இணைய இதழ் 122கவிதைகள்

ஜேக்கப் மேஷாக் கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

ஜீவ காருண்யம்

வழிகளற்ற பாழ் நகரத்தில்
அலைந்து திரிந்து
சரிந்து வீழும்
உறைபனியின் வெளிர் நிறக் கருணை.

விழிகளற்ற நடை பிணங்களின்
கால்களில் மிதிபடும்
பிரியம் நிறைந்த பல பிராத்தனைகள் யாவும்
உயரப் பறக்க பலனின்றி மீண்டும்
தொண்டைக்குழியை அடைந்து அமிழ்கிறது.

நகர மறுத்து அடம்பிடிக்கும்
என் காலக் கடிகார முட்களின்
கூர்முனையில் குத்தி வீழ்த்தப்பட்டிருக்கும்
எதிர்காலம் தொலைத்த மனிதம்.
அடுத்து நகரும் நொடி முள்ளின்
வழியெங்கும் விரவிக் கிடக்கிறது
கதகதப்பு நிரம்பிய குருதி வாசம்.

இருண்மை நிறம்பிய நிலமெங்கும்
உயிர்விடக் காத்திருக்கும்
தேய்பிறை நிலவின்
கடைசித் துளி காருண்யம்…
நீ எனக்குப் பொழிந்த அதிகபட்சக் காதல்!

*

கிழக்கு வால் நட்சத்திரம்

தட்டித் திறவா கதவுகளுக்குப் பின்னால்
கட்டப்பட்டுக் கிடக்கும் சாத்தானின் பிள்ளைகள்

கேட்டும் கொடுக்கப்படா மரணத்தின்
ஏகோபித்த சாகாவரம் ஒன்றின்
சாலர இடுக்கில் நுழையும் தனிமை

தனிமையின் காரிருளை
கிழிக்க முற்படும்
அசுத்த சிரிப்புகளில் மிளிர்கிறது
அப்பெரும் இரவு

படபடக்கும் இதயத்தின் வாசம் பிடித்து
பக்கம் நெருங்கும் பின்னிரவுப் பேய்களுக்கு
பயத்தை இறை வைக்கிறேன்

குளிர் சுடும்
தகிக்கும் கனல் தென்றலின்
உறைந்த நள்ளிரவுக்கு மத்தியில்
கிழக்கு கருநீலவானில்
எனக்காகப் பிரகாசிக்கத் தொடங்கியது
மீண்டும் ஒரு வால் நட்சத்திரம்.
அதிரூபனின் வாசம் அகம் முகரத் தொடங்கியது.

*

ஒரு காதல் கதை

புலராப் பொழுதுகளின் நிறங்களற்ற வீதிகளில்
பெரும் கோபத்தோடு பற்றியெரியும்
நிசப்த குலைச்சலின் பேய்க்காற்று
கூட்டிச் சேர்க்கிறது
என்னில் துளிர்விடும் வண்ணக் கனவுகளை.

உச்சிக்கிளையில் பழுத்துக் கிடக்கும்
இலை ஒன்றின் மரண நொடிகள் அடங்கிக் கிடக்கிறது
அடுத்து வீசப்போகும்
இளந்தென்றலின் கைகளில்.

எப்படிச் சொல்வது?
என்னில் கனத்துக்கிடக்கும்
மௌனமான பிரியங்கள் யாவும்,
வீசும் காற்றில் விழக் காத்திருக்கும்..
அக்கிளையின் பழுத்த இலை போன்றதென்று.

ஒற்றை இறகோடு பறக்கும்
அடர் மஞ்சள் இலையின் மேனியெங்கும்,
இளந்தென்றலினோடே
அசைவாடிக் கொண்டிருந்தது
ஓர் காதல் கதை.

*

விபத்துப் பகுதி

முன்னிரவின் அந்தமான உறக்கச் சூழல்
நெரிசலற்ற நெடுஞ்சாலையின்
சன்னமான குளிர் வாசம்

அசம்பாவிதங்களற்ற நித்தியமான
செல்லக் கொஞ்சல் வழியும் பரிந்துரையாடல்கள்
நள்ளிரவு கூடும்போது
இறங்குபாதையில் நெருங்கியது ஓர் நெருடல்

தூக்கமின்மையில் எரிச்சலிடும் கண்களைக்
கடிந்துகொண்டபோது
பின்னிரவுப் பனிப்பொழிவில்
பற்றியது பிரளயம்

“ஒன்னுல்ல..!” என்று அவள் மூச்சிழுத்து முடித்தபோது,

இறங்குபாதையின் முன்னெச்சரிக்கையற்ற
ஓர் கொண்டை ஊசி வளைவில்
ஒளிந்து கொண்டிருந்தது
’விபத்துப் பகுதி’ பதாகை.

jacobjack182@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க
Close
Back to top button