தொடர்கள்

கட்டற்ற வெளி – 1

கி.ச.திலீபன்

காசி

இந்தப் பயணத்துக்கான உந்துதல் என் சிறுவயதிலேயே ஏற்பட்டது எனக்கூறலாம். அன்றைக்கு வாசித்த சிறார் கதை நூல்கள் வழியாகத்தான் நான் காசியை அறிந்தேன். ‘ஒரு ஊரில் ஒரு செல்வந்தர் வாழ்ந்தார். அவர் இறுதிக்காலத்தில் தனது சொத்துகளை மகன்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்து விட்டு காசிக்குப் பாதயாத்திரை சென்றார்’ இப்படியாகத்தான் பல கதைகளின் தொடக்கம் இருக்கும். இந்த வாசிப்பு என்னுள் இயல்பாக ஒரு கேள்வியை எழுப்பியது. அளப்பரிய செல்வம் படைத்தவன் எல்லாவற்றையும் விட்டுவிட்டுக் காசிக்குச் செல்கிறான் என்றால் அங்கு இவற்றையும் தாண்டி என்ன இருக்கும்? இந்த அடிப்படையான ஒரு கேள்விதான் காசியை நோக்கிய எனது பயணத்துக்கான விதை. திரைத்துறையிலிருந்து விலகி மீண்டும் பத்திரிக்கைத் துறையில் இணைந்த பிற்பாடு குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட்டு விருப்பப்படும் ஊர்களுக்குப் பயணம் செய்வது என எனக்குள்ளாக ஒரு தீர்மானத்தை வகுத்திருந்தேன்.

2015ம் ஆண்டு ஜூலையில் ஏதோ ஒரு தினத்தில் திடீரென காசிக்குப் போகலாமே என்கிற எண்ணம் வந்தது. எத்தனையோ மனிதர்களின் வாழ்க்கைப் பயணத்தின் முடிவு அதுவாக இருந்திருக்கிறது. ஆண்டு அனுபவித்தவனெல்லாம் தன் அகங்காரங்கள் அத்தனையையும் இழந்து நின்ற இடம் அது. நான் காசிக்குப் போகிறேன் என்று சொன்னவுடன் என்னிடம் பலரும் கேட்ட கேள்வி “காசிக்குப் போற வயசா இது?” என்றுதான். காசிக்கும் வயதுக்கும் இடையே உள்ள பொருத்தத்தை நாம் இதன் மூலம் அறிய முடியும். மரணத்தின் மீதான நிச்சயத்தோடு மேற்கொள்ளப்பட்ட யாத்திரை காசி யாத்திரை. 2000 கிலோ மீட்டர் நடந்து சென்று தன் மரணத்தைத் தேடிக் கொள்ள வேண்டும் என்கிற உந்துதலுக்குப் பின் இருந்த உணர்வு எப்படிப்பட்டது? எளிமையாகச் சொல்வதானால் செத்துப்போவதற்காக ஒரு ஊருக்குச் சென்றிருக்கிறார்கள். அந்த ஊரைப் பார்க்க வேண்டும் என்கிற உணர்வுதான் எனக்குள். எனது இந்தத் தேடலுக்குப் பின் இருந்த உணர்வு ஒரு தத்துவார்த்த உணர்வா? அல்லது ஆன்மிக உணர்வா? அல்லது என் மிகையுணர்ச்சியா? எனத் தெரியவில்லை.

காசிக்குப் போய் கங்கையில் கால் நனைக்க வேண்டும். கங்கைக் கரைப் படித்துறையை ஒட்டியுள்ள பழமையான கட்டிடங்களில் பார்வையை இருத்தியபடியே கங்கையில் படகு சவாரி செய்ய வேண்டும். காலில் செருப்பில்லாமல் அந்நகரின் தெருக்களில் இலக்கற்று சுற்றித்திரிய வேண்டும். இதுவே அப்பயணத்தின் நோக்கமாக இருந்தது. மற்றபடி காசியைப் பற்றிய எந்த அறிதலும் எனக்கில்லை. ஒரு இடத்துக்குச் செல்லும் முன்பு அது குறித்த வரலாற்றுத் தெளிவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற கருத்தில் எனக்கு முழுமையான உடன்பாடு இல்லை. வரலாறு நமக்குள் ஒரு உருவகத்தை ஏற்படுத்தி விடும். அந்த உருவகத்தைக் கொண்டு நாம் அதனை அணுகும்போது உண்மையான அனுபவத்தைப் பெறவியலாது என்பது என் எண்ணம். காசிக்குப் போகலாம் என்றெண்ணிய சில மணி நேரங்களிலேயே அதற்கான செயலில் இறங்கி விட்டேன். டிசம்பர் மாதம் 26ம் தேதி சென்னையிலிருந்து கொல்கத்தா செல்வதற்கான விமானப் பயணத்தை முன்பதிவு செய்தேன். வட இந்தியாவின் டிசம்பர் மாதக் குளிரை மிகவும் ரசித்து அனுபவிக்கும் ஆர்வம் பிறந்தது. அதற்கு முந்தைய ஆண்டு டிசம்பரில் கொல்கத்தா மற்றும் துர்காபூருக்குச் சென்றிருந்த போதுதான் முதன்முறையாக அப்படிப்பட்டதொரு குளிரை எதிர்கொண்டிருந்தேன். மிதமான தட்பவெப்ப நிலையில் வாழும் நாம் எதிர்கொண்டிருக்கவே முடியாத அளவிலான முரட்டுக் குளிர் அது. குளிர்தோய்ந்த வட இந்தியாவின் நிலப்பரப்புகளில் பயணம் செய்ய வேண்டும். மாறுபட்ட கலாச்சார சூழலையும், வாழ்க்கை முறையையும் காண வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு என்னுள் நிறைந்திருந்தது. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்‘ எனத் திரியும் வாழ்க்கை ராகுல சாங்கிருத்யாயன் போன்றோருக்குதான் வாய்க்கப் பெறுகிறது. குடும்பப் பொறுப்புகளுக்கு ஆளான ஒருவனால் இலக்கற்ற பயணியாகவெல்லாம் வாழ இயலாது. டிசம்பர் 26ம் தேதி சென்னையில் தொடங்கும் பயணம் ஜனவரி 4ம் தேதி காலையில் சென்னையில் நிறைவு பெற வேண்டும் என்கிறபடியான ஒரு பயணத்திட்டத்தோடுதான் நான் இப்பயணத்தைத் தொடங்கினேன்.

என் முதல் விமானப் பயணம் சென்னையிலிருந்து கொல்கத்தாவுக்குச் சென்றதுதான். சுவாரஸ்யமற்ற சலிப்பான பயணம் என்றால் அது விமானப் பயணம்தான். பேருந்துப் பயணத்திலும், ரயில் பயணத்திலும் சன்னலோர இருக்கையில் அமர்ந்து நம்மைக் கடந்து செல்லும் நிலப்பரப்புகளைப் பார்த்துக் களிப்புறலாம். விமானப் பயணத்தில் அப்படியான வாய்ப்புகள் எதுவும் இல்லை. இரண்டரை மணிநேரம் ஒரு அறையினுள் அடைத்து வைக்கப்பட்டதைப் போல்தான் உணர முடிந்தது. சென்னையில் நான் விமானம் ஏறிய போது வெக்கையாக இருந்தது. 8.30 மணிக்கு நான் கொல்கத்தாவில் இறங்கி விமான நிலையத்தை விட்டு வெளியேறிய போதுதான் அந்தக் குளிரை உணர்ந்தேன். பற்கள் படபடக்க ஜெர்கினை எடுத்து மாட்டிக் கொண்டேன். சூடாக ஒரு தேநீர் அருந்த வேண்டும் போலிருந்தது. தேநீர் கடை என எதுவும் என் கண்ணுக்கு அகப்படவில்லை. அதுபோக 11.30 மணிக்கு ஹெளராவிலிருந்து மொகல் சராய் (காசி)க்கு ரயில் முன்பதிவு செய்திருந்தேன். மூன்று மணிநேரம் இருந்தாலும் கொல்கத்தாவின் போக்குவரத்து நெரிசல் குறித்து நான் முன்பே கேள்விப்பட்டிருந்ததால் ஹெளரா சென்று விடலாம் எனத் தீர்மானித்து டாக்ஸி பிடித்தேன்.

எனக்கு இந்தி தெரியாது. ஆங்கிலமே கூட தொடக்கப் பள்ளி மாணவர்கள் அறிந்து வைத்திருக்கும் ஆங்கிலம்தான் பேசுவேன். உதாரணமாக இங்கே சாப்பிடுவதற்கு நல்ல உணவகம் எங்கு இருக்கிறது? என்று கேட்க வேண்டுமென்றால் ஈட்டிங் ஃபுட்… குட் ஹோட்டல் வேர்? என்றுதான் கேட்பேன். இந்த ஆங்கிலத்தை வைத்துக் கொண்டுதான் இதுவரை வெளிமாநிலங்களுக்குப் பயணப்பட்டிருக்கிறேன். டாக்ஸிக்காரரிடம் பேரம் பேசுவதற்கு அவ்வளவாக ஒன்றும் மொழியறிவு தேவைப்பட்டிருக்கவில்லை. அவர் மூன்று விரல்களைக் காட்டி த்ரீ ஹண்ட்ரட் என்றார். நான் இரண்டு விரல்களைக் காட்டி டூ ஹண்ட்ரட் என்றேன். இந்த இரு வார்த்தைகளுக்குள்ளாகவே நடந்த பேரத்தில் இறுதியாக நான்தான் வென்றேன் ஆம் இருநூறு ரூபாய்க்கு ஒப்புக்கொண்டார். ஹௌராவை அடையும்போது மணி 10 ஆகியிருந்தது. சரியாக ஒன்றரை மணி நேரம் இருந்தது ரயிலுக்கு. நேரத்தைக் கடத்துவது என்பது தனியாளாக பயணம் செய்யும்போது எதிர்கொள்ளும் முக்கியமான சவால். நமக்குப் பரிச்சயப்பட்டிருக்காத ஊரின் வாடிக்கையான ஒவ்வொரு அசைவுகளும் கூட நமக்குப் புதிய அனுபவத்தைத் தரக்கூடியதாக இருக்கும். கொல்கத்தா என்னும் பழம்பெரும் நகரின் ஹௌராவில் அப்படியான அனுபவங்களைப் பெறத் தயாரானேன். ஹௌரா ரயில்நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் ஒன்றரை மணி நேரம் சுற்றித் திரியலாம் என்று முடிவு செய்தேன். ஏனென்றால் சரியான நேரத்துக்கு நடந்தே திரும்பி வர ஏதுவாக இருக்க வேண்டும் என்பதால். ஹெளரா பாலத்தில் நடந்தேன். இப்படியொரு பிரம்மாண்டமான பாலத்தின் கீழ் செல்வது கொல்கத்தாவாசிகளின் வாடிக்கையான நிகழ்வு. ஆனால் எனக்கு? பாலத்தில் பிரகாசிக்கும் மின் விளக்குகளின் ஒளி ஹூக்ளி நதியில் பட்டுத் தெரித்த காட்சி பேரற்புதம். பாலத்தின் நடைபாதையில் வட இந்திய முகங்கள் பலவற்றையும் கடந்து சென்று கொண்டிருந்தேன். கொல்கத்தாவின் சாலைகள் டாக்சிகளாலேயே நிறைந்திருக்குமா? என்று சந்தேகம் எழும்படியாக அத்தனை டாக்சிகள். தடம் எண் பலகையைத் தாங்கிய மாநகரப் பேருந்துகள் எதையும் பார்த்திராதது ஏமாற்றமாக இருந்தது. ஹூக்ளியின் மீது பார்வையை இருத்தினேன். எவ்வித சலனமுமின்றி சில நிமிடங்கள் கடந்தன. பாலத்தின் முடிவு வரை சென்று விட்டுத் திரும்பினேன்.

இன்னும் நேரம் மிச்சமிருந்தது. வண்ண விளக்கொளிகளால் மிளிர்ந்த மதுபானக்கூடம் ஒன்றினைப் பார்த்தேன். பியர் அருந்த வேண்டும் போலிருந்தது. வெயிலுக்கு இதமாக பியர் அருந்தும் வழமையிலிருந்து விலகி குளிரில் பியர் அருந்த ஆவல் கொண்டேன். போக மீதம் இருக்கும் நேரத்தைக் கடத்துவதற்கும் அது சரியாக இருக்கும் எனத் தோன்றவே BAR என்று விளக்குகளால் எழுதப்பட்ட பலகையை நோக்கிச் சென்றேன். பாரின் கதவுகள் கருப்பு வெள்ளை சினிமா போஸ்டர்கள் அச்சிடப்பட்ட ஸ்டிக்கரால் கவரப்பட்டு classical look –ஐ தந்தது. அவை பெங்காலிப் படங்களாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என நினைத்துக் கொண்டேன். சத்யஜித் ராயின் படங்கள் ஏதேனும் இருக்குமோ? என்கிற கேள்வியும் இயல்பாக எழுந்தது. வங்காளத்தில் நான் அறிந்து வைத்திருக்கும் ஒரே இயக்குனர் அவர் மட்டும்தான். கதவை நீக்கும் முன்னரே எனக்கு அந்தப் பாடல் கேட்க ஆரம்பித்தது. கதவை திறந்து உள் நுழைந்தேன். கதவுக்கு நேரெதிரில் ஒரு சிறிய மேடையில் 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் பாடிக் கொண்டிருந்தார். அவருக்குப் பின்னால் நான்கைந்து இசைக்கலைஞர்கள் இசைத்துக் கொண்டிருந்தார்கள். மூன்று வரிசைகளில் டேபிள் சேர்கள், மங்கலான விளக்கொளி என தனியார் பார்களுக்கே உரித்தான வழக்கமான அமைப்பு. ஒருவர் மட்டுமே அமர்ந்திருந்த ஒரு டேபிளில் அவருக்கெதிரே அமர்ந்து பியர் சொன்னேன். எதிரே இருந்தவரிடம் சம்பிரதாயமாகச் சிரித்தேன். அவரும் அதே போலான சம்பிரதாயத்தை மேற்கொண்டார்.

அந்தப் பாடகர் எந்த மொழியில் பாடுகிறார் என்பதை என்னால் அனுமானிக்க முடியவில்லை. கொல்கத்தா என்பதால் வங்காளமாக இருக்கலாம் என்கிற யூகத்துக்குள் வந்தேன். அதே நேரம் இந்தியாக இருப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம் என்பதால் எந்த மொழியாகவோ இருந்து தொலையட்டும் என்று இறுதியாக ஒரு முடிவுக்குள் வந்தேன். அவர் பாடிக் கொண்டிருப்பதெல்லாம் க்ளாசிக் பாடல்கள் என்பதை மட்டும் என்னால் உணர முடிந்தது. மொழியையும் தாண்டி நம்மை சுவீகரித்துக்கொள்கிற குழந்தைதான் இசை.

பனி மூட்டம் படர்ந்த சாலையில் நின்று ஆவி பறக்கத் தேநீர் அருந்துவதைப் போல்தான் அந்தப் பாடல்களோடு நான் எனது பியரைக் காலி செய்தேன். பாடல்களைப் போலவே அந்தப் பாடகரும் என்னை வெகுவாகக் கவர்ந்தார். ஒவ்வொரு பாடலைப் பாடுகையிலும் அவர் முகத்தில் ஒளி நிறைந்திருந்தது. பாடுகிற அவரே அதைக் கேட்டு ரசிக்கவும் செய்கிறாரோ என்றெண்ணிக் கொண்டேன். ஒவ்வொரு பாடல் முடிந்ததும் மது அருந்திக் கொண்டிருப்பவர்கள் எழுந்து தாங்கள் விரும்பும் பாடலைப் பாடும்படி அன்பளிப்பாக பணம் கொடுத்தனர். ஒவ்வொருவரது கையிருப்பு மற்றும் அப்போதைய மன நிலையைப் பொறுத்து தொகையின் எண்ணிக்கையில் வேறுபாடிருக்கும். அந்த அன்பளிப்பை பெரும் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்வதை உணர்த்துவதைப் போன்று அந்தப் பாடகர் தலை சாய்த்து வணங்கும் தொணியில் அந்த பணத்தைப் பெற்றுக் கொண்டார். நானும் நூறு ரூபாய்த் தாளை அவரிடம் நீட்டி எனக்குப் பிடித்தப் பாடலை பாடச் சொல்லலாம் என நினைத்தேன். அப்போது இந்தியிலும், வங்காளத்திலும் எனக்குப் பிடித்த பாடல் என்று எதுவும் இருக்கவில்லை என்பதால் அமைதியாக எழுந்து வெளியே வந்தேன்.

ரயில் நிலையத்தை ஒட்டியிருந்த சாலையில் வரிசையாக இருந்த கடைகளில் உணவகங்களும் அடக்கம். ஓரளவு சுகாதாரமாய் இருந்த உணவகம் ஒன்றினுள் நுழைந்தேன். ரொட்டி ஐந்து ரூபாய்தான். ஆனால் தொட்டுக்கொள்ள டால் அல்லது சிக்கனை தனியாக விலை கொடுத்து வாங்க வேண்டும். இது போன்ற நெடும்பயணங்களில் நான் பொதுவாகவே அசைவ உணவைத் தவிர்த்து விடுவேன். ஏனென்றால் உணவகங்களின் நம்பகத்தன்மை குறித்து எனக்குத் துளியும் தெரியாது. ஆகவே மூன்று ரொட்டிகளும் டாலும் வாங்கிச் சாப்பிட்டேன். தண்ணீர் பாட்டிலும், பிஸ்கெட் பாக்கெட்டும் பயணத்துக்கு முன் தவறாமல் வாங்கி விடுவேன். நடுச்சாமத்தில் பசிக்க நேரிடும் சூழலை பிஸ்கெட் கொண்டு சமாளிக்கவியலும் என்பதால். பரந்து விரிந்த ஹெளரா ரயில் நிலையத்தில் மொகல்சராய் செல்லும் ரயிலைத் தேடிப்பிடிப்பது அவ்வளவு ஒன்றும் சிரமமான காரியமாக இருக்கவில்லை. நான் ஏறி எனது இருக்கையை உறுதி செய்து கொண்ட சில நிமிடங்களிலேயே ரயில் புறப்படத் துவங்கியது. போர்வைக்குள் புதைந்து பலரும் நித்திரை கொண்டிருக்க நான் சில தமிழ்ப்பாடல்களைக் கேட்டபடியே தூங்கி விட்டேன்.

காசியில் கண் விழித்தேன். டொடக்… டொடக்… என சப்தமெழுப்பியபடி ரயில் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. ஜன்னல் வழியே தெரிந்த காசி நகரின் முதற்காட்சியே குப்பைகள் சூழ்ந்த குடிசைப்பகுதிகள்தான். தார்ச்சாலையைக் காண்பதே அரிதென மண் சாலைகளையொட்டியிருந்த குடியிருப்புகளில் எல்லாம் புழுதி படர்ந்திருந்தது. ஓலையால் வேயப்பட்ட வீடுகளைக் காட்டிலும் தகரத்தால் வேயப்பட்ட வீடுகளே அதிகமாக இருந்தன. மாடும் மாட்டுச்சாணமும் தவிர்க்க முடியாத காட்சிகளாக எங்கும் நிறைந்திருந்தன. ரயில் மொகல்சராய் ரயில் நிலையத்தை அடைந்ததும் சம்பிரதாயமாக வலது காலை எடுத்து வைத்து இறங்கினேன்.

காசிக்குச் சென்றதும் நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்தில் தங்கலாம் என திட்டமிட்டிருந்தேன். காசியின் தெருக்களில் காலார நடந்து சத்திரத்துக்கு வந்தேன். எனக்குக் காத்திருந்த ஆச்சர்யம் அப்பகுதியின் சில தெருக்களில் உள்ள பலகைகள் எல்லாவற்றிலும் தமிழில் எழுதப்பட்டிருந்தது. ‘ஜவுளி வியாபாரம்’ ‘மொத்த வியாபாரம்’ போன்ற எழுத்துகளைப் பார்த்த போது மெல்லிய அதிர்ச்சிக்கு ஆளானேன். காசிக்கும் ராமேஸ்வரத்துக்குமான பிணைப்பை நான் ஓரளவு அறிவேன் என்றாலும், கிட்டத்தட்ட 2500 கிலோ மீட்டருக்கு அப்பால் முற்றிலும் வேறுபட்டதொரு நிலத்தில் தமிழைக் காண்கையில் ஒரு வித பரவசம் ஏற்படுவதைத் தவிர்க்கவியலாது.

‘நாட்டுக்கோட்டை நகர சத்திரம்’ என்கிற பலகையைத் தாங்கி செட்டிநாட்டு பாரம்பரியத்தோடு எழுந்து நின்றிருந்தது அக்கட்டடம். காப்பாளர் வடநாட்டவர். அவருக்கு தமிழ் ஓரளவு புரிந்தது என நினைக்கிறேன். என்னை வரவேற்பறைக்கு வழி காட்டி அனுப்பினார். வரவேற்பறையில் திருநீறு பூசி, படிய வாரிய தலையோடு ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவர் மேலாளராக இருக்கலாம் என நினைத்தேன். அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அறை வாடகைக்கு வேண்டும் என்றேன். எத்தனை பேர் எனக் கேட்டார். எனக்கு மட்டும்தான் என்றதும் மறுத்து விட்டார். தனி நபருக்கு அறை கிடையாது என்றவர் அதற்கான காரணத்தையும் என்னிடம் விளக்கினார். தனி நபராக வருகிறவர்கள்தான் அதிக அளவில் தற்கொலை செய்து கொள்கிறார்களாம். இந்தக் காரணத்துக்காகவே தனி நபருக்கு வாடகைக்கு விடுவதில்லை என்றார். என்னைப் பார்த்தால் தற்கொலை செய்து கொள்கிறவன் மாதிரியா தெரிகிறது எனக் கேட்கலாம் என்று கூட நினைத்தேன். தற்கொலை என்ன அம்மை நோயா? முகத்தைப் பார்த்துக் கண்டுபிடிக்க. அஃதோர் மனப்பிறழ்வு. அது யாரையும் எப்போதும் தாக்கலாம். போக நான் இருப்பது காசியில்… இது சாவுக்கான நகரம். காசியில் இறப்பவர்களுக்கு மறுபிறவி இல்லை என்பது இந்து மத நம்பிக்கை. அதற்காக தற்கொலை செய்து கொள்வதெல்லாம் அபத்தம்தான். இன்றைக்கும் இதே மன அமைப்புடன்தான் காசிக்கு வருகிறார்களா? என்கிற கேள்வி எழுந்தது. காசிக்குப் போகிறேன் என்று சொன்னதும் நண்பர் ஒருவர் என்னிடம் எச்சரித்தார். கஞ்சா இலைகளைப் பாடம் செய்து அதை அரைத்துப் பாலில் கலக்கி ‘பாங்கு’ என விற்பார்கள். அதை முயற்சிக்க வேண்டாம் என்று கூறினார். அவருடைய நண்பர் ஒருவர் காசிக்குச் சென்றபோது புதிய அனுபவத்துக்காக அதனை முயற்சித்திருக்கிறார். தன் வாழ்வில் எதிர்கொண்டிராத அந்த போதை அவரைத் தற்கொலை எண்ணத்துக்குத் தூண்டியிருக்கிறது. பெரும் போராட்டத்துக்குப் பின்னே அதைக் கடந்து வந்ததாகக் கூறியிருக்கிறார். காசியின் புற சூழலில் வாழ்வின் மீதான நிச்சயமின்மையை உணர்கிறவனுக்குள் கஞ்சா இலைகள் இது போன்ற எண்ணங்களைத் தோற்றுவிக்கக் கூடும் என நினைக்கிறேன்.

வேறு எங்காவது தங்குவதற்கு வாய்ப்பிருக்கிறதா? என்று அவரிடம் கேட்டேன். இரண்டு தெருக்கள் தள்ளி வல்லம்பர் சத்திரத்தில் கேட்டுப் பார்க்கும்படி சொன்னார். நன்றி கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினேன். கொஞ்சம் பதட்டம் கூடித்தான் இருந்தது. அங்கும் தனி நபருக்கு அறை கிடையாது எனக் கூறி விட்டார்களானால் என்ன செய்வது? வேறு விடுதிகளில் தங்கலாம் என்றாலும் குறைந்த வாடகையில் கிடைக்குமா? காசியின் படித்துறை அருகே கூடத் தங்கி விடலாம்தான் ஆனால் குளிரில் விரைத்துச் செத்துப் போய் விடுவேன். எந்த செலவும் இல்லாமல் என் உடலை அங்கிருந்து அப்படியே கங்கையில் தள்ளி விட்டு விடுவார்கள். முதல் கலவி அனுபவம் கூட கிடைக்கப் பெறாமலா சாக வேண்டும்? ஹைபர் லூப்பை விட அதீத வேகத்தில் என் யோசனைகள் ஓடிக் கொண்டிருந்தன.

வல்லம்பர் சத்திரத்தை அடைந்தேன். அங்கு வரவேற்பறையில் இருந்தவர் என்னைப் பற்றி விசாரித்தார். அவரும் சென்னையில் வசித்திருப்பதாகக் கூறினார். அங்குள்ள அறையைப் பார்த்தேன். சுண்ணாம்பு பூசிய சுவர்கள்தான். கட்டில், மெத்தை, தலையணை மற்றும் கம்பளி என அடிப்படை வசதிகள் மட்டுமே இருந்தன. நாள் ஒன்றுக்கு வாடகை 300 ரூபாய் என்றார். அறையை உறுதி செய்தேன். குளித்து முடித்துவிட்டு முதலில் சாரநாத் செல்ல வேண்டும்… காசியில் இரவைக் கொண்டாட வேண்டும் என்கிற திட்டத்தோடு பல் துலக்கினேன்…

 

பயணிப்போம்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button