01.
தழும்பு
கட்டளைக்கு ஆட்பட்டு வரிசையில் நகர்கிற மனிதர்களைப் போல ஒழுங்குடன் பரபரத்தபடி விரல்களுக்கிடையிலும் தோல் பட்டையிலுமாக ஊர்ந்து நகர்ந்து மூக்கிலும், காதிலும் எறும்புகள் நுழைந்து வெளியேறியபடியிருந்தன. மூக்கினருகில் வழிந்து காய்ந்திருந்த திட்டான பரப்பில் சில எறும்புகள் மட்டும் கூடி நின்றபடி மொய்த்துக் கொண்டு தங்களுக்குள் எதையோ பேசிக் கொண்டிருந்தது. இறுதி உலுக்கல்களுக்கான அடையாளம் ஏதுமின்று பிசைந்து நீள வாக்கில் உருட்டி வைத்த களிமண்ணைப் போல செத்துக் கிடந்தான் அவன்.
அரைக்கண் உறக்கத்திலாழ்ந்திருப்பதைப் போல சின்னதாய்த் திறந்து கிடந்தது இரண்டு கண்களும். உயிருடனிருக்கும்போதும் அப்படித்தான் தூங்குவான். என்ன செய்வதென்று தெரியாமல் வெகுநேரம் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். இது கனவா அல்லது நிஜமா என்பதையும் ஊகிக்க முடியவில்லை. சட்டையைக் கழற்றி கொடியில் போட்டுவிட்டுச் செல்வது போல சட்டென்று உயிர்ப்பற்ற சவமாகிவிட முடியுமா என்பதில் அவளுக்குக் குழப்பம் இருந்தது. எந்த மரணத்தையும் அருகாமையிலிருந்து தரிசித்ததில்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். அழவில்லை.
வளைந்த இரும்புக் கொக்கியில் தலை கீழாகத் தொங்கவிடப்பட்ட தலையற்ற ஆட்டிலிருந்து கூரிய கத்தியால் சீவி தோலைக் கழிப்பது போல நினைவுகள் மெல்ல உரிந்து கொண்டிருந்தது. பதற்றமில்லாமல் மெல்ல மூச்சு எழும்பித் தணிந்தது. கூந்தலை வழித்து முன்புறம் போட்டுக் கொண்டு எலும்பு துருத்திய அவன் முழங்கைப் பகுதியை மெல்ல பற்றினாள். சட்டென அவனுடைய வாசனை அவளுக்குள் பரவியது.
மூடிய விழியை நினைவூட்டும் வடிவில் ஒரு தழும்பு அவனுடைய வலது தொடையில் இருந்தது. சிறுவயதில் நூலகத்தைக் கடக்க போட்டிருந்த சிறு சிமண்ட் பலகையைச் சைக்கிளில் கடந்த போது கால்வாயில் விழுந்து கம்பி குத்தியதால் ஏற்பட்ட காயத்தழும்பு என்று சொல்லியிருக்கிறான். மாந்தளிர் போன்ற அந்தத் தழும்பின் மீது விரல்களால் வருடும் போதெல்லாம் கீரலின் வலி சலனமற்று அவன் முகத்தில் பரவுவதைப் பார்த்திருக்கிறாள். அவனிடம் ஒரு பால்மனம் எப்போதும் வீசிக் கொண்டிருக்கும். வாழ்க்கையின் மீதான அவநம்பிக்கையுடனான சலிப்புற்ற நாட்களை அவன் கடத்திக் கொண்டிருந்தான்.
இறுக்கமான ஞாபகத்தில் பிசிரற்ற நெருக்கத்தின் இழைகளில் மனம் புழுங்கிக் கொண்டிருக்கிறது. நினைவை அறுத்துத் துண்டாட முயன்று தோல்வியுற்றாள். இறுக சன்னல்கள் அடைக்கப்பட்ட அறையினுள் நிரம்பிய காற்றை சுழற்றிச் சுழற்றியடித்துக் கொண்டிருந்தது மின்காற்றாடி. அவன் கட்டியிருந்த காவி வேட்டியின் காலருகிலிருந்த நுனி காற்றில் படபடத்தபடியிருந்தது. உறைந்த உடல்.. வெண்மையான கைகளில் பச்சை நரம்புகள் ஓடியிருந்ததை இருளின் சிறு வெளிச்சத்திலும் நன்றாகப் பார்க்க முடிகிறது. எறும்புகளைக் காணவில்லை. எல்லாம் உள்ளே புகுந்து விட்டிருக்குமோ என்று நினைத்துக் கொண்டாள். நினைக்கும்போதே தனக்குள்ளும் எறும்புகள் புகுந்து கொண்டதைப்போல பயமும், பதற்றமும் ஊர்ந்து நகரத் தொடங்கியது.
சிறிது தண்ணீர் குடித்தால் தேவலாம் என்றிருந்தது. ஆடும் சன்னல் திரைச்சீலைகளின் மெல்லிய ஒலி கூட பயம் தருவதாய் இருந்தது. என்ன ஆனது என்பதே புரியவில்லை. யாரையாவது அழைக்கலாமா என்பதையும் யோசித்துப் பார்த்தாள். ஒருவேளை இது கனவாயிருந்து விட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் அச்சமும், கலவரமும் ஏற்படுத்தியது.
அவன் மார்பில் கை வைத்து மெல்ல நீவி விட்டாள். அது அவளுக்கே அவள் நீவிக்கொண்டதைப் போல ஆறுதலாயிருந்தது. பாறையை மோதிச் சிதறடிக்கிற கடலைகளாய் மனது நிலை கொள்ளாமலிருந்தது. பல நாட்களாகவே இப்படித்தான். துயரார்ந்த மனதில் நினைவுகளால் திரும்பத்திரும்பத் தீட்டி கூர்மையாகிக் கீறிக்கொண்டிருந்தது. சுய கீறல்கள்.. தவிர்க்க இயலாதவை.. பேசினாலே.. கீறல்கள் விழுகிறது. மரவட்டையைப் போலத் தனக்குள் தானே சுருண்டு கொண்டாலும் அனிச்சையாக நீண்டு மீண்டும் சுருண்டு எனக் கழிந்தபடியிருக்கிறது காலம்.
இருளை நெகிழ்த்தியபடி விடியலுக்கான அறிகுறிகளாக வெளியே பறவைகளின் சிற்றொலி கேட்கத் தொடங்கியது. காற்று நகர்த்திய வேட்டியின் விலகலில் வெட்டிச் சாய்த்து இழைத்த மரம்போல பழுப்பு வர்ணத்தில் அவன் கால்கள் தெரிந்தது. காய்ந்து சுருண்ட இலையின் சருகுபோலத் தெரிந்தது தழும்பு. மெல்லிய விரல்களால் தழும்பை மெல்ல மெல்லத் தடவினாள். தழும்பு தன்னை முத்தமிடுதலைப் போன்ற உணர்தலைத் தந்தது. முத்தமாகிய வருடலினூடே கண்களை இறுக மூடி ஆழ்ந்து மூச்சை உள்ளிழுத்து நிறைத்தாள். உடலெங்கும் அவன் வாசனை ஆக்கிரமித்துப் பரவியரும்பி அவளுக்குள் உயிர்ப்பூட்டியது.
தழும்பிலிருந்து கை விரல்கள் நழுவ மெல்ல அவன் புரண்டு படுத்தான்.
****
02.
ஜோட்ட்ரிப்ப்பய்ய்….
நடந்து வந்து கொண்டிருந்தேன்; வழக்கம் போலத்தான். தெரு முனையில் திரும்பும்போது “ஜ்ஜோட்ரிப்ய்ய்ய்ய்….” என்ற ஒலி ஈனஸ்வரத்தோடு காதுகளை வந்தடைந்து என்னவோ செய்தது. தோளில் துணிப்பையும், கையில் மரக்கைப்பிடி வைத்த சிறு குத்தூசியும் வைத்துக் கொண்டு அழுக்கு சட்டையும், கால் சராயுமாக ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார். சுமார் ஐம்பதுக்கு மேலிருக்கும். காலணிகளைத் தைக்கிறவர் போலும்.
செருப்புத் தைக்கிறவர் தெருவில் வந்து தனது பணிக்காக அலைகிற காட்சியை பல வருடங்களுக்குப் பிறகு பார்க்கிறேன். சிறு வயதில் எங்கள் தெருவிற்கு அடிக்கடி வருகை தருகிறவர்களெல்லாம் ஒரு விரைவுப் பயணக் காட்சி போல நினைவில் வந்து சென்றார்கள்.
குடைக் கம்பிகளையும், கருப்புத்துணிகளையும் கொண்ட பழைய பையைத் தோளில் போட்டபடி ‘குடய்ய்ரிப்பேர்ர்ர்’ என்ற கரகரத்த குரலில் கத்தியபடி வந்து செல்கிறவர்;
‘பாலய்ஸ், கப்பய்ஸ், சேமியாஅய்ஸ்.. கோனய்ஸ்.. குச்சய்ஸ்..‘ என்றபடி சைக்கிளின் பின்னே தெர்மாக்கோல் மேல் தகரமடித்த சதுரப்பெட்டியின் மேற்புறத்தின் சிறுதிறப்பை ‘டப்..டப்..‘பென முடித்திறந்து சத்தமெழுப்பி கவனமீர்க்கும் ஐஸ் வண்டிக்காரர்;
ஒரு கையில் சைக்கிள் பின்னால் கேரியரில் கோல மாவு மூட்டை மேல் கையை அணைத்தபடி வைத்துக் கொண்டு சைக்கிளை உருட்டியபடி ‘கோலமாவ்வேய்ய்‘ என்ற குரலோடு வருகிற அரைக்கண் கொண்ட கோலமாவு விற்கிறவர்;
பூச்சாண்டி கிட்ட பிடிச்சு கொடுத்துடுவேன் என்று குழந்தைகளை பயமுறுத்தி சாப்பிட வைக்க உபகாரியாக இருக்கும் ‘பூட்ரிப்பேர்ர்’ என்கிற தாடி கொண்ட அழுக்கு மூட்டைப்பை பூட்டு சரி செய்கிறவர்…
“புள்ளிகொத்றத்.. ஆட்டுக்கல்லு, இயந்திரம், அம்மிக் புள்ளிகொத்றத்..” என்று கூவியபடி தோளில் துணி மூட்டையும், குழந்தையும் சுமந்து சிறு உளியும், சுத்தியலும் கையில் பிடித்தபடி வருகிற அம்மி கொத்தும் பெண்…
“ஈயம்பூசறதேய்ய்…” என்ற தெரு நீளத்திற்கும் கேட்கிறபடியான நீண்டு தேய்ந்த குரலில் அழைக்கிற பாத்திரங்களுக்கு ஈயம், கலாய் பூசுகிறவர்…
எல்லாம் எங்கே போனார்கள்.. என்ன செய்கிறார்கள் என்பதே தெரியவில்லை.
எதிரே வந்து கொண்டிருந்தவர் என்னையும், எதிரே வந்து கொண்டிருந்தவரை நானும் ஒருவரையொருவர் நெருங்கிக் கொண்டிருந்தோம். திடீரென சாலையின் வலதுபுறமிருந்து இடது புறமாக ஒரு பூனை குறுக்கிட்டு ஓடியது. காப்பி நிறத்தில் வெள்ளை கேசம் பொதிந்த அழகுப்பூனை. பூனையை ரசித்தாலும் சட்டென சகுனம் பற்றி நினைவில் வந்து போனதைத் தவிர்க்க இயலவில்லை.
என்னதான் மாறினாலும், மாற்றினாலும் சில பழக்கங்கள் ரத்தத்தில் ஊறியிருப்பதால் அதுகுறித்த நினைவுகள் வந்து விடுவதைத் தவிர்க்க முடிவதில்லை. சரி.. பூனை சாலையைக் கடந்து விட்டது. அப்படியானால், சகுனம் சரியில்லை என்பதாகச் சொல்வார்களே.. அதிலும், அந்தச் சகுனம் எனக்கா இல்லை செருப்பு தைக்கிற அவருக்கா என்றெண்ணி சற்றே மனக்கிலேசமுற்றேன்.
யோசித்தபடியே நடந்து வந்து கொண்டிருந்தேன். செருப்புத் தைக்கிறவர் என்னருகில் எதிரே மிக நெருக்கமாக வந்து விட்டார். என் காலில் ஷு அணிந்திருப்பதை பார்த்தபடியே கடந்து சென்று விட்டார். அருகே வந்த போதும் கூட கடைசி வரை அவர் என் முகத்தைப் பார்க்கவேயில்லை. நடந்து செல்கிறவர்களின் கால்களையே பார்த்தபடி அவர் சென்று கொண்டிருந்தார்.
****
03.
கடைசி ரயில்
விரைந்து கொண்டிருக்கும் புகைவண்டியினைப் போல இருள் படர்ந்து கொண்டிருக்கிறது. வெளுத்த கைகளைத் துடுப்பாக்கி பகலைப் பரவ விட முயன்று தோற்றுப்போகிறான். காயப்படுத்தப்பட்ட சர்ப்பத்தின் வாயிலிருந்து முகத்தில் சீற்றத்தோடு பீய்ச்சியடிக்கிற நஞ்சென கசந்து கொண்டிருந்தது காலம்.
இன்னும் கொஞ்சம் நேரம்தான் இருக்கிறது. வீட்டுக்குப் போயாக வேண்டும். ரஸ்னா காத்துக் கொண்டிருப்பாள். இரவு வீடு திரும்பியதும் அவளுக்கு டோபர்மோரியின் கதையைக் கூறுவதாக வாக்களித்திருக்கிறான். அவளையாவது ஏமாற்றாமலிருப்பதை ஒரு பிடிவாத வழக்கமாக வைத்திருக்கிறான். ஒருமுறை கதை சொல்கிற போது குதிரையின் குளம்பொலியை செய்து காட்டுவதற்குள் மூச்சு முட்டிவிட்டது. ஆனால், கண்களில் நீர் தளும்பக் குதூகலித்துச் சிரித்த அந்தச் சிரிப்புக்கு உயிரையே கொடுக்கலாம்.
அவனுடைய நிழல் அவள்.. அவன் உயிரிலிருந்து சுரந்து உருவானவள். தினம்தினம் சினையுற்று நெரிக்கும் எத்தனையோ அவதிகள், அவலச்சுவைகளோடு வீடு திரும்பினாலும் ரஸ்னாவின் முகம் பார்த்ததும் மறந்து விடும். ரஸ்னா பிறந்ததிலிருந்துதான் கருணையின் தூண்டில்களில் அவ்வப்போது அவனுக்கான புழுக்கள் சிக்கத் துவங்கியிருந்தது.
முடிவற்ற கசப்புகளில் நீள்கிற நாட்களின் அந்தி வேளைகளில் நீல வண்ண மரக்கதவை மூடி அச்சிறு அறையில் இரு கால்களுக்கிடையில் புதைத்து உயர்த்தியும், இறக்கியும் விளையாட்டு காட்டி தன்னையிழப்பான். அப்போதெல்லாம் “தானம் கொடுப்பது தன் தகவு என்னும் சரண் கொடுத்தே“ என்ற வரிகள் மனதில் ஒடியபடியிருக்கும். அதுதான் அவளிடமிருந்து அவனுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கிறது.
மஞ்சள் ஒளிக்கீற்றாக இழையிழையாய்ப் பிரிந்து இருளைத் துளைத்தபடியிருந்த உச்சிப் பெருவிளக்கு. ஆளற்று வெறிச்சோடிக் கிடந்தது ரயில் நிலையம். நிறுத்தவோ, கரையொதுங்கவோ முடியாதபடி பெருகியோடும் நீர்ச்சுழலாய் அவனுக்குள்ளாக ஏதோ சுற்றிக் கொண்டேயிருக்கிறது. ‘இதோ இவன்தான்’ என்று யாரோ பேசிக்கொண்டு போகிற ஒலி கேட்கிறது. இது பிரேமையாகக்கூட இருக்கலாம். பல நேரங்களில் அப்படித்தான் உணர்கிறான்.
அடிக்க ஓங்கி வீசிய கை அடிக்காமல் கூசிச் செய்கையால் பதட்டமுறச் செய்து பயமுண்டாக்குதான படபடப்பு அடிக்கடி எழுகிறது. நனவிலி மனதின் செயல்தான் இது.. பிறழ்வில்லை… நான் தெளிவாகத்தான் இருக்கிறேன் என்று தனக்குள் தானே இருமுறை சொல்லிக் கொண்டான்.
மூச்சிழுத்து ஊத ஊத மெல்லப் பருக்கிற பலூன் மாதிரி ஒலிப்பந்து பெரிதாகிக் கொண்டே வந்து பெருவோலத்துடன் தண்டவாளங்கள் அரைபட இரைச்சலோடு நெருங்கிக் கொண்டிருந்தது.
இதுதான் கடைசி ரயில். இதில்தான் வருவேன் என்று ரஸ்னாவுக்குத் தெரியும். அவளுக்குநேரம் பார்க்கத் தெரியாது. ஆனால் ரயில்கள் சிதறிச் செல்கிற ஒலிக்குறிப்புகளை நன்றாகக் கவனித்திருக்கிறாள். முதலாவது, இரண்டாவது, மூன்றாவது, நான்காவது என அவ்வொலிச் சேர்க்கையை எண்ணிக் கொண்டேயிருப்பாள். இருளைக் குதறும் ரயிலின் பெருவோலங்களில் நான்கில் ஏதாவது ஒன்றிற்குப் பிறகு கொஞ்ச நேரத்தில் அப்பா வந்து விடுவார் என்பதை யாரும் சொல்லிக் கொடுக்காமலே அவள் தானாகவே பழகிக் கொண்டிருந்தாள்.
உணர்ச்சியற்ற வெறுமையோடு வீடு நோக்கி நடக்கத் துவங்குகிறான். கொஞ்ச நேரத்துக்குத்தான் எல்லாம்.. புழுதியை இடம்பெயர்க்கும் காற்றைப் போன்றவள் ரஸ்னா. வீட்டுக்குப் போனதும் எல்லாவற்றையும் அவள் சரி செய்து விடுவாள். நான்கு கரையும் உறுதியான படிக்கட்டுகளுள்ள குளத்தில் நிரம்பியிருக்கிற நிலைத்த குளிர் நீர் போல… படிப்பாசியில் நழுவி உள்ளிறங்கி அமிழ்ந்து கொண்டால் எல்லாம் மறந்து விடும் என்று தனக்குச் சொல்லிக் கொள்கிறான். அவனை ஆற்றுப்படுத்துவதற்கென சுலபமான சாத்தியங்களைச் தனக்குள்ளிருத்தியிருக்கும் அவளை நினைவிலிருத்தியபடி வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தான்.
*******