இணைய இதழ் 124சிறுகதைகள்

இடைப்பட்ட வாழ்க்கை – பாலமுருகன். லோ

சிறுகதை | வாசகசாலை

“சார், உங்க கருத்தைச் சொல்ல முடியுமா?”

“ஏம்ப்பா… கேள்வி கேக்குறீங்க? எதைப் பத்தி, இல்ல, யாரைப் பத்தின்னு தெரிஞ்சாதானே பதில் சொல்லச் சௌகரியமா இருக்கும்.”

“அதான், தாதா சாகேப் பால்கே விருது மத்திய அரசால் கொடுக்கப்பட்டதே! உங்களைப் போல அவரும் ஒரு நடிகர்தானே.”

இந்தக் கேள்வியைக் கேட்டவுடன், முகம் முழுக்கக் கோபம் பொங்க, ஏதோ ஒரு நாகம் அவரைத் தீண்டியதுபோல ஒரு படபடப்பு தொற்றிக்கொண்டது. பின் கேள்வியாளர்களிடம் அவர் கூறினார்,

“சொல்றேன். அந்த விருது அவருக்குக் கொடுத்ததே தவறுன்னு நான் சொல்றேன்.”

“என்ன சார் இப்படிச் சொல்றீங்க? என்ன காரணம்ன்னு தெரிஞ்சுக்கலாமா?”

“ஏங்க, அவரெல்லாம் ஒரு நடிகருன்னு அவருக்கு அந்த விருதைக் கொடுத்தா, அப்ப இந்தத் துறையில நெறைய பேர் இருக்காங்களே, அவங்களுக்கெல்லாம் எப்ப தர்றதாம்? சரி சொல்லுங்க, அவர் என்ன அப்படி நடிச்சிட்டாருன்னு அவருக்கு இந்த வாழ்நாள் சாதனையாளர் விருதைக் குடுக்குறீங்க? என்னைப் பொருத்தவரை இந்த விருது பாரபட்சமாகக் கொடுக்கப்பட்டது. இவரைக் காட்டிலும் திறமைசாலிகள் இதே துறையில் இருக்காங்க. பின் ஏன் இவருக்குக் கொடுத்திருக்காங்க? அவரது பின்புலம் அப்படி.”

“சார், என்ன சார் இப்படிச் சொல்றீங்க? இதற்கென்று ஒரு குழு இருக்கு. இது ஒரு தனி நபரால் தேர்ந்தெடுக்கப்படும் விருது கிடையாது.”

“எல்லாம் எனக்குத் தெரியுங்க. அதெல்லாம் தெரிஞ்சதாலதான் நீங்க கேட்டவுடனே என்னால பதில் சொல்ல முடிஞ்சது. உங்களுக்கு நான் ஒண்ணு சொல்றேன், இந்த விருது இப்ப கொடுத்தது தவறுன்னு நான் ஆணித்தரமாகச் சொல்லுவேன்.”

“இதுமட்டுமில்ல,” என்று சொல்லிக்கொண்டே தன் சட்டைப் பையிலிருந்து கைக்குட்டையை எடுத்து, தனது நெற்றியில் வடிந்த வியர்வையைத் துடைத்துக்கொண்டே, மீண்டும் பதிலளிக்க ஆரம்பித்தார். “இதேபோல் இருபது வருடங்களுக்கு முன்னர் கந்தசாமிக்குக் கொடுத்ததைப்பற்றி இதே துறையில் அப்ப இருந்த ராஜன், கடுமையாகக் கந்தசாமியை விமர்சனம் செய்தார். அப்ப கந்தசாமிக்குக் கொடுத்தத வன்மையாக ராஜன் கண்டித்தார். அப்ப இருந்து இப்ப வரைக்கும் இந்த விருதும் சரி, அத பரிந்துரைக்கும் நபர்களும் சரி, ஏதோ ஓர் உந்துதலின் பேரில்தான் இந்த விருதுகளைக் குறிப்பிட்ட நபர்களுக்குத் தர்றாங்க.”

“சார், நாங்க ஒண்ணு கேட்குறோம், இது நம்ம மொழிக்கு மட்டும் கொடுப்பதில்லையே, ஏனைய மொழிக் கலைஞர்களுக்கும் தராங்களே, அப்ப எல்லாத்துறைகளிலுமா அவங்க இப்படித்தான் நடந்துக்கிறாங்க?”

“ஏங்க, ஒவ்வொருத்தரா கேள்வி கேட்டா பதில் சொல்லச் சௌகரியமா இருக்கும். இப்ப யாரு கேட்டது? சார், நீங்களா?”

“ஆமாம் சார், நானேதான்.”

“அப்ப முன்னுக்கு வாங்க. கூட்டத்துல பின்னாடி நின்னுகிட்டு கேள்வியைக் கேட்டா எப்படிப் பதில் சொல்றது? கேள்வி யார், எந்த ஊடகத்திலிருந்து கேட்கிறார்கள் என்று நான் தெரிஞ்சுக்க கூடாதா?”

“சார், அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. இதோ, முன்னுக்கு வந்துட்டேன்.”

“இப்பச் சொல்லுங்க,” என்று அந்தக் கேள்வியாளர் கேட்டவுடன், “என்ன கேட்டீங்க?”

“அதான் சார், ஏனைய மொழிக் கலைஞர்களுக்கும் தராங்களே, அப்ப எல்லாத் துறைகளிலுமா அவங்க இப்படித்தான் நடந்துக்கிறாங்க?”

“நான் அப்படிச் சொல்லல. அண்டை மாநிலத்தில் உள்ளவருக்குக் கொடுக்கப்பட்டது. அப்ப அந்த மாநிலமே கொண்டாடினாங்க. இப்ப நம்ம மாநிலத்திற்குக் கொடுத்ததில்தான் சிக்கலே.”

“சார், நீங்க இப்ப குறை சொல்வது, சிறுமைப்படுத்திச் சொல்வது அப்போதைய கந்தசாமியை. அவர் தற்சமயம் உயிருடன் இல்லை. இருந்தும் நீங்க இப்படிப் பேசியிருப்பது ஏற்புடையதுன்னு நினைக்கிறீங்களா?”

“ஏன், நான் சொன்னதில் என்ன தவறு இருக்கு? அப்ப கந்தசாமிக்குக் கொடுத்ததினால் நம்ம மாநிலத்தின் பெருமையே மங்கிப் பின்தங்கிப் போயிடுச்சு. அவரைக்காட்டிலும் பலர் இருந்தாங்க. ஏன் அவங்களுக்கெல்லாம் வழங்கப்படல?”

“சார், நீங்கதான் இப்படிச் சொல்றீங்க, ஆனால் கந்தசாமியோ அப்பவே பல மாநில விருது, தேசிய விருது, பல படங்கள் சில்வர் ஜூப்ளி என அவருடைய படங்கள் எல்லாம் ஓடிச்சு. அதெல்லாம் பொய்யாகிடுமா?”

“ஏம்பா, ஒரு கேள்வின்னு என்னைக் கேட்டு, இப்ப சுமார் அரை மணி நேரம் நிறுத்தி கேள்வி மேல் கேள்வி கேட்டீங்க. நானும் பதில் சொன்னேன். இப்ப எனக்கு நேரம் ஆகுது. இப்ப நான் கிளம்பணும். அப்புறம் ஒரு நாள் நீங்க கேளுங்க, நான் விரிவா பதில் சொல்றேன்,” என்று சந்தர் தன் உரையை முடித்துக்கொண்டார்.

வேகவேகமாகத் தனது பெட்டியை எடுத்துக்கொண்டு விமான நிலையத்திற்குள் ஓட ஆரம்பித்தார். அவர் சென்னையிலிருந்து டெல்லி செல்ல இருப்பதால் விமானத்தைப் பிடிப்பதற்கு வந்தபோது, அவரைப் பத்திரிக்கை அன்பர்கள் சூழ்ந்துகொண்டு கேள்விக் கணைகளை எழுப்ப ஆரம்பித்துவிட்டனர்.

ஒருவழியாகத் தன் இருக்கையைப் பார்த்த அவர், “ஹலோ, உங்க சீட் நம்பர்?” என்றார் அங்கு அமர்ந்திருந்தவரைப் பார்த்து.

அவர் உடனே, ‘எனது 20A விண்டோ சீட்,’ என்றார்.

“எனக்கு நடுவில் உட்கார்ந்து செல்லப் பிடிக்காது. நான் உங்கள் சீட்டில் உட்கார்ந்துகொள்ளவா?” என்றார்.

“சரி, இதில் என்ன இருக்கு? இருங்கள், நான் எழுந்திருக்கிறேன்,” என்று கூறி அவர் எழுந்ததும், இவர் உள்ளே சென்று விண்டோ சீட்டில் அமர்ந்தார்.

“லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன், திஸ் இஸ் யுவர் கேப்டன் விக்ரம் ஸ்பீக்கிங். ஆன் பிஹாஃப் ஆஃப் ஸ்கைவர்ட் இந்தியன் ஏர்லைன்ஸ், ஐ வுட் லைக் டு வெல்கம் யூ அபோர்ட் அவர் சர்வீஸ். இப்ப நம்ம சென்னையிலிருந்து டெல்லி பறக்கப் போறோம். இந்தப் பயணத்தூரம் சுமார் மூன்று மணி பதினைந்து நிமிடம். நாங்கள் 33,000 அடி உயரத்தில் பறப்போம். தற்போது சென்னையில் ஏறத்தாழ 31 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது. டெல்லியில் தற்போதைய நிலவரத்தின்படி சுமார் 25 டிகிரி செல்சியஸ் உள்ளது. பயணத்தின் இடையே, இலேசானது முதல் மிதமானது வரையிலான காற்று அலைக்கழிப்புகளை (turbulence) சந்திக்கக்கூடும்; எனவே, நீங்கள் இருக்கையில் அமர்ந்திருக்கும் போதெல்லாம் உங்கள் இருக்கைப் பட்டையை (seatbelt) அணிந்திருக்குமாறு பரிந்துரைக்கிறோம்.”

“சார், நீங்க சந்தர்தானே!”

“ஆமாம்.”

“சார், உங்க படமெல்லாம் பார்த்திருக்கேன். நல்லா இருக்கு. இப்பக்கூட ஏதோ பிரஸ் மீட்டிங்கை முடிச்சுட்டுதான் வந்தீங்க போல?”

“ஆமாம்ப்பா, ஒரே தொந்தரவாப் போச்சு. நம்பாட்டுக்கு ஒரு இடத்துக்குப் போயிட்டு வர முடியல. எங்க போனாலும் நம்மளப் பின்தொடர்ந்தா நாம என்ன செய்ய முடியும்.”

“கேள்வியாளர்கள் கேட்ட கேள்விக்கு முழுசா பதில் சொல்லிட்டீங்களா?”

“இல்லை, அதுனாலதான் ஃப்ளைட்டுக்கு நேரம் ஆச்சுன்னு ஓடி வந்துட்டேன். அப்புறம் பேசலாம்னு.”

“நானும் நீங்க என்ன பேசுறீங்கன்னு நின்னு கேட்டேன். ஒண்ணு மட்டும் எனக்கு விளங்கவே இல்லை.”

“ஏன் சார், இப்ப கொடுத்த விருதையும் தவறுன்னு சொல்றீங்க. பின் இருபது வருடங்களுக்கு முன்னர் கொடுத்த விருதையும் தவறுன்னு சொல்றீங்களே! அதான் கொஞ்சம் ஏற்புடையதா இல்லை.”

“ஏம்ப்பா, இப்பதான் ஓய்ஞ்சு வந்து இருக்கையில உட்கார்ந்தேன். இப்ப மீண்டும் பேசணுமா? சரி, நீ கேட்டுட்ட, அப்ப சொல்லித்தான் ஆகணும், இல்ல? இப்ப இல்லை, எங்க கேட்டாலும் இதையேதான் சொல்லுவேன். இப்பவும் சரி, அப்பவும் சரி, பரிசு கொடுத்தவங்க பாரபட்சமாகத்தான் நடந்துக்கிட்டாங்க.”

“சார், ஒண்ணு எனக்குப் புரிய வைக்க முடியுமா?”

“சரி சொல்லுங்க, என்னால ஆன மட்டும் செய்றேன்.”

“இப்ப இருக்கிறவரும் சரி, அப்ப இருந்தவரும் சரி, இந்த மாநில மொழியில்தான் பல ஆண்டு காலமாகக் கலைஞர்களாகப் பயணித்து வர்றாங்க. அதே துறையில் பல மாநில மற்றும் தேசிய விருதுகளெல்லாம் வாங்கியிருக்காங்க. அந்த அடிப்படையில் பார்க்கும்போது விருது வழங்கியவர்களின் நோக்கம் சரிதானே!”

“என்ன நான் சொல்றது?”

“நீங்க எப்படிச் சொல்லலாம். அப்ப இருந்தவருக்கு விருது கொடுத்ததால நம்ம மாநிலத்து மொழி சிறுமைப்படுத்தப்பட்டது. நமது மாநில மொழி பின்தங்கிப் போனது என்றெல்லாம் மீடியாவில் சொல்றீங்க? நான் ஒண்ணு உங்களைக் கேட்கிறேன். நம்ம மொழி நம்ம மொழின்னு மூச்சுக்கு முந்நூறு தடவை சொல்லுறீங்களே; அப்படிச் சொல்லும் நீங்க, அப்ப கொடுத்த விருதினால் நம்ம மொழி பின்தங்கிப் போய்விட்டது, நமது மொழி மங்கிப் போய்விட்டது என்றெல்லாம் சொல்லுறீங்க. நீங்க நம்ம மொழி நம்ம மொழின்னு சொல்றது, நீங்களே சிறுமைப்படுத்துற மாதிரி அல்லவா இருக்கு? நீங்கள் மொழியைச் சிறுமைப்படுத்தியது மட்டுமல்லாமல், தனிமனிதத் தாக்குதலும் செஞ்சிருக்கீங்க. இதுபோன்று நீங்களே செய்யலாமா? ஒரே துறையிலிருந்துகொண்டு அதே துறையில் உள்ளவரின்மீது இப்படி அவதூறு சொல்ல எப்படி உங்களால் முடியுது.”

“நான் ஒரு சராசரி மனிதனாக அவரை எப்படிப் பார்த்தேனோ, இப்ப உங்களையும் அப்படித்தான் இதுவரையிலும் பார்த்து வந்தேன். ஆனா, இந்த நேர்காணல் மூலமாக எனக்கு ஒண்ணு முழுசா விளங்கிடுச்சு. உங்களுக்கு அப்ப இருந்த கந்தசாமி மேல உள்ள தனிப்பட்ட கோபத்தைத்தான் இப்படித் தீத்துக்கிறீங்க. இது உங்க காழ்ப்புணர்ச்சியைக் காட்டுது. இது உங்களுக்குப் புரியலையா, இல்ல தெரியலையா, அல்ல எல்லாம் தெரிந்தும் தெரியாத மாதிரி நடிக்கிறீங்களா.”

“ஒரு சாமானியனா நான் ஒண்ணு சொல்ல விரும்புறேன். நிதர்சனத்தை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புறேன்.”

“என்ன சொல்ல வந்தீங்களோ அதைச் சொல்லுங்க.”

“கருத்துச் சுதந்திரம் பொதுவானது, யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று எண்ணுறதே தவறு.”

“எப்படிச் சொல்றீங்க தவறுன்னு? நான் நியாயம் என்று நினைக்கிறது, உங்க பக்கத்திலிருந்து பார்த்தால் தவறாகத் தெரியும்.”

“சார், என்ன சொல்ல வந்தேன்னா, ஒருவரைப் பற்றிப் பேசும்போதும் எழுதும்போதும், நாம் சரியாகத்தான் சொல்றோமா அல்லது சாடிப் பேசுறோமா என்று ஒருமுறை சிந்திச்சுப் பேச வேண்டும்.”

“அப்படி என்னத்தைக் குத்தம் கண்டுபிடிச்சீங்க? சொல்லுங்க பார்ப்போம்.”

“அரசால் கௌரவிக்கப்பட்ட மூத்த கலைஞரை, அதுவும் 20 வருடங்களுக்கு முன்னர் பரிசு வாங்கிய ஒருவரை, எப்படி இஷ்டத்திற்கு என்ன வேண்டுமானாலும் பேசலாம்? இதுதான் சுதந்திரம் என்று எண்ணுறது தவறு. இது உங்களுக்கே ஒரு பப்ளிசிட்டியைத் தேடிக்கிட்டது போல், வெளியே இருந்து பார்ப்பவர்களுக்குத் தோணுது.”

“ஏங்க, இது உங்க கண்ணோட்டம். எனது பார்வையில் சரியே!”

“ஒருவரின் வார்த்தைகள் அவருடைய குணத்தின் பிரதிபலிப்பு. ஒத்துக்கிறீங்களா?”

“சரிதான்…”

“அப்போ, புறம் பேசும் ஒருவரிடம் உயர்வான செயல்களை எதிர்பார்ப்பது கடினம். அது அவர்களின் குணாதிசயத்தைக் காட்டுது.”

“சார், பாராட்ட மனசில்லைன்னா, தள்ளி நின்று வேடிக்கை பார்க்கலாம். அதை விடுத்து, இப்படிப் பொதுவெளியில் நடந்துக்கிறது சரியா என்று சொல்லுங்கள்.”

மௌனமாக, பதில் பேசாமல் உட்கார்ந்தார் சந்தர்.

“இப்ப நாம ஃப்ளைட்டுல போறோம். ஃப்ளைட் நல்லபடியா இறங்கினாப் போச்சு. இல்ல நம்ம நிலைமை அவ்வளவுதான். சார், இதுதான் வாழ்க்கை. இந்த இடைப்பட்ட வாழ்க்கையில், ஏன் ஒருவரோடு ஒருவர் அடிச்சிக்கிட்டு, சச்சரவு எழுப்பிக்கிட்டு, சண்டை போட்டுக்கிட்டு, நான் சிறந்தவனா அல்ல நீ சிறந்தவனா என்று தர்க்கம் செஞ்சுகிட்டு? இருக்கிற வரைக்கும் அமைதியா நல்லபடியா வாழ்ந்துட்டுப் போகலாமே! என்ன நான் சொல்றது,” என்று சொன்ன பிறகு, சந்தரின் முகத்தில் பீதி குடிகொண்டது, ‘எங்கே இந்த ஆள் சொன்ன மாதிரி ஃப்ளைட் ஒழுங்காப் போய்ச் சேருமா?’ என்று. 

அதற்குப் பிறகு பயணத் தூரம் முழுவதும் அவர் அமைதியாகவே வந்தார், ஒரு விதப் பயத்துடன். உயிர் பயம்.

விண்டோ வழியா வெளியே பார்த்தவருக்கு மனசுல ஒரு வலி உண்டாச்சு. ‘எல்லாம் தெரிஞ்சும் நாம ஏன் இப்படி நடந்துக்கிட்டோம்?’ங்குற கேள்வி, அந்தப் பயணத் தூரம் முழுக்க அவரைக் குடைஞ்சது.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button