இணைய இதழ் 122குறுங்கதைகள்

குறுங்கதைகள் – காந்தி முருகன்

குறுங்கதைகள் | வாசகசாலை

அவள் கவனிக்கப்படுகிறாள்

தொடர் வண்டியில் ஏறி அமர்ந்தவள் இன்னுமும் நூலை எடுத்து வாசிக்கவில்லை. மனம் அவளை விட்டு வெகுதூரம் சென்று கொண்டிருப்பதாக உணர்ந்தாள். தொடர் வண்டி பயணத்தில் அவளுக்கு விருப்பமான ஒன்று வாசிப்புதான். அமைதியான சூழலில் எந்தவொரு தொந்தரவுமின்றி வாசிக்கத் துவங்கிவிடுவாள்.

இயற்கை காற்றுக்கு வழியில்லாத கண்ணாடிகளின் வழி வெளியுலத்தை இரசித்துக் கொண்டு வாசித்துக்கொண்டிருப்பாள். முதல் பக்கத்தைத் தொடர்ந்து அடுத்த பக்கத்தைத் திருப்ப விரல்கள் முனையும் முன்னரே கண்கள் கண்ணாடிக்கு அப்பால் சென்று விடும். தொடர் வண்டி பயணத்தில் இரசிக்கும் அந்த ஆற்று நீர் ஒரு முறை கூட வற்றியதாக அவளுக்குத் தோன்றியதில்லை. சர்ரென்று கடந்து விடும் அந்த நொடிப் பொழுதிலும் ஆற்று நீர் கடந்த கால, மறந்து போன, தொலைந்து போன இடப்பெயர்ச்சியை நினைவுறுத்தி விடும். பெரிய ஆற்றுக்கு அருகிலிருந்த அவளது பிறப்பிடம் அடிக்கடி ஏற்படும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்படும். ஆனாலும், அவள் ஆற்றை வெறுத்ததில்லை. சிறுவயதில் கழுத்தளவு நீரில் இறங்கி இரு கைகளாலும் தண்ணீரை அடித்து தெரிக்கும் நீர்த்துளிகளில் கண்களை மூடி முகத்தை நனைத்துக் கொள்வதில் பேரானந்தம்.

மலைகளைக் குடைந்து இருட்டுக்குள் அழைத்து செல்லும் ஈப்போ குகை சயாம் பர்மா கொல்லுயிர் சம்பவத்தை ஞாபகப்படுத்தி விடும். அவளுக்கு அத்துயர சம்பவத்தின் வலி வாசிப்பின் வழி மட்டுமே நிகழ்ந்திருந்தாலும் தமிழர் வரலாற்றின் கரும்புள்ளிகளை இன்னுமும் தன் மனத்தின் பாரமாக சுமந்து கொண்டிருந்தாள்.

தொடர் வண்டி பயணத்தில் மூன்று மணி நேரத்தைக் கடந்து விட்டாள். இன்னுமும் நூல் கைக்கு வரவில்லை. சிந்தனை ஒரு நிலையில் இல்லை. பழுதடைந்த காரின் மீதும், தூக்கியெறிப்பட்ட ஓர் உடலின் மீதும் அவளது கவனம் திசைமாறிக் கொண்டிருந்தது. தொடர் வண்டி தாப்பா ரோட் நிலையத்தில் வந்து நின்றது. வெறிச்சோடி கிடந்த இரயில் நிலையத்தில் ஒரு பயணி மட்டுமே இறங்கினார்.

அவரை அழைத்துச் செல்ல யாரும் வந்ததாக தெரியவில்லை. அவர் இப்பக்கம் மின்தூக்கியில் ஏறி அப்பக்கம் இறங்க வேண்டும். ‘எப்படி தனிமையில் அவரால் சாத்தியமாகும்?’ என்கிற எண்ணமே அவளைத் தொடர்ந்தது.

எழுபது எண்பதுமிக்க தமிழர். கைத்தடியின் துணையுடன். தன் முன் அமர்ந்திருந்த அவர் ஒரு முறையேனும் அவளைப் பார்க்கவில்லை. தான் கொண்டு வந்த துணிப்பையை இறுகிக் கொண்டிருந்தார். வண்டி நிற்பதற்கு முன்னரே தட்டுத்தடுமாறி எழுந்து கதவோரம் நின்று கொண்டார். அவளது கண்கள் கதவோரத்தை நோக்கியபோது கண் சிமிட்டாமல் அவளையே பார்த்தார். அவரது பார்வையில் அனல் தெறித்துக் கொண்டிருந்தது. அவளால் அவரைப் பார்க்க முடியாது கண்களை நகர்த்திய போது அவர் அவள் அருகில் அமர்ந்திருந்தார். மீண்டும் தரையைப் பார்த்தவாறு. அவளது மனம் படபடத்தது.

தாப்பா ரோட் இரயில் நிலையத்தில் இறங்கிய முதியவரைக் காணவில்லை.

*************************

சொல்லி மகிழும் பொய்கள்

“இல்லைங்க சாரு, மவன் ஓத்துக்கிக்க மாட்டான்… அவன் சிங்கப்பூருல இருக்கான்…நான் அவன்கிட்ட பேச முடியாது. ஏசுவான்….”

இடுப்பில் சொருகி வைத்திருந்த நெகிழிப் பையிலிருந்த வெற்றிலை எடுத்து நுனிக் காம்பைக் கிள்ளி திண்ணையின் அருகே வீசினாள் ருக்கு பாட்டி. ஏற்கனவே அங்கு நான்கைந்து காய்ந்து போன காம்புகள் ஆங்காங்கே தெரித்துக் கிடந்தன. என் கண்கள் காம்புகளை நோக்கிய மறுகணமே ருக்கு பாட்டியை மீண்டும் பார்த்தது.

“…ம்மா…மருமக கிட்ட…”

பாட்டியின் கண்கள் அனல் தெரித்த மாதிரி உள்ளிருந்த சதைகள் வெளியே பிதுக்கிக் கொண்டு

“ஏயா… அவகிட்ட வாயைத் கொடுத்து அவ அனுப்புற காசுல கைய வக்க சொல்றீங்களா…”

வெத்தலையை கட்டியிருந்த கைலியில் ஒருமுறை துடைத்து அதில் சுண்ணாம்பு , பாக்கை வைத்து மடித்தாள்.

“ஐயா, நா வெறும் பொம்மதான்… என்கிட்ட பேசி என்ன செய்ய முடியும்…”

காலையிலிருந்து நான் நான்காவது வீட்டு வாசலில் உட்கார்ந்திருக்கிறேன். கண்ணுக்கு எட்டிய தூரமுள்ள அந்தப் பள்ளி என்னையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது. ஆறாக இருந்த வகுப்பறைகள் நான்காக உருவான நாளிலிருந்து என் கால்கள் ஓய்ந்தப் பாடில்லை. அலைச்சல்கள் அதிகம். பேச்சுவார்த்தைகள் அதிகம்.‌ எதுவும் பயணளிப்பதாக தெரியவில்லை.

வாசலில் ஏற்றி வைத்திருந்த சீனக் கடை ஊதுவத்தி மூக்கைத் துளைத்துக் கொண்டிருந்தது. இருள் சூழ்ந்திருந்த வீட்டின் உள்ளே சிவப்பு நிற மெழுகுவர்த்தி அந்த இருளுக்கு கொஞ்சம் ஒளியேற்றியிருந்தது.

பாட்டி எந்தவொரு சலனமுமின்றி வெற்றிலையை இடிக்கத் தொடங்கினார். உரல் சத்தம் நான் இன்னும் அந்த திண்ணையில் இருப்பதை உறுதிச் செய்தது.

“சாரு, இன்னொரு விஷயமும் சொல்றேன்…யார் கிட்டேயும் சொல்லாதீங்க….புள்ளைக்கு மூனு வயசா இருக்கும் போது டெங்கு காய்ச்ச வந்து ரொம்ப கஷ்டப்பட்டான்…அப்ப அவன் அம்மா …அதான் யா என் மருமவ…..சீனன் சாமிக்கிட்ட வேண்டிக்கிட்டா….பேரனும் வெரசா குணமாகிட்டான்…”

ஊதுவத்தியின் குச்சிகளைக் கொண்டு சிவப்பு நிற ஜாடிகளில் மண்ணை நிரப்பி விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுவனின் முகம் மனத்திற்குள் பதிவாகிப் போனது.

இதற்கு மேல் அங்கு அமர்ந்திருக்க மனம் இடம் கொடுக்கவில்லை. பள்ளியை நோக்கி நடந்தேன். எதிரில் ஆசிரியை ரேவதி.

“சார்…என்னால் ஒரே நேரத்துல ரெண்டு கிளாஸ் பிள்ளைங்களுக்கு சொல்லித் தர கஷ்டமா இருக்கு… அதான்…பள்ளி மாற்றத்தை கேட்கலாம்னு இருக்கேன்….”

வழக்கம்போல‌ ஆசிரியை ரேவதியின் பேச்சு காதில் விழவில்லை. பாட்டியின் உரல் சத்தம் தூரத்திலிருந்து கேட்டது.

பள்ளிக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சில மாணவர்களின் கண்ணாமூச்சி ஆட்டம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.

திரும்பி எஸ்டேட்டைப் பார்த்தேன். இரட்டை சடையைப் பின்னிக் கொண்ட மாணவிகளும், அரைக்கால் சிலுவார் அணிந்திருந்த மாணவர்களும் ஒருவர் மீது ஒருவர் தோளில் கையைப் போட்டுக் கொண்டு உற்சாகமாக பள்ளியை நோக்கி நடந்து வந்து கொண்டிருக்கின்றனர். இடையில் ஆழமான குழி ஒன்று உருவாக்கப்பட்டிருந்ததைக் கவனிக்காமல்!

kanthimurugan61@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button