
நேற்றிரவு நண்பர் அப்துல் காதிர் அலைபேசியில் உரையாடினார். பேசிய புள்ளிகளில் சூஃபி காமிக்ஸ் என்பதும் ஒன்று. முஹம்மது அலி வக்கீல் மற்றும் முஹம்மது ஆரிஃப் வக்கீல் என்னும் இருவர் இணைந்து சூஃபி படக்கதை நூல்கள் வெளியிட்டிருக்கிறார்கள். அவற்றில், மவ்லானா ரூமி பற்றிய காமிக்ஸ் நூல் ஒன்றை நான் வாங்கி வைத்திருக்கிறேன். தானும் ஒன்று வாங்கியதாக நண்பர் சொன்னார்.
பால்ய வயதில் படக்கதை நூல்கள் நிறைய வாசித்திருக்கிறேன். ஓவியம் மற்றும் இலக்கியம் என்னும் இரண்டு கலைத்துறைகள் முயங்கிய ஒரு கலை வடிவம் அது. வளர்ந்த பின்னரும் காமிக்ஸ் மீது ஓர் ஈர்ப்பு இருக்கிறது. ஆனால், நாற்பதைத் தாண்டிய அகவையில் தத்துவார்த்தமான கனத்த சிந்தனைகளை விரும்பும் மனநிலையில் காமிக்ஸ் ஒத்து வருமா? வரும் என்கிறார் தத்துவச் சிந்தனைகளை காமிக்ஸ் சித்திரங்களாக வரையும் கிராண்ட் ஸ்நைடர்.
அவர் செய்த கலைச் சாதனையை ஒற்றை வரியில் இப்படிச் சொல்கிறார்கள்: தத்துவம், கவிதை மற்றும் கேலிச் சித்திரம் ஆகியவற்றின் கலவை. தன் திருப்திக்காக மட்டுமே தன் சிந்தனைகளை காமிக்ஸாக வரைய ஆரம்பித்தவர் பின்னர் அவற்றை, ’தி ஷேப் ஆஃப் ஐடியாஸ்’ என்னும் நூலாக வெளியிட்டுள்ளார். கடந்த பதினான்கு ஆண்டுகளாக தத்துவச் சிந்தனைகளை காமிக்ஸாக வரைந்து வருகிறார். அவற்றின் தொகுப்புகள் நூலுருவம் பெற்றுள்ளன: ஒன் பாய் வாச்சிங், தேர் இஸ் எ ரெய்ன்போ, மை வோர்ட்ஸ், தி ஆர்ட் ஆஃப் லிவிங், வாட் சவுண்ட் இஸ் மார்னிங், வாட் கலர் இஸ் நைட், மற்றும் ஐவில் ஜஜ் யூ பை யுவர் புக்ஷெல்ஃப். அவரின் தத்துவக் காமிக்ஸ் துணுக்குகளில் நான் ரசித்த சிலவற்றை இங்கே தருகிறேன்.
எழுத்தாளர்கள் எல்லோரும் தனிப் பிறவிகள் என்று கிட்டத்தட்ட எல்லா எழுத்தாளர்களும் அடிக்கடி எழுதி வரும் காலத்தில் நாம் வாழ்கிறோம். அப்படியே இருக்கட்டும். சாமானிய மனிதர்களின் மனம் போன்றது அல்ல எழுத்தாளனின் மனம். அது எப்படி இயங்குகிறது என்பதை ஸ்நைடர் வரைந்து காட்டுகிறார். தத்துவவாதி ரெனே தெகார்த்தே உதிர்த்த, மிகவும் புகழ்பெற்ற வாசகமான, “கொஜிடோ எர்கோ சும்” (நான் சிந்திக்கிறேன், எனவே இருக்கிறேன்) என்பதைத் தலைப்பாக்கி அதிலிருந்து நீள்கிறது அவரது சித்திரம், இப்படி:
நான் சிந்திக்கிறேன், எனவே இருக்கிறேன்.
நான் சிந்திக்கிறேன். எனவே, அளவுக்கு மீறிச் சிந்திக்கிறேன்.
நான் சிந்திக்கிறேன், எனவே வருந்துகிறேன்.
நான் சிந்திக்கிறேன், எனவே என்றேனும் ஒருநாள் நிறுத்திவிடுவேன்.
நான் என்னைப் பற்றியே வளைத்து வளைத்துச் சிந்திக்கிறேன்.
நான் மிகவும் மோசமானதைச் சிந்திக்க முனைகிறேன்.
நான் சிந்திப்பதைக் கடந்து போக விரும்புகிறேன்.
என் எண்ணங்களை விட்டு விடுதலையாக என்னால் முடியவில்லை.
நான் சிந்திக்கிறேன், எனவே படிக்கிறேன்.
நான் சிந்திக்கிறேன், எனவே மீண்டும் சிந்திக்கிறேன்.
நான் சிந்திக்கிறேன், எனவே எழுதுகிறேன்.
நான் எழுதுகிறேன், எனவே இருக்கிறேன்.
ஒவ்வொரு வரிக்கும் ஒரு படம் வரைந்திருக்கிறார் ஸ்நைடர். எழுத்துப் பிரதியாக மட்டும் வாசிக்கும்போது ஆத்மாநாமின் கவிதை போலில்லை? அதிலும் அந்தக் கடைசி வரி, தெக்கார்த்தேவுக்கே அல்வா கொடுக்கிறதே!
எழுத்தாளனை விடுவோம். வாசகனைக் கொஞ்சம் கவனிப்போம். ”வாசகனின் படிநிலைகள்” என்னும் தலைப்பில் ஒரு காமிக் துணுக்கு வரைந்திருக்கிறார் ஸ்நைடர். அந்தப் படிநிலைகளில் உங்களுக்குப் பொருந்தி வருபவை எத்தனை என்று பாருங்கள்:
- நூல்களைக் கண்டுபிடித்தல்
- நூல்களின் மீது காதல் வயப்படுதல்
- நூல்களே உங்கள் அடையாளம் ஆதல்
- மனித உறவுகளுக்கு மாற்று: புத்தக உறவு!
- புத்தகங்கள் – ஒழித்துக்கட்ட முடியாத விரக்தி (’நானே ஒரு நூல் எழுத வேண்டும்’.)
- இந்தப் புத்தக சங்காத்தமே வேணாம்.
- நூல்களை மறுகண்டுபிடிப்புச் செய்தல்.
- நூல்கள் சேகரித்தல் (சேகரித்துக் குவித்தல்.)
- நூல்களை அடுத்த தலைமுறைக்கு அளித்தல்.
எனக்கு ஒரு நாலைந்து பொருந்துகிறது. நேற்று பேசிய என் நண்பருக்கும் எனக்கும் இதில் எட்டாம் புள்ளி ஒற்றுமை. என்னிடம் உள்ளவை நான் சேகரித்த நூல்கள். அவரிடம் அவரின் பாட்டனார் வைத்திருந்த நூல்களும் அவர் வாங்கிச் சேர்த்ததுமாக ஒரு வீட்டு நூலகம் இருக்கிறது. இருவரும் புத்தகப் புலிகள். (புத்தகப் புழு என்று சொல்வதுதான் மரபு. ஆனால் அது இழி உவமையாக இருக்கிறது. நண்பரை அப்படிக் குறிப்பிடுவது நாகரிகம் ஆகாது. அப்படியே என்னையும் உயர் உவமையால் பாராட்டிக்கொள்ள ஒரு வாய்ப்பு!) ஸ்நைடரின் இந்தத் துணுக்கைப் படித்த பின்னர் அந்தக் கடைசி புள்ளியைப் பற்றியே மனம் சிந்திக்கிறது. என் சேகரத்தில் ஒரு பத்து நூல்களையாவது என் சந்ததி வாசிக்குமா?
அடுத்து, மனித உளவியல் மீதான ஒரு வெளிச்சம். ”அத்தனைக்கும் ஆசைப்படு” என்று சொல்கிறாரே ஜக்கி வாசுதேவ், அந்த அனைத்தும் என்பது ஒரு சிலந்தி வலையாகி நம்மைச் சிக்க வைக்கிறது என்பதை உணர்த்துகிறார் ஸ்நைடர். அதன் விவரம்:
நான் மகிழ்ச்சியாய் இருக்க என்ன வேண்டும்?
எல்லாம்!
ஆனால், அனைத்தையும் சமனமாக வைத்திருப்பது கடினம்.
என்னால் முடிந்த அளவு சிரமப்பட்டு முயல்கிறேன்.
இருந்தும், எனக்கு நிறைவாக இல்லை.
பிறர் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.
போதும் என்று அதன் தேவையை விட்டு என்னை வெறுமை ஆக்குகிறேன்.
அப்புறம் அதைத் துரத்திக்கொண்டு ஓடுகிறேன்.
கடைசியில், நான் விரும்பியதை நான் அடைந்ததும்…
அது தரும் மகிழ்ச்சி தற்காலிகமானது.
ஒருவேளை, நான் மகிழ்ச்சியாக இருக்கத் தேவையானவை அனைத்தும்
ஏற்கனவே என்னிடம் இருக்கிறது போலும்!

எதுவரை நமது மகிழ்ச்சி என்பது நமக்குப் புறத்தே உள்ள ஒன்றைச் சார்ந்திருக்குமோ அதுவரை நிறைவான மகிழ்ச்சி என்பதே கிடையாது. சுயத்தின் இருப்பில் மகிழ்ச்சி அடைபவனே எதிலும் பறிபோகாத ஆனந்த நிலையில் நிலைப்பான் என்று ஓஷோ அடிக்கடி சொல்வார். அதைத்தான் ஸ்நைடரின் கடைசி வாக்கியம் நமக்கு உணர்த்த முனைகிறது.
பயன் அல்லது விளைவு என்பதைக் குறிப்பிட ஆங்கிலத்தில் Fruit என்னும் சொல்லினைக் குறியீடாகப் பயன்படுத்தும் வழக்கு உண்டு. அவ்வகையில், ஸ்நைடர் வரைந்துள்ள Fruits of Knowledge என்னுமொரு துணுக்கு என்னைக் கவர்ந்தது. பழைய ஏற்பாட்டில் வரும் ஆதாம்–ஏவாள் தொன்மத்தில் அறிவுதான் விலக்கப்பட்ட கனி என்று காட்டப்பட்டுள்ளது. அதற்கு ஆப்பிள் என்னும் குறியீடும் இடப்பட்டுள்ளது. அறிவுக் கனி என்பது ஆப்பிளாக மட்டும்தான் இருக்க வேண்டுமா என்ன? என்று சிந்திக்கிறார் ஸ்நைடர். அறிவு பெறப்படும் வழிகளுக்கு ஏற்ப அதற்கு வெவ்வேறு பழத்தைக் குறியீடாக்குகிறார்:
ஆய்வு என்னும் ஆரஞ்சு.
முரண் என்னும் பேரி.
மர்மம் என்னும் விதையில்லா தர்பூசணி.
ஐயம் என்னும் துரியான்.
பணிவு என்னும் வாழைப்பழம்.
அகக்காட்சி என்னும் ஆப்பிள்.
இரண்டு காரணங்களால் இந்த மொழிபெயர்ப்பு கொஞ்சம் சிரமமானது. ஒன்று, ஸ்நைடர் ஐரோப்பாவுக்கு உரிய பழங்களைக் குறிப்பிடுகிறார். இரண்டு, சில வாசகங்களில் அவர் குறிப்பிடும் பழங்களை மோனை நயத்துக்காகவே சொல்கிறார் என்று படுகிறது: The pear of paradox, The doubt of durian. ஆனால் பழப்பொருத்தம் சில உண்மைகளை உணர்த்துகிறது. அதைக் கொஞ்சம் சொல்கிறேன்.
’ஆய்வு என்னும் ஆரஞ்சு’ – ஆங்கிலத்தில் The orange of inquiry என்று ஸ்நைடர் எழுதியுள்ளார். இன்குய்ரி என்பதை விசாரணை என்று சொன்னால் இன்னும் சரியாக இருக்கும்தான். மோனை நயம் கருதியே நான் ஆய்வு என்னும் சொல்லினை இட்டுள்ளேன். ஆரஞ்சு என்பதை விட சாத்துக்குடி அல்லது மொசாம்பி என்னும் கனி இன்னும் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் அதற்கு இரண்டு தொலிகள் உண்டல்லவா? உரித்து உரித்துச் சுளையை அடைவதால் ஆரஞ்சு என்பது ஆய்வுக் கனி ஆகிறது. (பலாப்பழம் இன்னும் பொருத்தம் அல்லவா? கல்விப் புலத்தில் செய்யப்படும் பல ஆய்வுகளைப் பார்த்தால் வெங்காயம் என்று சொல்லத் தோன்றுகிறது.)
கனி என்றால் உள்ளே விதை(கள்) இருக்கும். மரபணு மாற்றத் தொழில்நுட்ப விளைச்சல்களில் விதைகளே இருப்பதில்லை. மூல வித்துக்கான அறிவுத் தேடல் மிகவும் மர்மமானதுதான். எனவேதான் அது விதையில்லா தர்பூசணி.
ஐயம் என்னும் துரியான். மேற்பரப்பில் முட்கள் கொண்டுள்ள துரியான் பழம் ஒவ்வாத வாடை கொண்ட ஒன்று. எனவே அதற்கு முள்நாறி என்றும் பெயர் உண்டு. ஐயம் என்பதே மூளைக்குள் உறுத்தும் முள் அல்லவா? ஆனால், துரியான் பழம் மருத்துவ குணம் நிறைந்தது. உடலுக்கு நன்மை தருவது. அதுபோல், ஐயமும் அறிவுக்கு நன்று என்று இந்த ஒப்புமை உணர்த்துகிறது.
பணிவு என்னும் வாழைப்பழம்: நான் என்று ஆணவத்துடன் நெஞ்சு நிமிர்த்தி நடப்பவரைச் சில நிகழ்வுகள் வாழைப்பழத் தோல் வழுக்கிவிட்டது போல் குப்புற அல்லது மல்லாந்து விழச் செய்கின்றன. அங்கே பணிவு பிறக்கிறது. அந்தப் பணிவு என்னும் அறிவுக் கனி வாழைப்பழம் போல் இனிமையானதுதான்.
அகக் காட்சி என்னும் ஆப்பிள்: என்ன இருந்தாலும் ஆப்பிள்தான் அறிவின் ஆரம்பம் போலும். A for Apple. அகர முதல எழுத்தெல்லாம் என்பது போல் ஆப்பிள் முதல அறிவெல்லாம் என்று இந்தத் துணுக்கு உணர்த்துகிறது. தன்னையே அறியாதவன் வேறு எதை அறிந்து என்ன பயன்? அறிவின் ஆரம்பம் தன்னை அறிதலில் இருக்கிறது. ஆதாமுக்கும் ஏவாளுக்கும் அவர்களின் அகத்தை ஓர் ஆப்பிள்தான் அறிவித்துக் கொடுத்தது என்னும் பைபிள் தொன்மத்தின் கோணத்தில் இதை ஸ்நைடர் எழுதியிருக்கிறார். (தமிழ் மண்ணில் ஞானப்பழம் என்பதன் குறியீடு மாங்கனி. நாமெல்லாம் மாங்காய்ப்பால் உண்டு மனமகிழ்ந்து இருப்போர் அல்லரோ?)
தன்னை அறிதல் என்னும் ஞானத்தை எப்படி அடைவது? அதற்கு ஒரு குறிப்புக் காட்டுகிறாள் தமிழ் மூதாட்டி ஔவை: “மோனம் என்பது ஞான வரம்பு” (கொன்றை வேந்தன்# 80) அதற்குக் காரணம் என்ன? மௌனத்தில்தான் நாம் இருப்பின் எதார்த்தத்தை உணர்கிறோம் என்கிறார் ஸ்நைடர்:
எவ்வளவு அதிகமாக மௌனத்தை ஆசிக்கிறேனோ
அவ்வளவு அதிகமாக விலகிப் போகிறது அது.
என் மனத்தால்கூட பேசாமல் இருக்க முடிவதில்லை.
உயரமான இடங்களிலும்
உரக்கக் கேட்கிறது ஓசை.
என்னையே நான் தனிமை செய்கிறேன் எனினும்
ஓசைகளை விட்டு விடுதலை வாய்ப்பதில்லை.
அகன்றேன் அகலிடத்தாரை எனினும்
அங்கேயும் அடைகிறது இடர் உறுத்தும் இரைச்சல்.
எப்போதேனும் கிட்டுகிறது
மௌனத்தின் ஒரு சொட்டு ருசி.
அப்போதெல்லாம் அறிகிறேன்
ஆழ்தளத்தில் ஓர் இருத்தல்.
காமிக்ஸ் எப்படி ஆழமான தத்துவ நிலைகளைச் சொல்கிறது பார்த்தீர்களா? இருப்பு என்பதற்கு எதிர்நிலை இன்மை. இவ்விரண்டும் தாவோவின் வட்டம் போல் ஒன்றை மற்றது சார்ந்தவை என்று கொண்டால் இனி நாம் இன்மை குறித்துப் பேசியாக வேண்டும். அதற்கும் ஒரு காமிக்ஸ் துணுக்கு காட்டுகிறார் ஸ்நைடர். இன்மை (நத்திங்) என்னும் தலைப்பு இடப்பட்டுள்ள அந்த துணுக்கில் அவர் சொல்கிறார்:
இன்மையில் தொடங்குகின்றன எல்லாம்.
ஆனால் இன்மை என்பது நிறைவாக இல்லை.
அது ஏதேனும் ஒன்றாக ஏங்குகிறது.
ஒற்றைப் பொருளாக இருப்பதில் அதற்குத் திருப்தி இல்லை.
அது கலந்துறவாடலைத் தேடுகிறது.
அதில் அது ஒழுங்கின்மை மற்றும் பிறழ்வுகளைக் காண்கிறது.
அது அனிச்சையான வடிவங்கள் உறுகிறது.
இணைக்கப்படக் கோருகிறது.
அதனால் தவிர்க்கவியலாமல் குறுக்கீடுகளுக்கு ஆளாகிறது.
எல்லாம் இன்மையாக அர்த்தப்படுவதை நாம் அஞ்சுகிறோம்.
எனவே, அர்த்தம் கண்டுபிடிக்கிறோம்.
அதனால் இன்மையை ஏதோவொன்று ஆக்குகிறோம்.
வாழ்வியல் அல்லது மெய்யியல் சிந்தனைகளை உவகைச் சித்திரங்களாக வரையும் முறைமையை, ’ஐடியேஷனல் கார்ட்டூனிங்’ என்று குறிப்பதை மகிழ்வுடன் ஏற்கிறார் கிராண்ட் ஸ்நைடர். தன் வரைபடங்கள் கவித்துவம் கொண்டிருக்க வேண்டும் என்று முயல்கிறார். மொழிச் செறிவு, வலிய படிமம் மற்றும் அகதரிசனம் ஆகிய கவிதையின் முக்கியமான மூன்று பண்புகள் காமிக்ஸுக்கும் பொருந்தும் என்று அவர் சுட்டுகிறார்.
கவித்துவமான சிந்தனைகளை காமிக்ஸ் ஆக்கும் போதெல்லாம் ஸ்நைடரின் மொழி வேறொரு தொனி கொள்கிறது. அது ஒலி நயம் உறுகிறது. மறைவு (hidden) என்னும் தலைப்பிட்ட துணுக்கை ஆங்கிலத்தில் வாசித்துப் பார்ப்போம்: “Beneath the lilies / the flash of a fish. // In the head of a flower / a spiral of seeds. // In a Mongolia blossom / a curious bee. // In each oak leaf / the hint of a tree. // On the back of a snail / a perfect whorl. // In the clouds / the curl of a question.”
ஒவ்வொரு இரட்டை வரிகளிலும் நிறுத்தி, மீண்டும் வாசித்துப் பாருங்கள். இது அசல் ஜப்பானிய ஹைகூக்களின் கோப்பு அல்லவா? இதனைத் தழுவல் பாணியில் தமிழ் செய்ய முயல்கிறேன்:
அல்லிகளின் அடியில்
நீருள் மீனின் மினுக்கு.
பூவின் கொண்டையில்
விதைகளின் சுற்றடுக்கு.
ஆம்பலின் மார்பில் ஓர்
ஆர்வக் கோத்தும்பி.
ஆலிலை ஒவ்வொன்றிலும்
விருட்சத்தின் விலாசம்.
நத்தையின் முதுகில் ஒரு
நேர்த்தியான சுழல்.
விண்முகில்கள் தோறும்
வினாக்குறியின் வளைவு.
தன் கவித்துவக் காமிக்ஸ் அல்லது தத்துவக் காமிக்ஸுக்கான தருணங்களை அவர் எப்படி அடைகிறார்? பெருந் தருணங்கள் நிகழக் காத்திருப்பது பேதைமை என்பது அவருக்குத் தெரிகிறது. எல்லோருக்கும் சிறு சிறு கணங்கள்தாம் நிகழ்கின்றன. ஆனால், கவிஞர் அபி சொல்வது போல், கணம் என்னும் புள்ளியின் மூடியைத் திறந்து அதனுள் பாய்ந்துவிடத் தெரிய வேண்டும். அப்படித்தான் அகதரிசனங்கள் அடையப்படுகின்றன. ”சிறிய கணங்களை நான் எனது ஸ்கெட்ச் ஏட்டில் தோராயமான கையலைவான கிறுக்கல்களில் பிடித்து வைக்க முயல்கிறேன். பின்னர், ஒரு கணம் பெரிய விசயத்தைச் சுட்டுவதாகக் காணும்போது அதனை நான் முழுப்பக்க காமிக்ஸ் ஆக்க முனைகிறேன்” என்று ஸ்நைடர் சொல்வதை வாசிக்கும்போது நான் கவிஞர் தேவதேனை நினைவு கூர்ந்தேன். அவரது உலகில்தான் எத்தனை எளிய சிறிய பொருட்கள். அவைதாம் எவ்வளவு பெரிய உண்மைகளைப் பேசுகின்றன!
இக்கட்டுரையின் தலைப்புக்கு என்ன அர்த்தம் என்று மூளையைக் கசக்க வேண்டாம். “கொஜிடோ எர்கோ சும்” (நான் சிந்திக்கிறேன் அதனால் இருக்கிறேன்) என்று சொன்னார் ரெனெ தெகார்த்தே. நான் எழுதுகிறேன் அதனால் இருக்கிறேன் என்கிறார் கிராண்ட் ஸ்நைடர். அதற்கான லத்தீன் வாக்கியம்தான் ஸ்க்ரீபோ எர்கோ சும்!
******