இணைய இதழ் 123சிறுகதைகள்

குணுக்கம் – சுதர்சன்

சிறுகதை | வாசகசாலை

மாடிப்படியேறி வரும்போதே எங்களுக்கு எதிர் வீட்டிலிருந்து சாமான்களை அட்டைப்பெட்டிகளிலும் சாக்கு மூட்டைகளிலும் கட்டி, ஆட்கள் தூக்கிக்கொண்டு படி இறங்கியபடி இருந்ததைக் கவனித்தேன். மூன்றாவது மாடியிலிருந்து தரைத் தளம் வரை படியில்தான் இறங்க வேண்டும், மின் தூக்கி ஏதுமில்லை. அம்மா இன்னும் வேலையிலிருந்து வந்திருக்கவில்லை. வீட்டைத் திறந்து உடைமாற்றிக்கொண்டு முகம் கைகால் கழுவிவிட்டு மின்விசிறியை ஓடவிட்டு தொலைக்காட்சி சானல்களை மாற்றியபடி சோஃபாவில் சரிந்தேன். ஒரு மாதிரி அலுப்பில் அப்படியே உறங்கிப்போயிருந்தேன். அம்மா வந்து காலிங் பெல் அடிக்கையில் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகியிருந்ததைக் கவனித்தேன். அம்மாவும் பேருந்து, ஷேர் ஆட்டோ என மாறி மாறி வந்ததில் களைத்துப் போயிருந்தாள்
‘யம்மா.. டீ போடவா?’ என்றபடி அடுப்படியில் நுழைந்தேன்.
‘என்னடா, எதுத்த வீட்ல காலி பண்றாங்க போல. என்ன ஏதுன்னு தெரியுமா?’
‘யம்மோவ், நா உன்ன கேக்கலாம்னு வந்தா நீ என்ன கேக்குற. இவரு கவருமெண்டு ஆளுதான். எதாச்சும் ட்ரான்ஸ்ஃபரா இருக்கும்’ தேநீரை வடிகட்டி டம்ப்ளரில் ஊற்றியபடியே பதில் சொன்னேன்.
பெருநகரத்தில் இருந்தாலும் நாங்கள் குடியிருந்த தெருவும் அதனைச் சுற்றியிருந்த பகுதியும் கிட்டத்தட்ட ஒரு கிராமம் போலத்தான். தெருமுனையில் மாரியம்மன் கோவில் எதிரில் ஒரு குளம், வீட்டுக்கு எதிர்ப் பக்கம் ஒரு சைக்கிள் கடை, பக்கத்திலேயே இட்லிக்கு மாவரைத்துக் கொடுக்கின்ற கடை, நான்கு வீடுகள் தள்ளி ஒரு காய்கறி/மளிகைக் கடை, தெருவின் இந்த முக்கில் ஒரு கறிக்கடை, பக்கத்தில் மோட்டர் சைக்கிள் பழுது பார்க்க ஒரு மெக்கானிக் ஷாப், சுற்றிமுற்றி ஓர் ஐம்பதடி தூரத்தில் நாங்கள் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகள் அத்தனையும் நிறைந்தாற் போல் ஓர் இடம். அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வருவதற்குக் குறைந்தபட்சம் பதினைந்து நிமிடங்கள்; அதிகபட்சம் இருபத்தைந்து நிமிடங்கள்.
மாலை ஆறு மணி ஆனதும் மடிக்கணினியை மூடி வைத்துவிட்டு இருக்கையைவிட்டு எழுந்தால் அலுவலக வளாகத்திற்கு உள்ளேயே இருக்கிற கடையில் ஓர் இஞ்சி போட்ட தேநீர் குடித்துவிட்டு விடுவிடுவென நடந்து தலைக்கவசத்தை மாட்டி வண்டியில் ஏறியமர்ந்து முறுக்கி இந்த வாகன நெரிசலில் நீந்தி வருவதற்கான நேரம் அதுதான்.
”நான் மாமா வீட்டுக்குப் போறன். வர ஒரு வாரமாவும். நீ சமாளிச்சுருவியா?
”என்னவாம்? எதுக்கு இப்ப திடீர்னு கூப்புட்றாங்க?“
“அவங்க யாரும் கூப்புடல. நானாதான் கெளம்புறேன். சின்னண்ணணோட சின்னவளுக்கு பொம்பளப்புள்ள பொறந்துச்சுல்ல. அதப் பாக்கத்தான். போய்ட்டு ஒரு வாரம் இருந்துட்டு வரேன். தெனமும் ஃபோன் பண்ணு” என்றபடி அம்மா பரபரப்பாகக் கிளம்பத் தொடங்கினாள்.
வீட்டில் பெரிதாக ஒன்றும் வேலையிருக்காது. நாங்கள் இருவர் மட்டும்தானே. வேண்டியதைச் சமைத்துக் கொள்வேன். மதிய உணவு அலுவலகத்தில். இரவு தேவைப்பட்டால் வெளியே வாங்கிக்கொள்ளலாம்.
”நாளைக்கு சனிக்கெழம அம்மாவாச.. கறியாக்கி திங்காத. ஞாயித்துக் கெழம சாப்ட்டுக்க.”
“சரிம்மா”
அம்மாவை ஆட்டோ ஏற்றி அனுப்பிவிட்டு மாடியேறி வந்தபோது எதிர்வீட்டின் கதவு திறந்து கிடந்தது. ஆங்காங்கே பழைய செய்தித்தாள்களும் கந்தல் துணிகளும் பழுதான மின்னணு பாகங்களுமாய் சிதறிக் கிடந்தன. வீட்டு உரிமையாளரின் உதவியாளர் வந்து வீட்டைப் பூட்டி, சாவியை என் கையில் தந்துவிட்டுப் போனார்.
“புதுசா வர்ரவங்க எப்ப வருவாங்க?“
“அதொன்னும் தெர்ல சார்.. நாளைக்கு க்ளீன் பண்ண ஆள் வந்தா சாவி குடுத்துடுங்க”
”ஆங்.. செரி.. அம்மா வெளில போறாங்க. நான் வீட்லதான் இருப்பேன். பெல்லடிக்க சொல்லுங்க”
வந்து கதவைச் சாத்திவிட்டு யூட்யூபில் ஒரு திரை இயக்குநரின் நேர்காணலை ஓடவிட்டுச் சமையல் அறைக்குள் நுழைந்து மிச்சமிருந்த டீயை சூடுபண்ணி தம்ளரில் ஊற்றிக்கொண்டு பாத்திரத்தை மேலோட்டமாய் ஒருமுறை கழுவிவிட்டு சின்க்கில் போட்டு, சமையல் மேடையை ஒதுங்க வைத்து ஒருமுறை துடைத்துவிட்டு வந்து நாற்காலியில் அமர்ந்தேன். வீட்டில் அம்மா இல்லாதபோதெல்லாம் அடுத்து என்ன செய்வதெனத் தெரியாத ஒரு திகைப்பான அமைதியுடன் இப்படித்தான் நேரத்தைக் கடத்திக்கொண்டிருப்பேன்.
கட்டிலில் படுத்தபடி ரீல்ஸ் பார்த்துக்கொண்டு செல்ஃபோனை விரவியபடியே தூங்கிப்போனேன். பாதித் தூக்கத்தில் வியர்த்துப் புழுங்கிக் கண்விழித்து செல்ஃபோனைப் பார்த்தால் மணி இரண்டே கால். கரண்ட் கட். கட்டிலிலிருந்து இறங்கி பால்கனி கதவைத் திறந்து கொஞ்ச நேரம் காற்று வாங்கியபடி நின்றேன். தூரத்தில் ஏதேதோ பறவைகளின் சப்தம் கேட்பது போலத் தோன்றியது . இந்த நேரத்தில் பறவைகளெல்லாம் விழித்திருக்குமா என மனது வேறெதையோ ஆராய்ந்துகொண்டிருக்கையில் மின்சாரம் திரும்ப வந்து மின்விசிறி சுழலத் தொடங்க பால்கனி கதவைச் சாத்திவிட்டு மீண்டும் கட்டிலில் விழுந்தேன்.
காலிங் பெல் சத்தத்தில் கண்விழிக்கையில் விடிந்துவிட்டிருந்தது. எழுந்து அவசரமாய் முகங்கழுவி வாய் கொப்பளித்துவிட்டு வாசற்கதவைத் திறந்தால் வாளி, மாப், துடைப்பம் சகிதமாய் இரண்டு வடமாநில இளைஞர்கள்.
“சர்… ஓனர் வீடு கிளின் பண்ண சொன்னாங்.. ச்சாவி குடுங்க”
சாவியை எடுத்துத் தந்தேன்.
ஓரிரு மணி நேரங்களில் மீண்டும் மணியடிக்க, “சாவிய அந்தக் கதவுலயே வெச்சுட்டு போங்க” என்றபடியே கதவைத் திறந்தேன்.
வியர்க்க விறுவிறுக்கக் களைத்த முகத்துடன் ஒரு நடுத்தர வயதுக்காரர் நின்றிருந்தார்..
”நாங்கதான் இங்க குடி வர்ரோம்.. சாமானெல்லாம் லாரில இருந்து எறக்கிட்டு இருக்காங்க. குடிக்கக் கொஞ்சம் தண்ணி தர்ரீங்களா?“ படபடப்பாகச் சொல்லி முடித்தார்.
ஒரு பெரிய செம்பில் தண்ணீரும் ஒரு தம்ளரும் அவரிடம் தந்துவிட்டு வேறேதும் வேண்டுமென்றால் கூப்பிட சொல்லிவிட்டு கதவைச் சாத்திக்கொண்டு மீண்டும் போனில் மூழ்கினேன். நாள் முழுக்க சாமான்கள் ஏற்றி, இறக்கும் சத்தம் கேட்டபடியே இருந்தது. ஒரு சிறு குழந்தையின் ஆரவாரக் கூச்சலும் சிரிப்பும் அதனை அதட்டிய பெண் குரலும் என வீட்டிலுள்ள மற்றவர்களின் இருப்பை உணர்ந்துகொள்ள முடிந்தது. மதியமும் அல்லாத மாலையும் அல்லாத ரெண்டும் கெட்டான் நேரத்தில் அதீதமாய்ப் பசிக்க, தோசை சுட்டுச் சாப்பிட்டுவிட்டு சோஃபாவிலேயே உறங்கிப்போனேன்.
மாலை மீண்டும் அழைப்பு மணிச் சத்தத்தில்தான் கண்விழித்தேன். டிவியில் ஏதோ பாடல் ஓடிக்கொண்டிருந்தது. கொஞ்சம் நிதானித்துவிட்டு கதவைத் திறந்தேன். எதிர்வீட்டுக்காரர் தண்ணீர் செம்பையும் தம்ளரையும் நீட்டினார்.
“தேங்க்ஸ்.. வீட்ல லேடிஸ் இருக்காங்களா? நாளைக்குத்தான் பால் காச்சுறோம். வொய்ஃப் சொல்லச் சொன்னாங்க“
”அம்மாவும் நானும்தான். அவங்க வெளில போயிருக்காங்க. வந்ததும் வந்து பாக்கச் சொல்றேன்”
அதற்குமேல் எங்களுக்குள் பேசிக்கொள்ள ஏதுமில்லை. அந்தச் சின்னப் பெண் ஓடி விளையாடுகிற சத்தமும் அவளின் தாயின் அதட்டலும் பாதி திறந்த கதவின் வழி கேட்டது. அவரும் நானும் ஒரே சமயத்தில் திரும்பி அவரவர் வீட்டிற்குள் புகுந்து கதவடைத்துக்கொண்டோம். அம்மா வந்தால் அவர்களின் மொத்தக் குடும்ப வரலாற்றையும் ஒரே நாளில் பேசித் தெரிந்துகொண்டுவிடுவாள்.
அன்றிரவும் சோம்பலான உறக்கம். நள்ளிரவுக்கு மேல் உடல் கொஞ்சமாய் விழிப்படைய, போர்வையை உதறி, படுக்கையைவிட்டு எழுந்து பால்கனி கதவைத் திறந்தேன் ஏதோ ஒரு தொடர்ச்சியான சப்தம் தூரத்திலிருந்து கேட்டுக்கொண்டேயிருப்பது போலத் தோன்றியது. சப்தமென்றால் திடுக்கிட வைக்கிற சப்தமோ இரவுகளுக்கேயுரிய சுவர்க்கோழிகளின் ரீங்காரமோ அல்ல.
‘ங்ணோவ்ம்… ங்ணோவ்ம்… ங்ணோவ்ம்… ங்ணோவ்ம்…’ ஏதோ பறவையின் சப்தம் போலத் தோன்றியது. குறிப்பிட்டுச் சொன்னால் புறாவின் குணுக்கம் போலத் தொடர்ந்து கேட்டுக்கொண்டேயிருந்தது. கொஞ்ச நேரம் காத்து வாங்கியபடி நின்றுவிட்டு உள்ளே வந்து ஒரு மிடறு தண்ணீரைக் குடித்துவிட்டு மறுபடி மெத்தையில் விழுந்து இழுத்துப் போர்த்திக்கொண்டேன்.
‘ங்ணோவ்ம்… ங்ணோவ்ம்… ங்ணோவ்ம்… ங்ணோவ்ம்…’
சீரான இடைவெளியில் அந்தச் சத்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டேயிருந்தது. எங்கோ தொலைவிலிருந்து கொஞ்சங்கொஞ்சமாய் அந்த ஒலி கடலலைபோல மிதந்து வந்து அறைக்குள்ளே நுழைந்து பெருஞ்சுழலாய்த் திரண்டு மொத்தமாய் என்னைச் சுற்றிக்கொண்டதுபோலத் தோன்றியது. எனக்கு தலை வலிப்பது போலிருந்தது. மூச்சுவிடச் சிரமப்பட்டேன்.
‘ங்ணோவ்ம்… ங்ணோவ்ம்… ங்ணோவ்ம்… ங்ணோவ்ம்…’
எனது வாழ்வில் நான் இதுவரை கடந்து வந்த அத்தனை துயரங்களும் கருமேகமாய் இனை சூழ்ந்து கொண்டாற் போல் உணர்ந்தேன். அந்தச் சத்தத்துடன் மௌனமாய் ஒரு பெரும் போராட்டத்தை நிகழ்த்திக்கொண்டிருந்துவிட்டு உடலும் மனமும் களைத்து இதற்கு மேல் போராட முடியாதெனத் தளர்கையில் உறக்கமும் மயக்கமும் ஒன்றாய் அழுத்த உறங்கியதே தெரியாமல் உறங்கிப் போனேன்.
அடுத்த நாள் காலை அலுவலகம் கிளம்ப வேண்டிப் பரபரப்புடன் கண்விழித்து, பல்துலக்கிவிட்டு, முகங்கழுவி, வாசற்கதவைத் திறந்து பால்பாக்கெட்டை எடுத்துக்கொண்டு வந்து பிரித்து ஊற்றிக் காய்ச்சி காஃபி கலந்து தம்ளருடன் பால்கனிக்கு வரும்போதுதான் மணி பார்த்தேன். எட்டே கால் ஆகிவிட்டிருந்தது. காஃபியை குடித்தபடியே மேலிருந்து கீழே சாலையைப் பார்க்கையில் ஏதோ சலசலப்பு போலத் தோன்றியது. புதிதாய்க் குடிவந்த எதிர்வீட்டுக்காரர் ஸ்கூட்டரில் அமர்ந்திருக்க முன்பக்க இடைவெளியில் அவருடைய குட்டிப் பெண் கால் மடக்கி உட்கார்ந்திருந்தாள். பின்னிருக்கையில் அமர்ந்திருந்த பெண்மணி வண்டியில் ஒரு காலும் தரையில் மற்றொரு காலுமாய் குட்டை முடியும் பெரிய டீஷர்ட்டும் காட்டன் பேண்ட்டுமாய் இருந்த ஒரு பதின்பருவப் பெண்ணை இரு தோள்களையும் பிடித்தபடி வலுக்கட்டாயமாய் வண்டியில் உட்காரவைக்க முயன்றுகொண்டிருந்தார். அந்த டீஷர்ட் பெண் அடம்பிடிப்பது போலத் தோன்றியது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஒருவேளை எதிர்வீட்டுக்காரரின் மூத்த மகளாய் இருக்கலாம். ஆனால் ஏன் அம்மா, அப்பாவுடன் வண்டியில் ஏற அடம்பிடிக்கிறாள் என யோசித்தவாறே காஃபியைக் குடித்துவிட்டு அலுவலகம் கிளம்பினேன்.
மனதுக்குள் கேள்விகள் குறுகுறுத்தன. அந்தப் பெண்ணுக்கு என்ன வயதிருக்கும்? கல்லூரி செல்கிற வயதா அல்லது இன்னும் சின்னப் பெண்ணா? உயரத்தைப் பார்த்தால் பெரியவளாகத்தான் தோன்றியது. ச்சை.. இப்போது அதெல்லாம் நமக்கெதற்கு. மானங்கெட்ட மனது.
ஒரு வாரம் போனதே தெரியவில்லை. இரவானால் அந்தப் புறா சத்தம் மட்டும் தொடர்ந்து கேட்டபடியே இருந்தது. மொட்டை மாடியிலோ அல்லது கட்டிடத்தின் பக்கவாட்டிலோ எங்கோதான் கூடு கட்டியிருக்குமென யூகித்துக்கொண்டேன். சொன்னது போலவே வெள்ளிக்கிழமை மாலை மாமா வீட்டிலிருந்து திரும்பி வந்தாள். நான் கொடுத்த தண்ணீர் செம்பை கையில் வைத்தபடி சோபாவில் சம்மணமிட்டமர்ந்து ஆசுவாசப்படுத்திக்கொண்டு நிதானமாகக் கேட்டாள் அம்மா,
“எதுத்த ஊட்ல புதுசா வந்துட்டாங்க போல.. எந்தூராம்? விசாரிச்சியா? டீ காப்பி ஏதும் போட்டுக் கொண்டேயி குடுத்தியா?“
“வந்தவொடனெ கேள்வி கேட்டு சாவடிக்காதம்மா. நான் ஏதும் விசாரிக்கல. புருசன் பொண்டாட்டி ரெண்டு பொம்பளை புள்ளைங்க இருக்கு போல. எந்தூருன்னெல்லாம் தெரியல. நான் கேக்கவுமில்ல. சின்ன புள்ள சூட்டிகையா இருக்கா, கேலண்டர் முருகனாட்டம். பெருசு கொஞ்சம் முசுடு போல. பாத்தா ஓங்குதாங்கா இருக்கு.” எனக்குத் தெரிந்ததைச் சொல்லி முடித்தேன்.
“பக்கத்துல புறா கூடு கட்டிருக்கு போல ம்மா.. குணுகிட்டே கெடக்கு ராத்திரியானா..”
“ஏது புறாவா. வீட்டுக்கு ஆவாதுடா. நாளைக்கு ஓனர்ட்ட சொல்லி எங்கன்னு பாத்து வெரட்டியுடச் சொல்லு”
“அது பாட்டுக்கு இருந்துட்டு போவுதும்மா. நமக்கென்னன்னு வுடு. அந்தச் சத்தம் ராத்திரில கேக்க ஒரு மாறியா இருக்கேன்னு ஒன்னட்ட சொன்னேன்.”
“நீ சும்மா இரு. ஒனக்கு ஒன்னுந் தெரியாது, நாம்பாத்துக்குறேன்”
”அதெல்லாம் ஒத்துக்க முடியாது. எனக்குக் காரணம் சொல்லு. புறா ஏன் வீட்டுக்கு ஆவாது?“
“ஏன்டா, என்னென்ன புஸ்தவம் படிக்கிற. போன்ல பாக்குற. கம்ப்யூட்டர்ல பாக்குற. இதெல்லாம் அதுல வராதா? எனக்கு அந்த மாதிரி வெளக்கம்லாம் சொல்லத் தெரியாது. பாத்தது கேட்டத வெச்சு சொல்றேன். நாம் பாத்த வரைக்கும் எந்த ஊட்ல புறா கூட்டமா இருக்கோ, அடிக்கடி வருதோ அவங்களுக்கெல்லாம் ஒடம்புக்கு ஏதும் சரியில்லாமதான் போயிருக்கு. நம்ம மாயவரத்து பெரியாத்தா ஊட்லகூட அப்டித்தான் புறா கூட்டமா கெடக்கும். ஆளு வெச்சு அரிசி போட்டுட்டு கெடந்துச்சு. கடசீல என்னாச்சு? பெரியாத்தா, தாத்தா ரெண்டு பேருமே சீக்கா கெடந்து மூச்சுத் தெணறிதான் செத்துப் போனாங்க. அப்புறம் பழனி மாமாதான் ஆள் வெச்சு எல்லாத்தையும் கலைச்சு விட்டுட்டு புறா வந்து ஒக்காராம ஜன்னல் மாடத்துல முத்தத்துல எல்லாம் முள்ளு கம்பி வெச்சு வலையடிச்சு விட்டுச்சு”
“இதுக்குப் பின்னாடி இவ்ளோ கதையா? அதுசேரி. மறுபடி தொந்தரவா இருந்தா ஓனர்ட்ட சொல்லுவோம். இப்போதைக்கு விடு”
அலுவலகம் சென்று வருகிற பரபரப்பில் அமர்ந்து பேச நேரமின்றி ஓடிக்கொண்டிருந்தேன். இந்தப் புறா விஷயத்தை மறந்தே போனேன். அல்லது அந்தச் சத்தம் பழகிவிட்டிருந்தது. எப்போதாவது நள்ளிரவில் கண்விழித்தால் மட்டும் அந்தச் சத்தம் தொடர்ந்து கேட்கும்.
அடுத்த வாரம் ஒரு நாள் காலை அலுவலகம் கிளம்பிக்கொண்டிருந்த பரபரப்பில் கீழே வீட்டின் முன்னால் ஏதோ சச்சரவு போலத் தோன்றியது. பால்கனி வழியே எட்டிப் பார்த்தபோது, எதிர்வீட்டுக் காரரின் பெண் அவருடைய ஸ்கூட்டரில் ஏற மறுத்து தரையில் விழுந்து அடம்பிடித்துக்கொண்டிருந்தாள். பக்கத்தில் பெட்டிக் கடை வைத்திருந்தவரை சுட்டிக்காட்டி ஏதோ சொல்வது போலத் தோன்றியது. பின்பு அதைப் பற்றி யோசிக்க எனக்கு நேரமில்லை என்பதை உணர்ந்துகொண்டு அலுவலகம் கிளம்பிப்போனேன். கீழே பிரச்சனை முடிந்து அவர்கள் கிளம்பிவிட்டிருந்தார்கள். கடைக்காரரிடம் பின்னர் விசாரித்துக்கொள்ளலாமென நினைத்தேன்.
மாலை வீட்டிற்குள் நுழையும்போதே அம்மா எதிர் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தாள். நான் வருவதைப் பார்த்ததும், “ந்தோ பேசிட்டு வரேன்… நீ பால காய்ச்சு” எனப் பேச்சைத் தொடர, நான் முகங்கழுவி உடைமாற்றிக்கொண்டு, பாலைக் காய்ச்சி காஃபி கலந்து டம்ளரில் ஊற்றும்போது அம்மா உள்ளே வர இன்னொரு டம்ளர் காஃபி கலந்து எடுத்துவந்து அம்மாவின் கையில் தந்தேன்.
“கடவுளே.. ஏந்தான் இந்தமேறி மனுசாளுவ வாழ்க்கையில வெனைய கொண்ணாந்து வெக்கிறியோ“ என்றபடி பேச்சைத் தொடர்ந்தாள். “எதுத்த ஊட்டு புள்ளக்கி மன வளர்ச்சி குறையாமா ப்பா. இங்க ஸ்பாஸ்டிக் சொடைட்டில ட்ரீட்மெண்ட் குடுக்கத்தான் ஊர்ல இருந்து வந்தாங்களாம். ஒவ்வொரு வாட்டியும் அந்த புள்ளைய வண்டில ஒக்கார வெக்கவே போராட்டமா இருக்கும்ல. பாவத்த.. அந்த அம்மா அதயெல்லாம் சொல்லித்தான் பொலம்புது. மொத புள்ள இப்டி இருக்கேன்னு வருத்தப்படுறதா இல்லா ரெண்டாவது புள்ள நல்லா சூட்டிகையா இருக்கேன்னு சந்தோசப்படுறதான்னே தெரியலம்மாங்குது. ரெண்டு புள்ளைங்களையுமே சரியா கவனிச்சுக்க முடியல. பெருசா காசு பணமும் இல்ல. ஏதோ போராடி வாழ்க்கைய ஓட்டிட்டு இருக்காங்க.”
நான் ஒரு மாதிரி சலனமற்று இருந்தேன். “இன்னைக்கு காலைல என்னா பிரச்சன. ஏதோ தகராறு மாதிரி தெரிஞ்சுது“
“அத பேசப்போயிதான் எல்லாக் கதையும் சொல்ல ஆரம்பிச்சாங்க. ஊர்ல இவுங்க அந்த பெரிய பொண்ண பாத்துக்க சொந்தக்கார அம்மா ஒருத்தவங்கள வீட்டோட வேலைக்கு வெச்சுருந்துருகாங்க. அந்தப் பொம்பள இவுங்க வீட்ல இல்லாத நேரமெல்லாம் அந்த பெரிய பொண்ணு எதாவது கேட்டு அடம்புடிச்சா அவள போட்டு அடிக்கிறது, லூசு லூசுன்னு திட்றதுன்னு பண்ணிருக்கா. ஒரு நாள் எதேச்சையா அக்கம் பக்கம் வீட்டுக்காரங்க பாத்து சொல்லித்தான் இவங்களுக்கே இது தெரிஞ்சுருக்கு. அதுக்கப்புறம் அந்த பொம்பளைய புடிச்சு நல்லா கேட்டுவுட்டு வீட்டவிட்டு அனுப்பிருக்காங்க. ஆனா அந்த பெரிய பொண்ணு மனசுல இது ஒரு காயமா ஆயிட்டு போல. லூசு, பைத்தியம் மாதிரியான வார்த்தைய யாரு சொன்னாலும் தன்னைத்தான் சொல்றாங்கன்னு அழுது கதற ஆரம்பிச்சுருவாளாமா. இன்னைக்கு காலைலகூட பொட்டிக்கடக் காரரு ரோட்ல போற எவனையோ லூசுன்னு திட்டப்போயிதான் இந்தப் புள்ள அதக்கேட்டு மனசு வலிச்சு கத்தி சத்தம் போட்டு அழுதுருக்கு. கடக்காரருக்கும் பெத்தவங்களுக்கும் என்ன பண்றதுன்னு தெரியாம எப்டி சமாதானப்படுத்துறதுன்னு தெரியாமதான் கையப் பெசஞ்சுட்டு நின்னுருக்காங்க. ஒருவழியா அதுவே தானா சமாதானமானதும் ஆஸ்பத்திரிக்கு கூடிட்டுப் போயிருக்காங்க.”
எனக்கு மொத்தக் கதையையும் கேட்டபின் மறுபடி தலை வலிக்க ஆரம்பித்தது. என்ன சொல்வதென்று புரியாத தர்மசங்கடம். ”கஷ்டந்தான். எப்புடி வளத்து ஆளாக்கப் போறாங்களோ தெரியல.”
”என்னம்மோ போ. அந்தப் பெரிய பொண்ணு ராத்திரிக்கு ஒழுங்கா தூங்கக்கூட மாட்டளாமா. ஒரு மாதிரி அணத்திகிட்டே கெடக்குமா. பெத்தவங்க ரெண்டு பேரும் மாத்தி மாத்தி அதுகூட கையப் புடிச்சு ஒக்காந்து மேல சாச்சுகிட்டேதான் தூங்க வெக்கிறாங்களாம். மணிக்கணக்கா அணத்திகிட்டே கெடந்து விடியகாலைலதான் தூங்குமாம். அதான் ரெண்டு பேருமே எப்பவும் களைப்பாவே இருக்காங்க போல”
இந்தப் பெண் பற்றி அம்மா சொன்னதும் உள்ளுக்குள் மன அமைதி மொத்தமாய் மறைந்து மனது சங்கிலித்தொடராய் கேள்விகளை எழுப்ப அன்றைய இரவு முழுவதும் உறங்காமல் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தேன்.
‘ங்ணோவ்ம்… ங்ணோவ்ம்… ங்ணோவ்ம்… ங்ணோவ்ம்…’
ஆ…! என்ன மாதிரியான கொடுமையிது. எதற்காக இப்படிப் பிறந்து இந்த உலகில் அல்லல்பட வேண்டும். பெண்ணைப் பெற்றவர்கள்; அதுவும் இப்படியொரு பெண்ணைப் பெற்றவர்கள் ஏன் இவளைக் காலம் முழுக்க சுமந்துகொண்டு திரியத் தலைப்படுகிறார்கள். அம்மாவைக் கேட்டால் பாவ புண்ணியக் கணக்கென ஏதேனும் சொல்லக்கூடும். எனக்கு முதலில் பரிதாபமும் பின்பு வெறுப்பும் கோபமும் கடைசியில் ஆற்றாமையும் தோன்றி மனதை நிறைத்தன.
‘ங்ணோவ்ம்… ங்ணோவ்ம்… ங்ணோவ்ம்… ங்ணோவ்ம்…’
“வாழ்ந்தும் தொலையாம செத்தும் தொலையாம ரெண்டுங்கெட்டானா இருந்து சொமையா சொமந்து… பீ மூத்திரம் அள்ளி… ச்சைக்.. கருமத்த“ வாய்விட்டுச் சொல்லியவுடனேயே என் மீதே அருவருப்புணர்வு தோன்றி மனங்கசந்து போனது. உறங்கியது தெரியாமல் உறங்கிப்போனேன்.

வழக்கமான ஓட்டத்தில் ஓரிரு நாட்கள் கடந்தபின் திடீரென ஒரு நாள் காலை எதிர் வீட்டில் ஏதோ நிறையப் பேர் பேசுவது போலச் சத்தம் கேட்டது. அரைத் தூக்கத்தில் கதவைத் திறந்து பார்த்தபோது வீட்டு வாசலில் நிறையச் செருப்புகள் கலைந்து கிடந்தன. கொஞ்ச நேரம் எனக்கு ஒன்றும் புரியவில்லை. திரும்பி வந்து தூங்கிக்கொண்டிருந்த அம்மாவை எழுப்ப முயன்றேன்.
“யம்மா… எய்த்த வீட்ல ஒரே பேச்சரவமா இருக்கு. நிறையா ஆளுங்க வந்துருக்காங்க. என்னான்னு ஒன்னும் புரியல. நீ போயி விசாரிக்கிறியா?”
“என்னடா சொல்ற… யாராச்சும் வந்து என்னா ஏதுன்னு சொன்னாங்களா? நான் பல்ல வெளக்கிட்டு போயி என்னான்னு பாக்குறேன்“
தலையை அள்ளி முடிந்தபடி அம்மா எழுந்து நகர, நானும் பல்துலக்கி முகங்கழுவி சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பத் தயாரானபோது காலிங் பெல் அடித்தது.
நான் ஒரு மாதிரி பதற்றத்துடன் அம்மாவைப் பார்க்க அம்மா முகத்தைத் துடைத்துக்கொண்டு கதவைத் திறந்தபோது எதிர் வீட்டுப் பெண்மணி பட்டுப்புடவையும் கையில் சிறிய தட்டில் வெற்றிலை, பாக்கு, பழத்துடன் நின்றிருந்தாள்.
“ம்மா… பொண்ணு பெரியவளாய்ட்டா. என்ன ஏதும் என்ன பண்றதுன்னு புரியல. கொஞ்சம் சொந்தக்காரங்கள மட்டும் வரச் சொல்லிருந்தோம் தலசுத்துறதுக்கு. நீங்களும் வந்து ஆசீர்வாதம் பண்ணிட்டுப் போங்க”
படபடவென சொல்லிமுடித்து அவர் நகர, நானும் அம்மாவும் ஒருவரையொருவர் ஆசுவாசத்துடனும் குழப்பத்துடனும் பார்த்துக்கொண்டோம்.
“நான் குளிச்சுட்டு கெளம்பி போய்ட்டு வரேன். நீ ஆஃபிஸ் கெளம்பு”
”சரிம்மா நீ பாத்துக்க. வெச்சுக்குடுக்க ஏதும் காசு வேணும்னா உள்ள அலமாரில இருக்கு. எடுத்துக்க”
மாலை அலுவலகத்திலிருந்து வீடு திரும்புகையில் வெளிப்புற கேட்டுக்கு சற்று தள்ளி ஒரு லாரி நின்றிருந்தது. படியேறும்போதே ஆட்கள் சாமான்களுடன் இறங்கிக்கொண்டிருந்தார்கள். வீட்டிற்கு வந்ததும் எதிர் வீட்டிலிருந்து காலி செய்து கிளம்பிக்கொண்டிருக்கிறார்கள் என்பது புலப்பட்டது.
“என்னம்மா காலி பண்றாங்களா? திடீர்னு என்ன? காலைலதான் பொண்ணுக்கு சடங்கு வெச்சாங்க?”
”அவங்க வீட்டுக்குப் போனப்ப அந்தம்மா பேசுனாங்க டா. ஏற்கனவே பொண்ணு இப்டி இருக்கா. எப்டி பாத்துக்கப் போறோம்னு யோசிச்சுட்டு இருந்தோம். இப்ப திடீர்னு இது வேற. இதுக்கு மேல இந்தச் சிட்டிக்குள்ள வெச்சு புள்ளையையும் பாத்துகிட்டு நாமளும் ஓடிகிட்டிருக்க முடியாதும்மா. அதனால சொந்த ஊருக்கே போயிடலாம்னு முடிவு பண்ணிட்டோம். அங்க வெச்சு பாத்து என்ன பண்ண முடியுமோ அதப் பண்ணுவோம். சின்னவள ஒழுங்கா வளத்து கரையேத்திட்டா அப்புறம் நாங்க இருக்குற காலம் வரைக்கும் இவளப் பாத்துப்போம். அதுக்கப்புறம் கடவுள் விட்ட வழின்னு விரக்தியா பேசுனாங்க”
”ஏற்கனவே அந்தப் பொண்ணு அப்புடி. இப்ப இது வேற. இவங்க காலத்துக்கும் அவள் சொமந்துட்டே திரியப்போறாங்களா?”
“ந்தபாரு புரியாம என்னமாச்சும் பேசாதடா. பெத்துகிட்டவங்களுக்குத் தெரியாதா என்ன செய்யணும் செய்யக்கூடாதுன்னு? இதுல நீயோ நானோ சொல்ல என்னா இருக்கு“
“இல்லம்மா. நல்லாருக்க புள்ளைங்களே நாளொரு கஷ்டமும் பொழுதொரு போராட்டமா வாழ்க்கைய கடத்துதுங்க. வளக்க, படிக்க வெக்க, கட்டிக் குடுக்கன்னு பெத்ததுங்க கெடந்து அல்லாடுதுக. ஊரு ஒலகத்துல என்னென்னம்மோ கொடுமையெல்லாம் நடக்குது. பாக்கத்தான செய்றோம். அதான் எனக்கு ஒரே அழுவாத்திரமா வருது. பொறப்புக்கும் பொழப்புக்கும் ஒரு நியாய தர்மம் வேணாமா.”
“யப்பா. அதுக்காக யாரும் புள்ள பெத்துக்காம, வாழாமையா இருக்காங்க. இதே பொம்பளப் புள்ள நல்லபடியா பொறந்துருந்தா? அவளப் பெத்தவங்களுக்கு ஏதோ திடீர்னு ஒடம்புக்கு வந்து அந்தப் புள்ளைங்க வளந்து காலத்துக்கும் அவங்களப் பாத்துக்குற நெலமைல இருந்தா? அப்ப நீ என்னான்னு சொல்லுவ? எத சரி தப்புன்னு சொல்லுவ? நாளைக்கே எனக்கு முடியாமப் போயிட்டா நீ வெச்சு பாக்க மாட்டியா என்ன?“
“ம்மா ஏம்மா என்னென்னம்மோ பேசுற. எங்கேயோ ஆரம்பிச்சு எங்கேயோ போயிட்ட. இந்தப் பேச்ச வுடு. யாரோ என்னம்மோ பண்ணட்டும். எப்புடியோ வாழட்டும்”
நான் மேற்கொண்டு ஏதும் கேட்டுக்கொள்ளவில்லை. உடைமாற்றிக்கொண்டு ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தேன். அம்மாவும் எதுவும் பேசாமல் தன் வேலையைப் பார்த்தபடி இருக்க மாலை மறைந்து இருள் கவிந்தது. காலிங் பெல் அமைதியைக் குலைக்க, எழுந்துபோய் கதவைத் திறந்தேன்.
“சாவிய ஓனர் உங்கள்ட குடுத்துட்டு போகச் சொன்னாரு. செட்டில்மெண்ட்லாம் அப்புறமா நான் வந்து பாத்துப் பேசி முடிச்சிக்கிறேன். சொந்த ஊருக்கே போறோம். அம்மாகிட்ட ஒய்ஃப் சொல்லிருப்பாங்க. ரொம்ப தேங்க்ஸ்“
பேசி முடித்து கையில் சாவியைக் கொடுத்துவிட்டு என் பதிலை எதிர்பார்க்காமல் வியர்க்க விறுவிறுக்கப் படியில் இறங்கிப் போனார். எதிர்வீடு வெறுமையால் நிறைந்திருந்தது. கொஞ்ச நேரம் பூட்டியிருந்த கதவைப் பார்த்தபடி அங்கேயே நின்றிருந்த நான், ஒரு மாதிரியான குறுகுறுப்புடன் சாவி போட்டு கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்று லைட் சுவிட்சை அழுத்தினேன். வீடு முழுக்க தூசியும் கால்தடங்களும் செய்தித்தாள் குப்பைகளும் கந்தல் துணிகளும் உடைந்த பிளாஸ்டிக் பொருட்களுமாய் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. சுவரில் சின்னப்பெண் ஆங்காங்கே வரைந்து நிறையக் கிறுக்கி வைத்திருந்தாள். எல்லாக் குழந்தைகளின் மனதுக்குள்ளும் மரங்களும் மலையும் வீடும் மலர்களும் ஒரே வடிவத்தையே கொண்டிருப்பதாகத் தோன்றியது. ஒரு வட்டம், நான்கைந்து கோடுகள், சில புள்ளிகளில் அவர்களால் யாரையும் வரைந்துவிட முடிகிறது. அறையின் சுவரில் பெரிதாக ஒரு கிறுக்கல் படம் வரையப்பட்டிருந்தது. மலையின் முன்பு ஒரு நீண்ட சாலை, சாலை நடுவே ஒரு சின்ன உருவம், அதன் ஒரு பக்கம் கையைப் பிடித்தபடி இரண்டு பெரிய உருவங்கள், மற்றொரு கையைப் பிடித்தபடி இன்னும் நெருக்கமாக வேறொரு பெரிய உருவம். என்னுடைய எல்லாக் கேள்விகளுக்கும் விடை கிடைத்தாற் போல் இருந்தது.
லைட்டை அணைத்து, கதவைப் பூட்டிவிட்டு வீட்டிற்குள் வந்தபோது அம்மா உறங்கிப்போயிருந்தாள். நானும் அறைக்குள் நுழைந்து கட்டிலில் விழுந்தேன். இழுத்துப் போர்த்திக்கொண்டு கண்களை மூடிய மறுநிமிடம் உறங்கிப்போனேன். அன்றிரவு புறாக்கள் குணுகவில்லை. அல்லது அந்தச் சப்தம் என் காதுகளை எட்டவில்லை.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button