
காலப்பிராந்தியத்தின் சிமிட்டலில்
அதே கண்கள் அதே கண்களென பார்த்துக் கொண்டேயிருந்தன
மிக ரகசியமென எப்போதோ சொல்லப்பட்ட இசைக் குறிப்புகள்
வெண் பரப்பினூடாக வழிந்து குளிர்மையின்
உள்ளுறை வெப்பங்களில் நழுவிக்கொண்டிருந்த
நூற்பவினைஞனின் நுண்மை விதிகளின்படி
மேற்கொண்டு நெய்யப்படுவதற்கான தறிகள்
மரங்களை செடிகளாக நடவு செய்த
காலத்தின் சிமிட்டல் ஓர் பிரஞ்ஞை
இரு வேறு கண்கள் வெவ்வேறு கண்களின் காலத்திற்குள்
நுண்மை விதிகளின் தறிகளை திண்பதற்கு
ஊசல் விதியின் இருமடி எண்களை ஏவிவிட்டன
எப்போதோ சொல்லப்பட்ட கதைகளின் சொற்கள் சூழ
இருவேறு கண்களைத் தவிர்த்த
மற்ற வெவ்வேறு கண்கள்
செடிகளின் விதைகளில் வாசத்தை பதியம் செய்தன
காலம் முன்னும் பின்னும்
மேலும் கீழும் பக்க வாட்டிலுமாக
பரிமாணங்களின் அசாத்திய குடுவைகளை உருட்டும்
உருட்டுக்காரனின் கைகளில் நசுங்கிப்போயிருந்தன
சில கண்கள் அவனுடையதாயிருந்தன
சில கண்கள் அவனுடையதாயிருந்து வேறொன்றாகியிருந்தது
சில கண்கள் அவனெதிர் புறமிருந்தன
சில கண்கள் வேறெங்கோ பறந்த பறவைகளின் கண்களாயிருந்தன
இந்த கண்கள் மிக மோசம்
மிக தைரியமாய் எல்லாவற்றையும் பார்க்கின்றன
சிலவற்றை பெரும்பாலும் பார்ப்பதில்லை
எப்படியோ என்றோ சொல்லப்பட்டக் கதைகளின் சொற்கள்
ஒரு பாம்பை உருவாக்கியிருந்தன
இந்த வெவ்வேறு கண்கள்
வேறு கண்களின் குடுவைக்குள் அடைக்கப்படும் வரை
பாம்பின் நெளிதலை பார்த்தவாறே இருக்கவேண்டியதுதான்
சரி உருட்டுக்காரனின் கண்கள்
இப்போது ஏன் கதைகளை தின்றுக்கொண்டிருக்கின்றன?