இணைய இதழ் 124குறுங்கதைகள்

குறுங்கதை – காந்தி முருகன்

குறுங்கதைகள் | வாசகசாலை

சுவருக்கப்பால்

நான் இங்கமர்ந்து சில மணி நேரங்கள் ஆகின்றன. என் கைகளும் கால்களும்  சங்கிலியால் கட்டப்பட்டுள்ளன. என் சிந்தனைகள் எங்குதான் இருக்கின்றன‌ என்பதைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.  இந்த நான்கு சுவர்களையே சுற்றிமுற்றிப் பார்க்கிறேன்.‌ அவை வெறுமையான சுவர்கள் அல்ல; நகரக் கூடியவை. ஐந்து நிமிடங்களுக்கொரு முறை அவை இருக்கும் இடத்தை விட்டு ஓரடி  நகரும். இதில் வேடிக்கை என்னவென்றால் எல்லாப் பக்கச் சுவர்களும் ஒரே நேரத்தில்தான் நகரும்.‌ என் பின் பக்கச் சுவர்‌ சிக்கல்களால் ஆனவை. என்னைப் பின்னிருந்து அதிவேகமாகத் தள்ளிவிடும் ஆற்றல்மிக்கது. என் முதுகைக் கொண்டு நகரவிடாமல் ஓரளவுதான் முயல முடிகிறது. முன் பக்கச் சுவர் “அருகில் வா” என்று அழைத்துக்கொண்டே மெதுவாகத்தான் நகர்கிறது.  நான்தான் செல்ல மறுப்பு தெரிவிக்கிறேன். வலது இடது பக்கச் சுவர்கள் என்னை நசுக்கிவிடவே துடிக்கின்றன. சுவர்கள் நகர நகர இருள் சூழ ஆரம்பிக்கின்றன. நீண்டிருந்த என் கால்களின் பாதங்களைச் சுவர்கள் நகர்த்திக் கொண்டு வருகின்றன. யார்தான் இந்தச் சுவர்களை இயக்குகின்றனரோ. சங்கிலிகளின் பூட்டை இவ்வளவு நேரம் நான் தேடவே இல்லை. நசுங்கிவிடுவேன் என்கிற பயவுணர்வில் தேடுகிறேன். கையில் சிக்கவில்லை.‌ கால்களை மடக்கி அமர வேண்டிய நிலை உருவாகிவிட்டது. உடல் இறுகத் தொடங்குகின்றது. விரிந்திருந்த தேகம் வளையத் தொடங்குகிறது.‌  என் தோள் பட்டைகள் கன்னங்களை உரச ஆரம்பித்துள்ளன. சதைகள் பிதுங்கி கண்கள் மயங்குகின்றன. இப்போதுதான் உணர்கிறேன், என் கைகள் எந்த இரும்புகளாலும்  கட்டப்படவேயில்லை.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button