இணைய இதழ்இணைய இதழ் 81சிறுகதைகள்

அசனம்மாளின் தற்(காப்பு)கொலை – ஆமினா முஹம்மத்

சிறுகதை | வாசகசாலை

காசிம் விடியகாலையே பள்ளிவாசலுக்குச் செல்பவர், உலகநடப்பும் முஹல்லா பஞ்சாயத்துகளையும் அலசி ஆராய்ந்துவிட்டு வீடு சேர காலை நாஷ்டா வேளை ஆகிவிடும்

பள்ளிக்கூட மைதானத்தில் நடைப்பயிற்சிக்கான பிரத்யேக ஆடையுடன் தனித்து தெரிவது ராஷிதா. நேற்றைய ஜடை பின்னலின் அச்சுடன் குதிரைவால் இடமும் வலமுமாக தாவிக்கொண்டிருந்தது. மைதானத்திற்கேயான ஒழுங்குமுறைகள் தலை முதல் ஷூவரை பூரணமாய் அமைந்திருந்தது. தலையிலிருந்து முக்காடு நழுவி விழுந்து அரைமணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது. அது ஹசனுக்கு பொருட்டாய் இல்லை. அவள் கைகளை கோர்த்தபடி அவனும் நடந்தான். இல்லையில்லையானையை விடவும் மெல்லமாய்தான் நகர்ந்தனர்

இந்த ஊரில் காதல் ஜோடிகள் இவ்வாறாக ஊர் பார்க்க நடந்துபோக வாய்ப்பில்லை. ஹசனின் மனைவிதான் ராஷிதா. இறுக்கமான ஆடை, நழுவிய முக்காடு, அன்ன நடை, தீராப்பேச்சுகள் இதெல்லாம் திருமணமாகி ஒருமாதம் கூட ஆகியிருக்கவில்லை என்பதாக அர்த்தம். என்ன மாயமோ தெரியவில்லை, திருமணமான புதிதில் ஆண்களில் பலர் பரந்துபட்ட, எல்லைகளற்ற பெண்ணியம் பேணுபவர்களாக தற்காலிகமாக தன்னை மாற்றிக்கொள்கிறார்கள்

வீடோ பெரும் வெறுமையைச் சுமந்திருந்தது. அதை ஈடு செய்யும் விதமாய் அசனம்மாள் மூளை முதல் நரம்பு வரை பேரிரைச்சலும் நெடிய அதிர்வுகளுமாய் உடல் ஆடிக்கொண்டிருந்தது. உயிரை மாய்க்கலாமா , மீத காலமும் கடத்திவிடலாமா என்ற வாக்குவாதங்களில் அவளே அவளுக்காகவும், அவளை எதிர்த்தும் இரண்டு தரப்புமாக ஆக்ரோசமாய் விவாதம் புரிந்துகொண்டிருந்தாள். நடுவராய் தீர்ப்பளித்தும் மேல்முறையீட்டில் மீண்டும் விவாதம் தொடங்கி வேறுவித தீர்ப்பளிப்பதுமாய் பெரும் கலவரப் பொழுது அது

தற்கொலையென்பது முட்டாள்களின் உடனடித் தீர்வாய் இருக்கலாம். அசனம்மாள் கோழை இல்லை! அதனால் தான் ரிக்டரற்ற அளவில் உளபூகம்பம்

தெரு முக்கில் பால்காரி மருமகள் தனக்குதானே தீ வைத்துக்கொண்டபோது தெருவே கூடிட, வேடிக்கை பார்த்தவர்களில் அசனம்மாவும் ஒருத்தி. பாதியுடன் காப்பாற்றியபோதே உடம்பில் துணி இல்லாமல் நிர்வாணமாகத்தான் அள்ளிப்போட்டுக்கொண்டு போனார்கள். உயிர் போனாலும் மானம் பெரிதாய் பட்டதால் ஆரம்பம் முதலே தற்கொலைக்கு தீயை தேர்ந்தெடுத்துக்கொள்ளவில்லை

எலி மருந்தை குடித்து இறந்தவர்களைப் பற்றிய செய்திகள் தினசரி காதுக்கு எட்டும்தான். ஆனால், வீட்டை நாசம் செய்துகொண்டிருந்த எலியைக் கொல்ல, மஞ்சள் பாஸ்பரஸ் பேஸ்ட்டை தக்காளியின் மீது வைத்த மாத்திரத்தில் அதிலிருந்து புறப்பட்ட புகையை யோசித்துப் பார்த்தாள். நாக்கில் வைக்கும்போதே வெந்துபோனால் தொண்டையில் எப்படி இறக்கி? அது உள்ளுக்குள் எப்போ இறங்கி….? தோல்வி ஏற்படுத்தும் முயற்சி. தூர வீசினாள்

கூர்கத்தி, ஃபேன், கிணறு, ஆறு, மொட்டைமாடிஒருத்தி சாகத் துணிந்தால் வீடும் உலகமும் எத்தனையெத்தனை தெரிவுகளைத்தான் முன்வந்து கொட்டுகிறது

அவள் மண்ணெண்ணெயில் சுலபத்தன்மை கண்டாள். ஒரு லிட்டர் டொரினா பாட்டிலில் அடைபட்ட ரேசன் கடை மண்ணெண்ணெயும் அவள் முன்பு அமர்ந்து தன் பிறவியின் இறுதிவடிவத்தைக் காண காத்திருந்தது. எரிபடுவதா, உடலுக்குள் களேபரம் செய்வதா… ?

அசனம்மாளுக்கு சாகவேண்டும் என்ற தலையெழுத்தெல்லாம் பிறவி முதலே தொடர்ந்து வந்ததுதான். அப்போதெல்லாம் விட்டு இப்போதுதான் சாக முடிவெடுத்திருக்கிறாள் எனில் அதன் பின்னே இருக்கும் கதை ஆராய்ச்சிக்குட்பட்டது

ராஷிம்மா! காசிமு மாமுதான் வீட்டுக்கு மெயினு! அவர் வச்சதுதான் இங்கே சட்டம், பாத்துக்கோ! அவகளோட மட்டும் எப்பவும் மல்லுகட்டிடாத. மாமுவ கைக்குள்ள போட்டுக்கிட்டா உன் புருசன் உனக்கு சொந்தம். அதுக்கப்பறம் இந்த வீட்டுக்கு மகாராணி நீதான். உன் மாமியாப் பொம்பளைலாம் கண்டுக்கத் தேவையில்லஅவளையெல்லாம் உன்னய அதிகாரம் பண்ண ஒருபோதும் விட்டுடாத. புரிஞ்சதா?”

நேத்து ராஷிதாவைப் பார்க்க வந்த அவள் அம்மாவுடன் அவள் தனியே ரகசியம் பேசிக்கொண்டிருந்ததில் சில வாக்கியங்கள் காற்று வழியே கசிந்து, பயணப்பட்டு, ஓடிவந்து அசனம்மா காதில் நுழைந்துவிட்டதில் இருந்து அந்த சொற்கள் அவளின் நெஞ்சை அறுத்துக்கொண்டேயிருந்தது

எப்படி கணக்கிட்டாலும் அசனம்மாளுக்கு 40 வயதுக்குள்ளாகதான் இருக்கும். பனிரெண்டில் பெரியளாகி, பதிமூன்றில் காசிமுக்கு மனைவி ஆகி, 15 வயதுக்குள்ளாகவே ஹசன்க்கு தாயாகி, கிட்டத்தட்ட 27 வருடங்களாய் வீட்டின் வேலைக்காரி

காசிம் கடும் உழைப்பாளி. இளமையில் துறுதுறுவென ஓடியாடி வேலை பார்த்து காசு கையில் புழங்கிய காரணத்தால் கதிஜாவின் அத்தாவிற்கு மிகப் பிடித்துப் போனது. ஓட்டப்பந்தயத்தில் இறுதி வினாடிகளில் ஓட்டம் வேகமெடுப்பதைப் போல ஊரில் வேறு யாரும் முந்திகொள்ளும் முன் சிறுபெண் கதிஜாவை காசிமுக்கு கட்டிவைத்துவிட்டார். ஹசனுக்குப் பின் மாறியஅசனம்மாபெயர் கூட அவளின் விருப்புவெறுப்புக்கு உட்படுத்தாது காலவோட்டத்தோடு சமரசம் செய்து அவள் ஜீரணித்துக்கொண்டாள்அவளுக்கென்று உலகம் இல்லை. அவளுக்கென்று ஆசைகளும் இருந்ததில்லை. குளத்தாங்கரையில் சேகரித்த களிமண்ணில் சொப்பு சாமான் தயாரித்து விளையாடிக்கொண்டிருந்தவள், சட்டென அப்படியப்படியே போட்டுவிட்டு தலைக்கு முக்காடிட்டு திருமணத்திற்குத் தயாராகி, அடுத்த பரிணாமம் அடைந்து சூழலுக்கு நியாயம் சேர்த்ததுபோலெல்லாம் காசிம் ஒருபோதும் தன் வயதுக்கு ஏற்ப நடந்துகொண்டதில்லை. அசனம்மாள் பிழிந்த கடைசி களியுருண்டையின் முண்டமில்லா பிண்டம் தன் ஊனத்தின் காரணகர்த்தாவான அவள் மீது கடுஞ்சாபம் பொழிந்ததோ, நீர் மல்க அழுததோ என்னவோ அசனம்மாவே காசிமின் பிழிபொருள் ஆகிப்போனாள்

ஒவ்வொரு நாளும் நரகமாய் கழிந்தது. இரவை அல்லாஹ் படைத்திருக்கக் கூடாதவொரு பொழுது என தீர்க்கமாய் நம்பியிருந்தாள். ‘ஓடியாடி ஒழைக்கிறவனுக்கு தகுந்தாப்ல சாப்பாடு போடணும்என அம்மா நாசுக்காய் சொன்னது பாதி புரிந்தும் புரியாமலும் காலத்தை ஓட்டியதில் அசனம்மாள் அடுத்தடுத்து இரண்டு பிள்ளைகளுக்குத் தாயாகி, இளமையின், நரம்புகளின், இரத்தத்தின் சத்துக்களையெல்லாம் இழந்து நின்றதுதான் மிச்சம். வெளிச்சாப்பாடுகளில் காசிம் நாட்டம் கொண்டபோது முழுமையாக வாழ்க்கை புரிந்துஎன்னை விட்டால் போதும்என்ற மனநிலைக்குச் சென்றிருந்தாள். காசிமின் எந்த செயல்பாடுகளின் மீதும் அவளுக்கு கேள்வியோ, சுய கருத்தோ இருந்ததில்லை

மனித மனதிற்கென்று ஒரு வக்கிர இயல்புண்டு. தன்னோடு தவறுக்கு வேறொருவரை குற்றஞ்சாட்டும். காசிமின் இளமைக் கால உடல்தேவைகளுக்கு வேறுவேறு பெண்களை நாடிச் சென்றதுக்கும் அசனம்மாள் காரணமாகிப் போனது காசிம்களால் விதிக்கப்பட்டவை. ஒன்றுசொன்னாற்போல் ஊரும் சனமுமே காசிம்மை அலட்டிக்கொள்ளவில்லை. ஊரார்க்கெல்லாம் வாரிவாரி கொடுத்து வாய் அடைக்க காசிமுக்குத் தெரிந்திருந்து. ஆண்களாய் பிறப்பது வரம்! அன்றன்றே பாவங்களைக் கழுவி புனிதர்களாகிக்கொள்வார்கள். மீண்டும் பாவத்தாளியாகி மீளவும் புனிதவானாய் சுழற்சிமுறையில் அவதாரமெடுத்துகொள்வதில் பெரிய சிரத்தை காசிம்களுக்குத் தேவைப்படுவதில்லை

வாந்திபேதியால் சுருங்கிப்போன கைக்குழந்தை ஹசனைக் காப்பாற்ற இனி வழியில்லை என உள்ளூர் வைத்தியர் கைவிரித்தபோது, சற்றும் தாமதிக்காமல் ஆக்ரோசமாய் ஹசனை மார்பில் புதைத்துக்கொண்டு பக்கத்து ஊருக்குதங்கராசு அண்ணன்கூட்டுவண்டியில் சவாரி செய்து போனதற்காக, பேரன் பேத்தி எடுக்கும் காலம் வரைக்கும் வந்துவிட்டபோதும் இறக்க முடியாத பழிசொல்லாய் சுமக்கும் அசனம்மாவும், எத்தனையோ அசனம்மாக்களும் எந்த வகையில் பார்த்தாலும் பாவப்பட்ட பிறவிகளே!

அவளுக்கென்று சொந்த கருத்துக்கள் ஏதும் இருக்கவில்லை. தாய்வீட்டு பந்தமெல்லாம் வீட்டிற்கு வந்தால் ஒரு வாய் டீ கொடுத்து அனுப்பிவிடுவதோடு முடிந்துவிட்டது. மனைவியை மட்டம் தட்டியே பழகிய காசிமைப் பார்த்துப்பார்த்து வளர்ந்த பிள்ளைகளும் உருவத்திலும் உள்ளத்திலும் காசிமின் ஓர் இணுக்களவும் மாறாத அச்சு அசல் பிரதிகள்

பழங்கதை ஆராய்ச்சிகிடையே அசனம்மாள் அந்த மண்ணெண்ணெய் குடித்துவிட்டாளா என்ற பதட்டம் உங்களுக்கு அநாவசியமானது. இன்னும் மண்ணெண்ணெய்க்கான விமோச்சனம் கிடைத்தபாடில்லை

காசிம் இப்போது ஊரின் முக்கிய பிரமுகர். பிரபல முகம். முஸ்லிம்கள் பெருவாரியாக இருக்கும் பகுதி என்பதால் எம்.எல். தேர்தலில் அவரை நிறுத்தப்போவதாகச் செவிவழித் தகவல். அதனால் ஊர் நல்லது கெட்டதுகளில் அதிகம் தலைகொடுக்கத் தொடங்கி ரொம்பவே பிசியாகிவிட்டார். கணவனின் கட்டளைகளை நிறைவேற்றுவது மட்டுமே ஜென்ம சாபல்யம் என்பதில் நேற்று மதியம்வரை அசனம்மாளுக்கு மாற்றுக் கருத்திருக்கவில்லை. நேற்றைய அம்மாமகள் உரையாடலின் விளைவான முதல் அத்தியாயம் இன்று காலைமுதல் தொடங்கியதை அசனம்மாள் உணரத் தொடங்கினாள்.

எத்தா அசனு! சின்னஞ்சிறுசுக இப்டி விடியக்கருக்கலே வெளிய போவக் கூடாதுத்தா.. முனி நிக்கும்..கருப்பு அடிக்கும்சூதானமா இருக்கணும்

உங்க மகன ஏன் சொல்றீக மாமி? நாந்தான் அவகள கூட்டிப்போகச் சொன்னேன். எந்த காலத்துல இருக்கீகமுனி,பேய்,பிசாசுன்னுக்கிட்டு!”

அசனத்தாவுக்குத் தெரிஞ்சா வைய்யிவாக. இப்படி ட்ரஸ்லாம் பொம்பளபுள்ள போட்டுக்கிடுறத பாத்தா சொல்லவே வேண்டாம்…. சதைலாம் பிதுக்கிட்டு நிக்குது

பாத்தீயளா ஹசன் மச்சான்! நா சொல்லல? ஒரு மாசத்துல விருந்து கிருந்துன்னு ஒடம்பு ஊத ஆரம்பிச்சுடுச்சு. கல்யாணத்துக்கு முன்னாடி இதே ட்ரக், டீச ர்ட் தொளதொளன்டிருந்துச்சு…”

அசனம்மாளின் விமர்சனத்தை பெரிதாய் சட்டைசெய்யவில்லை மருமகள்

மாமுகிட்ட நாம பேசிக்கலாம். நீங்க கிளம்புங்க மச்சான்! எங்கம்மா நாஷ்டாக்கு கூப்டிருந்தாங்க. அங்கினயிருந்தபடி காலச்சாப்பாட்டுக்கு போய்டுவோம்” 

அசனம்மாளின் கேள்விக்கு அவளிடமன்றி ஹசனுக்கு அவள் பதிலளித்தது பெருத்த அவமானம் ஒருபுறம், ஸ்தம்பித்து நின்ற தன்னை குறித்து யோசனையின்றி புதுப்பொண்டாட்டி பின்னாடியே ஹசன் போனது யாவற்றையும் மிகைத்த உச்சகட்டம்

கணவன் தொடங்கி வைத்ததை, பெற்றெடுத்த மக்கள் தொடர்ந்ததை, இதோ நேற்று வந்த மருமகளும் கையில் ஆயுதமாக்கிக்கொள்ள ஆயத்தமாகும்போது திமிறிவிட்டாள்

காசிம் வரும் நேரம்! இந்த தருணத்தையும் விட்டால் இனி வாழ்ந்தாலும் பிரோஜனமில்லை. இன்னும் யோசித்துக்கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை

தேமேயென்று கிடந்த மண்ணெண்ணெய் உதடுக்கு இடம்பெயர்ந்தது

சில மிடறுகள் தொண்டையை நனைத்து கசந்தது. காசிம் வீட்டுக்குள் நுழைந்தபோது நடுக்கூடத்தில் மயங்கிய நிலையிலிருந்த அசனம்மா, காசிமுக்கு அதிர்ச்சியைத் தந்திருந்தாள். தொண்டையெல்லாம் மண்ணெண்ணெய் வாசம். காசிம்தான் அக்கம்பக்கத்தாரின் உதவியோடு மருத்துவமனையில் சேர்த்தார்

பெரிதாய் அதிர்ச்சியில்லை. ஆசிட் குடித்தவர்களையே காப்பாற்றிவிடுகிறது இந்த மருத்துவ உலகம்

என்னத்துக்கு காப்பாத்துனீரு? உம்ம லட்சணத்த கண்கொண்டு காண சகிக்கலநா கொமரியா இருந்தப்பவே ஒவ்வொருத்தியா கூட்டி வச்சிருந்தீய! புள்ளையளுவளுக்காக செரிச்சுட்டேன்! நீ வப்பாட்டியா வச்சிருந்த ஒருத்தி மவள, எம்மவனுக்கா கட்டிவச்சீரு?”

சாகக் கிடப்பவளின் தெள்ளத்தெளிவான ஆக்ரோச வார்த்தைகளில் காசிம் உறைந்து நின்றார். அவள் தொடர்ந்தாள்

நா சொல்லுவேன்.. ஊரு ஒலகத்துக்கெல்லாம் சொல்லுவேன்! நீ தல நிமிந்து இனி நடக்க முடியாதபடி செய்வேனா இல்லையான்னு மட்டும் பாரு! அடுத்தவாட்டி கடுதாசி எழுதி ஜமாத்துக்கொன்னு, கச்சி ஆபிசுக்கு ஒன்னு கொடுத்துட்டுதான் சாவேன். பெத்தவ என்னையக் கூட மதிக்காம ஊர்மேஞ்ச உன்னைய ‘‘அத்தா அத்தா’’ன்னு தூக்கி வச்சு கொண்டாடுன மவன், அவள அத்துவிட்ட கையோட ஒம் மூஞ்சில காரித் துப்புவான்.. நா பெத்த மவ உன்னைய செருப்பால அடிச்சாலும் அவளுக்குப் புண்ணியம்

 – பொரிந்து தள்ளிய அசனம்மாவின் எந்த வாக்கியங்களை நிராகரிக்க, எந்த வார்த்தைகளை ஒப்புக்கொள்ள, எந்த மிரட்டலில் நிலைகுலைய என்றெல்லாம் புடிபடாமல் மொத்தமாய் சரிந்தார் காசிம்

உண்மையில் காசிமுக்கும் ராஷிதா அம்மாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ரெண்டு மிடறு மண்ணெண்ணெயில் உயிர் போகாது என்பதும் அசனம்மாள் அறிவாள். இன்னும் சொல்லப்போனால், உயிர் பிரிவதுபோல் மயங்கிச் சரிந்து நடிக்கவும் அவளுக்குத் தெரியும்

அசனம்மா சொன்னது இல்லைன்னு சொன்னாலும் ஊர் உலகம் தன்னை நம்பாது. சின்ன வயசில் போட்ட ஆட்டம் அத்தகையது. ஒருவன் செய்யும் நல்லதை அன்றைய தினமே மறக்கும் உலகம் தீயதை அவன் மண்ணறை காலத்துக்கு பிறகும் நினைவில் வைத்திருக்கும். அதுவும் காலம்போன காலத்தில் பழிச்சொல்லை சுமந்தால் சொத்து அழித்துதான் புனிதப்பெயர் வாங்கும் சூழலுக்கு காசிம் தள்ளப்படுவார்

காசிம் தன் பெயரைக் காப்பாற்ற அசனம்மாவிடம் அடங்கிப் போனார். அவர் அடங்கியபோதும் அசனம்மாவிடம் சாம்ராஜ்ஜியம் கைமாற்றப்பட்டது

இப்போதெல்லாம் ஹசனின் மாமியார் வீட்டுக்கு வருவதில்லை. ராஷிதாவும் இருட்டாய் இருக்கும்போதுதான் மொட்டைமாடியில் வாக்கிங் செல்ல அனுமதிக்கப்படுகிறாள். அசனம்மாள் அனுமதிக்கும் நேரத்தில்தான் ஹசன் தன் அறைக்கே செல்கிறான். எல்லாம் தலைகீழாகிவிட்டது

மாமியார்கள் எவ்வழியிலேனும் மருமகளை அடக்கியாள அவதரித்தவர்கள். ராஷிதாக்கள் குறித்துதான் இனி நாம் கவலைப்பட வேண்டும்

*******

mohdamina23@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button