
குழந்தையைக் குளிப்பாட்டி தொட்டிலில் போட்டு விட்டு, குழந்தைக்கு சாம்பிராணி புகை காட்ட எதிர்த்த வீட்டில் கங்கள்ள ஆப்பையோடு போன தங்கமணி, திரும்பி வந்து பார்க்கும் போது தொட்டிலுக்குக் கீழே கிடந்ததைப் பார்த்து ‘அய்யோ அம்மா’ என்று கூச்சலிட்டாள். அக்கம் பக்கத்தினர் அலறியடித்து ஓடி வந்தனர். படமெடுத்து சீறிக்கொண்டிருந்த நல்லப்பாம்பின் தலை தொட்டிலில் படுத்திருந்த குழந்தையின் தலையை உரசியபடியிருந்தது. வீட்டு முற்றத்தில் ஏனம் கழுவிக் கொண்டிருந்த சொடலியும் அலறல் சத்தம் கேட்டு தங்கமணி வீட்டை நோக்கி ஓடி வந்தாள். தங்கமணி தரையில் கையையும் காலையும் போட்டு அடித்துக் கொண்டு, “எம்புள்ளய காப்பாத்துங்க; எம்புள்ளய காப்பாத்துங்க”என்று பதறியழுதாள்.
“யக்கோவ்! கூப்பாடு போடாம இரு. ஒண்ணும் ஆவாது.” என்றாள் சொடலி.
“யாராவது போயி ஆம்பளயள கூட்டிட்டு வாங்க” என்றாள் ஆவுடை.
“அடிக்கிற உரிம ஆம்பளக்கித்தான் இருக்கா! ஏன் பொம்பளக்கி கையி கெடையாதா?! நம்ம அடிச்சா பாம்பு சாவாதா?”சுற்றும் முற்றும் பார்த்தாள் சொடலி. கூட்டத்தில் நின்று கொண்டிருந்த சிறுவன் கையிலிருந்த குருவி வார் அவள் கண்ணில்பட்டது. “எல தம்பி, அந்த குருவி வார கொஞ்சம் தால” என்றாள். சிறுவன் கால்சட்டைப் பையிலிருந்து நல்ல சைசு கல்லொன்றையும் சேர்த்துக் கொடுத்தான்.
“வேணாம் சொடலி. இது சாரப்பாம்பு கெடையாது அடிச்சிட்டு வுட்டாலும் அப்படியே போவுறதுக்கு. நல்ல பாம்பு! காயம்பட்டு தப்பிச்சிடுச்சின்னா எத்தன வருசமானாலும் காத்திருந்து கொத்திப்புடும், சொன்னா கேளு! ஒனக்கு வேற கலியாணம் முடிஞ்சி ஒரு வாரந்தான் ஆவுது. அப்புறம் ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆச்சுன்னா ஓன் புருசன் பூவன் எங்கள வச்சிப் பாக்கமாட்டான்” என்று சொடலியைத் தடுத்தாள் ஆவுடை.
தடுத்த ஆவுடையைத் தள்ளி நிற்க சொல்லிவிட்டு, ஒரு கண்ணை மூடி ஒரு கண்ணைத் திறந்து குறி பார்த்தாள் சொடலி. “புள்ள பொட்டுல கிட்டுல பட்டுடாம பாத்து அடிடீ! “என்று சொல்லி விட்டு தெருக்காரர்கள் பேச்சியையும் இசக்கியையும் வணங்கிக் கொண்டு சொடலியை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.
பாம்பு உரசுவது தடவிக் கொடுப்பது போலிருந்ததோ என்னவோ குழந்தை அசந்து உறங்கிக் கொண்டிருந்தது. சொடலி குறி தவறாமல் அடித்த அடியில் திரை கிழிந்தது போல் படமெடுத்தப் பாம்பின் தலை இரண்டாய்க் கிழிந்தது. தங்கமணி ஓடிப்போய் குழந்தையைத் தூக்கி முத்தமிட்டு, சொடலியை கண்ணீர்ப் பொங்க கட்டியணைத்துக் கொண்டாள். “அடி சக்க! புதுப்பொண்ணு பூவனுக்கு ஏத்த சோடிதான்டோய்” தெருக்காரர்கள் சொடலியை புகழ்ந்தார்கள்; கொண்டாடினார்கள்.
பொழுதடைந்ததும் வீட்டில் விளக்கேற்றி விட்டு முற்றத்தில் ஆவுடையோடு கதை பேசிக்கொண்டிருந்த சொடலி. பாம்பைப் போல் வளைந்து வளைந்து சென்றவனைப் பார்த்து, “யாருக்கா இந்த ஆளு? இப்படி தடுமாடிட்டுப் போறான். நம்ம தெருவா?” என்றாள்.
“நம்ம தெரு இல்ல. பக்கத்துத் தெரு”
“பக்கத்துத் தெருவா! முந்தா நேத்து நம்ம தெரு கரி நாயி அவுங்க தெருவுக்குப் போனதுக்கு, அந்தத் தெருப்பயலுவ கல்லக்கொண்டு எறிஞ்சி நாயி கால ஓடச்சிப்புட்டாணுவன்னு செவுடிக்கெழவி சொன்னா. நீங்க என்னன்னா அந்தத் தெருக்காரன நம்மத் தெருக்குள்ள என்ன மயித்துக்கு உடுதீய? அதுவும் குடிகாரப்பயல.” என்று கோவம் கொண்டாள் சொடலி.
“தெனக்கியும் வரமாட்டான். குடிச்சா மட்டுந்தான் நம்ம தெரு வழியா வீட்டுக்குப் போவான். நிதானமாயிருக்கும் போது அவுங்க தெரு வழியாத்தான் போவான்” என்றாள் ஆவுடை.
“அதென்ன குடிச்சா மட்டும் நம்ம தெரு வழியாப்போறது! அப்புன்னா அவனுக்கு சாராய போத தலைக்கேறியதும் வேற ஏதோ ஒரு போத தேவப்படுது. அதான் இந்த வழியா வாரான்.”
“அடியே! மெல்லமாப் பேசு. அவன் ஊர் நாட்டாமையோட மருமவன். நம்ம பேசுறது அவங் காதுல உழுந்துறப் போவுது. “
“நாட்டாம மருமவன்னா ரெண்டு கொம்பா மொளச்சிருக்கு? தப்பு யாரு செஞ்சாலும் தட்டிக் கேக்கணும்; மீறி செஞ்சான்னா நாலு தட்டுத் தட்டனும். அப்புந்தான் பயப்புடுவானுவ. இல்லன்னா நம்மள பயமுறுத்திக்கிட்டே இருப்பானுவ.”
“சரிசரி, அவங் கதய அப்புறமாப் பேசலாம். பூவன் வர்ற நேரமாச்சு. நீ போயி சோறுகறிய சூடு பண்ணு. நா வாரேன்” ஆவுடை அவள் குடிசைக்குப் போனாள். சொடலி கடும் சினத்தோடு தன் குடிசைக்குள் நுழைந்தாள்.
பூவோடு குடிசைக்குள் நுழைந்தான் பூவன். சொடலி வாங்கி தலையில் வைத்ததும் சாணி மொழுகிய குடிசை மல்லித்தோட்டமாய் மணமணத்தது. ஒரே வாழையிலையில் இருவரும் அமர்ந்து ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டனர். மண்ணெண்ணெய் விளக்கு அணைக்கப்பட்டும் மினுக்கெட்டாம் பூச்சி போல சொடலி சிரிப்பு மின்னியது. கூரையில் எலிகளின் கீச்சு சத்தம். குடிசைக்குள் முத்தச் சத்தம்.
பக்கத்துத் தெரு வெட்டும்பெருமாள் சாராயம் குடித்துவிட்டு சொடலி, ஆவுடை அவர்களின் தெரு வழியாய் வரும்போதெல்லாம் சாரம் குண்டிக்கு மேல்தான் இருக்கும். முழுக்கைச் சட்டை போட்டிருந்தாலும் புஜங்கள் தெரியும்படி நல்ல மேல ஏத்தி சுருட்டிவிட்ருப்பான்; நெஞ்சு முடிய காட்டியபடி திறந்து போட்டுருப்பான். மீசையை முறுக்கி விட்டிருப்பான். தெரு முடியுமிடத்தில் கிடக்கும் வட்டக் கல்லில் அமர்ந்து செய்யது பீடி இழுப்பான். சில நேரம் நெருப்பட்டி இல்லாதபோது தெருவின் கடைக்கோடி வீட்டின் கதவைத் தட்டி வாங்கி பற்றவைத்து வீசிச் செல்வான்.
ஒரு நாள் பூவன் மேய்ச்சலுக்கு விட்டிருந்த தன் வெள்ளாட்டங் குட்டிகள் மாலையாகியும் வீடு திரும்பாததால், அவன் ஒரு திசையிலும் சொடலி ஒரு திசையிலும் தேடி அலைந்தனர். பொழுது நல்ல இருட்டி விட்டது. இருவரும் ஒவ்வொரு ஆட்டுக்கிடையாய் போய்ப் பார்த்தார்கள். கடைசியாக மலையாளத்தான் கிணற்றுப் பக்கத்தில் வளந்தப்பேச்சியின் கிடை ஆடுகளுடன் சேர்ந்து மேயப்போன தகவல் கிடைத்து, சொடலி அவனின் ஆட்டுக் கிடையில் போய், தாயாட்டினை தன் சேலை முந்தானையால் கழுத்தில் சுருக்குப் போட்டுக்கொண்டு பிடித்து வந்தாள். தாயாட்டின் பின்னால் தாவிக் குதித்தோடி வந்தன குட்டியாடுகள். சொடலியின் கால்களில் அவ்வப்போது சப்பு சப்பென்று மிதித்து பின்னாலிருந்து தாயாட்டின் மடுவில் பால் குடித்து பாதையை விட்டு விலகியும் சேர்ந்தும் விளையாடிக்கொண்டு இரண்டும் வந்தது.
தன்னுடைய தெருவின் ஒத்தையடிப் பாதையில் மலைப்பாம்பு ஒன்று மனநலம் பாதிக்கப்பட்ட வெள்ளந்தி ஆட்டினை இறுக்கி முறுக்கிக் கொண்டிருந்தது. ஆடு வலி தாங்காமல் கதறித் துடித்தது. சொடலியின் தாயாடு மலைப்பாம்புவைக் கண்டு மிரண்டு முந்தானைச் சுருக்கிறுக பின்னாலிழுத்தது. குட்டியாடுகள் கதறலைக் கேட்டுக் கனைக்கத் தொடங்கின. சொடலித் திடுக்கிட்டு ஆட்டை அவிழ்த்துவிட்டு சேலையை வரிந்து கட்டி, முந்தானையை இடுப்பில் சொருகி, மலைப்பாம்பின் வாலைப் பிடித்திழுத்து, அதனோடு மல்லுக்கட்டி, உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் வெள்ளந்தி ஆட்டினை உடும்பாய் பிடித்திருந்த பிடியை உடங்கம்பால் விளாசு விளாசென்று விளாசினாள். மலைப்பாம்பு பிடியைவிட்டு பாதையில் மல்லாந்தது. மல்லாந்த பாம்பின் வாலைப் பிடித்து மண் தடத்தில் தரதரவென இழுத்து வந்து தெருவிளக்கு வெளிச்சத்தில் போட்டாள். பாம்பு வாயைப்பிளந்து வலியில் கத்தியது. ஆவுடை சத்தம் கேட்டு முதல் ஆளாய் ஓடி வந்தாள். முற்றத்தில் தென்னந்த்தட்டிப் பின்னிக்கொண்டிருந்தவர்களும் திண்ணையிலமர்ந்து கதைப் பேசிக்கொண்டிருந்தவர்களும் ஓடோடி வந்தனர். வாயிலிருந்து இரத்தமும் எச்சிலும் வடிந்து கொண்டிருந்த மலைப்பாம்பின் முகம் பார்த்ததும் பதறித் துடித்தனர் அனைவரும்.
“எ சொடலி, என்னாச்சி? எதுக்கு இப்படிப் போட்டு அடிச்சிருக்க?”என்று எல்லோரும் கேட்க, நடந்ததைச் சொன்னாள்; நடைப்பாதையில் துடிதுடித்துக் கொண்டிருக்கும் வெள்ளந்தி ஆட்டினை வேகமாகப் போயித் தூக்கி வரச்சொன்னாள்.
சந்தனமாரி அடிபட்ட சுண்டெலியாய் சுருங்கிப் போய்க் கிடந்தாள். தரையில் அமர வைத்து தலையை தாங்கிப் பிடித்தாள் ஆவுடை. தண்ணீர் கொடுத்தார்கள்; கண்ணீர் துடைத்தார்கள். ரவிக்கை கிழிந்திருந்தது. மார்புகளில் பாம்பு கடித்த பல் தடம். சோறாக்கிக் கொண்டிருந்த சந்தனமாரியின் தாய் குயிலி சேதி கேட்டு உலையாய்க் கொதித்து ஓடோடி வந்தாள். “பாவிப்பய பைத்தியகாரப் புள்ளய இப்படி பண்ணிருக்கான, அய்யோ… எம்புள்ள உடம்பெல்லாம் ரெத்தக்கறையா இருக்கே! காட்டு நாயிக்கிப் பொறந்தவன், கட்டையிலப் போவ; ஓங் காலுகையில குட்டம் புடிக்க; ஒனக்கெல்லாம் நல்ல சாக்காலமே வராது; அழுந்துதான் சாவ” என்று வெடலப்போட்ட தேங்காய்ப்போல் மனமுடைந்து சிதறி மண்ணள்ளித் தூற்றினாள் வெட்டும்பெருமாள் மீது.
குயிலி சந்தனமாரியை கைத்தாங்கலாகக் கூட்டிக்கொண்டு வீட்டுக்குப் போனாள். கிழிந்த உடைகளையெல்லாம் கழற்றிவிட்டு, வேறு உடை உடுத்திவிட்டாள். காயத்திற்கு மருந்திட்டு, போர்வை விரிப்பில் அமர வைத்து, “இரு! சோறு போட்டுட்டு வாரேன்” என்றாள் குயிலி. “எம்மோ.. கருவாட்டுக் கொழம்புதான?” என்றாள் சந்தனமாரி. “ஆமா, ஒனக்குப் புடிச்ச கருவாட்டுக் கொழம்புதான்.” சோற்றில் குழம்பை ஊற்றி, முள்ளுப் பார்த்து பிசைந்து ஊட்டினாள் குயிலி. வலியை மறந்து மண் சட்டியிலிருந்த கருவாட்டுக் குழம்பை கையிலூற்றி நக்கினாள் சந்தனமாரி.
“ஒனக்கு எத்தனை நாளு சொல்றது. கருக்கலானதும் காட்டுக்குள்ளத் திரியக்கூடாது. வூட்டுக்கு வந்துருனுமுன்னு”
“நா வூட்டுக்கு வரலாமுன்னுதாம்மா கெளம்புனேன். நம்ம சொடல சாமிதான் கூப்ட்டு, ‘வுட்டுட்டுப்போன ஓன் புருசன்; செத்துப்போன ஓன் புள்ள; எல்லாத்தையும் ஓங்கிட்டக் கொண்டுவந்து சேக்குறேன். எனக்கு நீ கொடவிட்டு குடுப்பீயா’ன்னு கேட்டுச்சி. நா சொன்னேன். நீ மட்டும் எம்புருசனையும் புள்ளையையும் திருப்பிக் குடுத்துட்டன்னா, இந்த ஊரே திரும்பிப் பாக்குறமாறி ஒனக்குக் கொட குடுப்பேன். எல்லாரும் ஒனக்கு ஒத்தக்கரும்பு(கிடா) தான் வெட்டுவாங்க. நா ஒனக்கு ரெட்டக்கரும்பு வெட்டுறேன்”ன்னு சொன்னதும் சொடல திருநாறத் தந்து ‘நா காப்பாத்தித் தாரேன்’னு சொல்லிச்சி. நா வாங்கிப் பூசிட்டு வீட்டுக்கு வரும்போதுதான் இந்த அண்ணன் என்னிய பின்னாடி வந்து கட்டிப்புடிச்சி கடிச்சி வச்சிட்டாரு.”சந்தனமாரி சொல்லி முடிக்கவும் நிரம்பிய குளத்திலிருந்து நீர் கசிவதுபோல கண்ணீர் கசிந்தது குயிலிக்கு.
“எதுக்கும்மா அழுற? ஒன்னியவும் அந்த அண்ணன் கடிச்சிப்புட்டாரா! “கேட்ட மகளை “ஆமா”யென்று மார்போடு அணைத்துக்கொண்டாள் குயிலி.
தரையில் கிடந்த வெட்டும்பெருமாளுக்கு அரையில் துணியில்லை. குழந்தைகள் பார்த்திடக் கூடாதென்று கொடியில் கிடந்த துண்டினையெடுத்து, கட்டிவிட்டாள் சொடலி. ஆவுடையும் சொடலியும் அவனைத் தூக்கி மின்கம்பத்தில் சாய்த்து வைத்து, ஆவுடை அவனைப் பிடிக்க சொடலி ஆடு கட்டும் கயிற்றை அவிழ்த்து மின்கம்பத்தில் கட்டி வைத்தாள். வெட்டும்பெருமாளின் குனிந்த தலை நிமிரவேயில்லை. நிமிர்ந்த ஆண்குறி தணியவேயில்லை. முருங்கைமரப் பிசின்போல உடம்பிலிருந்து இரத்தம் வழியத் தொடங்கியது. வயதான கக்கமுத்து அவனை வந்து பார்த்துவிட்டு, “எ தாயி, சொடலி! கழுதப்பயல அவுத்து வுடுங்க. யாராவது ஒருத்தர் போயி ஊர் நாட்டாமக்கிட்டயும் இவனோட அம்ம உச்சிமகாளிக்கிட்டயும் மொதல்ல தகவலச் சொல்லுங்க.” என்றார்.
“இவன் அப்படியே ஊருக்கு நல்லது செஞ்சிட்டான். ஓடிப்போயித் தகவலு சொல்ல. எச்சப்பய, மனசுக்குச் சரியில்லாத புள்ளைய மானவங்கம் படுத்திருக்கான். இவனப் போயி அவுத்துவுட சொல்றீய தாத்தா. இதே எ..ஊரா இருந்துச்சின்னு வையி. வெங்கப்பயல கழுத்தறுத்துக் கால்வாயில வுட்டுருப்பேன். “என்றாள் சொடலி.
“தகவலுலாம் சொல்ல வேணாம். அவியளா தேடிவந்து இந்த மாட்டுப்பயல அவுத்துட்டுப் போட்டும். இல்ல வெள்ளனவர இங்னயே கெடந்துச் சாவட்டும். விடிஞ்சதும் நாட்டாமக்கிட்டச் சொல்லி பஞ்சாயத்தக் கூட்டி இவனுக்கொரு முடிவு கெட்டனும். இவன இப்படியே வுட்டா, இவனுக்கு ரொம்ப தொக்காப் போயிரும். “சொடலி புருசன் பூவன் சொல்ல, “ஆமா தாத்தா! எதுருந்தாலும் காத்தால நாட்டாமக்கிட்டப் பேசிக்கலாம்” என்றாள் ஆவுடை.
“மூணு மாசத்துக்கு முந்தி வயக்காட்டு வேலைக்குப் போன கந்தம்மாக்கிட்ட, தப்பா நடந்துக்க பாத்த வேலுக்கண்ணுப் பயல பஞ்சாயத்தக் கூட்டி, வாரு பெல்ட்டால வெளு வெளுன்னு வெளுத்தாருல்ல நாட்டாம. அந்தமாறி நாளைக்கிப் பஞ்சாயத்துல வச்சி இவந் தலையில சாணியக் கரைச்சி ஊத்தி, செருப்பாலயே அடிக்க வைக்கணும்.”- வடிவு சொல்லிவிட்டு வெட்டும் பெருமாளைப் பார்த்து காறித்துப்பினாள்.
“ஆமா, கிழிப்பாரு! வேலுக்கண்ணு அவுங்க சாதி இன்னைக்கி அடிப்பாரு. நாளைக்கிச் சேத்துக்குவாரு. நம்ம அப்பிடியா?! அதே தப்ப நம்மப்பய ஒருத்தன் செஞ்சிருந்தாணு வை, வெட்டிப் பொதச்சிருப்பானுவ; அவங் குடும்பத்தயே ஊரவிட்டே அடிச்சித் தொரத்திருப்பானுவ. நம்மூரு நாட்டாமயப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும். அந்த ஆளு.. தான் ஓடம்புலருக்குற சோத்தாங்கைய ஒசத்தியாவும் பீச்சாங்கைய கேவலமாவும் பாக்கக் கூடியவன். நம்மலாம் அவனுக்கு பீச்சாங்கையி மாதிரி தேவக்கித்தான் வச்சிருக்கானொழிய, மனுசனா மதிச்சிலாம் கெடையாது. நல்லா புரிஞ்சிக்கோங்க. வெட்டும்பெருமாள் யாருன்னு ஒங்க எல்லாத்துக்கும் நல்லாத் தெரியும். நாட்டாமக் கூடப்பொறந்த தங்கச்சியோட மவன்; சொந்த மருமவன். அவனப் போயி கட்டி வச்சிருக்கீய. பூவா! நா சொல்றத கேளு. அவனுவ இவனத்தேடி ஆளோட வர்றதுக்குள்ள அவுத்து வுட்டுருங்க. இந்த நாயி நல்ல போதக் கெறக்கத்துலருக்கான். இவனுக்கு என்ன நடந்ததுன்னு ஓர்மையே இல்ல. எங்கேயோ குடிச்சிட்டு வுழுந்துட்டான்னு அவனுங்க நெனச்சுக்குவாணுவ. நல்லாருப்பீய சீக்கிரம் அவுத்து வுடுங்க. வந்தானுவன்னா பெரிய வம்பாப் போயிடும். எனக்கு போயிச் சேருற வயசு எது நடந்தாலும் பரவாயில்ல. நீங்களாம் வாழ வேண்டிய புள்ளயளு. வெண்டிப்பயலுவக்கிட்ட வம்பு வேணாம் பா. ஒங்களக் கெஞ்சிக் கேட்டுக்குறேன். “கால்கள் நடு நடுங்க, கைகள் பட படக்க, உடம்பெல்லாம் வியர்த்து, ஊன்றிய கம்பினை கீழே போட்டுவிட்டு தரையில் குத்தவைத்து, தலையில் கை வைத்து, வயிற்றுச் சுருக்கம் விரிய மூச்சியிழுத்து அழுதார் கக்கமுத்து.
“சரி அழாதியும்” என்று வெட்டும்பெருமாளை அவுத்துவிடச் சென்ற பூவனை இடை மறித்து, “தாத்தோ! இப்படியே இவன வுட்டாம்ன்னா இன்னைக்கி சந்தனமாரி, நாளைக்கி நாங்கன்னு இது தொடரும். இன்னைக்கி இதுக்கொரு முடிவுக்கட்டியே ஆவனும். அதுக்கு ஏதும் வழியிருந்தாச் சொல்லும்” என்றாள் சொடலி.
“பத்து வூட்டுக்காரன் நூறு வூட்டுக்காரன எதுக்கனுமுன்னா ஒரே வழி! கல்லக் கொண்டு எரிஞ்சா ஓடுற நாயா இல்லாம, எரிஞ்சவன ஓட வைக்கிற தேனீ மாறி ஒத்துமையா இருந்தோமுன்னா எவ்வளவு பெரிய கல்லாயிருக்கட்டும்; எரிஞ்சவன் எவ்வளவு பெரிய ஆளாயிருக்கட்டும் ஓடஓட வெரட்டலாம். நாயா? தேனீயான்னு நீங்களே முடிவு பண்ணுங்க. அதுக்குள்ள நா வீட்டுக்குப் போயிட்டு வெளக்குப் பொருத்திட்டு வாறேன்” கம்பினை கெதியாய் தரையில் ஊன்றி கண்ணீரைத் துடைத்தபடி போனார் கக்கமுத்து.
“ஆவுடக்கா! புள்ளயளுத் தூங்கி வழியிது பாரு. கூட்டிட்டுப் போயி சோறுகொடுத்து தூங்க வை. தங்கமணிக்கா! நீ எதுக்கு கைக்குழந்தைய வச்சிக்கிட்டு காத்துக் கெடக்க? போயி பாலக் கொடுத்து தொட்டுல்லப் போடு. அவனுவ வந்தா நாங்க பேசிக்கிறோம். நீங்க போங்க” என்றாள் சொடலி.
தெருக்காரர்களும், “ஆமா! சொடலி சொல்றது சரிதான். அவனுவ வந்தாணுவன்னா குஞ்சினும் பாக்க மாட்டாணுவ; குரும்பலுன்னும் பாக்க மாட்டாணுவ. பச்சப்புள்ளக்காரியும் சின்னப் புள்ளயள வச்சிருக்கிறவளும் மொதல்ல வீட்டுக்குப் போங்க” என்றார்கள்.
“இது நல்ல கதையா இருக்கே.. எம்புள்ளய நல்ல பாம்புக்கிட்டயிருந்து காப்பாத்துன சொடலிய, நட்டாத்துல வுட்டுட்டு நா போவ மாட்டேன்” என்றாள் தங்கமணி.
“ஆமா நானுந்தான். என்ன வந்தாலும் ஒரு கை பாத்துருலாம்” ஆவுடை சொன்னாள்.
“சரிங்கத் தாயி, நீங்க போவ வேணாம். புள்ளயள மட்டும் வீட்ல வுட்டுட்டு வாங்க “என்றார்கள் எல்லாரும்.
ராத்திரியில் நாகர்கோவிலிருந்து பாணான்குளம் வழியாக திருநெல்வேலி நோக்கிச் செல்லும் ரயில் கூவிச் சென்ற சத்தத்தை வைத்து நேரம் பத்துமணியென்று அனைவரும் உறுதி செய்தனர். அது மழைக்காலமென்பதால் இடிந்த வீட்டைப்போல் வானம் இருண்டுக் கிடந்தது. மேகங்கள் தொட்டால் உடைந்துவிடும் நீர்க்குமிழிகளைப் போல் திசையெங்கும் திரண்டு நின்று கொண்டிருந்தது. குளிர்க்காற்று ஊசியாய் காதுக்குள்ளிறங்கி அவர்களின் உடலை உலுப்பிக் குலுக்கியது. தெருவிளக்கு வெளிச்சத்திற்கு ஈசல்களும் பூச்சிகளும் வந்து குவிந்த வண்ணமிருந்தன. உறங்காத ராக்கோழி ஒன்று அவைகளை ஓடி ஓடி கொத்தித் தின்று கொண்டிருந்தது. பூச்சிகளைப் பிடித்துத் தின்ன வேப்ப மரங்களிலும் பூசன மரங்களிலும் உக்காந்து ஆந்தைகள் அலறிக் கொண்டிருந்தன.
தெருவின் வடக்குத் திசைநோக்கி காலில் அடிபட்ட கரிநாய் குலைக்கத் தொடங்கியது. பூச்சிகளைக் கொத்திய கோழி நிமிர்ந்து நின்று நாய் குலைத்த திசையை நோக்கி வெறித்துப் பார்த்தது. அலறிய ஆந்தைகள் ஆபத்தையுணர்ந்து பறந்தோடின.
ஒத்தையடிப்பாதையில் சிறிய வெளிச்சம்; தோல் செருப்பின் சரக் சரக் சத்தம். கரிநாய் ஓடிப்போய் உள்ளே வராதேயென்று எச்சரிக்கும்படி கருஞ்சிறுத்தையாய் சீறிக்கொண்டு முன்னேறியது.
தீப்பந்தத்தோடு முதல் ஆளாய் தெருவுக்குள் நுழைந்தான் வெட்டும்பெருமாள் மூத்த தம்பி காசி. அவனுக்கு அடுத்து இரண்டாவது தம்பி தளவாய். அதற்கெடுத்து கடைக்குட்டி மந்திரமூர்த்தி. நான்காவதாக பின்னால் வந்தாள் தாய் உச்சிமகாளி. அவளுக்குப் பின்னால் அந்தத் தெருவைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள். மொத்தம் எட்டுபேர்; அதில் இருவர் கையில் வெட்டுக்கத்தி; மூவர் கையில் கட்டக்கம்பு.
உச்சிமகாளி முன்னுக்கு வந்து, “எப்பா, எல்லாரும் இந்த ராத்திரிகாணு இப்படி கூட்டமா ஒக்காந்துருக்கீயள என்ன விசியம்?” என்றாள்.
சொடலி தன் கூட்டத்துக்கு முன்னால் வந்து நின்று, “கெட்ட விசியம். சந்தனமாரிய ஒரு தெனவெடுத்தப் பய கெடுக்கப் பாத்தான். எல்லாரும் சேந்து காப்பாத்திட்டோம்” என்றாள்.
“குயிலி மவ மண்டைக்கிச் சரியில்லாம காட்டுக்குள்ளத் திரிவாளே அந்தப் புள்ளயவா? “
“ஆமா! அந்தப் புள்ளயத்தான்”
“அட தாயொலிமவனுக்கு சு…னியில எவ்வளவு தண்ணீ வச்சிருந்தா இப்படி பண்ணிருப்பான். ஆளு யாரு அசலூரா? உள்ளூரா? “உச்சிக்கேறிய கோவத்தில் கொந்தளித்துக் கேட்டாள் உச்சிமகாளி.
“பாத்தா.. உள்ளூரு மாரிதான் தெரியுது. ஒங்களுக்குத் தெரியும்ன்னு நெனைக்கிறேன். வந்து பாருங்க” என்று சொடலி ஒதுங்கி நின்றாள். சொடலிக்குப் பின் நின்ற கூட்டம் சரி பாதியாய் பிரிந்து நின்றது. மின்விளக்கு வெளிச்சத்தை நோக்கி உச்சிமகாளி தலைமுடியை அள்ளி கொண்டை போட்டுக்கொண்டு நான்கு கால் பாய்ச்சலில் போனாள்.
கம்பத்தில் கட்டி வைத்திருந்த வெட்டும்பெருமாள் கை கால்களை நீட்டி முறுக்கி, ஈரக்குலையில் ஈட்டிப் பாய்ந்த பன்றியாய் உறுமிய குரல் கேட்டு, “அண்டிப் பொழைக்கிற நாய்களுக்கு எவ்வளவு குண்டி கொழுப்புருந்தா எம்புள்ளய அடிச்சிக் கெட்டி வச்சிட்டு, எங்கிட்டயே அடையாளங் காட்டச் சொல்வீய? எலேய் காசி, தளவா, மூர்த்தி இந்த ஈனத் தேவ்டியா மக்கள உசுரோட விடாதீங்கள” என்று மின்வேலியைத் தொட்ட மிருகமாய் கதறித் துடித்து கட்டளையிட்டாள் உச்சிமகாளி.
பத்து நிமிடத்தில் பத்து குடிசைகளும் தீ வைத்து கொளுத்தப்பட்டன. வாழைக்குலைபோல் எதிர்த்து நின்றவர்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டனர். கிடையில் கிடந்தக் கிழவன்களும் கிழவிகளும் ஓங்கி மிதித்ததில் ஓடையில் கிடக்கும் கூழாங்கல்லாய் உயிரற்றுக் கிடந்தனர். பெண்களின் தலைமுடி அருகம்புல்லைப் போல் அறுத்தெறியப்பட்டது. பால் குடித்துக் கொண்டிருந்த தங்கமணியின் கைக்குழந்தையின் முகமும் பால் சுரந்த தங்கமணியின் மாரும் சிதைக்கப்பட்டன. குழந்தைகள் தீக்காயங்களுடன் மறைவிடங்களில் பதுங்கி மயக்கமுற்றனர். கட்டிப்போட்ட ஆட்டுக்குட்டிகள் தீயில் கருகி, வயிறு ஊதி, மல்லாந்துக் கிடந்தன. தொழுவத்தின் குருவிக்கூட்டில் இரைக்காக வாய்ப்பிளக்கும் குஞ்சுகள் வெக்கைத் தாங்காமல் வாய்பிளந்து தரையில் விழுந்து இறந்தன. ஓலைக்கூரையிலிருந்து தாய் எலிகள் தப்பியோடின. கண் திறக்காத குஞ்சலிகள் கரிக்கட்டையாயின. ஆண் பூனைகள் ஓட்டம் பிடித்தன. பெண் பூனைகள் குட்டிகளை வாயில் கவ்விக்கொண்டு வேறு இடம் நகர்ந்தன. கோழிக்கூட்டுக்குள் அடையிலிருந்த பெட்டைக் கோழிகள் முட்டைகளைப் பாதுகாத்தபடியே மூச்சை விட்டன. முற்றத்து வேப்ப மரத்தில் படர்ந்திருந்த கொடிகளின் வெற்றிலைகள் சுண்ணாம்பும் பாக்கும் சேர்க்காமலயே ரத்தத்தில் சிவந்திருந்தன.
ஆவுடையின் சீலையை இழுத்து, பிறப்புறுப்பில் மிதிக்கப் போன காசியின் காலினை அடிபட்டுக் கிடந்த பூவன் எழுந்து தடுக்க, பின்னால் ஓடி வந்த மந்திரமூர்த்தி பூவரசமரத்துக் கிளையை வெட்டுவதுபோல் பூவன் கையை வெட்டினான். பூவன் கழுத்தறுத்தக் கிடாவைப் போல் தரையில் உருண்டான்; வலியில் துடித்தான். உடைந்த குழாயில் வெளியேறும் நீரைப் போல் வெட்டிய பூவன் கையிலிருந்து இரத்தம் பீச்சியடித்தைப் பார்த்து சொடலி கதறித் துடித்தாள். கையருகே கிடந்த கல்லையெடுத்து மந்திரமூர்த்தியின் மண்டையை உடைத்தாள்.
கொட்டடித்ததும் குதிபோட்டு ஆடும் சாமியாடியைப் போல் உச்சிமகாளி நாக்கை நீட்டி, கண்ணை உருட்டி, “எல இவ லேசுல சாவ மாட்டா போல. இந்த முண்டையையும் இவ புருசனையும் கம்பத்துல கட்டி வச்சி, ஒடம்புல ஒட்டுத்துணியில்லாம தோல உரிச்சியெடுங்கல” என்று உச்சிமகாளி சொடலி உச்சிமுடியைப் பிடித்து, தரையில் அவளை தர தரவெனயிழுத்து மின்கம்பத்து முன்னால் கொண்டு போட்டாள்.
வெட்டும்பெருமாள் தம்பிகள் பூவனையும் சொடலியையும் மின்கம்பத்தில் அம்மணமாய் கட்டி வைத்து, துணி வெளுப்பது போல அடி வெளுத்தார்கள்; களத்தில் கதிரடிப்பது போல உடலில் கட்டையால் அடித்தார்கள். குடிசையில் பற்றிய தீயிலிருந்து தப்பித்த சந்தனமாரி தெருவுக்கு ஓடி வந்தாள். “வாடி நாரக்கூதி. ஒன்னத் தொட்டதுக்குத்தான எம்புள்ளய நார்நாரா கிழிச்சாணுவ, இந்த நாயிக்கிப் பொறந்தவணுவ. பைத்தியக்கார வேச! ஒன்ன மொதல்ல தொலச்சிக் கெட்டணும்.” என்று சந்தனமாரியை சொல்லாலும் கல்லாலும் அடித்து விரட்டினாள் உச்சிமகாளி. “எம்மோ..! சொடலி அக்காவ அடிக்காதீங்க. அவ பாவம்; ரொம்ப நல்லவ; அவள விட்டுடுங்க.” அடி தாங்காமல் அழுதுகொண்டே காட்டுக்குள் ஓடினாள் சந்தனமாரி.
அடித்த அடியில் பூவனுக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கி தலை தொங்கியது; சொடலி கையைவிட்டு பூவன் கை பிரிந்தது. சொடலி ‘பூவா’யென்று கதறி, புழுவாய்த் துடித்து, அவளும் சருகாய் உயிரை உதிர்த்தாள். ஆவுடையும் இன்னும் சிலரும் அழக்கூட தெம்பில்லாமல் மயக்கத்தில் கிடந்தனர்.
குடியிருப்புப் பகுதியில் காட்டு யானைகள் புகுந்தது போல் குடிசைகள் சூறையாடப்பட்டிருந்தன; மலையில் தீப்பிடித்தது போல் குடிசைகள் பற்றியெறிந்து கொண்டிருந்தன; மழைக்காலத்தில் திசையெங்கும் கேட்கும் தவளைகள் சத்தம் போல் தெருவெங்கும் ஒப்பாரியும் ஓலமும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தன. குப்பைக் கிடங்கு போல் தெருவினில் புகை போய்க் கொண்டிருந்தது. நாதியற்ற சனங்களுக்கு இயற்கை மழையைப் பொழிந்து பல உயிர்களையும் பொருட்களையும் காப்பாற்றியது.
நாட்கள் நத்தையாய் மெல்ல நகர்ந்தது. சிறிய காயம் பட்டவர்கள் பெரிய காயமடைந்தவர்களைத் தேற்றினர். தவழும் குழந்தை நடக்கத் தொடங்குவதுபோல் தப்பிப் பிழைத்தவர்கள் இழந்ததை மீட்கத் தொடங்கினர். சந்தனமாரி அப்போது போனதுதான்! அதன்பின் தெருவுக்குள் கால் வைக்கவேயில்லை.
காட்டுக்குள்ளிருக்கும் இருபத்தொரு பந்திப் பூடங்கள் கொண்ட வண்ணார மாடன் கோயிலருகே நிற்கும் பெரிய ஆலமரத்தின் அடியில்தான் ராவும் பகலும் படுத்துக் கிடப்பாள். அவளின் அழுக்கு மூட்டைகளை பின்னிய பாம்பினைப்போல் முறுக்கிக் கிடக்கும் ஆலமர விழுதுகளின் இடுக்குகளில் திணித்து வைத்திருப்பாள். கடைசி வெள்ளி செவ்வாய் நாட்களில் நடுச்சாமத்தில் கோயில் மணியை அடித்து, உண்டியல் மேலிருக்கும் திருநீறுக் கொப்பரையில் திருநீறையள்ளி நெற்றியில் பட்டையடித்துக் கொண்டு சாமியாடுவாள். வண்ணார மாடன் பூடத்திற்கு எதிர்த்திசையிலிருக்கும் சங்கிலி பூதத்தான், முண்டன், கட்டையடி பெருமாள், நீலகண்டன் பூடங்களின் நடுவில் குத்தி வைக்கப்பட்டிருக்கும் வெட்டருவாளை எடுத்து மண்ணை கிடாவைப் போல் வெட்டி இரத்தம் குடிப்பாள். இல்லாத மேளக்காரர்களை ‘இருளப்பனுக்கு அடிங்கப்பா’ என்று நாக்கைத் துருத்துவாள். மணிச்சத்தத்திற்கும் மேளச்சத்தத்திற்கும் உச்சாட்டம் போட்டு வல்லயக் கம்பையெடுத்து சுடுகாட்டுக்கு வேட்டைக்குப் போயி, எரிந்த பிணத்தின் மிச்ச எலும்புகளை வாயில் கவ்விக்கொண்டு கோயிலைப் பார்த்து ஓடோடி வந்து, தன் தெருக்காரர்களுக்கு திருநீறு கொடுத்து, “யப்பா…! யாரும் கண்ணு கலங்காதிங்க. இனிமே ஒங்களுக்கு ஒரு கஷ்டமும் வராம, நா பாத்துக்குறேன்; நா காப்பாத்தித் தாரேன் சரியா! நீ அடிப்பா மேளத்த” என்று ஆங்காரமாய் ஆடி அயர்ந்து பூடத்தின் மேலயே படுத்துறங்கி விடுவாள். விடிந்ததும் எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைத்துவிட்டு ஆலமரத்தடிக்குச் சென்று படுத்துக் கொள்வாள். காடும் காட்டு வண்ணார மாடன் கோயிலும்தான் சந்தனமாரிக்கு அடைக்கலமானது.
சொடலி இறந்து சில வருடம் கழித்து, அவள் இறந்த அதே நாளில் வெட்டும்பெருமாள் வட்டக்கல்லருகே தலை வெட்டப்பட்டு முண்டமாய் கிடந்தான். அடுத்த ஒரு வாரம் கழித்து காசி மணிமுத்தாறு கால்வாய் கரையில் கழுத்தறுக்கப்பட்டு இறந்து கிடந்தான். அதற்கு அடுத்த வாரம் மந்திரமூர்த்தி குளத்து புறமடையில் பிணமாய் மிதந்தான். அவனையெடுத்து மூஞ்சி கருக்கலில் மாட்டுக்கு வைக்கோல் பிடுங்கப் போனயிடத்தில் வாயும் கைகளும் கட்டப்பட்ட நிலையில் வைக்கோல் படைப்பில் போட்டு தீ வைத்து கொளுத்தப்பட்டாள் உச்சிமகாளி. நாட்டாமை பயந்து வீட்டுக்குள்ளே பதுங்கிக்கொண்டார். வீட்டைச்சுற்றி அல்லும் பகலும் ஆட்கள் காவல் காத்தனர். தளவாய் உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஊரைவிட்டே ஓடி தலைமறைவாய் ஆனான்.
அடுத்தடுத்து நடந்த மர்மக் கொலையால் ஊரே ஆடிப்போனது! கோடாங்கி, கைரேகை, கிளி ஜோசியம், நாடி ஜோசியம், சோழி போட்டு பார்த்தல், வெற்றிலையில் மை போட்டு பார்த்தல், குறி கேட்டல் என ஒன்றுவிடாமல் ஊர்க்காரர்களும் உச்சிமகாளி சொந்தங்களும் கொலைக்கான காரணத்தைக் கண்டறிய ஊர் ஊராய்த் திரிந்தனர். போனயிடமெல்லாம் கொலைகளைச் செய்தது ‘ஒரு பெண்’ணென்று துப்பு துலங்கியது. காவல்துறையும் கொலை நடந்த இடங்களில் கிடைத்தத் தடயங்களை வைத்து ‘பெண்தான்’ என்று உறுதிசெய்தது. அந்தப் பெண் வேறுயாருமில்லை ‘சொடலி’ தான் என்று ஊரும் உச்சிமகாளி குடும்பமும் நம்பத் தொடங்கியது.
சொடலி பேயிக்கு பயந்து கருக்கலானதும் ஊர் கதவடைத்துக் கொண்டது; சொடலித் தெருவில் கால் வைக்கவே பக்கத்துத் தெருக்காரர்கள் பயந்து செத்தனர்.
கருக்கல் தொடங்கியதும் சொடலிப் பேயாய் மாறி அரிப்பெடுத்த, அடக்கி ஒடுக்கிய, ஆதிக்க மலைப்பாம்புகளை எல்லாம் சந்தர்ப்பம் கிடைக்கும் போது சத்தமில்லாமல் சாவடித்துக் கொண்டிருந்தது வெள்ளந்தி ஆடு.



