கும் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றபடி தான் சினிமா எனும் தொழில் இயங்கி வருகிறது. மக்கள் எதை ஏற்றுக் கொள்வார்கள் எதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்ற ஆழ்ந்த அவதானிப்பு வெற்றிகரமான ஒரு திரைக்கலைஞனுக்கு அத்தியாவசியமாகிறது. அவன் அது சரியா தவறா என்ற விவாதங்களுக்குள் எல்லாம் போக விரும்புவதே இல்லை. படம் ஓடுமா ஓடாதா? எத்தனை நாள் ஓடும்? கைதட்டல்கள் விசில்கள் எந்த காட்சிகளிலெல்லாம் பறக்கும்? என்பதே அவன் எண்ணமாக இருக்கிறது. சினிமா சமூகத்திற்கான கலைப் பங்களிப்பு என்பதிலெல்லாம் அவனுக்கு உடன்பாடில்லை. மக்களும் அதையெல்லாம் எதிர்பார்ப்பதில்லை.
ஆதிகாலத்திலிருந்து பொதுசமூகத்தின் எதிர்பார்ப்பும், சினிமாவின் ஆதரவும் பெண்ணடிமைத்தனமாகவே இருந்திருக்கிறது. இப்போது ஒரு படத்தைப் பற்றிய கலந்துரையாடல்கள் நடக்கும் போது, “கதையை அந்தக் காலகட்டத்தில் சமூகத்தின் நிலையை மனதில் கொண்டு விமர்சனம் செய்ய வேண்டும்” என்றொரு வாதத்தை முன் வைக்கிறார்கள். அப்படிப் பேசக்கூடிய எல்லாத் திரைப்படங்களும் தூக்கிப் பிடித்திருப்பது பெண்ணடிமைத்தனத்தைத் தானே தவிர வேறொன்றையும் இல்லை. முதல் பாதியில் பெண்ணை சுயமாக வாழ்பவளாக, முடிவெடுப்பவளாக, சுயமரியாதை மிக்கவளாகக் காட்டி, பின் பாதியில் அதெல்லாம் தவறென்றும், ஆணை விடப் பெண் உயர்ந்தவள் இல்லையென்றும் கதாநாயகன் பல்வேறு விதங்களில் பாடம் புகட்டிய பின் க்ளைமேக்ஸில் அவள் சரசரக்கும் பட்டுப்புடவையும், தலை நிறைய மல்லிகைப் பூவுமாக வந்து வணக்கம் சொல்வதாக முடியும் திரைப்படங்கள் இப்போது வரை நம் சமூகத்தில் மினிமம் கேரண்டி என நம்பப்படுபவை.
இத்தகைய திரைப்படங்களில் இது போன்ற நாயகிகளை நாயகர்கள் சீண்டும் ஏராளமான பாடல்கள் உள்ளன. முற்றிலும் அடிமைத்தனத்தை அறிவுறுத்தும் வகையிலான வரிகளைக் கொண்டவையாக அத்தகைய பாடல்கள் அமைந்திருக்கும். க்ளாசிக் காலம் தொட்டு 90கள் வரை இது போன்ற, பெண்களை இழிவாகச் சித்தரிக்கும் பாடல்கள் வந்து கொண்டிருந்தன. இடையில், அதாவது 80களின் பிற்பகுதி மற்றும் 90களில் நாயகிகளுக்கென ஒரு அறிமுகப் பாடல் அல்லது சோலோ பாடல் வைக்கும் ட்ரெண்ட் உருவானது. கிராமப்புறங்களில் இருக்கும் நம் அக்காக்கள் சித்திகளின் விருப்பத்திற்குரிய பாடல்களாக இன்று வரை அந்தப் பாடல்கள் இருக்கின்றன. அவை பெரும்பாலும் நடக்கவே நடக்காத, நடக்கவே வாய்ப்பில்லாத சிலவற்றிற்கு அப்பெண்கள் ஆசைப்படுவது போல அல்லது தங்கள் கனவு நாயகன் பற்றியதாகவோ திருமணக்கனவுகள் பற்றியதாகவோ இருக்கும். இதைத் தாண்டி வேறு எதுவுமே அந்தப் பாடல்களில் இருக்காது. பெண்களின் ஆசைகள் கனவுகள் இவையாக மட்டுமே இருக்குமென யாரோ அவர்களாகவே முடிவு செய்து கொண்டனர். இதுவாவது கிடைத்ததே எனப் பெண்களும் அதை ஏற்றுக் கொண்டனர்.
இதுபோன்ற பெண்ணியப் பாடல்கள்(!) ஒரு புறம் வந்து கொண்டிருக்க, சமீபமாக ஒரு 15 ஆண்டுகளுக்குள்ளாக ‘Soup songs’ என்றொரு வகை அறிமுகமாகியது. முன்னாடியே இந்தவகைப் பாடல்கள் அவ்வப்போது வந்து கொண்டிருந்தாலும், ‘வொய் திஸ் கொல வெறி’ பாடல் மூலம் இதை ஒரு ட்ரெண்டாக பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்கி வைத்தார் தனுஷ். அதன் பிறகு வந்த படங்களில், சரக்கடித்து விட்டு பெண்களைக் கேவலமாகத் திட்டும்படியான ஒரு காதல் தோல்வி பாடல் காலத்தின் கட்டாயமானது. சும்மா சொல்லக் கூடாது. அப்படி வெளியான ஒவ்வொரு பாடலும் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டடித்தன. ரிங் டோன்களாயின. பைக்கின் பின்னால் எழுதும் வாசகங்களாயின. பெண்களே அவற்றைக் கொண்டாடினார்கள்.
இப்படி நிலைமை, நாளொரு சூப் பாடலும், பொழுதொரு கொண்டாட்டமுமாகப் போய்க்கொண்டிருந்த நேரத்தில் தான்… ஜோதிகா திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுக்கிறார். நயன்தாரா, த்ரிஷா போன்றோர் நாயகிகளுக்கு முக்கியத்துவம் இருக்கும் கதைகளுக்கு முன்னுரிமை தரத் தொடங்குகின்றனர். இறுதிச்சுற்று திரைப்படம் வெளியாகி அபார வெற்றி பெறுகிறது. சமூகத்தின் நாடி பிடித்துப் பார்த்து முடிவுகளெடுக்கும் திரையுலகம் வணிகத்திற்காக வேறு வழியில்லாமல் பெண்ணைத் தூக்கிப் பிடிக்கத் தொடங்குகிறது. தங்கல், கனா போன்ற திரைப்படங்களின் வெற்றிகள் திரும்பிப் பார்க்க வைக்க இப்போது நேர்கொண்ட பார்வை, பிகில் வரை வந்து நிற்கிறது.
இப்போது முதல் பத்திக்கு வரலாம். 90% பெண்களை அவமதிக்கும் விதத்தில் தான் பாடல்கள் வந்திருக்கின்றன. அந்த 10% பாடல்கள் கடந்த இரண்டு மூன்று வருடங்களில் தான் வெளியாகியிருக்கின்றன. ஆனால், இந்த 10% பாடல்களை யாருமே விரும்பவில்லை. “சிங்கப்பெண்ணே….” பாடலை எத்தனை பேர் எள்ளி நகையாடி வருகின்றனர் என்பது நாம் அறிந்ததே.
ஏன்? அந்தப் பாடலில் என்ன பிரச்சனை? மாதரே…..என்ற அருமையான வார்த்தையோடு எந்தப் பாடலாவது தொடங்கியிருக்கிறதா இதுவரை?
“இல்லை, இந்தப் பாடல் பெண்களை ஓவர்ரேட் செய்கிறது. உசுப்பேற்றி விடுகிறது. பெண்களை பெண்களாக இருக்க விடுங்கள்” எனப் பெண்களே கொடி பிடிக்கின்றனர். ” சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….”, “புலி உறுமுது புலி உறுமுது…” போன்ற பாடல்களின் மீது ஏன் இத்தகைய விமர்சனங்களை வைக்கவில்லை. ஆண்களையும் சகமனிதர்களாக நடத்தியிருக்கலாமே.
“பாடல் வரிகளில் கவனம் செலுத்தியிருக்கலாம். மொக்கை லிரிக்ஸ்…” என்பது மற்றுமொரு பரவலான விமர்சனம். அடடா என்னே கரிசனம். நீங்கள் கொண்டாடித் தீர்க்கும் சூப் பாடல்களை எடுத்துப் பாருங்கள். எத்தனை கொச்சையான வரிகள் என.
உண்மையில் ஒரு பெண்ணை முதன்மைப்படுத்தும், அவளை சர்வ வல்லமை கொண்டவளாகச் சித்தரிக்கும் பாடல்கள் தமிழ் சினிமாவிற்கு புதிது. அதுவும் ரஹ்மான் இசையில் விஜய் திரைப்படத்தில் எனும் போது அது ஏராளம் பேரைச் சென்றடைந்திருக்கிறது. ஏராளம் பேரை பதறச் செய்திருக்கிறது. “அப்டிலாம் இல்லையே நாங்க ஏன் பதறப் போறோம்?” என நீங்கள் சொல்லலாம். ஆனால், சாதரணமாக ஒரு பாடல் பிடிக்கவில்லையென்றால் அதை அப்படியே கடந்து விடுவது தான் இயல்பு. இத்தனை விமர்சனங்கள், ட்ரோல் மீம்ஸ்கள், எள்ளல்கள் என அனைத்தும் வெளிப்படுத்துவது நீங்கள் பதறிப்போயிருக்கிறீர்கள் என்பதைத் தான்.
காலங்காலமாக பெண்கள் என்றால் திருமணம் செய்யவும், குழந்தை பெற்றுக் கொள்ளவும் தான். அவள் ஆணிற்கு நிகரானவள் கிடையாது என்பன போன்ற பிற்போக்குக் கருத்துகளை நட்சத்திர நாயக பிம்பங்களே விதைத்துக் கொண்டிருந்தனர். இப்போது தான் வணிக ரீதியில் தேவைப்படுகிறது என்பதற்காகவாவது பெண்ணை முதன்மைப்படுத்தும், ஊக்கப்படுத்தும் பாடல்களும், படங்களும் வரத் தொடங்கியுள்ளளன. அதைக் கூட நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றால் இது நம்மை நாமே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரம். “இதனால் எல்லாம் எதுவுமே மாறப் போவதில்லை” என நீங்கள் நினைப்பது கேட்கிறது. ஆம், எதுவுமே மாறாது. சற்றுப் பதறாமல் இருங்கள்.