
நிழல் தொலைத்த மரங்கள்
ஆலமர விழுதூஞ்சலில் தோள் பற்றி
ஆவலோடு ஆட்டுவாய்
தூரத்துக் காட்டு மல்லியின் வாசம்
காற்றில் நிறைந்த தினமொன்றில்
நம் கூடலிற்கு வெட்கி
செந்நிற மலர்களைச் சொரிந்து
நம்மைப் போர்த்தியது கொன்றை
பெருகிய வேர்வை போக்க
ஏரியில் நீராடி மேலெழுந்தபோது
வண்ணத்துப்பூச்சியின் சாயலில்
புன்னை மலரொன்றை
சூட்டி உறுதியளித்தாய்!
விழித்தெழுந்த ஒருநாள்
எனக்கான வர்க்கத்தின் அந்தியில்
நமக்கான மேற்கைக் கண்டேன்
கால எந்திரத்தின் கையில் சிக்கி
தரிசாய்க் காட்சியளிக்கிறது!
அதனாலென்ன?
வீட்டின் முன்னே வளர்கின்றன
இரு தேவதாரு மரக்கன்றுகள்.
*
முடிவுகளின் ஆரம்பம்
காலம் கடத்தும் காட்சிகளினூடே
காய்ந்து கிடந்ததொரு நிலம்
தரிசைக் கடக்கும் புள்ளொன்று
எச்சமிட்டுச் சென்றது
கார் கூடப்போகிறது
நிலம் முளை விடப்போகிறது
என்னவென்றறியாது சூல் இழந்தாளொருத்தி
முற்றுப்பெறாது தொடர்ந்தது
வெள்ளாட்டின் மடிச்சுரப்பாய்
பெருகுகிறது அவளது ஏக்கம்
ஆதுலர் சாலையில் பயணித்து
துயரம் மறைந்தோடியது
துலக்கம் பெறுகின்றன மகிழ்வுகள்
வாழ்வென்பது கடிகாரச் சுற்று
அதோ தூக்கணாங்குருவி நுண்ணிய பொறியாளனாய்
தன் இணைக்கு கூடு கட்டுகிறது
கருவேல மர நுனியில்.
*



