துக்கத்தின் மெல்லிய ஓசை
(கவிஞர் மதாரின், ‘வெயில் பறந்தது’ தொகுப்பினை முன்வைத்து)
மதார் 2021-ம் ஆண்டு குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது பெற்ற இளம் கவிஞர். தனித்துவம் மிகுந்த பங்களிப்புக்கென இளம் கவிஞர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. இலக்கியத்தில் அதிகமும் போலி செய்யப்படக்கூடிய வடிவம் கவிதைதான் என்றொரு கூற்று உண்டு. ஆகவே, ஒரு இளம் கவிஞர் ‘தனித்துவம்’ வாய்ந்தவர் என்பதை தன் முதல் தொகுப்பில் நிறுவுவது கவிதையில் சற்று கடினம். சிறுகதை, நாவல் போன்ற வடிவங்களைவிட கவிதையின் தற்சுட்டுப் பரப்பு (frame of reference) ரொம்பவும் குறைவு. ஒரு கவிதையை வைத்துக் கொண்டு கவிஞனின் பண்பாட்டு அடையாளத்தை வாசகர் உய்த்துணர முடியாது. கவிதையில் ஒவ்வொரு சொல்லும் அதீதமான எடை கொண்டு விடுகிறது. மிக விரிவான சாத்தியங்களையும் கவிதையின் சொற்கள் பெற்றுவிடுகின்றன. மிகுந்த பொறுப்புடனும் கவனத்துடனும் வாசிக்க வேண்டிய வடிவமாக கவிதை மாறிவிடுகிறது. அத்தகைய எதிர்பார்ப்புடனும் கவனத்துடனும் அணுகி வாசிக்க நூலினைத் திறக்கும்போது மதாரின் இக்கவிதை நம்மை வரவேற்கிறது.
உயரம் குறையக் குறைய
உயரம் கூடுவதைக்
காண்கிறது
கிணறு
முதல் வாசிப்பிலேயே முழுக்கப் புரிந்து விடுவதாகத் தோன்றும் இக்கவிதையை வைத்துக் கொண்டு யோசித்தால் சற்றுநேர யோசனைக்குப் பிறகே கிணற்றின் கண் அதன் மேற்பரப்பில் – அதாவது முகத்தில் – இருப்பதாக இக்கவிதை சொல்கிறது என்று உணர முடிகிறது. கிணற்றின் உயரம் குறைவதென்பது நீர் வற்றுவதா அல்லது நீர் ஏறுவதா? எப்படி வாசித்தாலும் சரியாகப் பொருந்துகிறது. ஆனால், இந்த விசாரங்கள் எல்லாம் மதாரின் கவிதைகளை மூன்றாவது முறை படிக்கும்போதே என்னுள் எழுகின்றன என்பது என் கவிதை வாசிப்பு குறித்த மெல்லிய அவமான உணர்ச்சியையும் அளிக்கிறதுதான்! அது போகட்டும்.
மதாரைப் பற்றிய தமிழ் விக்கிப் பதிவு இப்படிச் சொல்கிறது.
/மதார் அரசியல் தீவிரம், மனிதர்களின் துயரம், கசப்பு ஆகியவற்றிலிருந்து விலகி குழந்தைகளின் கள்ளமின்மை நோக்கி தன் கவிதைகளை விரித்தவர். வயது வந்த மனிதர்களின் எந்த இடையூறுமின்றி குழந்தையும், தெய்வமும் சந்தித்து விளையாடும் ஆன்மீகம் மதாருடையது./
ஏறத்தாழ இவ்வரிகளோடு உடன்படும் பதத்தில் மதார் கவிதைகள் முதல் வாசிப்பில் நமக்குத் தென்படுகின்றன. பலூனில் காற்று வெளியேறும் ஓசை, வண்ணக் கோலத்தில் புரளும் ஆடு என்று அவர் கவிதையின் பாத்திரங்களும் ஒலிகளும் சிறுவர் உலகம் போலத்தான் தெரிகின்றது. ஆனால், திடீரென /பைத்தியம் தெளிபவனின்/
மண்டையில் நிகழும்/ மாற்றங்களுக்கு/ ஒப்பானது அது/ என்று ஒரு கவிதையை முடிக்கிறார். ஆனால், இந்தச் சலனம் மீண்டும் எங்கோ ஓடி மறைகிறது . டெய்ரி மரம், கர்ப்பிணி பெண்ணுக்கான பிறந்தநாள் பரிசு என்று குழந்தைத்தனம் மிளிரும் கவிதைகள் இத்தொகுப்பில் தொடர்ந்து இடம்பெறுகின்றன என்பது உண்மைதான். ஆனால், இக்கவிதைகள் அளிக்கும் இனிய சித்திரங்களைத் தாண்டி மதாரின் கவிதை உலகம் வேறு சில வலுவான புள்ளிகளையும் கொண்டுள்ளது என்பதே இத்தொகுப்பினை கவனிக்கத் தகுந்ததாக மாற்றுகிறது.
காட்சியின் வழியாக கதைத்தன்மை அடையும் கவிதைகளை மதார் எழுதி இருக்கிறார்.
/ராட்டினம் ஏறும்போது /செருப்பு வியக்கிறது/ பறவைகள் காலணி அணியும்/ நாள் வந்துவிட்டது/ இறங்கும்போது நினைக்கிறது/ சோம்பேறிப் பறவை இடைவிடாத சுற்றுகளில்/ முடிவு செய்கிறது /கிறுக்குப் பறவை/.
அதேநேரம் கவிதையில் எவ்விதக் கதையுணர்ச்சியும் இல்லாமல் வெறும் காட்சியையும் மதாரால் வலுவான கவிதையாக மாற்றிவிட முடிகிறது.
/முகமறியா காற்றில்/என்ன அழகைக் கண்டு /இப்படிக் கொஞ்சிக் கொஞ்சிப் பறக்கிறது/வண்ணத்துப்பூச்சி/
இக்கவிதையில் இருப்பது ஒரு கேள்வி மட்டும்தான். ஆனால், அக்கேள்விதான் வண்ணத்துப்பூச்சியின் பறத்தலுக்கு அர்த்தத்தை வழங்குகிறது. மதார் கவிதைகளின் இப்பண்பு அவருடைய அடிப்படை பலம் என நினைக்கிறேன். காட்சியை ஒரு இனிய கதையாகவும் வெறும் காட்சியாகவும் கவிதைக்குள் நிறுவும் தன்மை. அவருடைய கவிதைகளில் இந்த பலமே பல நேரங்களில் ‘குழந்தைமை’ என்ற வேடமிட்டுக் கொள்கிறது. இக்கவிதை ஒரு உதாரணம்.
/வாசல் தெளிப்பவள்/மழையாக்குகிறாள்/
நீரை/ வாளி வகுப்பறைக்குள்/ இறுக்கமாக அமர்ந்திருந்தவை /இப்போது தனித்தனியாக/ விளையாடச் செல்கின்றன/
வாசல் தெளிக்கும் காட்சியை ஒரு பருப்பொருளின் வடிவத்தில் இருக்கும் நீர் தன் ஆதார வடிவத்திற்கு திரும்புவதாக ஒரு குழந்தை கற்பனை செய்ய முடியும் என்று நம்புவது நல்ல கற்பனைதான். ஆனால், இக்காட்சியை இவ்வாறாக விளக்கமளிக்க சாதுர்யம் தேவை. சாதுர்யம் என்று இங்கு குறிப்பிடுவது தந்திரத்தை அல்ல. ஒரு மனநிலையை. அந்த மனநிலை மதாருக்கு வாய்த்திருக்கிறது. அதன் ஒரு பாவமாகவே அவர் கவிதைகளின் கள்ளமின்மை வெளிப்படுகிறது. கள்ளமின்மை என்ற சொல் நேரடி அர்த்தத்தில் புரிந்துகொள்ளப்படக்கூடாது என்பதற்காகவே இவ்வளவு சொன்னேன்!
அடுத்ததாக, மதாரின் கவிதைகளில் தொந்தரவூட்டும் அம்சங்கள் ஆழத்தில் பொதிந்துள்ளன என்றே எனக்குத் தோன்றுகிறது. ரசிக்கும்படியான அவருடைய கவிதைகள் இந்தத் தொந்தரவை நோக்கி வாசகனை இழுக்கும் ஒரு அழைப்பு என்றே கொள்ள முடியும். அதாவது அவர் கவிதைகளில் பொதிந்துள்ள தொந்தரவூட்டும் அம்சத்தின் தன்மை எவ்வாறானதென்றால் , கொஞ்சம் ஊன்றி கவனிக்கத் தவறினாலும் எந்தத் தொந்தரவும் செய்யாமல் நல்ல பிள்ளையாய்க் கடந்து போய்விடும்!
‘அதிகாலையின் இசை’ என்றொரு கவிதை. ஆற்றுக்குள் அந்த இசை கேட்கிறது. நதியை இசையுடன் தொடர்புறுத்துவது இனிதானதுதான் இல்லையா? ஆனால், அந்த நதியில் ஒரு நாய் செத்து மிதக்கிறது. தற்கொலைகள் அரங்கேறுகின்றன. அவையும் நதியின் அதிகாலை இசையின் பகுதி ஆகிவிடுகின்றன என்று இக்கவிதை சொல்கிறது. வாசகன் வேதாந்தியாய் இருக்கும்பட்சத்தில் இவ்வுருவகத்தை ரசிக்கலாம். ஆனால், அவர்களாலும் முடியாது என்றுதான் தோன்றுகிறது. ஏனெனில் இதை நம்மிடம் சொல்லும் கவிதை சொல்லி தானும் அந்த நதியின் இசையின் பகுதியாக – அதாவது தற்கொலை செய்து கொள்ள – மாறவே அங்கு வந்து நிற்கிறார்!
இன்னொரு இடத்தில் ஒரு கவிதை இப்படிச் சொல்கிறது.
/எவ்வளவு வேகமாகச் /சென்றாலும் வளர்ந்த மூளையால் /ஒரு வட்டத்தைப்/ போட்டுவிட முடியவில்லை/
பெண்டுலம் போல மூளை அங்கும் இங்கும் ஊசலாடுகிறது. வட்டமும் இயல்வதில்லை. இயக்கமின்மையும் இயல்வதில்லை. ஏறத்தாழ அசோகமித்திரனின் படைப்புலகை புரிந்து கொள்ளும்படி இருக்கிறது இக்கவிதை!
விபத்தில் கால்களை இழந்து ஜன்னலோரம் அமர்ந்திருப்பவனின் நகரத்தைப் பார்க்க முடியாத ஏக்கம் உச்சிமரக் கிளையின் பறவையின் கண்கள் வழியாகத் தீர்வதை மதார் எழுதுகிறார். எவ்வளவு ஆழத்திலிருந்து எவ்வளவு உயரத்துக்குப் போகிறது இக்கவிதை! இதே மனநிலைதான் துக்கத்தை ஒரு பரிசுப்பொருள் என்கிறது. பிறந்த குழந்தை என்கிறது. துக்கத்தின் பணி பிணியறுப்பு என்கிறது. இக்கவிதைகள் துயரத்தை ஏற்கச் சொல்லவில்லை. மாறாகக் கொண்டாடுகின்றன! சாமான்ய நோக்கில் இதுவொரு அராஜகம். ஆனால், இது மாதிரியான அராஜகம் கொஞ்சமும் இல்லாமல் இருப்பவன் ஒரு கவிஞன்
மதாரின் கவிதைகளில் கதறல்களோ ஓலங்களோ இல்லைதான். ஆனால், நிலத்தடி நீரோட்டம் போல துக்கத்தின் மிக மெல்லிய ஓசையை இக்கவிதைகளில் கேட்க முடிகிறது. ஆழத்தில் இருப்பதாலும் மிகக் குறைவாகவே எழுதப்பட்டுள்ளதாலும் மதாரின் வாழ்க்கைப் பார்வை எத்தகையது, எந்தெந்தக் காரணிகளால் முடையப்பட்டது என்பதை விவாதிப்பது அவசியமாகிறது. இந்தக் கேள்வியுடன் மதாரின் கவிதைகள் அணுகப்பட்டால் மேலுமதிகமாக அவரைப் புரிந்து கொள்ள முடியும் என்று தோன்றுகிறது.
தொடரும்…