
பாலை
அன்பின் குரூரங்கள்
எனக்குக் கட்டளை இடுகின்றன
அன்பின் மழையில் நனை
அல்லவெனில்
அன்பின் மழையால்
நனைத்துப் போவென!
நானோ
குறிஞ்சியும் முல்லையும்
கொண்ட கோலமிழந்த
கொடுந்துயர் ஈயும்
பாலை நிலத்தின் கள்ளி
என் சதைகள் கிழித்து
முள் பரத்திக் கொண்டாடும்
அன்பின் சிதிலங்களில் இளைப்பாறும்
பாலை நிலக்கள்ளி.
***
தாத்தா
பால்யத்தில்
அனுபவித்துத் தீர்க்க வேண்டிய
என் ஆசைகளில் ஒன்று
தாத்தாவின் சாய்வு நாற்காலியில்
அமர்தல்!
முதுகு – சாய்வில் பட்டு,
கால் – தரையில் பட்டு,
தாத்தாவைப் போல்
வரவு செலவு பார்க்கும்
தோரணை பூசி
அந்தியில் தாத்தா
வீடு வந்து சேரும் முன்னதாக!
இன்று முதுகும் படுகிறது
காலும் படுகிறது
ஆசை திரிந்து
அதே தாழ்வாரத்தில்
அதே வீட்டில்
அதே தோரணையில்
தாத்தாவைக் கேட்கிறது
வாலிபம்.
********