
வின்கா ரோசியாவிடம் பேசி குறைந்தது பத்து வருடங்களிருக்கும். இதுநாள் வரையில் அவள் எப்படியிருக்கிறாள் – என்ன செய்கிறாள் என எதற்காகவும் பேசாமல் தற்போது பணத்தேவைக்காக அழைப்பது சரவணனுக்கே அசிங்கமாகவிருந்தது. அவளிடம் கேட்டுப்பார்க்கச் சொல்லி அவனது நண்பன் மனோகர் அவளது எண்ணைக் கொடுத்தான். அவளுக்கு போன் செய்து காதில் வைத்தவன் மனோவுக்குக் கேட்காதபடி சற்று தள்ளி மருத்துவமனை பார்க்கிங் அருகில் சென்று நின்றான். மூஞ்சியில் அடித்தாற்போல் வின்கா ரோசியா பேசிவிட்டால் என்ன செய்வது என யோசிக்கும்போதே எதிர்முனையில் ‘ஹலோ’ எனக் குரல் கேட்டது.
வின்கா ரோசியாதான். அவளது குரல் இன்னும் அவனுக்கு நினைவிருக்கிறது.
“ஹலோ யாரு!”
உண்மையில் சரவணன் யார்தான் அவளுக்கு? அவளிடம் போய் எப்படிப் பணம் கேட்பது?
“நான் சரவணன். ரூபனோட ஃப்ரண்ட்”. தயக்கமாய் சொன்னான்.
“சரவணா.. வாட் எ சர்ப்ரைஸ். எப்படியிருக்க?” ஆச்சரியத்துடன் பேசினாள்.
“ம்ம் நல்லாயிருக்கேன்” மருத்துவமனையில் ஆப்ரசேனுக்கு அப்பா இருப்பதை மறந்துவிட்டு வழக்கமாகச் சொல்வதைப்போலச் சொல்லிவிட்டு, தன் தவற்றை உணர்ந்து தன் தலையில் அடித்துக்கொண்டான். “நீ எப்படியிருக்க?” எனச் சம்பிரதாயமாய்க் கேட்டான்.
“நல்லாயிருக்கேன். என்ன அதிசயமா கால் பண்ணியிருக்க? மேரேஜ் ஃபிக்ஸ் ஆயிருச்சா!” சந்தோசமாகக் கேட்டாள்.
அது அவனுக்கு மேலும் தர்மசங்கடத்தை உண்டாக்கியது.
“அதெல்லாம் இல்லை. ஒரு…. ஒரு லட்சம் பணம் வேணும். உங்கிட்ட இருந்தா கொடுக்கறியா. இல்லைனா பரவால்ல, நான் வேற எங்கேயாவது அரேன்ஞ் பண்ணிக்கிறேன்.” எனச் சொல்லும்போதே அவனுடைய கண்கள் கலங்கிவிட்டன.
எதிர்புறத்தில் மௌனம்…
சமயங்களில் மெளனம் கொடுக்கும் ரணத்தைக் கொடுஞ்சொற்கள் கூடத் தருவதில்லை. அந்த மௌனம் கண்ணீரை அழுகையாக மாற்றியது.
”இல்ல. முடியலைன்னா பரவாயில்லை. நான் வேற பக்கம்…..” இலேசான விம்மலுடன் சொல்லும்போதே, ”இப்ப உடனே வேணுமா?” எனக் கேட்டாள்.
”ம்ம் ஆமா. வந்து அப்பாவுக்கு…”
அவள் காதில் வாங்கவேயில்லை. ”எங்க இருக்க?”
”திண்டுக்கல்லதான்…”
”சரி, நான் ஒரு டென் மினிட்ஸ்ல ஆர்விஎஸ் வொர்க்கிங் வுமன் ஹாஸ்டல் போயிருவேன். நீ வந்துரு! ஹாஸ்டல் தெரியும்ல?”
”ம்ம் தெரியும்..”
”ஓகே. வந்துட்டு கால் பண்ணு.”
“ஹேய், ரொம்ப தாங்க்ஸ். இதுக்கு நான் எப்பிடி…!” அவன் சொல்லி முடிப்பதற்குள்ளே இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.
ஒரு கணம் என்ன நடந்தது என அவனால் நம்பவே முடியவில்லை. எந்த நம்பிக்கையில் அவனுக்குப் பணம் தர ஒப்புக்கொண்டாள் என நினைத்துக்கொண்டே பைக்கை நோக்கி வரும்போது “என்னடா, என்ன சொன்னா!” என மனோகர் கேட்க, “பத்து நிமிஷத்துல வந்து வாங்கிக்க சொல்லிட்டா டா” என்றான்.
“நான்தான் சொன்னேன்ல! அவகிட்ட கேட்டா கிடைக்கும்னு. வாங்கி ஆப்ரேசனுக்கு கட்டிரு. எனக்குத் தர வேண்டியத பொறுமையா கொடு, பிரச்சனையில்லை. ஆனா அவளுக்கு மட்டும் ஒரு ஆறுமாசத்துக்குள்ள செட்டில் பண்ணிடுடா. நல்ல பொண்ணுடா”
“ஆமாடா! ஆனா அவ எந்த நம்பிக்கைல எனக்கு தராடா அவ தருவானு நீயும் எந்த நம்பிக்கைல சொன்ன?”
“போனவாரம் ஒரு ஃபங்சன்ல அவளைப் பாத்தேன்டா! அப்ப உன்னைப் பத்தி கேட்டா, நல்லா இருக்கியான்னு!” மனோகர் சிரித்தபடி சொன்னான்.
“என்னையப் பத்தி கேட்டாளா?” சரவணன் ஆச்சரியம் பொங்கக் கேட்டான்.
“ஆமாடா! எல்லாரப் பற்றியும் பேசுனோம். ரூபனைப் பற்றியும்தான். ரூபன்கூட நீ பேசறதில்லனு சொன்னேன். பாவம்னு உனக்காக ஃபீல் பண்ணுனா. அடிக்கடி உன்கூட பேச சொன்னாடா. சிரிச்சிட்டு, ‘நாங்க வாரத்துக்கு ஒரு தடவையாவது பேசிடுவோம். சென்னையிலருந்து சரவணன் ஊருக்கு வந்தா நாங்க டெய்லி மீட் பண்ணிக்குவோம்’னு சொன்னேன். சரிடா! நீ போய் பணத்த வாங்கிட்டு வா.” என மனோகர் சொல்லிக்கொண்டிருந்தாலும், “உனக்காக ஃபீல் பண்ணுனா” என்கிற வார்த்தைக்குப் பிறகு அவன் சொன்னது எதுவும் சரவணன் காதில் விழவில்லை.
****
சரவணன் வண்டியை எடுத்துக்கொண்டு வின்கா ரோசியாவின் ஹாஸ்டலை நோக்கி போகும்போதே வின்கா ரோசியாவின் நினைவுகள் வந்தன. கூடவே ரூபனுடையதும். ஏனெனில் அவளைச் சந்தித்தற்கும் அதன்பிறகு சந்திக்காமலே போனதற்கும் காரணம் ரூபன்தான்.
ரூபன், சரவணனின் பெரியப்பா கலியமூர்த்தி குடியிருந்த ஹவுஸ் ஓனரின் பையன். ரூபனின் குடும்பம் கீழ்த்தளத்தில் தங்கியிருந்து, மேல்தளத்தை சரவணன் பெரியப்பா கலியமூர்த்திக்கு வாடகைக்கு விட்டிருந்தனர். சரவணனின் பெரியப்பாவிற்கும் பெரியம்மாவிற்கும் குழந்தை இல்லாமல்போக – குழந்தையைத் தத்தெடுக்க முடிவு செய்து – யாரோ ஒரு குழந்தையைத் தத்தெடுப்பதற்குப் பதிலாகத் தன் தம்பி மகன்களில் ஒருவனையே தத்தெடுக்கலாம் – என முடிவுக்கு வந்தனர். சரவணனின் அம்மா முதலில் ஒப்புக்கொள்ளவில்லையென்றாலும் பின்பு தன் கணவன் கெஞ்சிக்கேட்டதற்காக ஒப்புக்கொண்டாள். இளையவன் ரகுவிற்கு அப்போது ஐந்து வயது. பெரியவன் சரவணனுக்கு ஏழு வயது. சின்னவனை அவர்களுக்குத் தத்துக் கொடுத்துவிடலாம் என முடிவுசெய்து ஒரு வாரம் பெரியப்பாவின் வீட்டிலேயே தங்கி அவனைப் பழக்கிவிட்டு வரலாம் என சரவணனது பெரியப்பா வீட்டில் தங்கினர். ஹவுஸ் ஓனரின் மகனான ரூபனிடமும் ரகுவைப் பாசமாய் பார்த்துக்கொள்ளச் சொல்லச் சொல்லி விளையாட அழைத்துச் சென்றனர். அந்த ஒரு வாரமும் ரூபன், சரவணன், ரகு மூவரும் ஒன்றாகவே விளையாடினர். ரூபனுக்கும் சரவணனுக்கும் ஒரு வயது வித்தியாசமே என்பதும்கூட அவர்கள் நண்பர்களாய் ஆனதற்குக் காரணமாக இருக்கலாம்.
ஒரு வாரம் முடிந்து ரகுவை விட்டுவிட்டுக் கிளம்ப முடிவுசெய்தபோது ரகு தன் அம்மா, அப்பாவுடனே செல்வதாய் கூறி அழ, ரகுவைக் கூட்டிக்கொண்டு போகும்படி அவனது பெரியப்பா, பெரியம்மாவே சொல்லிவிட அவனது பெரியப்பாவும் பெரியம்மாவும் சோகமாக இருப்பதைப் பார்த்த சரவணன், அவர்களுக்காக அவன் அங்கு இருப்பதாய் கூறினான். முதல் குழந்தையைத் தர அவனது அம்மாவிற்குத் துளியும் விருப்பமில்லை என்றாலும் அவர்கள் மேல் இரக்கப்பட்டு பெரியவன் சரவணனை அவர்களிடமே கொடுத்துவிட்டுப் போனார். எல்லாக் கோடை விடுமுறைக்கும் சரவணன் அவனது வீட்டிற்குப் போய்விடுவான். அந்த ஒருவாரம் அவனது வீட்டில் அவன் அம்மா அவனுக்கு மட்டுமே பார்த்துப் பார்த்துச் செய்வார்கள். அதனாலே அங்குச் செல்வதை ஒரு கட்டத்திற்கு மேல் சரவணன் குறைத்துக்கொண்டான். பெரியப்பா வீட்டிலேயே விடுமுறை நாட்களிலும் தங்கினான்.
தன் அப்பா, அம்மா தன்னைப் பெரியப்பா வீட்டில் விட்டுச் சென்ற அன்று, ரூபனிடம் ஓடிவந்த சரவணன், “தம்பி இங்க இருக்கமாட்டேனு சொல்லிட்டான். பெரியப்பா பெரியம்மாவ பாக்கப் பாவமா இருந்தது. அதுவுமில்லாம நீயும் இருக்கியா! அதான் நான் தம்பிக்குப் பதிலா இங்கே இருக்கேன்னு சொல்லிட்டேன்” என்றான்.
தனக்காக ஒருவன் தன் அப்பா அம்மாவையே விட்டு வந்திருக்கிறான் என்பதால் ரூபனுக்கு சரவணன் மேல் அளவிலா நேசம் உண்டானது.
ரூபன் சரவணனை தன் சொந்தத் தம்பிபோல கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்டான். ரூபன் படிக்கும் பள்ளியிலே சரவணன் சேர்ந்தான். ரூபனின் நண்பர்கள் அனைவரும் சரவணனுக்கும் நண்பர்கள் ஆனார்கள். சரவணனுக்கு அவனது வகுப்பில் நண்பர்களே கிடையாது. எப்போதும் ரூபனின் வகுப்பிலே இருப்பான். ரூபன் பத்தாவது முடித்து பதினொன்றாவது வேறு பள்ளிக்குப் போனபோது அந்த ஒரு வருடம் சரவணன் கஷ்டப்பட்டான். அப்போதுதான் ஒன்றாவதிலிருந்து தன் வகுப்பில் படிக்கும் மனோவுடன் பேச ஆரம்பித்து நட்பானான். பதினொன்றாம் வகுப்பிற்கு மீண்டும் ரூபன் போன பள்ளிக்கே சென்றுவிட்டான். மனோவும் அதே பள்ளிக்கு வந்தான். அங்கு வழக்கம்போல ரூபனின் எல்லா நண்பர்களும் இவனுக்கும் நண்பர்களானார்கள். அங்கு இவனோடு பதினொன்றாம் வகுப்பில் படித்தவள்தான் இந்த வின்கா ரோசியா என்கிற நித்ய கல்யாணி.
நித்ய கல்யாணி மலரின் அறிவியல் பெயர் வின்கா ரோசியா. சரவணன் அவளுக்கு அதைப் பட்டப்பெயராக வைத்தான். அந்தப் பெயர் வைத்ததால் நித்ய கல்யாணி சரவணனிடம் சண்டை போட்டாள். சரவணனுக்கு ஆதரவாக ரூபன் வந்து, ரூபனுக்கு ஆதரவாக அவன் நண்பர்கள் அருணா, சரத், கெளதம் வந்து வின்கா ரோசியா பெயரைப் பன்னிரண்டாம் வகுப்புக்கும் கொண்டு சென்றனர். இப்படிச் சண்டையில் ஆரம்பித்த ரூபன் – வின்கா ரோசியா உறவு காதலில் நின்றது. சரவணன், வின்கா ரோசியா, மனோ, ரூபன், அவனது பன்னிரண்டாம் வகுப்பு நண்பர்கள் அருணா, சரத், கெளதம் அனைவரும் ஒரே குழுவானார்கள். அப்பொழுதெல்லாம் பத்து, பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத் தேர்வு என்பதால் பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் சற்று ஆசுவாசமாக இருப்பார்கள். ரூபன், அருணா, சரத், கெளதம் பன்னிரண்டாம் வகுப்பு என்பதால் அவர்களுடன் செலவிடும் நேரமானது மிகவும் குறைவாக இருந்தது.
ஒருநாள் இரவு வின்கா ரோசியா சரவணனுக்கு போன் செய்தாள். தன்னுடைய தோழி ஒருத்தியின் காதலன் அவளை ஏமாற்றிவிட்டு வேறு பெண்ணைக் காதலிப்பதாய் கூறி அவனை என்ன செய்யலாம் எனக் கேட்டாள்.
“அப்படி ஏமாத்துறவன சும்மா வுடக்கூடாது. எல்லாருக்கும் தெரியுற மாதிரி நாக்க புடுங்குற மாதிரி அவன கேட்டுறணும்”
“நீ சொன்ன மாதிரியே பண்ணிடலாமா?” என முதலில் சந்தேகத் தொனியில் கேட்டாள்.
“பண்ணிடலாம்.” எனச் சாதாரணமாகச் சொன்னான்.
“உண்மையாலுமே பண்ணிடலாமா!” எனச் சற்று தழுதழுத்த குரலில் கேட்டாள்.
“ஏய்! நீ ரூபன் அருணாவயா சொல்ற?!” சரவணன் அதிர்ச்சியாய் கேட்டான்.
“ஏன் தெரியாதா உனக்கு?” என அழ ஆரம்பித்தாள்.
“ஏய் ச்சீ அசிங்கமா பேசாத! அழறத நிப்பாட்டு முதல்ல! ரூபன் அப்படியெல்லாம் பண்ணமாட்டான். என்ன நினைச்சிட்டு இருக்க நீ அவங்களப் பத்தி?” அவங்க ரெண்டு பேரும் ஒரே க்ளாஸ். நீ வரதுக்கு முன்னாடியே ஃப்ரண்ட்ஸ். அவங்களப் போயி…
“நான் உனக்கு ஒன்னு அனுப்பறேன் அதை கேளு” என ரூபனுடன் வின்கா ரோசியா பேசிய போன்காலின் ஆடியோவை அனுப்பினாள்.
அதில் ரூபனுக்கு அருணா முத்தம் கொடுத்ததை வின்கா ரோசியா இன்று நேரில் பார்த்ததாய் பேச, முதலில் இல்லை என மறுத்தவன், பிறகு அவனும் அருணாவும் காதலிப்பதை ஒத்துக்கொண்டான். வின்கா ரோசியா வருவதற்கு முன்பே அருணாவைப் பிடித்திருந்ததாகவும் அருணா அப்போது மறுத்து நண்பர்களாகவே இருப்போம் எனச் சொல்லிவிட்டதாகவும்- வின்கா ரோசியாவைக் காதலிக்கத் துவங்கிய கொஞ்ச நாளிலே அருணா ரூபனைப் பிடித்திருப்பதாகக் கூறிவிட என்ன செய்வது எனத் தெரியாமல் இருந்ததாகவும், இன்று அவன் யாருமில்லாத நேரத்தில் அருணா முத்தம் கொடுத்ததாகவும் அதை அவனே எதிர்பார்க்கவில்லையென்றும் கூறினான். உன்கிட்ட இதை எப்பிடி சொல்றதுனு தெரியாம நான் இருந்தேன் – உனக்காகத்தான் நான் அவளை இவ்ளோ நாளா அவாய்ட் பண்ணேன். ஆனால் எனக்கு அருணாவைத்தான் பிடிச்சிருக்கு – நம்ம ப்ரேக்கப் பண்ணிக்கலாமா கல்யாணி- சரவணனுக்கு தெரிஞ்சா எதாவது சொல்லுவான் – இதைப் பற்றி அவன்கிட்ட சொல்ல வேண்டாம் – அவன் கேட்டா ப்ளஸ் டூ-னால அவன டிஸ்டர்ப் பண்ணாம இருக்கேன்னு சொல்லிடலாமா?” எனச் சொல்ல, கோபமான கல்யாணி, “இப்ப நான் பாத்ததுனால ப்ரேக்-அப் பண்ற! நான் பாத்துருக்காட்டி எதுவுமே நடக்காத மாதிரி இருந்துருப்பில?” என அவள் கேட்க, ரூபன் பேசவில்லை.
அதைக் கேட்டதும் சரவணன் உடனே ரூபனிடம் சென்று சண்டை போட்டு, “இனி ஜென்மத்துக்கும் என் மூஞ்சியில முழிக்காதே” எனச் சொல்லிவிட்டுப் போய்விட்டான்.
அடுத்த நாள் பள்ளிக்கு ரூபனுடன் ஒன்றாகச் சைக்கிளில் செல்லாமல் சரவணன் தனியாகவே சென்றான். ரூபனால் சரவணன் பேசாமல் இருப்பதைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. பேக்கைக்கூட அவன் வகுப்பில் கழற்றி வைக்காமல் நேராக சரவணன் வகுப்பிற்கே வந்தான். சரவணன் வகுப்பில் அமர்ந்திருந்தான். பத்து மாணவர்கள்தான் வந்திருந்தனர். நேராக வந்தவன் சரவணன் காலில் விழுந்து அழ ஆரம்பித்தான்.
“டேய் தயவுசெஞ்சு பேசாம இருக்காதடா! என்னடா, நான் வின்கா ரோசியாட்ட மன்னிப்பு கேக்கணுமா? இல்ல அருணாவ ப்ரேக்கப் பண்ணனுமா? சொல்லுடா! நீ என்ன சொன்னாலும் செய்றேன். தயவுசெஞ்சு பேசாம இருக்காதாடா!” சரவணன் விலக்கிவிட முயல, ரூபன் விடாமல் அவன் காலை பிடித்துக்கொண்டிருந்தான். மற்ற வகுப்பினரும் சுற்றி வந்து நின்று அதை வேடிக்கை பார்த்தனர்.
“ரூபன் எல்லாரும் பாக்கறாங்க. இப்படிப் பண்ணாத. உனக்கு என்ன பிடிச்சிருக்கோ அதைப் பண்ணு. நான் யாரு இதைச் சொல்ல!” எனச் சொல்லி அவனை விலக்கிவிட்டு வேகமாக அங்கிருந்து வெளியேறும்போது வின்கா ரோசியா உள்ளே நுழைந்தாள். சரவணன் அமரும் இடத்தில் அப்படியே முழந்தாளிட்டபடி ரூபன் அழுதுகொண்டிருந்தான். ஒரு மாணவி வேகமாக வந்து அவளிடம் நடந்ததை விவரித்து, ரூபன் போனதும் வகுப்பிற்குள் வரச் சொன்னாள்.
தலையைக் குனிந்தபடி அழுதுகொண்டிருந்தவன் அங்கே வின்கா ரோசியா நின்றிருப்பதைப் பார்த்ததும் அழுகையைத் துடைத்தபடி வேகமாக அவளருகில் வந்து, “என்னை உனக்கு நாலு மாசமா தெரியுமாடி? உன்னை விட்டுவிட்டுப் போனேன். தப்புதான், ஒத்துக்கறேன். அவன எனக்கு விவரம் தெரியாத வயசுலருந்து தெரியும்டி. அவன் எனக்காக அவங்க அப்பா அம்மாவையே விட்டுட்டு வந்தான்டி! அவன எங்கூட பேச விடாம பண்ணிட்டல! உன்ன விட்டுப் போனதற்குப் பெரிய தண்டனையா கொடுத்துட்டல?” என மீண்டும் அழத் தொடங்கினான்.
“எல்லாரும் பாக்கறாங்க ரூபன்! தயவுசெஞ்சு அழாத!” என அவள் கெஞ்சிக் கேட்க, “நீதானடி எல்லார் முன்னாடி நான் பண்ணதுக்கு அசிங்கப்பட்டாதான் நிம்மதியா இருக்கும்னு சொன்ன! எல்லாரும் கேட்டுக்கங்க. இவ இருக்கும்போதே நான் அருணாவ லவ் பண்ணேன். தப்புதான். நான் அருணாகூட பேசுறதையே விட்டுறேன். உன்னையும் டிஸ்டர்ப் பண்ணல. போதுமா? எனக்கு உங்க ரெண்டு பேர்விட அவன்தான்டி முக்கியம். அவன் ஃப்ரண்ட்ஷிப்ப கெடுத்துட்டீயேடீ! நீ நல்லாவே இருக்கமாட்டடி!” எனச் சொல்லிவிட்டு அவன் வகுப்பிற்குச் சென்றுவிட்டான்.
ரூபன் அருணாவுடன் ப்ரேக்-அப் செய்துவிட்டான் என அவனது வகுப்பில் இருந்தவர்கள் சொன்னார்கள். சரவணன் அவனிடம் பேசாமலே இரண்டு நாள்கள் இருக்க அவனிடம் மன்னிப்பு கேட்டபடி ரூபனும் சுற்றிக்கொண்டிருந்தான். நித்ய கல்யாணிக்குச் சரவணனும் ரூபனும் தன்னால் பிரிந்தது குற்றவுணர்ச்சியை உண்டாக்கியது. அதனால் சரவணனிடம் சென்று சமாதானமாகப் போகும்படி சொன்னாள்.
“சரவணா! நீங்க ரெண்டு பேரும் என்னால பேசாம இருக்கறது எனக்கு ரொம்ப குற்றவுணர்ச்சியா இருக்குது. நான் இதைப் பத்தி உன்கிட்ட சொல்லாம இருந்துருந்தா நீங்க ஒன்னா இருந்துருப்பிங்கள்ள? உங்க நிம்மதியையும் நான் கெடுத்துட்டேன்! நீ பழையபடி அவன்கிட்ட பேசு சரவணா! ப்ளீஸ்!”
“ஏய்! இது உனக்காக ஒன்னும் பண்ணல! ரூபன் இப்படி பண்ணுவான்னு நான் நினைச்சுகூட பாக்கல. ரூபன் அருணாவுக்கு ப்ரோபோஸ் பண்ணதுகூட எனக்குத் தெரியாது. நீ சொன்னப்ப அவன் அப்படி இருக்கமாட்டான்னு அவன் மேல இருக்க நம்பிக்கைலதான உன்கிட்ட சண்டை போட்டேன். அது உண்மைனா எனக்கு அவனைப் பத்தி ஒன்னுமே தெரியலனுதான அர்த்தம். நம்ம ரூபன் இத பண்ணிருக்கமாட்டான்ற நம்பிக்கை மட்டுமில்ல, அவன் நம்ம ரூபன்தானானே தோண ஆரம்பிச்சிருச்சு”
“இல்ல சரவணா, என்னால நீங்க பிரிய வேணாம். ஏன்னா அவனுக்காவது வேற ஃப்ரண்ட்ஸ் இருக்காங்க. உனக்கிருக்க ஒரே ஃப்ரண்ட் அவந்தான். தப்பே பண்ணாத உன் ஃப்ரண்ட்ஷிப் என்னால கெட்டுப்போனதா இருக்க வேணாம். அதுவுமில்லாம அவனும் இப்ப அருணாகூட பேசறதில்லையாம். அவனும் என்னால தனியா இருக்கான். அதுவே என்னைய தூங்க விடமாட்டுது. தயவுசெஞ்சு எனக்காக அவன்கிட்ட பேசு!” எனச் சொல்லியவள் எதிர்பாராத தருணத்தில் அவன் காலில் விழுந்தபடி அழ ஆரம்பித்துவிட்டாள்.
“ஏய் வின்கா ரோசியா! தயவுசெஞ்சு எந்திரி, எல்லாரும் பாக்கறாங்க!”
“நீ அவன்கிட்ட பழையபடி பேசுறேன்னு சொன்னாதான் எந்திரிப்பேன்” என அழுதாள். “சரி உனக்காக பேசறேன் எந்திரி” எனச் சொல்லவும் எழுந்தாள்.
உடனே ஓடி ரூபன் வகுப்பிற்குச் சென்று அவனை அழைத்து வந்து இருவரையும் சமாதானமாக்கினாள். அவர்கள் இருவரும் பேசும்போது அழுதபடி பார்த்தவளின் முகம் சரவணனுக்கு இன்னும் நினைவிருக்கிறது. அதற்கடுத்த நாள் அவள் வகுப்பிற்கு வரவில்லை. வேறு பள்ளிக்கு டிசி வாங்கிக்கொண்டு போய்விட்டாள்.
அருணாவுடன் ரூபன் அதன்பிறகு பேசவில்லை. ரூபனும் சரவணனும் வழக்கம்போல் பேசத் தொடங்கினார்கள். அந்த ஒரு சண்டையின் தாக்கத்தால் பெண்களைப் பற்றி அவர்கள் அதன்பிறகு பேசிக்கொள்ளாமல் இருந்தார்கள். ஒரு பெண் மீண்டும் வந்தபோது அவர்கள் பிரிந்து போனார்கள்.
அதன்பிறகு ஒரே ஒருமுறை வின்கா ரோசியாவை ரூபனோடு போயிருந்தபோது எதேச்சையாகத் தியேட்டரில் பார்த்தான்.
அதன்பிறகு இன்றுதான் அவளைச் சந்திக்கப் போகிறான்.
*****
அவளது ஹாஸ்டல் வாட்ச்மேன் வெளியே அமர்ந்திருக்கவும், கொஞ்சம் தள்ளி நின்று வின்கா ரோசியாவுக்குப் போன் செய்தான். போனை எடுத்ததும் “வந்துட்டியா?” என்றாள்.
“ம்ம், கீழதான் நிக்கறேன்.”
“டூ மினிட்ஸ் வரேன்” என்றாள்.
பள்ளிச் சீருடையில் நடந்து செல்லும் அவளை மறைந்து நின்றபடி ‘வின்கா ரோசியா’ எனச் சொல்லும்போது அவள் கோபமாகத் திரும்பிப் பார்க்கும் முகம் நினைவுக்கு வர, அவனையே அறியாமல் சிரித்தான். அவள் வெளியே வந்து இவனைப் பார்த்ததும் ஒரு நேசப் புன்னகை செய்தாள்.
கல்லூரியிலிருந்து வந்தவள் இன்னும் உடையை மாற்றவில்லை. அதே சேலையில்தான் இருந்தாள். பள்ளிச் சீருடையில் இருந்தவளைப் பேராசிரியராகப் பார்க்கும்போதும் அவனுக்கு வின்கா ரோசியா என அழைத்துப் பார்க்கத் தோன்றியது. ஆனால் ஏதோ ஒன்று தடுத்தது. பணத்தை பர்ஸிலிருந்து எடுக்கும்பொழுது அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். பணத்தைக் கொடுக்கவும் வாங்கிக்கொண்டு “ரொம்ப தாங்க்ஸ் நித்ய கல்யாணி” என்றான்.
அவள் எதுவும் சொல்லவில்லை. ஒருவேளை அவளுக்கும் அவன் நித்ய கல்யாணி என அழைப்பது வித்தியாசமாக இருக்குமோ என நினைத்தபடி பணத்தைத் தன் பேக்கில் வைக்கப்போனவனை “கரெக்டா இருக்கானு செக் பண்ணிக்க!” என்றாள்.
“ஐயோ! உம் மேல நம்பிக்கையில்லையா, பரவால்ல”
சற்றே கடுமையான குரலில், “முதல்ல செக் பண்ணு” என்றாள். அதில் பேராசிரியைக்கான தொனி இருந்தது.
அதைச் சற்றும் எதிர்பார்க்காதவன் “ஸாரி!” எனப் பணத்தை எடுத்து எண்ண ஆரம்பித்தான். அவன் கைகள் இலேசாக நடுங்கின.
“இப்படியெல்லாம் யாரையுமே நம்பாத. எல்லாரையும் சந்தேகமா பாக்க வேண்டியதாயிருக்கு.” அவள் ரூபனைப் பற்றித் தான் சொல்கிறாளோ என யோசித்தான். பணத்தை எண்ணிவிட்டு, “கரெக்டா இருக்கு” எனச் சொல்ல, “ம்ம். சரி சரவணா. பாக்கலாம்” என உள்ளே சென்றாள்.
“நித்ய கல்யாணி…. ஒரு நிமிஷம்.” என அழைக்கவும் அவனிடம் மீண்டும் திரும்பி வந்து ‘என்ன’ என்பதுபோல் பார்த்தாள்.
“இந்தப் பணம் என் அப்பாவுக்கு…” என அவன் சொல்ல வாயெடுக்கவும், “சரவணா… அதெல்லாம் சொல்லணும்னு தேவையில்ல. உனக்கு ஒருவேளை இன்னும் எதுவும் தேவைப்பட்டா கூச்சப்படாம கேளு” எனக் கூறிவிட்டு அவனைப் பார்த்து “வரேன்” எனத் தலையாட்டியபடி சென்றாள்.
அவன் ‘சரி’ எனத் தலையாட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பி மருத்துவமனைக்கு வந்தான். அவனுடனே அவளுடைய நினைவுகளும் வந்தன. அப்பாவிற்குப் பணத்தைக் கட்டிவிட்டு மருத்துவமனையிலே தங்கினான். அப்பாவின் ஆப்ரேசன் நல்லபடியாக முடிந்தது. அவன் மனம் முழுக்க வின்கா ரோசியா மேல் இருந்தது. அவளது எண்ணை வின்காரோசியா எனப் பதிந்துவிட்டு ஒருமுறை சொல்லிப்பார்த்துச் சிரித்துக்கொண்டான். அவளது வாட்ஸ்-அப் புகைப்படத்தைப் பார்த்தான். கையில் தேநீரோடு எங்கோ பார்த்தபடி நின்றிருந்தாள்.
அதையே எவ்வளவு நேரம் பார்த்திருப்பான் என அவனுக்குத் தெரியாது. பார்த்தபடியே தூங்கிப்போனான்.
***
அப்பா ஆப்ரேசன் முடிந்து வீடு திரும்பியிருந்தார். வொர்க் ஃப்ரம் ஹோம் வாங்கிக்கொண்டு சிறிது காலம் அவன் அப்பாவோடு சொந்த ஊரில் தங்கியிருந்தான். வாரத்திற்கு ஒருமுறை பெரியப்பா பெரியம்மாவைப் பார்க்க திண்டுக்கல் டவுனிற்கு வந்தான். மாதாமாதம் இருபதாயிரமாக வின்கா ரோசியாவிற்குப் பணத்தைத் திருப்பிக் கொடுத்துக்கொண்டிருந்தான்.
அன்று அவளைப் பார்ப்பதற்காக திண்டுக்கல் வந்தபோதுதான் ரூபனின் திருமண அழைப்பிதழ் பெரியப்பா வீட்டிற்கு வந்திருந்தது. ரூபன், சரவணனுக்கும் போன் செய்து கட்டாயம் திருமணத்திற்கு வரச் சொல்லியிருந்தான்.
அந்த யோசனையோடே வின்கா ரோசியாவிடம் பணத்தைத் திருப்பிக் கொடுக்கப் போனான். வின்கா ரோசியா பணத்தைப் பெற்றுக்கொண்டு, “ரூபனுக்கு கல்யாணமாமே! நீ போவியா?” எனக் கேட்டாள்.
“தெரியல” என்றான். அவள் ஒருவிதத் தயக்கத்துடனே, “நான் கேக்கலாமானு தெரியல! அப்படி என்னாச்சு உங்க ரெண்டு பேருக்குள்ளயும்” எனக் கேட்டாள்
சரவணன் வெறுமையாய் சிரித்தபடி, “கல்யாணப் பொண்ணு என்னோட எக்ஸ்” என்றான். அந்த வெறுமையான முகத்தைப் பார்த்ததும் வின்கா ரோசியா மனமுடைந்து, “ஸாரி! ஸாரி! ஸாரி! நான் இதைக் கேட்டிருக்கவே கூடாது” என்றாள்
“அதெல்லாம் ஒன்னுமில்ல கல்யாணி. அது நடந்து ரெண்டு வருசம் ஆச்சு! ப்ரேக் ஆப் ஆன அன்னைக்கு உனக்கு போன் பண்ணி அழணும்னு தோணுச்சு. உன்கிட்ட ஸாரி கேக்கணும்னு தோணுச்சு.”
“பண்ணிருக்கலாம்ல!”
“எங்கிட்ட உன் பழைய நம்பர்தான் இருந்தது. அது யூஸ் பண்ணுறியான்னும் தெரியல.”
“அப்படி இல்லனா இன்ஸ்டா பேஸ்புக்னுகூட காண்டாக்ட் பண்ணிருக்கலாம்ல. நம்ம மியூச்சுவல்க்குள்ளதான இருந்தோம்?”
“இல்ல கல்யாணி. உன்கிட்ட பேசணும்னு தோணுனது உண்மை. ஆனா உன்கிட்ட நான் இதைச் சொல்லி அழறப்ப நீ என்னைய திட்டிடுவியோ, இல்லை கிண்டல் பண்ணிடுவிடுயோனு பயம் வந்துருச்சு! அதான் பண்ணல.”
“போடா லூசு!” எனத் திட்டியவள் சில வினாடிகளுக்குப் பிறகு “சரி பரவால்ல இப்ப சொல்லு!” எனக் கேட்டாள்.
“ஸ்கூல் முடிஞ்சதும் ரூபன் படிக்கப் போன காலேஜ்ல அவன் எடுத்த டிப்பார்ட்மெண்ட்டே எடுத்தேன். அவன் ஃப்ரண்ட்ஸ் எல்லாம் எனக்கும் ஃப்ரண்ட்ஸ் ஆனாங்க!
அனன்யா! ரூபனோட ஃப்ரண்ட். என்னைவிட ஒரு வயசு பெரிய பொண்ணு. ரூபனுக்காக நான் என் அம்மா அப்பாலாம் எப்படி விட்டுட்டு வந்தேன்னு கேட்டு என்கிட்ட ரொம்ப நல்லா பேசுனா. “அவனுக்காகலாம் வரல! எங்க பெரியப்பா பெரியம்மாக்காகதான் வந்தேன். இவனும் ஒரு காரணம். இவனே காரணம் இல்ல”னு சொன்னேன். அவளுக்கு என்னைய ரொம்ப பிடிச்சது. எனக்கும்தான். ஆனா நான் அவகிட்ட இதைப் பத்தி பேசவேகூடாதுனு இருந்தேன். ஏற்கனவே உன்னால நாங்க பிரியுற மாதிரி போனதுனால நாங்க அதுக்கப்பறம் லவ் பத்தி பேசிக்கல. ஒருநாள் ரூபனுக்கு தெரியாத ரகசியம் இருக்கானு விளையாட்டா அனன்யா கேக்க ஆரம்பிச்சா. நான் உன்னைய பத்தி சொன்னேன். வின்கா ரோசியாவப் பற்றி அவனும் சொல்லிருக்கான்னு சொன்னா. அவன்கிட்ட வின்காரோசியாவ பற்றி பேசமாட்டேன்னு சத்தியம் பண்ணுனு கைய நீட்டுனா. அப்ப நான் சொல்றதையும் அவன்கிட்ட சொல்லமாட்டனு சத்தியம் பண்ணுனு கேட்டேன். என்னானு கேட்டா! நீ சத்தியம் பண்ணாதான் சொல்லுவேன்னு சொன்னேன். ரெண்டு பேரும் சொல்லமாட்டோம்னு சத்தியம் பண்ணிகிட்டோம்.
நான் அவளுக்கு ப்ரோபோஸ் பண்ணிட்டேன். எக்காரணம் கொண்டும் அவனுக்குத் தெரியக்கூடாதுனு அனன்யாகிட்ட சொன்னேன்.
“அடப்பாவி! ப்ரோபோஸ் பண்ற அளவு பெரியவனாயிட்டியடா நீயி! டேய் நீ எனக்கு தம்பி மாதிரிடா! உம் மேல எனக்கு லவ்வே வராது!”
“ஏய் பிடிக்கலனுகூட சொல்லு! தயவுசெஞ்சு தம்பி மாதிரினு சொல்லாத! ஒரு மாதிரி இருக்கு!”
நன்றாகச் சிரித்துவிட்டு, “தம்பிதான்டா நீ. இப்பிடி சத்தியம் பண்ணி ப்ரோபோஸ் பண்றவன நான் பாத்ததில்லடா! ரூபன்கிட்ட சொல்லாதனு சொல்லிட்டு சொல்ற! ஒருவேள நம்ம லவ் பண்ணா ரூபனுக்குத் தெரியாம எப்பிடி லவ் பண்ண முடியும்? அப்ப உனக்கே தெரியும் நான் உன்ன லவ் பண்ண மாட்டேன்னு!” என மீண்டும் சிரித்தாள்.
“தெரியும். ஆனா என் ஆசைய சொன்னா கொஞ்சம் நிம்மதியா இருக்கும். ஒருவேளை நான் சொன்னதுக்கப்பறம்கூட எம்மேல இண்ட்ரஸ்ட் வரலாம்ல!”
“அதெல்லாம் ஒரு மயிரும் வராது” எனச் சிரித்தாள். மயிராக இல்லை மரமாகவே வளர்ந்தது எங்கள் காதல். அவளே எனக்கு ப்ரோபோஸ் பண்ணுனா. எல்லாம் ரொம்ப நல்லாவே போச்சு! ரூபன்கிட்டயும் அவளே சொன்னாள். மூவரும் ஒன்றாகவே இருந்தோம்.
அவளுக்கு என்கிட்ட பிடிச்சிருந்த விஷயமே என்னோட இன்னொசன்ஸ்தான். யாரோ ஒருத்தவங்க கஷ்டப்படறதே தாங்கமுடியாதவன், லைஃப் பார்ட்னர எப்படி பாத்துக்குவான்னு நினைச்சு வந்தாள். ஆனா பழகுன கொஞ்ச நாள்ள எது பிடிச்சதோ அதுவே பிடிக்காம போச்சு. உலகமே தெரியல; கொஞ்சம்கூட பொறுப்பா இல்ல; ஏன் எல்லாத்தையும் ரூபன் பாத்தே பண்ணுற?; தனியா முடிவெடுனு சொல்லுவா! ஒரு கட்டத்துல எங்க ரிலேஷன்ஷிப் பயங்கர டாக்ஸிக்கா மாறுச்சு. அவ போன் பண்ணாலே எனக்குப் பயம் வர ஆரம்பிச்சிருச்சு. எல்லாத்துக்கும் சண்டை. ரூபன் மாதிரி நீ எப்ப முடிவெடுப்பனு எல்லாத்துக்கும் கம்பேரிசன். காலேஜ் முடியுற முன்னாடி என்கிட்ட ரூபன் பிஜி படிக்கிற காலேஜோ இல்ல அவ படிக்கிற காலேஜோ எடுக்காம சொந்தமா எடுக்கணும்னு அவ மேல சத்தியம் பண்ணச் சொன்னாள்.
அதுனால நான் வேற காலேஜ் எடுத்து போனேன். அவங்க ரெண்டு பேரும் ஒரே காலேஜ்தான் போனாங்க. அவ எங்கிட்ட ரூபனோட குவாலிட்டியதான் தேடுனா. அது சரவணண்கிட்ட எப்படி இருக்கும்? ப்ரேக்-அப் பண்ணிட்டா. “ஸாரி நான் உன்ன ரொம்ப காயப்படுத்திட்டேன். எனக்காக நீ மாறவேணாம். மாறனும்ன்ற அளவு அது பிரச்சனை கிடையாது”னு சொல்லி அழுதாள்.
யாரோ ஒருத்தவங்க கஷ்டப்படறதே தாங்கமுடியாதவன், லைஃப் பார்ட்னர எப்படி பாத்துக்குவான்னு நினைச்சு வந்தான்னு சொன்னேன்ல. அது தப்புன்னு அவளுக்கு புரிஞ்சுது. யாரோ ஒருத்தனுக்காக அவன் அப்பா அம்மாவையே விட்டு வந்திருக்கான்னா அவன் எப்படி பாத்துக்குவான்னு அதுக்கப்பறம் யோசிச்சா. அவளுக்கு எப்பயுமே பிடிச்சது ரூபனைத்தான். அது அவளுக்கே தெரியல. ஆனா என்னால அவங்க ரெண்டு பேரையும் ஒன்னா பாக்க முடியல. “நீங்க சந்தோசமா இருங்க! என்னால உங்க ரெண்டுபேரையும் உன்னா பாக்குற அளவுக்குப் பக்குவம் வரல”ன்னு சொல்லிட்டு அவங்க ரெண்டு பேர்கிட்டருந்தும் நான் விலகிட்டேன்.
இதெல்லாம் உனக்கு அன்னைக்குக் கொடுத்த கஷ்டம்னு தோணுச்சு கல்யாணி. அதான் அன்னைக்கு போன் பண்ணனும்னு நினைச்சேன். ஸாரி நான் ரொம்ப பேசிட்டேன்.” எனக் கண்ணீரைத் துடைத்தான்.
“அன்னைக்கே சொல்லிருந்தின்னா எப்பவோ ரிலாக்ஸ் ஆயிருப்ப! நீ எப்படியாவது எனக்குக் கால் பண்ணிருக்கலாம்.”
பண்ணிருந்தா கேட்ருப்பதான் நீயி! அந்தக் காசு எதுக்கு வேணும்னு சொல்ல வந்ததையே நீ கேக்கல. இத கேட்ருப்பியா நீ?”
“டேய் லூசு! அது வேற இது வேறடா. நீ காரணம் சொல்லித்தான் நான் காசு கொடுக்கணும்னு அவசியமில்ல. நீ கேட்ட, நான் கொடுத்தேன். அதுனாலதான் காரணம் கேக்கல. நீ வாயத் தொறந்து கேட்டதுனால கேக்குறேன். சொல்லு, அந்தக் காசு எதுக்கு வாங்குன?”
“ரெண்டு மாசம் முன்னாடி என் தம்பி ரகுபதி… என் தம்பிய தெரியும்ல?” என சரவணன் கேட்டான்
“தெரியும், ஆனா பாத்ததில்ல.”
“அதுபோதும். ரகு எனக்குக் கால் பண்ணி “சென்னையில ஒரு வேலை இருக்கு அண்ணா. உன் ரூம்ல வந்து தங்கிக்கவா”னு பர்மிசன் கேட்டான். எனக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சு. என் சொந்தத் தம்பி எங்கிட்ட பர்மிசன் கேக்குற அளவுதான் எங்க ரிலேசன்ஷிப் இருக்குனு குற்றவுணர்ச்சி ஆகி, “டேய் அது உன் ரூம் மாதிரிடா. தயவுசெஞ்சு பர்மிசன் கேட்டு வேற ஆளா மாத்தாதடா”னு சொன்னேன். அவன் ரூமுக்கு வந்தான். அவனுக்கு என்ன பிடிக்கும் பிடிக்கலனுகூட எனக்குத் தெரியல. அவன்கிட்டயே கேட்டு அவனுக்குப் பிடிச்சதா பண்ணேன். எவனோ ஒருத்தன சொந்தம்னு நம்பி என் சொந்தத் தம்பி பத்திகூட ஒன்னும் தெரியாம இருக்கனேனு குற்றவுணர்ச்சியா இருந்தது. அந்த நாலு நாள் நாங்க நிறைய டைம் ஸ்பெண்ட் பண்ணோம். ஒரு நாள் தயங்கிட்டே சொன்னான், “அண்ணே நான் வேலை விஷயமாலாம் வரல. உன்கிட்ட ஒரு உதவி கேக்கணும். அத கேக்கதான் வந்தேன். உங்கிட்ட சொல்லத் தயங்கிட்டுதான் சொல்லல”னு சொன்னான். “என்னடா”னு கேட்டேன்.
“நான் ஒரு பொண்ண லவ் பண்றேன். அந்த பொண்ணும் நானும் ஒரே க்ளாஸ். அந்த பொண்ணுதான் அவங்க குடும்பத்துலே மூத்த பொண்ணு. நாலு பொண்ணுங்க அவங்க வீட்டுல. மொத பொண்ணுக்கு இப்பவே கல்யாணம் பண்ணாதான் மீதிப் பொண்ணுங்களுக்கும் சீக்கிரம் பண்ண முடியும்னு அவங்க அப்பா சொல்றாரு. அவங்க வீட்டுல உடனே கல்யாணம் பண்ணச் சொல்லி பிரஷர் பண்றாங்க. இல்லனா வேற பையன கல்யாணம் பண்ணிக்கனு அவள டார்ச்சர் பண்றாங்க. நான் அப்பா, அம்மாட்ட சொன்னேன். உனக்குக் கல்யாணம் ஆனாதான் நான் கல்யாணம் பண்ணனும்னு சொல்லிட்டாங்கணே. அதை மீறி கல்யாணம் பண்ணா நீ என் புள்ளேயே இல்லனு அம்மாவும் அப்பாவும் சொல்லிட்டாங்கணே. அதான்…. நீ கல்யாணம் பண்ணினா….” எனத் தயங்கியபடியே சொன்னான்.
“டேய் இவ்ளோதானாடா! இத நீ வந்த அன்னைக்கே சொல்லிருக்கலாமே டா. எனக்கு இப்போதைக்குக் கல்யாணம் பண்ற ஐடியா இல்ல. ஆனா நீ கவலைப்படாத. அப்பா, அம்மாவ நான் கன்வின்ஸ் பண்ணி உன் கல்யாணத்த உடனே நடத்தி வைக்கிறேன்.”
“அண்ணா இல்லனா! அப்பா அம்மா இந்த விஷயத்துல ரொம்ப பிடிவாதமா இருக்காங்கணா. உன்னாலயும் ஒத்துக்க வைக்க முடியாதுனு தோணுது.”
“டேய் அண்ணனா உனக்கு நான் ஒன்னுமே செஞ்சதில்ல. நம்புடா உன் கல்யாணத்துக்கு நான் கேரண்டி.”
அடுத்த நாளே நானும் தம்பியும் கிளம்பி பெரியப்பா வீட்டிற்கு வந்தோம். அப்பாவை மட்டும் வரச் சொன்னேன். அம்மா இல்லாம பெரியப்பாவை வச்சு பேசுனா சரியாக இருக்கும் எனப் பேசச் சொன்னேன். அண்ணன் கேட்டு தன் பிள்ளையே கொடுத்தவர். கல்யாணத்துக்கு ஒத்துக்காம இருப்பாரானு சாதாரணமா நினச்சிட்டேன். ஆனால் அப்பா எனக்குக் கல்யாணம் முடிக்காம பண்ணுனா அவன் என் புள்ளையே இல்லனு நானே முடிவு பண்ண மாதிரி ஆயுடும்னு சொல்ல எனக்கு அதிர்ச்சியானது.
“அப்பா, நான் உங்க புள்ள தாம்ப்பா. இதெல்லாம் பண்ணிதான் உங்க புள்ளனு காட்டணுமா? எனக்கு இப்போதைக்குக் கல்யாணம் வேணாம்! ப்ளீஷ்ப்பா!” எனச் சொன்னேன்
“ஐயோ சாமி! நீ இந்த குடும்பத்துகு செஞ்ச தியாகம் போதும். நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லலப்பா. உனக்கு பிடிச்ச மாதிரி நீ இருந்துக்க. இத்தன வருசமா இந்தக் குடும்பத்துக்காக நீதான் இழந்த. திரும்பத் திரும்ப நான் உன்னயே தியாகம் பண்ண சொல்லல. நான் சென்னைக்கே போகக்கூடாதுனுதான் இந்த நாயிகிட்ட சொன்னேன். இந்த நாயி அங்க வந்து உன்னைய மனசு மாத்த முயற்சி பண்ணும்னு தெரியும். எம் பேச்சையும் மீறி அங்க வந்துருச்சு, சனியன். டேய், எம் புள்ளய நான் கல்யாணம் பண்ணச் சொல்லிக் கட்டாயப்படுத்தமாட்டேன். உனக்கு அந்த புள்ளைய கல்யாணம் பண்ணனும்னா உன் அண்ணன் கல்யாணம் முடிஞ்சுதான் பண்ணனும். அதையும் மீறி பண்ணுனா நாங்க உன் கல்யாணத்துக்கு வரமாட்டோம். சத்தியமா சொல்றேன் பூரா சொத்தையும் எம் பையன் சரவணனுக்கு மட்டும் எழுதி வச்சுட்டு போயிருவேன். ஜென்மத்துக்கும் உம் மூஞ்சிலே முழிக்கமாட்டேன்.” என அப்பா அவனை முறைத்தபடி கூறினார்.
“அப்பா இப்பயும் நீங்க என்னையதான் கல்யாணத்துக்கு கட்டாயப்படுத்துறிங்க!”
“நம்ம குலதெய்வம் சந்தனகருப்பு பொதுவா இல்ல சரவணா. நீ கல்யாணம் பண்ணனும்ன்றதுதான் அப்பா ஆசை. ஆனா உன்னை நான் கட்டாயப்படுத்தல. இது ஒன்னாவது உன் விருப்பப்படி பண்ணிக்க. ஏன் இந்த நாய் உனக்காக அந்த பொண்ணுவீட்ல பேசாதா? அவள காத்திருக்கச் சொல்லாதா? இந்த குடும்பத்துக்குனு நீயேதான் தியாகம் பண்ணனுமா? ஏன் இவன் பண்ணமாட்டானாம்?” என ரகுவை முறைத்தபடி சொல்ல, “அப்பா! நான் சொல்லி பாத்துட்டேன்ப்பா. உடனே கல்யாணம் பண்ணாட்டி வேற இடத்துல கல்யாணம் பண்ணி வச்சிருவேன்னு அவங்க அப்பா சொல்றாரு. அந்த பொண்ணும் பயப்படுது. அவங்க அப்பாக்கு உடம்பு சரியில்லாம இருக்கு. எதாவது ஆயிடுமோன்னு.. அதான் சீக்கிரம் கல்யாணம் பண்ணனும்னு…” ரகு கெஞ்சும் குரலில் சொன்னான்.
“அவ்ளோ பிரச்சனைனா அந்த புள்ளைய விட்டுடு ரகு. ஏன் உனக்காக உன் அண்ணனே தியாகம் பண்ணனுமா? நீ உன் அண்ணனுக்காகப் பண்ண மாட்டியா?”
“அப்பா தயவுசெஞ்சு தியாகம் அது இதுனு பேசாதிங்க. நான் உங்க பையன் தான்ப்பா. அத நான் மொத கல்யாணம் பண்ணிதான் நிரூபிக்கணும்னு இல்ல. தம்பிக்கு மொத கல்யாணம் நடக்கட்டும்ப்பா!”
“இல்ல சாமி! இந்த ஒரு விஷயத்துல மட்டும் என்னை மாத்த பாக்காதிங்க. என் அண்ணனுக்காக ஒரு புள்ளைய கொடுக்க முடிவு பண்ணேன். தம்பிக்குப் பதிலா நீ போறேன்னு சொன்னதும் உன்னைய தர முடிவு பண்ணேன். இந்த முடிவுகூட நான் எடுக்கக் கூடாதா? அவன் கல்யாணம் உனக்கு அப்பறம்தான் நடக்கணும். அப்பாவ சமாளிச்சுக்கலாம் அண்ணன் இருக்காரு பெரியப்பா இருக்காருணு நீ உன் அண்ணனுக்கு முன்னாடி கல்யாணம் பண்ணுன, சத்தியமா சொல்றேம் எம் பொணத்தகூட பாக்க வராத!” எனக் கத்தினார்.
கத்தியவர் அப்படியே நெஞ்சைப் பிடித்தபடி விழுந்துவிட்டார். ஹார்ட் அட்டாக். உடனே ஆப்ரேசன் பண்ண வேண்டிய நிலைமை. பெரியப்பா ஹாஸ்பிட்டல் பில் கட்ட போனார். நாந்தான் தடுத்துட்டேன். அவர் முதல் பையனாக எல்லா காசும் கொடுக்குறேன்னு ரெடி பண்ணேன். அதுல ஒரு லட்சம் குறைஞ்சுது. அதான் உன்கிட்ட கேட்டேன்.” எனக் கண்கலங்கியபடி சரவணன் சொன்னான்.
சரவணன் கைவிரல்களைப் பற்றியபடி, “நீ பணம் கேட்டா அது முக்கியமான விஷயமாதான் இருக்கும்னு தெரியும். அதான் நான் எதுவுமே கேட்கல!” எனச் சொல்லியடி பற்றிக்கொண்டாள்.
“நீ ரொம்ப நல்ல பையன் சரவணா. உனக்கு நல்லது மட்டுமே நடக்கணும்!” என கைகளைப் பற்றிக்கொண்டே சொன்னாள்.
அதேபோல அவள் கைகளைப் பற்றிக்கொண்டபடி மணமேடையே சுற்றி வரும் கனவுவர அதைக் கலைக்கும் வண்ணம், “நீ ஏன் கல்யாணம் பண்ணிக்காம இருக்க!” என வின்கா ரோசியா கேட்டாள்.
“இல்ல அனன்யாவ மறக்க முடியல! கொஞ்சம் டைம் எடுக்கும்”
“ம்ம்ச்… சரவணா மூவ்-ஆன் ஆகு. அவளுக்குக் கல்யாணம் நடக்கப்போகுது. சீக்கிரம் ஒரு பொண்ண பாத்து கல்யாணம் பண்ணு”
அவனுக்கு, “நீ கல்யாணம் பண்ணிக்கிறியா?” எனக் கேட்கத் தோன்றியது. அதைக் கேட்கும் தைரியம் வரவில்லை. ஆனால் பேச வாயெடுக்கவும், “சொல்லு சரவணா” என வின்கா ரோசியா கேட்டுவிட என்ன சொல்வது என்ற தடுமாற்றத்தில், “நீ இன்னும் ஏன் கல்யாணம் பண்ணாம இருக்க கல்யாணி? உன் வீட்ல இல்லாம ஏன் தனியா இருக்க?” எனக் கேட்டான்.
“உன்னைய கேட்டதுக்குத் திரும்பக் கேட்குறியா?” என்றாள். அவன் சிரித்தான். பின் அவளாகவே சொல்ல ஆரம்பித்தாள்.
“உன்னை மாதிரிதான் காலேஜ்ல ஒரு பையன லவ் பண்ணேன். ரீசண்ட்டாதான் ப்ரேக்-அப் ஆச்சு. வீட்டுல உடனே கல்யாணம் பண்ணச் சொல்லி டார்ச்சர் பண்ணாங்க. அதான் கொஞ்ச நாள் தனியா இருக்கலாம்னு ஹாஸ்டல் வந்துட்டேன். செம பிரச்சனையா போயிட்டிருக்கு. கல்யாணம் பண்ணாமலாம் இருக்கப் போறதில்ல. இப்போதைக்கு அப்படி யார் மேலயும் தோணாம இருந்தது. தோணுனா பண்ணிக்குவேன்.” என்றாள்.
**
“எம் மேல தோணுதானு கேட்ருக்க வேண்டிதானடா!” மனோகர் சரவணனைக் கேட்க, “கேட்கணும்னு தோணுச்சுடா ஆனா பயமா இருந்ததுடா!” என்றான்.
“என்ன பயம்?”
“டேய் அவ என் ஃப்ரண்டோட லவ்வர்.”
“மயிரு! அதெல்லாம் பத்து வருசம் முன்ன! அது முதல்ல லவ்வே கிடையாது. Just Infactuation அவ்வளவுதான்.”
“சரி அப்படியே இருக்கட்டும். திடீர்னு இப்ப எனக்கு ஒரு காசு பிரச்சனை வரவும் இத்தன நாள் பேசாம இப்ப போய் காசு கேட்டு அத கொடுத்தான்றதுக்காக லவ் வந்துருச்சுனு சொல்ல எனக்கே அசிங்கமா இருக்குடா!”
“சரி வேற எதுக்காக லவ் வரணும்? நீ கேட்டதும் என்ன காரணம்னு கேக்காமகூட கொடுத்தால்ல! அப்ப அவளுக்கு எதோ ஒரு வகையில் பிடிச்சிருக்குனுதான அர்த்தம்!”
“டேய் அவளும் என்னைய மாதிரி ப்ரேக்-அப் ஆகி மூட் அவுட்ல இருக்கா. கல்யாணம் பண்ணச் சொல்லி வீட்ல கேட்கறாங்கன்னு வீட்டவிட்டே வந்து தனியா இருக்காடா! நான் அதே கேள்விய கேட்டு எம் மேல கோச்சுகிட்டா?”
“கோச்சுகிட்டா என்ன இப்ப? அவள கல்யாணம் பண்ணிக்கிறியானு கேளு. புடிச்சிருந்தா சரினு சொல்லப்போறா. இல்லனா எப்படியோ போறா. அதுக்கப்பறம் கோச்சுகிட்டா என்ன?”
“இல்லடா! அட்லீஸ்ட் பேசவாது செய்றால! அத கெடுத்துக்கவேணாம்னு தோணுது.”
“சரவணா! ரொம்ப யோசிக்காத! ரெண்டு பேரும் கல்யாண வயச தாண்டற ஸ்டேஜ்ல இருக்கிங்க! அடுத்த தடவ பாக்கறப்ப தைரியமா சொல்லிடு! அடுத்து எப்ப பாக்கப் போற?” மனோ கேட்க, தலையைக் குனிந்தபடி, “ரூபன் கல்யாணத்துக்கு ரெண்டு பேரும் போலாமானு கேட்டா! எனக்கு அவகூட பேசுனா போதும்னு சரினு சொல்லிட்டேன்” என்றான்.
“சூப்பர்டா! அதாவது உன் எக்ஸ் கல்யாணத்துக்கு நீயும் அவ எக்ஸ் கல்யாணத்துக்கு அவளும் ஒன்னா போகப் போறிங்க! இதவிட நல்ல மொமண்ட் கிடைக்காது. தயவுசெஞ்சு அன்னைக்கே சொல்லிடு!” என்றான்.
**
மனோ சொன்னது போலவே ரூபன் திருமணத்தன்றே சொல்லிவிட சரவணன் தீர்மானித்திருந்தான். ரூபன் – அனன்யா திருமணம் என்பதைத் தாண்டி வின்கா ரோசியாவைப் பார்க்கப் போகிற சந்தோசமே அன்றைய நாளுக்காகக் காத்திருக்க வைத்தது. அதே சமயம் அவளிடம் எப்படிச் சொல்வது எனப் பயப்படவும் வைத்தது. கலப்பு திருமணம் என்றாலும் ரூபன் முறைப்படி ஆலயத்திலேயே திருமணம் நடந்தது. காலை திருமணத்திற்குப் போகாமல் இரவு ரிசப்சனிற்கு இருவரும் சென்றார்கள்.
அவர்கள் ஒன்றாகச் சென்றதை ரூபன் எதிர்பார்க்கவே இல்லை. அனன்யாவும் “இதான் வின்கா ரோசியாவா?” என ஆச்சரியமாய்க் கேட்டாள். இருவரும் போட்டோ எடுக்க ஏறியபோது, “நான் கேட்கிறதுக்கு மட்டும் பதில் சொல்லு அவ சிங்கிளா!” என்றான். “ஆமா.. ஆனா இப்பதான் ப்ரேக்-அப் ஆயிருக்கு” என சரவணன் சொன்னான். “அதெல்லாம் யோசிக்காத! உனக்குச் சரியான ஆளு அவதான்னு தோணுது. தைரியமா சொல்லிடு” என அவனிடம் மெதுவாகக் கூறினான். அனன்யாவும் அதேதான் சொன்னாள். ரூபன், அனன்யாவிடம் வின்கா ரோசியாவை அறிமுகப்படுத்த இருவரும் நன்றாகப் பேசினார்கள்.
அங்கே சாப்பிட்டுவிட்டு இரவு செகண்ட் ஷோ சென்றுவிட்டு அவளது காரிலியே அவனை வீட்டில் விட்டுவிடுவதாய் சொன்னாள். தியேட்டரிலேயே அவள் கையைப் பிடித்து காதலைச் சொல்லிவிட நினைத்தான். எதோ ஒன்று தடுக்க அவளைத் தொடவில்லை.
படம் முடிந்து வெளியே வந்தபோது “தலை வலிக்குது டீ குடிக்கலாமா?” எனக் கேட்டாள். பேருந்து நிலையம் அருகில் இருந்த வண்டியில் டீ விற்றவரிடம் வாங்கி காரில் அமர்ந்தபடி குடித்தார்கள்.
டீக்கான காசை அவள் கொடுக்க வரும்போது, “இல்ல நான் தரேன்” என அவளைத் தடுத்துவிட்டு காசைக் கொடுத்தான்.
காசைக் கொடுத்துவிட்டு அவள் பக்கம் திரும்பியவன், “நீ எனக்கு அன்னைக்குக் காசு கொடுத்துருக்ககூடாது! கல்யாணி!” எனப் பேச்சை ஆரம்பித்தான்.
“அப்ப நீ கேட்ருக்ககூடாது. நீ ஏன் கேட்ட?”
“நான் கேட்டதுக்குக் காரணம் இருக்கு. நான் காசு கேட்டதும், “எப்பிடிடா சூடு சொரணையே இல்லாம என்கிட்ட காசு கேக்க போன் பண்ணுறனு” திட்டுவனுதான் கேட்டேன். அப்படி நீ திட்டுனா உனக்கு பண்ண பாவத்துக்குத் தண்டனை கிடைச்சதா நினைச்சிருப்பேன். ஆனா நீ….” எனப் பேசியவனை நிறுத்தி, “டேய் என்னைய லவ் பண்ணவனே கல்யாணமா பண்ணி நல்லாதான் இருக்கான். ஸாரி இருக்காங்க! காலேஜ் லவ்வயும் சேர்த்து சொல்றேன்.” என இலேசாகச் சிரித்துவிட்டு, “நீ என்னடா பாவம் பண்ண! அவனோட ஃப்ரண்ட் அவ்ளோதான! இதுக்குப் போய் இவ்வளவு குற்றவுணர்ச்சி ஆகாத!” என்றாள்.
“தயவுசெஞ்சு என்னைய பேசவிடுறியா?” எனக் கேட்க, “சரி பேசு” என்றாள்.
“நீ என்னனே கேக்காம காசு கொடுத்துட்ட! நீ கொடுத்தனால…. எனக்கு உம் மேல….” அவனுக்குப் பதற்றத்தில் ஏசி காரிலும் வியர்த்தது. ஒரு கணம் மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டு பேச்சைத் தொடர்ந்தான்.
“நீ என்னைய தப்பா நினைச்சாலும் பரவால்ல கல்யாணி. எனக்கு உன்னை மறுபடியும் பிடிக்க ஆரம்பிச்சிருச்சு. ஆமா மறுபடியும்தான். நான் உன்னை ஸ்கூல் படிக்கிறப்பவே லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேன். எப்ப தெரியுமா? “எனக்காக நீங்க ரெண்டு பேரும் பேசிக்காம இருக்கறது கஷ்டமா இருக்கு”னு சொல்லி – அழுதுக்கிட்டே வந்து ‘எனக்காக பேசு’னு என் கால்ல விழுந்தில? அந்த நிமிஷம் உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சது. சத்தியமா சொல்றேன். ரூபன்கூட நான் உனக்காகத்தான் மறுபடியும் பேச ஆரம்பிச்சேன். நீ ஏன் ஸ்கூல் விட்டுப் போன?” கோபமாகவும் அதிருப்தியாகவும் கேட்டான். பின் அவனே ஒருவித அமைதியோடு சொன்னான்.
“நீ போனதும் ஒரு விதத்துல நல்லதுதான். நீ மட்டும் இருந்துருந்தா நான் உனக்கு ப்ரோபோஸ் பண்ணிருப்பேன். ஆனா எனக்கு ஒரு பயம். என்னடா நேத்து வர ரூபன்கூட லவ்வர்னு சுத்துன பொண்ணுகிட்ட போய் இவன் ப்ரோபோஸ் பண்றானேனு எல்லாரும் கேவலாம பேசுவாங்கனு.. ம்ம்ச்… எல்லாரையும் விடு! நீயும் என்னைய கேவலமா நினைச்சிருவன்னுதான் சொல்லல!” எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு கல்யாணி”
அவன் சொன்னதும் அவள் கண்கள் கலங்கின. அவள் எதுவும் பேசாமல் வண்டியை எடுத்தாள். அவனும் எதுவும் சொல்லவில்லை. நேராக அவன் வீட்டு வாசலில் நிறுத்தினாள். விடியற்காலை மணி ஐந்து இருக்கும். வானம் விடியத் துவங்கியிருந்தது. அவள் எதுவும் பேசாதிருக்கவும் அவன் அவளைத் திரும்பிப் பார்க்க பதிலுக்குக்கூடப் பார்க்காமல் நேராகப் பார்த்தபடி இருந்தாள். அவள் கண்கள் இன்னும் கலங்கியிருந்தன. சொல்லாமலே இருந்திருக்கலாமோ என சரவணனுக்கு நெஞ்சம் குமுறியது.
காரிலிருந்து இறங்கியவன் சன்னல் வழியாக அவளைப் பார்த்து, “நான் சொன்னது பிடிக்கலைன்னாலும் பரவால்ல! தயவுசெஞ்சு என்கிட்ட பேசாம இருக்காத. இப்ப மாதிரி என்கிட்ட பேசு. இனிமே இந்த மாதிரி சொல்லி டிஸ்டர்ப் பண்ணமாட்டேன், ஸாரி” என்றான்.
அவள் கண்கள் மீண்டும் கலங்கின. “அழாத கல்யாணி! நீ அழுதா எனக்குக் கஷ்டமா இருக்கு! நான் உன்கிட்ட இதைச் சொல்லிருக்கவே கூடாது! ஸாரி” என்றான்.
அவள் கார் கதவைத் திறந்து உள்ளே அமரச் சொன்னாள். உள்ளே அமர்ந்தான்.
“அன்னைக்கு நீ அனன்யா பத்தி சொன்னல்ல! அவளுக்கு என்னைய பிடிக்கல. ரூபனைத்தான் பிடிச்சது. என்கிட்ட ரூபனைத் தேடிருக்கான்னு! நானும் அதே தப்பதான்டா பண்ணேன். நான் ஏன் ஸ்கூல் படிக்கிறப்ப ரூபன லவ் பண்ணேன் தெரியுமா? அவன் எவ்வளவு நல்லவனா இருந்தா யாருனே தெரியாத ஒருத்தன் அவன் அம்மா அப்பாலாம் விட்டுட்டு அவனுக்காக வருவான்? அப்படின்னா அவன் எவ்ளோ பாசமா இருப்பான். யாரோ ஒருத்தன் மேலேயே இவ்ளோ பாசமா இருக்குறவன் அவள நம்பி வர்ற பொண்ண எப்பிடி பாத்துப்பான்? அதுனாலதான்டா!” அழுகையோடே புன்னகைத்தபடி, “உன்னாலதான்டா லவ் பண்ணேன்.”
ஆனா அருணா கிஸ் பண்ணி என்கிட்ட ப்ரேக் அப் பண்ணிக்கலாம்னு சொன்னப்ப – அம்மா அப்பாவ ரூபனுக்காக விட்டுட்டு வந்த நீ – எனக்காக அவனையே வேணாம்னு சொன்ன பாத்தியா! அன்னைக்குதான்டா இந்த மரமண்டைக்கு புரிஞ்சது. நான் தப்பான ஆள லவ் பண்ணிருக்கேன்னு. யாரோ ஒருத்தன பிடிச்சிருக்குனு எல்லாத்தையும் விட்டுட்டு வந்த உன்னையதானடா நான் லவ் பண்ணிருக்கணும். உன்னால அவனை லவ் பண்ணிருக்கேன்டா! மெண்டல்டா நானு! என் கண்ணு முன்னாடி என் க்ளாஸ்லே இருந்தும் எனக்குத் தெரியல பாரு! எனக்காக அவன்கூட பேசாம இருந்த பாத்தியா, அப்பவே உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருச்சு!” என அவனைப் பார்த்து அழுதாள்.
சரவணனுக்கு அவள் சொல்வதைக் கேட்க ஒரு கனவு போல் இருந்தது. அவன் காணாத – நினையாத நல்கனவு.
கண்ணீரைத் துடைத்தபடி விம்மிக்கொண்டே தொடர்ந்தாள். “ஆனா நேத்து வர ஒருத்தன லவ் பண்ணிட்டு இன்னைக்கு திடீர்னு வந்து உன்கிட்ட எப்பிடிடா உன்னைய லவ் பண்றேனு சொல்ல முடியும்? என்னைய கேவலமா ஜட்ஜ் பண்ணுவாங்கதான! அவங்க எல்லாம் அப்படிப் பண்ணா பிரச்சனையில்ல, நீயும் அப்பிடி நினைச்சிட்டா?
உன்னைப் பாத்தாலே நான் டிஸ்டர்ப் ஆனேன்டா! என் மனசு முழுக்க நீதான் இருந்த. நான் ஸ்கூல விட்டு போனதே உன்கிட்ட லவ் சொல்லிருவேன்னு பயந்துதான்டா. நான் காலேஜ்ல லவ் பண்ண பையன் பேரு சரவணன். நான் உன்னைத் தான்டா அவன்கிட்டயும் தேடுனேன். உன்னை அப்ரோச் பண்ற தைரியம் எனக்கில்ல. நீ போன் பண்ணி காசு கேட்டப்போ நான் காரணம் கேக்கவே கூடாதுனு இருந்தேன். உன்னை எனக்கு அவ்ளோ பிடிக்கும்டா. ஆனா உன்கிட்ட சொல்லப் பயம், நீ தப்பா எடுத்துக்குவியோனு. அன்னைக்கு ஸ்கூல்லயே சொல்லிருக்கலாமேடா. இத்தனை வருசமும் நம்ம ஒன்னாவே இருந்துருக்கலாம்ல!” என அவன் கையைப் பிடித்துக்கொண்டு அழுதாள்.
கண்ணீரைத் துடைத்த சரவணன், அவளை முதன் முதலாக நெஞ்சோடு சாய்த்துக்கொண்டான். அவளும் சாய்ந்தபடி, “உன் கால்ல விழ வந்த அன்னைக்கே இப்படி கட்டிபிடிச்சுக்கணும்னு தோணுச்சுடா” என்றாள்.
சரவணன் அவளைப் பார்த்து, “இப்ப எனக்கு எப்படி இருக்கு தெரியுமா? வேகமா ஓடிப் போய் ஒரு ரோஜாப்பூவ பறிச்சு கொண்டுவந்து உம் முன்னாடி நீட்டி, “வின்கா ரோசியா! உன்ன எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு! என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா!” னு சொல்லணும் போல இருக்கு!” எனக் கண்கள் முழுக்க காதலுடன் சொன்னான்.
”ப்பா! எத்தனை வருசம் கழிச்சு இதைக் கேக்குறேன் தெரியுமாடா! அதுவும் நீ இந்தப் பேர சொல்றப்ப எவ்ளோ அழகாருக்குத் தெரியுமா!” எனக் காதலோடு சொன்னவள் சற்றே கோபத்தோடு, “நீ ஏன்டா கல்யாணினு கூப்புட்ற! வின்கா ரோசியான்னுதான கூப்புடுவ! அப்படியே கூப்புட்றா!” என்றாள்.
“எனக்கு அப்படிக் கூப்பிடத்தான் புடிக்கும். நீ இப்போ ப்ரொஃபசர் ஆயிட்ட! தப்பா நினைச்சுக்குவியோனுதான் கூப்பிடல! என்றான்.
“ச்சீ! வின்கா ரோசியான்னே கூப்புடுறா! நீதான அந்த பேரே வச்ச”
“வின்கா ரோசியா!” என அவன் சொல்லவும் சிரித்தாள்.
“அதுக்கப்பறம் ஒன்னு சொன்னேன். அது உன் காதுல விழலயா?”
“வெறும் கையோட சொன்னா விழுகாது” எனச் சிரித்தபடி சொன்னாள்.
அவன் வீட்டுப் பூந்தொட்டியில் பூக்கத் தயாராகியிருந்த ஒரு பூவைப் பார்த்தான். “அப்ப அந்தப் பூவ பறிச்சிட்டு வந்து குடுத்துட்டு சொல்லவா வின்கா ரோசியா?” எனக் கேட்டான்.
“வேணாம்” எனச் சிரித்தபடி தலையாட்ட ஏமாற்றமடைந்த அவன் “ஏன்?” எனச் சோகமான முகத்துடன் கேட்டான்.
அவள் செல்லக்கோபத்தோடு “லூசு! இன்னும் அந்த பூ பூக்கவே இல்ல பாரு!” எனச் சொன்னாள்.
“அப்ப பூத்ததும் குடுத்தா வாங்கிப்பியா! வின்கா ரோசியா! என்றான்.
அவள் சிரித்தபடி, “ம்ம்! அப்ப வந்து கேளு, யோசிச்சு சொல்றேன்” என்றாள்.
உடனே அவன் காரைவிட்டு இறங்கி, அந்தப் பூந்தொட்டியை எடுத்து வந்து காருக்குள் அவனுக்கும் அவளுக்கும் இடையில் வைத்தான். அந்தப் பூவையும் அவளையும் பார்த்துச் சிரித்தான். அவளும் அவனைப் பார்த்துச் சிரித்தாள்.
அந்த பூ பூக்கும் தருணத்திற்காக இருவருமே காத்திருந்தனர்.



