இணைய இதழ் 124நேர்காணல்கள்

வரலாற்றுத் தடத்தில் காக்கைச் சிறகினிலே இருக்கும் – ஆசிரியர் வி.முத்தையா

நேர்காணல்கள் | வாசகசாலை

‘காக்கைச் சிறகினிலே’ 15 ஆண்டுகளாக வெளிவந்துகொண்டிருக்கும் மாத இதழாகும். கலை, இலக்கியம், சமூகம் தொடர்பாக அதில் வரும் கருத்துகள் முற்போக்கானவை. அதன் ஆசிரியர் வி. முத்தையா கூட்டுறவுத் துறையில் பணியாற்றியவர்; தொழிற்சங்கவாதி. 

மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட அனைத்துச் சமூக உணர்வாளர்களும், இதனைத் தமது பத்திரிகையாகக் கருதுகிறார்கள். காக்கைச் சிறகினிலே இதழின் வெற்றிக்குக் காரணம் என்ன என்ன!

சென்னை, பல்லாவரத்தில் உள்ள அவரது இல்லத்தில், பீட்டர் துரைராஜ் நடத்திய, இந்த நேர்காணலின்போது மொழிபெயர்ப்பாளர் அக்களூர் இரவியும் உடன் இருந்து, இந்தச் சந்திப்பைச் செழுமைப்படுத்தினார்.

கே : காக்கைச் சிறகினிலே என்ற பெயரை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்?

ப : 2010ஆம் ஆண்டு கூட்டுறவுத்துறையில் இருந்து நான் ஓய்வு பெற்றேன். ஏஐடியுசி சங்கத்தில் இருந்தேன். ஒரு தொழிற்சங்கவாதி என்ற வகையில், எப்பொழுதுமே தொழிலாளர்கள், நண்பர்கள் சூழ இருந்திருக்கிறேன். ஓய்வுபெற்ற பின்பு, நண்பர்களோடு பேச, ஓர் அறையை வாடகைக்கு எடுக்கலாம் என யோசித்து வந்தேன். அப்போது பத்திரிகையாளர் தமிழன்பன், ‘காக்கைச் சிறகினிலே’ என்ற பெயரில் ஒரு தலைப்பு இருக்கிறது என்று சொன்னதாக வைகறை சொன்னார். அதே பெயரில் பத்திரிகை நடத்தலாம் என முடிவெடுத்தோம். ஆனால், அலுவலகத்தில் விசாரித்தபோது, புதுப்பிக்கப்படாமல் அதன் பதிவு காலாவதி ஆகிவிட்டது என்று கூறிவிட்டார்கள். அதே பெயரில் புதிதாக இதழ் ஆரம்பிக்க விண்ணப்பித்தோம்; பதிவும் கிடைத்துவிட்டது. நான் ஓய்வுபெற்றுவிட்டதால், ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் என்று என் பெயரிலே பதிவு செய்துகொண்டேன். 

கே : பொதுவாகச் சிறு பத்திரிகைகளின் நடை கரடு முரடாக இருக்கும். ஆனால் காக்கை மாறுபட்டு இருக்கிறதே!

ப : இதில் எழுதுகிற பலரும் சமூகத்தை முன்னேற்ற வேண்டும் எனும் அக்கறை கொண்டவர்கள். ஆகையால் அவர்களுடைய எழுத்துக்கள் மக்களைச் சென்றடையும் விதமாக எளிமையாக இருக்கின்றது. அச்சுக் கட்டணம், அஞ்சல் கட்டணத்தை ஈடுகட்டும் வகையில் சந்தா வருகிறது. மக்களுடைய நம்பிக்கையைப் பெற்றுவிட்டதால், இதழ் தொடர்ந்து வருகிறது. கொரோனா காலத்திலும்கூட இணைய வழியில் வெளியிட்டோம். வியாபார நோக்கம் எங்களுக்கு இல்லை.

கே : ஈழம் தொடர்பான கட்டுரைகள் காக்கையில் நிறைய வருகின்றனவே!

ப : ஆரம்பக் காலத்தில், மறைந்த ஈழக் கவிஞர் கி.பி.அரவிந்தன் காக்கையின் நெறியாளராக இருந்தார். பல சந்தாதாரர்களை அவர் அறிமுகப்படுத்தினார். இப்போதும் ஐரோப்பாவிலிருந்து சந்தா செலுத்துபவர்கள் நிறைய உள்ளனர். எனவே ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் கட்டுரைகள் நிறைய வருகின்றன.

கே : 340 பக்கங்கள் கொண்ட தமிழர் திருநாள் சிறப்பு மலரை ரூ. 50க்கு வெளியிட்டிருந்தீர்கள். இது எப்படிச் சாத்தியமாயிற்று?

ப : காக்கை சிறகினிலே இதழ் வந்து 15 ஆண்டுகள் ஆகிறது. இதனைக் கொண்டாடும் விதமாக என்ன செய்வது என்று மூத்த பத்திரிகையாளர்களோடு கலந்து பேசினோம். எழுத்தாளர்களை அழைத்து கருத்தரங்கம் நடத்தலாமா என்று நினைத்தோம். செலவு அதிகமாகும் என்பதால் அந்த முயற்சியைக் கைவிட்டு, தமிழர் திருநாள் சிறப்பிதழாக வெளியிட்டோம். கோவை விஜயா பதிப்பகம், சென்னை டிஸ்கவரி புக் பேலஸ், பனுவல், பாரதி புத்தகாலயம் போன்ற இடங்களில் காக்கை இதழ் விற்பனைக்குக் கிடைக்கும். வாசகர்கள் பெரும்பாலும் சந்தாதாரர்கள் என்பதால் விலையை உயர்த்தவில்லை. இதழைப் பற்றி தமிழ் இந்து செய்தி வெளியிட்டது. தன்னை பேட்டி எடுக்க வரும் பத்திரிகையாளர்களுக்குக் கொடுப்பதற்காக, பத்து இதழ்களை, தோழர் அய்யநாதன் வாங்கிச் சென்றார். புத்தகக் கண்காட்சியிலும் பார்வையாளர்கள் வாங்கினார்கள். புதிய சந்தாக்களும் வந்தன.

கே : பொதுவாக, காக்கையின் தாக்கம் எப்படி இருக்கிறது?

ப :  தமிழ்நாட்டின், மேனாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்கள் அவ்வப்போது காக்கையைப் பற்றி தொலைப்பேசியில் விசாரிப்பார். 2021 ம் ஆண்டு ஒரு தொகையை இதழுக்கு நன்கொடையாகக் கொடுத்தார். குறிப்பாக, மத்தியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் நாச்சிமுத்து, ஆய்வாளர் பக்தவச்சல பாரதி, பேரா. தமிழவன், மார்க்சிஸ்ட் கட்சி கே. பாலகிருஷ்ணன், மேனாள் துணைவேந்தர் திருமலை, பேரா. கோ. பாலசுப்பிரமணியன், பேரா. க. பஞ்சாங்கம், பேரா. க. பழனிதுரை உள்ளிட்ட பலர் அக்கறையோடு பேசுவார்கள். திராவிடர் கழகம் நடத்தும் கல்வி நிறுவனங்களில் காக்கையை வாங்கச் சொல்லி ஆசிரியர் கி. வீரமணி அறிவுறுத்தியிருக்கிறார். காக்கையில் வரும் முக்கியமான கட்டுரைகளை விடுதலையில் மறுபிரசுரம் செய்கிறார்கள். நூலக ஆணை உள்ளது. தொலைக்காட்சியில் வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தம் பற்றி ஒரு விவாதம் நடந்துகொண்டிருந்தது. அதனை யதேச்சையாகக் கேட்டேன். காக்கையில் வந்திருந்த ஒரு கட்டுரையினைச் சுட்டிக்காட்டிப் பேசியதைக் கேட்க முடிந்தது. சமூக அக்கறை கொண்ட பல பேராசிரியர்கள், செயல்பாட்டாளர்கள் இதில் எழுத வேண்டும் என்று தன்முனைப்பாக எழுதி அனுப்புகிறார்கள். வாசகர்கள் சந்தாவைப் புதுப்பித்து வருகிறார்கள். இவையெல்லாம் நல்ல அறிகுறிகள்தானே! 

கே : இதழியலை நீங்கள் படிக்கவில்லை. ஆனால் நல்லவிதமாக நடத்தி வருகிறீர்கள். ஈரோடு தமிழன்பனின் கடைசி கவிதை உங்கள் இதழில் வந்தது. எஸ்.வி.ராஜதுரை, மே.து.ராஜ்குமார், ஆ.சிவசுப்பிரமணியன் போன்றவர்களோடு இடையறாத தொடர்பில் இருக்கிறீர்கள்! 

ப : குமரி மாவட்டத்தில் உள்ள வீரமார்த்தாண்டன்புதூர் என்னுடைய கிராமம். என்னுடைய ஐந்தாவது வயதிலேயே தாயை இழந்தவன். தாயை இழந்த பிள்ளை என்பதால் அந்தக் கிராமத்திற்கே நான் செல்லப்பிள்ளையாக இருந்தேன். என் அப்பாவிற்கு இரண்டாவது திருமணம் முடிந்து, அவர்கள் வளர்ப்பில் இருந்ததால், பொறுப்பும் இயல்பாகவே வந்தது. எட்டாம் வகுப்பில் படிக்கும்போது, நூலகத்தில் உள்ள புத்தகங்களை வீடுகளுக்கு விநியோகிப்பேன். ஊர் பொது இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பை இளைஞர்களாகிய நாங்கள் அகற்றி சாலை போடுவது போன்ற பல வேலைகளைச் செய்து கொண்டிருந்தோம். அங்கேயே இருந்தால் ஊர் தகராற்றில், மாட்டிக்கொண்டு விடுவேன் என்று பயந்து போன என் தந்தை என்னை சென்னைக்கு அனுப்பிவிட்டார். பியூசியில் தோல்வி அடைந்து, கூட்டுறவுத்துறை பயிற்சி பெற்றிருந்த நான் சென்னை டியூசிஎஸ் அங்காடியில் பணியில் சேர்ந்தேன். சம்பளம் குறைவாக இருந்ததால் ஊதிய உயர்வுக்காக நண்பர்களோடு சேர்ந்து தொழிற்சங்கப் பணியில் ஈடுபட்டேன். பிரபலத் தொழிற்சங்கத் தலைவராக இருந்த சி.கெ. மாதவன் வழிகாட்டலில் தீவிரமாகப் பணியாற்றினேன். கூட்டுறவு தொழிலாளர்களுக்கென்று ‘போரணி’, ‘போர்க்களம்’ என்ற இதழ்களை நடத்தினோம். தொழிற்சங்கவாதி என்கிற வகையில் ஜனசக்தி, தினமணி போன்ற இதழ்களில் எழுதியிருக்கிறேன்.

திராவிட இயக்க ஆய்வாளரான க. திருநாவுக்கரசு கூட்டுறவுத் துறையில் பணியாற்றியவர். அவரது அச்சகத்தில் ஒரு பகுதியில் தொழிற்சங்க அலுவலகம் இயங்கி வந்தது. அங்கிருந்துதான் அப்பொழுது பிரபலமாக இருந்த க.சுப்பு அவர்களை ஆசிரியராக வைத்து ‘நக்கீரன்’, தாம்பரம் வழக்கறிஞர் எஸ்.சி. சிவாஜியை ஆசிரியராக வைத்து ‘வசந்தம் வருகிறது’ போன்ற இதழ்களையும், பணியில் இருக்கும்போதே நடத்தி இருக்கிறோம். எனவே இதழியல் தொடர்பாக ஏதோ வேலைகளைச் செய்து வந்திருக்கிறேன். 

கே : உங்களுடைய பொதுவாழ்க்கைக்குப் போதுமான அங்கீகாரம் கிடைத்திருக்கிறதா?

ப : தமிழ்நாடு அரசின் அகவை முதிர்ந்த தமிழறிஞர் விருது பெற்றதால், மாதந்தோறும் ரூ.8,000 உதவித்தொகை கிடைக்கிறது. 2012இல் கி.ரா. விருது கிடைத்தது. 2019இல் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் தமிழ்ப் பேராயம் விருது அளித்தது. இது தவிர, பத்துக்கும் மேற்பட்ட விருதுகள் கிடைத்துள்ளன. கூட்டுறவுத்துறையில் ஊழலை ஒழிக்க, மின்னணு தராசு, ‘கூப்பன் முறையில் அரிசி விற்பனை’ போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்தோம். பொதுவிநியோகத் துறை கடைகளை, கூட்டுறவு அமைப்புகள் நடத்துவதால் ஏற்படும் நட்டத்திற்கான காரணத்தை  ஆய்வு செய்து ஏஐடியுசி தொழிற்சங்கம் மூலமாக அரசுக்கு அறிக்கை கொடுத்தோம். பொது விநியோகத் திட்ட அமலாக்கம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி வாஸ்த்வா குழுவில் மறைந்த தொழிற்சங்கத் தலைவர் ஏ.எம். கோபு, ஆலோசகர் சுஜித் பிரபு ஆகியோர் வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கையை அளித்தோம். இப்பொழுது கூட்டுறவு அமைப்புகளுக்கு ரேஷன் கடைகளை நடத்துவதற்கு ஆகும் நிர்வாகச் செலவுகளை அரசு வழங்கி வருகிறது.

சாதி, மதம், இனம் கடந்த திருமணம் என்னுடையது. என் மனைவி என் குடும்ப வாழ்க்கைக்கு, பொது வாழ்க்கைக்கு ஆதார சக்தியாக இருந்தவர். ஒரு மகன், மகள். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. நல்ல நிலையில் இருக்கின்றனர். என் மனைவி 2017இல் திடீரென்று தவறிவிட்டார். “காக்கை சிறகினிலே இதழ் இல்லையென்றால் இந்நேரம் நீ செத்திருப்பாய்” என்று காக்கை இதழை அச்சடிக்கும் ‘துர்கா பிரஸ்’ சரவணன் விளையாட்டாகச் சொல்லுவார்.

கே : வேறு ஏதும் சொல்ல விரும்புகிறீர்களா?

ப : பாஜக அரசு சிறுபத்திரிக்கைகளுக்கு அஞ்சல் கட்டணச் சலுகையை டிசம்பர் 2024 முதல்  நிறுத்திவிட்டது. ஏனெனில் அரசை எதிர்த்து காத்திரமான கருத்துகள் சிற்றிதழ்களில் வருகிறது. காக்கைச் சிறகினிலே இதழுக்கு அடுத்த ஆண்டில் இருந்து அஞ்சல் வில்லைக் கட்டணம் அதிகம் செலுத்த நேரிடும். காக்கைக்கு மார்க்சியம், பெரியாரியம் தொடர்பான கட்டுரைகள் நிறைய வருகின்றன. அம்பேத்கரியம் தொடர்பான கட்டுரை எழுதுபவர்கள் குறைவாக உள்ளனர். வரலாற்றுத் தடத்தில் காக்கைச் சிறகினிலே என்றென்றும் பதிந்திருக்கும் என நம்புகிறேன். 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button