எப்படித்தான் அந்த பதிலைச் சொன்னோம் என்று ஒரு கணம் தனக்குள் ஆடித்தான் போனாள் புவனா. அதை வேறு மாதிரிச் சொல்லியிருக்கலாம் என்று பிறகுதான் தோன்றியது. பதிலென்றால் என்ன, நீண்ட வாக்கியமா…ஒரேயொரு வார்த்தை….சாதாரண வார்த்தைதான். ஆனால், அதை எந்த மாதிரிச் சொல்கிறோம் என்பதில்தான் பிரச்னையே…! பட்டென்று அப்படி மூஞ்சியில் அடிப்பது போலா பதிலிறுப்பது? தீ நாக்கு…! அந்தக் கணம் நாக்கைக் கடித்து வார்த்தையை நிறுத்தினால் ரத்தம்தான். அத்தனை அழுத்தம்.
குறிப்பிட்ட அந்தக் கேள்விக்காக மட்டும்தானா அந்தப் பதில் வருகிறது? மனதிற்குள் கொண்டுள்ள புழுக்கம், வெறுப்பு, ஆத்திரம்,இயலாமை எல்லாம் சேர்ந்து அப்படி வெளிக்கொண்டு தள்ளி விடுகிறது. அது தன் பிறவிக் குணம் என்று தோன்றி சமாதானம் செய்து கொள்ள முனைகிறது மனம். இத்தனை கொடூரங்களோடு குணக்கேடாய் நிற்கலாமா? மாற்றிக் கொள்…மாற்றிக் கொள்…என்றும் உள்ளுணர்வு எச்சரிக்கிறது.
பிறவிக்குணம் சரியில்லையென்றால் அதை மாற்றிக் கொள்ள முயல வேண்டாமா? வயதாகிவிட்டதற்கான அடையாளம்தான் பிறகென்ன? வயதாக ஆக சொல்லும் செயலும் மாற வேண்டாமா? அவற்றில் ஒரு நிதானமும், முதிர்ச்சியும் வெளிப்பட வேண்டாமா?
இரண்டு தினங்களுக்கு முன்பு நடந்ததே… மாமனாருக்கும் தன் அப்பாவுக்கும் இடையிலான ஒரு வாக்குவாதம்…அதன் தாக்கமோ…? அது அவள் மனதில் அப்படியே வரிக்கு வரி பதிந்திருந்தது. இருந்தாலும் அப்படி ஒரு அபாண்டத்தைத் தன் மீது வீசலாமா? அந்தக் கனல் தன் மனதில் எரிந்து கொண்டிருப்பதன் அடையாளம்தான் இப்போது வெளிவந்த அந்த வார்த்தை.. அதைச் சொன்ன விதம்? பிரயோகிக்கும்போது எழுந்த உணர்ச்சி பாவம்! முகம் போன போக்கு? யாருக்குத்தான் சகிக்க முடியும்?
உங்க பொண்ணு எங்க வீட்டுக்கு வந்ததுலேர்ந்து எங்க நிம்மதி போயே போச்சு…
சம்பந்தமூர்த்தியின் இந்த வார்த்தைகள் வேதாசலத்தை உலுக்கிப் போட்டது. பதில் எதுவும் வராமல் திணறி நின்றார் அவர். வீடு தேடி வந்து இப்படி ஆராதிக்கிறாரே! அப்போது புவனா தன் பிறந்த வீட்டில்தான் இருந்தாள். கோபித்துக் கொண்டு பெட்டியைத் தூக்கிக்கொண்டு வந்து சேர்ந்ததும் விரட்டிக் கொண்டு வந்து விட்டார்களே? அதிர்ந்து போனாள். ஏதேனும் ஒரு முடிவோடுதான் வந்திருப்பார்களோ? பயந்தாள்.
என்ன அப்படிப் பார்க்குறீங்க…ஆமாம்…அதான் உண்மை. பொழுது பொழுதா அர்த்தம் பொருத்தமில்லாம சண்டைக்கு சதிரா நிக்கிற மாதிரிப் பேசினா? வாயைத் திறந்தாவே எடுத்தெறிஞ்ச பேச்சுதானா? பதவாகமான வார்த்தைகளே கிடையாதா உங்க பொண்ணுகிட்ட…? என்ன கத்துக் கொடுத்திருக்கீங்க? இப்டியா இன்னொரு வீட்டுக்குப் போகுற பெண்ணை வளர்க்கிறது? –
தன் அறையிலிருந்து வெளியேறத் துடித்தாள் புவனா. ஹாலில் போய் நின்று கத்த வேண்டும்போலிருந்தது. அம்மாதான் இறுக்கிப் பிடித்து அமர்த்தியிருந்தாள்.
அப்டியெல்லாம் இல்ல சார்…எம் பொண்ணு ரொம்ப சாஃப்ட் நேச்சர்…நீங்க ஏதோ தப்பாப் புரிஞ்சிக்கிட்டு…..
உங்க பொண்ணு பேசுறத வச்சித்தானே புரிஞ்சிக்க முடியும்? கற்பனைலயா புரிஞ்சிப்போம்? நாங்க சரியாத்தான் புரிஞ்சிக்கிட்டிருக்கோம். இல்லன்னா இப்டி அஞ்சு வருஷத்த ஓட்டியிருப்பமா? எங்க நேச்சர் பொறுத்துப் போறது. அதனால ஓடுது உங்க பொண்ணு வண்டி…நாங்களா எதுவும் உங்க பொண்ணுகிட்டே வலியப் பேச றதில்லே….அவ தன் புருஷனோட பேசறதுதான். அது எங்க காதுல விழத்தானே செய்யும்…அவன் மனசு புண் படுமேன்னு எங்க மனசு கொதிக்காதா? தணிஞ்சே பேசத் தெரியாதா உங்க பொண்ணுக்கு….? வீட்டுல பெரியவங்க இருக்காங்கங்கிற மரியாதையே கிடையாதா? அதென்ன பண்ட பாத்திரங்களை கோபத்துல டம்மு டும்முன்னு போடுறது, வைக்கிறது? சத்தமில்லாம எடுக்க, வைக்கத் தெரியாதா? குடும்பப் பொண்ணோட நடவடிக்கைகளாத் தெரிலயே…?
நீங்க சொல்லலாம்ல சார்…எடுத்துச் சொன்னா கேட்டுக்கிறா…? அப்டியெல்லாம் மீறித் துள்றதெல்லாம் அவகிட்டே கிடையாது…நீங்க அன்பா அறிவுரையாச் சொல்லுங்க…கேட்டுப்பா….! நான் பக்குவமா சொல்லியனுப்பறேன்…வருத்தப்படாதீங்க…
வேதாசலம் விட்டுக் கொடுக்காமல் பேசுகிறார் என்பது தெரிந்தது சம்பந்தமூர்த்திக்கு. தன் பெண்ணின் லட்சணம் தெரிந்து, இது ஒருவகையான டெக்னிக்கோ என்று தோன்றியது. தன் முன்னே தன் பெண்ணின் பலவீனத்தைக் காட்டிக் கொள்ள மாட்டார். ஆனால், தனிமையில் அறிவுரை சொல்ல வாய்ப்புண்டு. ஆனாலும் வயதும், முதிர்ச்சியும் கொண்ட இரு பெரியவர்கள் வெளிப்படையாகப் பேசிக் கொள்வதில் என்ன தப்பிருக்க முடியும்? அதற்கு ஏன் அவர் மனம் முன்வர மறுக்கிறது. ரெண்டு குடும்பத்தின் மூத்தவர்களும் எது நல்லதோ அதை விவாதித்து நடைமுறைப்படுத்துவதுதானே சிறந்ததாக இருக்க முடியும்? இப்படி வலியப் புறப்பட்டு வந்து சொல்லும்படியாகிவிட்டதே…!
இத்தனைக்கும் உங்க பொண்ணை நாங்க எந்த வேலையும் செய்யச் சொல்றதில்லை. அதுவா வந்து நா செய்றேன்னு நின்னதுமில்லை…! என்னைக்காவது நல்ல குணம் தலையெடுத்து, அடுப்படிக்குள்ள புகுந்து டிபன் பண்றேன்னு கிளம்பினா அதையும் நாங்க தடுக்கிறதுமில்லை. அவ்வளவு சுதந்திரமா இருந்திட்டிருக்கு. அப்படியிருக்கைல சதா அவன்ட்ட தொட்டதுக்கெல்லாம் கோபப்பட்டுக்கிட்டே இருந்தா? எதையெடுத்தாலும் எகனைக்கு முகனையாப் பேசினா? நேர் அர்த்தமே எடுத்துக்கத் தெரியாதா உங்க பொண்ணுக்கு? எல்லாமே விபரீதம்தானா? குதர்க்கமாவே பேசினா? எங்களுக்கு இதெல்லாம் தெரியாது சார்…நாங்க எங்க பையனை அப்படி வளர்க்கலை….
எப்டிப் பேசினா, எதைப் பேசினா என்ன அர்த்தம் எடுத்துக்குமோன்னு இப்போ அவன் அவள்ட்ட பேச்சையே குறைச்சிட்டான்…கேட்டா…கேட்டதுக்கு மட்டும் ஒரு வார்த்தை, ரெண்டு வார்த்தைல பதில் சொல்றதோட நிறுத்திக்கிறான். அவனே அவளுக்குப் பயப்படுறானோன்னு எங்களுக்கு பயமாயிருக்கு. முன்னெல்லாம் ராத்திரி எட்டு ஒன்பதுக்கெல்லாம் ஆபீஸ்லர்ந்து திரும்பிடுறவன், இப்பல்லாம் ராத்திரி பன்னென்டு ஒண்ணுக்கு மேலதான் வர்றான். கேட்டா…வேலை ஜாஸ்திங்கிறான்….எங்ககிட்டயே அவன் பேச்சு குறைஞ்சு போச்சு…அது எங்களுக்கு வருத்தமா இருக்குமா, இருக்காதா? பயமாயிருக்கு சார்….பயமாயிருக்கு…சொல்லவே வெட்கமாயும் இருக்கு…! மருமகப் பொண்ணுக்குப் பயப்படுற வீட்டை எங்கயாச்சும் பார்த்திருக்கீங்களா? நல்லவனா இருக்கலாம்…ஆனா கோழையா இருக்கக் கூடாது…எங்க பையன் அப்படியாயிட்டானோன்னு நாங்க சந்தேகப்படுறோம்…
இப்டி சரியாப் பார்க்காம ஒரு கல்யாணத்தைப் பண்ணி வச்சிட்டமே, அவன் வாழ்க்கையைக் கெடுத்திட்டமோன்னு யோசனை வந்திடுச்சி எங்களுக்கு…வெளில சொல்லவும் முடியாம, மெல்லவும் முடியாமத் தவிச்சிக்கிட்டிருக்கோம் நாங்க ரெண்டு பேரும்…
நான் அவசியம் அவகிட்டே சொல்றேன் சார்…நல்லபடியா நடந்துக்குவா…அதுக்கு நான் கியாரண்டி…! அப்டியெல்லாம் நினைச்சு நீங்க வருந்த வேண்டாம். உங்க சம்பந்தம் கிடைச்சதுக்கு நாங்க பெருமைப்பட்டுக்கிட்டிருக்கோம்…
எங்களால அப்படி இருக்க முடியலையே? நல்லத நினைச்சுத்தான் பண்ணினோம். இப்படி உங்க பொண்ணு இருப்பான்னு நாங்க நினைக்கலியே…?
எத்தனைவாட்டி டைவர்ஸ் பத்திப் பேசியிருக்கான் தெரியுமா? எங்களை மீறி, எங்களுக்கே தெரியாம எதுவும் செய்திடுவானோன்னு நாங்க பயப்பட்டுக்கிட்டிருக்கோம்…நல்ல தூக்கம் போச்சு சார் எங்களுக்கு…படுக்கைல உழன்டுக்கிட்டிருக்கோம்…இந்த வயசுல தேவையா எங்களுக்கு? அதெல்லாம் பேசக் கூடாதுன்னு தடுத்து வச்சிருக்கோம்…
நினைவுச் சரடு அறுந்தது புவனாவுக்கு. வரிக்கு வரி அத்தனையும் ஞாபகமிருக்கிறது. அப்போது அவள் தன் அறையில் உட்கார்ந்திருந்தாள். அம்மாவை மீறி வெளியே போய்ப் பேச அவள் விரும்பவில்லை. ரொம்பவும் ரசாபாசமாகி விடும் நிலைமை என்று அம்மா சொன்னது புத்தியில் உறைத்தது.
அறை வாசலில் மாமியார் நிற்பது தெரிந்தது.
உனக்கும் நாலுதோசை வார்த்து வைக்கட்டுமா? வர்றியா….மல்லிச் சட்னி அரைச்சிருக்கேன்….
வேண்டாம்….-பட்டென்று எப்படி அப்படி முகத்திலடித்தாற்போல் சொன்னோம்?
இல்ல…நானே வார்த்துக்கிறேம்மா…எனக்கு இப்போ பசிக்கலை…-ஏன் இப்படி குணமாகப் பதில் சொல்லத் தெரியவில்லை? பழகியிருந்தால்தானே? வீட்டிலேயே பெற்றோரை என்ன காய்ச்சுக் காய்ச்சியிருக்கிறோம்? புத்தியில் இப்போது உறைத்தது.
யோசித்த அந்தக் கணத்தில் ரகுவரன் சொன்னான்.
நீ ஏம்மா அவள்ட்ட வலியக் கேட்டு கேவலப்படுறே…? வேணும்னா அவளே வந்து செய்துக்கட்டுமே…? வயிறு பசிச்சா தானா வர்றா….? கும்பி சுருங்கினா சுருண்டு கிடக்கட்டும்…என்ன இப்போ…? ! ராத்திரி ரெண்டு மணிக்கு எழுந்திரிச்சு திருட்டுச் சாப்பாடு சாப்பிடுவா…பிசாசு மாதிரி….வக்கிர புத்திக்கு வேறெப்படித் தோணும்?
நீ சும்மாயிரு ரகு….அப்டியெல்லாம் பேசக் கூடாது. அவ நம்ம வீட்டுக்கு வந்த பொண்ணு. உன்னோட பொண்டாட்டி. அது ஞாபகமிருக்கட்டும்…ஏத்தமோ இறக்கமோ…எல்லாமே இனி நம்மோட…இப்ப வேண்டாம்னுதானே சொல்றா…விடு….அவ விருப்பம்போல பசிக்கிற போது வந்து செய்துப்பா…சொன்னான்னா நான் செய்து போடறேன்…அவ்வளவுதானே…! ஒண்ணும் குறைஞ்சு போக மாட்டேன்….
அது சரி…உன் தலைவிதி….அதுக்கு நான் என்ன பண்றது? அவ உன்னை ஓங்கி ஒரு அடி அடிச்சாலும் வாங்கிப்ப போல்ருக்கு நீ…! அவ பேசுற பேச்சே அடிக்கிற மாதிரித்தானே இருக்கு…திமிர் பிடிச்சவ….!
சும்மாயிருப்பா…பெரிசு படுத்தாதே…எல்லாம் சரியாகும்…நாளைக்கு ஒரு குழந்தை பிறந்தாச்சுன்னா படிப்படியா எல்லாமும் சமனத்துக்கு வந்துடும்…
நினைச்சிட்டிரு….நீதான் மெச்சிக்கணும் உன் மருமகளைப் பத்தி…பெரிய்ய்ய மகராணி மாதிரிப் பேசுறா…இவ என்ன பேரழகியா? சுமாரான பர்ஸனாலிட்டிதானே…பெரிய அறிவுஜீவியா…? காலேஜ்ல கோல்டு மெடல் வாங்கினவளா? சாதாரண புத்திக்காரிதானே? இல்ல…நூறு நூத்தம்பது பவுனோட தங்கத் தேர்ல அவங்க அப்பன் கொண்டு வந்து இறக்கி விட்டானா? பிலோ மிடில் கிளாஸ்தானே? யாருடைய உதவியும் இல்லாம பத்துப் பதினஞ்சு கம்பெனிக்கு நானே ரெஸ்யூம் போட்டு மாறி மாறிப் போகத் தெரியும்ங்கிற அளவுக்கு தான் பார்க்குற வேலைலயாச்சும் பெரிய திறமைசாலியா? எதுவும் கிடையாது. அப்போ வாய் மட்டும் என்ன கிழியறது? நார்மலா இருந்திட்டுப் போக வேண்டிதானே…! இந்த மாதிரி ஒரு வீடு வேறே எங்கயாச்சும் இவளோட கோண புத்திக்குக் கிடைக்குமா? இந்த வீட்டைத் தவிர வேறே எங்கயாச்சும் அவ மாட்டியிருந்தான்னு வச்சிக்கோ…என்னைக்கோ அத்து விட்ருப்பான் அந்தப் பையன்….உங்க வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு நான் சகிச்சிக்கிட்டிருக்கேன்…அத ஞாபகத்துல வச்சிக்குங்க….
போதும் வாயை மூடு….தோணுறதையெல்லாம் பேசிக்கிட்டு…..-கன்ட்ரோல் பண்ணு.
தோணுறதுன்னு இல்லம்மா….மனசுக்கு ஒரு நிம்மதியே இல்லாமப் போச்சு…ஏண்டா வீட்டுக்கு வர்றோம்ங்கிற அளவுக்குப் போயிட்டேன் நான்…இப்டியே போச்சுன்னா ஆன்சைட்டுக்கு வில்லிங் கொடுத்து நாம்பாட்டுக்குக் கிளம்பிடுவேன்…கடைசில அதுதான் நடக்கப்போகுது…நீ வேணும்னா பாரேன்….
அப்டிப் போனேன்னா எப்டியும் குறைஞ்சது ரெண்டு வருஷமாச்சும் அங்க இருந்தாகணுமே…! பேசாம அவளையும் கூட்டிட்டுப் போயிடு…அவ்வளவுதான்…உனக்குத் துணை இனிமே அவதானே…!- – காயத்ரி திடமாய்ச் சொன்னாள். நீ தனியாக் கிளம்பிப் போக முடியாது என்பதை மறைமுகமாக உணர்த்தினாள்.
வினையையும் கூடவே மடில கட்டிட்டுப் போங்கிறே…அதானே..! அப்டியாச்சும் நாம கொஞ்சம் நிம்மதியா இருக்கலாமேன்னு பார்க்கிறீங்க …நீயும் அப்பாவும்…!
நாங்க நிம்மதியா இருக்கணும்னு நினைச்சிருந்தா என்னைக்கோ ஊருக்குக் கிளம்பிப் போயிருப்போம்…கல்யாணம் பண்ணி தனிக்குடித்தனம் வச்சிட்டு விலகிக்கிறதுதான் விவேகம். கூடவே கிடந்து கும்மியடிக்கிறதா அழகு? உங்க வாழ்க்கையை நீங்க வாழணும். எங்க மிச்ச வாழ்க்கை நாங்க வாழ்ந்துக்கிறோம். இனிமே எங்களுக்கென்ன நாள் கணக்குதானே? இன்னிக்கோ நாளைக்கோ…எனக்கு அவர் துணை…அவருக்கு நான் துணை…அவ்வளவுதான்….ஆனா அப்படி விட்டுட்டுப் போற நிலைமை, அந்த நம்பிக்கை எங்களுக்கு வர்ற வரைக்குமாவது நாங்க இங்க இருக்க வேண்டாமா? அம்போன்னு உங்களை விட்டிட்டுப் போக மனசு வரல்லையேடா கண்ணு…! – இதைச் சொன்ன போது காயத்ரியின் வார்த்தைகள் தடுமாறத்தான் செய்தன. அவள் கண்கள் கலங்கின. அறையில் அந்தப் பெண் இருக்கிறதே என்ற எண்ணமும் அவளைப் பதற வைத்தது. இந்தப் பெண் இப்படி அடாவடியாய் இருக்கிறதே…என்று மனம் துடித்தது. ஒரு சாதுப் பையனுக்குப் போய் இப்படிப் பார்த்து வைத்து விட்டோமே என்று மனசு புழுங்கியது.
அத்தனை பேச்சையும் கேட்டுக் கொண்டுதான் இருந்தாள் புவனா. அவள் காதில் எல்லாமும் விழத்தான் செய்தது. வந்த புதிதில் படீர் படீரென்று கதவைச் சாத்திக் கொண்டிருந்தாள். இப்போது அது நின்றிருக்கிறது. தன் பேரில்தான் தவறிருக்கிறது என்று மனது உணர ஆரம்பித்திருக்கிறதோ? புகுந்த வீட்டில் இப்படி அவர்கள் தனியே பேசித் தவிக்க விட்ட குற்றம் யாரைச் சேர்ந்தது? தன்னுடைய இருப்புதானே? என் மனசு ஒட்ட மறுக்கிறது இங்கே…இந்தக் குடும்பத்தோடு ஒன்றிணைய மறுக்கிறது. அது தவறுதானே? இனி காலத்துக்கும் இதுதானே என் வீடு?
எதற்காகப் பொழுது பொழுதாய் இப்படிச் சண்டையிட்டுக் கொண்டு? இந்த வீட்டுக்கு என்று வந்தாயிற்று. இனி வாழ்வோ தாழ்வோ…எல்லாமும் இங்குதான் கழிந்தாக வேண்டும். இவர்கள்தானே எனக்கு அப்பா அம்மா…எல்லாம்! ஏன் மனசு அதை ஏற்க மறுக்கிறது…என்னை நானே கொடுத்தால்தான் ஒன்ற முடியும். அப்படித்தானா?
உங்க வீடு இதே நகர்லதானே இருக்கு…அந்தத் திமிர் உனக்கு. சடார் சடார்னு கிளம்பிப் போயிடுற…ஆபீஸ் முடிஞ்சிதின்னா நேரா அப்டியே அங்க போயிட்டு அங்கிருந்து ஃபோன் பண்றே…? ஏன்…இங்க வீட்டுக்கு வந்திட்டு அப்பாம்மாட்டச் சொல்லிட்டு முறையாப் போகத் தெரியாதோ? அவுங்க என்ன வேண்டாம்னா சொல்லப் போறாங்க…? தாராளமாப் போயிட்டு வான்னுதானே அனுப்புவாங்க…இதுக்கு முன்னால எப்பயாச்சும் போகக் கூடாதுன்னு சொல்லித் தடுத்திருக்காங்களா? அப்படி எப்பயாச்சும் சொல்லியிருந்தா உனக்கு பயம் இருக்கும்…சுதந்திரமா விட்டுட்டாங்கல்ல…அந்த அலட்சியம் உனக்கு….! இவங்ககிட்ட என்ன சொல்றதுன்னு….சம்பாதிக்கிற திமிரு….உன்கிட்டே இந்த நாள் வரைக்கும் பைசாக் கேட்டிருப்பாங்களா? என்ன வரவு, என்ன செலவுன்னு ஒரு வார்த்தை வந்திருக்குமா எங்க அப்பாம்மாட்டேயிருந்து? கொஞ்சம் எல்லாத்தையும் நினைச்சுப் பார்க்கணும்…இல்லன்னா கடவுளுக்கே அடுக்காதாக்கும்…
அவன் இதைச் சொன்ன போது எவ்வளவு ஆத்திரம் வந்தது இவளுக்கு. என் சார்பாகவே இவன் பேச மாட்டானா? அப்பாம்மா பிள்ளையா இவன்? லோகல்லதானே இருக்குன்னு போனது ஒரு தப்பா? ஒரேயடியாப் போயிடப் போறேனா? திரும்ப இந்த நரகத்துக்கு வரத்தானே போறேன்…! அதுக்குள்ளயும் அதைக் குத்திக் காட்டணுமா? நெஞ்சம் குமுறியது புவனாவுக்கு.
பதிலடியும் இப்படி வருகிறதே…! அதிர்ந்து போனாள் அவள் வீட்டில்.
நீ இப்டி அடிக்கடி இங்க வரக் கூடாதும்மா…நாளைக்கு உன் தம்பிக்கு ஒரு கல்யாணம் ஆச்சின்னு வச்சிக்கோ…அப்போ இப்பமாதிரி உன்னால இங்க வர முடியாது. வரவும் கூடாது. உனக்கு அதுதான் வீடு…! நீ அங்கதான் இருக்கணும்…அப்டியே வந்தாலும் ஒரு வேளை இருக்கலாம்…கை நனைக்கலாம். போகலாம்…அவ்வளவுதான்….புரியுதா? இப்போ அவுங்ககிட்டே சொல்லிட்டு வந்தியா, சொல்லாமயே வந்திட்டியா? – அப்பா இப்படிக் கேட்டபோது அவள் சொன்ன பதிலை நினைத்து அவளுக்குச் சிரிப்புத்தான் வந்தது. அப்பா என்பதால் அந்த உரிமையா?
என்னப்பா…கைப்பையோட வந்திறங்குறதப் பார்த்தா தெரிலயா…ஆபீஸ்லர்ந்து நேரா இங்கதான் வர்றேன்….இது கூட உங்களால புரிஞ்சிக்க முடியாதா?
உன்னை, உன் குணத்தைப் புரிஞ்சிக்காம வளர்த்துட்டுத்தாம்மா இப்போ இவ்வளவு கஷ்டப்படுறோம்….உன்னை நினைச்சித்தான் பொழுது பொழுதா நாங்க பயந்திட்டேயிருக்கோம்….அதை வெளிப்படையாச் சொல்லவும் முடியாம, காலந்தாழ்த்தி உன்னைக் கண்டிக்கவும் ஏலாமத் தவிக்கிறோம். எல்லாமும் அந்தந்த வயசுல சொல்லிக் கொடுத்து பக்குவப் படலேன்னா…பின்னால எவ்வளவு பேருக்குக் கஷ்டம்? இதெல்லாம் இப்ப உனக்குத் தெரியாது….வயசான காலத்துல உணருவ…காலங்கடந்து உணர்ந்து என்ன பயன்? நாங்க அப்ப பரலோகம் போயிருப்போம்…ஒண்ணு தெரிஞ்சிக்கோ….மனசால நினைக்கிற தப்பு, வார்த்தையால பேசுற தப்பு, செயலால செய்யுற தப்பு இப்டி எல்லாத்துக்குமே எதிர்வினை உண்டாக்கும்…அதை மட்டும் மறந்திடாதே…!
புவனாவிற்கு அந்தக் கணம் மனசு நடுங்கித்தான் போனது. நல்லவைகளை இப்போதுதான் அப்பாவே பேசுவதாகப் பட்டது. அவர் இவ்வளவு விளக்கமாய்ப் பேசிக் கேட்டதேயில்லையே?
என்னப்பா சொல்றீங்க…! எதுக்காக நீங்க பயப்படணும்…? பதறியவாறே கேட்டாள்.
உனக்குப் புரியாதும்மா….புரியாது….பெத்தவங்க கடமை பொண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்ததோட முடிஞ்ச போறதில்லை…அவ நல்லா வாழ்றதைக் கண்ணாரக் கண்டு திருப்திப் படணும். அந்த நம்பிக்கை அவுங்களுக்குக் கிடைக்கணும்…அதுவரை ஊசலாட்டம்தான்….
ரெண்டு குடும்பத்தாரையும் கலக்கிக் கொண்டிருக்கிறோமோ என்று எண்ணத் தலைப்பட்டாள் புவனா. அவள் மனது இப்போது ஒரு நிதானத்திற்கு வந்திருந்தது. என்னவோ உடம்புக்குள் மின்னலடித்தது போலிருந்தது.
கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள். அடுத்த அறையினில் பேச்சுச் சத்தம் கேட்கவே அங்கே நுழைந்தாள்.தயங்கி நின்றாள். கண்கள் கலங்கியது. உடம்பு நடுங்கியது.
வாம்மா…உள்ளே வா…அங்கயே ஏன் நிற்கிறே…? என்றார் சம்பந்தமூர்த்தி.
ஆறு மாதம் முன்பு திருமணம் செய்து கொடுத்து அனுப்பிய தன் பெண் நிகிலாவின் அன்றாட வாழ்க்கை அங்கு எப்படியிருக்கிறதோ என்று நினைத்து அவர் மனது திடீரென்று பயப்பட ஆரம்பித்தது.