சிறுகதைகள்

ஈருயிர் ஒா் வாழ்க்கை

தினேஷ் பழனிராஜ்

“நீங்க ரொம்ப டிஸ்டா்ப் ஆகியிருக்கிங்க செல்வம், அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். எதுவா இருந்தாலும் யோசிச்சு முடிவெடுங்க. யோசிச்சு சொல்லுங்கள்” இப்படி சொல்லி தற்போதைக்கு செல்வத்தை தட்டிக் கழித்தார் சூப்பா்வைசா்.

செல்வம் ஆம்புலன்ஸ் டிரைவா், ராசியில்லா டிரைவா். அவன் நண்பர்களை பொருத்தமட்டில் செல்வம், எமனின் பினாமி. நான்கைந்து வருடத்திற்கும் மேலாக இந்த வேலையில் பணிபுரிபவன். திடீரென்று ஒன்றும் அவன் வேலையை விட்டு நிற்பதற்கு முடிவு செய்திடவில்லை. நீண்ட நாளாக அவனுக்குள் கிடந்த குழப்பம். அவன் மேல் அவனுக்கே இருந்த அவநம்பிக்கை, அவன் நம்பித் தொலைக்கிற துரதிர்ஷ்டம் இவையெல்லாம் நேற்று அதன் வேலையைக் காட்ட, பொழுது சாய்வதற்குள் விடுவிடுவென்று போய் சூப்பா்வைசரிடம் “நான் வேலைய விட்டு நிக்கிறேன் சார்” என்று சொல்லி விட்டான். அவரும் ஏதேதோ சொல்லி அவனை சமாளித்து அனுப்பி வைத்தார். செல்வமும் வேறு வழியின்றி எழுந்து வந்துவிட்டான்.

இரவு முழுவதும் தூக்கமில்லாமல் கொட்டக் கொட்ட ஆந்தை போல் விழித்திருந்தான், கடந்தக்கால நினைவுகள் எல்லாம் வெறி பிடித்த ஓநாய் கூட்டத்தைபோல அவனுக்குள்ளே ஊளையிட்டன. உணர்ச்சிப் பிழம்புகள் கட்டுக்கடங்காமல் ஊற்றெடுக்க அறிவு அகப்பட்டுக் கொண்டு முற்றிலும் செயலிழந்தது. அவன் செவி கேட்ட வசவெல்லாம் ஆளில்லாத அறைக்குள் அசரிரீயாய் ஒலித்தது. குறிப்பாக, நேற்று டீக்கடையில் அவன் நண்பா்கள் பேசிய பேச்சுக்கள் இரண்டு காதுகளுக்குள்ளும் கேட்டுக் கொண்டே இருந்தன.

“டேய் மாப்ள, என் பக்கத்து வீட்டுக்காரன் இருக்கானே அந்த நொண்டி கிழவன், அவன் தொல்லை தாங்க முடியலடா, படுத்துறாண்டா ஏதாவது பண்ணனும்டா  அவன”.

“விடு மாப்ள என்னிக்காவது கிழவன் உடம்பு நோவுல படுக்காமலா போயிடப்போறான், அப்ப தூக்கிட்டுப்போக 108க்கு போன் அடிப்பானுங்க; நாம நம்ம செல்வத்த அனுப்பி வெச்சிருவோம். கிழவன் க்ளோஸ்”

வெடித்துச் சிரித்தார்கள் எல்லோரும், செல்வத்தை தவிர; செல்வத்திற்கு ஒவ்வொரு மடக்கு டீயும் விஷம் போல் இருந்தது. அதில் ஒருத்தன் உச்சத்திற்கே போனான்.

“நேத்து பேப்பா் படிச்சிங்களாடா? இன்னும் பத்து வருஷத்துல நம்ம சனத்தொகை சீனாவ மிஞ்சிருமாம். . .  நம்ம சனத்தொகைய குறைக்க எங்கிட்ட ஒரு யோசனை இருக்கு என்னானு சொல்லுங்க பாப்போம்?”.

“ரேஷன் கடையில கார்டுக்கு பத்து பாக்கெட் நிரோத் தர சொல்லுவியா?”

“அட ச்ச்சீ”

“பின்ன எவனுமே கல்யாணம் பண்ணக்  கூடாது குழந்தை பெத்துக்கக் கூடாதுனு செல்போன் டவா் மேல ஏறி போராட்டம் பண்ணப் போறியா?”

“அட போடா. . . . இதெல்லாம் ஒரு யோசனையா? நான் என்ன பண்ணுவேந் தெரியுமா?, நம்ம செல்வத்த ஊா் ஊரா ஆம்புலன்ஸ்ல ஆள் ஏத்திக்கிட்டு சுத்துச் சொல்லுவேன் ” என்று அவன் குலுங்கி குலுங்கி சிரிக்க, செல்வத்திற்கு அவனை உயிரோடு கழுவில் ஏற்றியது  போல இருந்தது. கண்கள் கலங்கியது மனது சொல்லியது, இந்த வேலை இனி வேணாம்; என் ராசியால இனி எந்த உயிரும் போகக் கூடாது; இந்தக்கிண்டலுக்கும் கேலிக்கும் இனி ஆளாக கூடாது”

செல்வத்தைப் பெரும்பாலும் யாரும் ராசி இல்லாதவனென்று இப்பொழுதெல்லாம் சொல்வதில்லை; அப்படி ஒரு எண்ணம் அவன் நெஞ்சில் ஈட்டி பாய்ந்ததுபோல் பாய்ந்து ஆழமாக இறங்கியவாறே நெஞ்சிலிருந்தது. செல்வம் பிறந்தபொழுதே அவன் அம்மா மூச்சைவிட்டாள். அவன் போன கொஞ்ச காலத்திலெல்லாம் அவன் அப்பனும் பின்னாலேயே போய்விட்டான். குடும்பம் கை தவறி விழுந்த கண்ணாடியாய் சிதறிப்போனது. அன்றிலிருந்து “நல்லா இருந்த குடும்பம் புள்ள பொறந்த நேரம் இப்படி சிதைஞ்சு போயிருச்சப்பா” என்று ஊா் உலகம் தம்பட்டமடித்தது. விவரமறியாத குழந்தையாக இருந்தபோதே செல்வம் நொறுங்கிப்போனான். மனம் நொந்துபோனான், தனிமைப்படுத்தப்பட்டான். அவன், அவன் தயவிலேயே வளர்ந்தான். செல்வத்தை ராசி இல்லாதவன் என்று சொல்லிய வாய்களெல்லாம் இப்போ இருக்கிற இடம் தெரியவில்லை. ஆனாலும் அவா்கள் சொல்லிய சொல்லெல்லாம் செல்வம்  சிலுவையாய் சுமக்கிறான்.

ஏன்டா பொறந்தோமென்று வெறுப்பில் இருந்த செல்வத்தை போலவே தான் வானமும் ஏன்டா விடிகின்றோம் என்பது போலவே விடிந்தது. செல்வம் தீர்க்கமாக ஒரு முடிவெடுத்திருந்தான். சூப்பா்வைசரை பார்க்கக் கிளம்பிப்  போனானான்.

வெறிச்சோடிக் கிடந்தது ஆம்புலன்ஸ் செட்; அதுல இரண்டே இரண்டு ஆம்புலன்ஸ் மட்டும்தான் மீதமிருந்தது. அந்த இரண்டில் ஒன்று இப்போது வெளியேறியது; அதை கந்தசாமி ஒட்டி  வந்தான். செல்வத்தை பார்த்ததும் நிறுத்தினான்.

“பைபாஸ்ல பிரைவேட் பஸ் ஆக்சிடெண்ட் மாப்ள எல்லாரும் அங்கதான் போய்கிட்டிருக்கோம். சீக்கிரம் வண்டிய எடுத்துட்டு வா”

“இல்ல சாமி  அது. . . .”

“டேய் சும்மா யோசிக்காம வா, வந்து ஒரு நாலு அஞ்சு பேர ஏத்திக்கிடேன்னுவை சீக்கிரம்  செஞ்சுரி அடிச்சிரலாம்ல” என்று நக்கலடித்துவிட்டுப் போனான் கந்தசாமி.

இந்த உலகத்தில் இத்தன கோடி மனுச மக்கள் இருக்கின்றதே ஒருவரின் மீது ஒருவா் அன்பு செலுத்தவும் அனுசரித்து ஆதரவாய் பாசம் காட்டி வாழத்தானே!  அப்படியா இருக்கின்றார்கள் மனிதர்கள். “மனுசன்லாம் மண்ணோட மண்ணா மக்கி ரொம்ப நாள் ஆச்சு இந்த நாட்ல” உள்ளுர முனகிக்கொண்டே நடந்தான்.

“வாங்க செல்வம் என்ன முடிவு பண்ணிருக்கீங்க” எடுத்த எடுப்பிலேயே கேட்டார் சூப்பா்வைசா்.

“நல்லா யோசிச்சுப் பாத்தேன் சார், நான் ரிலீவ் ஆகிக்கிறேன் சார்”

“எதுக்கும் ஒரு ரெண்டு நாள்  போகட்டுமே செல்வம்; திரும்பவும் யோசிச்சு பாருங்க”

“இல்ல சார்….. அது வந்து” ஏதோ சொல்ல முனைந்தான் செல்வம் தொலைபேசி தொந்தரவு செய்தது. சூப்பா்வைசர் எடுத்து பேசினார். பரபரப்பானார், காகிதத்தில் குறிப்பெடுத்துக் கொண்டார்.  அழைப்பைத் துண்டித்தார். வேகமாக எழுந்து ஓடினார் அலுவலாய் இருந்த ஒரு செவிலிப் பெண்ணை அழைத்து ஆம்புலன்ஸில் ஏற சொன்னார். பின் அவர் அலுவலகத்திற்கு வந்தார்.

“செல்வம் கிளம்புங்க, இதான் அட்ரஸ். எமர்ஜென்சி, எவ்வளவு சீக்கிரம் போக முடியுமோ போயிடுங்க, நர்ஸ் அம்புலன்ஸ்ல வெய்ட் பண்ணுறாங்க, கிளம்புங்க” பறக்கடித்தார்.  செய்வதறியாமல் தயங்கி நின்றான் செல்வம்.

“சார் வேற யாரது போக சொல்லுங்க சார். என்னால. .. .” இழுத்தான்.

“அர்த்தமில்லாம பேசாதிங்க, மொதல்ல கிளம்புங்க செல்வம் வந்து பேசிக்கலாம்”

“உங்களுக்கு எப்படி? சொல்லி புரியவைக்கிறதுனு எனக்கு தெரியலை சார் என்ன மன்னிச்சிருங்க; என்னால முடியாது சார்” என்று மறுத்தான், திரும்பி முதுகைக் காட்டிக் கொண்டு நின்று நகத்தை கடிக்கத் தொடங்கினான்.

சூப்பர்வைசா் யோசித்தார் பிறகு “ராஜாவ அனுப்பறேன், ஆனா நீங்க கூட போங்க அவன் புதுசு”

யோசித்தான் செல்வம்; அவனுக்கு வேற வழி இல்லை என்பது ஊர்ஜிதமாய் தெரிந்தது. அரைமனதாய் ஒத்துக் கொண்டு முகவரி வாங்கிக்கொண்டு கிளம்பினான்.

தயங்கி, தயங்கி ஆம்புலன்ஸில் ஏறினான். முதல் முதலாய் ஸ்டேரிங்கை தொடாமல் ராஜாவை ஓட்ட விட்டு அவனருகில் அமர்ந்திருந்தான். பின்னால் செவிலிப் பெண் ஒருத்தி இருப்பதை கண்ணாடி வழியாய் பார்த்தான். ராஜா சாவி போட்டு வண்டியை செலுத்தினான்.  “இதான் என் கடைசி வேலை” செல்வம் மனதுக்குள் சொல்லிக் கொண்டான். சைரன் கத்தத் துவங்கியது, ஆம்புலன்ஸ் சீறிப் பாய்ந்து சென்றது தார்ச்சாலையில், பத்து பதினைந்து நிமிடத்திற்குள் சூப்பர்வைசர் குறித்துக் கொடுத்த இடத்தை சென்று சேர்ந்தது.

பின்கதவை திறந்துக் கொண்டு செவிலி வேக வேகமாக வீட்டுக்குள் ஓடினாள். ராஜாவும் செல்வமும் ஸ்ரெட்ச்சரை தூக்கிக்கொண்டு ஓடினார்கள். உள்ளே வலியில் துடித்துக் கொண்டிருந்த கர்ப்பிணியைப் பார்த்த செவிலிபெண் நிலைமையை உணர்ந்தாள். தூக்கிச் செல்லுமாறு சைகை செய்ய செல்வமும் ராஜாவும் கா்ப்பிணியைத் தூக்கிக் கொண்டுப் பக்குவமாக நடந்தார்கள். செவிலி கைபேசியை காதில் வைத்துக் கொண்டு அவசரமாக வெளியே ஓடினாள். அவள் பின்னே கர்ப்பிணியைத் தூக்கிக் கொண்டு வந்து கொண்டிருந்தார்கள் இருவரும், அவளை பெற்ற தகப்பனும் தாயும் பின்தொடர்ந்தார்கள். அவர்கள் பின்னே செல்ல எத்தனித்த கணவனை அவன் தாய் ஒரு முறை முறைத்தாள்; அவன் கைகளைப் பிசைந்துக் கொண்டு  அப்படியே நின்றுவிட்டான். அவனது கால்கள் போக வேண்டுமென்றன; ஆனால், தாய்க்கு பயந்த அவன் அதற்கு மெனக்கெடவில்லை. துடிதுடித்து நின்று கொண்டிருந்தான். எல்லோரும் வாசல் தாண்டுவதற்குள் புள்ளதாச்சியின் மாமியா காட்டேரியாக கத்தினாள்.

“உம் மக புள்ள பெத்தா சொல்லிவிடுங்க, இல்லையா அப்படியே கூட்டிப்போயிருங்க. எம் புள்ளைக்கு கொர இல்லாத பொண்ணா பாத்து நான் கட்டி வெச்சிக்குறேன்” இரக்கமில்லாமல் ஏசினாள் அந்த ராட்சசி. இடி விழுந்த பச்சைமரமாய் கருகிப் போனது புள்ளத்தாச்சியைப் பெற்றவா்களது மனம். எதுவுமே சொல்லவில்லை அவா்கள், அழுதுக்கொண்டே ஆம்புலன்ஸில்  ஏறினார்கள்.

ஆம்புலன்ஸ் கிளம்பியது கர்ப்பிணி துடிதுடித்துக்கொண்டிருந்தாள். சைரனை கடந்தும் அவள் கதறல் கேட்டுக் கொண்டே இருந்தது. பெத்த மகள் கதற கதற கண் கலங்கி அவள் கை பற்றி மனம் நொறுங்கி வந்தார்கள். அவள் அப்பனும் ஆத்தாளும் ஆசை மகள் உயிரும் வாழ்க்கையும் அந்த ஆம்புலன்ஸில் ஊசலாடிக் கொண்டிருந்தது.

சங்கவி பேறுவலி எடுத்துத் துடித்துடிக்கும் கர்ப்பிணி. அவள் பெற்றோர்களின் நீண்டகால தவத்திற்கும், சங்கமத்திற்கும் கிடைத்த வரன், விடை. காதலித்து தன் காதலனையே கரம் பிடித்தவள். நீண்ட காலமாக சங்கவிக்குள்ளே எந்த உயிரும் சங்கமிக்கவில்லை. திருமணமாகி பல வருடங்கள் கடந்தும் வாரிசு பெற்று தராத பெண் எப்படியெல்லாம் ஊா்ப்பார்வைக்குத் தெரிவாள் என்பதைசொல்லவா வேண்டும்? ஊரெல்லாம் ஆயிரம் வழி சொன்னது; பாவமவள் ஒவ்வொரு முறையும் சங்கடத்தில் நெளிவாள். வேதனைக்குள்ளாவாள். கோவில் கோவிலாக ஏறி இறங்கியதில் கடவுள் இவள்பால் கொண்ட கருணையின் எச்சத்தினாலோ, மருத்துவமனை மருத்துவமனையாக ஏறி இறங்கியதில் மருத்துவர்கள் பார்த்த வைத்தியத்தின் புண்ணியத்தாலோ வருடங்கடந்து ஒரு உயிர் அவள் வயிற்றில் தங்கியது.அதுவும் சொற்ப நாள் கூட நீடிக்கவில்லை. கொடுத்த கண்களை கடவுளே பிடிங்கிக் கொண்டது போல இருந்தது அவர்களுக்கு. சங்கவி உருக்குலைந்து போனாள். ஊரார் வாய்க்கெல்லாம் அவலாகிப் போனாள். ஒருமுறை இருமுறை அல்ல நான்கு முறை கரு தங்கி கரு கலைந்தது. கரு தங்கி கரு கலைந்ததில் சங்கவியோடு அவள் குடும்பமே கதி கலங்கிப்  போனது. நிலைகுலைந்துப் போனது. இனி எந்த கருவும் தங்காது; தங்கினால், சங்கவியின் உயிர் அவள் உடலில் தங்காது என்றெல்லாம் எச்சரித்தது நவீன மருத்துவம். ஜோசியமும் கூட அதன் கடமையை தவறாமல் ஆற்றியது. “உங்க குடும்பத்துக்கு வம்ச விருத்தி இல்ல. உங்க மருமகளுக்கு புத்திரப் பாக்கியம் இல்ல” என்றெல்லாம் போகிற போக்கில் பொய்களை அள்ளி வீசியபடியிருந்தார்கள் ஜோசியக்காரர்கள். இது போன்ற தருணங்களில்தான் மனிதனுக்கு வாழ்க்கை குறித்த நம்பிக்கையும் கனவுகளும் நீர்த்து போகின்றன. சங்கவியிடம் இறுதியாக உறுதியாக மிச்சமிருந்தது அவளும், அவள் மீது அவள் கணவன் கொண்ட காதலும்தான். அந்த மிச்சத்தில், காதலில், கூடலில், சங்கமத்தில் ஒரு உயிர் வந்து குடியேறியது அவளுக்குள். அந்த ஈருயிரும் ஒரு வாழ்கையும்தான் இப்போது ஆம்புலன்ஸிற்குள் துடிதுடித்துக் கொண்டு தவிக்கிறது, இந்த உலகில் உயிர் வாழ்ந்திட.

வேகமாக விரைந்த சென்றுக் கொண்டிருந்த ஆம்புலன்ஸை நீண்ட வாகன வரிசையை கண்டு அதிர்ந்து நிறுத்தினான் ராஜா. அதிலிருந்து சன்னலின் வழியாக எக்கி “எப்பா. . . . என்னப்பா அங்க பிரச்சனை”

“ஆளுங்கட்சிய கண்டிச்சு  எதிர்கட்சிகாரனுங்க திடீர்னு சாலை மறியல் பண்றானுக; ஒரு இன்ச் கூட நகராது வண்டி”

என்ன செய்வதென்று தெரியாமல் ராஜா செல்வத்தை பார்த்தான். துன்பம் வரும் வேளையில் மனிதனின் கண்களுக்கு கடவுள் தெரிகிறான். துன்பத்தோடு துன்பம் வந்து சேர்ந்து கொண்டிருக்கும் போது மனிதனின் கண்களுக்கு அதே கடவுள் கொலைக்காரனாய், மோசக்காரனாய், நாசக்காரனாய் தெரிகிறான்.உண்மையில் யார்தான் அவன் அல்லது அவள் அல்லது அது.

“பைபாஸ் போக வேற ஏதாவது வழி இருக்கா”

“இப்புடியே நீங்க வந்த வழியா திரும்பிபோனா கொஞ்ச தூரத்துல வலதுபக்கமா ஒரு சின்ன ரோடு வரும் அதுல ஒரு ஒன்னரை மைல் போனீங்கனா நாலு ரோடு பிரியும் அதுல வலதுபக்க ரோட்ல நேரா எங்கயும் திரும்பாம நேரா போனிங்கனா ஒரு பழைய ஆத்துப்பாலம் அத தாண்டி கொஞ்ச தூரம் போனா இந்த ரோடு போய் சேர்ற பைபாஸ பிடிச்சிரலாம்”

ஒரு அடி கூட நகராத முன்னேற இயலாத ஆம்புலன்ஸ் வந்த பாதையில் திரும்பியது வேகமாக சென்றது. அதிவேகமாக காற்றைக் கிழித்துக் கொண்டு நெடுஞ்சாலையில் சென்றது. கர்ப்பிணியின் கதறல் சத்தம் எல்லோர் மனதிலும் அழுத்தத்தையும், அச்சத்தையும் அதிகரித்தபடியே இருந்தது. அவள் பெற்றோர்களின் கைகள் ஏதேதோ கடவுளைக் கும்பிட்டன. அந்த சாலையில் எவனோ முன்பின் தெரியாத ஒருவன் சொல்லிய  திசையை நம்பி ஆம்புலன்ஸ் அந்ததிசையில் சென்று கொண்டிருந்தது. நால்ரோட்டை அடைந்தது வலதுபக்கம் திரும்பியது, நேராக சென்றது நீண்ட தூரம் சென்றும் அந்த ஆத்துப்பாலம் வரவில்லை செல்வம் யோசித்தான் அவன் உள்ளுணா்வு ஏதோ உணர்த்தியது. சாலையோரமிருந்த ஒரு பெட்டிக்கடையில் நிறுத்தச் சொன்னான். அங்கு விசாரித்ததில் அவர்கள் இடபக்கம் திரும்பியிருக்க வேண்டுமென்று தெரிந்தது. அவா்கள் தவறான வழியில் பயணிக்க வைக்கப்பட்டிருந்தார்கள். பின், சுதாரித்து திரும்பியது ஆம்புலன்ஸ். முன்பைவிட இன்னும் வேகமாக இன்னும் இன்னும் வேகமாக விரைந்து சென்றது ஆம்புலன்ஸ். வழிநெடுகிளும் அவளுக்காக ஆம்புலன்ஸ் கதறிகொண்டே வந்தது. அதே சாலைகளில் முன் செல்லும் வாகன ஓட்டிகளிடம் சங்கவிக்காக இறைஞ்சி கேட்டுக்கொண்டே சென்றது, குறுக்குச் சாலையிலிருந்து சடரென்று யாரையும் நுழைந்து விடவேண்டாமென்று மன்றாடிக் கேட்டுக்கொண்டே வந்தது.அந்த ஒலியின் வீச்சும், ஒலியின் சப்தமும் இல்லாத இறைவனை கெஞ்சிகொண்டே வந்தன இருயிரையும் காப்பாற்றிட மீண்டும் அந்த நால்ரோடு வந்தது ஆம்புலன்ஸ், இப்போது அந்த கடைக்காரனின் வார்த்தைகளை நம்பி  அவா் சொன்ன வழியில் நேராக சென்றது.

கொஞ்ச தூரத்திலெல்லாம் பழைய ஆத்துப்பாலம் ஒன்று கண்களுக்கு தெரிந்ததில் செல்வம் சற்று ஆசுவாசமடைந்தான். சரியான பாதையில் செல்வதை உணர்ந்தான். எந்த தயக்கமும் இல்லாமல் ஆம்புலன்ஸை செலுத்திக் கொண்டிருந்தான் ராஜா. ஆம்புலன்ஸ் அந்த ஆத்துப்பாலத்தின் மீது சென்றது.

படீர்ரென்று ஒரு சத்தம். ஆம்புலன்ஸ் அந்த சாலையை ஒரு அலசு அலசியது. தட்டுத்தடுமாறியது. சாலையிலிருந்து தறி கெட்டு ஓடமுயன்ற ஆம்புலன்ஸை எப்படியோ ராஜா சாமாரத்தியமாக குடை சாயாமல் தடுத்து நிறுத்தினான். ராஜா ஸ்டேர்ங்கில் தலை முட்டி மோதி நிலை தடுமாறி, சமாளித்து ஒரு வழியாக ஆம்புலன்ஸை நிறுத்தினான். கதவைத் திறந்து குதித்து இறங்கி பார்த்தான் செல்வம். முன் சக்கரத்திலிருந்து புகை தள்ளியது. அந்த சக்கரம் பஞ்சா் ஆகியிருந்தது. செல்வம் அதிர்ந்து போனான். சங்கவியின் கதறல் சத்தம் தான் அவனை மீண்டும் தன்னிலைக்கு இழுத்துவந்தது. ஓடிச்சென்றுப் பார்த்தான் அவள் வலியில்  துடித்துக் கொண்டிருந்தாள். அவள்  அன்னை தலையில் அடித்துக்கொண்டு அழுதாள். செல்வம் சுதாரித்து “பயப்படாதிங்க, தைரியமா இருங்க செத்த நேரத்துல டயர மாத்திட்டு புறப்பட்டுடலாம்” என்றான் அவர்களிடம். ராஜாவை அழைத்தான். அவன் தலையில் ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. கொஞ்சம் பஞ்சை தண்ணீரில் ஈரமாக்கி எடுத்து கொடுத்து ரத்தம் கசியாமல் பிடித்திருக்கச் செய்தான். விடுவிடுவென ஸ்டெப்னியை எடுத்து போட்டுவிட்டு, ஜாக்கியைத் தேடினான். மீண்டும் சோதனைக் காட்டியது விதி.

“ராஜா ஜாக்கிய எடு”, திருதிருவென விழித்தான் ராஜா.

“டேய் ஜாக்கிய எடுடா ஏன் இப்படி முழிக்கிற”

“அண்ணன் அது வந்து…..”

“டேய் நேரமாகிட்டே இருக்கு எடுத்துட்டுவாடா ”

“கந்தசாமி அண்ணன் கேட்டாரு; அவா்கிட்ட எடுத்து குடுத்துவிட்டேன்”

“உனக்கு அறிவு இல்ல ஆம்புலன்ஸ் ஓட்டதானே வந்தே, அங்கயே சொல்லி தொலைக்கமாட்ட நல்ல ஆளுடா நீ” கோபத்தில் கத்தினான் செல்வம். சூப்பா்வைசரை தொடா்பு கொண்டான் மாற்று வண்டிக்கு வழியில்லை என்றார் அவர். வேறு வழியில்லை ஏதாவது மெக்கானிக்கை பிடித்தால்தான் வழி என்று ராஜாவிடம் சொன்னான் எல்லாவற்றையும் இறுக்கமான முகத்தோடு கண்ணீா் வழிய கவலை தோய்ந்த முகத்தோடு கவனித்துக் கொண்டிருந்தார் சங்கவியின் தந்தை. செல்வம் அவரை பார்த்தான். நர்ஸைக் கூப்பிட்டான். அவளிடம் நிலையை சொன்னான் “நான் போய் பக்கத்துல ஏதாவது மெக்கானிக் இருக்கானானு பாத்துட்டு வந்தடறேன். பாத்துக்கோங்க” என்று சொல்லிவிட்டு எதிர்திசையில்  வேகமாக  ஓடினான்.

அவனால் முடிந்தவரை வேகமாக ஓடினான் வியர்த்து ஒழுக; தலை சுற்றியது, மூச்சிரைத்தது செல்வத்திற்கு; சிகரெட் பிடித்ததின் விளைவும் எப்போதாவது குடிக்கும் குடியும் எத்தனை கேடென்று தோன்றியது. வியர்வையில் சட்டையெல்லாம் நனைந்து நெடுதூரம் ஓடியும் எங்கும் ஆளரவமில்லாமல் மனித சுவடையே அவனால் காணமுடியவில்லை. எங்கும் பொட்டல் காடாய் கிடந்தது. வேறு வழியில்லாமல் திரும்பி ஓடிவந்துவிட்டான். ராஜா திருதிருவென முழித்துக் கொண்டிருந்தான். ஒழுகிய இரத்தம் நின்றிருந்தது அவனுக்கு. சங்கவியின் கதறல் சத்தம்  செல்வத்தின் காதுகளில் கேட்கவில்லை. அந்த இடமே அமைதியாக இருந்தது. காற்று வீசும் சப்தத்தை தவிர வேறொன்றும் கேட்கவில்லை. நிழவும் நிசப்த அமைதி செல்வத்தை பீதியடையச் செய்தது. என்ன ஆகியது என்று கேட்பது போல் செல்வம் நர்ஸைப் பார்த்தான், அவள் “ரொம்ப எமா்ஜென்சி, கிரிட்டிகல் ஸ்டேஜ்…. எதாவது பண்ணலனா….” என்று இழுத்தாள். செல்வம் அரண்டு போனான். இது என்ன சோதனை “வேற ஆம்புலன்ஸும் கூப்ட முடியாதே; எல்லாம் அந்த ஆக்சிடெண்ட்ல இருக்குமே”, “அய்யோ கடவுளே புள்ளதாச்சியச் கொன்னுட்டான் அந்த ஆம்புலன்ஸ்காரன்னு ஊா் வாய்கூசாம சொல்லுமே”  உள்ளுக்குள் குமுறிக் கொண்டிருந்தான்.

எந்த சலனமும் இல்லாமல் கண்ணீா் கசிந்த கண்களோடு செல்வத்தின் அருகில் வந்தார் அந்த பெரியவா். செல்வத்தை பார்த்து இரு கைகளையும் உயர்த்தி தலைமேல் தூக்கி கும்பிட்டார்.

“அய்யா. . .. என் குலசாமி. என் புள்ளைய காப்பாத்து தெய்வமே. என்  புள்ள எமங்கிட்ட போராடிட்டிருக்கா; தெய்வமெல்லாம் கண்மூடிட்டு; என் மக உசுரு உன் கையில தான்யா இருக்கு”

அவா் சொல்லி முடித்ததுதான் தாமதம். அருள் வந்த பூசாரியைபோல் செல்வம் அங்கமிங்கும் ஓடினான். அவனுக்குள் புது இரத்தம் பாய்ந்தது. திடுதிடுவென ஓடினான். எது எதையோ தேடினான். எங்கிருந்தோ மூன்று நான்கு கருங்கற்களை தூக்கி வந்து முட்டுக் கொடுத்தான். இது போதும் சக்கரத்தை அகற்றிவிடலாம். திரும்ப பொருத்துவதற்கு என்ன செய்வது? கொஞ்சமாவது தரைக்கு மேல் இருந்தால் வசதியாக இருக்கும் என்று நினைத்தான். ராஜாவையும், செவிலிப் பெண்ணையும், சங்கவியின் பெற்றோர்களையும் கூட அழைத்துக் கொண்டான். எல்லோருமாக சேர்ந்து பஞ்சரான சக்கரத்தின் முனையில் நின்று இயன்றவரைத் தூக்க முயன்றார்கள். கையில் சற்று உயரம் குறைவான கருங்கல்லோடு வண்டி உயர எழுந்ததும் வைத்துவிடுகிற நோக்கில் காத்திருந்தான் செல்வம். வலு உள்ள வரை நால்வரும் முயன்றார்கள், வண்டி ஒரு அங்குலம் கூட உயர எழவில்லை. என்ன செய்வது? யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. நீண்ட நேரமாக அந்த சாலையில் அந்த ஆம்புலன்ஸ் மட்டும் தனித்து நிற்கிறது. ஒரு இருசக்கர வாகனம் கூட வரவில்லை. கொஞ்சம் இடைவெளிவிட்டு மீண்டும் முயற்சித்தார்கள், வாகனம் எழும்பவேயில்லை. செல்வம் ஆம்புலன்ஸ்க்கு அடியில் படுத்துக் கொண்டு இன்னும் ஒரேயொரு கல்லை வைக்க காத்திருந்தான். இம்முறையும் அந்த நால்வராலும் நினைத்ததை சாதிக்க முடியவில்லை. இப்போ என்ன செய்வது?  செல்வத்துக்கு அதே சிந்தனை. ராஜாவுக்குக் குற்ற உணர்வு அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. பெத்தவள் வாய் பொத்தி அழுகிறாள். பெத்தவன் மனசுக்குள் குமுறுகிறான், செவிலிக்கு நேரத்திற்குள் போக வேண்டும். இல்லையேல் இருவரின் நிலையும் கேள்விக்குறி ஒரே படபடப்பு; சங்கவிக்கு வெளியில் என்ன நடக்கிறதென்றறே தெரியாது. அவள் எந்த நிலையில் இருக்கிறாள் என்பது யாருக்குமே நிச்சயமாக இதுதான் என்று தெரிந்திருக்கவில்லை. ஒரு வேளை கண்மூடி வயிற்றிற்குள்ளிருக்கும் இன்னோர் உயிரிடத்தில் அவள் ஏதாவது பேசிக் கொண்டிருக்கலாம்.பயப்படமாலிருக்க சிசுவிற்கு அவள் ஏதாவதொரு கதை சொல்லிக் கொண்டிருக்கலாம்.யார் கண்டா? இப்போது செல்வத்துக்கு ஒரு யோசனை அடுக்கி வைத்திருந்த கருங்கற்களை சரித்துவிட்டு சாலையோரத்தில் எறிந்தான். யாருக்கும் எதுவும் புரியவில்லை. வெளியே வந்தான். எல்லோரையும் விலகச் சொன்னான். வண்டியில் ஏறினான். சாவியைப் போட்டு ஆம்புலன்ஸை தார்ச் சாலையின் ஓரமாக செலுத்தினான். நகரச் சிரமப்படடு நகர்ந்தது ஆம்புலன்ஸ். கிழிந்த முன்பக்க சக்கரம் பிதுங்கியது. சரியாக சாலையை ஒட்டி நிறுத்தினான். தார்ச்சாலை குறிப்பிட்ட தூரத்தில் முடிந்து மீதமிருந்த இரண்டு மூன்றடிக்கு மண் மட்டுமேயிருந்தது. ஆம்புலன்ஸிலிருந்து குதித்தான் செல்வம். ஓரமாக வீசிய கற்களைக் கொண்டு கீழே முட்டுக் கொடுத்தான். ஆம்புலன்ஸ்க்குள்ளிலிருந்து இரண்டு உருளை வடிவ கம்பிகளை எடுத்து வந்தான். ராஜாவை அழைத்தான் அவன் கையில் ஒரு கம்பியைக் கொடுத்து அவனுடன் சேர்ந்து சக்கரத்துக்கு கீழே அரையடி ஆழத்திற்கு நல்ல அகலமாக குழி பறித்தான். போதுமென்று தெரிந்ததும் சக்கரத்தை சுழற்றிப் பார்த்தான். சுழன்றது. உடனே கிழிந்த சக்கரத்தை பிடுங்கி எறிந்தான். ஆம்புலன்ஸிலிருந்த மாற்றுச் சக்கரத்தை அதில் பொருத்தினான். சரி செய்தான். சுழற்றிப்பார்த்தான், சீராக சுழன்றது.  கருங்கற்களை உதைத்து தள்ளி சாலையோரம்  வீசி எறிந்தான். வண்டியில் ஏறினான். எல்லோரும் ஏறினார்கள். சங்கவி இன்னும் மயக்கத்திலேயே இருந்தாள். செல்வம் ஆம்புலன்ஸை செலுத்தினான். எடுத்த எடுப்பில் நல்ல வேகம். வேகமுள் என் நேரமும் கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியே வந்துவிடுவேன் என்பது போல் ஏறிகொண்டே இருந்தது. தூரம் குறைந்து கொண்டே இருந்தது. அத்தனை போராட்டத்திற்குப் பிறகு ஆம்புலன்ஸ் மருத்துவமனையை வந்து சேர்ந்தது. ஆம்புலன்ஸிலிருந்து விடுவிடுவென இறங்கி ஓடி ஸ்ட்ரெச்சரை இழுத்து வந்தான். ஆம்புலன்ஸின் பின் கதவை திறந்தான். நர்ஸின் கண்களை பார்த்தான் அவள் இன்னும் உயிரோடு இருக்கிறாள் என்பது போல சமிக்ஞை செய்தாள். அவளை அலுங்காமல் தூக்கி  இருவரும் ஸ்ட்ரெச்சரில் வைத்து தள்ளிக் கொண்டு பிரசவ வாடிற்கு கொண்டு சென்றார்கள். பின்னாலேயே சங்கவியை பெற்றவா்களும் செவிலிப் பெண்ணும் ஓடி வந்தார்கள். மருத்துவா் வந்தார், பரிசோதித்தார் அவா் பரபரப்பாக ஏதேதோ சொல்லியதில் அறுவை சிகிச்சை அறை தயாரானது. சங்கவி அதற்குள் கொண்டு செல்லப்பட்டாள். வெகு நேரமாகியது. என்ன நடக்கிறதென்று தெரியவில்லை. அந்த இடத்தின் ஒரு கோடியில் போய் நாற்காலியில் அமர்ந்து கொண்டான் செல்வம். ராஜாவும் செவிலியும் வெளியே நடந்தார்கள். சங்கவியின் தாய் அப்படியே அந்த அழுக்குத் தரையில் குத்திட்டு அமர்ந்துகொண்டாள். அவள் கண்களில் கண்ணீா் வற்றவே இல்லை. வற்றாத பேரருவியாய்  கண்ணீா் வழிந்து கொண்டேயிருக்கிறது. பெரியவா் சுவரில் சாய்ந்து எதிர்சுவரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

சிலமணி நேரங்களுக்கு பிறகு அந்த அறையின் கதவு திறக்கப்பட்டது. ஒரு செவிலிப் பெண் கையில் சங்கவியின் நீண்ட தவத்திற்கும் சோதனைக்கும், போராட்டத்திற்கும் விடையான, வரனான சில நொடிகளுக்கு முன்னால் பிறந்து, புதிதாய் இந்த உலகை வந்தடைந்த குழந்தையை வெண்ணிறத் துணி போர்த்தித் தூக்கி வந்தாள். கீழே குத்திட்டிருந்த சங்கவியின் தாய் வேகமாக எழுந்து வந்து கைகளில் குழந்தையை ஏந்தி உச்சி முகர்ந்தாள். பின் அந்த துணி விலக்கி பேரனா, பேத்தியா என்று பார்த்தாள். “இங்க பாருய்யா நமக்கு பேத்திப் பொறந்துருக்காய்யா” என்று தன் கணவனை அழைத்தாள். அந்த பெரியவா் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு எழுந்து வந்தார்.

குழந்தையை பார்த்தார். செவிலிப் பெண்ணை பார்த்துக் கேட்டார். “எம் மக…” அவள் சொல்ல வாய் எடுப்பதற்குள் கதவை திறந்து கொண்டு வந்த டாக்டா் ஒண்ணும் பயப்பட வேணாம். அவங்க மயக்கத்துல இருக்காங்க. ஐ.சி.யூக்கு ஷிஃப்ட் பண்றோம். தொந்தரவு பண்ணாம ஒவ்வொருத்தரா போய் பாருங்க” என்றார்.அப்போதுதான் சங்கவியின் தகப்பனுக்கு கடவுளைத் தேடி ஓடியிருந்த அவரது உயிர் அவர் உடல் வந்து சேர்ந்தது. தன் பேத்தியை இருகரம் ஏந்தி வாங்கி மாரோடு அணைத்துக் கொண்டார். தூரத்திலிருந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த செல்வம் அவா் அருகில் வந்தான் குழந்தையை பார்த்தான். அந்த சிரித்த முகம் அவனுக்கு உள்ளுர ஏதோ சொல்லியது. பாக்கெட்டுக்குள் கைவிட்டான் நூறு ரூபாய் தாள் ஒன்றை எடுத்து அந்த பிஞ்சுக் கைகளுக்குள் திணித்தான். அந்த குழந்தை சிணுங்கியது. அங்கிருந்து எதுவும் சொல்லாமல் நடந்தான்.

ஆம்புலன்ஸ் அருகில் வந்தான் செல்வம். அதன் அருகில் ராஜாவின் காயத்துக்கு சிகிச்சையளித்து கொண்டிருந்தாள் தாதிப் பெண். செல்வம் ஆம்புலன்ஸையே வெறிக்க வெறிக்கப் பார்த்தான். அவன் கண்கள் கசிந்தது. ஆம்புலன்ஸின் அருகில் சென்று அதை கட்டிக் கொண்டான்; முழுவதுமாக கட்டிக்கொள்ள அவனது கைகள் நீளம் போதவில்லை. அவனது கண்ணீா் ஆம்புலன்ஸ் முகப்பில் படிந்திருந்த தூசியினை நனைத்துக் கொண்டு கோடு கோடாய் வழிந்து;  கீழ் நோக்கி வந்தது. அங்கிருந்தவா்களில் சிலர் செல்வத்தைப் வினோதமாகப்  பார்த்தார்கள்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button