ஒருவழியாக மேனேஜரின் பாஸ்போர்ட் புதுப்பிக்கும் வேலையை முடித்து, பாஸ்போர்ட் ஆபீசைவிட்டு வெளியே வந்தபோது, சில்லென்ற காற்றுடன், வானம் இருட்டிக் கொண்டு மழை வருவதுபோல் இருந்தது. சீக்கிரமாக வீட்டுக்குக் கிளம்பிவிட வேண்டுமென நினைத்தபடி அவசரமாக பைக்கை நோக்கி நடக்க, மொபைல் அடித்தது, எடுத்துப் பார்த்தேன்.
நினைத்த மாதிரியே என் இல்லத்தரசிதான். ஆபீஸ் விட்டுக் கிளம்பும் சமயத்தில் போன் வந்தாலே ஏதோவொரு மளிகை சாமானுக்காகத்தான் வரும் என்பதை முன்னரே உணர்ந்திருந்ததால், அட்டென்ட் செய்து காதில் வைக்க,
“ஹலோ…”
“எப்ப கெளம்புவீங்க…”
“என்ன வாங்கீட்டு வரணும் அத சொல்லு…!”
“இல்ல, வரும்போது இட்லி மாவு ரெண்டு பாக்கெட் வாங்கிட்டு வந்துருங்க…”
“ம்ம்…”
“அப்படியே சட்னி அரைக்கத் தேங்காயும் வாங்கிட்டு வந்துருங்க, மறந்துடாதீங்க…!”
“சரி வை…”
போனைக் கட் செய்துவிட்டு வந்து பைக்கைக் கிளப்ப ஆயுத்தமான போது, ரோட்டின் மறுபுறம் கொஞ்ச தூரத்தில் ஒரு கையில் ஃபைலுடன் திருத்தமாக அணிந்த துப்பட்டாவைச் சரிசெய்தபடி நின்ற அந்த சல்வார் பெண் அவ்வளவு கூட்டத்திலும் தனியாகத் தெரிந்தாள், பழகிய முகமாகத் தோன்ற, உற்றுப் பார்த்தபோது உள்ளுக்குள் ஏதோ இடறியது, அவளே தான்…
நிஷா…!
அடிவயிற்றில் சுரந்த பெயர் தெரியாத அமிலம் ஒன்று வேகமாக ரத்ததில் கலந்து உடலுக்குள் பரவியதை உணர முடிந்தது. ஏறக்குறைய ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு, விபத்து போல வாழ்க்கையில் வந்த அதே நிஷா.
பார்க்காத மாதிரியே போய்விடலாமா, போய்ப் பேசலாமா, குழப்பத்திலேயே தடுமாறிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத ஒரு கணத்தில் நிஷாவின் பார்வையும் என்னை நோக்கித் திரும்பியது.
முதலில் யதேச்சையாகப் பார்த்தவள், ஒரு விநாடி என் முகத்தைப் பார்த்து கண்களைச் சுருக்கினாள், உற்றுப் பார்த்தாள், சுருங்கிய கண்கள் விரிந்தது அவ்வளவு தூரத்திலும் தெளிவாகத் தெரிந்தது. அவள் பார்வையின் வீச்சைத் தாங்க முடியாமல், எப்படி அவளை எதிர்கொள்வதெனத் தெரியாமல் தடுமாறியபோது, ரோட்டைக் கடந்து அவசரமாக என்னை நோக்கி வந்தாள். ஏதோவொரு உணர்வு உடலெங்கும் பரவி, சிலிர்த்தது. சந்தோஷமா, குழப்பமா, ஆற்றாமையா, சோகமா என வகைதெரியாத, என்றோ மறந்துபோன அரிதான உணர்வொன்று மண்டைக்குள் ஏற, சுற்றுப்புறம் ஒரு கணம் நின்று வேகமாக பின்னோக்கி சுழல ஆரம்பித்தது.
2012 ம் ஆண்டு,
எஞ்சினீரிங் முடித்து மூன்று ஆண்டுகளாகி இருந்தது, அப்போது வரை சரியான வேலையும் அமையாமல், தேவை என்னவென்பதும் பிடிபடாமல் தெளிவில்லாமல் இருந்த போதும் சராசரி இளைஞனாக நண்பர்களுடன் ஊரைச் சுற்றாமல், புத்தகம், சினிமா, இசை என மூழ்கி தனிமையில் பயணிக்கத் தொடங்கி இருந்தேன்.
அப்போதுதான் இணையமும் தொடுதிரை போன்களும் பரவலாகத் தொடங்கி இருந்த காலம். வீட்டில் 2ஜி இணைப்பில் ஒரு பழைய மேசைக்கணினி இருந்தது. பொழுதுபோக்காக ஒரு ப்ளாக் (Blog) ஆரம்பித்து அதில் சினிமா, இசையுடன், அவ்வப்போது சிறுகதைகளையும் எழுதிக் கொண்டிருந்தேன். ஒரு பதிப்பகம் எனது எழுத்தை புத்தகமாகவும் வெளியிட்டிருந்தது.
சோஷியல் மீடியா தலையெடுக்க ஆரம்பித்த கட்டத்தில், இருக்கட்டுமே என ஃபேஸ்புக் அக்கௌன்ட்’டை ஆரம்பித்து வைத்த அடுத்த வாரத்தில் ஃபேஸ்புக் மெசெஞ்சரில் ஒரு மெசேஜ் வந்திருந்தது.
மூளையின் ஏதோ ஒரு செல்லில் பதிவான அந்த மெசேஜ் வந்த தேதி இப்போதும் நினைவில் இருக்கிறது,
08.09.2012
Hi, How r u…?!
பெயர் நிஷா,
ஃபேஸ்புக்கை மார்க் கண்டுபிடித்திருந்தாலும், அதில் ஃபேக் ஐடியைக் கண்டுபிடித்து அவருக்கே டஃப் கொடுத்தது நம்மாட்கள் என்பதால், இயல்பாகத் தோன்றிய சந்தேகத்துடன் நிஷாவின் ப்ரொஃபைலுக்குச் சென்று நோட்டமிட்டேன்.
நிஷா பெங்களூரைச் சேர்ந்தவள், அப்போது லக்ஸம்பர்க் யுனிவர்சிட்டியில் எம்.பி.ஏ படித்துக் கொண்டிருப்பதாக ப்ரொஃபைலில் குறிப்பிட்டிருந்தாள். ஃப்ரி ஹேரில் வட்டமான முகம், பெரிய கண்கள், சராசரிக்கும் குள்ளமான உருவம் என போட்டோக்களில் பக்கத்து வீட்டுப் பெண்போல மிகச்சாதாரணமாக, அழகாக இருந்தாள்.
மிகச்சிறிய நட்பு வட்டம், செடிகள், மயில், முயல் போட்டோ, அவளது அண்ணன்களுடன் ஒரு குடும்ப ஃபோட்டோ, தன்னம்பிக்கை பொன்மொழிகள், தத்துவங்கள், சில அனுபவ ரைட் அப்’புகள் என நம்பகமாக ப்ரொபைலாகத் தோன்ற, ஒரு பதில் மெசேஜை அனுப்பினேன்,
‘Hi…’
‘Welcome to Facebook…’ – சிறிதுநேரத்தில் பதில் வந்ததது.
‘Thanks…’ என்று ஒரு சிரிக்கும் ஸ்மைலியை இணைத்து சந்தேகத்துடன் அனுப்பி வைத்தேன்.
‘நா உங்க ப்ளாக்’கின் தீவிர ஃபேன்…’
ஓ… – நமக்கு ஃபேனா… அதுவும் பொண்ணா, சந்தேகம் இன்னும் அதிகமானது.
‘சாரிங்க உங்க புக் இன்னும் படிக்கல, இந்தியா வந்ததும் வாங்கிப் படிக்கிறேன்…!’
‘உங்களுக்கு பிடிஎஃப் படிக்கறதுல பிரச்சனை இல்லன்னா சொல்லுங்க, அனுப்பறேன்…’
‘ப்ளீஸ்’ங்க…’
உடனே புத்தகத்தை அனுப்பி வைக்க, மிகப்பெரும் நன்றியுடன், படித்துவிட்டுச் சொல்வதாகச் சொல்லிவிட்டுக் காணாமல் போனாள்.
சொன்ன மாதிரியே ஓரிரு நாட்களில் புத்தகத்தைப் படித்துவிட்டு விளக்கமாக நேர்மையான நீண்ட விமர்சனம் ஒன்றை எழுத்து மூலமாக மெயிலில் அனுப்பியிருந்தாள்.
நிஷா கன்னட தந்தைக்கும், தமிழ் தாய்க்கும், பெங்களூரில் பிறந்தவள், அப்போது யூரோப்’பில் படித்துக் கொண்டிருந்தாள். எந்த பந்தாவும் இல்லாமல் இயல்பாக இருந்தாள். தொடர்ந்த நாட்களில் போன்நம்பர் பரிமாற்றத்துடன் பேச ஆரம்பித்திருந்தோம். நிஷா எம்மதத்தையும் ஏற்றுக் கொள்ளும் முற் போக்கானவளாக இருந்ததுடன், தமிழை தவறில்லாமல் பேசியதும் பிடித்திருந்தது. இசை, இலக்கியம் என இருவரது ரசனையும் ஒத்துப்போக, தினமும் பேச ஆரம்பித்தோம்.
நிஷா அவள் குடும்பத்தைப் பற்றி சொன்னவள், என்னைப் பற்றியும் கேட்டுத் தெரிந்து கொண்டாள். யூரோப் நேரத்திற்கும் இந்திய நேரத்திற்கும் ஏறக்குறைய இரண்டு மூன்று மணிநேர வித்தியாசம், ஆனால் பேச ஆரம்பித்ததும் காலநேர வித்தியாசம் தெரியவில்லை. எவ்வளவு பேசியும் தீரவில்லை. அவள் நேரத்தில் நானும், என் நேரத்தில் அவளும் வாழ்ந்திருந்தோம். ஒருமுறை, பேச ஆரம்பித்து விடியற்காலையில் ஃபோனில் சார்ஜ் தீர்ந்து போனதால் வேறுவழியில்லாமல் போனை வைக்க வேண்டியதானது, போனை வைத்தவுடன் அழகன் படத்தில் மம்முட்டி விடிய விடியப் பாடும் ‘சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா…’ பாடலை அனுப்பிக் கலாய்த்திருந்தாள்.
அதன் பிறகு அடிக்கடி நள்ளிரவுவரை சங்கீத ஸ்வரங்களை எண்ண வேண்டியிருந்தது. மொபைலுக்கு வந்த ஒவ்வொரு மெசேஜ் ஒலியும், அழைப்பு மணியும் அவளையே எதிர்பார்க்க வைத்தது. பிறரின் அழைப்புகளை அவசரமாகப் பேசித் துண்டித்து, மீண்டும் அவளின் அடுத்த அழைப்பிற்குக் காத்திருக்க வைத்தது. குளிப்பதற்கு குளியலறை சென்றாலும் மொபைலை பாலித்தீன் கவரில் போட்டு எடுத்துச் செல்ல வைத்தது.
அப்போது எனது வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் அறிவுரை வழங்கி அக்கறை காட்ட ஆரம்பித்தாள் நிஷா, சிறு வயதிலிருந்தே வாழ்க்கையில் நிறைய இழப்புக்களை சந்தித்திருந்த போதும் நேர்மறையான சிந்தனையுடனே இருந்தாள், அவளிடம் பிடித்திருந்ததும் அதுதான்.
மூன்று மாதங்களுக்குள்ளாக காதல் என்றும் சொல்ல முடியாத, அதே சமயம் நட்பு என்றும் சுருக்க முடியாத ஏதோ ஒரு இடைப்பட்ட உணர்வில் சிக்கிக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் இருவரிடம், இருவருக்கும் தெரியாத எந்த ரகசியமும் இல்லை. ஒவ்வொரு முறை பேசும்போதும் என் எழுத்துக்களையும், நானே கவனிக்காத விஷயங்களையும் கவனித்து மனம் விட்டுப் பாராட்டுவாள், ‘நெறைய எழுதுங்க ஷிவா, நீங்க கண்டிப்பா ஜெயிப்பீங்க…’ என வாழ்த்திக் கொண்டே இருப்பாள். இனம் புரியாத கவலையில் மனம் குன்றும் போதெல்லாம், ‘சோகமோ, துக்கமோ பத்து நிமிஷம் தான் ஷிவா, அதுக்கு மேல வெச்சுக்காதீங்க’ என்று அறிவுரை சொல்வாள்.
மூன்று மாதம் எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது, அந்தக் குறிப்பிட்ட நாள் வரை…
2012 ஆம் ஆண்டு காவேரி நீர் பிரச்சனை உச்சகட்டத்தை எட்டி இருந்தது. மத்திய அரசின் தமிழகத்திற்கு சாதகமான தீர்ப்பால் கர்நாடகமே மாநிலம் தழுவிய பந்த், வன்முறை, கலவரம் எனக் கொந்தளித்து அடங்கி இருந்ததும் இரு மாநிலங்களும் உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்தது.
நிஷாவிடம் மெசேஜ் அனுப்பிக் கொண்டிருந்த ஒரு மாலைநேரத்தில், யதேச்சையாகப் பேச்சு காவிரி பிரச்சனை பற்றித் திரும்பியது.
நிஷா, அப்போதைய தமிழகத்திற்கு முற்றிலும் எதிரான, வன்முறையான நடவடிக்கையில் பேர்போன ஒரு அரசியல்வாதியின் பெயரைச் சொல்லி, அவர்தான் அவளது ரோல்மாடல் எனவும், அவரின் அணுகுமுறை மிகப் பிடித்திருப்பதாகவும், அரசியலில் அவர் வெற்றியைத் தான் கொண்டாடியதாகவும் ஒரு மெசேஜை அனுப்பி இருந்தாள்.
எந்த நோக்கத்தில் அதை அனுப்பினாள், அதை எப்பிடி எடுத்துக் கொள்வதெனத் தெரியவில்லையென்றாலும், அது மனதின் ஆழமான இடத்தில் எதையோ அசைத்துப் பார்த்தது. என்ன பதிலளிப்பதெனத் தெரியாமல்,
I feel discomfort…
இதுதான் நான் கடைசியாக அனுப்பிய மெசேஜ்.
அதற்கு சாரி கேட்டு, இனி அந்த மாதிரி அனுப்ப மாட்டேன் எனவும் சொல்லி, கூட இன்னும் நிறைய மெசேஜ் அனுப்பியிருந்தாள். ஆனால், எனக்குத்தான் உள்ளுக்குள் ஏதோ உறுத்த, கோபத்தில் அவளது அடுத்தடுத்த மெசேஜைத் திறந்து பார்க்காமலேயே டெலிட் செய்தேன்.
ஆனால் சத்தியமாக அப்போதுவரை அது ஒரு மிகச்சிறிய ஊடல், சரியாகி விடும் என்றுதான் நினைத்திருந்தேன், அடுத்தடுத்த நாட்களில் நான் நினைத்தது தவறு எனப் புரிய ஆரம்பித்தது.
கோபத்திலிருந்த முதல்நாள் சாதாரணமாகச் சென்றது.
அடுத்த நாள் நிஷா பேஸ்புக்கில் என்னை அன்ஃப்ரென்ட் செய்திருந்தாள். கோபம் எரிச்சலாகி, அது இன்னும் அதிகமானது. சரியாகிவிடும் என நினைத்திருந்த பிரிவின் கயிறு இன்னும் இறுக ஆரம்பித்தது.
என் மீது காட்டிய அக்கறையும், அன்பும் அவளது வைராக்கியத்தை உடைத்து, அவளிடம் இருந்து ஒரு மெசேஜ் வந்துவிடாதா என எதிர்பார்த்த மனதை ஏதோவொரு அசௌகர்யம் இம்சிக்க ஆரம்பித்தது. நிஷா நான் நினைத்ததை விடவும் அழுத்தமானவளாக இருந்தாள்.
அவள் ஆன்லைனில் இருக்கிறாளா என நோட்டமிடுவதும், அவள் பக்கத்திற்கு செல்வதும், அவளின் பழைய பதிவுகளைப் பார்ப்பதுமாக ஏதோவொரு எதிர்பார்ப்பில் ஓரிரு நாட்கள் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. இரண்டு நாட்களாக அவளிடம் எந்த சலனமும் இல்லை, அவள் பக்கத்தில் மீண்டும் ஒருசில போட்டோக்களை ஷேர் செய்திருந்தாள். அதற்குப்பின் அவள் பகிர்ந்த மிக்கி மௌஸ், மரம், கட்டடம் என சாதாரணமான போட்டோக்களுக்கு நானாக அர்த்தம் கண்டுபிடித்து, டிகோட் செய்து, எனக்கு சாதகமாக மொழிபெயர்த்துக் கொண்டிருந்தேன்.
நிஷா என்னைக் கண்டுகொள்ளாதது உள்ளுக்குள் எரிந்தாலும், அப்போதும் ஏதோ ஓரத்தில் அவளுடைய அங்கீகாரத்திற்காக மனம் ஏங்கிக் கொண்டிருந்தது. ஆனாலும் ஒரு வைராக்கியம் அவளை நோக்கிச் செல்வதைத் இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்தது. உண்மையிலேயே அவளும் இதே மாதிரி என்னை நினைத்துக் கொண்டிருந்தால், அவளாக வருவாள் என நினைத்துக் கொண்டு அவளுக்குப் பிடித்த பாடல்களைக் கேட்டபடி, ஃபோனில் அவளுடன் பேசிய இடங்களில் தனிமையில் அமர்ந்து, என்னை நானே தேற்றிக் கொண்டிருந்தேன்.
இரண்டு நாட்களாக நிஷாவிடம் ஒருசிறு அசைவும் இல்லை. ஒவ்வொரு முறை பேசி முடித்துப் போனை வைக்கும்போதும் ‘பத்திரமா இருங்க, பத்திரமா இருங்க’ என்று மறக்காமல் சொல்பவள், இரண்டு நாட்களாக நான் இருப்பதைப் பற்றிக் கூட கவலைப்படாதது ஆச்சர்யமாகவும், வேதனையாகவும் உள்ளுக்குள் குமைந்து கொண்டிருந்தது. அது மெதுவாகத் தலைவலியாக மாற ஆரம்பிக்க, எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை.
ஒருகட்டத்தில் தன்மானம், சுயமரியாதை என தர்க்கம் செய்து கொண்டிருந்த மூளையை, இதயம் சரிக்கட்ட, அவளுக்கு ஒரு தயக்கத்துடன் துணிந்து மீண்டும் ஒரு ஃப்ரென்ட் ரிக்வெஸ்டை அனுப்பினேன், முழுதாக இரண்டு மணிநேரம், இரண்டு மணிநேரம் நோட்டிஃபிக்கேஷனை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன். ஆன்லைன் வருவதும் போவதுமாக இருந்தாளே தவிர நாட் அக்செப்டட்.
எரிச்சல் தலைக்கேறியது, மூளை, இதயத்தைக் கடிந்து கொள்ள, ரிக்வெஸ்டை வாபஸ் பெற்றுக் கொண்டேன். மீண்டும் பதுங்கிய தன்மானம் தலைதூக்க அவள் பேஸ்புக் பக்கத்திற்குச் செல்லவில்லை. விலகிச் சென்ற அவள், என் பக்கம் நகர ஒரு சிறு அடியைக்கூட எடுத்து வைக்காத உறுதியும், கட்டுப்பாடும் ஆச்சர்யமாகவும், அதன் பிண்ணனி புரிந்துகொள்ள முடியாமலும் இருந்தது. ஒருவர் மீது அவ்வளவு அக்கறை காட்டிய இன்னொருவர் ஒரே மெசேஜில், ஒரே இரவில் தலைகீழாக மாறிவிட முடியுமா, எப்படி எனப் புரியவில்லை.
நிராகரிக்கப் படுகிறோம் என்பதை மூளை, மண்டையில் குட்டிச் சொன்னாலும், ஏதோ ஒரு உணர்வு அதைச் சமாதானம் செய்து மீண்டும், மீண்டும் அவளை நோக்கி நகர்த்தியபடியே இருந்தது.
அடுத்த இரண்டு மணிநேரத்தில், உறுதியாக இருந்த மனவேதாளம் மெதுவாக முருங்கை மரம் ஏற, நிஷா வழக்கமாக கமென்ட் செய்யும் அவள் நண்பர்கள் போஸ்ட் கமென்ட் செக்ஷனை ஆராயத் தொடங்கினேன். அவளும் வழக்கம்போலவே ஜாலியாகவே கமென்ட் செய்து கலாய்த்துக் கொண்டிருந்தாள், உறவு அறுந்ததற்குச் சிறிதும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. அந்த உணர்வு என்னை இன்னும் இம்சித்தது. நானும் ஜாலியாக இருப்பதாகக் காட்டிக் கொள்ள, அவள் அடிக்கடி நடமாடும் போஸ்டுகளுக்குச் சென்று, சர்க்காஸ்டிக்காக நான்கைந்து கமெண்டுகளைப் போட்டு அவளைப் பழிவாங்கியதாக எண்ணிக் கொண்டிருந்தபோது, திடீரென பேஸ்புக்’கில் அவளைக் காணவில்லை.
கோபத்தில் அக்கௌன்ட்’டை டிஆக்டிவேட் செய்து விட்டாளென நினைத்த எனக்கு அவள், என்னை ப்ளாக் செய்திருக்கிறாள் என்பது புரியவே முழுதாக ஒருநாளாகி இருந்தது.
இம்முறை உச்சகட்ட எரிச்சல், கடுப்பு…!
தனிப்பட்ட சுகதுக்கங்களைப் பகிர்ந்து, ஆறுதல், தேறுதல், அறிவுரை பெறுமளவு நெருங்கிய நண்பர் வட்டம் இல்லாததால், உள்ளுக்குள்ளேயே புழுங்க வேண்டியிருந்தது. இருந்த ஓரிரண்டு நண்பர்களுடன் பகிரத் தலைதூக்கிய எண்ணத்தையும் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டேன்.
காவிரிப் பிரச்சனை, நிஷாவிடம் பேசித்தீருகிற விஷயமா, எதற்குத் தேவையில்லாமல் நூறாண்டு அரசியலை அவளிடம் பேசினேன் என்று என்னை நானே நொந்து கொண்டேன். கொஞ்சம் கொள்கையை மறுபரிசீலனை செய்திருக்கலாமோ எனத்தோன்றிய எண்ணத்தையும் அவசரமாக மறுதலித்து மனதைத் தேற்றிக் கொண்டேன்.
சில மணிநேரத்தில் சரியாகி விடுவாள் என்ற எண்ணம், சில நாட்களாகி, சில வாரங்களாகவும் ஆகியிருந்தது. இடைப்பட்ட நாட்களில் இவள் மட்டும்தான் இப்படியா, இல்லை எல்லாப் பெண்களுமே இப்படித்தானா என மண்டையைப் பிய்த்துக் கொண்டிருந்தேன். எந்தக் கோணத்தில் யோசித்தும் நிஷாவின் மனநிலையைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. நம்மைப் பற்றி நாமே உருவாக்கிக் கொள்ளும் பிம்பங்களை அடித்து நொறுக்குவதற்கென்றே சிலரை அனுப்பி வைக்கும் விதியின் விளையாட்டை நொந்துகொண்டு, இயல்பாக இருக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தேன். இதற்கு மேல் அவளாக வந்து மெசேஜ் அனுப்புவாள் என்ற நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாகக் கரைய ஆரம்பித்தது. அவளின் அழைப்பையும், ஒரு மெசேஜையும் எதிர்பார்த்து, எதிர்பார்த்து, ஒருகட்டத்தில் அந்த எதிர்பார்ப்பின் கனத்தை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
ஒருமுறை அழித்து, பின் சேமித்து, மீண்டும் அழித்து, மீண்டும் மீண்டும் சேமித்த அவள் போன் நம்பரை இறுதியாக ஒருமுறை அழித்த கையோடு, ஃபேஸ்புக்கிலிருந்து என்னைத் துண்டித்துக் கொண்டேன். சிலரின் அன்பு இரும்பைப் போன்றது, எப்படி எறிந்தாலும் உடையாது, இன்னும் சிலரின் அன்போ கண்ணாடியைப் போல, கைநழுவினால் கதை முடிந்தது, இதைத் தாமதமாக ஒரு மோசமான அனுபவத்தில் புரிந்து கொண்டேன்.
நாட்கள் நகர்ந்தது, மெதுவாக வாழ்க்கையின் அடுத்தடுத்த இழப்புகள், துரத்தல்கள், அடி உதைகள், தேடல்களில், தலைப்புச் செய்தியாக மனதை ஆக்கிரமித்திருந்த நிஷா, என்னை அறியாமலேயே மெதுவாக பெட்டிச் செய்தியாக ஓரத்திற்கு சென்றிருந்தாள். ஆனாலும் ஏதோ ஒரு படமோ, பாடலோ, செய்தியோ, மனிதரோ எப்போதாவது அவளை ஏதோவொரு ரூபத்தில் நினைவு படுத்திக் கொண்டே இருந்தது. எப்போதும் நினைவிலிருந்தவள், எப்போதாவது வந்து சென்று கொண்டிருந்தாள். இல்லாத ஒன்றிற்கு உருவம் கொடுத்து, அதை வற்புறுத்திக் கையில் திணித்து, அதை ஏற்றுக் கொள்ளும்முன் தட்டிப் பறிக்கும் காலம்தான் எவ்வளவு விசித்திரமானது.
இடைப்பட்ட காலத்தில் வேலை, திருமணம், குடும்பம், குழந்தை என வேறு பாதையில் இழுத்துச் சென்று கொண்டிருந்த காலம், இப்போது மீண்டும் அவளைக் கண்களில் காட்டுகிறது. என்ன திட்டத்துடன் விதி இதை நிகழ்த்துகிறது என மனம் குழம்பிக் கொண்டிருந்தது.
*
ஒரு மனிதன் மரணப்படுக்கையில், இறக்கும் முன் அவன் அதுவரை வாழ்ந்த மொத்த வாழ்க்கையும் ஏழு நிமிடத்திற்குள் ரீவைன்ட் ஆவது போல், நிஷாவிற்கும் எனக்கும் இடையிலிருந்த அந்த முப்பது மீட்டர் தூரத்தை அவள் நடந்து கடப்பதற்குள் அவள் பற்றிய மொத்த நினைவும் ஃபாஸ்ட் ஃபார்வேடில் மனதில் ரீவைன்ட் ஆகியிருந்தது.
அருகில் வந்து நின்றவள், என்னைக் கண்களை விரித்துப் பார்த்தாள். எப்போதோ ஃபோட்டோவில் பார்த்த அதே பெரிய கண்கள். அவளையும், அவளது கண்களையும் அப்போதுதான் முதன்முறையாக நேரில் பார்க்கிறேன், ஆனாலும், முதன்முறை பார்ப்பது போன்ற உணர்வே இல்லை, எப்படி ஆரம்பிப்பது என விழித்துக் கொண்டிருந்தபோது அவளே ஆரம்பித்தாள்.
“ஷிவா…?!”
“ம்ம்…” மையமாகத் தலையாட்டினேன், இப்போது அவள் கண்களுடன் வாயும் விரிந்தது. சந்தோஷத்தில் குதித்தாள்.
“வ்வாவ்… எப்பிடி இருக்கீங்க ஷிவா…?! என்ன பண்றீங்க…?! எங்க வொர்க்…?!”
படபடவென அவள் கேட்ட கேள்விகளில் எந்தக் கேள்விக்கு முதலில் பதில் சொல்வதெனக் திணறியபோது, அதே துறுதுறுப்புடன் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தாள்.
“அ… அது…”
“இப்பவும் ப்ளாக் எழுதுறீங்களா…?! ஐ மிஸ் தொஸ் சோ மச்…!”
“இ, இல்ல, இப்ப எழுதறதில்ல…”
“அட, ஏனாம்… ஓகே, வொய்ஃப் என்ன பண்றாங்க…?! குழந்தைங்க…?! படிக்கிறாங்களா…?!”
என் திணறலைப் புரிந்து கொண்டவளாகத் தலையில் கைவைத்துக் கொண்டாள்.
“சாரி ஷிவா… நா பாட்டுக்கு கேட்டுட்டே போறேன் பாருங்க, வாங்க ஒரு காஃபி சாப்டுட்டே பேசலாம்…!”
“நீ… நீங்கதான் காஃபி குடிக்க மாட்டீங்களே…!”
அதற்குள் அவளுக்கு செல்போனில் அழைப்பு வர, அதை ஏறிட்டுப் பார்த்துத் துண்டித்தவள் ஆச்சர்யத்துடன் தலைநிமிர்ந்தாள், “அட அதெல்லாம் கூட நினைவு இருக்கா, வழக்கமா குடிக்க மாட்டேன், ஆனா இன்னிக்கு குடிப்பேன்…!”
*
அடுத்த பதினைந்தாவது நிமிடம் பக்கத்திலிருந்த காஃபி டே’வில் இருந்தோம், எங்கள் முன்னால் இரண்டு காஃபிக் கோப்பைகள் புகைந்து கொண்டிருந்தது. காஃபி டே’யில் வழிந்து கொண்டிருந்த இசையையும் மீறி இருவருக்கிடையே ஒரு பலத்த மௌனம் நிலவியது.
போனில் பேசிக் கொண்டிருந்த காலத்திலும் அவ்வப்போது இப்படி ஒரு திடீர் மௌனம் ஆட்கொள்ளும், எனக்கு அந்த நினைப்பு வர, அனிச்சையாக உதடு புன்னகைத்தது. தலையை நிமிராமல் கண்களை மட்டும் தூக்கி அவளைப் பார்க்க, அவளும் தலைகுனிந்தபடி குறுகுறுவெனப் புன்னகைத்துக் கொண்டிருந்தாள், நிச்சயம் அவளும் அதைத்தான் நினைத்திருப்பாள் எனக்கேட்க நினைத்து, ஏதோவொன்று தடுக்க, கேட்கவில்லை. அப்படியே மௌனம் நீடித்தது.
ஒரு சாரி கேட்டு சம்பாஷனையை ஆரம்பிக்கலாமா என நினைத்துப் பேச எத்தனிக்க,
“சொல்லுங்க ஷிவா, மேரேஜ் ஆயிடுச்சா…?! எங்க வொர்க் பண்றீங்க…?!”
அவளே ஆரம்பித்தாள், நான் பேச ஆரம்பித்த நொடியில் அவளுக்கு மொபைல் அழைப்பு வர, மறுபடி துண்டித்தாள்.
“போன் பேசுங்களேன்…!”
“இல்ல, இல்ல அப்புறம் பேசிக்கறேன், நீங்க சொல்லுங்க, கல்யாணமாயிடிச்சா…?”
எந்த உணர்வில் பதிலளிப்பது எனத்தெரியாமல் பொதுவாக தலையாட்டினேன், “ம்ம்ம்…”
“குழந்தைங்க…?” மெல்லிய புன்னகையுடன் அடுத்த கேள்வியைக் கேட்டாள்
“ம்ம்… ஒரு பொண்ணு, யூ கே ஜி படிக்கிறா…”
“ம்ம்ம்… காஃபியக் குடிங்க, கடைசியாப் பேசி ஏழெட்டு வருசம் இருக்கும்ல ஷிவா…?”
கேட்டுக் கொண்டே நிஷா என்னைப் பார்த்த பார்வை ஏதோ செய்ய, அவள் பார்வையைத் தவிர்க்க, காஃபிக் கோப்பையைப் கலக்கிக் கொண்டே, ஆமாம் என்பதைப் போல தலையசைத்தேன்.
“என்ன வொர்க் பண்றீங்க…?”
நினைவு வந்தவனாக அவசரமாக விசிட்டிங் கார்டைத்தேடி எடுத்து நீட்ட, ஆச்சர்யாக வாங்கி அதை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“வேற ஏதாவது புக் எழுதுனீங்களா…?!”
“ம்ம்… இல்ல, அதுக்கு அப்புறம் எழுதறதையே விட்டுட்டேன்…!”
மீண்டும் சிறிதுநேரம் மௌனம் நிலவியது. முதல் மௌனத்திற்கும், இந்த மௌனத்திற்கும் இடையே அனேக அர்த்தம் இருந்தது.
மறுபடி வந்த போன் அழைப்பைப் பார்த்தவள், என் விசிட்டிங் கார்டை டேபிளில் வைத்து, என்னிடம் முகத்தை சுருக்கி சாரி கேட்டுவிட்டு, போனை அட்டென்ட் செய்து சரளமான ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தாள்.
“நா ஒரு ப்ரென்டு கூட பக்கத்துல காஃபி டே’ல இருக்கேன்…!”
…
“ஆமா, அதே ஷாப் தான்…”
…
“வாங்க…!”
அவள் போனில் பேசிக் கொண்டிருந்தபோது, கடைசியாக நான் அனுப்பிய அந்த மெசேஜ் நினைவுக்கு வந்தது, நான் அனுப்பிய அர்த்தத்தையே மாற்றி, அழகான ஒரு நட்பை (காதலை) உடைத்த அந்த மெசேஜை எண்ணி நொந்து கொண்டேன்.
அன்று அந்த ஒரு மெசேஜை அனுப்பாமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்…? ஒருவேளை அதன் பிறகாவது யாராவது ஒருவர் ஈகோ’வைத் தாண்டி ஒரு கால் செய்திருந்தால் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்…?
நிஷா அழைப்பைப் பேசி போனை வைத்துவிட்டு நிமிர்ந்தாள்.
“என்னைப் பத்தி எதுவும் கேட்க மாட்டீங்களா ஷிவா…?”
அவளைப் பற்றி எதுவும் கேட்காதது அப்போதுதான் மண்டையில் உரைக்க, அவள் என்னைக் கேட்டதையே ரெஃபரன்சாக வைத்து, அதே கேள்விகளை வேறு மாதிரியாகக் கேட்டேன்,
“நீங்க எப்ப இந்தியா வந்தீங்க நிஷா, மேரேஜ், குழந்தை, வேலை?”
தலைதாழ்த்திக் காஃபி கோப்பையை கலக்கியவள், ‘ம்ம்… அவரும் தமிழ்தான், அண்ணாநகர், ஒரு பையன், ரெண்டாவது படிக்கிறான், அயர்லாந்துல தான் வேலை, அங்கியே செட்டில் ஆயிட்டேன், அவருக்கும் அங்க தான் வொர்க், பாத்தேன், புடிச்சிருந்தது, லவ் மேரேஜ், அவர் சைட்ல ஒரு ப்ராப்பர்ட்டி செட்டில்மென்ட், அதுக்காக போனமாசம் தான் சென்னை வந்தேன், அடுத்தவாரம் கெளம்பிடுவேன்…’
அவள் பேசிக் கொண்டே போக, எனக்கு உள்ளுக்குள் ஏதோ செய்ய ஆரம்பித்தது.
“2013 ‘ல அம்மா இறந்தப்புறம் திரும்ப இந்தியா வரத்தோணவே இல்ல, அதான் அங்கியே செட்டில் ஆயிட்டேன்…”
நிறைய கேள்விகள் ஆழத்திலிருந்து குமிழ்களாகக் கிளம்பி மேலே வந்தாலும், இப்போது அதற்கு பதில்கள் தேவைப்படாததால், உள்ளேயே அமுங்கியது.
மீண்டும் ஒரு மௌனம் அவளது மொபைல் அழைப்பு மணியில் கலைந்தது. இம்முறை போனைப் பார்த்தவள், போனை அட்டென்ட் செய்யாமல் என்னை நிமிர்ந்து பார்த்தாள்.
“நா திரும்ப யூரோப் போறதுக்குள்ள இன்னொரு டைம் உங்கள மீட் பண்றேன் ஷிவா, நெறையப் பேசணும்னு தோணுது ஆனா என்ன பேசறதுன்னு தெரியல…!”
நான் இன்னும் மௌனமாக இருந்தேன், சிலநொடி அமைதியில்,
“சரி ஷிவா, நா கெளம்பறேன், ஐ கால் யூ…!” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாள். அவளிடம் கொடுத்த என் விசிட்டிங் கார்டு அவள் குடித்து மிச்சம் வைத்த காஃபிக் கோப்பைக்கு அருகே அனாதையாகக் கிடந்தது. அவசரமாக அதை எடுத்து, கொடுத்துவிடும் நோக்கில் அவளை அழைத்தேன்.
‘நி… நிஷா…’
இரண்டு அடிகள் நடந்தவள் நின்று திரும்பி என்னைப் பார்த்தாள். அவ்வளவு நேரம் அவள் பார்த்த பார்வைக்கும், அப்போது பார்ப்பதற்கும் ஏதோ வித்தியாசம் தெரிவதாகத் தோன்ற, எதற்கு அழைத்தேன் என்பதை மறந்தேன். ஏதோ உணர்வில் என்னையும் அறியாமல்,
“அ… அன்னிக்கு, உண்மையா… நா அந்த அர்த்தத்துல மெசேஜ் அனுப்பல நிஷா…!”
சட்டென முகம் மாறி மெதுவாகப் புன்னகைத்தவள், “அது எனக்கும் தெரியும் ஷிவா…!”
சொல்லிவிட்டு நடந்து வெளியே செல்வதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த விசிட்டிங் கார்டு என் கையிலேயே இருந்தது.
வெதும்பல். அருமையான கதை, அற்புதமான ஃபினிஷிங்.. தொடர்ந்து எழுதுங்க ப்ரோ..