கட்டுரைகள்
Trending

இன்றும் நெஞ்சில் பொங்கும் ‘குருதிப்புனல்’

-அசோக் குமார் முருகேசன்

இன்று ஏதாவது ஒரு சுமாரான படம் வந்தாலும் முதல் கல்லடி படுவது கமல்தான். நடிப்பு, இயக்கம், திரைக்கதை, சோதனை முயற்சி என ஏதாவது ஒரு துறையில் யாராவது ஒரு புதுமையைச் செய்தால் உடனேயே கமலை மட்டம் தட்ட ஆரம்பித்துவிடுவார்கள். காரணம் என்னவென்று பார்த்தால் பெரிதாக ஒன்றுமில்லை. சென்ற தலைமுறையில் அவர் செய்த முயற்சிகளுக்காக ஒரு சொற்ப கூட்டத்தினர் அவரது ஒவ்வொரு திரைப்படத்தின் ஆண்டு விழா நிறைவைக் கொண்டாடுகிறார்கள் என்கிற அற்பக் காரணம்தான்.

குருதிப்புனல் வெளியாகி இன்றோடு 24 வருடங்கள் ஆகின்றன. வழக்கம்போல இந்தப் படத்திற்கும் ஆதரவும் எதிர்ப்பும் என கட்டுரைகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ‘DHROKAL’ (துரோகம்) என்ற இந்திப் படத்தின் ரீமேக்கான ‘குருதிப்புனல்’ ராஜ்கமல் நிறுவனத்தின் மற்றுமொரு சோதனை முயற்சி. கமல்ஹாசன் திரைக்கதையும் வசனமும் எழுத ஒளிப்பதிவும் இயக்கமும் பிசி ஸ்ரீராம்.

தமிழில் வெளியான ஸ்டைலிஷ் காப் திரைப்படங்களுக்கான முன்னோடி என்று சொல்லப்படுகிறது. பாடல்கள் இல்லாதது, மீசையில்லாத போலீஸ் கதாபாத்திரம், கதாநாயகன் கடைசியில் சாகும்படியான கதை என வழக்கமான தமிழ்சினிமா சென்டிமெண்ட்களை தகர்க்க முயன்ற படம். இதற்கு முன்பே இது நிகழ்ந்திருக்கிறதே, இதிலென்ன சிறப்பு என்ற கேள்வி எழலாம். ஒரு மாஸ் ஹீரோ இந்த முயற்சியை எடுக்கும்போது அது பலருக்கும் வழி அமைத்துக் கொடுக்கும். இதையே கமல்ஹாசன் குறித்து இயக்குநர் ராஜூ முருகன் கூறும்போது, ‘அவர் அமைச்சுக் கொடுத்த பாதையில்தான் நாங்க இப்ப நடந்துட்டு இருக்கோம்’, என்றார். இதற்கான கமலின் முயற்சிகள் பணம் முதல் தனது மார்க்கெட் வரை பலவிதமான இழப்புகளோடுதான் நிகழ்ந்திருக்கின்றன.

‘பாலுமகேந்திரா, பாரதிராஜா ஸ்கூலில் இருந்து வந்தவர்கள் என்று சில இயக்குநர்களைச் சொல்வதுபோல் பிசி ஸ்ரீராமின் உதவி இயக்குநர்கள் கமல் ஸ்கூலில் இருந்து வந்தவர்கள்’, என்று அபூர்வசகோதரர்கள், தேவர்மகன் மற்றும் குருதிப்புனல் படத்தில் பணியாற்றியது குறித்து குறிப்பிட்டிருந்தார் கேவி ஆனந்த். சண்டைக் காட்சிகள், இசை, ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு என தொழில்நுட்பத்தில் மற்றுமொரு புதுமையை அளித்தவர்கள் கமலும் ஸ்ரீராமும். 90களின் இறுதியிலிருந்து கமல் உச்ச தொழில்நுட்பக் கலைஞர்களுடன் பணிபுரிவதைத் தவிர்த்து அவர்களது உதவியாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்ததும் இந்தப் படங்களில் பணிபுரிந்த அனுபவத்திலிருந்துதான்.

முதன்முறையாக ராஜ்கமல் தயாரிப்பில் இளையராஜா அல்லாத இசையமைப்பாளர் இந்தப் படத்தில். மகேஷ் மகாதேவன் கமலுடன் நம்மவர், குருதிப்புனல், ஆளவந்தான் (பின்னணி இசை மட்டும்) படங்களில் பணிபுரிந்தார் என்றாலும் பெரிதாக கவனிக்கப்படவில்லை. டால்பி ஸ்டீரியோ தொழில்நுட்பத்தையும் இந்தப் படத்தின்மூலம் பரிசோதித்தார்கள்.

படத்தின் வசனங்கள் இன்றளவும் கொண்டாடப்படுபவை. GodFather-ன் ‘I believed in America’, வசனத்தை விஸ்வரூபம் படத்தில் பயன்படுத்தி இருப்பார். இந்தப் படத்திலும் ‘Shawshank Redemption’ படத்தில் வரும் ‘Everyman has a breaking point’ வசனத்தை வேறுவிதமாகக் கையாண்டிருப்பார். ‘ஒவ்வொரு மனுசனுக்கும் ஒரு பிரேக்கிங் பாயிண்ட் இருக்கு’, ‘வீரம்னா என்னு தெரியுமா? பயம் இல்லாம நடிக்கிறது’, படத்தின் மிகப் பிரபலமான வசனங்கள்.

படத்தில் கமலைவிட அர்ஜூனுக்கு மிக நேர்மையான அதிகாரி கதாபாத்திரம். நாசரின் நடிப்பைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். பிசி ஸ்ரீராம் இந்தப் படத்தைப் பற்றிச் சொல்லும் போது, ‘கமலைவிட நாசரைத் திறம்பட பயன்படுத்தியவர்கள் யாரும் இல்லை. தேவர்மகனும் குருதிப்புனலும் சிறந்த உதாரணங்கள். வில்லனின் உக்கிரத்தை எந்தப் பெரிய வசனங்களும் இல்லாமல் நடிப்பிலேயே காட்டும் திறமையாளர். இந்தப் படத்தின் ஹீரோ கதாபாத்திரங்கள் பேசப்பட்டதற்கு முக்கியகாரணம் நாசர்’, என்றார்.

படம் எடுத்துக் கொண்ட களமும் எடுக்கப்பட்ட விதமும் மிக வீரியமானது. படத்தில் நக்சலைட்டுகள் மோசமாக சித்தரிக்கப்பட்டார்கள் என்கிற விமர்சனம் கவனிக்கப்பட வேண்டியது; மறுக்க முடியாததும்கூட. ‘ஆயுதப் போராட்டங்கள் சில பிரச்சினைகளுக்கு தற்காலிக தீர்வுகளைத் தந்திருக்கின்றன. ஆனால் அவற்றால் மானுடத்திற்கு நிரந்தரத் தீர்வுகளைத் தர இயலாது. மாறாக நம் இலக்கை எட்டுவதற்குள் அதனால் ஏற்படும் இழப்புகள் கொடூரமானது’. கமல் ஹார்வர்டில் ஆற்றிய உரையின் சாரம்சம் இது. இதுவே அவரது நிலைப்பாடும்கூட. இரண்டையும் சமன்செய்யவே படத்தின் இறுதியில், தீவிரவாதிகள் உருவாக அரசியல்வாதிகளும் அரசாங்கமுமே காரணம். நாளைய தலைமுறைகள் வணங்கும் கடவுள்கள் துப்பாக்கியாக இல்லாதமைதல் வேண்டும். இது முடிவல்ல, தொடக்கம்’, என்று முடிவுரை வாசித்திருப்பார் கமல். விஸ்வரூபம் வரை இதையேதான் தொடர்ந்து பேசி வந்திருக்கிறார்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button