![](https://vasagasalai.com/wp-content/uploads/2020/12/PicsArt_12-08-08.13.52-780x405.png)
கலைடாஸ்கோப்பினுள் ஓர் எறும்பு
மையத்தில் மிளிர்கிறது
கனிவின் பசும் நிறம்
பக்கவாட்டினில் தெறிக்கிறது சினத்தின் செந்நிறம்
ஊடாகக் கசிந்து நெளிகிறது
காதலின் நீலவண்ணம் ..
அவ்வப்போது உள்ளிருந்து ஒளிர்கின்றன…
வெறுப்பு அன்பு கருணையின் வெவ்வேறு வண்ணங்கள்
இவற்றினிடையே நிலைத்திருக்கிறது
கருமைத் துயர்….
கலைடாஸ்கோப்பினுள் புகுந்த எறும்பென,
ரசித்து
திகைத்து
திளைத்து
களித்து
துடித்துக்… கடக்கிறேன்,
அவளின் முகம் நோக்கும்
ஒவ்வொரு கணத்தையும்.
***
அருந்தாத தேநீர்
அவள் கூறட்டுமென அவனும்
அவன் உரைக்கட்டுமே என அவளும்
எண்ணி… எண்ணி
சொல்லிக் கொள்ளாமலேயே இருக்கின்றனர்
உயிரினைத் தக்கவைக்கும் அந்த இதமான சொற்களை
அடுத்தவர் அருந்த வேண்டுமேயெனக் கருதி
இருவரும் அருந்தாமல் வைத்த
தேநீரென
ஆறி, ஆடை படர்ந்து
குளிர்ந்து கிடக்கின்றன
பரிமாறப்படாத அச்சொற்கள்…
***