வியன் உலகம்
இவன் பெயர் வியன். எங்கள் பேரன். வியன் என்கிற சொல் பெருமை, சிறப்பு, வியப்பு, ஆகாயம், அகன்ற என்று பல பொருளில் வரும். பழந்தமிழ் இலக்கியத்தில் வியனைப் பரக்கக் காணலாம். ‘விரிநீர் வியனுலகம்’ என்கிறார் வள்ளுவர். கடல் சூழ்ந்த பேருலகம் என்பது சாலமன் பாப்பையாவின் உரை. ‘வியன் கலவிருக்கை’ என்கிறார் இளங்கோ. கலங்கள் நிற்குமிடம் கலவிருக்கை. அது அளவிற் பெரியது. ஆதலால் வியன் கலவிருக்கை.
வியனுக்கு அந்தப் பெயரைச் சூட்டியது நானாகத்தான் இருக்குமென்பது என் நண்பர்கள் சிலரின் அனுமானம். அவர்களுக்கு என்னைத் தெரியும். என் தமிழார்வமும் தெரியும். ஆனால் இந்தக் காலத்து இளைஞர்களைப் பற்றி முழுமையாகத் தெரியாது. இந்த இளைஞர்கள் தங்கள் பிள்ளைகளுக்குப் பெற்றோர் பெயரை வைப்பதில்லை; பெற்றோரைக் கேட்டும் பெயர் வைப்பதில்லை.
வியனுக்கு மகளும் மாப்பிள்ளையும்தான் பெயர் வைத்தார்கள். அவர்களிடத்தில் ஒரு பெயர்ப் பட்டியல் இருந்தது. எல்லாம் ஆண் குழந்தைப் பெயர்கள். பிறக்கப் போவது ஆண் குழந்தைதான் என்பது அவர்களுக்குத் தெரியும். பத்தாம் வாரத்திலேயே மருத்துவர் சொல்லிவிட்டார். சிட்னியில் அதுதான் வழக்கம். அந்தப் பட்டியலில் நான் அனுப்பிய சில பெயர்களும் இருந்தன. மகள் தமிழ்ப் பெயர்தான் வைக்க வேண்டுமென்பதில் தீர்மானமாக இருந்தாள். ஆகவே அவர்களது குறும்பட்டியலில் நான் அனுப்பிய பெயர்களும் இடம்பிடித்தன. இறுதிச் சுற்றில் வியன் தெரிவாகியது. அந்தப் பெயர் சிக்கனமாக இருப்பதும் ஆங்கில உச்சரிப்புக்கு இசைவாக இருப்பதும் காரணங்களாகலாம்.
ஒரு பழந்தமிழ்ப் பெயரைச் சிபாரிசு செய்ய முடிந்ததே தவிர, வியன் பிறந்தபோது எங்களால் மகளுக்கு உதவியாக அவளுடன் போயிருக்க முடியவில்லை. வியன் 2020ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் வேளையில் பிறந்தான். அப்போது கொரோனா உச்சத்திலிருந்தது. ஆஸ்திரேலியா கோவிட் சுழியம் (Covid Zero) எனும் சித்தாந்தத்தைக் கடைப்பிடித்தது. போக்கும் வரவும் முற்றாகத் தடைப்பட்டிருந்தன. ஆதலால் வியனைப் பார்க்கவும் தொட்டுத் தூக்கவும் நாங்கள் ஓராண்டுக்கு மேல் காத்திருக்கும்படியானது. 2021 நவம்பரில் ஆஸ்திரேலியாவின் இரும்புக் கதவை ஒருக்களித்தார்கள். நெருங்கிய உறவுகளுக்கு மட்டும் விசா வழங்கினார்கள். நாங்கள் உடனடியாக விண்ணப்பித்தோம். டிசம்பர் மாதத்தில் சிட்னிக்கான விமான சேவை எப்போதும் போல் டில்லி, சிங்கப்பூர், கோலாலம்பூர் வழியாகத் தொடங்கும் என்றார்கள். ஆனால் ஓமைக்ரான் அப்படி நடக்காமல் பார்த்துக் கொண்டது. அப்போது சென்னையிலிருந்து சிட்னிக்கு ஒரு வழிதான் திறந்திருந்தது. அது கழுத்தைச் சுற்றி, காதைச் சுற்றி, மூக்கைத் தொடும் வழி. சென்னையிலிருந்து துபாய். ராத் தங்கல். பிறகு அங்கிருந்து வந்த வழியே பயணித்து இந்தியாவின் மேலாகவும், அரபி, வங்க, இந்துமாக் கடல்களின் மேலாகவும் ஒரே மூச்சில் 13 மணி நேரம் பறந்து சிட்னி செல்ல வேண்டும். சென்னையிலிருந்து புறப்படுவதற்கு 48 மணி நேரம் இருக்கும்போது RT-PCR சோதனை. ஆறு மணி நேரம் இருக்கும்போது விமான நிலையத்தில் Rapid PCR சோதனை. துபாயில் ராத் தங்கலுக்கு முன்பாக ஒரு சோதனை. சிட்னியில் Rapid Antigen சோதனை. சிட்னி வந்திறங்கியதும் வலம் இடம் பார்க்காமல் பதிவு செய்த முகவரியை அடைய வேண்டும். ஏழு நாட்களுக்கு வீட்டோடு வாசலோடு தெருவோடு அருகாமைக் கடை கண்ணிகளோடு இருந்துகொள்ள வேண்டும். இதற்கு நெகிழ்வான தனிமைப்படுத்தல் என்று பெயர் வைத்திருந்தார்கள். ஒரு வாரக் காலம் முடிந்ததும் இன்னொரு சோதனை எடுக்க வேண்டும். நான் எல்லாச் சோதனைகளையும் எடுத்தேன். எல்லாச் சமுத்திரங்களையும் கடந்தேன். எல்லா விதிகளையும் அப்பழுக்கின்றிக் கடைப்பிடித்தேன். இப்படியாக 2022 ஜனவரி 14 பின்னிரவில் சிட்னி சென்றடைந்தேன்.
வியனைச் சுற்றி நிறைய வேலைகள் இருந்தன. உணவு புகட்டுவது, உறங்க வைப்பது, விளையாட்டுக் காட்டுவது, குளிப்பாட்டுவது, டயப்பர் மாற்றுவது, உலாத்த அழைத்துச் செல்வது. கடைசி வேலைதான் சுலபமாகத் தெரிந்தது. அதற்கு விண்ணப்பித்தேன். மகளின் மேற்பார்வையில் மூன்று நாட்கள் இந்த வேலையைச் செய்தேன். எனது செயல்திறன் அவளுக்குத் திருப்திகரமாக இல்லை. எனில், எனது பணி மோசமாகவும் இல்லை. நிறைய நிபந்தனைகளோடு எனக்கு அந்த வேலை கிடைத்தது. சிட்னியில் இருந்த நான்கு மாதங்களும் அந்த வேலையைத் தக்க வைத்துக்கொண்டேன். வியனும் ஒத்துழைத்தான்.
பெரும்பாண் ஆற்றுப்படை சங்க இலக்கியங்களுள் ஒன்று. உருத்திரங்கண்ணனார் பாடியது. மன்னன் இளந்திரையனின் நாட்டைப் பாடும்போது புலவர் வியந்து போவார். அது வியன் புலம் (அகன்ற நாடு), வியன் மலை, வியன் காடு, வியன் களம் என்று பலவாறாகப் புகழுவார். அவருக்குத் தெரியாது, 1800 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னொரு வியன் புலமான ஆஸ்திரேலியாவில் வியன் எனும் பெயரில் ஒரு தமிழ்ச் சிறுவன் வளருவான், பின்னாளில் அவனது சகாக்கள் வியன் என்ற பெயருக்கு என்ன பொருள் என்று கேட்பார்கள், அவன் பதில் சொல்லுவான், கூடவே வள்ளுவரும் இளங்கோ அடிகளும் உருத்திரங்கண்ணனாரும் பயன்படுத்திய சொல் அது என்றும் சேர்த்துக்கொள்வான் என்று.
கடைசியாகச் சொன்னது என் விருப்பம்.
தொடரும்
அபூர்வமா வீட்டு வேலை செய்ததை தம்பட்டம் அடிக்கிறீக. சிறப்பு. வியந்தேன்..வியன் தேன்….நல்ல பெயர்..பாராட்டலாம்….