இணைய இதழ் 124கவிதைகள்

அருண் கொலட்கரின் கவிதைகள்

தமிழில் ஆர் சீனிவாசன்

ஆடு புலி ஆட்டம்

யார் ஆடு யார் புலி
அது முக்கியமல்ல – என்றும்
தவறாமல் ஒரே முடிவுதான்
அவள் வெல்வாள்
நான் தோற்பேன்

ஆனால் சில சமயம்
வேட்டை உச்சத்தில்
மந்தை பாதியானபோது
எதிர்பாரா இடத்திலிருந்து
உதவும் கரங்கள் வரும் –
மேலிருந்து

பெரும் போர்களைப் பார்த்த பெரியவன்
எங்கள் போரை மௌனித்துப் பார்ப்பவன்
பூ ஒன்றை கீழே வீசுவான் –
மஞ்சள் நிறம், இனப் பெயர் தெரியாப் பூ
தரையில் வரைந்த சதுரத்தில் விழும்

ஓர் புலியைத் தடுத்து
இன்னொன்றை வழி மறித்து நிற்கும்
அதைத் தொடர்ந்து விரைவாக
இன்னொரு பூவை வீசுவான்
அதே பெயரறியா மஞ்சள் வகை
ஆனால் இம்முறை
மெதுவாகக் காற்றில் மிதந்து,
அவள் செவியை வருடி
கன்னங்களைத் தடவி, கீழிறங்கிய
முன் மார்பகங்களைத் தொட்டு
பிளவுசுக்குள் மறைத்து வைத்திருக்கும்
கஞ்சா நெடியை
மெல்லிய வாச மயக்கத்தால் கவிழ்த்து
ஒரு கணம் அவளை வீழ்த்த உதவும்.

*

மகராந்

சட்டையைக் கழட்டிட்டு பூஜைக்கு வரணுமா?
நா வரல ஜி
உனக்கு வேணும்னா நீ போ
வத்திப்பொட்டியை மட்டும் கொடுத்துட்டுப் போ
ஓரமா நின்னு பிடிச்சிக்கிட்டு இருக்கேன்
யாரும் கண்டுக்கிற மாட்டாங்க கேட்டியா?

*

தெரு நாய்

1

இது எனக்குப் பிடிச்ச நேரம்
நாள் பொழுது முழுக்கத்துல
இப்பத்தான் நல்லாயிருக்கும்
இந்த முழு நகரமே எனக்குத்தான் சொந்தம்

இந்த கான்க்ரீட் டிராஃபிக் ரௌண்டானா சந்திப்புல படுக்கிற சுகம்
இந்த பிளாட்ஃபாரம் நடு சென்டர் மையத்துல படுக்கிற குசி
இப்பதான் கிட்டும்

பகல் பொழுதுல இத பார்க்கிங்கா மாத்திருவாங்க
ஐம்பது காராவது நிறுத்திருவாங்க

ஆனா விடியற்காலைல நான் ஒருத்தன்தான்
உலகத்துலேயே ஒரே அறிவுள்ள பிராணி

ஃபிளட்டான ஜில்லு கான்க்ரீட் தரையில
இதமா வயித்த பரத்தி
முன்னங்கால் ரெண்டையும் விரிச்சு
அது நடுவுல தாடையை வெச்சு
ஆஹா என்ன சுகம்ப்பா.

அண்ணார்ந்து பாக்குற அந்த இடத்துல
ஒரு காலத்துல துரையோட செல
நின்னதாக சொல்றாங்க.

2

மேலிருந்து பார்த்தா என் உடம்பு
பழைய பாம்பாய் ஏழு தீவு மேப் மாதிரி

இன்னும் இணைக்காம ஒரே கருப்பு கோட்டால
பழைய பேப்பர்ல வரைஞ்ச உருவம்

கிழவித்தீவு என் நெத்தி
மாஹிம் என் தொண்ட
மிச்சம் என் கூடு , முதுகு, குறி

நேர்த்தியா அழகா இல்லாம
கொத்து பரோட்டா மாதிரி.

3

என் பாட்டன் முப்பாட்டனைப் பத்தி சொல்றேன்
(உண்மைய சொன்னா எனக்கே சரியாத் தெரியாது
ஆனா தெரிஞ்சதை சொல்றேன்)

அம்மா வழி –

ஆயிரத்தி எட்நூத்தி அறுபத்தி ஆறுல
பார்ட் ஃபிரேரே மகா பிரபு பம்பாய்க்கு
கொண்டுவந்த பொட்ட நாயுங்கள்ல

அம்மாந்தூரம் கப்பல்ல கடந்து
இந்தப் புழுதில வெக்கைல உப்பு சேத்துல
பிழைச்ச ஒரே பொட்டையோட நேர் வம்சம் நா

பம்பாய்க்கு நரி வேட்டை நாய்தான் ரொம்ப தேவைன்னு
ஏன் நினைச்சாரோ தெரியல துரைமாரு.

4
அப்பா வழி –
தருமரோட கடைசி பயணத்துல
கூடப்போன ஆண் நாய் என் முப்பாட்டன்
கூடப்பிறந்தவங்க எல்லாரும் போன பின்னும்
கடைசி வரைக்கும் தருமரோட இருந்தவரு

பாஞ்சாலி முதல்ல போனா
ரெட்டையங்க அப்பம் போனாங்க
அர்சுனரு அப்பம் பீமனும் போய்ட்டாரு

தருமரு மட்டும் எங்க முப்பாட்டன் துணையோட
இமாலய மலையில தன்னந்தனியா திரிஞ்சாரு

குளுரடிச்சு, குருடாகி பசி பட்டினில
மூச்சு முட்டிக் கீழ விழ கிடக்கும்போது
வானத்துல தங்க ரதம் வந்திச்சு, அவர
சொர்கத்துக்கு கூட்டிகினு போக

ஆனா மனுஷன், விசுவாசமான என் முப்பாட்டன
விட்டுட்டு ஏற மாட்டேன்னுட்டாரு
ஆதனால் என் முப்பாட்டன்தான்
நேர சொர்கத்துக்கு போன ஒரே நாய்.

5

இதவிட ஒரு நாய்க்கும் மனுஷனுக்கும் உள்ள
தோழமையைப் பார்க்கணும்னா
இதிகாச புராணங்கள விட்டு

சில ஆயிரம் வருஷம் முன்னே போனா
ஹார்லான் எலிசன் எழுதின
‘ A Boy and his dog’ கதையிலதான் பார்க்க முடியும்

தெருநாய் இலக்கியத்துல பெரும் படைப்பான இதுல
பசியில தவிக்கும் தன் நாய் எஜமானுக்காக
காதலியையே காவு கொடுத்து விருந்து வைப்பான் அந்த சின்னப்பய.

6

என் பேரு உக்
ஏன்னு கேளுங்க

உபநிஷத்திலிருந்து ‘உ’
க் சைலன்ட் கிடையாது
லொக், டொக், சோக்கு – குல
வர்றா மாதிரி கடைசி இக்கு

நிஜத்துல என் பேரு ‘உகேகாளிகாடு’
உக் அதோட சுருக்கம் புரியுதா?
சித்தராமையாவோட ஃபேமஸ் நாயோட பேரு என்னது.

உகேகாளிகாடு காளிதேவய்யாவோட செல்ல நாயோட குரு
நாலு வேதத்தை ரிவர்ஸ்ல ஒப்பிப்பாரு

ஆனா எனக்கு வேதமெல்லாம் தெரியாது
ஒண்ணே ஒன்னைத் தவிர

ஒரே மந்திரம்தான்
பத்தாயிரம் மந்திரம் கொண்ட ரிக் வேதத்துல
அறுபத்தி ரெண்டாவது சாப்டர்ல
பத்தாவது மந்திரம், காயத்ரின்னு சொல்லுவாங்க

‘ஓம் பூர் புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோந: ப்ரசோதயாத்’

பன்னெண்டு வார்த்தைத்தாங்க
‘ஓம்’ மோட சேர்த்தா பதிமூணு
அர்த்தமெல்லாம் தெரியாது

சூரியனை பார்த்து சொல்றது
அதனாலதான் அதுக்கு பேரு சாவித்ரி

இங்க படுத்து, விடியலை எதிர்பார்த்து
சூர்ய பகவானே எனக்கு புத்திய கொடுன்னு வேண்டுறப்ப
அந்த மந்திரத்தை சொல்றது கரெக்ட்டுன்னு தோணுது.

7

திரும்பவும் பிடிச்ச நேரத்துக்கு வருவோம்
தாடையை ரெண்டு முன்னங்கால் நடுவுல வெச்சு
மெத்துனு கான்க்ரீட் மேல படுக்கையில

சில கல்லு வொடைஞ்சாலும்
செஸ் பலக மாதிரி இருக்குற இந்த பிளாட்ஃபாரம்
லெவெல்ல கண்ன வெச்சி படுக்கையில

யாரும் என்னை ஒன்னும் செய்ய முடியாது

தனியா என் சிம்போனிய உருவாக்க முடியும்
சரணம் முடிஞ்சு மூணு அனுபல்லவி கொண்ட சிம்போனி

மொத பல்லவி கருப்பாயி காக்கா சொன்னது
ரெண்டாவது ஆம்புலன்ஸ் வண்டி சொன்னது
மூணாவது கல் உடைக்குற மெஷின் சொன்னது

சில கல்லு காணாமப்போன கான்க்ரீட் பிளாட்ஃபாரம்
லெவல்ல கண்ணு வெச்சு பார்த்து
ஸ்மார்ட் போன்கூட இல்லாம
கண்ணுலிருந்து பிறந்த ராகம் அது.

8

அந்த ராகத்த இசைக்கும்போது
சிதறிக் கிடக்கும் நகரம்
மெதுவா மீண்டும் உருவாகும்
ஒவ்வொரு கல்லா

கல்லோட கல்லு கூட்டாளிய கூட்டியாரும்
அப்படியே சேர்த்துகினு நகரம் உருவாகும்

பேர்பலகைல கல்லுங்க ஓட்டும்போது
விரிசலைக் கூட மறக்காம பார்த்துக்கும்

மரங்க கரெக்ட்டா இலைகளை கணக்கு வெச்சிக்கிட்டு
தானா வந்து சேர்ந்துக்கும்

தூங்குமூஞ்சி மரம் ஒரு பாதி பக்கெட்டு
பஞ்சு விதைய,
போலீசை பார்த்த திருடன்
கையில இருக்குறத போட்டுட்டு ஓடுறதைப்போல,
அவரசரமா காத்துல பறக்கவிடும்

நைட்டு கூத்தடிச்சிட்டு
மெதுவா கையில செருப்போட
வீட்டுக்கு வர்ற புருசனைபோல
புனித அண்ட்ரூ தேவாலயம்
தானாவே தன் இடத்துல வந்து நின்னுக்கும்

நல்லவேளையா பல்கலைக்கழகம் மட்டும்
தொலைஞ்சு போவறதில்ல
மறதி ஜாஸ்தினாலும்
பாக்கட்டுல எப்பவும்
அட்ரஸ் கைவசம் வெச்சிருக்கும்.

9

என் மூக்கு வேர்க்குது
என்னா சென்ட்டுபா அது
இளமையும் பூமணமும் கலந்து

நைல் பாலிஷ், ரோஸ் தண்ணி
வெயர்வைலை கலந்த பவுடர்

இதெல்லாம் என் மூக்கு வழியா
மூளைக்குள்ள போய் வெடிக்குது

ஆ ! அவளே தான்
குட்டை ஸ்கர்ட் போட்ட அந்தப் பொண்ணு

கையில வயலின் பொட்டியோட
மாக்ஸ் முல்லர் பவனுக்கு ஓடுறா திரும்பவும்
இன்னிக்கும் லேட்டாயிடுச்சு போல

சரி அப்ப நேரமாயிடுச்சு
என் சுககாலம் முடிஞ்சு
நகரத்தை என் எஜமான்கிட்ட ஒப்படைக்க.

*

அருண் பாலகிருஷ்ண கொலட்கர் (1932 – 2004) தாய்மொழியைத் தவிர ஆங்கிலத்திலும் எழுதிய சமகால கவிஞர்களுள் (நிஸ்ஜிம் எஸிக்கில், ஜயந்த மஹாபத்ரா) ஒருவர். அருணின் பார்வைக் கோணம் புதுமையானது, நையாண்டித்தனமும், பகுத்தறிவும் கலந்த பித்தனின் ஞானப் பார்வை. வறுமையில் பல காலங்கள் வாழ்வாதாரமின்றி ஊர் ஊராகத் திரிகையில், கவிதை ஒன்றே அவருடன் துணையிருந்தது. கவிதை வரி-பழத்திற்குள் ஊசியை வைத்து வாசகர்களுக்கு விருந்தளித்தவர் அருண். மேலே உள்ள மூன்று கவிதைகளும் ஆங்கிலத்தில் வெளியானவை. ஆங்கிலத்தில் நையாண்டித்தனத்திற்கும் தாய்மொழி மராத்தியில் அப்பட்டமான உணர்ச்சிக்கும் இடம் கொடுத்தவர்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button