மொழிபெயர்ப்பு கவிதை- கு.அ. தமிழ்மொழி
![](https://vasagasalai.com/wp-content/uploads/2019/12/thamizhmozhi-780x405.jpg)
சிலி : கேப்ரியல்லா மிஸ்ட்ரல்
ஆங்கிலம் : லேங்க்ஸ்டன் ஹியூக்ஸ்
தமிழில் : குஅ.தமிழ்மொழி
ஆசிரியர் குறிப்பு:
லுசிலா கொடேய் அல்கயகா என்னும் இயற்பெயர் கொண்ட கேப்ரியல்லா மிஸ்ட்ரல் 1889 இல் சிலியில் பிறந்தார். அவரின் புனைபெயரை தன்னுடைய விருப்பமான கவிஞர்களான கேப்ரியல் டி அன்னுன்சியோ மற்றும் ஃப்ரெடெரி மிஸ்ட்ரல் ஆகியோரிடமிருந்து பெற்றுக்கொண்டார். பள்ளி ஆசிரியையாக தன்னுடைய வாழ்வைத் தொடங்கிய அவருடைய படைப்புகள் வலிமையான உணர்ச்சியுடனும், நேரடியான மொழிநடையிலும் எழுதப்பட்டவை. அவரின் மைய கருப்பொருள்கள் காதல், வஞ்சம், துயரம், இயற்கை, பயணம் குழந்தைகள் மீதான அன்பு ஆகியவை. மெக்சிகோ மற்றும் சிலியின் கல்வி முறைகளில் முக்கியப் பங்காற்றினார். 1945 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.
காற்றின் மலர்
என் பாதையின் பாதிவழியில்
புல்வெளியின் குறுக்கே
அவளைக் கண்டேன்
அவள் வழியே யார் நடந்தாலும்,
பேசினாலும், அவளைப் பார்த்தாலும்
அவர்கள் அனைவருக்கும்
அவளே தலைவி
அவள் என்னிடம் சொன்னாள்:
மலை மேல் ஏறு
ஒருபோதும் இப்புல்வெளியை விட்டு
நான் நீங்கமாட்டேன்
வன்மையும், மென்மையுமான
பனிபோன்ற வெண்ணிறப் பூக்களை
எனக்காகச் சேமி
கடுங்குளிர் மிக்க மலையில் ஏறி
பாதி உறங்கியும், மீதி விழித்துமிருக்கும்
பூக்கள் எங்கே என்று
செங்குத்துப்பாறைகளின்
இடையே நான் தேடினேன்
என் சுமையுடன் கீழிறங்கி வருகையில்
புல்வெளியின் நடுவில்
நான் அவளைக் கண்டேன்
உணர்வுப் பெருக்கோடு அவளை
வெள்ளை அல்லி மலர்களால்
மூடி மறைத்தேன்
வெண்ணிறத்தைப் பார்க்காமலேயே
அவள் என்னிடம் சொன்னாள்
இந்த முறை சிவப்புநிறப் பூக்களை
மட்டும் கொண்டுவா
என்னால் புல்வெளிக்கு அப்பால்
செல்ல இயலாது
மானோடு உயரமான
பாறைகளின் மேல் ஏறி
பித்துப்பிடித்தப் பூக்களை நான் தேடினேன்
பெரிதும் சிவப்பாக வளர்ந்த அவை
சிவப்பாகவே பிறந்து
சிவப்பாகவே இறப்பவை போலத் தெரிகிறது
மகிழ்வோடு நடுக்கத்துடன்
கீழிறங்குகையில்
நான் அவர்களுக்குக் காணிக்கை அளித்தேன்
காயமுற்ற மான் குருதியாவதிலிருந்து
அவள் நீராக மாறுகிறாள்
ஆனால் தூக்கத்தில் நடப்பவளைப்போல
அவள் என்னைப் பார்த்துச் சொன்னாள்
மேலே செல்
இப்பொழுது
தங்க நிறத்திலொன்றை… தங்க நிறத்திலொன்றைக்
கொண்டுவா
நான் இந்தப் புல்வெளியை
விட்டு ஒருபோதும் செல்லமாட்டேன்
மலைகளுக்கு நேர் மேலே ஏறிப்
பரிதியின் வண்ணத்திலும்,
குங்குமப்பூ வண்ணத்திலுமான
தடித்த பூக்களைத் தேடினேன்
இப்பொழுதுதான் பிறந்தவை ஆயினும்
இன்னும் நிலைத்திருப்பவை
நான் அவளை வழக்கம்போல்
புல்வெளியின் நடுவில் கண்டபோது
மறுபடியும் பூக்களைக் கொண்டு
அவளை மூடி அப்படியே
தோட்டத்தில் விட்டுவிட்டேன்
இன்னும் அவள் தங்கநிறத்தின்பால்
பெருவிருப்பம் கொண்டிருந்தாள்
அவள் சொன்னாள்:
என் அடிமையே! மேலே செல்!
வண்ணமற்ற பூக்களைச் சேமி
அவை குங்குமப்பூ வண்ணமும் அல்ல
அடர் செந்நிறமும் அல்ல
உறக்கத்தின் நிறம், கனவின் நிறம் அவை
*”லியோனாரா, லிஜியா”வின் நினைவாக
அவை எனக்குப் பிடிக்கும்
நான் புல்வெளியின் தாய்
நான் மலை மேலேறிச் சென்றேன்
இப்பொழுது
**”மிடியா” போல இருள்..
தெளிவற்ற ஆனால்
ஏதோ அந்தக் குகை
சிறந்த பளபளப்பான ஓடுகள் இல்லாதததைப் போல
அங்கே எந்தக் கிளையிலும்
எந்தப் பூவும் இல்லை
செங்குத்துப் பாறைகள் இடையே
எதுவும் பூக்கவில்லை
அதனால் காற்றிலிருந்து நான்
மலர்களைச் சேமித்து
மெதுவாக அவற்றை வெட்டினேன்
நான் பார்வையற்ற
தேர்ந்தெடுப்பாளனாக இருந்தால்
அவற்றைத் தெரிந்தெடுத்து இருப்பேன்
இங்கேயும், அங்கேயும்
காற்றிலிருந்து வெட்டிக்
காற்றைத் தோட்டமாய் எடுத்துக்கொள்கிறேன்
மலையிலிருந்து கீழிறங்குகையில் நான்
அரசியைக் காணச் சென்றேன்
வெளிறிய, கொடிய கண்களோடு
அவளில்லை இனி
வெறுமனே உலாவிக் கொண்டிருந்தாள்
அவள் இப்போது
தூக்கத்தில் நடப்பவளைப் போல
அவள் புல்வெளியில் நடந்தாள்
நான் பின்தொடர்ந்தேன்..
பின்தொடர்ந்தேன்..
பின்தொடர்ந்தேன்…
மேய்ச்சல் நிலத்தின் ஊடாக
தோப்புகளின் ஊடாக
தோள்கள், கைகளை காற்றினூடாகப் பெற்று
பூக்களோடு முழுவதுமாய் ஏற்றிக்கொண்டேன்
அவள் அவற்றைக் காற்றிலிருந்து
பறிக்கச் சென்று விட்டாள்
இப்போது காற்று
அவளுடைய அறுவடையாகிப்போனது
அவளிப்போது
முகமற்றுச்
சென்று கொண்டிருக்கிறாள்
பாதத் தடங்களை விடாமல்
வெள்ளையும் அற்ற
இளஞ்சிவப்பும் அற்ற
நிறமில்லாப் பூக்களைத் தாங்கிச்
சென்று கொண்டிருக்கிறாள்
மூடுபனியில் கிளைகளின் வழியே
அவள் சென்ற பின்னும்,
நேரம் கரைகின்ற விளிம்பில்
அவள் எனக்குத் தலைமை ஏற்கும்வரையிலும்
இன்னும் நான் பின்தொடர்கிறேன்
பிறகும் தொடர்வேன்
* லியோனாரா, லிஜியா – “எட்கர் ஆலன் போ” ( EDGAR ALLAN POE ) எழுதிய சிறுகதைகள்
** மிடியா – கோல்சிஸ் ( COLCHIS ) பகுதியை ஆண்ட ஈடஸ் ( AEETES KING ) அரசனின் மந்திரக்காரி மகள்
நல்ல தமிழாக்கம். பேத்தி அ.தமிழ்மொழி இத்துறையிலும் தடம் பதிக்க மனமார வாழ்த்துகிறேன் ?