இணைய இதழ் 98சிறுகதைகள்

நோய் – ராம்பிரசாத்

சிறுகதை | வாசகசாலை

“எந்த நோயையும் தராத வைரஸா? அது எப்படிச் சாத்தியம்? அதற்கு வாய்ப்பே இல்லை முல்தான். அது என்ன நோய் என்பதைக் கண்டுபிடி. அதற்குத்தான் உனக்கு ஊதியம் வழங்கப்படுகிறது.” என்றார் காஜா. அவருடைய கண் இமைகள் விரைத்தன. பார்வையில் கடுமை தெரிந்தது.

அவரது பார்வையைத் தவிர்க்கும் பொருட்டு நான் தலை குனிந்து மடிக்கணிணிக்கு என் பார்வையைத் திருப்பினேன். அவரது நிழல் என்னைக் கடந்து சென்றது.

நிகழ்வு நடந்த இடம், மிக மிகக் கவனமாக, பசைப்பட்டை (tape) மூலமாக நிகழ்வு நடந்த இடத்தைச் சுற்றியுள்ள நான்கு ஓரங்களிலுள்ள மரங்களைத் தொட்டு கட்டம் கட்டப்பட்டிருந்தது. மரக்கட்டைகளின் வாசத்தில் காட்டின் அந்த இடத்தில் மிகவும் ரம்மியமான வாடை வீசியது. மரக்கிளைகள், இலைகளினூடே வானம் பொத்தலிடப்பட்ட குடை போல் தோற்றம் அளித்தது.

நடுவாந்திரமாக, காட்டு மரக்கிளைகள் ஒன்றொடு ஒன்று உரசும் ஓசைகளுக்கு மத்தியில், அணில்களின் கீச்சுக் குரல்களுக்கு மத்தியில், பூச்சிகளின் இனப்பெருக்க ஓசைகளுக்கு மத்தியில் அந்த மூன்று வைரஸ்களைக் கண்ணுற்றேன்.

ஆம். வைரஸ்களேதான்.

பத்தடி உயரத்தில் அந்த வைரஸ்கள் ஒவ்வொன்றையும் என்னால் எந்த ஒரு நுண்ணோக்கிக் கருவிகளின் உதவியும் இன்றி அதன் ஒவ்வொரு பகுதியை வெறும் கண்களாலேயே பார்க்க முடிந்தது. கொழுப்பு உறைகள் (lipid envelope), புரத உச்சங்கள் (protein spike), வைரஸின் மரபணுக்கள் (viral genome), அணுக்கருக்கள் (nucleocapsid), மற்றும் சவ்வுகள் (membranes) மிகத்தெளிவாகத் தெரிந்தது. அங்கிருந்த மரக்கிளைகளின் முரட்டுத்தனமான வலைப்பின்னலுக்கு மத்தியில் அந்த வைரஸ்கள் வெளியேற வழியின்றி சிக்கிக்கொண்டிருந்ததைப் போல் தோன்றியது.

ஒர் வைரஸின் பல்வேறு பகுதிகளை நுண்ணோக்கிகள் இல்லாமலேயே பார்க்கக் கிடைக்கும் வாய்ப்பு ஒரு அரிய வாய்ப்பு என்றே கருதுகிறேன். இல்லையா? இப்படி ஒரு வாய்ப்பு இல்லையென்றால், எனக்கு மிக மிக விலை உயர்ந்த, நவீனமான நுண்ணோக்கிக் கருவிகள் தேவைப்பட்டிருக்கும்.

சுமார் பத்தடி உயரத்தில், இந்த வைரஸ்கள், வைரஸ்கள் பற்றிய என் புரிதலின் ஒவ்வொரு செங்கற்களையும் சில்லு சில்லாக உடைத்துப் போட்டன. அதன் ஒவ்வொரு புரத உச்சங்களும் ஒரு மனிதனின் விரல்கள் அளவுக்கு தடித்து நீண்டிருந்தன. இத்தனை தடித்த புரத உச்சங்களால் கடத்தப்படக்கூடிய நோய் என்னவிதமான நோயாக இருக்குமென்று சிந்தனை போனது எனக்கு.

“இத்தனை பெரிய பரிமாணத்தில், இந்த வைரஸ்களின் எடையே, இவைகளின் உருவத்தைச் சிதைத்துக் கலைத்துப் போட்டிருக்க வேண்டும். அல்லவா?” என்றார் காஜா. உண்மைதான். அதுதான் நடந்திருக்க வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை என்பதுதான் ஆச்சரியம். அவர் சொன்னது சரிதான் என்று அறிவிக்கும் விதமாய் ஆமோதிப்பாய்த் தலையசைத்தேன்.

காஜா, மருத்துவக் கவுன்சிலின் இயக்குநர் பதவியில் இருப்பவர். அவரே நேரடியாகச் சம்பவம் நடந்த இடத்துக்கு வந்திருக்கிறார் என்றால், இந்தப் பாரிய பரிமாணம் கொண்ட வைரஸ் எந்தளவிற்க்குப் பீதியைக் கிளப்பியிருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ளலாம். இருந்தும் காட்டில், காட்டில் வாழும் மலைவாழ் மக்களைக் கொண்ட சிறிய இனக்குழுக்களையும், என் மருத்துவக்குழுவையும், காவல்துறை சார்ந்த காவலர்களும், மிலிட்டரி ஆட்களையும் தவிர வேற யாரும் இல்லை. தொலைவில் காஜா வந்திறங்கிய ஹெலிகாப்டர் நின்றிருந்தது.

ஏன் வேறு யாரும் இல்லை?

‘முந்தா நாள் பெய்த மழையில் அணை உடைந்து ஏற்பட்ட வெள்ளத்தில் சாலை அழிந்து மலைக்கிராமங்கள் முழுமையாகத் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. முதல்வர் வான்வழியாக சேதங்களைப் பார்வையிட்டார்’ என்று செய்தி சானல்களில் சொல்லப்படுபவைகள் சமயத்தில் இது போன்ற விடயங்களைப் பற்றியும் இருக்கும். எல்லாமே மூடி மறைத்தல்தான். நீங்கள் நம்பக்கூடாது. ஆனால், நீங்கள் நம்புவீர்கள். என்ன செய்ய? உங்கள் தினசரிகள் கட்டமைக்கப்படும் விதம் அப்படி.

நானும் வாய் திறக்க இயலாது. ஏனெனில், நான் அரசாங்க மருத்துவன். நோய் எதிர்ப்பு சக்திப் பிரிவு. ஒரு மருத்துவனாக என்னிடம் எந்த நோயாளியும் பொய் சொல்லக்கூடாது. ஆனால், அரசாங்கத்தின் எல்லா பொய்களையும் நான் காப்பாற்றக் கடமைப்பட்டவன். என்ன ஒரு முரண் அல்லது விநோதம் பாருங்கள்? பாமர மக்களுக்கு சேவை செய்ய மருத்துவம் படித்தால், கடைசியில் அவன் வயிற்றில் அடித்துத்தான் பிழைக்க வேண்டி வருகிறது. யார் குற்றம் இது? சரி. வியாக்கியானத்திற்கு இது நேரமல்ல. நான் நோயைக் கண்டுபிடித்தாக வேண்டும்.

ஆனால், அப்போதுதான் கவனித்தேன், அங்கே நாங்கள் மட்டும் இல்லை என்பதை. துலான் – மலைக்கிராமத்தில் எங்களுக்குத் தேவையான எடுபிடி வேலைகளைச் செய்பவன். தேனீர்த்தூள், சமோசா , பக்கோடா என்று எது வேண்டுமென்றாலும் வாங்கி வருவான். அட! அவசத்திற்கு அருகாமையில் உள்ள டவுனில் மருந்துகள் தேவை என்றாலும் அவன்தான். உதவியாள் என்பதால் எங்கள் கூடாரங்களுக்குள் அவன் நுழைவதை எவரும் பெரிதாக கவனிப்பதில்லை. அவன் எனக்கும் காஜாவுக்குமிடையிலான சம்பாஷனைகளைக் கேட்டிருக்க வேண்டும். அவசர அவசரமாக அவன் அங்கே சற்று தள்ளி நின்றிருந்த கிராமத்தார்களை அண்டி அவர்களிடம் எதையோ கிசுகிசுக்க, இப்போது கிராமத்தார்களின் பார்வை என் பக்கம் திரும்பியது.

அந்தப் பார்வைகளில் இருந்த ஆவேசம், விரோதம், வன்மம் அவன் அப்படி என்ன சொல்லியிருப்பான் என்பதை ஊகிக்கப் போதுமானதாக இருந்தது.

“நோயின் பெயர் என்ன என்பதை நீ ஏன் எங்களுக்குச் சொல்ல மறுக்கிறாய்?” என்றார் கிராமத்தவர் ஒருவர் கூட்டத்திலிருந்து.

“பதட்டம் வேண்டாம். எங்கள் தலைமை நோய் எதிர்ப்பு நிபுணர் இன்னமும் ஆராய்ந்துகொண்டு தான் இருக்கிறார்” என்றார் காஜா, கிராமத்தவர்களின் பதட்டத்தைத் தனித்து சமாதானம் சொல்லும் நோக்கில்.

“கோவிட்டின் போது நடந்தது போல் எங்கள் எல்லோரையும் பலி கொடுத்துவிட்டு நீங்கள் மட்டும் தப்பிவிடலாம் என்று எண்ணாதீர்கள்.” ஒரு கிராமத்தான் உரத்த குரலில் கத்தினான்.

தொடர்ந்து வந்த அமைதியில், அவனுக்குச் சொல்ல எங்கள் யாரிடமுமே எந்த பதிலும் இல்லை என்பது நிரூபனமானது. அது அவர்களின் கோபத்தை அதிகரிக்க மட்டுமே செய்தது. கிராமத்தார்களின் பார்வை இன்னும் இன்னும் தீவிரமடைவதைப் போல் உணர்ந்தேன்.

“எப்போது வேண்டுமானாலும் இது ஒரு கிளர்ச்சிக்கு வழி வகுக்கலாம் முல்தான். சீக்கிரமாக என்ன நோய் என்பதைக் கண்டுபிடி” என்றார் காஜா என் செவிகளில்.

என் நேற்றியில்தான் வியர்க்கிறது என்றெண்ணி என் புறங்கையால் துடைக்க எத்தனிக்க, என் கைகளில் கூட வியர்த்து ஈரமாக ஜில்லென்று இருப்பதை நான் உணர்ந்தேன். கால்சட்டைப் பையிலிருந்து என் கைக்குட்டையை உருவி நெற்றி வியர்வையைத் துடைத்தேன். ஆனால், எத்தனை துடைத்தாலும் தொடர்ந்து வியர்த்தது.

‘Rubbing alcohol’ என்று பெயரிடப்பட்ட திரவத்தை மிலிட்டரிக்காரர்கள் அங்கிருக்கும் செடிகள் மீதெல்லாம் தெளித்தார்கள். தொற்று ஏதேனும் இருப்பின் அதை அழிக்க இது போல் செய்வதுதான்.

“தாவரங்களுக்கு எத்தனால் (Ethanol) பிடிக்காது” துலான் மிலிட்டரிக்காரர்களைப் பார்த்துக் கத்துவது கேட்டது.

“இது வெறும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான்” என்றார்கள் அந்த மிலிட்டரிக்காரர்கள். ‘மிலிட்டரிக்காரர்கள் இது போல் பல சூழல்களைப் பார்த்திருப்பார்கள் போல’ என்று நினைத்துக்கொண்டேன் நான்.

“இங்கே மனிதர்களாகிய நாம் வாழ்கிறோம் என்று நினைக்கிறீர்களா?.. இல்லை.. உண்மையிலேயே இங்கே வாழ்பவர்கள் தாவரங்களும் மரங்களும்தான். இங்கே மட்டுமல்ல, இந்த பூமி முழுவதுமே அவைகளின் வாழ்விடம்தான்” என்றான் துலான், இந்த முறை காஜாவை ஏளனமாகப் பார்த்தபடி.

அவனது ஆழம் நிறைந்த வார்த்தைகளில் நான் அதிர்ந்தேன். கலக்கம் கொண்டேன். அவன் ஒரு சாதாரணன். அவனிடமிருந்து அத்தனை கனமான வார்த்தைகளை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. படித்த படிப்பு, கல்வி ஆகியவற்றின் அர்த்தம் என்ன, இது எதுவும் இல்லாமலேயே ஒருவன் ஞானம் அடைவது எவ்வாறு என்றெல்லாம் கேள்விகள் தோன்றின.

அப்போது எனது தொலைத் தொடர்புக் கருவியான வாக்கி டாக்கி ஒலியெழுப்பியது. அந்த சப்தத்தைக் கேட்டு காஜா என்னருகே வந்தார். அவருக்கும் கேட்கும் வகைக்கு நான் தொடர்புக்கருவியின் ஒலியை மிகைப்படுத்தினேன்.

“முல்தான் ஹியர். ஒவர்” என்றேன்.

“பூமியின் வாயு மண்டலத்தில், விண்வெளியைத் தொட்டுவிடும் முனையில், சூரியப்புயலை, பூமியின் காந்தப்புலன் எதிர்கொள்ளும் புள்ளி ஒன்றை விண்வெளி ஆய்வுக்கூடம் கண்டுபிடித்திருக்கிறது; அந்த புள்ளியிலிருந்து மின்னூட்டத்துகள்கள் (charged particles) மிக அதிக அளவில் வெளிப்படுவது அவதானிக்கப்பட்டிருக்கிறது என்கிற தகவலை உங்களுக்குத் தெரிவிக்க ஆணை. ஒவர்” என்றது ஒரு குரல்.

“இங்கே இந்த தொழில் நுட்ப வார்த்தைகளைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு யாரும் இல்லை. இங்கே இருப்பவரெல்லாம் தொற்று நோய்ப்பிரிவு நிபுணர்கள், மிலிட்டரிக்காரர்கள். அதலால் விளக்கம் தேவை. ஓவர்” என்றார் காஜா.

“புரிந்தது. தங்களிடம் பகிரப்படவேண்டிய தகவல் என்னவெனில், அண்டார்டிக்கா அருகில் ஒரு வாயில் (portal) கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதன் வழியே, மிக மிக நுண்ணிய அளவிலான உயிர்கள் மிக மிக பூதாகாரமாக்கப்பட்டு வெளித்தள்ளப்படுகின்றன. ஒரு பிழையான வாயில் (faulty portal) வழியே அனாதையாக்கப்பட்ட ஒரு தகவல் பரிமாற்றம் (orphaned transmission) போலத் தோன்றுகிறது. ஒவர்” என்றது அந்தக் குரல்.

புருவச்சுருக்கங்களுடன் அந்தச் செய்தியை உள்வாங்கிவிட்டு, “இடைப் பரிமாணத்தில்(inter-dimensional) என்னவோ நடக்கிறது என்கிறீர்கள். புரிகிறது. தகவலுக்கு நன்றிகள். ஒவர்” என்று சொல்லி இணைப்பைத் துண்டித்த காஜா என்னிடம் திரும்பி,

“இதோ பார்! உன்னால் முடிந்தால் நோயைக் கண்டுபிடித்துச் சொல். முடியவில்லையா? விலகிக்கொள். உன் இருக்கைக்கு வருவதற்கு அனேகம் பேர் காத்திருப்புப் பட்டியலில் உள்ளார்கள். அவர்களில் தகுதியானவர் எவரேனும் கண்டுபிடிக்கட்டும். நேரம் கடந்து கொண்டே இருக்கிறது” என்றார் சற்றே எரிச்சலுடன்.

காஜாவின் வார்த்தைகளுக்கு பல அர்த்தங்கள் இருக்கின்றன. அரசு ஊதியம் பெறும் முல்தானுக்கு கடற்கரையைப் பார்த்தபடி ஒரு சொகுசு பங்களா இருக்கிறது. அதனுடன் பதினெட்டு ஏக்கரில் தோட்டம். அந்தத் தோட்டத்தில் தங்கும் விடுதி கட்டும் பணி நடந்துகொண்டிருக்கிறது. இத்தனையையும் ஒருவர் சம்பாதித்தா வாங்க முடியும்? என் இருக்கையை அவர் குறிவைத்துவிட்டார். ஒரே ஒரு சல்லிசான காரணம் போதும்; என் இருக்கையிலிருந்து என்னை அகற்றிவிட்டு தான் லஞ்சம் வாங்கிய யாருக்கேனும் என் இருக்கையை அவர் அளித்துவிடுவதற்கு. இது நான் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.

“எங்களில் சிலருக்கு தலைவலியும், உடல் வலியும் இருக்கிறது” என்றான் துலான் இடைமறித்தபடி.

யாருக்கு முதலில் பதில் சொல்வதென சற்றே திணறிவிட்டு, “இங்கே இருக்கும் எல்லோரிடமிருந்தும் ரத்தம் பெறப்பட்டு சோதித்தாகிவிட்டது. எந்த நோய்க்கான அறிகுறியும் இல்லை. வெறும் தலைவலி உடல் சோர்வை வைத்து என்ன கண்டுபிடிக்க முடியும்? அந்தத் தலைவலி, உடல் வலியெல்லாம் ஒரு தேனீர் அல்லது அலுப்பு மருந்தால் சரியாகி விடக்கூடியவைகளாக இருக்கலாம். பொறுத்திருந்துதான் மீண்டும் ரத்தப் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்” என்றேன் நான்.வேறென்ன சொல்வது?

“வேற்று உலகத்திலிருந்து பூமிக்கு வந்திருக்கும் வைரஸ்களால் எந்த நோயும் ஏற்படவில்லையாம்? நம்புகிறாற் போலவா இருக்கிறது? நாம்… இல்லையில்லை.. நீ எதையோ கவனிக்கத் தவறுகிறாய். எந்த விளைவையுமே ஏற்படுத்த வேண்டியதில்லை எனில், அவைகள் ஏன் பூமிக்கு அனுப்பப்பட வேண்டும்?” என்றார் காஜா முனுமுனுத்தபடி.

“காட்டில் எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் இருக்கும். ஒரு விளைவு இருக்கும். ஒரு நோக்கம் இருக்கும். சரியோ தவறோ, ஒவ்வொரு சின்னஞ்சிறு உயிரும் இந்த இயற்கையில் தன் பங்கிற்கு சிறிதளவேனும் பக்கவிளைவை ஏற்படுத்தவே செய்யும். எந்தப் பக்கவிளைவையுமே ஏற்படுத்தாத ஒன்று என்றால் அது எனக்கும் கூட நம்புப்படியாகவே இல்லை” என்றான் துலான்.

நான் ஒரு முனையில் நெருக்கப்பட்டது போல் உணர்ந்தேன். பழிச் சொற்களை ஏற்கக் கட்டாயப்படுத்தப்படுவது போல் உணர்ந்தேன். ஆனால், துலான் கேட்ட கேள்வியையும் புறக்கணிக்க முடியவில்லை.

கிராமத்தில் எல்லோரது ரத்தத்தையும் பரிசோதித்தாகிவிட்டது. எந்தத் தொற்றும் இல்லை. ஒரு தொற்று இருந்திருப்பின் அது ஓர் உடலில் பெருகி தன் ஆற்றலைக் காட்டத்துவங்க சற்று நேரம் எடுக்கும். அதனை இன்குபேஷன் பீரியட் (incubation period) என்போம். அதன் பிறகு ஒரு முறை எல்லோரது ரத்தத்தையும் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். அதையும் கூட முயற்சித்தாகிவிட்டது. அப்போதும் எந்தத் தொற்றும் காணப்படவில்லை என்றால் என்ன பொருள்? எத்தனை முறை தான் ரத்தப்பரிசோதனை செய்வது?

ஒருவேளை அது மனித குலம் இதுகாறும் கண்டிராத ஒரு வைரஸா என்றால் அதுவும் இல்லை. மனித குலத்திற்கு ஏற்கனவே பழக்கப்பட்ட வைரஸ்தான். உருவம்தான் மிக மிகப் பெரியது. மனித ரத்தத்தைப் பரிசோதித்ததில் அதில் புதிய, மனித குலம் கண்டிராத ரசாயனங்கள் ஏதும் இல்லை. வெள்ளை அணுக்களில் (white blood cells) எந்த விதப் பரபரப்பும் இல்லை. காய்ச்சல் இல்லை. ஒரு இருமல் கூட இல்லை.

எந்த விளைவையும் ஏற்படுத்தாத ஒரு வைரஸ் என்பது நம்பும்படியாகவே இல்லைதான். ஆனால், தொற்று இருந்திருப்பின் அதனால் பலர் பாதிக்கப்பட்டிருக்க வேண்டுமே? அப்படி இல்லாத பட்சத்தில், ரத்தத்திலும் குறிப்பிடத்தகுந்த எந்த நுண்ணுயிர்களும் தென்படாத பட்சத்தில், என்ன செய்ய?

என்னதான் செய்ய?

சுமார் முப்பது ட்ரில்லியன் செல்களில் எந்த செல்லில் என்ன பிரச்சனை என்று எப்படிக் கண்டுபிடிப்பது?

“கோவிட் சமயத்திலும் இதுதான் நடந்தது. பரவிக்கொண்டிருப்பது கோவிட் என்று எங்களுக்கு எவரும் சொல்லவில்லை. வெறும் தலைவலி, காய்ச்சல் என்று இருந்ததில் நாங்கள் எங்களுக்கு நெருக்கமான சொந்தங்களை இழந்துவிட்டோம். அந்த சரித்திரம் இந்தக் காட்டில் இனியும் நிகழ்ந்துவிடக்கூடாது. நோயின் பெயரைச் சொல்லிவிடுங்கள். இல்லையெனில், இங்கிருந்து யாரும் உயிருடன் செல்வதற்கில்லை” என்றான் துலான், கடுமையான குரலில்.

நான் சுற்றி நின்றிருந்த மலைக்கிராமத்து மக்களைப் பார்த்தேன். ஒவ்வொருவர் கையிலும் இப்போது ஒரு ஆயுதம் முளைத்திருந்தது: கோடரி, துலா, கடப்பாரை, அரிவாள், மண்வெட்டி இப்படி விதம் விதமாய் ஆயுதங்கள். காட்டில் கிடைப்பவைகளை மட்டுமே உண்டு உரமேறிய தோள்களுடனும், கடின வேலைகள் செய்து செய்து உருண்டு திரண்ட புஜங்களுடனும், தடித்த தொடைகளுடனும் அவர்கள் கொடிய காட்டு விலங்கிற்கு எவ்வகையிலும் குறைவில்லாதவர்களாகத் தோற்றமளித்தனர். தன் பலம் கொண்ட கால்களால் மிதித்துக் கொல்லத்துடிக்கும் மதம் கொண்ட யானைக் கூட்டம் போல் அம்மலைக்கிராம மக்கள் எங்களைத் தங்கள் வலுவான கைகளாலும், தொடைகளாலும் சின்னாபின்னமாக்கிவிடத் துடிப்பதைத் தெளிவாக உணர முடிந்தது.

இந்தப் பக்கம், காஜா என்னைப் பார்வையாலேயே எரித்துவிடுவது போல் பார்த்தார். அந்தப் பார்வையில் இருந்த கீழ்மை, மலினம் என் தன்னம்பிக்கையைத் தகர்ப்பது போல் உணர்ந்தேன்.

நான் என் கைகளிலிருந்த மருத்துவப் பரிசோதனைக் கோப்புக்களை ஒருமுறை கவனமாகப் பார்த்தேன். அவற்றில் புதைந்திருந்த தகவல்களை, புள்ளிவிவரங்களை, அர்த்தங்களை நான் உள்வாங்கிய நோடியில், எனக்கு அதுவரையில் கிடைக்காமல் இருந்தது, அகப்படாமல் இருந்தது, கிடைத்ததைப் போல், அகப்பட்டதைப் போல் உணர்ந்தேன்.

இறுதியில், “ஆம். என்ன நோய் என்று கண்டுபிடித்துவிட்டேன்” என்று உரத்து அறிவித்தேன்.

காஜா, அந்த மலைக்கிராம மக்கள், மிலிட்டரிக்காரர்கள், துலான் என்று அனைவரும் என்னைத் திரும்பிப் பார்த்தார்கள். நான் சொல்லப்போகும் நோயின் பெயரைக் கேட்பதில் அவர்கள் அனைவருக்கும் அத்தனை ஆர்வம் .

நான் ஒரு முறை ஆழமாய் மூச்சிழுத்துக்கொண்டேன்.

“நோயின் பெயர் சந்தேகம். இந்த நோய் பரவக்கூடியதும், உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியதும் ஆகும் என்றே கணிக்கிறேன் ஏனெனில், இது பீடித்த பிறகு எல்லோரும் ஒருவரையொருவர் கொலை செய்யக்கூடத் தயாராகிவிட்டார்கள். அப்படியானால் இது உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியது தானே. சந்தேகம் நிச்சயமாக ஒரு கொடிய நோய்தான். இல்லையா?” என்றேன் நான்.

-ramprasath.ram@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button