இணைய இதழ் 124கவிதைகள்

ரேகா வசந்த் கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

சிலுவை!

சுமக்கப் பணிக்கப்பட்டவனின்
சிலுவையின் பாரம்
அவன் பிள்ளையின் மீதும்
சற்று அழுந்துகிறது!
பொம்மைகளும் மிட்டாய்களும்
பிடுங்கப்பட்ட பின்பு,
பாரம் சுமப்பது
பிள்ளைக்கு
வாடிக்கையாகிறது!
“அய்யோ பாவம்”
என்ற ஒன்றை
உதிர்த்துவிட்டு,
நடுக்கத்துடன் நகர்கிறார்கள்
வேடிக்கை பார்ப்பவர்கள்!
பால்யம் என்ற ஒன்றையே
பழகாத,
பாலகனின் கனவில்
வந்து வந்து போகின்றன
பறக்காத பட்டங்களும்!
நனையாத காகிதக் கப்பல்களும்!

கூண்டுப்பறவை!

கூண்டில் பிறந்த பறவைக்கு
வானம்பாடியின் இசைக்கோர்வைகள்
அந்நியம்!
தொட்டுவிட முடியா
அதீத தூரத்தில்
வானம்!
இறகு
பெரும் பாரம்!
காற்றின் அழைப்பும்,
சாளரத்தில் ஊடுருவும் ஒளியும்,
வேற்று மொழி!
தேன்சிட்டும் தையல்சிட்டும்
வேற்று மதம்!
கூண்டின் கதவு
தானாகத் திறந்தபோதும்,
வெளியேறும் திடமில்லா
கூண்டுப்பறவை,
இறக்கைகளை
கடிந்துகொள்ளும்!
உதிரச்சொல்லி
கெஞ்சும்!
தன்னைத்தானே
நொந்துகொள்ளும்!
கூண்டின் கதவை,
மீண்டும்
மெல்ல
சாத்திக்கொள்ளும்!

*

பிரியங்களின் பள்ளங்கள்!

இன்னும் கொஞ்சம்
பிரியமாய்
இருந்திருக்கலாம்!
அக்கறையைக்
காட்டி இருக்கலாம்!
அதிகமாய்
சிரித்திருக்கலாம்!
கைகளைப்
பிடித்திருக்கலாம்!
கதைகள் பல
பேசி இருக்கலாம்!
விடிய விடிய
விழித்திருந்திருக்கலாம்!
ரசித்த கவிதையை
பகிர்ந்திருக்கலாம்!
ஒரு பிடி சோறு
அதிகமாய்
பரிமாறியிருக்கலாம்!
கீழே விழுந்தபோது
கை கொடுத்திருந்திருக்கலாம்!
பரிசு பெற்றபோது
கைகளைத் தட்டி இருக்கலாம்!
தட்டிக் கொடுத்திருந்திருக்கலாம்!
புன்னகையோடு
விடைபெற்றிருந்திருக்கலாம்!
“பகிரப்படாதப் பிரியங்களின் பள்ளங்கள்”
முழுநிலவைக் காட்ட மறுக்கின்றன!
மேகப்பொதியில்,
மெல்ல மறையும்,
தூரத்து நிலவு,
“பௌர்ணமிக்கு இன்னும் எத்தனை நாட்கள்?”
என்கிற முடிவிலாத் தேடலில்
அலைய வைக்கிறது!
இந்தக் கண்ணாமூச்சி ஆட்டத்திற்குத்தான்
“வாழ்க்கை” என்று
யாரோ
பெயரிட்டு வைத்திருக்கிறார்கள்!
*

rekhavasanth2024@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button