இணைய இதழ் 123கட்டுரைகள்நூல் விமர்சனம்

அய்யனார் ஈடாடியின் நன்செய்க் கதைகள் – மு.அம்சம்

கட்டுரை | வாசகசாலை

எழுத்தாளர் அய்யனார் ஈடாடி அவர்கள் எழுதிய ‘கிருதுமால் நன்செய்’ எனும் நூல், 16 சிறுகதைகளின் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. எதார்த்தமான பேச்சு வழக்கில் அமைந்த கதைகளின் போக்கும், அவற்றின் மொழிநடையும் வாசகர்களைக் கதையோடும் பாத்திரங்களோடும் பேசவும் வாழவும் செய்கின்றன. தான் கேட்ட செய்திகள், பார்த்த மனிதர்களின் பின்புலக் கதைகள், நிகழ்காலத்தில் வாழ்ந்துகொண்டிருப்போரின் வலிகள் இவற்றையெல்லாம் எழுத்துலகத்துக்குள் காண்பித்து, வாசிப்பவர்களையும் கதையோடு வாழச் செய்திருக்கிறார். குறிப்பாக, மதுரை வட்டார வேளாண்மைத் தொழில் சம்சாரிகளின் பேச்சு நடையே கதைகளின் உயிராகியிருக்கிறது.

முதல் கதை ‘துணை இல்’. கணவனை இழந்த வெள்ளத்தாய், தனது வறுமையான, துயரமான வாழ்வில் தன் சிறு பிள்ளைகளான காசி, மொக்கை இருவரையும் தம் கடின உழைப்பில் பங்குகொள்ள வைக்கிறார். விடுமுறை நாள்களில் கருவேல முள்வெட்டி தன்னால் முடிந்த உழைப்பை அம்மாவிற்குத் துணையாகக் கொடுக்கும் குழந்தைகளின் பேச்சுடன் கதை தொடங்குகிறது.

“அம்மை களக்கி போய்ட்டு வீடு வரப் பொழுதாகும். அவளுக்குக் கெடந்த கஞ்சியை நாம ஊத்திக்கொண்டாந்துட்டோம், என்ன செய்யப் போறாளோ?” மொகத்தைச் சுளித்துக்கொண்டு, பழைய கஞ்சியைக் குடிச்சு, மொளகா தொவையல தொட்டு நக்கினர் இருவரும். வயிறும் வட்டஞ் சேர்ந்தது. பழையபடி விறகுகளை அடுக்க ஆரம்பித்தனர்” என்றவாறு கதை நகரும். ‘இவ்வளவு வேல செய்யுறோம். வயித்துக்குக் கஞ்சி கொடுக்கவில்லையே’ என்று குழந்தைகளுக்குக் கோபம் வருவதற்குப் பதிலாக, அம்மாவின் கடுமையான உழைப்பில் பங்குகொண்டு வளரும் குழந்தைகளுக்கு அம்மாவின்மீது அன்பும் கருணையும், இனம் புரியாத அளவு கடந்த பாசமும் வெள்ளந்தித் தனமான குணமும்தான் பெற்ற தாய்க்குத் துணையாக இருக்கின்றன.

“கழுத்துப் புருஷன் இல்லாததை மறந்து, வயிற்றுப் புருஷனாக இருக்கின்ற பிள்ளைகளை நினைத்துத் தன்னைத் தேற்றிக்கொண்டாள் வெள்ளத்தாய்” என்பதோடு கதையை முடித்திருக்கிறார் ஆசிரியர். கணவன் எனும் துணை இழந்த ஒரு பெண்ணின் வாழ்வு, பிள்ளைகளுக்காகவும் பிள்ளைகளாகவுமே மாறிப் போயிருப்பதை அக்கதை விவரித்துள்ளது.

‘சிறை’ எனும் கதையானது, உழைப்பே தெய்வம் என்று வாழும் மனிதரான வைத்தியர் கந்தையாவைப் பற்றியது. விவசாயம், புறா வளர்ப்பது மற்றும் கை, கால் முறிவு எதுவாக இருந்தாலும் சரி செய்யக்கூடிய வைத்தியர் அவர். வைத்தியம் செய்வதற்கு நாட்டுக் கோழி முட்டை, கெழங்கு மாவு, மூங்கித்தப்பை, கதர்த் துணி, நல்லெண்ணெய் என, எவ்வளவு செலவானாலும் ஒரு பைசாகூட வாங்காமல், உயிர் போகும் வலியில் வரக்கூடியவர்களிடம் பணம் வாங்கக் கூடாது என்றும், சீக்கிரம் நல்லபடியாகிவிடும் என்றும் சாமியைக் கும்பிட்டு அனுப்பும் நல்ல மனிதர்.

மகன் பொறுப்பாக வளர வேண்டும் என்பதற்காக “ஒழுங்காக வேலை வெட்டியச் செய்; இல்லாட்டினால் அரளிக்காயைத் தின்னு செய்துப் போயிரு” என்ற ஒத்த சொல்லைப் பொறுக்காமல் அரளிக் கொட்டையைத் தின்று உயிர்நீத்த தனது ஒரே மகனை இழந்த வலி, பள்ளிக்கூடம் முடிந்து வரும்போது அடுத்தவர்கள் பேச்சைக் கேட்டு ஊமத்தங்காயைத் தின்று பைத்தியம் பிடித்த தன் மகள் மல்லிக்கு இவருடைய இலை தழை வைத்தியத்தால் சரி செய்யமுடியாமல், மகளை நாலு சுவருக்குள் அடைக்கப்பட்டதால் உண்டான மன வலி, பெரிய ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனால் பிள்ளையைக் காப்பாத்தலாம் என்ற எண்ணம் சிறிதளவுகூட இல்லாமல் அறியாமையில் தனது ஒரே மகளைச் சிறையாக்கி உள்ளதாகக் கதையை முடித்துள்ளார். ஊருக்கெல்லாம் வைத்தியம் பார்க்கும் அவருக்கு, தனது மகளுக்கு வைத்தியம் பார்க்காமல் தானும் அறியாமைச் சிறையில் இருக்கிறார்; தனது மகளையும் வீட்டுச்சிறையில் வைத்திருக்கிறார் என்பதாக அக்கதை அமைந்திருக்கிறது.

‘கொடை’ என்னும் கதை, அப்பாவியாகவும் ஏழையாகவும் ஏதுமற்றவர்களாகவும் இருக்கும் பெண்களுக்கு இந்தச் சமூக ஆண்கள் கொடுத்திருக்கக்கூடிய கொடை என்பது, “பொழுது விடிஞ்சா எங்களப் பாத்து ச்சீ ச்சீனு சொல்லுற ஆளுகதான், பொழுது அடஞ்சா, வெறி புடிச்ச நாய் மாதிரி அலைஞ்சு எங்க ஒடம்ப தின்னுதுங்க”. ஆனால், இந்தக் கொடுமையிலும் குழந்தையில்லாதவர்களுக்கு ஆண்டுதோறும் 16 குழந்தைகளைக் கொடையாகக் கொடுத்து, குழந்தையில்லாதவர்கள் கண்ணுக்கு மாரியாத்தாளாக வாழ்ந்து மறைகிறவளாகத்தான் பெண் இருக்கிறாள் என்கிறது அக்கதை.

சம்சாரிகள் எப்போதும் உறவினர்களிடமும் குடும்பத்தாரிடமும் அன்பாக நடந்துகொள்வர். சம்சாரிகளின் இந்தக் குணத்தைச் சிதைப்பதற்குத்தான் அக்காலத்திலிருந்து இக்காலம் வரை மறையாத – மாறாத ஒன்றாகச் சாராயம் இருக்கிறது. குடியைக் கெடுக்கக் கூடியதாகவும், உறவுகளைச் சிதைக்கக் கூடியதாகவும் இருந்த சாராயம், அப்போது மறைவாக விற்கப்பட்டது; மறைந்து மறைந்து அப்போது குடித்தார்கள். தற்போது அரசு அங்கீகாரத்துடன் சாராயம் விற்கப்படுகிறது. பொது வெளியெங்கும் உட்கார்ந்து கும்மாளமிட்டுக் குடித்து நாசமாகும் ஆண்களால் குடும்பமும் சமூகமும் பிரிந்து கிடக்கிறது என்பதைப் ‘பிரிவு’ எனும் கதை உணர்த்துகிறது.

பழிவாங்கல் எனும் உணர்ச்சி நஞ்சு போன்றது என்பதை ‘நஞ்சு’ கதை எடுத்துரைக்கிறது. கண்மூடித்தனமாகப் பாசத்தை அள்ளிக் கொடுக்கும் சனம்தான், அதே கண்மூடித்தனமாகப் பலிவாங்கவும் செய்வதாக அக்கதை நகரும். அடுத்த கதை ‘உப்பு’. சுற்றுவட்டாரக் கிராமங்களுக்கு உப்பு அளந்து போடும் சுப்புவின் குடும்பம், ஊனமான பிள்ளையைப் பெற்றுவிட்டதால் வாழ்வே உப்பு சப்பு இல்லாமல் அலைந்து திரிவதாகக் கதை முடிகின்றது. எதைப் பார்த்து வளர்கிறோமோ, அது பிடித்த ஒன்றாக மாறிவிடுகிறது. நல்லதோ கெட்டதோ அதை அடைந்தே தீர வேண்டும் என்ற குணம் கிராமத்தார்களிடம் உண்டு என்பதைப் பூவம்மா மூலம் ‘பிடிவாதம்’ கதையில் முடித்திருக்கிறார்.

இத்தொகுப்பில் உள்ள ‘சாபம்’ எனும் கதை, ஊரார்களின் பெருஞ்சாபத்திற்கு ஆளான ஒரு குடும்பத்தைப் பற்றியது. “சரி சரி… கெழ மேற்கில அரைக் குறுக்கம் போட்டுட்டுப் புல்லுகளைப் புடிங்கிட்டுப் போங்க…” என்றவர், தன் மாட்டுக்குத் தீவனம் இல்லாமல் போயிடுமோ என்ற பயத்தில், தன் நிலத்தில் விஷம் கலந்த நீரை வைத்துவிடுகிறார். தினமும் நீரைக் குடிக்கும் பறவைகள், ஆடுகள், மாடுகள் எல்லாம் அங்கும் இங்குமாகச் செத்து விழ, ‘சாமி குத்தமாயிருச்சி’ என்று மக்கள் புலம்புகின்றனர்.

செய்தி ஊருக்குள் தெரிய ஆரம்பிக்கிறது. “நம்மூரு ஆடு மாடுகள் செத்ததெல்லாம் சாமி குத்தம்னு எல்லாரும் நினைச்சுக்கிட்டு இருக்கீங்க. அது சாமி குத்தம் இல்லை. பொன்னையன் மேகறைத் தோப்புல மண்பானையில வடிகஞ்சியோடு விஷத்தைக் கலந்து வச்சு நம்மூரு வாயில்லாச் சீவன்களைக் கொன்னு குமிச்சிருக்கான்”.

கால்நடைகளைப் பறிகொடுத்த சம்சாரிகள் நொந்து போனார்கள். “அட சண்டாளப் பாவிப் பய மக்கா. நீ வெளங்குவியாடா? ஒங்க வீட்டுல பயறு அவிக்க. பொட்டலா போவடா. ஒன் வம்சம் நாசமாப் போகும்டா. வாயில்லா சீவன்கள் என்ன செய்ஞ்சுச்சு…?” என்று விம்மினார்கள். அன்று இரவு இடி மழை. பொன்னையனின் மேகறைத் தோப்பில் மரங்கள் எரிந்து தரையோடு தரையாகத் தரைமட்டமானது. பொன்னையனின் வாரிசுகள் ஒரு கண் இல்லாமல், உதடுகள் இல்லாமல், கை கால்கள் இல்லாமல் இப்போது வரைக்கும் ஏதாவது ஒரு குறையோடுதான் பிறந்துகொண்டிருக்கின்றனர் எனக் கதை முடிகிறது.

பெண்டு பிள்ளையில்லாதவர்கள் தான் வளர்க்கும் பிராணிகளைப் பிள்ளையாகப் பாவித்து அன்பு காட்டியும் அதன் செயல்பாட்டில் மகிழ்ந்தும் நிறைவடைந்துகொள்வார்கள். அப்படித்தான் திருலோகமும் சீலையம்மாள் தம்பதியினரும். சேவல் கட்டு சண்டை என்றாலே திருலோகம் சேவல்தான் ஜெயிக்கும் என்பது ஊரார் அறிந்த செய்தியாயிற்று. வெற்றியை விட்டுக்கொடுக்க மனமில்லாத திருலோகம் கோழிகளையும் சேவலையும் கம்பி வலைக்குள் வளர்க்கிறார். ஆசைகள் நிறைந்த, போட்டிகள் நிறைந்தவர்கள் மனிதர்கள். பொன்ராமன் என்பவன் திருலோகத்திற்குத் தெரியாமல் கோழிக் குஞ்சுகளை வாங்கி வளர்த்து, திருலோகத்திற்குப் போட்டியாகச் சேவல் சண்டைக்குக் கொண்டு சென்று ஜெயிக்கிறான்.

திருலோகத்தின் சேவல் மண்ணைக் கவ்வியதற்குக் காரணம், மனைவி சீலையம்மாள்தான் என்று அடித்துத் துரத்தி வதை செய்கிறான். நமக்குக் கொள்ளி வைக்க ஒரு பிள்ளைகூட இல்லை. இந்தக் கோழிகளா வந்து கொள்ளி போடப் போகுது? நாலு மனிதர்கள் வேண்டும் என்று விம்மியவள், மனிதத்தை மதிக்காதவனிடம் வாழ்ந்தால் என்ன புண்ணியம் கிடைக்கப் போகிறது என்று, பிள்ளையாய் வளர்த்த கோழிக் குஞ்சுகளுக்கு மருந்து கலந்த சோற்றுப் பருக்கைகளை வைத்து, தானும் மருந்தை அருந்தினாள். கோழிப் பிள்ளைகளின் உயிரோடு இவளுடைய உயிரும் பிரிந்தது என்பதைச் ‘சேவக்கட்டு’ கதை விவரிக்கிறது.

சம்சாரிகளின் சொத்தே அவர்களின் ஆடு,மாடுகள்தான். கானை நோய்த் தொற்றாகி அவ்வூரிலுள்ள அனைத்து மாடுகளுக்கும் பரவுகிறது. மாடுகளுக்கு ஊசிமருந்து போட்டுச் சரி செய்தாலும், சம்சாரிகளின் சொத்தாக இருக்கும் மாடுகளைக் காப்பாற்றியது நாம கும்மிடும் கடவுள்தான் என்பார்கள். “அழகுமலையானே, என் மாடு கன்றுகளைக் காப்பாத்திக் குடுய்யா. ஒவ்வொரு காளங்கன்னையும் ஒன்பேரச் சொல்லி வளர்த்து, ஒன் மலையிலேயே கொண்டு வந்து விட்டுறேன்” என்று நேர்ந்துகொண்டாள் சிட்டாள். மாடுகள் அடுத்தடுத்து ஈன்ற கன்றுகள் எல்லாம் காளைக் கன்றுகள்தான். சிட்டாள் வேண்டியது வேறு. அழகுமலையான் அருளியது வேறு என்பதைத் ‘தொற்று’ கதையில் விவரித்திருப்பார் ஆசிரியர்.

‘அழைப்பு’ எனும் கதை, ஆசிரியரை அம்மாவாகவும் மாணவனைத் தன் குழந்தையாகவும் பாவிக்கும் கதை. மாணவன் வெள்ளையன் ஆசிரியர்மீது அன்புடனும் பொறுப்புடனும் மரியாதையுடனும் நடந்துகொள்கிறான். ஆசிரியர் இருதயமேரி சிஸ்டர் மாணவன் வெள்ளையனிடம் அன்புடன் நடந்துகொள்ளும் நிகழ்வும், பின்பு ஆசிரியர் வேறு பள்ளிக்கு மாறுதலாகச் செல்வதும், மாணவன் வெள்ளையன் வேறு பள்ளிக்குச் செல்வதும் என இருவரும் பள்ளியைவிட்டுச் சென்றாலும், மாணவன் வெள்ளையனை அழைக்கப் பயன்படுத்திய மணி மட்டும் அந்த இடத்திலேயே இருக்கிறது. காலமும் களமும் மாறிக்கொண்டேயிருந்தாலும், மனதில் பதிந்த நிகழ்வுகள் அப்படியேதான் இருக்கும். எப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் உடனே நம் கண்முன்னே நினைவுகளாக வருவனவாகும்.

புண், இரத்தக்கட்டு இது போன்ற வேதனைகளுக்குக் களிம்பு தடவுவது வழக்கம். பொன்னாத்தாள் கல்லூரிப் படிப்பு முடித்து மருந்துக் கடையில் வேலை செய்கிறாள். பெற்றோருக்கும் வயக்காட்டு வேலையில் ஒத்தாசையாகச் சில வேலைகளைச் செய்கிறாள். ஊர் மக்கள் “படிச்ச புள்ள இந்த வேலையெல்லாம் செய்யாத தாயி” என்று கூறுமளவுக்கு அன்பைப் பெற்றவள். பருவப் பெண். உடன் வேலை செய்பவருடன் அவளுக்குக் காதல் மலருகிறது. கர்ப்பமாகிறாள். காதலன் விபத்தில் இறக்கிறான். யாருக்கும் தெரியாமல் ஆஸ்பத்திரிக்குச் சென்று கருவைக் களைக்கிறாள். பின் மனப்பிறழ்வுக்கு ஆளாகி சுவர் இடிந்து விழுந்து வீட்டுக்குள் சிக்கி இறந்துவிடுகிறாள் எனக் கதை முடிகிறது. தன்னை நாடி மருந்துக் கடைக்கு வருபவரின் வலியைப் போக்கியவள் பொன்னாத்தாள். பொன்னாத்தாவின் வலியைப்போக்க யாருமில்லை என்பதைத்தான் ‘களிம்பு’ எனும் கதை உணர்த்துகிறது.

‘உயிர்’ எனும் கதை நாய்கள் பற்றியது. “பாசக்காரப் பய. அவன வளத்தா ஆடு, மாடுகளப் பார்த்துக்கிரும். காடு கரையின்னு சுத்திவரும். பூச்சி பட்டை அண்டவிடாது. களவாணிப் பயல பக்கத்திலே விடாது”. அதனால், பிள்ளைகள் மீது வைக்கும் அன்பைக் காட்டிலும் நாய்கள் மீது பாசம் காட்டுவார்கள் சம்சாரிகள். அப்படித்தான் வெள்ளைச்சாமியும் இரண்டு பெண் நாய்க்குட்டிகளை எடுத்து வளர்க்கிறார். இது மனைவிக்குப் பிடிக்கவில்லை. என்றாலும் ஆசையோடு வளர்த்து வருகிறார். நாய்கள் வளரவளர ஆண் நாய்கள் வீட்டுப்பக்கம் வந்து அக்கம் பக்கத்து வீடுகளெல்லாம் அசிங்கம் செய்யவும், பக்கத்து வீட்டுக்காரர்கள் ஈவு இரக்கமில்லாமல் வாயில் வந்ததெல்லாம் சாடைமாடையாகப் பேச ஆரம்பிக்கின்றனர். வெள்ளைச்சாமியால் பொறுத்துக்கொள்ள முடியாமல் எந்தக் கையில் ஆசையோடு குட்டிகளைத் தூக்கிக்கொண்டு வந்தாரோ அதே கைகளில் நிறைமாசத்தில் இருக்கும் தாம் வளர்த்த நாய்களுக்கு விசத்தை வைத்துக் கொன்றுவிடுவதைக் கூறியிருக்கிறது கதை.

இத்தொகுப்பில் உள்ள ‘கொட்டம்’ எனும் கதை, ஆடு வளர்ப்பவர்களின் வலியை அப்படியே உணர்வுப்பூர்வமாக நம் மனதில் உறைய வைக்கிறது. கண்மாயில் நீர் வற்ற ஆரம்பித்தவுடனே அவரவர் இடத்தில் விதைகளைப் போட்டு வெள்ளாமை செய்வார்கள். உழைப்புக்கு ஏற்ப விளைச்சல் கிடைக்கும் என்பதால் கண்மாயில் எங்குப் பார்த்தாலும் மனிதத் தலைகள்தான். அதிகமாக விளையும்போதும், நல்ல வருமானம் வரும்போதும் ஒரே இனத்திற்குள்ளே போட்டிகள் வருகிறது. நீர் இருக்கும்போது மீன், கருவாடு விளையும். நீர் வற்றிய பின் காய்கறிகள் சாக்குச் சாக்காய் விளையும். அப்பன் ஒரு வாக்கைக் கொடுத்து உழுதுகொண்டிருந்த நிலத்தை மாற்றிக்கொண்டான். அவன் இறந்தவுடன் இதுவும் எங்க இடம் என்று வளர்த்த பயிர்களையெல்லாம் இரவோடு இரவாகப் பிடுங்கி எறிவதைப் பார்த்த சின்னாதிக் கிழவி மிளகாய்ப் பொடியைக் கண்ணில் வீச, சோணையா வேல் கம்பால் குத்திக் கொன்றுவிடுகிறான். நடுக் கண்மாய் வெள்ளாமை செய்வதில் ஏற்படும் போட்டி, பொறாமைகள் கொலையில் வந்து நிற்பதைத்தான் ‘நடுக்கண்மாய்’ கதை உணர்த்துகிறது.

மகன்கள் பெரிய வேலைகளில் நகரங்களில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். நகர வாழ்க்கை பிடிக்காமல் தான் வாழ்ந்த கிராமத்திலே இருந்துகொண்டு, நகரத்திற்குப் போய் பிச்சையெடுத்து அதன் மூலமாக வரும் பணத்தை அனாதை ஆசிரமத்திற்கும், சாப்பாட்டுப் பொட்டலங்களைத் தனக்கு ஆதரவாக அங்கிருக்கும் காய்கறி விற்பவர்கள், சாலை ஓரங்களில் வசிப்பவர்களுக்கும் கொடுத்து வரும் சன்னாசி தாத்தா, ஓர் ஓட்டலில் கேசியராக வேலை செய்யும் ஒருவன், அங்கு வேலை செய்யும் ஒரு பெண்ணுடன் சில்லறைத்தனமாக நடக்கும்போது அதை நேரடியாகப் பார்த்துவிடுகிறார். அன்றிலிருந்து ஓட்டல் முன்பு பிச்சையெடுப்பதைப் பார்த்தால், “ஒன் மூஞ்சியப் பார்த்துப்புட்டு இங்க யாராவது சாப்பிட வருவார்களா?” என்று அடித்து விரட்டிவிடுவார். அப்படி ஒரு நாள் அடித்து விரட்டும்போது கீழே விழுந்து தலை அடிபட்டு மயங்கி விழுகிறார்.

மருத்துவமனையில் அனாதையாக உயிர் பிரிகிறது. அனாதை ஆசிரமத்தில் தாத்தா வருவார் என்று வாசலையே பார்த்துக்கொண்டு குழந்தைகள் இருக்கின்றனர். குழந்தைகளுக்காகப் பிச்சை எடுக்கப்பட்ட காசுகள் தாத்தாவுக்கு என்ன ஆச்சு? இன்னேரம் வந்திருப்பார். பசியைப் போக்கியிருப்பார் என்று குழந்தைகளின் எண்ணம் போல் மயங்கிய இடத்தில் சில்லறைக் காசுகள் சிதறிக் கிடக்கின்ற கோலத்தை விவரித்திருக்கிறது ‘சில்லறைக் காசுகள்’ எனும் கதை.

நூலாசிரியர் அய்யனார் ஈடாடி அவர்கள், தாம் வாழ்ந்த இந்த வாழ்வை, புழங்கிய சொற்களை, மக்கள் படும் துயர வாழ்வை, பெண்களின் அயராத உழைப்பை, ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட விலங்குகள், நிலம் இவை மனித வாழ்வுக்கு உதவும் சூழலை, மனிதன் அவற்றை வாழ வைப்பதற்குப் படும் பாடுகளை, விளைநிலத்தோடு அவர்கள் பிணைந்துகொண்டிருக்கும் வாழ்வை, அவற்றில் எத்தனை வகையான போட்டிகள், பலி வாங்குதல்கள், சாபமிடுதல், அத்தனை நிகழ்வுகளையும் கதையாக்கி, அவர் வாழ்ந்த காலத்தை வரலாறாக நன்செய்க் கதை நிலமாக மாற்றியுள்ளார். குறிப்பாக, மதுரை நிலத்தில் பாய்ந்த கிருதுமால் நெடுவாய்க்கால் படுகையின் மனித வாழ்வை இலக்கியப் பூர்வமாய்ப் பதிவு செய்திருக்கிறார் அய்யனார் ஈடாடி.

கிருதுமால் நன்செய் நெடுவாய்க்காலில் கல்லும் மண்ணும் மீனும் நண்டுகளும் இன்னும் நீரில் வாழும் குட்டிக் குட்டிப் பூச்சிகளும் நீரின் போக்கில் தன் எழுச்சியாக, ஆனந்தமாகப் போகும். வேறு வேறு வயல் நிலங்களில் பாய்ந்த கிருதுமால் நெடுவாய்க்கால் தற்போது பொய்த்து, நீர்த் தடத்தின் உடல் சுருங்கி, அடையாளம் இழந்து ஏதிலியாய்க் கிடப்பது போலக் கிடக்கிறது. கிருமால் வாய்க்கால் நீரோடும் நிலத்தோடும் மண்வளத்தோடும் தலைநிமிர்ந்து அறவாழ்வு வாழ்ந்த மக்களின் வாழ்வும் பொய்த்து, விவசாயம் சுருங்கி, உடல் பொருள் ஆவி என்று இருந்த நிலத்தை இழந்து, தான தர்மங்களோடு வாழ்ந்த வாழ்வை மறந்து, அந்நில மக்கள் தொழிற்சாலைகளிலும், பல்பொருள் அங்காடிகளிலும், துணிக் கடைகளிலும், அழகு நிலையங்களிலும் சுயம் இழந்தவர்களாய் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

ஆயினும், நிலத்தோடும் உழைப்போடும் மிச்சமிருக்கும் சம்சாரி மனிதர்களின் வாழ்வையும், காலமும் வாழ்வும் கடந்துபோனாலும் நினைவுகளில் வாழும் மனிதர்களின் வாழ்வுக் கோலங்களையும் கிருதுமால் நன்செய்க் கதைகளில் எழுத்துவழிச் சித்திரமாய்க் காண்பித்திருக்கிறார் அய்யனார் ஈடாடி. மதுரை வட்டாரச் சிறுகதை வளர்ச்சியில் அய்யனார் ஈடாடியின் பங்களிப்பு மிக முக்கியமானது. அந்த வரிசையில் கிருதுமால் நன்செய் தனித்துவமானது ஆகும்.

  • மு.அம்சம்

நூல் குறிப்பு:
கிருதுமால் நன்செய் (சிறுகதைகள்)
அய்யனார் ஈடாடி,
முதல் பதிப்பு, 2025,
விலை 150/-
யாப்பு வெளியீடு, சென்னை.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button