
குமார் இரண்டு வரிகள்தான் எழுதி இருந்தான்.
“அப்பா உடல்நிலை சரியில்லை, மருத்துவமனையில் சேர்த்திருக்கிறோம்.” குமார் என்னுடைய மாமா சுப்பிரமணியின் மகன். அவன் இப்போதெல்லாம் பேசுவது எழுதுவது எல்லாமே சுருக்கமாகத்தான். இளம் வயதில் அப்படி இல்லை, எங்களுடன் நன்றாகத்தான் பழகுவான்; நிறையப் பேசுவான்.
இரவு பதினொன்றுக்குக் குடும்ப வாட்சப் குழுமத்தில் போட்டிருந்தான். நான் வழக்கம்போல ஐந்து மணிக்கு அலாரம் இல்லாமலேயே எழுந்து, பச்சைத் தண்ணீரில் குளித்து கந்தர் சஷ்டி கவசம் சொல்லி, டிகாக்சன் போட்டு காபி கலந்து குடித்து, பார்க்கில் நடந்துவிட்டு ஃபோனை எடுத்து இப்போது காலை ஆறரை மணிக்குத்தான் செய்தியைப் பார்த்தேன்.
நடராஜன் என்ற பெயருடைய என்னை, ராசு என்று மணி மாமா அருமையாக அழைப்பார். அது ராசுக்கண்ணு என்றும் செல்லமாக நீளும். முன்பெல்லாம் வாரத்துக்கு இரண்டு மூன்று முறை அழைத்துப் பேசுவார். பெரிதாக ஒன்றும் இருக்காது. புதிதாகக் கொண்டு வந்து வைத்த அடுக்கு அரளி கொம்பு தளிர் விட்டிருக்கும்; பழைய ஷெர்லக்ஹோம்ஸ் கதையை இன்னொரு தடவை படித்து மகிழ்ந்திருப்பார்; உடனே என்னிடம் சொல்லியாக வேண்டும். நான் அலுவலக வேலையில் இருந்தாலும் இரண்டு நிமிடம் பேசுவேன். இப்போது நான் தெற்கு மாநிலங்களுக்குப் பிராந்திய விற்பனை மேலாளர் ஆன பிறகு, அவர் கூப்பிடும் போதெல்லாம் பேச முடிவதில்லை.
ஞாயிற்றுக்கிழமை அழைத்து, “ராசுக்கண்ணு, நான் முந்தா நாள் எதுக்கோ ஃபோன் செய்யணும்னு நினைச்சேன். சரி நீ வேலையில இருப்பன்னு செய்யல. இப்ப மறந்து போச்சு“ என்பார்.
“சாரி மாமா, நான் ஊரிலேயே இல்ல. மும்பயில ஒரு கான்ஃபரன்ஸ். நீங்க கூப்பிட்டு இருந்தாலும் பேசி இருக்க முடியாது”
“என்னவோப்பா, ஒரு நிமிஷம் உன்னோட குரலைக் கேட்டால் போதும்” என்று முடிப்பார்.
அப்பா என்னை நட்டு என்று கூப்பிடுவார். அது பெரும்பாலும் “அந்த நட்டு கேசு எங்க?”, “நட்டு எங்க, கழண்டு போயிடுச்சா?” என்று நல்ல மனநிலையில் நகைச்சுவை என்று அவர் நினைத்துக்கொள்வதாகவும், கோபம் வந்தால் விபரீதமாகவும் நீளும்.
குமார், குழுமத்தில் எதுவும் எழுதமாட்டான். பிறந்தநாள் வாழ்த்து, பொங்கல் தீபாவளி வாழ்த்து எதுவும் போட மாட்டான். அவனே இப்படிப் போட்டிருப்பதால், நிலைமை சரியில்லை என்று தோன்றியது.
அதற்குள் சித்தி, என்ன ஆயிற்று, டாக்டர் என்ன சொல்லுகிறார் என்று நிறையக் கேள்விகள் கேட்டிருந்தார். குமார் பதில் போடவில்லை. நான் அவனை அழைத்தபோது எடுக்கவில்லை. அரை மணி கழித்துத் திரும்ப அழைத்தான்.
“அப்பாவை இப்ப ஐசியுல சேத்துட்டோம்.”
“ஐயோ, என்ன ஆச்சு?”
“ஒரு வாரமா இருமல், கபம். நேத்து கொஞ்சம் மூச்சுவிடச் சிரமப் பட்டுக்கிட்டிருந்தாரு, டாக்டர்கிட்ட கலாதான் கூட்டிட்டுப் போய் இருந்தா. லங்ஸ் முழுக்க திரவம் சேர்ந்திருக்கு, வயசாச்சு இல்லயா, டாக்டர் எதுக்கும் நர்சிங் ஹோமில சேர்த்துடுங்க அப்படின்னாரு. “
“ஐசியுல சேர்க்கற மாதிரி ஆயிடுச்சா?”
“ஆமாம், அவருக்கு நிமோனியா… சந்தேகம்தான்னு டாக்டர் சொல்லிட்டாரு.“ என்றான்.
“ஐயய்யோ, நான் உடனே கிளம்பி வரட்டுமா?”
எனக்கு அலுவலகத்தில் முக்கியமான வேலைகள் இருந்தன.
“வந்து என்ன செய்யப் போற? ஐசியுல யாரையும் உள்ள விடமாட்டாங்களாம். அம்மாதான் அங்க வெளியில இருக்காங்க, நான் வேலைக்கு வந்துட்டேன். ஐ டி ரிடர்ன் எல்லாம் முடிக்கணும், நிறைய வேலை இருக்குது.“
“சரி நான் வர முடியுமான்னு பார்க்கறேன். டாக்டர் ஏதாவது சொன்னால், எனக்கு ஃபோன் செஞ்சு சொல்லிடு.“
“ம்” என்று வைத்துவிட்டான்.
நான் போவதா, வேண்டாமா என்று யோசித்தேன், என் மனைவி கலாவுடன் ஆலோசித்தேன்.
“உங்க மேல அவ்வளவு அன்பா இருக்காரு. போய் பார்த்துடுங்க. அப்புறம் பார்க்க முடியலைன்னு வருத்தப்படுவீங்க.“
“என்ன நீ? உளறாதே கலா.“ என்னுடைய குரல் உயர்ந்திருக்க வேண்டும்.
“உங்களுக்காகச் சொன்னேன், என் மேல பாயாதீங்க“ என்று சமையல் அறைக்குச் சென்றுவிட்டாள்.
வாசலுக்கு வந்து வானத்தைப் பார்த்தேன். முடிவு செய்துவிட்டேன். பெங்களூரிலிருந்து சரியான ட்ரெயின் இப்போது இல்லை. சதாப்தி போயிருக்கும். வந்தே பாரத் பிடிக்க முடியாது. காரில் எட்டு மணிக்குக் கிளம்பினால் மதியம் மூன்று மணிக்குள் சென்னைக்குப் போய்விடலாம். ஹோசூர் கிருஷ்ணகிரி வழியாகப் போகும் சாலையில் வேலை நடந்துகொண்டிருந்தது. வழியில் நிறுத்திச் சாப்பிட்டுவிட்டுப் போனாலும் ஆறு மணி நேரத்தில் போக முடியும். இன்றைக்கு என் ட்ரைவர் விடுப்பு எடுத்துக்கொள்வதாகச் சொல்லி இருந்தான். நானே ஓட்ட வேண்டும்.
கலாவிடம் முடிவைச் சொன்னேன். நான் அப்பவே சொன்னேன் என்று அவள் சொல்லவில்லை.
“இட்லி சுட்டு வெச்சுட்டேன். நல்லா சாப்பிட்டுட்டு கிளம்புங்க. வழியில் சாப்பாட்டுக்காக நிறுத்த வேண்டாம். அங்க என்ன நெலமையோ…. சாப்பிட முடியுமான்னு தெரியாது.”
சாப்பிடாமல் கார் கதவை அடித்துச் சாத்திக்கொண்டு கிளம்பினேன்.
ஹோசூர் முன்பாக டோல்கேட்டில் நீண்ட வரிசைகள். எனக்கு முன்பு ஒருவன் ஃபாஸ்ட் டாக் வேலை செய்யாமல் பணம் கொடுத்துக்கொண்டிருந்தான். என்னுடைய பென்ஸ் காரினால் ஒரு பயனும் இல்லை, ஓட்டை ரோடுகளிலும், வரிசை நிற்கும் டோல்கேட்டுகளையும் தாண்டி ஊர்ந்துதான் செல்ல முடியும்.
ஒரு மணி நேரத்தில் போய்விடும் ஹோசூர் தாண்டுவதற்கு ஒன்றரை மணி நேரம் ஆகிவிட்டது. காலையிலிருந்து பதற்றம், காபி மட்டும்தான் சாப்பிட்டிருந்தேன். பசிக்க ஆரம்பித்துவிட்டது. வீட்டிலேயே இட்லி சாப்பிட்டிருக்கலாம். கிருஷ்ணகிரிக்கு முன்பு வழக்கமாக நிறுத்தும் ஹோட்டலில் நிறுத்தினேன். நான் குழுமத்தில் வேறு செய்தி வந்திருக்கிறதா என்று பார்த்தேன், வரவில்லை.
“என்ன சார் வேணும்?” என்று ஒரு சர்வர் கேட்டான்.
அவன் முகத்தைப் பார்த்தால் எனக்குத் திடீரென்று சரித்திரத்தில் படித்த யுவான் சுவாங் நினைவுக்கு வந்தார். ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த சீன யாத்திரிகர். முகம் அதே மாதிரி இருந்தது. யுவான் சுவாங் என்றுதான் நினைக்கிறேன், அவருக்கு மீசை இல்லை,. இன்னொரு சீன யாத்திரிகரான பாஹியானுக்கு மீசை தாடி எல்லாம் உண்டு. பாடப் புத்தகத்தில் இருந்த படத்தில் அவர் முதுகில் பெரிய சுமை இருக்கும், புத்த மத நூல்களைச் சேகரித்துச் சுமந்தாராம். இவனும் முதுகில் மூட்டை இருந்த மாதிரி நடந்தான். வட கிழக்கு மாகாணத்தவனாக இருக்க வேண்டும். உச்சரிப்பு ஒரு மாதிரியாக இருந்தாலும் தமிழில் பேசினான். பொங்கலும் வடையும் கேட்டேன்.
அவன் எடுத்து வர உள்ளே சென்றான். எனக்கு மணி மாமா நினைவுதான் வந்தது. ஒருமுறை மாமா வந்திருந்தார். நான் படித்துக்கொண்டிருந்த சரித்திரப் புத்தகத்தை வாங்கி புரட்டிப் பார்த்தார். “என்ன ராசு, ஏழாவது பாடம் வரைக்கும்தான் நடத்தி இருக்காங்களா?“ என்றார். நான் ஆச்சரியப்பட்டு, “எப்படி மாமா கண்டுபிடிச்சீங்க?” என்றேன். மாமா சிரித்துக்கொண்டே “நீ அது வரைக்கும்தான் படத்துக்கு மீசை போட்டிருக்க!” என்றார். நான் புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன். உண்மைதான். கடைசியாக யுவான் சுவாங்கிற்கு மீசை வரைந்திருந்தேன்.
அதற்குள் அப்பா வந்து என்னுடைய புத்தகத்தைப் பிடுங்கிப் பார்த்தார்.
“கழுதை, ஒழுங்கா படிச்சு மார்க் வாங்கறதில்லை, இதுல படத்துக்கு மீசையா?” என்று கன்னத்தில் ஓங்கி ஓர் அறை விட்டார். மாமாதான் தடுத்து நிறுத்தினார். இல்லாவிட்டால் இன்னும் நிறைய விழுந்திருக்கும். அதற்குப் பிறகு அடுத்த பாடங்களில் இருந்த அப்பர், சம்பந்தர் முதல் காந்தி நேரு வரை யாருக்கும் என்னுடைய மீசை வாய்க்கவில்லை.
நல்ல நெய் மணத்தோடு முழு மிளகும் கறிவேப்பிலையும் மின்னும் பொங்கலும் மொறுமொறுப்பான வடையும் வந்தது. மறுபடியும் மணி மாமா நினைவுதான் வந்தது.
பதின்ம வயதில் தினமும் வீட்டில் சண்டை நடக்கும்.
“ஏற்கெனவே பீமன் மாதிரி கொழுத்துப் போயிருக்க. சாப்பாட்டைக் குறை, படிப்பு ஏறாது.“ என்று காலை உணவு சாப்பிடும்போது அப்பா ஆரம்பிப்பார்.
எட்டாம் வகுப்பில் இறுதித்தேர்வில் கணக்கில் தொண்ணூற்று எட்டு மதிப்பெண் வாங்கினேன். அதன் பிறகு, தினமும் ஒருமுறை “நீ எருமை மேய்க்கத்தான் லாயக்கு, இப்பவே கூழ் கஞ்சின்னு பழகிக்க.”
இது எல்லா வீடுகளிலும் அந்தக் காலத்தில் பேசப்பட்ட வசனம்தான். ஆனால் அப்பா வசவுடன் நிற்கவில்லை. ஒரு வாரத்துக்கு வீட்டில் மற்றவர்கள் எல்லாம் விதவிதமாகச் சாப்பிட, எனக்கு மட்டும் கேழ்வரகு கஞ்சி. சாப்பிடும்போது அம்மா அழுது அப்போதுதான் பார்த்தேன்.
அப்போதும் ஒரு நாள் மணி மாமா வந்திருந்தார்.
“வளரும் பையன் இப்ப சாப்பிடாட்டி எப்ப சாப்பிடப் போறான்?“ என்று அப்பாவிடம் வாதாடினார். அப்பா அம்மாவிடம் மணி மாமாதான் என்னைக் கெடுத்து உருப்படி இல்லாமல் ஆக்கிவிட்டதா கத்தினார்.
கிருஷ்ணகிரி தாண்டி சென்னை சாலையில் திரும்பினேன்.
அந்தத் திருப்பத்தில் ஒரு சிறுவன் சைக்கிளில் குறுக்கே வேகமாக வந்தான். என்னுடைய பென்ஸ் காரில் நல்ல ப்ரேக் இருப்பதால் வலுவாக அழுத்தி டயர் தேய நிறுத்தினேன். தலை கலைந்து, பதற்றத்துடன் அவனும் நிறுத்தினான். பற்கள் பளிச்சிடப் பயத்துடன் ஒரு பெரிய புன்னகை, ஒரு கணத்தில் வேகமாக அந்தப் பழைய சைக்கிளை மிதித்துக்கொண்டு எதிர்ப்பக்கம் சென்று மறைந்தான்.
நான் பெருமூச்சு விட்டுக் கிளம்பினேன். நான் சைக்கிள் வாங்கித் தரச் சொல்லி அப்பாவிடம் கேட்ட நாள் நினைவுக்கு வந்தது. அப்பா ஞாயிற்றுக்கிழமை மதியம் நன்றாகச் சாப்பிட்டுத் தூங்கி எழுந்த பின் கேட்டேன்.
“அப்பா எனக்குச் சைக்கிள் வேணும்.”
“எதுக்கு? ஸ்கூலுக்குப் போக டவுன் பஸ் அஞ்சு நிமிஷத்துக்கு ஒண்ணு வருதே“
“ஸ்கூல் போக மட்டும் இல்ல, வேற எங்கயாவது போகணும்னாலும்..”
“வேற எங்க போகணும்? படிக்கற பையனுக்கு வேற என்ன வேலை? பெல் பாட்டம் பாண்டும் பாலியெஸ்டர் ஷர்ட்டும் போட்டுக்கிட்டு குருவிக்கூடு மாதிரி தலைய வளர்த்துக்கிட்டு ஸ்டைலா ரோடோரத்துல நின்னுகிட்டு பொண்ணுங்கள சைட் அடிக்கணுமா?”
“ஏதோ லைப்ரரி, ஃப்ரண்ட்சை பார்க்கப் போவான். வாங்கித் தரலாமே“ என்று அம்மா இடையில் பேசினாள்.
“ நீ சும்மா இருடி, ஊர் சுத்தி கெட்டுப் போவான். வேகமா கண்ணு மண்ணு தெரியாம ஓட்டி ஆக்சிடெண்ட் ஆகி கை காலை ஒடச்சுப்பான். அய்யாவுக்கு என்ன வக்காலத்து.”
மறுபடியும் சைக்கிள் ஆசை மணி மாமா வீட்டுக்கு விடுமுறைக்குப் போனபோதுதான் வந்தது. குமார் பளபளக்கும் சிவப்பு நிறத்தில் சைக்கிள் வைத்திருந்தான். கூடவே பேட்டரி லைட். தினமும் அதை மாமாதான் துடைத்து வாரத்துக்கு ஒருமுறை எண்ணெய் போட்டு, காற்றடித்து தயார் செய்து வைப்பார். நான் மாமா வீட்டில்தான் கோடை விடுமுறையில் முழுதாகச் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டேன். உல்லாசமாக விசிலடித்துக்கொண்டு எதிர் காற்று முகத்தில் மோதச் சுதந்திரமாகச் சைக்கிள் விடுவது என்கிற தனி அனுபவம் கிடைத்த நாளை இன்றைக்கும் மறக்க முடியாது.
கிருஷ்ணகிரி தாண்டிய பிறகு சாலை காலியாகத்தான் இருந்தது.
சாலையின் பக்கத்திலிருந்த ஒரு பெட்டிக்கடையில் முன்பக்கத்தில் கயிற்றில் செய்தித்தாள்களும் மேலே வாழைப்பழக் குலைக்குப் பக்கத்தில் பத்திரிகைகள் தொங்கின. நிறையச் சோதிடம் மற்றும் ஆன்மீகப் பத்திரிகைகள். நான் பள்ளியில் இருந்த காலத்தில் வீட்டில் எந்தப் பத்திரிகையும் வாங்கமாட்டார்கள். அவற்றைப் படித்தால் நான் கெட்டுப் போய்விடுவேன் என்பது அப்பாவின் திடமான நம்பிக்கை. நான் சலூனுக்குப் போகும்போது முடி வெட்டிக்கொண்ட பிறகு ஓர் அரை மணியாவது இருந்து குமுதம், கல்கண்டு, கதிர் எல்லாம் படித்து விட்டுத்தான் வருவேன்.
“சலூன்ல நிறையக் கூட்டம்.“ என்ற கதை நீண்ட நாள் ஓடவில்லை. நான் சலூன் வாசலில் வளரும் கற்றாழை செடி மறைக்கும் இடத்தில்தான் பத்திரிகை படித்துக்கொண்டிருந்தேன். உள்ளே கூட்டம் இல்லை என்பதை ஒருநாள் அப்பா கண்ணாடி வழியாகப் பார்த்துவிட்டார்.
அவர் சலூன் கதவை ஒரு விரலால் நகர்த்தி “நடராஜ் வந்தானா?” என்று கேட்டார். நான் மாட்டிக்கொண்டேன். உள்ளே வந்து, கன்னத்தில் ஓர் அறை விட்டு, என் காதைப் பிடித்து இழுத்துக்கொண்டு போனார்.
அதன் பிறகு சலூனுக்குப் போகும் போதெல்லாம் வெளியே ஸ்கூட்டரில் காத்திருப்பார்.
இப்படியாக நான் வீட்டில் பாட்டி படிக்கும் சுந்தரக் காண்டம் தமிழ் வசனம், அய்யப்பன் மகிமை போன்ற புத்தகங்களைப் படித்து வந்தேன். இதற்கு நடுவில் பள்ளியில் ரமேஷ் என்று ஒரு நண்பன். எட்டாம் வகுப்பு படிக்கும்போது என்று நினைவு. அவன் நிறையப் படித்துவிட்டு மதிய இடைவேளையில் எங்களுக்குக் கதை சொல்லுவான். விக்கிரமாதித்தன் கதை கேட்கும்போது எனக்குத் தினமும் கனவில் பதுமைகள் வந்து பேசின.
அவன் அடுத்ததாக “ஆயிரத்தொரு இரவுகள்“ கதை ஆரம்பித்தான். அதுவரை அலிபாபா, அற்புத விளக்கு கதைகள் மட்டுமே தெரிந்திருந்த எனக்கு இன்னும் நிறைய, வேறு விதமான கதைகள் தெரிய வந்தன. அவனிடம் கெஞ்சி ஒரு நாள் ஆயிரத்தொரு இரவுகள் புத்தகத்தை வாங்கி வந்தேன். மொட்டை மாடியில் நாற்பது வாட்ஸ் பல்பின் வெளிச்சத்தில் தென்னை மரக் கீற்றுகள் அசைந்தாட நான் அரேபியப் பாலைவனத்திலும் அரண்மனைகளிலும் கடைத் தெருக்களிலும் உலாவினேன். அதையும் ஒரு நாள் அப்பா கண்டுபிடித்துவிட்டார். தினமும் இது என்ன மாடிக்குப் போய் படிக்கும் புதுப் பழக்கம் என்று சந்தேகம் வந்திருக்க வேண்டும். அப்பாவுக்கு அடுத்த நாள் புதிய பெல்ட் வாங்க வேண்டி இருந்ததற்கு இன்னும் கோபம்.
தமிழ் மீடியத்தில் படித்து, ஆங்கிலத்தில் பாடப் புத்தகம் தவிர எதுவும் படிக்காத நான் கல்லூரியில் சேர்ந்ததும் ஆங்கிலப் பேராசிரியரிடம் வசமாக மாட்டிக்கொண்டேன். முதல் வகுப்பிலேயே ஒரு கட்டுரை எழுதச் சொன்னார். நாங்கள் படித்திருந்த புத்தகம் பற்றி எழுத வேண்டும். நான் படித்திருந்தது தமிழில் பக்தி புத்தகங்களும் விக்கிரமாதித்தன் கதைகளும் அப்பா பறிப்பதற்கு முன் படித்த சுமார் நானூற்றுச் சொச்சம் அரேபிய இரவுகளும்தான். இவை எதுவும் ஆங்கிலத்தில் கட்டுரை எழுதச் சரிப்பட்டுவரும் என்று தோன்றவில்லை. துணைப் பாடமாகப் படித்த “த்ரீ மென் இன் எ போட்” என்ற ஒன்றுதான் அரைகுறையாக நினைவில் இருந்தது. அதையும் ஒரு பக்கத்துக்குக்கூட கோவையாக எழுதத் தெரியவில்லை. வகுப்பில் தடிமனான கண்ணாடி அணிந்திருந்த நீள மூக்கு பையன் ஒருவன் “அட்லாஸ் ஷ்ரக்கெட் நாவலில் வாழ்க்கைத் தத்துவம்” என்று ஏழு பக்கத்துக்கு எழுதிய கட்டுரைக்கு வகுப்பில் பேராசிரியரும் எல்லாப் பெண்களும் கை தட்டினார்கள்.
மணி மாமா அந்த வாரம் அழைத்தபோது “என்ன ராசு, குரலே சரி இல்லயே? காலேஜ் பிடிக்கலையா?” என்று கேட்டார்,
அடுத்த வாரம் வந்து எனக்கு ஃபேமஸ் ஃபைவ் புத்தகத்தையும் ஓர் ஆங்கில-தமிழ் அகராதியையும் கொடுத்தார். நான்கு நாட்களிலேயே படித்து முடித்துவிட்டேன் என்று தெரிந்தவுடன், அடுத்த புத்தகங்கள் வந்தன. அந்த வருடம் கோடை விடுமுறைக்கு சென்னை போனபோதுதான் குமார் என்ன படிக்கிறான் என்று கவனித்தேன். அவன் சிட்னி ஷெல்டன் என்று சில புத்தகங்கள் காண்பித்தான்.
கூடவே “நீ சின்னப் பையன். இதெல்லாம் உனக்கு வேண்டாம்” என்றான். அவன் என்னைவிட ஒரு வயது பெரியவன்.
அவன் இல்லாத போது எடுத்துப் பார்த்தேன். அந்தப் புத்தகங்களில் சில பக்கங்கள் அடிக்கடி படிக்கப்பட்டு, திறந்தால் தானாகத் தனித்து நின்றன. அந்தப் பக்கங்களை மட்டும் படித்தேன். ஆண்களும் பெண்களும் புதிய சொற்களும் புதிய களங்களும் விசித்திரமான உணர்ச்சிகளைக் கொடுத்தன. பெரும்பாலான புதிய சொற்கள் மாமா வாங்கிக் கொடுத்த அகராதியில் இல்லை. ஆனாலும் புரிந்தன.
காஞ்சிபுரம் அருகில் சிக்கிக்கொண்டேன். இன்னும் எத்தனை வருடங்கள் ஃப்ளை ஓவர் கட்டுவார்களோ தெரியவில்லை, பக்கவாட்டில் இருக்கும் சிறிய சாலையில் எதிர்ப் பக்கத்திலிருந்து ஒரு ட்ரக் வந்து போக்குவரத்து நின்றுவிட்டது.
நான் கல்லூரி படித்து முடித்து வேலைக்குச் சேர்ந்தபோது அப்பா தன்னைப் போலவே ஓர் அரசாங்க வேலைக்கு விண்ணப்பம் போட மிரட்டிக்கொண்டிருந்தார்.
மாமாதான் “ராசு ப்ரைவேட் கம்பெனியே போகட்டும், நம்ம காலம் மாதிரி கவர்ன்மென்ட் வேலைதான் பாதுகாப்புன்னு இருந்தால், மாதாந்திர தவணை கட்டி டீவி வாங்கிக்கொண்டிருக்க வேண்டியதுதான்” என்று அப்பாவுடன் வாதாடினார். நான் தனியார்த் துறையில் சேர்ந்து, வெளிநாடுகளில் வேலை செய்து இன்றைக்குப் பதவியில் இருப்பது மணி மாமாவினால்தான்.
ஒரு வண்டியும் நகரவில்லை. குமாரை அழைத்து எப்படி இருக்கிறார் என்று கேட்க நினைத்தேன். ஏதாவது செய்தி வந்திருக்கிறதா என்று வாட்ஸப்பில் பார்த்தால், ஒரு மணி நேரம் முன்பாகவே குமார் ஒரு வரி போட்டிருந்தான்.
மணி மாமா தவறிப் போயிருந்தார்.
தண்ணீர் எடுத்துக் குடித்தேன். கலாவை அழைத்தேன்.
“கலா, மணி மாமா போயிட்டாராம்.“ குரல் அடைத்துக்கொண்டது. அவள் என்ன சொன்னாள் என்றும் பதியவில்லை.
மறுபடியும் தண்ணீர் நிறையக் குடித்துவிட்டு குமாரை அழைத்தேன்.
“குமார், வந்துட்டே இருக்கேன். நீங்க வீட்டுக்கு வந்துட்டீங்களா?” உடல் என்ற சொல்லைச் சொல்ல முடியவில்லை.
“பாடியோட வீட்டுக்குத்தான் போயிட்டு இருக்கோம், ஒரு மணிக்கு க்ரிமேஷன் “
“சடங்கெல்லாம் செய்ய நேரம் ஆகுமே. வேற யாரும் பார்க்க வரலையா?” நான் போய்ச் சேருவதற்குள் எல்லாம் முடிந்துவிடும்.
“அவனுக்கு என்ன சடங்கு, ஏதோ அம்மாவுக்காக வீட்டுக்கு எடுத்துட்டு வரேன். இல்லாட்டி, பனிரெண்டு மணிக்கு ஒரு ஸ்லாட் கெடச்சுது, இப்பல்லாம் எலக்ட்ரிக்தான், அரை மணியில எல்லாம் முடிஞ்சிடும்.”
“குமார், என்ன இப்படி பேசற, மாமாவுக்கு…” என் குரல் உடைந்தது.
“எனக்கு நிறைய வேலை இருக்குது, இப்பவே ஆடிட்டர்கிட்ட அரை நாள் சொல்லிட்டு வந்திருக்கேன்”
குமார் ஒரு தணிக்கையாளருடைய அலுவலகத்தில் இருக்கிறான். அவன் பட்டப்படிப்புகூட முடிக்கவில்லை. முதல் வருடத்திலேயே விட்டுவிட்டான். அக்கவுண்ட்ஸ் பார்த்துக்கொண்டு இருப்பதாக எங்களிடம் சொல்லுவான். ஒருநாள் அவன் காபி கப்புகளைத் தட்டில் வைத்து மூடி எடுத்துச் சென்று, சிஏ இன்டர் முடித்த பாதி வயது பையன்களுக்குக் கொடுத்ததைப் பார்த்தாக என்னுடைய இன்னொரு மாமா மகன் கணேசன் சொன்னான்.
மாமாவுக்குச் சரியாகச் சடங்குகள்கூடச் செய்யாமல் அப்படி என்ன வேலை?
“குமார், நான் வந்திடுவேன். மாமாவுக்கு எல்லாச் சடங்கும் முறையா செஞ்சிடலாம். போனவருக்கும் நமக்கும் புண்ணியம்“
குமார் இப்போதெல்லாம் அதிகம் பேசமாட்டான். ஆனால் அன்று ஆவேசமாகப் பேசினான். சந்தேகம் இல்லாமல் ஆங்கிலம் வளமான மொழி, அதுவும் கெட்ட வார்த்தைகளுக்கு. அவன் அவ்வளவு சரளமாக உபயோகிப்பான் என்று நான் எதிர்பார்க்கவில்லை. தமிழில் திட்டினால் கூச்சமாக இருந்திருக்கும். வெகு நேரத்துக்குப் பேசி ஆற்றாமல் தொண்டை கம்மி முடித்தான்.
எனக்கு மனம் வெறுமையாக இருந்தது.
இனி நான் சென்னைக்குப் போக வேண்டியதில்லை. வண்டியைத் திருப்ப முடியுமா என்று பார்த்தேன். கண்ணுக்கு எட்டிய வரை திருப்பம் இல்லை. சோர்வாகக் காரை ஓட்டினேன்.
குமார் ஒரு நல்ல மனிதரை இப்படி வன்மத்துடன் திட்டி இருக்க வேண்டாம் என்று தோன்றியது.
திடீரென்று ஒரு சந்தேகம் வந்தது. குமாரின் பள்ளி நாள் சரித்திரப் பாடப்புத்தகம் இருந்தால் எடுத்துப் பார்க்க வேண்டும். அவன் யுவான் சுவாங்குக்கு மட்டும் இல்லை, காந்தி, நேரு, அப்பர், ஏன் ஆண்டாளுக்கும்கூட மீசையும் தாடியும் கூடவே இன்னும் சில உறுப்புகளையும் வரைந்திருப்பான் என்று தோன்றியது.
வண்டியைத் திருப்பினேன்.



