
ஆதவனும், மருதாணியும் ஒரு வாரம் பாட்டி வீட்டுக்குச் சென்றிருந்தனர். மித்ரன், அமுதா இருவர் மட்டும் தனியாக விளையாடிக் கொண்டிருந்தனர். அதனால் அவர்களுக்கு ரொம்ப போர் அடித்தது. அதன் பிறகு நகுலன், அகில், மினிதா எல்லோரும் வந்தனர்.
வெகு நேரம் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். நேரம் ஆக ஆக அந்த விளையாட்டு எல்லோருக்கும் சலிப்பைத் தந்தது. அதனால் வேறு என்ன விளையாட்டு விளையாடலாம் என்று யோசிக்க ஆரம்பித்தனர். அப்போது பக்கத்து வீட்டு வானதி அக்கா வந்தார். அவரது குழந்தைக்கு காட்டி விளையாட நிறைய பொம்மை படங்கள் போட்ட அட்டைகள் வைத்திருந்தார்.
வானதி அக்கா: என்னடா எல்லாரும் விளையாடாம சும்மா உக்காந்து இருக்கீங்க? போர் அடிக்குதா?
நகுலன்: ஆமாக்கா, ரொம்ப நேரமா ஓடிப் பிடிச்சு விளையாண்டு காலும் வலிக்குது. அதே விளையாட்ட தொடர்ந்து விளையாட போரும் அடிக்குது.
வானதி அக்கா: அப்படியா! சரி நான் ஒரு குட்டி கேம் சொல்றேன். கொஞ்ச நேரம் விளையாடுவோம்.
எல்லோரும் கோரஸாக “சரி அக்கா” என்றனர்.
இப்போது வானதி அக்கா ‘இங்கி பிங்கி பாங்கி’ போட்டு அகிலைத் தேர்ந்தெடுத்து அழைத்தார்.
வானதி அக்கா: இந்த அட்டையில் என்ன இருக்குன்னு பார்த்து அவங்களுக்கு நீ சைகையால சொல்லணும், சரியா?
அகில்: சரி அக்கா
அட்டையில் சிங்கம் படம் இருந்தது.
சிங்கம் போல் அகில் கத்த முயற்சி செய்து ஒரு மாதிரியாக ‘கர் கொர்’ என சத்தம் போட்டான். எல்லோரும் ‘வாந்தி வாந்தி’ என்று கத்தினர். வானதி அக்காவால் சிரிப்பை அடக்க முடியவில்லை. கண்ணீர் வரச் சிரித்தார்.
“டேய் அது சிங்கம் டா” என்றாள் வானதி அக்கா. இப்போது எல்லோருக்கும் சிரிப்பு தொற்றிக் கொண்டது. கலகலவென்று சிரித்தனர். அடுத்து வெவ்வேறு படங்கள் வந்தன. ஆளாளுக்கு தப்பும் தவறுமாகக் கூறினர். அரை மணி நேரம் அவர்களுக்கு கலகலப்பாக இருந்தது. அதற்கு மேல் நேரமாகியதால் “எனக்கு வீட்ல வேலை இருக்கு. நீங்க வேற விளையாட்டு விளையாடுங்க” என்று கூறி வானதி அக்கா சென்று விட்டார்.
மித்ரனும் அமுதாவும் வீட்டுக்குச் சென்றனர். பின்பு எல்லோரும் அவரவர் வீட்டிற்கு கிளம்பத் தொடங்கினர். அப்போது ஆதவனும் மருதாணியும் சேர்ந்து மித்ரனுக்கு வீடியோ கால் செய்தனர்.
ஆதவன்: ஹேய் மித்ரன் எப்படி இருக்க?
மித்ரன்: நான் சூப்பரா இருக்கேன்டா. நீங்க இல்லாம எங்களுக்கு ரொம்ப போர் அடிக்குது.
ஆதவன்: அமுதா எங்கடா? அவளக் கூப்பிடு. நான் உங்களுக்கு ஒன்னு காட்டப் போறேன்.
மித்ரன்: என்னன்னு சொல்லுடா.
ஆதவன்: அமுதாவையும் கூப்பிடு. அஞ்சு நிமிஷத்துல மறுபடி கால் பண்றேன்.
மித்ரன்: சரி. கூப்பிட்டு வரேன்.
ஆதவன் சற்று நேரத்தில் போன் செய்தான். அந்தப் பக்கம் ஆதவனும் மருதாணியும் இருந்தனர். இந்தப் பக்கம் மித்ரனும் அமுதாவும் இருந்தனர். அப்போது ஆதவன் கேமராவைத் திருப்பி அவன் செய்திருந்த ஒன்றைக் காட்டினான். மித்ரனும் அமுதாவும் சேர்ந்து ‘வாவ்’ என்று கத்தினர். ஒரு பெரிய ஸ்கேட்டிங் செய்யும் இடத்தை நிறைய கட்டைகள் வைத்து தாத்தாவின் உதவியுடன் ஆதவன் தயார் செய்து இருந்தான்.
“எவ்வளவு பெரிய இடம்! இங்க ஸ்கேட்டிங் விளையாடினால் எவ்வளவு நன்றாக இருக்கும்?” என்றான். மித்ரனிடம் ஏற்கெனவே ஸ்கேட்டிங் போட் இருந்தது. அதை வைத்து எல்லோரும் ஸ்கேட்டிங் பயின்று இருந்தனர். ஆனால் இவ்வளவு பெரிய இடத்தில் இதுவரை ஒரு முறை கூட ஸ்கேட்டிங் செய்ததில்லை. இப்போது மித்ரனுக்கும் அமுதாவுக்கும் ஆதவனுடைய தாத்தா ஊருக்குச் செல்ல வேண்டும் என்று ரொம்பவும் ஆசையாக இருந்தது.
இருவரும் அவர்களது வீட்டிற்குச் சென்று கேட்டனர். எல்லோரும் குடும்ப நண்பர்கள் என்பதால் அவர்கள் வீட்டினரும் சம்மதித்தனர். இருவரும் ஆதவன் அப்பாவுடன் ஆதவனின் பாட்டி வீட்டுக்குச் செல்ல தயாராகினர். ட்ரெயின் பயணம் படு ஜாலியாக இருந்தது. வரும் வழியில் கொண்டாட்டத்துடன் ஊர் வந்து சேர்ந்தனர். மித்ரனுக்கும் அமுதாவுக்கும் பயங்கர பரபரப்பாக இருந்தது. சீக்கிரம் அந்த இடத்திற்குச் சென்று ஸ்கேட்டிங் விட வேண்டும் என்று துள்ளினர்.
வீடு வந்தவுடன் மித்ரன் ஆதவனைத் தான் தேடினான். ஆதவனும் மருதாணியும் சிரித்துக் கொண்டே ஓடி வந்தார்கள். உடனே வீட்டின் பின்புறம் இருந்த அந்த இடத்திற்குச் சென்று ஸ்கேட்டிங் இடத்தைப் பார்த்தார்கள். அடேங்கப்பா! என்று கூறினான் மித்ரன்.
பெரிய கட்டைகளைச் சேர்த்து வளைந்து நெளிந்து ஆறு போல் ஸ்கேட்டிங் செய்ய அழகான இடத்தை உருவாக்கியிருந்தனர். எல்லோருக்கும் ஸ்கேட்டிங் விட ஆசையாக இருந்தது. இதை எப்படி செஞ்சீங்க என்று அமுதா தாத்தாவைப் பார்த்தாள்.
ஆதவனுக்கு இப்படி ஒரு ஸ்கேட்டிங் இடத்தை உருவாக்க ரொம்ப ஆசை என்று வந்தவுடன் கூறினான். அதனால் அதற்கு என்ன அளவுகளில் கட்டைகள் தேவை என்று இருவரும் விவாதித்து, கட்டைகளை வெட்டி ஆணி அடித்து இந்த இடத்தை ஒரு வாரத்திற்குள் உருவாக்கினோம் என்றார் தாத்தா.
முதலில் அமுதா ஸ்கேட்டிங் போர்ட் எடுத்துக்கொண்டு மேலே ஏறி நின்றாள். “இப்போது என்னுடைய பொட்டன்ஷியல் எனர்ஜியை (Potential Energy) எல்லாம் கைனட்டிக் எனர்ஜியா (Kinetic energy) மாத்தப் போறேன்” என்று கத்திக் கொண்டே ஸ்கேட்டிங் விட ஆரம்பித்தாள்.
ஆதவனைப் பார்த்து மித்ரன் கேட்டான். “என்னடா சொல்ற அவ?” அதற்கு ஆதவன் “பொட்டன்ஷியல் எனர்ஜின்னா பயன்படுத்தாத எனர்ஜி. கைனட்டிக் எனர்ஜினா நாம இயங்கும்போது செலவாகுற எனர்ஜி” என்று விளக்கம் கூறினான்.
“ஓ… மேடம் பிசிக்ஸ் படிக்க ஆரம்பிச்சிருக்காங்க போல” என்றான் மித்ரன். ஒவ்வொருவரும் மாறி மாறி அதையே கத்திக்கொண்டு விளையாடினர். அடுத்த ரவுண்டில் ஆதவன் E = (1/2) mv square என்று கத்திக் கொண்டே குதித்தான். இந்த முறை அமுதா அதற்கு விளக்கம் கூறினாள். E என்றால் இயக்க ஆற்றல் அதாவது கைனட்டிக் எனர்ஜி, m என்றால் நிறை, v என்றால் விரைவு, velocity.
இருவரும் மாறி மாறி ஃபார்முலாக்களை கத்திக் கொண்டே விளையாடியதைப் பார்த்து மித்ரன் கத்த ஆரம்பித்தான். “டேய் போதும்டா ஃபார்முலா. போய் சாப்பிடலாம்” என்று அழைத்தான். எல்லோரும் சிரித்துக் கொண்டே சாப்பிடச் சென்றனர். அடுத்த ஒரு வாரத்திற்கு அவர்களின் இந்த விளையாட்டு தொடர்ந்தது. அவர்களது மற்ற நண்பர்களுக்கும் வீடியோ கால் செய்து, அவர்களிடமும் காட்டினர். “இன்னொரு விடுமுறைக்கு எல்லோரையும் அழைத்துச் செல்கிறேன்” என்று ஆதவன் அப்பா கூறினார்.
(முற்றும்)