
நேற்றைய நானும் இன்றைய நானும்!
நேற்றைய என்னுடன்
பழக வந்த உன்னை
’இன்றைய நான்’ எதிர்கொண்டேன்
மூன்றாம் மனிதனாய்
தள்ளி நின்று நோக்கிவிட்டு
’நேற்றைய நான்’
வேறு ஊருக்கு
மாற்றலாகிச் சென்று விட்டதாய்
சொன்னேன்
வெகுநேரம் உன்னை
காத்திருக்க வைக்க மனமில்லை
நேற்றைய எனக்கு.
இன்றைய என்னை
கோபமாய்ப் பார்த்துவிட்டு
அகன்ற உன்னைப் பார்க்காமல்
முகம் திருப்பிக்கொண்டேன்
நேற்றைய நான்
தொலைந்து போன இடத்தில்
மூடிய கதவாய்
நின்று கொண்டிருக்கிறேன்
இன்றைய நான்!
எவ்வளவு நேரம் நீ காத்திருந்தாலும்
இன்றைய நான் மட்டுமே
இங்கே இருக்கிறேன் என்பதே
உன்னிடம் உரைக்காத
வாக்குத்தத்தம்!
*
மாற்றம்
ஒரே மாதிரி இருப்பதில்லை
அவர்கள்!
கோட்பாடுகளை மாற்றுகிறார்கள்
அடிக்கடி!
அணி சேர்கிறார்கள்
நேரத்திற்கு ஏற்றபடி!
காலத்தின் போக்கில்
எப்படிக் கலக்கிறார்கள்?
கேள்விகளைக் கேட்டுக்கொண்டே
பழுப்பிலிருந்து மாறியிருந்தேன்
பால் நிறத்திற்கு.
நல்லவேளை!
நீங்கள்
கவிதையில் லயித்திருந்தீர்கள்!
*



