இணைய இதழ் 114கட்டுரைகள்

வெண்ணிற இரவுகள்: காதலுக்காகவே காதலை யாசிக்கும் நித்தியக்காதலர்கள் – முஜ்ஜம்மில்

கட்டுரை | வாசகசாலை

வெண்ணிற இரவுகள் நாவலை சில ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு மூன்றாவது அல்லது நான்காவது வாசிப்புக்கு உட்படுத்துகிறேன். தாஸ்தாவஸ்கி இப்போதும் பெரிதும் ஆச்சரியப்படுத்துகிறார். உளவியல் ஆழம் மட்டுமல்ல, ஒரு திருமணமாகாத, தனியாக வாழும், பெரிய பொருளாதார பின்புலமற்ற, வெறும் கனவுகளின் துணையோடு வாழும் கனவுலகவாசியின்- இன்றும் பல வேலையற்ற பட்டதாரிகளின்- தனியர்களின்-அல்லது எல்லோரும் இருந்தும் தனியனாக உணரும் மனிதர்கள் நிறைந்த நவீன உலகிற்கு, எந்தவகையிலும் சிறிதளவு கூட அன்னியமாகிவிடாத அளவுக்கு நெருக்கமாக இருக்கிறது இந்த நாவல். தாஸ்தாவஸ்கி இந்நாவலின் பெரும் பகுதியை உரையாடலாகவே நகர்த்துகிறார். கிட்டத்தட்ட நாவல் முழுக்க உரையாடல்கள் மட்டும்தான். நிகழ்வுகள் என்று பெரிதாக எதுவும் நடைபெறுவதில்லை. ஒரு புறம் கனவும், கற்பனையும்; இன்னொரு புறம் உணர்ச்சிப் பெருக்கும் நிரம்பித் ததும்பும் ஒரு படைப்பு இன்றைய தலைமுறையின் துரித வாழ்க்கைக்கு சற்று பொறுமையிழக்க செய்யலாம். ஆனால், நாவலின் ஓட்டத்தோடு ஒன்றிப் போனபிறகு அது ஒரு வகையான சிம்பனி இசைக் கோர்வை போல ஒலிக்கத் தொடங்கி நம்மையும் அதனுள்ளே இழுத்து பயணிக்கச் செய்யும்.

பீத்தோவனின் ஐந்தாவது சிம்பனி உலகப் புகழ் பெற்றது. அதில் மைய இசை சரடு ஒன்று மரத்தின் தண்டு போல போய்க் கொண்டிருக்கும், இடையே அது வேறு வேறு லயத்திற்கு, கிளைகளாகப் பிரிந்து மெல்ல காற்றைப் போல அசைந்துகொண்டே இருந்தாலும் மீண்டும் மீண்டும் அதன் மைய இசைக்கு வந்து தொட்டுச் சொல்லும் ஒரு அழகான வடிவம் உள்ளே இயங்கும். முழுக்க முழுக்க அந்த கனவுலகவாசியின் உணர்ச்சி பெருக்குதான் இதன் மைய இசை. நாஸ்தெங்கா அவளுடைய கதைகளை ஆங்காங்கே சொல்லி கொண்டே வருவது அதன் கிளை பிரிவுகளாக விரவி மெல்ல நகர்வதாக இருந்தாலும், மீண்டும் நாயகன் அவளை நாஸ்தெங்கா என்று உருகி உருகி அழைத்துப் பேசும்போதெல்லாம் மீண்டும் நாம் நாயகனின் உணர்ச்சி மற்றும் உணர்வலைகளுக்குள் வந்துவிடுகிறோம். அதுதான் மைய இசை. இந்த நாவல் ரொமாண்டிக் காலகட்டத்தை சிறிது ஒட்டிச் செல்வதாகவும், அல்லது அதன் செல்வாக்கு சற்று கொண்டுள்ளதாகவும் கருத முடியும். ஏனெனில் இந்த நாவலுக்கு முன்பே பதினெட்டாம் நூற்றாண்டில் ஜெர்மனியில் பெருங்கவி கதே அவர்களின் புகழ்பெற்ற வெர்தரின் துயரம் என்ற நாவல் வெளிவந்து ஒரு புயல் போல அலையடித்தது. அந்த நாவலில் அதீதமாக உணர்ச்சிப் பெருக்கை பயன்படுத்தி இருப்பார் கதே. அவர் மற்றும் நண்பர் ஷில்லர் ஆகியோரது இலக்கிய இயக்கமே புயல் என்ற பெயர் கொண்டதாக இருக்கும். அதாவது உணர்ச்சிப் புயல். அந்த நாயகன் ஒரு பெண்ணை உருகி உருகி விரும்புவான். கடிதத்தின் வாயிலாகவே செல்லும் அந்த நாவலில் நாயகன் தன்னுடைய நண்பனுக்கு தன்னுடைய நிலையைச் சொல்வதாக கதை நகரும். இந்த கதையால் கதேக்கு ஒரே நாளில் மிக பெரிய இலக்கிய அந்தஸ்து ஜெர்மனியில் ஏபடுகிறது. இந்த நாவலை ஆங்கிலத்தில் நான் வாசித்தபோது அந்த மொழி தாண்டி அந்த உணர்ச்சி நிலைகள் என்னை அடித்துச் சென்றது. குறிப்பாக கடைசி பத்து பக்கங்கள் புரட்டி போட்டு அழ வைத்தது. அதில் நாயகன் கடைசியில் தன்னுடைய காதல் முயற்சியின் தோல்வியால் தற்கொலை செய்து கொள்வான். அந்த நாவல் வெளிவந்த போது நிறைய இளைஞர்கள் படித்து விட்டு அவர்களும் இதே போன்ற தங்களுடைய நிலைமையை நாவல் காட்டியுள்ளது என்று நாவலோடு தங்களை தீவிரமாக பிணைந்து தற்கொலையை ஒரு தீர்வாக கண்டனர். இதனால் அந்நாவல் தடை செயப்பட்டு சில காலம் கழித்து மீண்டும் தடை நீக்கப்பட்ட்டது. உலகையே கைப்பற்ற வேண்டும் துடித்த நெப்போலியன், எல்பா என்ற தீவில் சிறைபிடிக்கப்படுகிறார் அவருடைய எதிரிகளால். அப்போது அவர் கையில் இருந்த இந்த நாவலை மொத்தம் எழு முறை படித்ததாக ஒரு தகவல் இருக்கிறது. கதே அவர்கள் குறித்து தமிழினி இணைய இதழில் எழுத்தாளர் குப்புசாமி அவர்கள் மிக சிறப்பான நீண்ட ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். மூன்று பகுதிகளாக அதில் உள்ளது. வேண்டியவர்கள் அவசியம் அதைத் தேடி வாசியுங்கள்.

வெண்ணிற இரவுகள் நாவல் பெரும்பான்மையாக உணர்ச்சியலைகளால் நிரம்பியிருந்தாலும், அதை தாண்டி தாஸ்தாவஸ்கிக்கே உரிய உளவியல் மற்றும் மானுடப் பார்வையின் ஆழம் ஆங்காங்கே வெளிப்படாமல் இல்லை. உதாரணமாக, மறுநாள் இரவு சந்திக்கும்போது நாயகன், “எவ்வளவு நீண்ட இடைவேளை ஆகிவிட்டது, நாம் இருவரும் சந்தித்து” என்று கூறும் இடம், காதலிப்பவர்கள் மட்டுமே உணரக்கூடியது. தீவிர காதலில் இருப்பவர்களுக்கு, இடமும் , நேரமும் ஒரு இடைஞ்சலே. சில மணி நேர பிரிதல் கூட ஆண்டுக் கணக்காகத் தோன்றும். இருவருக்கும் மத்தியிலான சிறிய இடைவெளி கூட மிகப் பெரியதாகவே தோன்றும். எவ்வளவு நெருங்கினாலும் அது போதாது. இறுக்கமாக அணைத்துக் கொண்டாலும் போதாது. இருவர் ஒருவராக உருமாறினால் மட்டும்தான் அந்த காதலின் தாகம் தீரும் போல. ஆனால், அது உடல்களுக்கு சாத்தியமில்லை. ஈருடல் ஓருயிர் என்ற ஆன்ம நெருக்கத்தில் மட்டுமே அடைய முடியக்கூடியது.

இன்னொரு உதாரணம், நாஸ்தெங்கா உடன் கழிக்கும் சில பொழுதுகள் தன் ஆயுளுக்கே போதும், அந்த நினைவிலே வாழ்க்கையை கழித்து விடமுடியும் என்று நினைக்கும் நாயகனின் உளவியல், முழுக்க முழுக்க ஒரு கனவுலகவாசிக்கு மட்டுமே சாத்தியம். அத்தகையவர்கள் உண்மையிலே அத்தகைய கனவுத்தன்மை கொண்டவர்கள்தான். ஒருவகையில் கலைஞர்களுக்கும் அது பொருந்தும். மனிதர்களில் இரண்டு வகையான மனிதர்கள் உள்ளார்கள். புற வய வாழ்கையில் ஒரு காதலைத் தேடி அலைந்து அதற்காக நிறைய மெனக்கெடல்கள் செய்து அதை அடைபவர்கள். இன்னொரு தரப்பினர் சற்றே உள்வயமானவர்கள் (Introverts) . அவர்கள் முந்தைய தரப்பினர் அளவிற்கு புற வய வாதிகளாக இருப்பது கடினம். இவர்களும் தேடுவார்கள், மெனக்கெடுவார்கள். ஆனால், நிறைய தயக்கங்கள், கூச்சம், எங்கே நாம் காதலிக்கும் நபருக்கு எதோ தொந்தரவு செய்கிறோமோ என்று பயப்படுபவர்கள். இவர்கள் காதலிக்கும் நபர்கள் இன்னொருவரோடு அன்பு கொண்டிருந்தாலும், பரவாயில்லை, நம்மைவிட வேறு ஒருவரோடு அவர் நன்றாக வாழ்ந்தால் சரிதான் அது நமக்கும் சந்தோஷம் என்று எண்ணுபவர்கள்!

இத்தகைய வகையான காதல்தான் இந்த நாவலின் நாயகனது. இன்று உலகில் இப்படியான ஒன்று உள்ளதா? இன்றைய காலம் மாறி விட்டதே.. காதலும் மாறி விட்டதே என்று காதலின் புதிய ‘பரிணாமத்தை’ பற்றி யோசிப்பவர்கள் உண்டு. ஆனால், காதல் என்று சொல்லி பல்வேறு ரூபங்களை ஒவ்வொரு காலத்திலும் காட்டலாம். சினிமாவில் புதிய புதிய காதல்களை அந்த காலகட்டத்தின் காதல்களாக காட்டுகிறார்கள். ஆனால், உண்மையில் காதல் வயப்பட்ட ஒரு மனிதனின் மனது எப்போதும் ஒரே மாதிரியானதுதான். சுமார் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் பாரசீகத்தில் எழுதப்பட்ட லைலா மஜ்னூன் காதலில் வரும் மஜ்னூன் ஆகட்டும், ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட்டில் வரும் ரோமியோ ஆகட்டும், இளம் வெர்தரின் துயரம் என்ற நாவலில் வரும் கதாநாயகன் ஆகட்டும், வெண்ணிற இரவுகளின் நாயகன் ஆகட்டும், மோகமுள் நாவலில் தி.ஜானகிராமன் அவர்கள் காட்டும் பாபு கதாபாத்திரமாகட்டும், இவர்கள் எல்லோரும் காட்டுவது என்னவென்றால், வேறு வேறு காலங்களில் வேறு இடங்களில் இப்படைப்புகள் எழுதப்பட்டாலும், மனித மனதில் அலையடிக்கும் காதலின் மொழி ஒன்றுதான். மோகமுள்ளில், யமுனாவிடம் வந்து தன்னை மன்னித்துவிட சொல்லி அழும் பாபுவும், “அன்பான நாஸ்தன்கா” என்று வார்த்தைக்கு வார்த்தை உருகும் இந்த நாயகனும் ஒரே உணர்வுநிலை கொண்டவர்கள்தானே?

19-ஆம் நூற்றாண்டில் ரஷியாவில் எழுதப்பட்ட ஒரு நாவலும், 20-ஆம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் எழுதப்பட்ட மோகமுள் என்ற நாவலும், வேறு வேறு காலங்களில், வேறு வேறு இடங்களில் இருந்து எழுதப்பட்டுள்ளதால், மனதில் எழும் உண்மையான காதல் குறித்த உணர்வுகளை மாற்றிக் காட்டவில்லை. இதை எதற்கு இங்கே எழுதுகிறேன் என்றால், காதல் என்பது ஏங்குதல், தவித்தல், உருகுதல் இவையெல்லாம் இல்லாமல் இல்லை. இது சற்றே ஒரு லட்சியவாத வரையறை என்று வைத்துக் கொண்டால்கூட, அதற்குள் வருகின்ற நிஜ அக்கறை கொண்ட காதலர்கள் எல்லா காலத்திலும் இருக்கிறார்கள். இவர்கள் காதலை மனதில் தீவிரமாக உணர்பவர்கள். அதை வெளியே விளக்கிச் சொல்ல வேண்டும் என்ற அவசியம் கூட இருக்க வேண்டியதில்லை. வெண்ணிற இரவின் நாயகன் தன் மனதை, உணர்வுகளைக் கொட்டினாலும், அவன் அவ்வளவு பரிசுத்த காதல் கொண்டவன். ஆரம்பத்தில் கூறுவான், “எனக்கு விரும்புவதற்கு ஒரு நிஜ பெண் இல்லாவிட்டாலும் காதலில் இருப்பவன் நான்” என்பான். அப்படியானால் அவன் கற்பனை பெண்ணை நினைத்து காதல் கொள்பவன் என்றும் அர்த்தமில்லை. ‘இவர்கள் காதல் கொள்வதே கற்பனையின் மீதுதான்’. இவர்கள் முழுக்கு முழுக்க காதலுக்காகவே காதலை யாசிப்பவர்கள். இத்தகைய கனவுலகவாசிகளுக்கு நிஜ காதல் ஒருகட்டத்தில் சலிபுற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. குணா படத்தில் வரும் காதலை உதாரணம் கூறலாம். அதன் ஆன்மீக விளக்கத்திற்கு போகாமல் வெறும் காதலைப் பற்றி மட்டுமே கவனித்தால் கூட, அபிராமி அபிராமி என்று மனதில் உச்சமாக உருவேற்றி வைத்திருக்கும் ஒரு லட்சிய காதல் உருவத்தை பல காலம் நேரில் சந்திக்க முடியாமல் தவிக்கும் ஒருவன், வேறு எவற்றினூடும் மனம் ஒப்ப முடியாமல் இருப்பான். ஒரு கட்டத்தில், தன மன லட்சியங்களுக்கு ஏற்ற பெண்ணை பார்த்தவுடன் அவளிடம் சரணடைவது நடக்கும். முழுக்க ஆன்மீக கண்ணோட்டத்தோடு இப்படத்தை அனுகுவது இன்னொரு விளக்கத்திற்கு இட்டுச் செல்லும். அது வேறு கட்டுரைக்கானது. இந்த காதலர்களின் கனவுகளின் தீவிரம், லட்சிய வரையறை (Idealistic Definition) எவ்வளவு தூரம் செல்கிறதோ, அதற்கேற்பதான நபரைக் கண்டு கொண்டார்கள் என்றால், அவர்களிடம் சரணடனடைந்து விடுவார்கள். ஆனால், இந்த லட்சிய வரையறையின் எல்லை கூடி கொண்டே செல்லக் கூடியவராகவோ , தீவிர கனவுலகவாசியாகவோ இருந்தால், அத்தகையவர்களுக்கு, அவர்களுக்கு ஏற்படும் எந்த நிஜ காதலும் முழு திருப்தி தராது. ஒரு வேளை வேறு வழியில்லாமல், கிடைத்த காதலை அவர்கள் ஏற்றுக் கொண்டிருப்பார்கள். காதலின் முழு லட்சிய வடிவம் ஒன்று மனிதர்களுக்கு சாத்தியமா என்பது சந்தேகமே.

  முழுக்க காதலின் உணர்வு நிலைக்கு உட்பட்டு அதற்குள் வருபவர்கள் மட்டுமே காதலின் லட்சிய வரையறைக்குள் காலெடுத்து வைப்பவர்கள். அத்தகையவர்கள் குறித்துதான் மேற்குறிப்பிட்ட உலக இலக்கியங்கள் காட்டுகின்றன. அவை காலம், இடம் எல்லாம் கடந்து நிற்பவை. இந்த லட்சிய வரையறைக்குள் வர முடியாத காதல்களைத்தான், ‘இந்த காலத்து காதல்’ என்பதாக நாம் காட்டுகிறோம். உதாரணமாக, தன்னை ஏற்கவில்லை என்பதால் காதலி மேல் ஆசிட் வீசும் காதல், ஓடும் ரயிலிருந்து காதலியைத் தள்ளிவிடும் காதல், காதலை ஏற்க மறுத்ததால் கழுத்தை அறுத்துக் கொல்வது. இவையெல்லாம் களத்தில் நிற்காத, அழிந்து போகக்கூடிய போலிகள். புகழ் பெற்ற ஆங்கில கவிஞன் ஜான் கீட்ஸ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை காட்டும் ‘Bright Star’ என்ற Biopic படத்தில், ஓரிடத்தில், கீட்ஸ் தன் காதலியான Fanny Brown மீதான காதலை தன் நண்பனிடம் தெரியப்படுத்தும்போது, நண்பன் அதை கிண்டல் செய்யும் விதமாக பேசுவார். அதை பார்த்து கீட்ஸ் தன் நண்பனிடம், ‘Love is a Holy Thing’ என்பார். அதாவது காதல் என்பது புனிதமானது; அதைக் கொச்சைப் படுத்த வேண்டாம் என்பதாக கேட்டுக் கொள்வார். இது கவிஞனுக்குத் தெரியும். ஏனென்றால் அவன் அதை உணர்கிறான்.

வெண்ணிற இரவுகளின் நாயகன் ஒரு கனவுலகவாசி என்பதால் அவன் அந்தப் பெண்ணிடம் பேசுவது ஒரு கனவுலக கதாபாத்திரத்திடம் பேசுவது போல இருக்கும். அவன் உரையாடுவது இன்று படிக்கும்போது சற்று நாடகீயத்தனமாக இருந்தாலும், ஏன் இத்தகைய வகையில் காதலுறுபவர்கள் எக்காலத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் இத்தகைய நாடகீயத்தனமாக காதலை அணுகினாலும் அது இயல்புதான். தீவிர உணர்ச்சி வெளிப்பாட்டிற்கு மொழி வடிவம் கொடுக்கும்போது அவை நாடகீயத்தனமாக தான் இருக்கும். அதற்காக அதை டிவி சீரியல்களில் வரக்கூடிய மிகைத்தன்மையோடு குழப்பிக்கொள்ளத் தேவையில்லை. 

வெண்ணிற இரவுகள் பிற நாவல்களிலிருந்து வேறுபட்டிருப்பதற்கு முக்கியமாக காரணமாக நான் உணர்வது, இந்த நாயகன் காதலுறுவதற்கு எந்த பெரிய காரணங்களும் இல்லை; வெறும் காதல் மட்டும்தான் காரணம். அவன் காதலுக்காகவே காதலை யாசிப்பவன். காதல் வெளியே இல்லை, அவன் மனதில் உள்ளது. அது நாஸ்தென்கா மூலம் வந்து சென்று விட்டதல்ல, என்றென்றும் அவன் மனதிலேயே இருப்பது!

writermuzzammil@gmail.com 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button