
மாலை நான்கு மணிக்கு வர வேண்டிய பேருந்து இன்னமும் வரவில்லை. தட்டாம்பட்டியில் இருந்து ஏழு பேர் கொண்ட குழு கிளம்பி அரசமரம் பேருந்து நிறுத்தத்திற்கு வந்தாயிற்று. முருகராசு, தன் சட்டைப்பையிலிருந்து நைந்து போன நெகிழியில் வதங்கிப் போயிருந்த வெற்றிலையை எடுத்து சுண்ணாம்பு தடவ ஆரம்பித்தார். பேச்சி சலித்துக்கொண்டாள்.
“அய்யய்ய.. எத்தனை தடவதான் வெத்தல போடுவீயளோ.. பொண்ணு பாக்க போற இடத்துல வாயில எதயாவது போட்டு கொதப்பிக்கிட்டு.. வெள்ளயும் சொள்ளயுமா இருக்குத வேட்டியலாம் நாசமாக்கீராதீய..”
“ஏட்டீ.. நா என்ன வெத்தல போடத் தெரியாமயா கெடக்கேன்.. ஏல நட்ராஜு.. போற எடத்துல எனக்கும் சேத்து ஒரு பொண்ண பாருல.. அப்பத்தான் உங்கெம்ம சரிப்படுவா..” என்று சொல்லிச் சிரித்தார்.
நட்ராஜ் கரடுமுரடான சாலையில் எதிர்புறமிருக்கும் இலைகளற்ற அந்த மரத்தில் இரண்டு கிளிகள் கொஞ்சிக்கொண்டிருப்பதைக் கண்கள் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் யாரையும் சட்டை செய்யவில்லை. கிளிகள் இரண்டும் ஆத்மார்த்தமாய் கொஞ்சிக்கொண்டிருந்தன. கிளிகளின் உலகத்தில் யாருமில்லை என்பது நட்ராஜுக்கு என்னவோ செய்தது. அவனுடைய தாய்மாமனான வேலுச்சாமி அவனைத் தோளில் தட்டினார்.
“ஏலே… எங்கடா இருக்க.. “
மரத்திலிருந்த அவனது மனது சடக்கென்று கீழே குதித்தது. வேலுச்சாமி பெரிய கொட்டாவி ஒன்றினை விட்டபடியே சொன்னார்.
“பொண்ணு பாத்துப் பாத்துச் சலிச்சுப் போச்சிடே எங்களுக்கு.. தெவங்குதோம் கெடந்து.. இந்தப் பொண்ணயாவது முடிச்சுட்ருடே..” என்றார்.
பேச்சிக்கு எரிச்சலாக வந்தது, “எந்த பொண்ணப் பாத்தாலும் புடிக்கல புடிக்கலங்கான். மனசுல என்ன இருக்குன்னு அந்த காந்திமதிதாஞ் சொல்லணும்.. சொன்னாதான நமக்குத் தெரியும்..” என்றாள்.
அந்த நேரம் அனுமார் வேடமணிந்த ஒருவர் உண்டியல் குலுக்கியபடி இவர்களை நெருங்கிக்கொண்டிருந்தார். முருகராசு தன் கறைப்பற்கள் தெரிய அவலமாய் சிரித்து வேலுச்சாமியிடம் சொன்னார், “பொண்ணு பாக்கப் போற நேரத்தில சகுனத்தப் பாத்தியா மாப்ள.. வெளங்கும்..”
அனுமன் ஒரு பிரம்மச்சாரி என்பதால் அவர் அப்படிச் சொல்லியிருக்கக்கூடும். வேலுச்சாமி தன் தோளால் முருகராசின் தோளை இரண்டு தட்டு தட்டி கண்களில் குசும்பு கொப்பளிக்கக் காதில் கிசுகிசுத்தார்.
“யத்தான்.. நீங்க அனுமார யாம் பாக்கீய்ய.. ஒங்களுக்கு நல்ல சகுனந்தானெ வேணும்.. அங்காருங்க.. காளியம்மா மீனு விக்குத அழகே அழக..”
வேலுச்சாமி கண் காட்டிய இடத்தில் முருகராசு திரும்பிப் பார்த்தபோது மீன்காரியை முந்திக்கொண்டு தெரிந்தது அங்கிருந்த வேப்பமரம். அது வேப்பமரம்தான். ஆனால் ஆலமரம் போல அத்துணை விசாலமானது. காற்றில் அசையும் அதன் இலைகளைப் பார்த்தாலே மனது ஒரு விடுதலையடைந்த பட்டம் போலக் காற்றில் உயரே உயரே பறக்கும். அதன் இலைகள் காற்றில் அசைந்து அசைந்து நமக்கு விசிறி விடுவது போல் இருக்கும். அந்த அகண்ட வேப்பமரத்தின் கீழேதான் காளியம்மாள் மீன் கடை விரித்திருந்தாள். கடையோடு சேர்த்து தன் கால்களையும்.
சாதாரணமாகத் திரும்பிப் பார்த்த முருகராசு, அதைக் கண்டு திடுக்கிட்டுக் கொஞ்சம் வெளிறித்தான் போனார். இருவரும் மெதுவாகக் கிசுகிசுத்தனர்.
“வே.. என்னவே இது..?”
“யாவார காந்தம்த்தான்..!”
“இதா..?”
“ஆளுவள இழுத்துக் கொண்டாந்துரும்லா..!”
“ச்சீ.. கருமெம.. “
“யத்தான்.. இந்தெப் பிரெபஞ்சத்துலகூட எல்லாத்தையும் இழுத்துப் போடுத கருந்தொள ஒண்ணு இருக்காம்.”
“ஓம்மரப் பாத்தாதான் விண்வெளில அனாமத்தா சுத்துத ஆள் மாறிருக்கேரு.. உள்ள உழுந்துராதேரும்.. இப்புடி வாரும்..”
“யத்தான்.. நா மட்டும் இப்ப அந்த மீனா இருந்திருந்தம்னா, அவ கால விரிச்ச மூனாந் நொடில உயிர்த்தெழுந்துருவம்த்தான்..!”
“வே.. நீரு ஒரு வெவரங்கெட்ட மனுசரய்யா..”
அனுமன் அவர்களை நெருங்கிக்கொண்டிருந்தார். பேச்சி கடுகடுத்தாள்.
“ஏங்க.. அனுமார வெரட்டுங்க அங்குட்டு..” என்றாள்.
“சும்மா இருட்டீ.. வால்ல தீய கீய வெச்சுட்டுப் போயிரப் போறான்..” என்றதும் பேச்சி தன் புட்டத்தைத் தடவிப் பார்த்தாள். அங்கே வாலில்லை. அனுமார், வேலுச்சாமியை நெருங்கி உண்டியலைக் குலுக்கினார்.
“அனுமார் வேசம் போட்டுக்கிட்டு ஐயமாரு தெருவுக்குப் போனீர்னா காசு தேறும்லாவே.. இங்ஙென எதுக்கு அலைதீரு..” என்றார் வேலுச்சாமி.
“அனுமார் வேசம் போட்டாலும் நம்மள ஒருமாரிதான்ங்க பாக்காங்க.. நம்மளால அனுமாருக்கு எதுக்கு அவமானம்னுட்டுதான் அங்குட்டுலாம் போறதில்லீங்க..” என்றார் அனுமார்.
முருகராசு குறுக்கிட்டு, “ஏன்யா அனுமாரு.. சீதா பிராட்டிய காப்பாத்துத வேலயெல்லாம் இல்லியா ஒமக்கு..” என்றார்.
“சீதாவ நான்தான்ங்க சின்சியரா லவ் பண்ணேன். அந்த ராமம்பய இப்படி தட்டீட்டுப் போவான்னு நெனக்கலீங்க.. ” என்று அனுமார் நொந்துகொண்டபோது மொத்தப் பேருந்து நிறுத்தமும் திடுக்கிட்டது.
” அட ஆமங்க.. நம்ம குமாரசாமி மொதலியார் மவன் ராமன்.. மூணாந்தெரு.. கிளியூர் காலேஜ்லாம் போனாம்லா.. துணிக்கடைக்கு வேலைக்குப் போய்ட்டு வந்துட்டுருந்த என் சீதாவ.. (அனுமாருக்கு துக்கம் தொண்டையை அடைக்கிறது) பஸ்ல வெச்சே பேசி பேசி கவுத்துருக்கான் காவாலி.. சீதா ஒரு மொறைக்கு எனக்கு அத்தப் பொண்ணுங்க.. வேதன தாங்க முடில.. அதான் அனுமாராயிட்டேன்..” என்றார் அனுமார்.
முருகராசு வாயில் குதப்பிக்கொண்டிருந்த வெற்றிலையை அவசரமாகச் சாலையில் துப்பிவிட்டுக் கேட்டார். “வே.. யாருவே நீரு..?”
அனுமார் நெஞ்சைத் திறந்து ராமனைக் காட்டியதுபோல, இந்த அனுமார் தன் ரப்பர் வாயைக் கழற்றி உள்ளிருந்த தன் முகத்தைக் காட்டினார்.
“ஏலே.. ச்சீனி.. நீயாடே இது.. என்னய்யா இது வேசமெல்லாம் போட்டுக்கிட்டு.. உண்டியல் குலுக்கிக்கிட்டு.. அப்பாக்கு தெரிஞ்சா வையப் போறார்ரா..” என்றார்
“அவரு கெடக்காரு.. சீதாவ பொண்ணு கேப்போம்.. வாங்கப்பான்னேன்.. துணிக்கடையில வேல செய்த பொண்ணுங்கல்லா தேவிடியான்னு சொல்லிட்டாரு. அந்தானிக்கி எனக்குக் கோவமாயிட்டு.. நீங்க பல எடங்களுக்குப் போய்ட்டு வருத போக்குவரத்தா இருக்குத ஆளு.. ஒம்மெரு வெவரம் நமக்கு இல்லன்னுட்டேன்.. கைகலப்பாயிட்டு அண்ணாச்சி.. சீதா எனக்கே கெடைக்கணும்னு தெய்வச்செயல்புரம் கோயிலுக்கு நடந்தே வரேன்னு அனுமாருக்கு வேண்டிருக்கேன் அண்ணாச்சி .. இந்தப் புனித சீத யாத்திரை வெற்றியடைய வாழ்த்துங்க.. வாரென்.. ண்ணா..” அனுமார் கிளம்பிச் சென்றார்.
சீனிவாசன் சென்றுகொண்டிருப்பதையே பார்த்த பேச்சி மீண்டும் சலித்துக்கொண்டாள்.
“பாருங்க.. இப்புடி வெளிப்படயா பேசுத புள்ளய அவுங்க வீட்டுக்குப் புடிக்கல.. நம்ம வீட்டுப் புள்ள மனசுல என்ன இருக்குன்னே சொல்ல மாட்டிக்கான்.. என்ன செய்ய..”
“அஞ்சு வெரலும் ஒன்னாருந்தா..”
“வாய்க்குள்ள வசதியா வெத்தலய மடிச்சு போட முடியாது.. அதான..”
பேருந்து நிறுத்தம் சிரிப்பாய் சிரித்தது.
“பஸ்ஸு வந்துட்டு.. பஸ்ஸு வந்துட்டு..” என்று ஒரு குரல் கேட்டதும் பேருந்து நிறுத்தம் தடபுடலானது.
இலைகளற்ற அந்த மரத்தைத் திரும்பிப் பார்த்தபடியே பேருந்தில் ஏறினான் நட்ராஜ். அந்தக் கிளிகள் இன்னமும் கொஞ்சிக்கொண்டிருந்தன. நட்ராஜ் பேருந்தின் சாளரம் வழியே மீன் கடையைப் பார்த்தான். காளியம்மாள் விரித்திருந்த பெரிய மேசையில் கூறு கூறாய் வைக்கப்பட்டிருந்த மீன்களை ஈக்கள் மொய்க்காதிருக்க விசிறிக்கொண்டிருந்தாள். தலையில் மட்டும் ஏதேனும் ஒரு பூவைச் சூடியிருந்தால் காளியம்மாள் இன்னும் அழகாயிருப்பாள் என்று நட்ராஜிற்குத் தோன்றியது. சரியாக அக்கணம் எங்கிருந்தோ வந்த காற்று மரத்தை ஓர் உலுப்பு உலுப்பச் சரசரவென வேப்பம்பூக்களை அவளின்மீது தூவியது மரம். காளியம்மாள் புன்னகைத்தபடியே மேலே பார்த்தாள். அந்தச் சித்திரம் நட்ராஜிற்கு மின்னலடித்தது போலிருந்தது.
தள்ளாடித் தள்ளாடி நகரும் பேருந்தில் கூட்டமே இல்லை. வேலுச்சாமி நடத்துநரிடம் கடிந்துகொண்டார்.
” ஏ.. மாரியப்பன் மவனே.. நீ வாட்டுக்கு ஓஞ்சவுரியத்துக்கு வந்தா.. நல்லது கெட்டதுக்குலா நாங்கெப்பப் போய் சேர்றது..?”
எல்லோருக்கும் பயணச்சீட்டு கொடுத்து முடித்துவிட்டு வேலுச்சாமியின் அருகே வந்து அமர்ந்தார் அந்த இளம் வயது நடத்துநர்.
“மன்னிக்கணும் அண்ணாச்சி.. பொண்ணு பாக்கப் போயிருந்தேன்.. கொஞ்சம் லேட்டாயிருச்சி..”
பெண் பார்ப்பதற்காகக் கிளம்பிய கூட்டம் அந்த நடத்துநரை ஒரு பார்வை பார்த்துவிட்டுத் திரும்பிக்கொண்டது.
“அப்படிப் போடு.. எந்தூரு பொண்ணு..?” என்றார் வேலுச்சாமி குஷாலாக.
“நம்ம ஆந்தக்கொளம்.. “
“ஆந்தக்கொளமா.. அடப்போப்பா.. எங்காலத்துலயே அங்க ஒருத்தியு நல்லாருக்க மாட்டாளுக.. இப்பவாச்சு உருண்டு தெரண்டு இருக்காளுகளா..?” என்றபோது பேருந்து பெரிதாக ஒரு குலுங்கு குலுங்கி நின்றது.
“ஏலே. என்ன பேச்சு பேசிட்டுருக்க பஸ்ல.. அதுவும் புள்ளயல பக்கத்துல வெச்சுகிட்டு.. பாரு பஸ்ஸே நின்னு போச்சி..” என்று தன் தம்பி வேலுச்சாமியை அதட்டினாள் பேச்சி. பேச்சியின் அதட்டல் பேச்சைக் கேட்டு முருகராசு முகம் சுழித்தார்.
பேச்சி தன் மகன் நட்ராஜை இன்னமும் ஒன்றும் தெரியாத குழந்தையைப் போலவே பாவித்து வருவது எப்போதும் முருகராசுவிற்குக் கடும் எரிச்சலைக் கிளப்பியது. ஒன்றும் தெரியாத அந்தப் பச்சைக் குழந்தை நட்ராஜை திரும்பிப் பார்த்தார். பேருந்தின் சாளரத்தில் வலது முழங்கையை முட்டுக்கொடுத்து கன்னத்தில் கை வைத்தபடி புன்னகைத்த முகத்துடனே சாளரத்தின் வெளியே பார்த்துக்கொண்டிருந்தான். அங்கே இரண்டு நாய்கள் ஆவேசமாகப் புணர்ந்து கொண்டிருந்தன. முருகராசு தன் புருவங்களை உயர்த்தி ‘காலக்கொடுமை’ என்று மனதிற்குள் நினைத்தபடியே இரண்டாம் முறையாக வெற்றிலையை எடுத்து சுண்ணாம்பு தடவினார். ஓட்டினர் சில ஸ்பானர்களை எடுத்துக்கொண்டு கீழே இறங்கினான். நடத்துநர் சிரித்தபடியே வேலுச்சாமியிடம் சொன்னான்.
“பொண்ணு பிடிக்கலன்னு சொல்லிட்டன் அண்ணாச்சி..”
“ஏன்டாப்பா.. பொண்ணு கெடக்காம அவனவன் கைல புடிச்சுட்டு திரியுரானுவ..நீ என்னடான்னா..” என்றபோது நடத்துநர் திடுக்கிட்டு அதிர்ந்தான்.
“அண்ணாச்சி..”
“அதாவது.. கைல புடிச்சுட்டு திரியுரானுவோன்னு பொண்ணு போட்டோவ சொன்னேன்டே.. தம்பி தப்பா எடுத்துக்கிட்டியோ..”
நடத்துநர் சிரிக்காமல் ஒரு சிரிப்பு சிரித்தபடியே அகன்றான். பேச்சி தலையில் அடித்துக்கொண்டாள். முருகராசு, பேச்சியிடம் மெதுவாகச் சொன்னார்.
“இந்தக் காலத்துப் பயலுவோ, பொண்ணு சினிமா நடிகயாட்டமா வேணும்பானுவ. ஆனா ஒரு சினிமா நடிகய எந்தப் பயலும் கட்டமாட்டான். கேட்டா அவுளுகெல்லாம் தேவுடியாம்பானுவ.. பொச கெட்ட பயலுக.. ஒரு ஒடம்புக்கு இன்னோரு ஒடம்பு வேணும்.. அவ்ளதான.. அது யாம் பவுர்ணமி மாரி அவ்ளோ பவுசாத்தான் வேணுமான்ன.. த்தூ..”
இந்தக் காலத்து இளைஞர்களெல்லாம் அழகுப் பெண் மோகம் பிடித்துத் திரிகிறார்கள் என்று முருகராசு பொதுவாகச் சொன்னாலும் அவர் சுட்டிக்காட்டுவது தன்னைத்தான் என்று நட்ராஜுக்கு தோன்றியது. அப்பாவின் உளவியல் புரியாத மகனும், மகனின் உளவியல் புரியாத அப்பாவும் இந்த உலகில் இல்லை.
நட்ராஜ் குறித்த முருகராசுவின் அபிப்பிராயங்கள் என்பது ஒரு வகையில் பார்த்தால்.. இல்லையில்லை.. எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் அது நூறு சதவிகித உண்மைதான்.
நட்ராஜ் ஒரு பெண்ணை குறுகுறுவென பார்க்க ஆரம்பித்துவிட்டால் சற்று நேரத்தில் அந்தப் பெண்ணுக்குத் தலைச்சுற்றல் வந்துவிடும். கொஞ்சம் சுமாரான பெண் என்றால் குமட்டல் உண்டாகும். அழகான பெண் என்றால் கர்ப்ப வாந்தியே எடுத்துவிடுவாள்.
ஊரில் பெட்டிக்கடை வைத்திருக்கும் சரசக்காவிடம் கேட்டால் தெரியும். பெட்டிக்கடையில் கைக்கு எட்டினாற் போலிருக்கும் எதையும் நட்ராஜ் கேட்க மாட்டான். சரசக்கா கீழே குனிந்து எடுக்கும்படியாகவோ அல்லது இரு கைகளையும் மேல் உயர்த்தி எடுக்கும்படியாக இருக்கும் ஒன்றைத்தான் அவன் கேட்பான். எப்போதும் நைட்டியுடன் இருக்கும் அவளின் வளைவு நெளிவுகள் பளிச்சிடும்படியாக அவளை அசைய வைப்பதே நட்ராஜின் வியூகம்.
பக்கத்து வீட்டு லட்சுமியக்கா கிரைண்டரில் மாவு அரைக்கும்போது கூடவே நின்று கதை பேசுவான். லட்சுமியக்கா மாவு வழிக்கும்போது கூடவே கையைவிட்டு மாவு வழிப்பான். மாவுக்குள்ளிருந்து சுழலும் லட்சுமியக்காவின் விரல்களையும் சன்னமாய் சேர்ந்து வழிப்பான். லட்சுமியக்கா இரண்டு ஆண் குழந்தைகளின் தாய் என்றாலும் ஏனோ ஒன்றும் சொல்வதில்லை நட்ராஜை. இன்னும் கவனமாகக் கூர்ந்து லட்சுமியக்காவைக் கவனித்தீர்களேயானால் நட்ராஜின் வீட்டில் நட்ராஜின் இருப்பை உறுதி செய்த பிறகே மாவு அரைக்க ஆரம்பிப்பாள். கலைநயமிக்க அந்த மாவு வழித்தல் இன்றும் தொடர்கிறது.
நட்ராஜின் மாமா பாலுவிற்கு அழகான அத்தை ஒருத்தி இருந்தும் பேரழகான சின்னத்தை ஒருத்தியைச் சேர்த்துக்கொண்டு அவளுக்கு ஊர் கடைசியில் வீடும் கட்டிக் கொடுத்திருந்தார். நட்ராஜ்தான் அந்தச் சின்னத்தை வீட்டின் பிரதான வேலையாள். அவள் பெயர் அல்லி.
நட்ராஜிற்கு எப்பொழுதும் எதையாவது சொல்லிக் கொடுத்துக்கொண்டே இருப்பாள். குறிப்பாக, சாப்பிடும் பொருள்களை எப்படிச் சாப்பிட வேண்டும் என்பதை. ஒரு மைசூர்பாகைக் கடித்து, அந்த இனிப்பின் மதுரத்தால் அவள் கண்கள் சொருகும்போது, அவனின் ஹார்மோன் பனிமலைகள் ஒரு நதியென உருகி உள்ளமெங்கும் பாயும். ஒரு ஜிலேபியை அல்லி பிய்த்துண்ணும்போது, அந்த ஜிலேபித் துண்டங்களும் அவள் இதழ்களும் ஒன்றையொன்று பிய்த்துண்ணுவதாகக் கிடந்து பரிதவிப்பான்.
ஒரு வெள்ளரியையோ ஒரு செவ்வாழையையோ அழகாக எப்படிச் சாப்பிட வேண்டும் என்பதை அல்லி செய்து காட்டும்போது நட்ராஜ் ஓர் ஓநாயாக மாறிக்கொண்டிருப்பான். கொஞ்சம் ரசத்தைத் தன் நாவில் விட்டு அவள் சப்புக்கொட்டும் ‘டொக்’ என்கிற சத்தம் ஒரு திருவிழாவின் வேட்டுச் சத்தம் போல அவனுக்குள் ஒலிக்கும். அல்லி தன் இரு உதடுகளையும் குவித்து ஒரு துளி புளிக்குழம்பை உறிஞ்சி தன் நாவால் மேல் உதட்டையும் கீழ் உதட்டையும் ரசித்துத் துடைக்கும் போது புணர்ச்சிக்குத் தயாராகும் ஒரு கிடாரியைப் போல நட்ராஜிற்கு மூக்கு நமநம என்று அரித்துக்கொண்டிருக்கும்.
அல்லி என்றாலே அவன் நினைவுக்கு வருவது அவளது ஒரே சித்திரம்தான். காய்கறிகள் நறுக்கும்போது எப்போதும் ஒரு சிவந்த மிளகாய்ப் பழத்தின் காம்பைத் தன் இதழ்களில் கவ்வியிருப்பாள். அப்படி அவளைக் காணும்போதெல்லாம் மழைக்காடுகளில் தீ பற்றியெரியும் ஒரு காட்சி அவனுள் பரவும்.
அன்றைக்கு அப்படித்தான். ஒரு குல்பி ஐஸை எப்படி ரசித்து நாவால் ருசிக்க வேண்டும் என்று அவள் வகுப்பெடுத்துக்கொண்டிருந்தபோது நட்ராஜ் நிஜமாகவே ஓர் ஓநாயைப் போல ‘ஊ ஊ ஊ’வென்று ஊளையிட்டபடியே ஒரு துள்ளு துள்ளினான். அல்லி அரண்டே போனாள். அவள் மெதுவாக அவனருகே வந்தபோது நட்ராஜ் முழு போதையுற்றிருந்தான். கண்கள் கிறக்க நிலைக்குச் சென்றிருந்தன.
அவனருகே வந்து, “எலே .. என்னாச்சுடே.. எடே.. ஒன்னத்தாம்டே..” என்றாள் சற்றே மிரட்சியோடு.
குல்பி ஐஸின் குளிரில் விரைத்திருந்த அவளின் சாம்பல் நிற உதடுகளை அவ்வளவு நெருக்கத்தில் கண்டதும் அவனது மூளையின் இயக்கங்கள் ஸ்தம்பித்தன. மயங்கி அவள்மீதே சரிந்தான். மயக்கம் தெளிவுற்றபோது அல்லி அவன் தலையைத் தன் மடியில் கிடத்தி அவன் தலையைக் கோதிவிட்டுக்கொண்டிருப்பது தெரிந்தது . ஒரு குழப்பமான பிதியுள்ள மனநிலையிலும் அல்லி, அவனுக்கு என்ன ஆயிற்றோ என்றுதான் பயந்து போயிருந்தாள். அவன் திடுக்கிட்டு எழுந்தான். தயங்கி அவளைப் பார்த்தான். அவள் கண்கள் நீரால் நிரம்பியிருந்தன.
“ஒன்னய ஒரு கொழந்த மாரி நெனச்சிருந்தேன். ஆனா நீ.. மாமாக்கு தெரிஞ்சா என்ன ஆவும் தெரியுமாடே..” என்று கேட்டுவிட்டு அமைதியாக இருந்தாள். ஏதோ பெரிய பிசகு உண்டாகிவிட்டதை உணர்ந்த நட்ராஜின் இரு கண்களிலும் நீர் பொங்கி வழிந்தன. ஒரு கண்ணில் வழிந்த நீர் குற்ற உணர்ச்சியைத் தட்டி எழுப்பினாலும் மறு கண்ணில் வழிந்த நீர், ” பெருசா ஒன்னுமே சொல்லல.. கொஞ்சம் மூவ் பண்ணிப் பார்ப்பமா” என்ற வகையிலான ஆனந்தக் கண்ணீர் அது.
காய்கறிகள் விற்கும் பொன்னம்மா அக்காவிடம் நட்ராஜ் பேசும் அனைத்து வார்த்தைகளும் இரட்டை அர்த்தங்கள் கொண்டவை. தள்ளுவண்டியில் காய்கறிகள் பரப்பிக்கொண்டிருப்பவளிடம் கேட்பான்,
“யக்கா.. பாக்கதுக்குலா நல்லா பெரிய பெரிய காயா இருக்கு.. ஆனா திங்க நல்லாருக்குமான்னு தெர்லயே..” என்பான்.
“பெரிய காய் திங்குத மூஞ்ச பாரு..” என்பாள் பொன்னம்மா.
“வள்ளியக்கா கடயில இருக்குத மாரி பெரிய பூசணிக்காலாம் கொண்டு வரமாட்டியளா..?” என்பான். காய்கறிகள் பரப்புவதைச் சடக்கென்று நிறுத்தி நட்ராஜை மேலும் கீழும் பார்ப்பாள் பொன்னம்மா. குசும்பு சிரிப்பொன்றைச் சிரித்தபடியே நட்ராஜிடம் மெதுவாகச் சொல்வாள்,
“வள்ளி கடயில இருக்கது பூசணிக்காயே கெடயாதுடா.. எல்லா ஐபிரிட்டு.. (அவன் கண்களை நேருக்கு நேர் பார்த்து..) நாட்டுப் பூசணிக்காய நேர்ல பாத்திரிக்கியா..” என்பாள்.
நட்ராஜ் பெரிதாகக் குழம்பியபடியே, “அக்கா.. நெசமாவே வள்ளியக்கா கடயில இருக்கது பூசணிக்கா இல்லயா..?” என்று அப்பாவியாய் கேட்பான்.
பொன்னம்மா எவ்வளவோ முயன்றும் அடக்க முடியாமல் வெடித்துச் சிரிப்பாள். நட்ராஜிற்கு அவமானமாக இருக்கும். காய்கறிகள் எதுவும் வாங்காமலேயே வெறும் பையோடு கையை வேகமாய் வீசியபடி நடையெடுப்பான். பொன்னம்மா தெருவில் இருந்தபடியே கத்துவாள்..
“நட்ராசேய்… முருங்கைக்காயாச்சும் வாங்கிக்கோடே.. அப்பதான் பூசணிக்கா எது சுண்டக்கா எதுனுலா கண்டுபிடிக்க முடியும்..”
நம்ம வள்ளியக்கா கடைக்குப் போனாலும் நேரத்திற்குத் தகுந்தாற் போலப் பேசுவான் நட்ராஜ். கடையில் நிறையப் பெண்கள் நின்றுகொண்டிருந்தால்..
“என்னக்கா.. எல்லா காயுமே சிறுசா இருக்கே..” என்பான்.
கடையில் காய்கறிகள் பார்த்துக்கொண்டிருக்கும் ஏழெட்டு பெண்கள் இவனைத் திரும்பிப் பார்த்து முறைப்பார்கள்.
“இருக்கறததான கொட்ட முடியும்..” என்பாள் வள்ளியக்கா கோபமாய்.
“அதுக்கில்லக்கா..” என்று நட்ராஜ் இழுக்கும்போது வள்ளி இடைமறிப்பாள்.
“என்ன நொதுக்கில்லக்கா.. ஏன்.. ராசா சின்ன காய்னா திங்க மாட்டியளோ.. என்னமோ ஒவ்வொரு காயையும் ஒவ்வொரு விதமா திங்கிறவனுவ மாரி.. எல்லாக் காயயும் ஜூஸ் போட்டு ஒரே இடத்துல வச்சு உரியுத பயலுவதானல நீங்கல்லாம்.. ” என்று வள்ளியக்கா சொல்லும்போது பக்கத்துப் பெண்கள் காதைப் பொத்திக்கொண்டு வயிறு வலிக்கச் சிரிப்பார்கள். நட்ராஜ் தோல்வியைத் தோளில் போட்டவாறு வீடு திரும்புவான், பை நிறைய பீன்ஸ் மட்டுமே வாங்கியபடி.
பாக்கெட் பால் விற்கும் ராணியக்காவின் வீட்டிற்கு நட்ராஜ் சென்றான் என்றால் அங்கே சுற்றுச்சூழலே ரணகளமாகிப் போகும். கூட்டம் அதிகம் இருக்கும் சமயங்களில் ராணியக்காவைப் பார்த்து அப்படிக் கத்துவான்.
“என்னக்கா.. எல்லாருக்கும் பால் கொடுக்கீய.. எனக்கு மட்டும் லேட்டாக்குதீய்ய..” எனும்போது சுற்றியிருக்கும் மற்ற ஆண்கள் திடுக்கிட்டு நடுநடுங்கிப் போவார்கள்.
“எளவட்டம்தானய்யா.. செத்த இருந்து வாங்குடே..” என்பாள் ராணியக்கா.
சில மாலைகளில் சீக்கிரம் பால் வாங்கச் செல்லும்போது..
“ஏன்டாப்பா இவ்வளவு சீக்கிரமா வர்ற.. பொழுது சாஞ்சாப்ல வா.. பால் தாரேன்.. ” என்று ராணியக்கா சொல்லும்போது நட்ராஜிற்கு அவ்வளவு இதமாக இருக்கும். குளிர்சாதனப் பெட்டியிலிருந்து அவள் எடுத்துத் தரும் குளிர்ந்த பால் பாக்கெட்டுகளைத் தனது இரு கன்னங்களிலும் வைக்கும்போது ராணியக்காவின் இரு தனங்களையும் நினைத்துக்கொள்வான். அப்போது அவன் காதில் ஒரு பாடல் ஒலிக்கும்; அதில் ஒருத்தி பாடுவாள்,
“இது கம்பன் காணாத சிந்தனை.. உந்தன் காதோடு யார் சொன்னது..”
ராணியக்காவின் இரு தனங்களையும் கையில் பிடித்தவாறே வீடு வந்து சேருவான்.
தெருக்களில் எங்கேயாவது யார் வீட்டிலாவது கொடியில் காய்ந்துகொண்டிருக்கும் ஒரு ‘பிரா’வோ ஒரு பூ போட்ட ‘ஜட்டி’யோ நட்ராஜ் கண்களில் விழும்போது அவனுள் ஒரு பெருங்கிளர்ச்சி உண்டாகும். உண்மையில் தனக்குள் எழும்பும் காமம் ஒரு பெண்ணின் உடல் சம்பந்தப்பட்டதுதானா அல்லது ஒரு பெண்ணினுடைய உடை சம்பந்தப்பட்டதா எனச் சில சமயங்களில் அவன் குழம்பிப் போவான். காற்றில் பறந்து வந்து தன் வீட்டு வளாகத்தினுள் விழும் ஒரு ‘பிரா’வோ அல்லது ஒரு நைலான் ஜட்டியோ நொடிப்பொழுதில் நட்ராஜை ஒரு மிருகமாக மாற்றிவிடும். யாருடைய உள்ளாடை அது என்பதைத் தன் மூன்றாம் கண்ணில் உணர்வான். அதைச் சரியாக அந்தப் பெண்ணிடம் கொடுக்கும்போது..
“என்னதுதான்னு எப்படி கண்டுபிடிச்ச நட்ராஜு..” என்று ஆச்சரிய வெட்கமாய் அந்தப் பெண் கேட்கும்போது அந்தப் பெண்ணின் கண்களைப் பார்த்து ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு நகன்றுவிடுவான். அந்தப் பெண்ணுக்குப் பைத்தியம் பிடிக்கத் தொடங்கும்.
தட்டாம்பட்டியில் காணும் எந்த ஒரு பெண்ணையும் ஆபாசப் போருக்கு அழைப்பான். எந்த ஒரு பெண்ணிடமும் தனது ஆபாச வாளைச் சுழற்றுவான். ஆனால் இதுவரையிலும் ஒரு பெண்கூட ‘ஆபாசப் பேச்சா பேசுகிறாய்’ என்று நட்ராஜின் சட்டையைக் கொய்ததில்லை. அது ஏனென்று அவனும் சிந்தித்துப் பார்த்ததில்லை. நட்ராஜ் ஒரு சராசரி அழகன் என்பது மட்டுமல்ல. பெண்களிடம் பேசும்போது அவனிடம் ததும்பும் ஒரு குழந்தைத்தனம் அத்தனை பேரழகானது. குழந்தைக்குப் பால் கொடுத்துக்கொண்டிருக்கும் ஒரு தாயிடம் பக்கத்து வீட்டு வாண்டு ஒன்று வந்து “யத்தே.. நானும் கொஞ்சம் பால் குடிச்சுக்கட்டா..” என்று உண்மையாகவே கேட்கும் அப்பாவித்தனமான ஆசையை எப்படி ஒரு தாயால் ஆபாசமாக எடுத்துக்கொள்ள முடியும்..?
அப்படித்தான் தட்டாம்பட்டிப் பெண்கள் அந்த வாண்டு குழந்தையை நட்ராஜிடம் எப்போதும் கண்டனர். நாமும் அதை நம்புவோமாக.
பேருந்து சோலைபுரத்தில் நின்றதும் ஏழு பேரும் இறங்கினர். பெண் வீட்டாரில் ஓர் இளம்பெண் அங்கேயே நின்று வரவேற்றாள். பெண்ணின் பெரியம்மா மகள் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டாள். சுடிதார் அணிந்திருந்தாள். கலைந்த கேசம். துப்பட்டா இல்லை. உதட்டுக்குச் செந்நிறச் சாயம் பூசி இருந்தாள். பெங்களூர்க்காரியாம். தமிழோடு சிறிது ஆங்கிலம் குழைத்து அழகாகப் பேசினாள். மாப்பிள்ளை யார் என்று கேட்டு நட்ராஜைப் பத்து நொடிகள் தீர்க்கமாய் பார்த்தாள். மூன்று நொடிகளுக்கு மேல் நட்ராஜால் அவளின் கண்களை எதிர்கொள்ள முடியவில்லை. வேலுச்சாமி மெல்ல அவளின் பெயரைக் கேட்டபொழுது வெகு அழகாக இடது கையால் தன் கலைந்த கேசத்தைக் கோதியபடியே மிக அழகாகச் சொன்னாள்.
“லாவண்யா அங்கிள்..”
லாவண்யாவைக் கண்டதிலிருந்து நட்ராஜின் உடல்மொழி சுத்தமாக மாறிவிட்டிருந்தது. ஒவ்வொரு அங்க அசைவிலும் ஒரு நடிகனின் உடல்மொழியைக் காட்டியபடி நடந்துகொண்டிருந்தான். சாயம் பூசாத அவளுடைய உதடுகள் கொண்ட முகம் எப்படி இருக்கும் என்று அவன் மனது ஒரு சித்திரம் வரைந்துகொண்டிருந்தது. பார்த்தவுடன் பிடிக்கும் ஒரு பெண்ணே சிறந்த துணையாளாக இருக்க முடியும் என்று திடீரென்று அவனுக்குத் தோன்றியது. நட்ராஜ் என்றில்லை, மனித இயல்பே இப்படிப்பட்டதுதான். ஏதாவது ஒன்றைத் திடீரென மிகவும் பிடித்துப் போய்விட்டால் நம் மனம் அது சார்ந்து அல்லது அதற்கு இசைவாய் சிந்திக்கத் தொடங்கும். நம்மைப் போலத்தான் அவளது உடல் மொழியும் நமக்காக மாறிவிட்டிருக்குமோ என ஒரு கணம் சந்தேகித்தான். இருந்தாலும் தனது அழகில் அவனுக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லை.
“எங்க ஃபேமிலில ஃபுல் அண்ட் ஃபுல் கைடன்ஸ் நாந்தான் அவங்களுக்கு.
தாத்தால இருந்து யார்னாலும் என்கிட்டதான் போன் பண்ணி என்ன செய்யலாம் சொல்லுமானு கேப்பாங்க.. அதனாலதான் உங்கள ரிசீவ் பண்ண நா வந்தேன். பெரியவங்க வந்து யாரும் ரிசீவ் பண்ணலயேன்னு தப்பா எடுத்துக்காதீங்க .. ப்ளீஸ்..” என்றாள் லாவண்யா.
ஒரு பழுத்த விஷயமுள்ள ஆண் வந்து எங்களைக் கூட்டியழைத்திருக்க வேண்டும். ஓர் இளம்பெண்ணா எங்களை முதன்முதலில் சந்திப்பது என்பன போன்ற எண்ணங்கள் இருந்தாலும்..
“பரவாயில்ல.. அதனால என்னம்மா.. வெவரம் உள்ளவுவோ முன்ன இருக்கணும்.. அதான ரைட்டு.. ” என்றாள் பேச்சி.
பெண் வீடு கொஞ்சம் தடபுடலாக இருந்தது. ஆளாளுக்கு அங்கும் இங்கும் என ஓடிக்கொண்டிருந்தனர். நட்ராஜ் அந்த நாற்காலியில் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தான். இந்தப் பெண்ணாவது நாம் நினைத்தது போல இருக்குமா என நினைத்துக்கொண்டிருந்தான். அந்த வீட்டில் வயதானவர்கள் முதல் இளங்குமரிகள் வரை அனைவரும் அழகாக இருப்பதாக நட்ராஜிற்குத் தோன்றியது. பெரியவர்கள் எதோதோ பேசிக்கொண்டிருந்தார்கள்.
வசீகரமான ஒரு பெண் ஒரு பெரிய தட்டில் காபி கொண்டு வந்து அட்டகாசமான புன்னகையுடன் முதலில் நட்ராஜிடம் நீட்டினாள். வசீகரமான முகம். எடுப்பான வனப்பு. எல்லாவற்றிற்கும் மேலாக நட்ராஜ் பெரிதும் எதிர்பார்த்த அந்த அம்சம் அவளிடம் இருந்தது. வளமான மார்பகங்கள். பார்த்தவுடனேயே அவளை அள்ளிக்கொண்டு வீட்டிற்குப் போய்விடலாம் போலிருந்தது அவனுக்கு. எல்லோருக்கும் காபி கொடுத்துவிட்டு தரையில் மற்ற பெண்களுடன் அமர்ந்துகொண்டாள். வைத்த கண் வாங்காமல் அவளையே பார்க்க வேண்டும் போலிருந்தது அவனுக்கு. பெரியவர்கள் இன்னமும் பேசிக்கொண்டே இருந்தார்கள். ஒரு கட்டத்தில் நட்ராஜால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவனுள் ஒரு மிருகம் எழும்பிக்கொண்டிருந்தது. அது அடங்க வேண்டுமானால் அவன் பேச வேண்டும். படக்கென்று சத்தமாகச் சொல்லிவிட்டான்
“எனக்கு பொண்ணு புடிச்சிருக்கு..”
சலசலவென்று இருந்த பெண் வீடு டக்கென்று நிசப்தம் ஆகிவிட்டது. குண்டூசி விழுந்தால் சத்தம் கேட்கும் அமைதி. நட்ராஜிற்கு ஒன்றும் விளங்கவில்லை. ஒரு பெரியவர் சொன்னார்.
“நாங்க இன்னும் பொண்ண காட்டவே இல்லயே..?”
“அப்ப.. அது..” என்று நட்ராஜ் கைகாட்டிய பெண்ணை எல்லோரும் பார்த்துவிட்டு அமைதியாகவே இருந்தார்கள். லாவண்யா எல்லோரையும் பார்த்துச் சொன்னாள்.
“ஸாரி.. என்னால அடக்க முடியல..” என்றவாறு வெடித்துச் சிரிக்க ஆரம்பிக்கக் கூட்டம் பின்தொடர்ந்து சிரித்தது. அனைவரும் வெகு நேரம் சிரித்தார்கள். சிரிப்பு அடங்கிய ஓர் அம்மாள் மெல்லச் சிரித்தவாறு சொன்னாள். “யய்யா.. அது பொண்ணோட சித்திய்யா..”
நட்ராஜிற்கு தன் முகத்தை எங்கே கொண்டு ஒளித்து வைப்பது என்று தெரியவில்லை. வேலுச்சாமி அவனை ஒருமாதிரி பார்த்துக்கொண்டிருந்தார். பெண்ணுடைய சித்திக்காரியை வெட்கம் பிடுங்கித் தின்றது. லாவண்யா அந்தச் சித்திக்காரியைப் பார்த்து, “நல்லவேள சித்தி.. சித்தப்பா வரல..” என்றதும் சித்திக்காரி அவ்விடத்தை விட்டு நகன்றோடினாள். பேச்சியோ இன்னும் ஒரு படி மேலே போய் அந்த சித்திக்காரியைத் தான் சரியாகப் பார்க்கவில்லையே எனக் குறைபட்டுக் கொண்டாள். முருகராசு தன் மனதிற்குள் “ரொம்பச் சிரிக்காதீய்ய கூவையளா.. இப்ப ஒரிஜினல் பொண்ணப் பாத்துட்டு புடிக்கலங்கப் போறான்.. அப்பம் பாப்போம் என்ன செய்தீயனுட்டு..” என நினைத்தபடியே ஐந்தாம் முறையாக வெற்றிலையில் சுண்ணாம்பு தடவ ஆரம்பித்தார்.
இதுவரை பார்க்கப்போன எட்டு இடங்களில் மூன்று இடங்களில் பெண்ணின் அம்மாக்களும் நான்கு இடங்களில் சிறு குமரிகளும் ஓர் இடத்தில் மட்டும் பெண்ணே நேரடியாகக் காபி வழங்கினார்கள். இது போன்ற குழப்பங்கள் சில நேரங்களில் தவிர்க்க முடியாததுதான். என்ன செய்ய.. உரசும்போதே பற்றிக் கொள்வதுதான் நல்ல தீக்குச்சியாக இருக்க முடியும். அந்த வகையில் நாம் நட்ராஜை குறை சொல்ல முடியாது.
பார்க்க வந்திருந்த பெண் கடைசியில் வந்தாள். நல்ல கருப்பு. பெயர் அமுதா. கத்திரிப்பூ ஊதாவில் பூப்போட்ட சாதாரணச் சேலைதான் உடுத்தியிருந்தாள். காதுகளில் சின்னஞ்சிறிய ஜிமிக்கி அசைந்தாடியது. கறுத்த முகத்தில் இலேசாக மஞ்சள் பூசி இருந்தாள். பொட்டு கொஞ்சம் பெரிதாக வைத்திருப்பதாக நட்ராஜிற்கு தோன்றியது. வனப்பமான உடலமைப்பு என்றாலும் மார்பகங்கள் சிறியன. ஆனாலும் அந்தக் கறுத்த உதடுகளில் எந்த ஒரு பெண்ணிடமும் அவன் இதுவரை கண்டிராத ஓர் அபாரமான கவர்ச்சி தெரிந்தது. குனிந்த தலையை அவள் நிமிரவில்லை. தலையில் தட்டி, மாப்பிள்ளை பாருடி என்று லாவண்யா சொன்னபோதும் அவள் நிமிரவேயில்லை. நிமிடத்திற்கு ஒருமுறை நட்ராஜின் கண்கள் சுழன்று சுழன்று பெண்ணின் சித்தியை அனிச்சையாகத் தேடிக்கொண்டிருந்தன. லாவண்யா அமுதாவிடம் கேட்டாள்.
“டூ யு லைக் டு ஸ்பீக் வித் ஹிம்..?”
அமுதா ‘ம்’ என்று தலையசைத்தாள்.
அந்தத் தோட்டத்தில் யாருமில்லை. அமுதா எடுத்த எடுப்பிலேயே, “நா எங்க சித்தி மாரிலாம் இல்ல..” என்றாள். நட்ராஜிற்கு சிரிப்பு வந்தது. ஆனால் அவள் முகத்தில் சிரிப்பில்லை.
“இதுவரைக்கும் எட்டு பேர வாண்டாம்னு சொல்லிட்டியளாம்.. அது ஏன்னு எனக்கு தெரியணும்.. ” என்றாள் கொஞ்சம் உரிமையாக. நட்ராஜ் அமைதியாக இருந்தான்.
“ஒம்பதாவது ஆளயும் வாண்டாம்னு சொல்லீருவியளா..?” என்றாள் கொஞ்சம் பாவமாக.
நட்ராஜ் என்ன நினைத்தானோ தெரியவில்லை, எட்டுப் பெண்களை ஏன் நிராகரித்தேன் என்பதை இவளிடம் சொல்லலாம் என்று அவனுக்குத் தோன்றியது. தட்டாம்பட்டிப் பெண்களுக்கு நட்ராஜிடம் இருப்பதாகத் தோன்றும் அந்தக் குழந்தைத்தனம் அப்படியே இங்கேயும் இந்தச் சோலைபுரத்து அமுதாவிடமும் எடுபடும் என்று நட்ராஜின் மூளை நினைத்தது.
கொஞ்சமும் கூச்சமின்றிக் கொஞ்சமும் தயக்கமின்றிப் பல வருட நண்பனிடம் சொல்வது போலச் சகஜமாய் சொன்னான், அவர்களுக்குச் சிறிய மார்பகங்கள் இருந்தன என்றும் அதனால்தான் அவர்களைத் தவிர்த்ததாகவும் அவன் சொன்னான். இப்போது அமுதா இதுவரை தனக்குள் தான் காணாத மிருகம் ஒன்று எழும்புவதை உணர்ந்தாள்.
‘மார்பகங்கள் மட்டும்தான் பெண்ணா..?’, என்று அவள் கேட்டபோது அவன், “ஆம், ஒரு பெண் எவற்றையெல்லாம் மறைத்து வைக்கிறாளோ அதுவே பெண். மற்றவை அவற்றின் பிரதிநிதிகள் அல்லது நிழல்கள்..” என்றான்.
அமுதாவிற்குள் இருந்த மிருகம் மெல்ல அசையத் தொடங்கியது.
“ஆக இன்றிலிருந்து நான் உடை அணிவதில்லை என்றானால் என்னில் எது பெண்” என்று அமுதா கேட்டபோது நட்ராஜ் நிலை தடுமாறினான். அந்தக் கேள்விக்கு அவனிடம் பதில் இல்லை. சமாளிப்பதற்காகக்கூட ஒரு பதிலும் சொல்ல முடியவில்லை.
தோல்வி.. தோல்வி.. அப்பட்டமான முழுமையான தோல்வி.. ‘நான் போகவேண்டும்’ என்று நட்ராஜ் நடக்க எத்தனிக்கும்போது அமுதா குறுக்கே கையை நீட்டினாள். நட்ராஜ் அவளை ஒருமாதிரிப் பார்த்தான். அமுதா முழுமையான மிருகமாகியிருந்தாள்.
“நீங்கள் பார்க்க வந்த பெண்ணைப் பார்த்துவிட்டுச் செல்லுங்கள்” என்று ஆங்காரமாகத் தன் ரவிக்கையைச் சரக்கென்று பிய்த்து தன் முலைகளைக் காட்டினாள். புலியின் வாயில் சிக்குண்ட மானின் மிரண்ட கண்களைப் போல நடராஜின் கண்கள் மிரண்டன. அவன் வெளிறிப்போனான். கைகளும் கால்களும் நடுங்கித் தள்ளின. ரயிலோடும் தண்டவாளம் போல உடலும் மனமும் அப்படி அதிர்ந்தன. அந்த முலைகள், முலைகள் போலில்லை. ஒரு மிருகத்தின் கொம்புகள் போலிருந்தன. நெஞ்சில் கொம்புகள் கொண்ட ஒரு வினோத மிருகம் போல் இருந்தாள் அமுதா. அவள் கண்களில் அன்னை பராசக்தி குடிகொண்டிருந்தாள். அந்த முலைகளைக் காணமுடியாமல் தளர்வுற்றுத் திரும்பினான்.
“ஒருவேளை, நான் உன்னைக் காண வந்திருந்தால் உனது விதிகளின்படி நீயும் உனது பிரதிநிதியையோ அல்லது உன்னுடைய நிழல்களையோ காட்டாமல் மெய்யான உன்னைக் காட்டி நீயும் என்னைப் போல நியாயமாய் நடந்துகொண்டிருப்பாய் அல்லவா..?” என்று அமுதா கேட்டபோது நட்ராஜின் தலையில் யாரோ சம்மட்டியால் ஓங்கி அறைந்தது போலிருந்தது.
நட்ராஜின் உடல் முழுவதும் எவற்றாலோ நனைந்திருந்தது. திரும்பி தீர்க்கமாய் அவளின் கண்களைப் பார்த்தான்; பார்த்துக் கொண்டேயிருந்தான்; அவன் கண்ணில் எழும்பியது நீராகவும் இருக்கலாம்; நதியாகவும் இருக்கலாம்; கடலாகவும் இருக்கலாம். அமுதாவின் கால்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து நமஸ்கரித்தான்.
அமுதா அசைவற்று நின்றிருந்தாள்.
பேருந்து தட்டாம்பட்டியை நெருங்கிக்கொண்டிருந்தது. வேலுச்சாமி சிரத்தையாக நட்ராஜிடம் கேட்டார், ” அவ சித்திக்குக் கல்யாணம் ஆயிருச்சா இல்லயான்னு விசாரிப்பமாடே..”
நட்ராஜின் காதுகளில் எதுவும் விழவில்லை. நட்ராஜின் உலகம் அவ்வளவு அமைதியாக இருந்தது. நட்ராஜின் பிரபஞ்சத்தில் இப்போதுதான் பெருவெடிப்பு நிகழ்ந்திருக்கிறது. அதில் உயிர்கள் உண்டாக இன்னும் சில காலம் ஆகும்.



