இணைய இதழ்இணைய இதழ் 75கட்டுரைகள்

மிட்டாய்த் தெரு மனிதர்கள்- இரா.முருகன் 

கட்டுரை | வாசகசாலை

மெரிக்காவால் படுகொலை செய்யப்பட்ட ஈராக் அதிபர் சதாம் ஹுசைன் தூக்குமேடை ஏறுவதற்கு முன் கேட்டுக் கொடுக்கப்படாமல் போனவற்றில் நல்ல இலக்கியமும் உண்டு. அவர் குறிப்பிட்டுக் கேட்ட எழுத்து எகிப்தியஅரபி மொழிஎழுத்தாளர் நகிப் மாஃபஸ் (Nagiub Mahfouz) எழுதிய புதினங்கள் என்பது ஆச்சரியமளிக்கும்

அரபுமொழி எழுத்தாளர் யாரும் நகிப் மாஃபஸுக்கு முன் உலக அளவில் நோபல் விருது அங்கீகாரம் பெறவில்லை. அவருக்கு அப்புறமும் அதே நிலைதான் நீடிக்கிறது. அவருடையசர்க்கரைத் தெரு புதினங்கள்என்ற மூன்று நாவல் தொகுதி (Sugar Street Trilogy) பற்றி பாக்லவாஅரபு இனிப்பு பற்றிப் பேசும்போது போகிற போக்கில் சொல்லிப் போனது நினைவு வருகிறது. சற்று விரிவாக இங்கே

மூவாயிரம் ஆண்டு முற்பட்ட பாரோ மாமன்னர்களோ, நைல் நதி தீரத்துப் பேரழகி கிளியோபாத்ரா மகாராணியோ இல்லை நகிப் மாஃபஸ் படைப்பில் எழுந்து வருகிறவர்கள். எகிப்திய, என்றால், அரேபிய மத்தியதர வர்க்கத்தின் வாழ்க்கையை மூன்று தலைமுறையின் விரிவான சித்தரிப்பாக மூன்று நாவல்களில் சொல்கிறார் நாவலாசிரியர்.

எகிப்தியத் தலைநகர் கெய்ரோ மாநகர் சர்க்கரைத் தெருவில் மளிகைக் கடை வைத்திருக்கும் அல் சையது மற்றும் அவர் குடும்பத்தின் வாழ்க்கையை நிதானமாகச் சொல்கிற Palace Walk, Palace of Desire, Sugar Street என்ற தொடர் புதினங்கள் இவை. மூன்றும் கெய்ரோ வீதிகளின் பெயர்கள். இருபதாம் நூற்றாண்டோடு தொடங்கும் இக்கதையாடலின் வழியேதான் அரேபிய இலக்கியம் சுவடு பதித்துச் செல்கிறது. ஒரு வகையில் இது கெய்ரோ பெருநகர வாழ்வைச் சொல்லும் நகர இலக்கியமும் கூட .

தொகுப்பின் முதல் நாவல் 1917 முதல் உலகப் போர்க் காலத்தில் தொடங்கி வளரும் இரண்டு வருட வரலாறாக எழுதப்பட்டது. இரண்டாம் நாவல் 1924-ஆம் ஆண்டு தொடங்கி நான்காண்டு நிகழ்வுகளைச் சொல்லும். மூன்றாம் நாவல் 1935-இல் தொடங்கிப் பத்து ஆண்டுகள் நடக்கும். ஒரே சீராக நாவல் தொகுப்பு விரிவதில்லை என விமர்சகர்கள் குற்றம் சொன்னாலும், நாவல் மொழியும், கதையும் நேர்த்தியாகப் பிணைந்து எழுவதால் சிறு பிசகுகளைக் கண்டு கொள்வதில்லை.

முதல் நாவல்அரண்மனை நடைவீதிநள்ளிரவில் தொடங்குகிறது. எல்லோரும் ஆழ்ந்து உறங்கும் அந்தப் பொழுதில் அல் சையத்தின் மனைவி ஆமினா விழித்தெழுகிறாள். வீட்டோடு இருக்கும் பணிப்பெண் உம்ம் ஹனபி எஜமானியோடு எழுந்து விடுகிறாள். தீபத்தைக் கையில் ஏந்திக் கொண்டு தாழ்ந்த குரலில் குரான் ஓதிக்கொண்டு அந்த இரண்டு மாடி வீட்டின் ஒவ்வொரு அறையாக ஆமினா நடக்கிறாள். அங்கே ஏதாவது பிசாசுகள் இருந்தால் விரட்டத்தான் குரான் ஜபிப்பது. பிசாசுகள் ஒருவேளை இருந்தாலும், கல்யாணமாகி கால் நூற்றாண்டுக்கு முன் அந்த வீட்டுக்குள் வந்த ஆமினாவுக்கு எந்தத் தீமையும் செய்யாதவையாகப் பழக்கமாகியிருக்கும் அவை

பிசாசு இருக்கட்டும், மாலையில் வெளியே போயிருந்த ஆமினாவின் கணவர் அல் சையத் இன்னும் வீடு திரும்பவில்லை. அவருக்காக, மௌனமான, கீழ்ப்படிதலுடன் கூடிய, ஏன் தாமதம் என்று கேட்கத் துணியாத தினசரிக் காத்திருப்பு ஆரம்பமாகிறது. வண்டியில் பூட்டிய குதிரைகளின் குளம்படிச் சத்தம் கேட்கும்வரை நீடிக்கும் அது.

சையதின் இரண்டாம் மனைவி ஆமினா. முதல் மனைவியை அவர் விவாகரத்து செய்துவிட்டார். அவளுக்குப் பிறந்த மகன் யாசினைத் தன் பிள்ளை போல் வளர்த்து வருகிறாள் ஆமினா. அப்புறம் ஆமினாவுக்குப் பிறந்த இரண்டு பிள்ளைகள்பாஹ்மே, கமால். இரண்டு மகள்கள்கதிஜா, ஆயிஷா. இவர்களில் கடைக்குட்டி, பத்து வயதான கமால். மூன்றாம் நாவல் நிறைவடையும்போது கமால் முப்பதுகளின் இறுதியில் இருப்பார். மூன்று தலைமுறை குடும்ப வரலாற்றைக் கமாலின் பார்வையில் நுணுக்கமாகச் சொல்லிப் போகிறார் நகிப் மாஃபஸ். குடும்பத்தின் வரலாறு, அவர்களுடைய அண்டை அயலார், நண்பர்கள், வீடுகளில் சங்கீத ராத்திரிகள் நடத்தும் அழகான பாடகிகள், யாழ் வாசிக்கும் பெண்கள், சூஃபி சித்தர்கள், பள்ளிகள், அலுவலகங்கள், மசூதிகள், காப்பிக்கடை பரிச்சயங்கள், இத்தனையும் போதாமல் எகிப்திய அரசியல், அரசு, ஆக்கிரமிக்க வந்த பிரிட்டீஷ், ஆஸ்திரேலியா ராணுவம் என்று விரிய, பரந்த கான்வாஸில் எழுதப்பட்ட நாவல்கள் இவை

நகிப் மாஃபஸ் சித்தரிக்கும் தனி மனித, குடும்ப உறவுகள் சிக்கலானவை. யாசின் என்ற ஒரு கதாபாத்திரத்தை எடுத்துக் கொள்ளலாம். அல் யூசுபின் முதல் மனைவியின் மகன். வீட்டு வேலைக்காரி, சமையல்காரியைக் காமுற்றுத் தொடர்கிறான். தம்பி காதலித்த அடுத்த வீட்டுப் பெண் மேல் மையல் உறுகிறான். அந்தப் பெண்ணின் தாயோ, அடுத்த வீட்டு அப்பாமகனான அல் யூசுப் மேலும், யாசின் மேலும் மோகம் கொண்டு உறவில் ஈடுபடுகிறாள். யூசுப் தொடுப்பு வைத்திருந்த ஒரு பெண்ணை யாசின் கல்யாணம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்து விடுகிறான்

நகிப் மாஃபஸ் போன நூற்றாண்டு தொடக்கத்தில் எகிப்திய மத்தியதர வர்க்கத்தினர் பண்பாட்டுச் சீரழிவில் அகப்பட்டதைச் சொல்கிறாரா, வேலி தாண்டிய கதை கதையாகக் கதைக்க அவர் கட்டி நிறுத்திய புனைவா அது? இரண்டும் தான் என்பதே சரியான பதிலாக இருக்கக் கூடும்.

குடும்பத் தலைவர் அல் யூசுப் வீட்டிலே விசுவாமித்ரர், வெளியே சதா மகிழ்ச்சியோடு இருக்கும், சுற்றி இருப்பவர்களை சந்தோஷப்படுத்தும் குஷால் பேர்வழி. ராத்திரி நண்பர்களோடு மதுவருந்தி, அங்குமிங்கும் அலைந்து விட்டு வீட்டுக்கு வரும்போது பிரியமும், அன்பும் கசியும் ஆளுமை அவர். மது அருந்துவது மகா பாவங்களில் ஒன்று என்பதை அவர் மனைவி ஆமினா அறிவாள்தான். ஆனால், அல் சையது அந்தப் பாபம் செய்தால்தான் பெண்டாட்டி பிள்ளைகளிடம் பிரியமாக இருக்கிறார் என்பதால், அவரை அந்த விஷயத்தில் மகாபாவியாகப் பார்க்க அவளுக்குப் பிடிக்கும். அவளுடைய மதம் இது தப்பு என்று சொல்கிறது. அவள் மனம் இன்னும் குடிக்க மாட்டாரா என்று எதிர்பார்க்கச் சொல்கிறது. இது சராசரி இந்திய இல்லத்தரசி மனோபாவமன்றோ. மஹ்பஸ் இங்கே பிறந்திருந்தாலும் கிட்டத்தட்ட இதே போல் நாவல் எழுதியிருக்கக் கூடும்தான்.

எழுத்தாளர் நகிப் மாஃபஸ்

அரபு மொழிதான்ஆயிரத்தொரு இரவுகள்என்ற மகத்தான சிறுகதைத் தொகுதியை உலகத்துக்கு அளித்தது. எனினும் நாவல் என்ற இலக்கிய வடிவத்தைத் தனதாக்கிக் கொள்வதில் சற்றுப் பின் தங்கி விட்டது. பார்க்கும், நினைக்கும் எல்லாம் கதையில் வரவேண்டும் என்ற பதைபதைப்பை முதல் நாவலாசிரியர் மஹ்ஃபஸ் காட்டுகிறார். உதாரணத்துக்கு இந்தப் பத்தி – 

ஆமினா அறையிலிருந்து வெளியே போய் சில நிமிடங்களில் கையில் ஒரு கிண்ணமும், சிறு குடமுமாகத் திரும்பினாள். கிண்ணத்தைத் தன் கணவரின் பாதத்திற்கு அருகே வைத்துவிட்டு கையில் குடத்தோடு தயாராக நின்றாள். உட்கார்ந்தபடியே அவள் கணவர் கைகளை நீட்டினார். அவள் அவர் கைகளில் நீர் வார்த்தாள். அவர் தன் முகத்தைக் கழுவிக் கொண்டார். தலையில் நீரைத் தேய்த்துக் கொண்டார். வாயில் நீர் ஊற்றிக் கொப்பளித்தார். சோபா மேல் வைத்திருந்த துவாலையை எடுத்துத் தலையை ஈரம் போகத் துவட்டினார். முகத்தையும் கைகளையும் துடைத்துக் கொண்டார். கணவர் துப்பிய நீர் நிரம்பிய கிண்ணத்தை எடுத்துக்கொண்டு ஆமினா குளியலறைக்குப் போனாள்.

மெல்ல நகரும் மலையாளப் படம் பார்க்கிற மாதிரி நடை. ‘மிட்டாயி தெருவுஎன மலையாளத்தில் மொழியாக்கமானது. தமிழில்?

 ********

eramurukan@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button