
சமீப காலங்களில், நான் அடிக்கடி கேட்டு, படித்துத் திடுக்கிடும் செய்தியாக இருப்பது இளம் வயதினரின் தற்கொலைகள்.
தற்கொலை என்பது ஓர் அசாத்தியமான, விபரீதமான, மனமும் அறிவும் இணைந்து எடுக்கும் ஓர் அதிர்ச்சி தரும் சோகமான முடிவு. ஒவ்வொரு மணித்துளியையும் வாழவேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் இருக்க வேண்டிய பருவத்தில், சிலர் அதன் இறுதியை வலுவில் நாடிச்செல்லும் செயல் மிகவும் வேதனைக்குரியது.
எதனால் ஓர் இளம் உள்ளம் இந்த முடிவுக்கு விரட்டப்படுகிறது?
வாழ்க்கை என்பதை உணர்ந்து அனுபவிக்கும் காலத்திற்கு முன்பே அதை முற்றுமாகத் துடைத்தெறியும் துணிச்சல் வர அந்த மனம் என்ன பாடு பட்டிருக்க வேண்டும்? எந்த அளவுக்கு வாழ்க்கை என்பதை வெறுத்திருக்க வேண்டும்?
இது என்ன ஒரு நாளிலோ ஒரு நிமிஷத்திலோ எடுத்த முடிவாகவா இருக்க முடியும்?
அதை நம்புவதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும் எனக்கு மனம் ஒப்ப மறுக்கிறது. ஏமாற்றங்கள், தோல்விகள், இழிச்சொற்கள், வசவுகள், சாபங்கள் என்று பல சோதனைகளை அந்த மனித உயிர் சந்தித்திருக்கலாம், மறுக்கவில்லை.
இவற்றை உலகில் சந்திக்காதோர் எவர்? இருக்கலாம். ஒரு சிலருக்கு வைத்தது எடுத்தது போல் வாழ்க்கை அமைந்திருக்கலாம். ஆனால், அதை எல்லோருக்கும் பொதுவான நியதியாகக் கொள்ள முடியாது என்பதுதான் வாழ்க்கையின் துயரம்.
உதாரணத்திற்கு, நான் என் நீண்ட வாழ்க்கையை நினைத்துப் பார்க்கிறேன். ஒரு படித்த, சற்று வசதியான உயர்குடியில் பிறந்த எனக்கு ஏற்பட்ட இடர்ப்பாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல. மனிதர்களால் அல்ல; விதியால். சில சமயங்களில் மனிதர்களாலும் என்பதையும் நான் மறுக்கவில்லை.
தமிழில் ஒரு சொலவடை உண்டு, ‘சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது’ என்று. என் வாழ்க்கைப் பாதை ஒரு கட்டம் வரை அப்படித்தான் அமைந்தது. அது நிலையானபோது எனக்கு 35 வயது ஆகிவிட்டது. என்னைப்போன்று பொறியியல் படித்த இளைஞர்கள் வாழ்வின் உச்சத்தைத் தொடும் நிலையில் இருக்கையில், நான் அப்போதுதான் வாழ்க்கை படியில் கால் வைக்கிறேன், பல நிர்ப்பந்தங்களுடன். அதற்குள் நான் கிட்டத்தட்ட அறுபது வயது மனிதனின் அனுபவங்களைப் பெற்றுவிட்டேன்.
இரண்டுவேளை உணவும் நிரந்தரமான உறைவிடமும் நிச்சயம் என்ற நிலை வந்தபோது என் மனம் அறுபது வயது முதிர்ச்சி பெற்றுவிட்டது.
ஆனாலும், உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணம் ஒருபோதும் தோன்றியதில்லை. அதற்குக் காரணம் நான் வளர்ந்த ஒரு கூட்டுக்குடும்பச் சூழலாக இருக்கலாம்; என்னிடம் அன்பு காட்டிய என் குடும்பத்தினராக இருக்கலாம். என்னிடம் அன்பாகப் பழகிய நண்பர்களாக இருக்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக என் படிப்பு என்றோ ஒரு நாள் ஒரு விடிவைக் கொண்டு வரும் என்று உள்ளூர இருந்த நம்பிக்கையாக இருக்கலாம்.
ஏதோ ஒன்று என்னை நான் அழித்துக்கொள்ளாமல் தடுத்துக்கொண்டே இருந்திருக்கிறது என்பதுதான் நிஜம்.
நான் சிறுவயதிலிருந்தே படித்து வந்த கதைகள், புத்தகங்கள், அவற்றில் கண்டுணர்ந்த அனுபவங்களாக இருக்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக எனக்கு மனிதர்களிடமும் கடவுளிடமும் அன்று இருந்த அழுத்தமான நம்பிக்கைகளாக இருக்கலாம்.
நம்பிக்கை என்று நான் ஒரு வார்த்தையில் சொல்வதை விளக்குவது சற்று கடினமான காரியம்தான். நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும் நம்பிக்கையுடன்தான். அந்த நம்பிக்கை ஓர் இளம் மனதில் எப்படி இல்லாமல் போகிறது அல்லது சொல்லாமல் மாய்கிறது என்பதே எனக்கு வியப்பாக இருக்கிறது.
இன்று பெரும்பாலான இளைய தலைமுறையினரிடம் புத்தகம் படிக்கும் வழக்கம் மிகவும் குறைந்து வருகிறது என்பது என் கருத்து. அது தவறாகக்கூட இருக்கலாம். ஆனால், அப்படிப் படிப்பவர்கள் எந்த மாதிரி புத்தகங்களைப் படிக்கிறார்கள் என்பது முக்கியமான விஷயம். படித்தும் அதிலிருந்து அவர்கள் எந்தச் சமாச்சாரத்தை எடுத்துக்கொள்கிறார்கள் என்பது அடுத்த நிலை. சுய முன்னேற்றத்திற்கு முக்கியம் தரும் பல புத்தகங்கள் இன்று ஆங்கிலத்திலும் தமிழிலும் இதர மொழிகளிலும் வருகிறது என்பது நிஜம். ஆனால், அவை சரியான நேரத்தில் அது தேவைப்படும் இளைஞர்கள் இடையில் சென்று சேர்கிறது என்பது கேள்விக்குரியதே. இதற்கு மற்றொரு காரணம், அளவுக்கு அதிகமான தேவையற்ற பாடச்சுமைகள். அவற்றை முறையான, வாழ்க்கை முறை உணர்ந்த பெரியோர்களால் நிச்சயிக்கப்பட வேண்டும் என்பதும் முக்கியமான சமாச்சாரம்.
இன்றைய காலகட்டத்தில் என்னால் பெற்றோர்- குழந்தைகள் இடையே இருக்கும் உறவைப் பேசுவதை வைத்துக் கணிக்க முடியவில்லை. முன் போலன்றி இன்று உள்ள உறவுகள் சற்று விட்டேற்றியானவையே. ‘சுதந்திரம்’, ‘தனியுரிமை’ என்ற பெயரில் அவர்களிடம் அதிகம் கேள்விகள் கேட்காமல், அவர்களது நடவடிக்கைகளில் தலையிடாமல், அவர்கள் நண்பர்களுடன் பேசாமல், கேள்விகள் அதிகம் எழுப்பாமல் இருப்பது (மேல் நாட்டு) நாகரிகம் என்றாலும், என்னைப் பொறுத்தவரை அது ஒரு விதமான ‘அலட்சியம்’ என்றே தோன்றுகிறது. உங்கள் குழந்தை; உங்கள் வளர்ப்பு. அதன் போக்கு சரியாக இருக்கிறதா, இல்லை, தடம் மாறுகிறதா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமை என்று நான் நினைக்கிறேன்.
இது நம் கையில்தான் இருக்கிறது. நான் பதின்வயது மாணவர்களுக்கு ஆசிரியராகச் சில ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறேன். அதில் நான் அவர்களிடம் காட்டும் அக்கறையினால் அவர்களே வலிய வந்து தங்கள் பிரச்சினைகளை என்னுடன் பகிர்ந்துகொள்வதுண்டு. அப்போதெல்லாம் எனக்குத் தெரிந்தவரை அவர்களுக்கு எது நல்லதோ அதை எடுத்துக் கூறத் தயங்கியதில்லை. இன்னும் சொல்லப்போனால், பல மாணவர்களின் பெற்றோருடன் மிகச் சிறப்பான நேரடித் தொடர்பு இருந்த ஒரே ஆசிரியர் நானாகத்தான் இருப்பேன். இன்றும் அந்தத் தொடர்புகள் மெலிந்து போனாலும் அறுந்து போகவில்லை.
ஆனால், இன்றைய ஆசிரியச் சமூகம் அது போல் இருக்கிறதா என்று என்னால் சொல்ல முடியாது. அன்றே பெரும்பாலானோர் இல்லை; இன்று கேட்கவே வேண்டாம் என்றே தோன்றுகிறது.
இன்றைய மிகப் பெரிய பொழுதுபோக்காகக் கருதப்படும் திரைப்படங்கள், வன்முறையையும், கொலை, தற்கொலை போன்ற சமூகத்திற்கும் இளைய தலைமுறைக்கும் எதிரான சமாச்சாரங்களை மிகைப்படுத்திக் காட்டுவதோடல்லாமல், அதை ஓர் ‘ஹீரோயிசம்’ என்று மேம்படுத்தியும் சித்தரிப்பது வருத்தப்பட வேண்டிய செயல்.
பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்வது, கையாள்வது என்று உணர மன முதிர்ச்சி தேவை. அவை இதுபோல் விபரீத முடிவுகளில் இறங்கும் மாணவர்களுக்கு இருக்காது என்றே நினைக்கிறேன். தவிர, நெருங்கிப் பார்த்தால் அவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் இடையே உள்ள இடைவெளி பெரிதாக இருக்கும் என்பதை உணரலாம்.
சமூகரீதியான ஆலோசனை, அறிவுரைகள் மற்றும் வழிகாட்டுதல் போன்றவை இன்று ஒரு தொழிலாகவே பார்க்கப்படுகிறது என்றாலும் அதை நாடிச் செல்பவர்கள் எத்தனை பேர்? ஆனால், அதைப் பெற்றவர்களையோ, அல்லது ஆசிரியர்களோ செய்ய முடிந்தால் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து.
அது சுலபமான காரியமன்று; ஓர் இளம் வயது பெண்ணிடமோ அல்லது ஆணிடமோ அறிவுரை அல்லது கண்டிப்பு அல்லது வழி கூறுதல் என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் சிக்கலான ஒன்று. இருந்தாலும், அந்தக் கடமை, பெற்றோர்க்கும் ஆசிரியர்களுக்கும் இருக்கிறது என்பது என் அபிப்ராயம். சில மூத்த அல்லது அவர்கள் வயதுடைய புத்திசாலியான அல்லது தெளிவாகச் சிந்திக்கக்கூடிய நண்பர்களும் இதைச் செய்யலாம், தவறில்லை. அதற்கு நல்ல மதிப்பு இருக்கும். அதைச் சொல்லும் விதத்தில் எடுத்துச் சொன்னால், அந்தப் பையனோ பெண்ணோ ஏற்றுக்கொள்ளும் சாத்தியங்கள் உண்டு.
ஆனால், பூனைக்கு மணி கட்டுவது யார்? அதுதான் மில்லியன் டாலர் கேள்வி.
அதைச் செய்ய எவரும் முன்வராத வரை, இதுபோன்ற தற்கொலைகளையும் மனப் பிறழ்வுகளும் உண்டாவதையும் தடுக்க முடியாது.
G Swaminathan- 9840289671; 9840593967



