இணைய இதழ் 123கவிதைகள்

இளையவன் சிவா கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

அழகுச் சிற்பங்களின் நடுவில்
கோரமுகம் காட்டும் சிற்பத்தை
திருஷ்டிப்பொட்டைப் போல
வீசிவிட்டுப் போன
சிற்பியின் மனநிலையில்
என்னை வைத்திருக்கிறது
நமது இறுதிச் சந்திப்பு

உன் இதயக் கிடங்கில்
நினைவூட்ட வரும்
வறட்சியின் எல்லையில்
நமது சந்திப்புகள் நிகழ்த்திய
அத்தனை தரிசனங்களையும்
புறம் தள்ளிவிட்டு
நகர்ந்து விட முடிகிறது உன்னால்

எனக்குள்ளேயோ
இன்னும் சுடர் விரிந்து
தடாகத்தில் பூத்திட்ட கமலத்தின்
ஒளியாகவே
காட்சி தருகிறது உனதழகு.

*

வந்துபோகும் எண்ணத்தை
சிந்தையில் நிறுத்தாதபோது
ஓடித் திரிந்து
உடனே செய்யும் ஓர் செயலும்
அதையே சுற்றி வட்டமிடுகையில்
அவஸ்தைகள் பெரிதாகி
தூண்டி விடுகிறது
நினைவுகளின் சேகரத்தை

செய்துவிட்ட வேலையைத் தாண்டி
செய்ய வேண்டுமென்றே
நச்சரிக்கும் மறதியை
எதைக் கொண்டு துறப்பது?

*

தினசரி நடைபாதையில்
உதிர்த்திடும் பூக்களோடு
அழகாகி விடுகிறது மரம்
எப்போதாவது பொழியும்
மழையில் நனைந்து
தன்னையே ஈரத்துக்குள்
புதைத்துக் கொள்கிறது
அம்மரம்

வயிற்றுப் பாட்டை நகர்த்திட
வந்தமரும் கிழவியின் புலம்பலுக்குள்
நனைந்து அழுகிப் போகிறது
மூடி வைத்திட்ட பழமூடை

மலரைப் போலவே
கிளையில் ஒட்டிக் கிடக்கும்
ஏதேனுமொரு பறவையை
கவ்விப் போகக் காத்திருக்கும்
பூனைக்கும்
பசியின் தொல்லை பெரிதாகிறது

காலத்தின் சுழற்சியில்
எனது நடைகளை
நினைவிலிருந்து தொலைத்துவிட்ட
மரத்தின் இருப்பில்
புதிதாகிக் கொள்கின்றன
சாலையின் அடுக்குகள்.

*

ilayavansiva@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button