இணைய இதழ் 124சிறுகதைகள்

நீராட்டம் – கெளதம் நாராயணன்

சிறுகதை | வாசகசாலை

பேராத்துச் செல்வியம்மன் கோவில் அருகே சுழித்தோடும் நதியை வெறித்தாற்போல் அமர்ந்திருந்த அந்தக் கல் மண்டபத்திற்கு சுப்பையாவின் வாழ்வில் பெரிய பங்கேதும் இருந்திருக்கவில்லை. ஓட்டிவரும் ஹெர்குலஸ் சைக்கிளைச் சரித்து வைக்கவும், குளியல் முடித்து உடைமாற்றி, உள்ளாடை உலர்த்தவும், பள்ளம் விழுந்திருந்த அதன் விளிம்புகளில் கட்டைவிரல் பதித்து ஊன்றி ஏறி, அதன் உச்சியில் புத்தனைப்போல் அமர்ந்துகொண்டு, நீந்தி விளையாடும் இளசுகளையும், வீட்டுக்காரரின் சாரத்தை மார்போடு இறுக்கிக் கட்டிக்கொண்டு துணி துவைக்கும் பெண்களையும் பார்த்துக் களிக்க மட்டுமே அதைப் பயன்படுத்தியிருந்தான் அவன்.

அரிதாய் சில வேளைகளில் அதனுள் அமர்ந்து நண்பன் ஈஸ்வரனுடன் மது அருந்துவதும் உண்டு.

மனச்சோர்வைத் தணிக்கும்பொருட்டு மதுவை நாடியிருந்தபோதிலும் அங்கே அமர்ந்து குடிப்பது அவனுக்கு அத்தனை ஆசுவாசம் அளிக்கும் அனுபவமாக இருந்ததேயில்லை. எங்கோ உடைந்து, ஆற்றின் ஒழுக்கோடு பயணித்து, ஆழத்தில் தங்கி, தன்னுடைய பாதங்களில் ஒருநாள் தட்டுப்பட்ட நந்தியின் தலையைக் கண்டதிலிருந்தே அந்த இடம் அவனைச் சஞ்சலப்படுத்தும் ஒன்றாக மாறிவிட்டிருந்தது. ஆனால் இரண்டு குவாட்டர் பிராந்தி, கொத்துப் பரோட்டா மற்றும் ஆட்டுக்கறியுடன் செழிப்பாய் வரும், முன்கோபமும் மழுக்கமும் முற்றிய, ஊரினில் மிகுந்த செல்வாக்கும் கொண்ட ஈஸ்வரனுக்கு இப்படிக் கரையோரம் அமர்ந்து குடிப்பதில் அலாதி ஆசை இருந்ததால் அதற்கு இணங்குவதொன்றே அவனுக்கும் வழியாக இருந்தது.

கொச்சைப் பேச்சும், இங்கிதமற்ற நடத்தையும், அச்சுறுத்தும் மூர்க்கமும் என அவன் சூடியிருந்த அனைத்து அம்சங்களும் தனக்குள் ஆழமான காழ்ப்பை விதைத்தபோதிலும் அவனுடன் ஒட்டிக்கொண்டிருப்பது ஏன் என்று அவன் பலமுறை வியந்ததுண்டு. ஜவுளிக்கடையில் பணிபுரிந்த காலத்தில் தன்னிடம் பிரச்சனை செய்த மேலாளரை அதட்டி அடக்கியது, சித்தி பையனின் ஸ்கூல் அட்மிஷனுக்கு உதவியது, கருங்குளம் அருகே இருந்த இரண்டு சென்ட் நிலத்தை நல்ல தொகைக்கு விற்றுக் கொடுத்தது, தள்ளுவண்டிக் கடையை நிறுத்தி, விநியோகம் பார்ப்பதற்கு உகந்த இடத்தை அமைத்துக்கொடுத்ததில் தொடங்கி, வீட்டின் நல்ல தண்ணீர் இணைப்பு, கேபிள் டீ.வி பிரச்சனை வரை அனைத்திற்கும் அவன் துணை நிற்பதே அதற்குக் காரணம் என்று எண்ணிக்கொண்டபோதிலும், ‘இதுவல்ல’, ‘இதுவல்ல’ என உள்ளுக்குள் ஒன்று அவற்றையெல்லாம் மறுதலித்தபடியே வருவதை அவன் உணராமலில்லை.

***

பெரும்பாலும் குளிப்பதற்கு ஆற்றில் ஆட்கள் குறைவாக இருக்கும் பொழுதுகளையே தெரிவு செய்வான் சுப்பையா.

கொக்கிரகுளத்தில் கலெக்டர் ஆபிஸ் அருகே சிற்றுண்டிக் கடை வைத்திருந்த அம்மாவுக்கு ஒத்தாசையாக இருந்துவிட்டு பின்மதிய பொழுதில் இங்கு வந்து நீரில் இறங்குவான். அல்லது இருள் முழுதாய் விலகியிருக்காத புலரியில் வந்து சற்றுநேரம் நீந்திவிட்டு இல்லம் மீள்வான். வீட்டின் அருகே, சுலோச்சன முதலியார் பாலத்தின் கீழேயே குளிப்பதை அவன் ஏனோ விரும்புவதில்லை.

மீந்துபோயிருந்த பதார்த்தங்களைக் கூடை ஒன்றில் போட்டு அம்மாவின் கையில் கொடுத்துவிட்டு, கடை வண்டியைத் தள்ளிக்கொண்டு, ஒருகாலத்தில் மாட்டுத் தொழுவமாக இருந்த வீட்டின் புழக்கடையில் அதை நிறுத்திவிட்டு, வியர்க்க விறுவிறுக்கச் சோப்பு டப்பா மற்றும் குற்றாலத் துண்டை எடுத்துக்கொண்டு ஒருநாள் அவன் குளிக்கக் கிளம்பியபோது எதேச்சையாக அங்கு வந்த மயில்சாமி, “குளிக்கன்னு சைக்கிள மிதிச்சுட்டு அம்புட்டு தூரம் போவணுமா? எல்லாம் ஒரே தண்ணிதானடே?” என்று கேட்டார்.

மிகவும் எளிமையான, எதார்த்தமான அந்த வினா சுப்பையாவை ஒருகணம் திடுக்கிடச் செய்தது. அது ஏன் என்று அவனுக்கு விளங்கவேயில்லை.

அடுக்களையில் நின்றுகொண்டிருந்த அம்மா, “எல்லா அவோ அப்பாவச் சொல்லணும்ண்ணே… சும்மா கடக்காம வேண்டாத சோலி பாத்தது அவருதான்…” என்றாள்.

சுப்பையா அம்மாவின் குரல் கேட்ட திசையில் நோக்கினான்.

சட்டியில் எண்ணெய்யை ஊற்றிக்கொண்டே மிகவும் இயல்பான தொனியில், அவன் சிறுவனாய் இருந்தபோது வீட்டிலிருந்த பசுமாட்டைப் பற்றியும், அது ஈன்ற கன்றுகளைப் பற்றியும், சாதுவாய் வளர்ந்த பசு திடீரென மிரண்டு, நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்த அத்தையை முட்டிச் சரித்ததையும், சிகிச்சைப் பலனின்றி அவள் மாண்டதையும், தாளமுடியாத ஆத்திரத்தில் அப்பா அந்தப் பசுவைத் தரதரவென இழுத்துக்கொண்டு ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்று அடித்துக் கொன்றதையும் விவரித்தாள்.

“மூக்குமுட்ட நின்ன மூர்க்கத்தோட போனவரு, முதிராத பிள்ள ஒன்னு பின்னேயே வருதேன்னு கவனிக்கல… பாசமா வளந்த சீவன், சுத்தியலால அடிபட்டுச் சாகறத நேருக்கு நேரா நின்னு கண்டவன், பேய் அறஞ்சா கணக்கா வீடு திரும்பினான், பாத்துக்கிடுங்க… பெறவு…” என்று சொல்லிக்கொண்டே கடுகை சட்டியினுள் தூவினாள் அம்மா.

அதன் உஷ்ணத் தெறிப்புக்களைத் தனது நெஞ்சினுள் உணர்ந்தான் சுப்பையா. இவை அனைத்தும் மெய்யாகவே நிகழ்ந்ததா? அனைத்தையும் நான் எப்படி மறந்தேன்? அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அத்தனை நாட்களாக வீட்டை ஒட்டினாற்போல் இருந்த ஆற்றங்கரையை அவன் தவிர்த்தது மிகவும் இயல்பான, நியாயமான காரியமாக மட்டுமே அவனுள் பதிந்திருந்தது. இங்கு ஏன் குளிக்கக் கூடாது என்கிற எளிய தர்க்கம் அவனுள் துளிர்த்ததேயில்லை.

இடியாப்பத்தைப்போல் சிடுக்குற்றிருந்த சித்தத்துடன் ஆற்றில் இறங்கிய அன்றுதான் நந்தியின் உடைபட்ட சிரத்தைக் கண்டுகொண்டான் சுப்பையா. இன்னதென்று விளங்காத விசனத்துடன் அன்று வீடு திரும்பியவன் காரணமேயில்லாமல் அம்மாவிடம் எரிந்து விழுந்தபடியே இருந்தான். கிளர்ந்தெழும் சலனங்கள் அனைத்திற்கும் அவளையே இலக்காக்கிவிட அவனது உள்மனம் கடும் வேட்கை கொண்டிருந்தது.

***

உடன் பழகிய இத்தனை நாட்களில் ஈஸ்வரன் அவனது இல்லத்திற்குத் தன்னை அழைத்துச் செல்வது இதுவே முதல் முறை என்று எண்ணியபோது சுப்பையாவிற்கு சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால் விழித்ததில் தொடங்கி அந்நாளில் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் ஏதோ ஒரு விதத்தில் வியக்கத்தக்கதாகவே அமைந்திருந்ததால் இதுவும் அதன் ஒழுக்கோடு ஐக்கியமாகிக் கரைந்துபோயிருந்தது.

தனது சிகப்புநிறப் பரப்பின்மீது கருப்பு நிற ஸ்கெட்ச் பேனாவினால் தீட்டப்பட்டிருந்த மழலைக் கிறுக்கல்களோடு அந்த பலூன் அப்போதும் ஈஸ்வரனின் மடிமேல்தான் கிடந்தது. காரின் ஸ்டியரிங் சக்கரம் பலூனின் மிருதுவான பரப்பை வருடும்தோறும் ஒரு பூனைக்குட்டியைப்போல் அது ஓசையெழுப்பியது சிலிர்ப்பூட்டுவதாக இருந்தது.

மாலையில், மழைமேகம் திரண்டிருந்த அந்திநேரத்து வானைப் பார்த்தபடி அந்தக் கல் மண்டபத்தின் உச்சியில் அமர்ந்திருந்தபோது பின்புறம் இருந்த புதர்க்காட்டிலிருந்து பறந்து வந்த அந்த பலூன் முதலில் விழுந்தது சுப்பையாவின் மடியில்தான். இரு கைகளால் அதைப் பற்றி, உருட்டி நோக்கி, அதன் மேல் கிறுக்கப்பட்டிருந்தவற்றை வாசிக்க முயன்றான் அவன். அவை அர்த்தமற்ற குழந்தைக் கிறுக்கல்கள் எனக் கிரகித்துக்கொள்வதற்கு அவனுக்கு நெடுநேரம் பிடிக்கவில்லை. அட்சரங்கள் சீரற்று இருந்தபோதிலும் அதன் இடைவெளிகளில், ஆங்காங்கே தீட்டப்பட்டிருந்த வினாக்குறி மட்டும் தெள்ளத்தெளிவாக இருப்பதைக் கண்டு இலேசாய் முறுவல் செய்தான்.

கோவில் அருகே காரை நிறுத்திவிட்டு அணுகிவந்த ஈஸ்வரன் கையில் பலூனுடன் அமர்ந்திருந்த இவனைக்கண்டு ஆண்குறியின் நீளத்தைப் பகடிசெய்யும் மோசமான வசைச் சொல் ஒன்றைச் சொல்லி அழைத்தான். சுப்பையா அந்த பலூனுடன் கீழே இறங்கிவந்தபோது மீண்டும் அதே வசைச் சொல்லை உபயோகித்து அந்த பலூனை ஓங்கி அறைந்து வானில் பறக்கச் செய்தான். ஆனால் அவர்கள் மண்டபத்தினுள் சென்று மது அருந்த ஆரம்பித்த சில பொழுதிலேயே அந்த பலூன் மீண்டும் எப்படியோ மிதந்து வந்து அவர்கள் அருகே விழுந்திருந்தது. இருவரும் ஒருகணம் வியந்தனர். பின்னர் காரணமே இல்லாமல் வாய்விட்டுச் சிரித்தனர்.

குறிச்சியில் இருந்த ஈஸ்வரனின் வீட்டின் வாசலில் கார் நின்றபோது மழை மெல்லிய தூறலாய் நிலைபெற்றிருந்தது. வண்டியினுள் இருந்த சிறிய லைட்டை ஒளிரச்செய்து, எதிரே இருந்த கண்ணாடியில் முகம் பார்த்துக்கொண்டான் அவன். பிறகு டாஷ்போர்டினுள் இருந்த நறுமணப் பாக்கு பொட்டலங்கள் சிலதை எடுத்துப் பிரித்து வாயினுள் தட்டிக்கொண்டான்.

ஈஸ்வரனின் இடது கன்னத்தில் அழுத்தமாய் பதிந்திருந்த தனது விரல் தடத்திலிருந்து சுப்பையாவினால் விழிகளை விலக்கவே முடியவில்லை. என்ன இருந்தாலும் அவனைத் தான் அடித்திருக்கக்கூடாது என்று தோன்றியதும் அடிக்குரலில் மீண்டும் ஒருமுறை மன்னிப்புக் கேட்டான் அவன்.

உச்சுக்கொட்டிச் சிரித்துவிட்டு அவன் தோளைத் தொட்ட ஈஸ்வரன், “விடு… தப்பு என்னுது… நான் கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டேன்!” என்றான்.

சுப்பையா தலையை மட்டும் அசைத்தான். ஈஸ்வரன் சொல்வதில் அவனுக்கு மாற்றுக் கருத்து ஏதும் இருக்கவில்லை. உச்சப் போதையில் அவன் சற்று மிகையாகத்தான் நடந்துகொண்டிருந்தான். அந்த பலூனின் நிறத்திலேயே பட்டுப்பாவாடை அணிந்திருந்த அந்தச் சிறுமியிடம் இவன் அத்தனை முரடனாக விளையாடியிருக்க வேண்டாம்தான்.

மங்கிய ஒளிகொண்டிருந்த அந்தக் கல் மண்டபத்தினுள் அமர்ந்துகொண்டு ஈஸ்வரன் ஊதித் தள்ளியிருந்த சிகரெட்டுகளின் புகைமூட்டத்தினூடாக வாயிலில் நின்றுகொண்டிருந்த அச்சிறுமியைக் கண்டபோது சுப்பையாவிற்கு தேகமெல்லாம் கூச்சமெடுத்தது. அவள் வந்ததையே கவனிக்காமல் ஏதோ கொச்சையான பாடலொன்றைப் பாடிக்கொண்டிருந்த ஈஸ்வரனின் தொடையில் தட்டி அவனை அமைதிப்படுத்திவிட்டு, வாசல் பக்கம் பார்த்து, “என்ன பாப்பா?” என்று கேட்டான்.

பக்கவாட்டில் தொங்கிய தனது தலைப் பின்னலை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு விழிகளை உருட்டியது அந்தக் குழந்தை. சதைப் பற்றுடன் மடிப்பு மடிப்பாக இருந்த அதன் கைகள் சூடியிருந்த அரக்கு வளையல்கள் குலுங்கி மெல்லிய ஓசை எழுப்பின.

சுப்பையா சற்று அதட்டலாக, “இங்க வரக்கூடாது பாப்பா!” என்றான்.

குழந்தை வெள்ளந்தியாக ஈஸ்வரன் அருகே கிடந்த அந்த பலூனைப் பார்த்தது.

சுப்பையாவும் அதை நோக்கினான். அதில் படர்ந்திருந்த கிறுக்கல்களுக்குச் சொந்தக்காரி இவள்தான் என்று எண்ணியபோது அவனுக்குச் சிரிக்கத் தோன்றியது.

விழிகளைச் சுருக்கி அவளை உற்றுப் பார்த்த ஈஸ்வரனுக்குத் திடீரென விக்கலெடுக்க ஆரம்பித்தது. மடக்மடக்கென்று நீர் அருந்திவிட்டு, “என்னடி வேணும்?” என்று மிரட்டுவதைப்போல் கேட்டான்.

சுப்பையா உச்சுக்கொட்டினான். அவனால் அக்கணம் அதை மிஞ்சிய எதிர்ப்பொன்றைக் காட்டிவிட முடியவில்லை.

சின்னதாய் செருமி குரலைச் சரியாக்கிக்கொண்ட சிறுமி, “பலூன்” என்றது.

வம்பிழுக்கும் மனநிலையை எட்டிவிட்டிருந்த ஈஸ்வரன் அவளை அருகே அழைத்து, அந்த பலூனைச் சுட்டிக்காட்டி, அது அவளுடையதுதான் என்பதற்கு என்ன அத்தாட்சி என்று வினவினான். சிறுமி செய்வதறியாமல் விழித்ததும் இரண்டொரு நிமிடங்களுக்கு அதன்மேல் விளையாட்டாகத் திருட்டுப் பட்டம் சுமத்தினான். திருடினால் சட்டம் என்ன செய்யும் என்றும், தெய்வங்கள் என்ன செய்யும் என்றும் உக்கிரமாக வர்ணித்து அவளை அச்சுறுத்த முயன்றான்.

சுப்பையாவினால் அப்போதும் உச்சு மட்டுமே கொட்ட முடிந்தது.

பலூனின் நுனியில் இருந்த முடிச்சை அவிழ்த்து, அதனுள்ளிருந்த காற்றையெல்லாம் வெளியேற்றி அதைச் சூம்பச் செய்தான் ஈஸ்வரன். பிறகு அதை அவளிடம் கொடுத்து, தயவு கருதி அவளுக்கொரு வாய்ப்பளிப்பதாகச் சொல்லி, அந்த பலூனை முழுதாக ஊதி பெரிதாக்க முயன்றால் அது அவளுடையது என்று ஒப்புக்கொள்வதாக அறிவித்தான். சிறுமி தனது பலம் அனைத்தையும் திரட்டி, காற்றூதி, அதற்கு உயிரூட்டுவதில் மும்முரமானாள். ஆனால் பலூனின் பருமன் ஒரு கட்டத்தைக் கடக்கும்போது காளையைப்போல் அவள் வயிற்றில் முட்டி அவளது முயற்சியைக் குரூரமாய் தகர்த்தான் ஈஸ்வரன்.

சிறுமி மீண்டும் முயலத் தொடங்கினாள். மீண்டும் தோற்கடிக்கப்பட்டு, மூன்றாம் முறையாக அவள் முயற்சிசெய்ய ஆரம்பித்தாள். அவள் முகம் வெளிறிப்போயிருந்தது. வியர்வையும் கண்ணீரும் ஊடு கலந்து அவளது கண்மையைக் கலைத்து, கருநிறக் கோடுகளாய் கன்னம் இரண்டிலும் கசியச் செய்திருந்தது. அதைச் சற்றும் கருத்தில்கொள்ளாத ஈஸ்வரன் மறுபடியும் அவள் வயிற்றில் முட்டி அவளது நிலையைக் குலைத்தான்.

சிறுமி வலக்கையால் வயிற்றைப் பொத்திக்கொண்டு இலேசாய் விசும்பினாள்.

மூர்க்கமேறிப் போயிருந்த ஈஸ்வரன் அந்தப் பலவீனத்தைக் கண்டு கைதட்டிச் சிரித்த கணம் சுப்பையாவினுள் ஏதோ பொங்கியெழுந்து குமிழியிட்டது. கணநேரம்கூட தயங்கியிராமல் ஈஸ்வரனின் கன்னத்தில் சப்பென்று அறைந்தான். நரம்புகள் அனைத்தையும் அத்தனை காலம் ஒடுக்கிச் சுருக்கியிருந்த சரடொன்று அறுபட்டதைப்போல் இலேசாக இருந்தது. மறுகணம் அந்த எடையற்ற நிலையினால் அச்சுறுத்தப்பட்டவனாகக் கிடுகிடுவென அதிரத் தொடங்கினான்.

கன்னத்தைப் பொத்தியபடி அவனை முறைத்த ஈஸ்வரன், “என்ன அடிச்சுட்டல்லா… என்ன அடிச்சுட்டல்லா… என்ன அடிச்சுட்டல்லா?” என்று முனங்கியபடியே இருந்தான். அவன் விழியிரண்டிலும் நீர் தேங்கியிருந்தது.

திடீரென ஏதோ நினைவில் வந்து வாசற்பக்கம் பார்த்தபோது அந்தச் சிறுமி மாயமாகியிருப்பதைக் கண்டான் சுப்பையா. நிலத்தில் அந்த பலூன், முழுதாய் ஊதப்பட்ட நிலையில் விரிந்து கிடந்தது.

ஒருசில நொடிகள் கழித்து வெடுக்கென எழுந்துகொண்ட ஈஸ்வரன், வேகவேகமாக நடந்து காரினுள் சென்று அமர்ந்துகொண்டான். உயிர்ப்புடனிருந்த அந்த பலூனையே வெறித்தபடி சில நிமிடங்கள் அமர்ந்திருந்த சுப்பையா, பிறகு மெதுவாக எழுந்து அதைக் கையில் எடுத்துக்கொண்டு கார் பக்கம் சென்று ஈஸ்வரனிடம் மன்னிப்பு கேட்டான்.

எதுவும் பேசாமல் அவனையும் அவன் கையிலிருந்த பலூனையும் மாறி மாறி பார்த்த ஈஸ்வரன், கம்மியக் குரலில், “ஓவரா போயிட்டேன் மாப்ள… ஏதோ லூசு கணக்கா சவுண்டா சவடாலா பேசுவேன். ஆனா இன்னைக்கு என்ன ஆச்சுன்னு தெரியல… ஏதோ மிருகம் மாதிரி… ம்… நீ அடிச்சது ரைட்டுதான் மாப்ள” என்றான்.

ஈஸ்வரனுக்கு உறவென்று யாருமில்லை என்று தெரிந்திருந்தபோதிலும் நிசப்த நதியில் மூழ்கிக்கிடந்த அவன் வீட்டினுள் நுழைந்தபோது ஒருவித அழுத்தத்தை உணர்ந்தான் சுப்பையா. தன்னந்தனி ஆம்பளையாக வாழ்ந்தபோதிலும் அவனது இல்லம் ஓரளவிற்குச் சுத்தமாகவே இருந்தது.

கூடத்தின் மையச்சுவரில் இருந்த மனைவியின் படத்தின் அருகே அந்த பலூனை வைத்துவிட்டு, குடிநீர் எடுத்துவர அடுக்களைக்குள் சென்றான் ஈஸ்வரன்.

சுப்பையா அந்தப் புகைப்படத்தையே நோக்கிக்கொண்டிருந்தான். பிரசவத்தின்போது இறந்துவிட்ட அவன் மனைவி, கையிலொரு குழந்தையை ஏந்திக்கொண்டு சிரித்த முகமாய் இருப்பதைப்போன்ற அந்தப் படம், போட்டோஷாப் மூலமாக உருவாக்கப்பட்டது என்று ஒருமுறை அவன் சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது.

குளிர்நீர் மற்றும் காரச்சேவுடன் வெளியே வந்த ஈசுவரன் எதிரே இருந்த முக்காலியின் மேல் அதை வைத்துவிட்டு, “இரு மாப்ள வந்துடறேன்” என்று சொல்லியபடி புறவாசல் பக்கம் போனான்.

வளர்க்கும் பசுவையும், அது புதிதாய் ஈன்றிருக்கும் கன்றையும் பார்க்கப் போகிறான் என்று புரிந்துகொண்ட சுப்பையாவிற்கு திடீரென ஓர் எண்ணம் தோன்றியது. இவன் ஏன் இப்படி இங்கே ஒற்றை ஆளாகச் சிரமப்படவேண்டும்? தனது வீட்டின் மேல்தளம் காலியாகத்தானே இருக்கிறது? மாடுகளைக் கருத்தில்கொண்டே அமைக்கப்பட்ட வீடென்பதால் அத்தனை பெரிய புழக்கடைகூட இருக்கிறது.

சுப்பையா நீர் அருந்தினான். பின்பு இந்த எண்ணம் தனக்குள் இத்தனை நாளாய் தோன்றாதது ஏன் என்று எண்ணி தன்னையே நொந்துகொண்டான்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button