இணைய இதழ் 124கவிதைகள்

வளவ.துரையன் கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

செம்போத்து

எதிர்வீட்டுப் பலாமரத்தை
எதிர்நோக்கி இருந்தேன்

ஆயுத எழுத்து போல்
அதில் மூன்று காய்கள்

எங்கிருந்தோ வந்த
ஒரு செம்போத்து
ஒரு காயில் உட்கார்ந்தது
அத்தி பூத்தாற்போல
கோடையின் பெருமழையாய்
செம்போத்து இங்கு தோன்றும்

உட்கார்ந்த அது இப்போது
என்னையே பார்த்தது

அதன் முறைப்பு
மிகவும் பயமாயிருந்தது

அதை நானும் கவனமாய்
பார்க்காதது போலப்
பார்க்கத் தொடங்கினேன்

இப்பொழுது திடீரென
ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து
மற்றொரு காயில் அமர்ந்தது

செம்போத்தின் கவனம்
திசை திரும்பியது

சிட்டுக்குருவி கத்தியது
செம்போத்து பறந்தது

நானும் திரும்பினேன்.

*

சாத்தான்

இந்த இரவில்
சாத்தானின் நினைப்பு
அதிகமாக வருகிறது

ஏனென்று கேட்கிறீர்களா?
ஒன்றா இரண்டா
எடுத்துச் சொல்ல?

காலையிலேயே வந்த
செய்தித்தாள் காட்டியது

கல்லூரி விடுதியில்
மாணவி மரணம்
காரணம் தெரியவில்லை

சற்று நேரத்தில் பரிதாபம்
கண்ணெதிரே நாய்க்குட்டியை
வாகனச் சக்கரம் கொலை செய்ய
வார்த்தையின்றிப் போகிறார்கள்

மதியமோ மழை கொட்டியது
தெருவில் பலவாறாய்த்
தீவுகள் தோன்றின

ஆழமான மடுக்களில்
அலறிய வண்டிகள் பல

மாலையில் மாணவர்கள்
பள்ளிவிட்டு வரும்போது
அதிகச் சுமையால்
கவிழ்ந்து விட்ட பள்ளி வேன்

இவையெல்லாம் நான்
இன்று கவிதை
எழுதக் கூடாதென
சாத்தான் செய்த சதிதானே?

*

காதலியும் கவிதையும்

என் காதலியே!
உனக்கும் என் கவிதைக்கும்
என்ன சண்டை?

ஏன் இருவருக்குள்ளும்
இந்த ஏற்றத் தாழ்வு?
எப்படி வந்தது இந்த
ஓயாப் பனிப்போர்?

கவிதையைக் கேட்டால்
காதலியைக் கேள் என்கிறது

உன்னைக் கேட்டால்
கவிதையையே காது கொடுத்துக்
கேட்டுப் பார் என்கிறாய்

என் மனத்தை இரு கூறாக்கி
இருவருக்கும் அளித்திருந்தேன்
சமபாகம்தான் உங்கள்
இருவருக்கும் தந்தேன்

ஆனாலும் எப்பொழுதும் என்ன
காதலி பற்றியே நீ
எழுதுகிறாய் எனக் கவிதையும்
கவிதையைக் கூட உறக்கத்திலே
கனாக்கண்டு பிதற்றுவதாக
காதலியும் புகார் சொன்னால்

நான் எவரை நேசிப்பது?
எவரை விடுவது?

*

valavaduraiyan@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button