இணைய இதழ் 110கவிதைகள்

இளையவன் சிவா கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

பிறந்த தின வாழ்த்தென
மகளுக்கு மரக்கன்றைப் பரிசளித்தேன்
பாடங்களிலும் படங்களிலும் மண்ணின் பெருமைகளை
மனப்பாடம் செய்த மகள்
மரக்கன்று நட
வீட்டைச் சுற்றித் தேடுகிறாள் மண் பரப்பை
அரையங்குல இடத்தையும்
அறை என நிரப்பி விடும்
அடுக்கக இல்லத்தில்
அனாதையாய்
இறப்பு நாளை எதிர்நோக்கி மூலையில் கிடக்கிறாள்
வனங்களின் தாய்.

*

ஆங்கார மிருகம் அடிபணியாமல்
அதிகாரம் கொண்டு ஓங்காரமிட்டபடி
அன்பை பலியாக்குகிறது
இல்லறவாசலின் படிகள் எங்கும் கோபப்பேய்கள்
ஆடியபடி தூபமிடுகின்றன
இதய ரசனைகளைக் காவு வாங்கி
மூளை விசாரணைக்குள்
முடங்கிப் போயின
சமாதானச் சின்னங்கள்
காதலின் பயணத்தில் இணைந்திட்ட மனங்களுக்குள்
இல்லறப் பூக்கள் பூத்திட்ட பின்னே ஐயச் செடிகளும்
ஆற்றாமைக் களைகளும் முளைத்திடும்போது
நம்பிக்கை இறகால்
நாவின் ரணங்களை
கொஞ்சு மொழியில்
வருடி விடுங்கள் வெட்கம் விட்டு வாழ்வின் பாதைகள்
வசந்த மழையில் நனையும்.

*

தொட்டிச் செடிகளை
வீடெங்கும் இட்டு நிரப்பி
தினமும் நீர் வார்த்து
குழந்தை எனப் பராமரிக்கிறாள் மகள்
அழுகையாய் நிற்கையில்
உள்வாங்கி வாடும் பூவாகி நிற்கிறது
மகிழ்வின் எல்லையில் மேனியெங்கும்
பூக்கவைத்து விரிகின்றன வேர்கள்
அனுதினமும் அவளின் வாசத்தை நுகர்ந்தபடி
எட்டிப் பார்க்கின்றன சாளரத்தை
வீட்டைத் துறந்து
வேறிடம் புகுந்த மகளைத் தேடி
மணத்தை தூது அனுப்பியபடி காத்துக் கிடக்கின்றன
வேர் உறைந்து வெறுமையாய்.

*

ஆகாயத்தை அளந்திட எத்தனிக்கையில்
பறத்தலின் நிமித்தம்
பார்வை கூர்மை பெற
வானம் ஏகினேன் பறவையென
எண்ணங்களே சிறகாயின
இளமை விரிகிறது வானெங்கும்
இலக்கின்றித் திரிகிறேன்
பறவைக்குஞ்சென
என்னை நான் உணராத வரை.

*

அலை இசையை மொழிபெயர்க்கும் கரைக்குள்
புதைந்து கிடக்கின்றன கடலின் ராகங்கள்
சிலை வழியே தினமும் கேட்கும் அர்ச்சனைக்குள்
ஒளிந்து கிடக்கிறது மனிதனின் பேராசை
நீர்ப்பரப்பில் வாசப்பாதையில் மலர்கள் கூட்டும்
வளங்களின் நீட்சி
ஆறாம் அறிவு கொண்டு
ஆராய்வதில் முடிகிறது
அவரவர் திறமை
இசைக்குறிப்பை வாசித்த பின்
மலரின் உயிர்ப்பில் மழலையாகிறேன்
வாழ்வை மறந்து.

ilayavansiva@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button