இணைய இதழ் 124சிறுகதைகள்

நிழல் சுமக்கும் நதி – சாந்தி மாரியப்பன்

சிறுகதை | வாசகசாலை

கார்த்திக்கின் மனதுக்குள் ஒரு பெரும் யுத்தம் நடந்துகொண்டிருந்தது. செம்பூர் ரயில் நிலையத்தின் பிளாட்பாரத்தில் அவன் நின்றிருந்தபோது, அந்த இடமே ஒரு மாபெரும் இயந்திரத்தின் இரைச்சல் மிகுந்த உதிரிப்பாகமாகத் தெரிந்தது. கன்னியாகுமரியின் எங்கோ ஒரு கோடியில், வாகனப்புகை அண்டாத ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்திருந்த அவனுக்கு இந்த நகரத்தின் பரபரப்பும் தூசியும் வாகனப் புகையும் ஓர் ஒவ்வாமையைத் தந்திருந்தது. அதிகாலையில் கேட்கும் குயிலோசையும், ஊரைச்சுற்றியிருக்கும் தென்னந்தோப்புகளும் அவனது நினைவுகளில் நிழலாடின. அவற்றையே நினைத்து நினைத்து ஏங்கினான்,; குடும்பச்சூழல் காரணமாக மும்பையில் கொண்டு வந்து தூக்கிப்போட்ட விதியைச் சபித்தான். அவியலும் எரிசேரியுமாகச் சாப்பிட்டுப் பழக்கப்பட்ட நாக்கு, மிசல் பாவ், வடா பாவ், ப்ரட் கட்லெட் எனப் பழக்கப்படாத மசாலாக்களால் சுவையுணரும் சக்தியை இழந்து கிடந்தது. என்றைக்காவது ரொம்பவும் ஆசை ஏற்பட்டால் வாஷியின் ரயில் நிலையத்திலிருந்து கூப்பிடு தொலைவிலிருந்த கேரளா ஹவுஸுக்குப் போய் மதியம் அவியல் பொரியலுடன் சத்யை உண்டு வருவான்.

வாரந்தோறும் ஊருக்குப் போன் பண்ணும்போது, “இன்னிக்கு என்ன சமையல்?” என அம்மாவிடம் கேட்டுக்கொள்வான். “புளிக்கறி வெச்சு அப்பளம் பொரிச்சேன் மக்கா” என்றால் “என்னை விட்டுட்டு சாப்பிட்டீங்க இல்லே? கொதி விழட்டும்” எனப் பரிகசிப்பான். என்றைக்காவது விசேஷத் தினங்களில் அவியல் என்றால் அவன் அந்தப்பக்கம் மௌனமாகி விடுவது இந்தப்பக்கம் அம்மாவின் நெஞ்சில் துக்கமாய் கட்டை போல் உறையும். “அவியல்ன்னா புள்ள பேயா திம்பானே” என அன்று முழுவதும் புலம்பி வீட்டிலிருக்கும் மற்றவர்களையும் சாப்பிடவிடாமல் ஆக்குவாள். ஊரின் ஏக்கம் மிகுந்து தளும்பிய ஒரு நாளில், “ஊருக்கு வந்துரலாம்ன்னு பாக்கேன்மா” என அவன் சொன்னபோது அவள், “வந்துரு மக்களே.. உள்ளதுபோல பாத்துக்கிடலாம்” எனச் சொன்னாலும் அதைச் சொல்வதற்கு முன் அவள் ஒரு நிமிடம் மௌனித்தது அவனுக்கு ஆயிரம் அர்த்தங்களைச் சொன்னது. வீட்டு நிலைமையை உத்தேசிக்கும்படி அவள் சொல்வதாகப்பட்டது.

குடும்பத்தின் முதல் பட்டதாரியாகச் சம்பாதிக்கத் தொடங்கும் எல்லாப் பிள்ளைகளுக்கும் இது ஒரு சாபக்கேடு எனப்பட்டது. பிடித்திருக்கிறதோ இல்லையோ.. கிடைத்த வேலையில் சேர வேண்டும்; எந்த ஊருக்கானாலும் சரி, எந்த நாடானாலும் சரி.. கேள்வி கேட்காமல் பெட்டியைக்கட்டிக்கொண்டு கிளம்பிப்போக வேண்டும். மாதந்தோறும் வரும் சம்பளத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அத்தனைக் கனவுகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். கொஞ்சம் வசதியுள்ள அல்லது பிள்ளைகளின் சொல் செல்லுபடியாகும் குடும்பத்தில் பிறந்திருந்தாலாவது ‘எனக்குப் பிடிக்காததை மனசு ஒப்பிச் செய்ய முடியாது’ என மறுத்துவிடலாம். இங்கே அதற்கும் வழியில்லாமல் இந்த மும்பை மாநகரில் வந்து விழுந்தாயிற்று. வாங்கும் சம்பளத்திற்கு நியாயமாய் கடனேயென்று வேலை பார்த்துக்கொண்டிருந்தபோதும், சீக்கிரமே பேப்பர்.. அதாவது ராஜினாமா போட்டுவிட வேண்டும் எனத் தினந்தோறும் தோன்றிக்கொண்டிருந்தது.

அவன் ஏறிய ஹார்பர் லைன் லோக்கல் ரயில், ஓர் இரும்புக் கரடியைப்போல உறுமிக்கொண்டு தண்டவாளங்களில் பாய்ந்தது. இன்றைக்குக் கூட்டம் கொஞ்சம் குறைவுதான். பெட்டியினுள்ளே நிற்குமளவுக்குச் சற்றுத் தாராளமாகவே இடமிருந்தது. வாசலின் அருகேயே கம்பியில் சாய்ந்து நின்ற கார்த்திக்கின் பார்வை வெளியே விரிந்த மும்பையின் புறநகர் நிலப்பரப்பின்மீது படிந்திருந்தது. அழுக்கு படிந்த குடிசைப் பகுதிகள், வானைத் தொடும் அடுக்குமாடிக் குடியிருப்புகள், பிளாஸ்டிக் குப்பைகள் நிறைந்த சதுப்பு நிலங்கள் என எல்லாமே அவனுக்கு ஒருவித ஒவ்வாமையைத் தந்தன. மும்பை வழக்கப்படி நெஞ்சுப் பக்கமாய்த் திருப்பி மாட்டிக்கொண்ட லேப்டாப் பேக் கனத்தது. இலக்கில்லாமல் வெளியே பார்த்துக்கொண்டிருந்தவன், குறுகுறுவெனத் துளைக்கும் பார்வையை உணர்ந்து பெட்டிக்குள் பார்வையைத் திருப்பினான். சட்டென்று புன்னகைத்து, “நமஸ்தே” என்றான். பதிலுக்கு “நமஸ்தே” என்றார் துக்காராம்.

 ஒரே ரயிலில் தினமும் பார்த்துக்கொள்வதால் பரிச்சயம். எப்போதாவது ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசிக்கொள்வதும் புன்னகையைப் பரிமாறிக்கொள்வதுமுண்டு. சில நாட்களில் லக்கேஜ் கம்பார்ட்மெண்டில் ஏறிவிடுவார். தொளதொளவென்ற வெள்ளை பைஜாமா, வெள்ளைச்சட்டை, தலையில் வெள்ளைவெளேரென்ற குல்லா, நெற்றியில் குங்குமப்பொட்டு இதுதான் துக்காராம். காலடியில் ஏழெட்டு துணிப்பைகள் ஒன்றோடொன்று கோர்த்து இணைக்கப்பட்டுக் கிடந்தன. அவற்றுக்குள் இலேசாகத் தெரிந்த விதவிதமான டிபன் பாக்ஸ்களும், பைகளில் வரையப்பட்டிருந்த வண்ணக்குறியீடுகளும் எண்களும் அவர் ஒரு தொழில்முறை டப்பாவாலா என்பதைச் சொல்லாமல் சொல்லின. வீடுகளிலிருந்து அவரவரின் அம்மாவோ மனைவியோ கொடுத்துவிடும் சூடான சாப்பாட்டை அலுவலகங்களில் குறித்த நேரத்தில் கொண்டு சேர்ப்பவர்கள் அவர்கள்.  

வண்டி வாஷி பாலத்தைக் கடக்கத் தொடங்கியது. கீழே ததும்பிக்கொண்டிருந்த அரபிக் கடலலைகளும் மேலே பறக்கும் கடற்பறவைகளும் ஒரு கணம் கார்த்திக்கின் கவனத்தைத் திருப்பின. அந்த முதியவர் அவனை உற்றுப் பார்த்தார். அந்தப் பார்வையில் ஒரு கருணையும், அதே சமயம் ஒரு பிடிப்பும் இருந்தது. அனுபவசாலியான அவரது பார்வை அவனை அளந்தது.

“என்ன தம்பி… யோசனை ரொம்ப பலமா இருக்கு?”

அவர் கேட்டது மராத்தியில் என்றாலும், அவரின் கண்களில் இருந்த கனிவு அவனுக்குப் புரிந்தது. ‘ப்ச்’ என்ற ஒலியோடு ஒன்றுமில்லை என்பதுபோல் தலையசைத்தான். அவர் அவனையே பார்த்துக்கொண்டிருந்தார். அசட்டுச் சிரிப்புடன் அவனுக்குத் தெரிந்த அரைகுறை ஹிந்தியில் பதில் சொன்னான். “ஒன்னுமில்லை சாச்சா, இந்த ஊரு எனக்குச் செட் ஆகலை.. இங்க இருக்கற வாழ்க்கைமுறை ரொம்பவே பரபரப்பா இருக்கு. நான் எங்க ஊருக்கே போயிடலாம்னு இருக்கேன்”

“ம்… நீ மும்பைக்கு வந்து எத்தனை வருஷங்களாகுது?”

“ஆறு மாசம்..”

“இவ்வளவுதானா?.. ஆறு மாசத்தில் இந்த ஊரைப்பற்றி என்ன புரிஞ்சுக்கிட்டே? இந்த ஊரு இருக்கே.. இதுக்கு நீ என்ன கொடுக்கறியோ அதைப் பத்து மடங்கா உனக்குத் திருப்பிக் கொடுக்கும். மும்பை உன்னைத் தூக்கி எறியாது தம்பி. நீ இந்த ஊரை நேசிச்சா, இந்த ஊர் உன்னைத் தன் குழந்தையா ஏத்துக்கும்” என்றவர் சற்று நேரம் வெளியே ஓடும் காட்சிகளில் லயித்துவிட்டுத் தொடர்ந்தார். “என் அனுபவத்துல சொல்றேன், பிழைப்புத்தேடி வர்றவங்களை, கடுமையா உழைக்கிறவங்களை இந்த மும்பாதேவி என்னிக்கும் கைவிட்டதில்லை. காலூன்றி நிற்க இடம் கிடைச்சாலும் போதும், அதிலும் ஒருத்தன் ஒத்தைக்கால்லயாவது நின்னு வியாபாரம் செஞ்சு சம்பாதிப்பான் பார்த்திருக்கியா?”

நிறையவே பார்த்திருக்கிறான் அவன். ரயிலுக்குள் வரும் சிறு வியாபாரிகளையும்கூட.

“ஆனாலும், இந்தப் பரபரப்பு.. இந்த வேகம்.. யாரும் யாரோடும் ஒட்டாத தன்மை.. என்னவோ எனக்கு பேசாம ஊருக்கே போய் உறவுகளோட இருந்து கூழோ கஞ்சியோ குடிச்சுட்டுக் கிடக்கலாம் போலிருக்கு” என்றான்.

பெரியவர் மெல்லச் சிரித்தார். அந்தச் சிரிப்பில் ஒரு முதிர்ச்சியும் பல ஆண்டுகால அனுபவமும் தெரிந்தது. “மும்பையில வேகம் இருக்கு தம்பி, ஆனா அந்த வேகத்துலதான் இந்த நகரத்தோட உயிர் இருக்கு. யாரோ போல் விலகி நடக்கற இதே மனிதர்கள்தான் மும்பைல ஒவ்வொரு அசம்பாவிதம் நடக்கும்போதும் உறவுகளைவிட நெருக்கமா ஒருத்தருக்கொருத்தர் துணையா நிற்பாங்க தெரியுமா?” என்றவர் அமைதியாகி இலக்கில்லாமல் வெளியே பார்த்தார். பின், “இதே மஹாராஷ்ட்ரால சாங்க்லிங்கற ஊர்லதான் பிறந்து வளர்ந்தேன். விவசாயம் பொய்ச்சுப்போய் பிழைக்க வழியில்லாம, நான் மும்பைல வந்து விழுந்தப்ப இந்த நகரம் என்னையும் ஏந்திக்கிட்டு உசிர் கொடுத்தது. ஒட்டுதல் இல்லாத மனிதர்களா இருந்திருந்தா நான் இங்கே பிழைச்சிருக்க முடிஞ்சுருக்குமா? ஆச்சு.. முப்பது வருஷம். எனக்குச் சோறு இந்த ஊர்லதான்னு முடிவாகிருச்சு” எனப் பெருமூச்செறிந்தார்.

விழிகள் விரியக் கேட்டுக்கொண்டிருந்த கார்த்திக் குறுக்கிட்டான். “உங்க வாழ்க்கை சுலபத்தில் நல்லா அமைஞ்சுட்டுது, எல்லோருக்கும் அப்படியிருக்குமா?” என்றான்.

பெரியவர் பகபகவெனச் சிரித்தார். “இல்லை தம்பி, இங்க ஒவ்வொரு நொடியும் போராட்டம்தான். நான் ஒரு ரயிலைத் தவறவிட்டாலும் அன்னிக்குச் சில உசிர்களைப் பட்டினி போட்ட பாவத்துக்கு ஆளாகிருவேன். நல்லவேளையா அந்த பாண்டுரங்கன் என்னை எப்பவும் காப்பாத்தறான். கொரோனா தாண்டவமாடி, லாக்டவுன் முடிஞ்சப்புறம் எங்க பிழைப்பு பழைய மாதிரி இல்லை தம்பி,. ஒரு நாளைக்கு நாப்பது அம்பது டப்பாக்கள் டெலிவரி கொடுத்த இடத்துல இப்ப பத்துப் பதினஞ்சு டப்பா ஆர்டர் கிடைச்சாலே அதிகம். இப்பத்தான் எல்லோரும் ஆன்லைன்லயே சாப்பாடு ஆர்டர் செஞ்சுக்கறாங்களே.”

ரயில் காற்றில் கலைந்த முடியை ஒதுக்கிவிட்டுக்கொண்டான். “அப்புறம் எப்படிச் சமாளிக்கறீங்க?”

“கொஞ்சம் பேர் செக்யூரிட்டி வேலைக்குப் போனோம், சிலர் கிடைச்ச வேலைகளைச் செஞ்சோம். கடனேன்னு செய்யாம கடமையைச் செஞ்சா சலிப்பு வராது” என்ற பெரியவர் கண் சிமிட்டினார். “நாங்க கூரியர் சர்வீஸும் செய்ய ஆரம்பிச்சுட்டோம். எங்ககிட்ட கொடுத்தா எந்த டாகுமெண்டையும் சரியான ஆள்கிட்ட சேர்த்துருவோம். வெள்ளைக்காரனே பாராட்டுன சிஸ்டமாக்கும் எங்களோடது”

“கேக்கறதுக்கு எல்லாம் நல்லாத்தான் இருக்கு” என்ற கார்த்திக் தொடர்ந்தான். “ஊரைவிட்டு வந்தப்புறம் ஒவ்வொரு நாளும் மனசுக்குள்ள போராடிக்கிட்டே இருக்கேன்”

ரயில் பேலாப்பூரைச் சமீபித்துக்கொண்டிருந்தது. “தம்பி, கஷ்டம் எல்லா இடத்துலயும் இருக்கும். நீ வெறுக்கற இந்தப் போராட்டம் உன்னை ஒரு மனுஷனா செதுக்கும். சவாலான வாழ்க்கை உன்னைப் பக்குவப்படுத்தும். போராட்டமே இல்லாத வாழ்க்கை, உப்பு இல்லாத சோறு மாதிரி. போராடி ஜெயிக்கிறதுதான் உனக்கு ஓர் அடையாளம் கொடுக்கும்,” என்றவர் கனிவுடன் தொடர்ந்தார்.

“ஊருக்குப் போனா மட்டும் சோறு சும்மா வந்துருமா? அங்கியும் உழைப்பேதானே? அந்த உழைப்பை இங்க போடு, நாலு காசு சம்பாதி. கூடப்பிறந்தவங்களுக்கும் உழைக்கக் கத்துக்கொடு. முடிஞ்சா அவங்களுக்கும் நல்ல வழி காட்டி முன்னேத்து. உன்னைப் பார்த்து மத்தவங்களும் கத்துக்கற மாதிரி இரு. வெறுங்கையோட மட்டும் போய் நிக்காதே, அவங்க பார்க்கற பார்வையில் குறுகிடுவே. புத்தியாப் பொழைச்சுக்கோ.. அப்றம் உன் இஷ்டம்”

பெரியவர் பேசப் பேச, கார்த்திக்கின் மனதில் இருந்த பாரம் மெல்லக் குறைந்தது. அவன் இதுவரை மும்பையைப் பார்த்த கோணம் விலகி வேறு கோணம் தெரிந்தது. வாசலருகே நின்றிருந்தவன் எட்டி வெளியே பார்த்தான். ப்ளாட்ஃபாரமும் அதில் அலைமோதி நின்றிருந்த ஜனத்திரளும் தெரிந்தன. இப்போது அந்த வேகம் அவனுக்குப் பயத்தைக் கொடுக்கவில்லை. மாறாக, அந்த வேகம்தான் இந்த நகரத்தின் இதயத்துடிப்பு என்பதை அவன் உணர்ந்தான்.

ரயில் பேலாப்பூர் ஸ்டேஷனை நெருங்கியது. கார்த்திக் தன் போனைப் பார்த்தான். அதில் இருந்த அந்த ராஜினாமா டிராஃப்ட்டை ஒரு நிமிடம் உற்று நோக்கினான். பின், ஒரு தீர்க்கமான முடிவோடு அதை அழித்தான். வண்டி நின்றதும் மனிதக் கூட்டம் ஓர் அருவியைப் போல உள்ளே நுழையத் தொடங்கியது. அந்த நெரிசலுக்குள் துக்காராம் ஒரு மீனைப் போல நீந்தி வெளியேறி மறைந்தார். வெண்முத்துப்போல் அவரது தொப்பி மட்டும் தெரிந்துகொண்டிருந்தது. கூட்டத்தைத் தள்ளிக்கொண்டு கார்த்திக் பிளாட்பாரத்தில் கால் வைத்தபோது, அவனது கால்களில் ஒரு புதிய உறுதி இருந்தது.

ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தபோது, வழக்கமாக எரிச்சலூட்டும் அந்த ஹார்ன் சத்தங்கள் இப்போது ஓர் இசையாகத் தெரிந்தன. பிளாட்பாரத்தில் ஓடும் மனிதர்கள் அவனுக்கு அந்நியர்களாகத் தெரியவில்லை; அவர்களும் அவனைப் போலவே ஏதோ ஒரு லட்சியத்தை நோக்கி ஓடும் சக பயணிகள் என்று புரிந்தது. அந்தப் பிரம்மாண்டமான மனிதக் கடலில் ஒரு துளியாகக் கலப்பதில் ஒரு நிம்மதியைக் கண்டான். மும்பை இப்போது அவனுக்கு அன்னியமாகத் தெரியவில்லை. இதுவும் என் ஊர்தான் என எண்ணிக்கொண்டான்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button