இணைய இதழ் 122சிறுகதைகள்

கல்யாணத்துல மழை பெய்யும்! – மஞ்சுளா சுவாமிநாதன்

சிறுகதை | வாசகசாலை

சுமதி அத்தை என்றால் நினைவில் வருவது அவரது அழகு. சுண்டினால் இரத்தம் வரும் நிறம். நீண்ட கரும் கூந்தல். சதா சர்வகாலமும் வெற்றிலையால் சிவந்து இருக்கும் அவரது உதடு. ‘மூணு பொட்டுக்காரி’ என்று உறவுகள் எல்லாம் அவரை அழைக்கும் நேர்த்தியான மூன்று பொட்டுகளுக்குச் சொந்தக்காரி. நெற்றியில் அரக்கு நிறத்தில் பெரிய வட்ட ஸ்டிக்கர் பொட்டு, அதற்கு கீழே விபூதியால் சிறிய கீற்று, அவரது பாய் போன்ற நீள கருங்கூந்தலை பிரித்த நடு வகுட்டில் துவங்கி மேல் நெற்றி வரை சிவப்பாக இருக்கும் குங்குமம் என மூன்று பொட்டுகள். அவர் நிறத்திற்கு ஏற்ப அவர் எப்போதும் கரு நீலம், ஊதா, சிகப்பு, பிங்க் போன்ற நிறங்களில்தான் புடவைகள் அணிவார். சுமார் முப்பது ஆண்டுகள் முன்னரே ஒரு பிளீட்டுடன் முந்தானையை வீசிக்கொண்டு அவர் நடக்கும் விதம் அத்தனை வசீகரமாக இருக்கும்.

கார்களெல்லாம் அரிதாக இருந்த அந்த நாட்களிலேயே ஓட்டுநர் ஓட்டிய அம்பாசடர் காரில் அவர் வலம் வந்தார். நாங்கள் வசித்த சந்தில் அந்த வெள்ளை நிற அம்பாசடர் காரை நிறுத்தக்கூட இடம் இருக்காது. ஒவ்வொரு கையிலும் நான்கு நான்கு என எட்டு தங்க வளையல்கள், கழுத்தில் தங்கத்தில் தாலிக் கொடி, இரட்டை வட சங்கிலி, விசேஷ நாட்களில் இந்த நகைகளுடன் ஒரு ஹாரமும் நெக்லஸ்ஸும் சேர்ந்து கொள்ளும். காதில் எப்போதுமே ஜிமிக்கி தோடும், மாட்டலும் இருக்கும். சிறு பெண்ணைப் போல ‘ஜல் ஜல்’ என்று சத்தம் போடும் கொலுசுடன்தான் அத்தை எப்போதும் நடப்பார். அத்தை வந்தாலே ஒரே ஆர்பாட்டம்தான். எனது பாட்டிக்கே அத்தையின் ஆடம்பரம் சமயங்களில் பிடிக்காது. என் அம்மாவுக்கு கேட்கவும் வேண்டுமா? அத்தை வந்தாலே அம்மா அலுவலகத்தில் இருந்து தாமதமாகத்தான் வருவார்.    “எப்படியும் உங்க பாட்டிக்கும் எனக்கும் ஏதாவது சண்டை மூட்டி விடுவா, அதுக்கு லேட்டாவே வரலாம். ஆனா, உங்க அத்தை பண்ற பந்தா இருக்கு பாரு… அதான் தாங்க முடியாது!” என்று அம்மா கூறியது நினைவில் இருக்கிறது.

நானும், அப்பாவும், எனது தம்பி ராமும் சேர்ந்து “அல்டாப்பு ராணி” பாட்டை அத்தையைப் பார்த்து ரகசியமாக பாடுவோம். ராகசியமாகத்தான், அத்தைக்கு மட்டும் நாங்கள் பாடுவது தெரிந்து விட்டால் எங்கள் கதி அதோ கதி! ஒரு முறை அத்தை வீட்டிற்கு நான் விடுமுறைக்கு சென்றபோது நடந்த சம்பவம் ஒன்று அத்தையைப் பற்றி எனக்கு நிறைய சொல்லிக் கொடுத்தது. எனது சித்தப்பா நடராஜனும், சித்தி ரேகாவும் அத்தை வீட்டின் அருகில் ஒரு சிறிய வீட்டில் வசித்தனர். அவர்களுக்கு அப்போதுதான் திருமணம் ஆகியிருந்தது.

நடராஜன் சித்தப்பா, சுமதி அத்தையின் கணவரின் நண்பரிடம்தான் வேலை செய்து கொண்டிருந்தார். அத்தை பெரிய பங்களாவில் வசித்தார். ஆனால், எனக்கு அத்தை வீட்டில் இருப்பதை விட சித்தப்பா வீட்டில் இருப்பதுதான் பிடிக்கும். அது சிறிய வீடாக இருந்தாலும் சித்தி மிகவும் அன்பாக இருப்பார். அங்கே சிமெண்ட் தரையில் தாயம் விளையாடலாம், சுவற்றில் வரையலாம், வீட்டில் குப்பை போடலாம், சித்தி எதுவும் சொல்ல மாட்டார். அத்தை வீட்டில் எதற்கெடுத்தாலும் கட்டுப்பாடு. அத்தை மகன் சுந்தர்தான் அரண்மனைக் கிளி. ஆனால், நான் சுதந்திரப் பறவை. அத்தை வீட்டிலிருந்து தப்பித்து பெரும்பாலான நேரம் ரேகா சித்தியோடு கழித்தேன்.

இதைக் கண்டுபிடித்த அத்தை, சித்தியைப் பற்றி இல்லாதது பொல்லாதது எல்லாம் சித்தப்பாவிடம் கூறி சித்தியை அழவைத்தார். எனக்கு அப்போது பத்து வயது, அதிகம் நினைவில் இல்லை. ஆனால், அத்தை பேசியதில் ஒரு பகுதி மட்டும் நன்றாக நினைவில் இருக்கிறது. “ரெண்டு நாளா ரேகா குழந்தையை அவ கூடவே வெச்சிட்டு இருக்கா… இங்க ராத்திரிதான்அனுப்பறா! நேத்து பூரி பண்ணி கொடுத்திருக்கா! ஏன் எனக்கு பூரி பண்ண தெரியாதா? நான் தீபாவிற்கு சாப்பாடு போட மாட்டேனா? இந்த தீபாகிட்ட என்னை பத்தி என்ன சொன்னாளோ என்னவோ, நான் சித்தியோட தூங்கரேன்னு சொல்றா அவ!” என்று ஆவேசம் வந்தது போல உரத்த குரலில் சித்தப்பாவிடம் குறை கூறினார். நான்தான் தீபா. அன்று முதல் நான் சித்தியை பார்க்கச் சென்றால், சித்தி என்னை உடனே அத்தை வீட்டிற்கு அனுப்பி விடுவார். என்னோடு விளையாடுவதையும் குறைத்துக்கொண்டார். அடுத்த கோடை விடுமுறைக்கு நான் அத்தை வீட்டிற்கு போகவே இல்லை.

வாழ்க்கை என்பது சீசா மாதிரி ஏற்றத் தாழ்வுகள் நிறைந்தது என்று சுமதி அத்தை விஷயத்தில் நான் கண்கூடாகப் பார்த்தேன். மாமாவின் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு, வீட்டை விற்று, நகைகளை விற்று, காரை விற்று, கடன் தொல்லை காரணமாக அவர்கள் வாடகை வீட்டிற்கு ஒரு கட்டத்தில் சென்று விட்டார்கள். அத்தை கோயம்புத்தூரிலேயே இருக்க, நடராஜன் சித்தப்பாவும், ரேகா சித்தியும் பிழைப்பு தேடி சென்னைக்கு வந்துவிட்டார்கள். இப்போது மாமா அங்கே ஓர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அத்தை அங்கே ஏதோ ஒரு கடையில் சேல்ஸ் வேலையில் இருக்கிறார் என்று கேள்வி, அதைப் பற்றி அவர் அதிகம் பிரஸ்தாபிப்பதில்லை.

அவரது ஒரே மகன் சுந்தர், செல்வச் செழிப்போடு வளர்ந்த சுந்தர், எங்கள் வீட்டில் தங்கிதான் கல்லூரிப் படிப்பை முடித்தான். அப்பாதான் அவனுக்கும் சேர்த்து ஃபீஸ் கட்டினார். அப்போதுதான் சுந்தரோடு பழகும் வாய்ப்பு எனக்கும் ராமுக்கும் கிடைத்தது. அவனுக்கு அத்தையின் அல்டாப்பு குணம் துளி கூட இருக்கவில்லை. இருக்கும் நிலைக்கு தன்னை பழக்கிக் கொண்டு எங்களோடு சகஜமாக இருந்தான். அவன் படித்தவுடன் வெளிநாட்டில் வேலை கிடைத்து அங்கேயே நிரந்தரமாக இருந்துவிட்டான். என் திருமணத்தின் போது அப்பாவுக்கு ஐந்து லட்சம் கொடுத்து உதவினான், அது சுமதி அத்தைக்கு கூட தெரியாது. சுந்தருக்கும் கூட அந்த ஊர் பெண்ணோடு திருமணம் நடந்தது, அப்போது அத்தை வீட்டில் ஒரே ரகளை. அத்தையும் மாமாவும் அவன் திருமணத்திற்குச் செல்லவில்லை, இப்போது அவனோடு எந்தத் தொடர்பிலும் அவர்கள் இல்லை.

அப்பா அவ்வப்போது அத்தைக்கு உதவி செய்வதால் எங்கள் குடும்பத்தின் மீது அத்தைக்கு தனி பிரியம். என்னதான் அம்மாவை இடித்துக் கொண்டே இருந்தாலும் எங்கள் வீட்டு விசேஷம் என்றால் பத்து நாட்கள் முன்னாடியே வந்து இழுத்து போட்டுக்கொண்டு அனைத்து வேலைகளையும் செய்வார். எங்கள் குடும்பத்தில் ராமின் திருமணம்தான் கடைசி. நடராஜன் சித்தப்பாவிற்கும் குழந்தைகள் இல்லாததால் ராமின் திருமணத்திற்கு அநேக சொந்தங்களையும் அப்பாவும் அம்மாவும் அழைத்திருந்தார்கள்.

“இட்லி அரிசி விக்கற விலைக்கு ஒண்ணுக்கு நாலு அரிசி போட்டா கட்டுப்படி ஆகுமா? என் தம்பி சொத்தை இப்படி அழிக்கறாளே!” என்று அம்மாவைத் திட்டிய அத்தை, ஊரிலிருந்து வரும்போது பத்து கிலோ ரேஷன் அரிசியை வாங்கி ரயிலில் கொண்டு வந்திருந்தார். சிறு வயதில் பிங்க் நிற சேடின் புடவை கட்டி டாம்பீகத்துடன் வளைய வந்த சுமதி அத்தையின் முகம் எனக்கு இன்றும் பசுமையாக நினைவில் இருக்கிறது, இப்போது இருக்கும் அத்தையின் அழகிற்கு ஒண்ணும் குறைவில்லை. ஆனால், அவளது மனம்தான் காலம் தந்த ஏமாற்றத்தினால் இருண்டு போயிருந்தது. அது அவளது முகத்திலும் பிரதிபலித்தது.

“இதோ பாருங்க அக்கா, ஒண்ணுக்கு நாலு அரிசி போட்டாதான் இட்லி உப்பி பஞ்சு போல இருக்கும். அஞ்சு கப் அரிசி வேணும்னா போடுங்க, ஏழு ரொம்ப அதிகம்,” என்று அம்மா கூறவும் அத்தைக்கு வெளு வெளுவென்று கோபம் கொப்பளித்தது. “நான் செய்யாத இட்லியா? நான் அறைக்காத மாவா? எனக்குத் தெரியாதா எத்தனை அரிசி போடணும்னு?” என்று உச்சஸ்தாயியில் ஆரம்பித்தார். நிலைமை கட்டுக்கடங்காது போவதற்குள் நான் சென்று, “அம்மா, அத்தைதான் மாவை அறைக்கறேன்னு சொல்றாங்க இல்ல? நீ போயி கோலம் போடு போ! உன்னை மாதிரி யாராலையும் பெருசா மாக்கோலம் போட முடியாது!” என்று அம்மாவை தாஜா செய்து அனுப்பிவைத்தேன்.

அத்தையை இறுக்க அணைத்து, “அத்தை, நீயும் எத்தனை வருஷத்துக்கு மாவு அறைப்ப? நான் அறைக்கறேன்… நீ போயி சூடா காபி போட்டு எல்லாருக்கும் கொடேன்!” என்று கெஞ்சலாக கேட்டேன். பொங்கி வந்த அத்தையின் கோபம் சற்று தணிந்தாற் போல இருந்தது. உடனே ராமும் அவன் பங்கிற்கு வந்து அத்தையையும் என்னையும் சேர்த்து அணைத்து, “அத்தை, இந்த ஊருலயே உன் காபிக்கு ஈடு கிடையாது!” என்று சொல்லிக்கொண்டே ஊறவைத்திருந்த அரிசியை எடுத்து வாயில் போட்டுக்கொண்டான். அத்தையின் கோபம் வெய்யிலில் உருகும் குச்சி ஐசைப் போல இளகியது. “டேய்! அரிசி திங்காத, அப்புறம் கல்யாணத்துல மழை பெய்யும்!” என்று சொல்லிக்கொண்டே காபி கலக்க அடுப்பை நோக்கி நடந்தாள். என் அம்மா கோலம் போட்டபடி என்னைப் பார்த்து அழகு காண்பித்தாள்.

திருமணத்தன்று காலை மழை பிய்த்துக்கொண்டு அடித்தது. அத்தை புலம்ப ஆரம்பித்தார். “எல்லாரும் எப்படி வருவாங்களோ? ஆட்டோ, கேப் எல்லாம் சரியா கிடைக்கணுமே! இவன் வேற ஊர்பட்ட பேரை கூப்பிட்டுத் தொலைச்சிருக்கான்!” என்று பதைபதைத்தார். அம்மா அலங்காரம் செய்து மனையை சுற்றிச் சுற்றி வந்தது அவருக்குள் பொறாமையை தூண்டி இருக்க வேண்டும். ரேகா சித்தியும் அம்மாவும் சகோதரிகள் போல இணைந்து வேலைகள் செய்தது அத்தையை பாதித்தது. சிறிது நேரத்தில் எல்லாம் அத்தையை மண்டபத்தில் காணவில்லை. அத்தையை காணாத அப்பா என்னிடம் வந்து, “அவ சுபாவம்தான் தெரியுமே, எங்கேயாவது உட்கார்ந்து சொந்தகாரங்க கிட்ட அழுது புலம்பிட்டு இருக்கப்போறா! நீ கொஞ்சம் பார்த்து கூட்டிட்டு வாயேன்!” என்று என்னை அனுப்பி வைத்தார்.

அப்பா, என்னுடைய அறையில்தான் சுமதி அத்தையையும் கோர்த்து விட்டிருந்தார். நான் எதிர்பார்த்தது போல அங்கேதான் தலைவலி என்று படுத்திருந்தார அத்தை. மிகவும் சாதாரண பருத்திப் புடவை ஒன்றை அணிந்துகொண்டு கண்களில் நீர் வழிய படுத்திருந்தார். எனக்கு பார்க்கவே பாவமாக இருந்தது. “ஏன் அத்தை இங்க வந்து தனியா படுத்துட்டு இருக்க?” என்று கேட்டேன். “உன் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் என் உதவி தேவை இல்லை, அவங்களுக்கே எல்லாம் தெரியும், நான் எதுக்கு அங்க? அங்க இருக்கறவங்க எல்லாம் ‘என்ன ஆட்டம் போட்டா இவ, இன்னிக்கு எப்படி பிச்சைக்காரி மாதிரி உட்கார்ந்துட்டு இருக்கான்னு!’ என்னைப் பார்த்து சிரிக்கற மாதிரி எனக்கு இருக்கு. நான் வரல தீபா!” என்று முகத்தை மூடி குழந்தையைப் போல அழ ஆரம்பித்தார்.

“யார் என்ன நினைச்சா என்ன? எனக்கும் ராமுக்கும் எங்க அத்தை பட்டுப் புடவை கட்டி, ஒன் பிளீட் வெச்சு, வாயில வெத்தலை போட்டு கம்பீரமா வந்து மனையில நிற்கணும்! வாங்க, கிளம்புங்க!” என்று அவரை ஆதரவாக எழுப்பி பட்டுப்புடவை கட்ட வைத்து, கழுத்துக்கும், காதுக்கும், கைக்கும் என்னிடம் இருந்த பல்வேறு கவரிங் நகைகளை தாராளமாக போட்டு அலங்கரித்தேன். மூன்று பொட்டுகளும், ஒரு திருஷ்டிப் பொட்டும் வைத்து, கண்களுக்கு மை தீட்டி, ஓர் மணமகளைப் போல அத்தையை அலங்கரித்தேன். அவரும் எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்காமல் என் அன்பிற்கு கட்டுண்டு அமைதியாக இருந்தார்.

மண்டப வாசலுக்கு அருகில் முதற்தளத்தில் இருந்து வந்த படிகளில் நாங்கள் இறங்கி வர, பலத்த இடியுடன் மழை கொட்டியது. அந்த சாரல் எங்கள் மீது தெளித்த போது, “அரிசி சாப்பிடாத, கல்யாணத்துல மழை பெய்யும்னு சொன்னா இந்த ராம் கேட்டானா பாரு!” என்று சொல்லிக்கொண்டே அங்கு மழையினால் வழிந்தோடிய நீரில் வழுக்கி விழத் தெரிந்தார் அத்தை. “ஐப்பசி மாசம் கல்யாணத்தை வெச்சா மழை பெய்யாம என்ன செய்யுமாம்?” என்று கேட்டுக்கொண்டே அப்போது மண்டபத்திற்குள் நுழைந்த சுந்தர் அத்தையை கீழே விழாது என்னோடு சேர்ந்து தாங்கிப் பிடித்தான். அத்தையின் கண்களிலும் பூரிப்பில் நீர் வழிந்தோடியது.

-juliemanju2002@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button