இணைய இதழ் 123சிறுகதைகள்

எடுபிடி – கனகா பாலன்

சிறுகதை | வாசகசாலை

“ஒரு ஆம்பளைன்னா உரக்கப் பேசி, மீசை முறுக்கோடு கம்பீரமா இருந்தாத்தானே மரியாதை. இப்படியா, யாரு என்ன சொன்னாலும் ஆமாஞ்சாமி போடுறது. உமக்குன்னு சொந்தமா மூளை இல்லையா” என்று அடிக்கடி அப்பாவின் இயல்பைக் குத்திக்காட்டி பேசும் அம்மாவை எனக்கும் பிடிக்காமல் போய்விட்டது. அப்பா வீட்டில் இருக்கும் நேரம் தவிர நானும் வெளியில்தான் திரிவேன்.

முத்துராமன் ஐயா வருவதற்கு முதல்நாள் இரவு வீட்டில் பெரிய சண்டை. அப்பா வேலை பார்க்கும் சம்சாரி வீட்டில் மிச்சம் மீதியென்று அவர்கள் கொடுத்தனுப்பிய சம்படத்தைத் திறந்தபோது, குப்பென்று ஊசிப்போன வாசனை வர, கோபமேறிய அம்மா “கருமம், டப்பாவைத் தெறந்தாலே இந்த நாத்தம் நாறுது, சட்டியிலயிருந்து வழிச்சிக் கொடுக்கையில அவளுக்கு மூக்கு என்ன முடக்குவாதத்துல கிடந்து போச்சா, அந்த அளவுக்கு இளக்காரமாப் போயிட்டமா நாமா? நீரு இப்படி கையைக் கட்டிக்கிட்டு வாயைத் தொறக்காம இருக்குறதுதானய்யா இவளுகளுக்குத் தோதாப் போச்சு” என்று திட்டியவள் அந்தப் பொரியல் டப்பாவை எடுத்து அப்பாவின் மீது வீசினாள். தடுத்து அதன் பாதையை அவர் திருப்பிவிட, அது சுவரில் கொஞ்சம், டி,வி யில் கொஞ்சம், தங்கையின் பள்ளிப் பையில் கொஞ்சமென ஒட்டிச் சிதறி நூல் அறுத்துக்கொண்டிருந்தது.

தொடர்ந்து அவள் “இந்தா, உம்மகூடயே சுத்திட்டுத் திரியுதானே உம்மவன், அவனும் நாளைக்கி இப்படித்தான் அடிமை வேலை பார்த்துட்டு இருக்கப்போறான் பாரும், பள்ளிக்கூட வாசனையே பக்கத்துல சேர்க்காத பய ” இளக்காரமாக என்னை நோக்கித் திரும்பதியது அம்மாவின் பார்வை.

தலையைத் தொங்கப்போட்டபடி அமைதியாக அங்கிருந்து எழுந்து போனார் அப்பா. அதற்கு மேல் எனக்கும் சாப்பிடத் தோணவில்லை. அப்பாவின் பின்னால் தொடர்ந்து நானும் சென்றேன். அங்கணத்தில் குவிந்து கிடந்த அழுக்குப் பாத்திரத்தைக் கழுவுவதற்கு வாட்டமாக ஒரு சருவச்சட்டியில் நிறைத்துவைத்திருந்த நீரைக் கோதி கையை கழுவினார். வேட்டியின் கீழ்முனையில் ஈரத்தைத் துடைத்தவர், அப்படியே மடித்துக் கட்டிக்கொண்டார். ஒரு நிமிடம் நின்று யோசித்தார்.

உள்ளிருந்து அம்மாவின் குரல் ” இந்தாரும், பசிங்கிறது ஒத்த நேரம், ஒரேயொரு நாளுன்னு முடிஞ்சி போகப்போறதுயில்லை, காலையில வயிறு கேட்குமே, அப்போ என்ன செய்வீரு, வந்துதானே ஆகனும்” வஞ்சத்தோடு கர்ஜிப்பது போலிருந்தது.

அப்பாவுக்கென்று நிரந்தரமாக எந்த வேலையும் இல்லை. பெரும்பாலும் எடுபிடி வேலைக்காகத்தான் அழைக்கப்படுவார். விவசாயத்திலும், கட்டிட வேலையிலுங்கூட அவர், அங்கு பணி செய்பவர்கள் கேட்கும் பொருளை எடுத்துத் தரவேண்டும், கொண்டு போய் வைக்கவேண்டும். அவர்களுக்கு டீ வாங்கித் தர, செடிகளுக்கு பூச்சி மருந்து வாங்கிவர, புதுச் சுவரில் நீரூற்றயென இப்படியான ஒட்டு வேலைகள்தான் அவருடைய பங்காக இருக்கும். ஒரு கொத்தனாராகவோ, உழவடிப்பவராகவோ, விதை விதைப்பவராகவோ நானுமே பார்த்ததுயில்லை அவரை. அம்மாவைப் போலவே தங்கைக்கும் அப்பாவைக் குறித்து மரியாதை கிடையாது.

அதற்கு மேல் அப்பாவால் அங்கு நிற்க முடியவில்லை. அந்த முன்னிரவில் ஒற்றையடிப்பாதை வழியாக, இரவுப் பூச்சிகள் எழுப்பும் சத்தங்கள் தொடர, காலில் செருப்பு கூடப் போடாமல் நடந்து போனார். அவரைத் தொடர்ந்த என்னிடம் திரும்பி “தம்பி நீ போ, முக்குரோட்டு முத்துராமனப் பார்த்துட்டு வாரேன் ” என்றார்.

முக்குரோடு என்பது எங்கள் ஊருக்கு வரவேற்பறை போல. எங்கள் வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவு இருக்கும். அதுவரை மட்டுமே பேருந்து போக்குவரத்து வசதி உண்டு. வீடு வந்து சேருவதற்கு எட்டு நிமிட நடை தேவையாகும். சமீபத்தில் முத்துராமன் தான் அங்கு ஒரு புது வீடு கட்டியிருக்கிறார். தொடர்ந்து சிலரும் தொடங்கியிருக்கிறார்கள். இனி கொஞ்சநாளில் ஊரின் பரப்பளவு அதிகமாகிவிடும்.

அப்பாவுக்கும் எனக்குமாக ஒரேயொரு பெரிய கேரியர் சைக்கிள் மட்டும் உண்டு. அதுவும்கூட ஒரு வாரமாகப் பஞ்சரில் எங்கள் வீட்டு பழைய சுவரை அணைத்தபடி பாவமாக நின்றுகொண்டிருக்கிறது.

நன்கு பழக்கப்பட்ட பாதைதான். தெருவிளக்குகள் தொடர்ச்சியாகக் கிடையாது. நகரத்தில் இருப்பதுபோல எங்கள் ஊரில் வீடுகள் ஒன்றையொன்று ஒட்டியபடி நெருக்கமாக இராது. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆளுக்கொரு திசைபார்த்து நின்றுகொண்டிருக்கும். காரை வீடு கொஞ்சம் தான். மத்ததுயெல்லாம் ஓடும், கூரையும் வேய்ந்ததாகத்தான் இருக்கும்.

அப்பா தனியாகச் செல்வதில் எனக்கு விருப்பமில்லை. அம்மா எப்போதும் சொல்வதுபோல் “எனக்குயென்ன வெட்டி முறியக்கூடிய வேலையா கிடக்கிறது. சும்மாதானே இருக்கப்போகிறேன்”. ஆனாலும் அப்பாவை எதிர்த்துப் பேசியதில்லையாதலால் திரும்ப வீட்டுக்கு வந்து முற்றத்தில் பாயை விரித்துப் படுத்துக் கொண்டேன்.

கைப்பிடிக் காது இல்லாத ஈய வடைச்சட்டி வடிவத்திற்கு, ஐந்து நாள் வளர்ச்சியில் முகத்திற்கு நேராக இருந்துகொண்டு மொத்த ஊர்களுக்கு முன்னும் மினுக்கிக்கொண்டிருந்தது நிலா. அப்போதைக்கு ரசிக்க மனமில்லை. சடவுக்காரனைப் போல அதைப் பார்க்கத் தோணாமல் கண்களை மூடிக்கொண்டேன். நிலைவாசலில் தலை வைத்துப் படுத்திருந்த அம்மா இன்னமும் திட்டுவதை நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டிருந்தாள்.

“இத்தனை வசவுகளையும் வாங்கிக்கொண்டு அப்பாவால் எப்படி இப்படி அமைதியாக இருக்க முடிகிறது“ என்று நினைத்துப் பார்த்தாலே எனக்குத்தான் கோபம் வந்தது. ஊராரையென்ன அம்மாவிடம் கூட அப்பாவிற்கு எதிர்ப்பைக் காட்டத் தெரியவில்லை. பிள்ளைகளான எங்களையும் அதட்டி அறிவுரை சொன்னதாக ஞாபகமில்லை.

பழுத்த வேப்பங்கனி ஒன்று அந்நேரத்தில் என்மார்பில் விழ, என்னவோ ஏதோயென்றுத் திடுக்கிட்டேன். அந்தப் பழம் உருண்டு கழுத்துக்குழிக்குள் வந்து கிடந்தது. கசப்பும் இனிப்பும் சேர்ந்து கனிந்திருந்த அந்த வாசனையைக் கையிலெடுத்து சிறிது நேரம் முகர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். உடலிலிருந்து உயிர் பிரிந்து போனதும் உண்டாகும் சில்லிப்பைப் போல குளிர்ந்திருந்தது அந்தப் பழம். மெல்லிய வெளிச்சத்தில் காற்றுக்கு அசையும் கிளைகள் பழம் உதிர்ந்து போனதற்காக மாரில் அடித்துக்கொண்டு அழுவது போலிருந்தது. எல்லாவற்றையும் மேலிருந்து பார்க்கும் வானம், தன் முன் நகரும் மேகங்களை நாட்டாமை செய்வதுபோல் அசையாமல் முறைத்துக்கொண்டிருப்பது தெரிய, ஒருக்களித்துப் படுத்துக்கொண்டேன்.

அம்மா தன்னிடமிருந்த வசவுச் சொற்களில் ஒன்றைக்கூட விட்டுவிடக்கூடாது என்பதாகத் தேடித்தேடி முணங்கிக்கொண்டிருந்தாள். அம்மாவுக்கு முதுகு காட்டி படுத்திருந்த தங்கை, கொலுசற்ற அவள் வலது காலினைத் தூக்கிப் பூச்சிமருந்து டப்பாவின் மீது ஏந்தலாக வைத்துக்கொண்டிருந்தாள். யார் தோட்டத்திற்கேனும் மருந்து அடிக்கச் சென்ற நாட்களில், அவர்கள் அதை குப்பையில் போடுவதற்குப் பதிலாக, ஏதோ பெரிய தானம் வழங்குவது போல அப்பாவிடம் கொடுத்தனுப்புவர்கள். அதையும் அப்பா கும்பிடு போட்டு வாங்கி வந்து வீட்டில் சேர்ப்பார்.

அதுக்கும் அம்மா “இதுல ஒன்னும் குறைச்சலில்லை, வெறும் டப்பாவுக்குப் பதிலா அதுல கொஞ்சம் பூச்சி மருந்தையும் சேர்த்துக் கொண்டு வந்தீருன்னா மொத்தமாக் குடிச்சிப்புட்டு நிம்மதியா ஒரேயடியாத் தூங்கிப் போயிறலாம்ல” என்று வைவாள்.

அதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாத அப்பா, அந்த டப்பாக்களில் ஏதாவது விதைகளைப் போட்டு வீட்டை சுற்றி நிற்க வைத்துவிடுவார். அவற்றிற்குப் பார்த்துப் பார்த்து நீர் ஊற்றும்போதெல்லாம், அம்மா “என்னவோ ஆயிரக்கணக்குல ஏக்கர் வாங்கிப்போட்டு அதுல விவசாயம் பண்றோம்னு நினைப்பு, தெரு நாய்களுக்கு மோத்திரம் மோள தோது பண்ணிக்கொடுத்தாப்புல ஆகிப்போச்சு. வீட்டைச் சுத்தி ஒரே கெட்ட வாடை, தூக்கி வீசி எறியுதேன் பாரும்” என்று திட்டுவாள். ஆனால் செய்ய மாட்டாள். அதிலிருக்கும் மணலைக் கொட்டிவிட்டு அதில் கால் கழுவுவதற்குத் தண்ணீர் ஊற்றி வைத்துவிடுவாள்.

அம்மா இப்படித்தான், அவளுக்கு அப்பாவின் சாதுவான குணத்தின் மீதான ஒவ்வாமை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வந்தது .

அடுத்தடுத்துப் பெண்கள் என்பதால் தூரத்து உறவான அத்தையின் மகனென்று சொல்லி அப்பாவுக்குத் திருமணம் செய்துகொடுத்திருக்கிறார் அம்மா வழித் தாத்தா.

தாலி கட்டும்போதுதான் இவர்தான் மாப்பிள்ளையென்று ஏறெடுத்துப் பார்த்திருக்கிறாள் அம்மா. வலுக்கட்டாயமாகக் கிணற்றுக்குள் தள்ளிவிட்டவர்களைப் போலத் தெரிந்தார்கள் அத்தனைபேரும். ஆனாலும் அவர்களை முறைத்துகொள்ளத்தான் முடிந்ததேத் தவிர, “என்னை உங்களோடு அழைத்துச்செல்லுங்கள்” என்று அம்மாவால் சொல்ல முடிந்திருக்கவில்லை.

அம்மா பயந்ததுபோலவே எனக்கும் படிப்பு மண்டையில் ஏறவில்லை. படிக்கத்தான் வராது ஆனால் கையெழுத்து அழகாக இருக்கும். அதைக் காட்டித்தான் அருண் அண்ணன் கடையில் வேலை வாங்கினேன். கார்களுக்கு, பைக்குகளுக்குயென நம்பர்பிளேட் எழுதிக் கொடுத்துக்கொண்டிருந்தேன். அதிலும் அம்மாவுக்குத் திருப்தியில்லை. அவளைப் பொறுத்தமட்டில் நான் நன்றாகப் படித்து, மேலில் அழுக்கு ஒட்டாத வேலை பார்க்கவேண்டும் என்றுதான் ஆசை.

என் எதிர்காலம் குறித்த அச்சமும் ஒருபுறம் அவளுள் வெறுப்பாக வளர்ந்து கொண்டிருந்தது. அதனால்தானோயென்னவோ அப்பாவின் மீது அன்பு எனக்கு அதிகமாகவேயிருந்தது.

படுத்தபடியே தலை எக்கிப்பார்த்தேன். அப்பா இப்போதைக்கு வருவதாகத் தெரியவில்லை. தூக்கத்தைக் கட்டுப் படுத்த முடியாமல் இமைகள் போராடிக்கொண்டிருந்தது.

மற்ற வீடுகள் போல் மகன் சாப்பிடவில்லையென்றுத் தெரிந்தால் வட்டிலில் சோறு பிசைந்து கெஞ்சிக் கொஞ்சிக் ஊட்டிவிடும் ஏதோவொரு அம்மா நினைவுக்கு வந்து போனாள். வெறும் எச்சிலை விழுங்கிக் கொண்டேன்.

அடிவயிற்றைக் கொடுமைப்படுத்திகொண்டிருக்கும் பசிக்குத் தீர்வளிக்க முடியாமல், உள்ளங்கையால் அழுத்திப் பிடித்துக்கொண்டேன். பசியும் தூக்கமும் ஒரே நேரத்தில் பாடுபடுத்தியதில் உடல் ஓய்ந்து போக, மயக்கமா தூக்கமா எனத் தெரியாதவாறு படுத்துக் கிடந்தேன்.

காலையில் கண் விழித்தபோது முற்றத்து மரத்தில் வேப்பங்குச்சி ஒடித்துக்கொண்டிருந்தார் அப்பா. “நல்லவேளை வந்துவிட்டார்” என்றிருந்தது எனக்கு. அவர் நீட்டிய ஒரு குச்சியை வாங்கி, இடுப்பில் கை வைத்தவாறு, தெருவைப் பார்த்து நின்றுகொண்டு குச்சிமுனையை மென்று பல் தேய்ப்பதற்கு வாகாக ஆக்கிக்கொண்டிருந்தேன்.

அந்த சமயத்தில்தான் அங்கு வந்தார் முத்துராமன் ஐயா “என்ன நாகப்பா, ராவுல வீட்டுப்பக்கம் வந்தீராம்ல, எம் மக சொன்னா, என்ன விசயம்” எனக் கேட்க எனக்கு ஓரளவு புரிந்துகொள்ளமுடிந்தது. முதுராமன் ஐயா எங்கள் ஊர் மற்றும் சுற்றுப்பட்டி ஊரிலிருந்து இளைஞர்களை வெளிநாட்டில் வேலைகளுக்கு அனுப்பும் ஏஜன்சியோடு தொடர்பு வைத்திருப்பவர்.

நான் நினைத்து போலவே அப்பா “ஆமா ஆமா, எம் மகனை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புறேன்னு நீங்க முன்ன சொன்னிங்கல்ல. அதான் ஞாபகப் படுத்தலாம்னு வந்தேன். கொஞ்சம் பார்த்து வெரசா ஏற்பாடு பண்ணுங்கய்யா” என்றார் பாவமாக.

“அதெல்லாம் மனசுல வச்சிருக்கேன், மறக்கமாட்டேன், சரி செஞ்சிருவோம், எட்டாப்பு வரைக்குத்தானே படிச்சிருக்கான், அதுக்குத்தக்கணதான் தேடனும், அதையும் முங்கூட்டியெ சொல்லிக்கிடுதேன் பார்த்துகிடும், பிறகு நாளைப்பின்ன கஷ்டமா இருக்கு நஷ்டமாப் போச்சுன்னு சொல்லப்பிடாது ஆமா, ஆனா வேலை உறுதி, அதுக்கு நான் கேரண்டி“ என்று நம்பிக்கை கொடுத்தவர், மேற்கொண்டு ரகசியமாக அப்பாவிடம்” அதுக்கு கொஞ்சம் காசு செலவாகும் ஏதாவது வச்சிருக்கீரா?” என்று கேட்க, அப்பா முழித்தார். உடனே முதலியார் “யார்கிட்டயாவது கேட்டுப் பொரட்டி வையும், அடுத்தாப்புல ஆக வேண்டிய வேலைகளை நான் பாக்கேன்“ என்று சொல்லிச் சென்றுவிட்டார்.

அன்றைய நிலையில் அப்பாவின் சக்திக்கு மீறிய தொகைதான். ஆனாலும் அவர் தன் அமைதியான குணத்தின் வாயிலாக பிறரிடம் நல்ல மதிப்புகளையும் பெற்றிருந்தார். அதுவும் நாராயணன் பிள்ளை அவர்களுக்கு அப்பாவின் மீது கொஞ்சம் கரிசனம் உண்டு. எப்போதாவது நான் அங்கு சென்றால்கூட அவர்கள் வீட்டுப் பையனின் துணிமணிகள், கொஞ்சம் ரிப்பேர் பார்த்தால் சரியாகக்கூடிய உடைந்தநிலைப் பொருட்கள், பழைய நாற்காலி என்று ஏதாவது கொடுத்தனுப்புவார். ஆனால் மறக்காமல் ‘ஏம்லே பள்ளிக்கூடத்துல என்ன நாயக் கண்டியா? பேயக் கண்டியா? போகவே மாட்டேன்னு சாதிச்சிட்டியே” என்று திட்டாமல் இருந்ததில்லை. அப்பா அவரிடம் எனக்காகப் பணம் கேட்டபோது “நான் சொல்லுதேன்னு தப்பா எடுத்துக்கிடாத நாகப்பா, எதுக்கு கண்காணாத இடத்துக்கு அனுப்பி வைக்க, இங்கன்னா பையன் உருப்படுதானா? இல்லை பொய் பொரட்டு ஏமாத்துன்னு உருட்டிக்கிட்டு திரியுதானான்னு பார்த்துக்கிடுவ, எனக்கு சுத்தமா பிடிக்கலை பார்த்துக்கோ. இருந்தாலும் இதுல இருபதாயிரம் இருக்கு, ஒனக்காகக் குடுக்கேன்” என்று அப்பாவின் மனதை லேசாகக் கீறிவிட்டுத்தான் கொடுத்திருக்கிறார். இன்னும் ஒன்றிரெண்டு பேர், அப்பாவை என்ன சொல்லி, என்ன வைது கொடுத்தார்களோ, அப்பா என்னிடம் பகிர்ந்ததுயில்லை.

எல்லாம் தயாரான நிலையில் நான் வெளிநட்டுக்குச் செல்லும் நாள் உறுதியானது. அன்றிலிருந்து அம்மா மாறியிருந்தாள். அப்பா கேட்காமலே அவள் காதிலிருந்த கம்மலை விற்று காசாக்கி “இந்தா, காணாக்குறைக்கி இந்தக் பணத்தையும் வச்சிக்கோ, நீயாவது ஒரு வேலைன்னு உருப்படியா நில்லு” என்றபடி என்னிடம் தந்தாள்.

அந்த நாட்களில் அம்மாவும் நிறையவே மாறியிருந்தாள். இதுநாள் வரை என்னிடம் அதிகம் அன்பு செலுத்தியிராத அவளுக்குள்ளும் நான் பிரிந்துபோவது குறித்து வருத்தம் இருக்கும் போல. பெரும்பாலும் வீட்டிற்குள் அமைதியாகவே இருந்தாள். முக்கியமாக அப்பாவைத் திட்டுவது குறைந்திருந்தது. எப்போதும் சண்டையிடும் சப்தங்களையே வாங்கிப் பழக்கப்பட்டுப்போன எங்கள் வீட்டுக்கே இது புதிய அனுபவமாக இருக்கக்கூடும். ஆனால் அந்தச் சூழலை சகஜப்படுத்தும் விதமாக காற்றாடியின் மின்னொடுக்கிப் பிரச்சனை காரணமாக அதிக சப்தமெழுப்பி ஈடுகட்டிவிட்டது.

முந்தைய நாள் காலை நானும் அப்பாவும் ஆற்றுக்குக் குளிக்கச் சென்றோம். சாய்வான மடிப்புப் பாறைக்கல்லில் வாகாக அமர்ந்து தோள்த்துண்டை இடுப்புக்கு மாற்றி உடுத்தியிருந்த வேட்டிக்கு சோப்பு இழுத்துக்கொண்டிருந்த அப்பாவிடம் “எப்பா, உண்மையிலையே உங்களுக்கு நான் வெளிநாடு போறதுல சந்தோஷமா சொல்லுங்க” கேட்டேன்.

பதில்சொல்லாமல், பொங்கியெழுந்து உடைபடும் சோப்புக்குமிழ்களை, ஒன்று கூட்டினார் பின் விடுவித்தார், நிமிர்ந்தவர் “சொல்லத் தெரியலைலே, ஆனா உங்க அம்மாவுக்கு நீ அங்க என்ன வேலை செய்யுதேன்னு நீயா சொன்னாத்தானே தெரியும், வேலையிலிருந்து ஊருக்கு வார அன்னிக்கி டிப்டாப்பா வருவேல்ல, அது போதும் உங்க அம்மாவுக்கு” என்றார். அழுகை வருவது போலிருந்தது.

ஓடும் நீரில் தலை தெரியாமல் நன்கு முங்கியெழுந்த அப்பா கரையேறினார். அப்பாவின் கண்ணீரால் அவ்வளவு நீரை உப்புக்கரிக்கச் செய்ய முடியவில்லை.

இரண்டு மாணவர்கள் புத்தகப்பையை முதுகில் மாட்டிக்கொண்டு வியர்க்க விறுவிறுக்க எங்களைக் கடந்துபோனார்கள்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button