இணைய இதழ்இணைய இதழ் 48கவிதைகள்

மின்ஹா கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

சதுரங்க விளையாட்டு

பச்சையை மஞ்சளென்றும்
சிவப்பை வெள்ளையென்றும்
கருப்பை கடும்நீலமென்றும்
விசித்திரமாக நம்ப விதிக்கப்படுகையில்,
இருமையை ஏகமனதாய் ஏற்று
உதாசீனமாகும் யதார்த்தம்
சதுரங்க நர்த்தனத்தை
நிகழ்த்துகின்றது

ஏனைய காய்கள்
அவற்றின் பாத்திரமேற்று
கட்டங்களுக்கு வெளியே
ஆடிக்கொண்டிருக்கின்றன

நிறங்களையும்
காய்களையும்
பூக்களையும்
கருப்புவெள்ளையால்
திரையிடுகின்றது
அகாலம்

படிப்பினையின் போதெல்லாம்
அசைபோடும்
வாழ்வின் பாடல் ஒன்று
அடிக்கடி மறந்துவிடுகிறது

சிறுகுழந்தைகளின்
விளையாட்டுக் கூடாரம்
தலைகுனிந்து நுழையும்
புகலிடமாய் வளர்க்கின்றது
அந்தத்தின் இளைப்பாறலை

தளர்ந்த தொனியில்
தளுதளுத்து ஒலிக்கும் குரலை
இரகசிக்கும் மெய்மை
காலத்தின் குறுக்குவெட்டாக இருமுகங்களை வரைகின்றது
முகங்களில் ஒன்றை மட்டுமே ஒளியில்
உலவ விட முடிகின்றது

***

தூய்மையின் பெயரால்

வெள்ளைச்சட்டையை உடுத்திய இருவர்
சிலாகித்துக்கொள்கின்றனர்
வெளிப்புற வெண்மையின்
மிகுஒளியை

ஒரு புள்ளியைக் காட்டி
இது கறை என்கிறார் ஒருவர்
மற்றையவர் அது எனதல்ல
அப்பியிருக்கும் பொட்டு
அதை அறிந்திலேன் என்றார்

வேறு நிறமொன்றிடம்
விசாரிக்கின்றார்கள்
யார் ஒட்டியது
இரு பார்ப்போம்

குற்றவாளிக்கூண்டில்
ஏனைய நிறங்களையெல்லாம் நிறுத்தி
யார் அப்பியது என வினவுகிறார்கள்

வெண்மையின் ஒளி வளர்க்க
கத்திச்சண்டை போடுகிறார்கள்

புற ஒளியைத் தீட்ட
உள்ளொளியை இழக்கிறார்கள்
தோலுரித்து தோலுரித்து
தம் சுயத்தை நிரூபிக்கிறார்கள்

ஈற்றில் அப்பியிருந்த கருப்புப்பொட்டு
அலைச்சலில் அயர்ந்த ஈயாக
சட்டையில் இருந்து
சேறும் சகதியுமாய் விடைபெற்றது

***

எழுச்சியின் புதிய வரலாறு

முன்பு கிளைபிரிந்திருந்த நீர்ச்சுனைகள்
அகநிலங்களில் அருத்திரண்டு
எண்திசையிலும் ஒரே வெளிச்சத்தை நோக்கியே படை சூழ்கின்றன

ஒரே அணியாய் பற்றியிருந்த கரங்கள்
பற்றற்ற கயமைகள் யாவற்றையும்
குவித்துப் பற்றியெரித்தன

தேசத்தில் படிந்திருந்த காலவழுவை
துடைத்தழிக்க மழைமேகங்களாய் மாறி
சூளுரைத்தனர்

நிகழ்த்திய துரோகத்தையும் வஞ்சனையையும்
பாடலாய்ப் பாடிப்பாடி
அவர்களின் ஆசனங்களில் இருந்து
விடுவித்தனர்

இருண்ட காலங்களில் இடைவிலகி
துளிர்க்கும் பிஞ்சுஇலை காண
கொந்தளித்துக் கடலாகினர்

பேதங்களற்று ஒரு நிழலில்
கைகோர்க்கும் யுகங்கள் கடந்த
கனவு
கோஷங்களில் நனவாகி
வெந்திருந்த இலங்கை மாதா அடிநிலத்தில்
மென்மழைத்தூறலாகி
சுடுவெய்யிலை அணைக்கிறாள்.

***

புதைந்த வரிகள்

நிராகரிக்கப்பட்டவர்களின் பாடலுக்கும்
வஞ்சிக்கப்பட்டவர்களின் பாடலுக்கும் இடையில்
மௌனம் மெழுகுவரிகளை எழுதிச்செல்கிறது

சொட்டிச்சொட்டி உருகும் ஒளி
இருண்மையின் பரவலை
ஏக காலத்தில்
மெழுகுமலைகளாய் எழுப்பி
உள்ளே எரிமலைகளை அமிழ்த்துகின்றது

பேரண்டத்தில் பெயரற்ற விண்மீன்களில்
பாடல்களை சேமிக்கிறார்கள்
அவை பகல் நிறத்தில்
அவர்களையும்
பருமனான நிலவையும் சேர்த்து
ஒரு மீப்புனைவில் புதைத்துக் கொள்கின்றன.

******

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button