![](https://vasagasalai.com/wp-content/uploads/2024/01/Picsart_24-01-05_12-47-39-680-780x470.jpg)
மூன்றாவது ரவுண்டை ஓடி முடித்து நனைந்து உடலோடு ஒட்டிய டீ சர்ட்டை தூக்கி உதறி காற்றை நெஞ்சுக்குள் ஊதியபடி மனோ சார் கேலரியில் அமர்வதையே பார்த்து கொண்டிருந்தான் தங்கையா என்ற தயா.
எப்போதும் அதிகாலையிலேயே விழித்துக் கொள்கிறது விளையாட்டு மைதானம். எல்லா சாலைகளும் மௌனத்தில் கிடக்கும் போது ஓட்டமும் நடையுமாய் தன்னைக் கிளப்பிக் கொள்கிறது. பரபரப்பாக இளைஞர்கள் காலையிலேயே தங்கள் முகத்தில் வெற்றியைக் காணும் வெளிச்சத்திற்காகச் செயலில் இறங்கிவிடுதல் எத்தனை துடிப்பானது!
விளையாட்டிற்கான வண்ண உடைகளுடன அவர்களின் விளையாட்டு, ஓட்டங்களைப் பார்க்கும் போது இறக்கைகளற்ற தேவதைகள் வானிலிருந்து வந்தது போல இருக்கிறது. எங்கிருந்தோ வரும் விசில் சப்தத்தில் எல்லோரும் ஓடுகிற போது வண்ணத்துப் பூச்சிகள் மைதானத்தை வட்டமிட்டு பறப்பது போலத் தோன்றியது.
கைப்பந்து மைதானத்தில் எல்லாப் பிள்ளைகளும் வட்டமாய் தலைகவிழ்ந்து உறுதியெடுத்து ”ஹோவென’ ஒலிக்கும் பேரோசை மைதானத்தில் சுழல்கிறது. இப்படியான பேரொலிகள்தான் மைதானத்தை மகிழ்ச்சி பொங்க வைக்கிறது.
தன்னை தங்கையா என்பதை விட என்று தயா என்று அழைப்பதையே அவன் விரும்பினான். பன்னாட்டுப் போட்டிக்கு தயா பொருத்தமான பெயர் என்பது அவனது எண்ணம்.
மனோசாம் சார் அவனது ஆதர்ச விளையாட்டு வீரர். அதிகாலையிலேயே கிரவுண்டு வந்துவிடும் அவர் பத்து சுற்றுக்களாவது ஓடிவிடுவார். அவனது ஊரான விகே புரத்தைச் சார்ந்தவர்தான். அவர் நடப்பது, வார்மப் பண்ணுவது, ஓடுவது, விளையாடுவது என எல்லாவற்றையும் நுண்ணியமாய் அவதானிப்பவன். அவரோடு பேசுவதிலும், அவரது அனுபவங்களைக் கேட்பதிலும் அவனுக்கு ஒரு மகிழ்ச்சியும், உற்சாகமும் பிறக்கும்.
அவர் சட்டையை அப்படியே கைகளை உயர்த்தி கைகளில் போட்டபடி காலரியை விட்டு இறங்கினார். என்ன செய்யப்போகிறார் என்று எண்ணியபடியே அவன் குனிந்து உடற்பயிற்சிக்காக வலதுகையால் இடது காலையும். அதே இடது கையால் வலது காலையும் சிக்கெனப் பிடித்தபடிப் பார்த்துக் கொண்டிருந்தான். நிறைய இளவட்டங்கள் மெதுஓட்டம் ஓடிக் கொண்டிருந்தார்கள்.
அரை நிசாரோடு ஓடிக் கொண்டிருக்கும் அந்த சிவத்த பிள்ளையை யாரும் பார்த்ததாகத் தெரியவில்லை. ஆணும் பெண்ணும் வித்தியாசமற்று போகிற இடம். மாற்றுப் பாலினம் என்று பேசப்படாத பார்க்க வேண்டாத இடம் இது ஒன்றுதான். எல்லாருடைய முகங்களிலும் எதையோ சாதிக்க போகிறவர்கள் என்னும் ஸ்டிக்கரை ஒட்டி வைத்தது போல இருக்கும்.
கேலரியை விட்டு குதித்து இறங்கிய மனோ சார், “எல்லோரும் ரெண்டு ரவுண்டு ஸ்பீடா ஓடலாமா?” என்று சொன்னவுடன் ஓடியவர்கள் சட்டென நின்றார்கள். அவனும் உடற்பயிற்சியை நிறுத்தி ஓடிப் போய் சேர்ந்து கொண்டான். அந்த மைதானத்தில் மனோ சார் விளையாட்டு வீரர்கள் அத்தனைப் பேருக்கும் ஒரு சம்பளமில்லாப் பயிற்சியாளர்தான்.
அப்போது அவனுக்கு பன்னிரண்டு அல்லது பதிமூன்று வயதிருக்கலாம். பள்ளி மைதானத்தில் ஆண்டு விளையாட்டு விழாவிற்கு மூன்று நாள் இருக்கையில் உடற்கல்வி ஆசிரியரும், ஓவிய ஆசிரியரும் அவனைப் போல விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களை அழைப்பார்கள். கலர் காகிதம் வெட்டி நீளச் சணலில் தோரணம் ஒட்ட, சுண்ணாம்பு பொடியால் ஓட்டப் பநதய டிராக்கிற்கு கோடு போட என பல வேலைகளையும் செய்து இரவும் பகலுமாய் மூன்று, நான்கு நாட்கள் மைதானத்தை அலங்கரிப்பதுதான் வேலை.
வெற்றி மேடையும், ஒலிம்பிக் தீப மேடையும் டிராயிங் சார் செய்யும் போது அவருக்கு உதவி செய்தபடி நிற்போம். கம்புகளாயும், வரைந்த மஞ்சள்நிற அட்டைகளாயும் தரையில் கிடக்கும் சாமான்கள் ஒன்றிரண்டு மணி நேரத்தில் அழகிய மேடையாயும், ஒலிம்பிக் தீபமாகவும் மாறிவிடும். எங்கும் அழகிய வழிகாட்டு பலகைகளை டிசைன் டிசைனாக எழுதித் தருவார். ஆங்காங்கே அவற்றை நட்டு வைப்பது எங்கள் வேலை.
மைதானத்தில் பொதிகை மலைக் காற்று வட்டசரிகை தோரணங்களை கிச்சுகிச்சுமூட்டி சலசலக்க வைக்கும். ஒலிம்பிக் மேடையின் தீச்சுடர் நாலா பக்கமும் நாக்கை நீட்டிநீட்டி பாய்வது வாள் கொண்டு வெட்டுவதைப் போல இருக்கும்.
முன்பெல்லாம் மனோ சாரின் அப்பா மரியநாதன் சார்தான் விளையாட்டு ஆசிரியர். காலரியின் மேலிருக்கையில் இருந்து அவரது கணீர் குரலில் ஒலிக்கும். “காம்படீட்டர்ஸ் ஆர் கெட் ரெடி. திஸ் ஸ் தி பர்ஸ்ட் கால் ஃபார் ஹைஜம்ப்” என்பார். அவரின் வீர்யமான குரலில் அரங்கமே அதிரும். அவரது காலத்தில் போல்வால்ட்டில் எங்கள் பள்ளிதான் 15 வருடமாக முதல் இடம். வள்ளியூர் கன்கார்டியா ஸ்கூல் முதல் பரிசைத் தட்டிப் போக தலைகீழாக நிற்கும். ஆனால், சார் ஜெயிக்க விடமாட்டார்.
மரியநாதன் சாரின் ஒரே மகன்தான் மனோ சார். ரெண்டு பேரும் அப்பாவும் பிள்ளையுமாவெனத் தெரியாது. அப்படியொரு அன்னியோன்யம். எங்கே போறது, வாறதுனாலும் சேர்ந்தேதான் போவார்கள். சிலசமயம் மரியநாதன் சார் அவரது சைக்கிளை உருட்டிக் கொண்டே போவார். பக்கத்தில் இருந்து பெண்பிள்ளை மாதிரி என்னதான் மனோசார் பேசுவாரோ தெரியாது. சைக்கிள் சடக்கென நிற்கும். இருவரும் மென்மையான சன்னக் குரலில் சிரித்தபடியோ, கருத்தோடோ பகிர்ந்து கொளவார்கள். எங்கேயும் இருவரும் பேசிக் கொண்டு போவதைப் பார்க்கலாம். மனோ சார் எப்போதும் ரன்னிங் ஷூவோட இருப்பார். சிலசமயம் அப்படியே இருவரும் மதுரா கோட்ஸ் கிரவுண்ட்ல ஓடிக்கொண்டிருப்பார்கள். இருவரும் அத்லெட்ஸ் போலவே பார்வையால் பேசியபடியே ஜாக்கிங் போவார்கள்.
தாயும், மகளும் அன்னியோன்னியமாக இருப்பதைப் பார்க்கலாம். அப்பாவும் பிள்ளையும் என்பது அபூர்வம். மரியநாதன் சார் , மனோ சார் இருவரைத்தான் நான் அத்தனை நெருக்க நட்பில் பார்த்திருக்கிறேன்.
ஞாயிற்றுக் கிழமையில் அமலி தேவாலயத்தில் ஒரே கீர்த்தனையைப் பாடிக் கொண்டிருப்பார்கள். அதில் சாந்தம் தழுவி வழிந்தோடியபடி இருக்கும்.
இப்போ மனோ சார் அப்படியே பாளையங்கோட்டைக்கு வந்துவிட்டார். பிறகென்ன, கிரவுண்டில் கழிகிறது அவரது வாழ்க்கை.
அவரது வேகமான ஓட்ட வாழ்க்கையில் பல சமபவங்கள் உண்டென்றாலும் எனது பள்ளியில் நடந்த அந்த சம்பவம்தான் இன்றும் அவரை என் மனதின் உயரத்தில் வைத்திருக்கிறது.
பள்ளியின் விளையாட்டு விழாப் போட்டிகள் ரெண்டு நாள் நடக்கும். அப்போ மினி மராத்தான் நடக்கும். கொஞ்சதூரம் ஓடி, தடைக் கம்புகள் தாண்டி, உயரமான ஓட்டைச் சுவரில் ஏறி இறங்கி, தண்ணீரைத் தாண்டி, குவிந்திருக்கும் இரும்பு வலைக்குள் தவழ்ந்து புகுந்து வெளியேறி, கடைசி தூரத்தை ஓடிக் கடக்க வேண்டும். அதில் நானும் பங்கேற்று இரண்டாவதாக நிறைவு செய்தேன். மரிய நாதன் சார் எனது நம்பர் 27 ஐக் குறிப்பிட்டுச் சொன்னது இன்னும் காதுகளில் கிசுகிசுக்கிறது.
இரண்டாவது நாள் கடைசிப் போட்டி 1500 மீட்டர் ஓட்டம். எல்லோரும் கலந்து கொள்ளலாம். எல்லோரும் பெயர் கொடுத்தார்கள். பள்ளியில் தொடர்ந்து இரண்டு வருடம் ஸ்கூல் சேம்பியனாக இருந்த கருத்தப்பாண்டியும் பெயர் கொடுத்தார். அவர் ஆறு அடி உயரம். பெயர் குடுத்துவிட்டு மைதானத்தை சும்மா ஒரு சுற்று சுற்றி பார்த்தார். அவரைப் போலவே போன வருட சாம்பியன் ஷேக் பாவாவும் பெயரைக் கொடுத்தார். மனோ சார் சாதாரண உடையில் வந்து பெயரைப் பதிவு செய்தார். சிவதாணு சார் இரண்டாவது அழைப்பு விடுக்கையில் டிராக் ஷூட், ஷூ சகிதம் கிரவுண்டுக்கு வந்து வாரம் அப் உடற்பயிற்சி பண்ணினார். அவரது வேகம் அதில் தெரிந்தது.
எல்லோரும் யார் ஜெயிக்கப் போவது என்கிற பரபரப்போடு இருக்க, வெடி வெடித்து “செட் கோ” சொல்ல ஓட்டம் துவங்கியது. 7 வட்டங்கள் முடித்து எட்டாவது வட்டம் பாதியில் முடிக்க வேண்டும்.
இருபது முப்பது பேர் மொத்தமாக ஓட ஆரம்பித்தார்கள். எல்லாரும் மெதுவாக ஓடிக் கொண்டிருக்கையில் ஸகூல் சாம்பியன் கருத்தப் பாண்டி வேகமாக முதலில் ஓட ஆரம்பித்து, மற்றவர்கள் ஒரு ரவுண்ட் ஓடி முடிக்கையில் இவர் ஒண்றரை ரவுண்டில் இருந்தார். எங்களுக்கு எங்கள் ஸ்கூல் சாம்பியன் மீது பெரும் நம்பிக்கை இருந்தது. மற்றவர்கள் இரண்டாவது ரவுண்டில் ஓடும் போது கருத்தப்பாண்டி மூணாவது ரவுண்டில் ஓடினார். மைக்கில் கருத்தபாண்டி இப்போது மூன்றாவது ரவுண்டில் இருக்கிறார். மற்றவர்கள் இரண்டாவதில் இருக்கிறார்கள் என்றார் சார்.
“வெற்றி மீது வெற்றி வந்து உன்னைச் சேரும், அதை வாங்கித் தந்த பெருமையெல்லாம் எங்கள் பள்ளியைச் சேரும்” என்றார் மைக்கில் சிவதாணு சார்.
வேகமாக ஓடிக் கொண்டிருந்தக் கருத்தப் பாண்டியால் அதற்கு மேல் வேகமாக ஓடவில்லை, அடுத்த ரவுண்டில் ஓடமுடியாமல் மயக்கம் வந்தது போல கிரவுண்டை விட்டு வெளியேறி ஒரு இடத்தில் படுத்துவிட, அவரைச்சுற்றி கூட்டம் சேர, சிறிதுநேரத்தில் எழுந்து முகம் கழுவி வெளியேறிப் போனார். மனோ சார் ஏழாவது ரவுண்டில் வேகமெடுக்க ஆரம்பித்தார் . எடையற்ற மனிதரைப் போல் பாய்ந்தபடி இருந்தார். அவரது ஏழாவது ரவுண்ட் முடிவில் மற்றவர்கள் ஆறாவது ரவுண்டை முடித்திருந்தார்கள். ஏழாவது ரவுண்டை தாண்டியவுடன் பஞ்சு போல மாறி சீறி ஓடினார். வெற்றிக் கோட்டில் நெஞ்சை முன் தள்ளி சிவப்பு டேப் உடலில் பாவியபடி வெற்றியை நிறைவு செய்தார். அதையடுத்து நீண்ட நேரத்திற்குப் பின் ஷேக்பாவா இரண்டாவதாக வந்தார். அந்த மனோ சாரின் சீரான வேகம் மனதிற்குள் படிந்திருக்கிறது. பின்னாளில் பாளையங்கோட்டை மைதானத்தில் அவரைச் சந்தித்த போது அவரிடம் இதைச் சொன்னேன். அவருக்கு ஞாபகச் சக்தி அதிகம்தான். ‘இரண்டாவது வந்தது உங்க ஊரு பாவாதானே? அவன் என்ன செய்கிறான்?’ என்று கேட்ட போது அசந்து போனேன். “அவன் என்னைப் போல் தினமும் பயிற்சி செய்திருந்தால் அவனை ஜெயிப்பது கடினம்” என்றார். “அவன் கால் ஸ்டெப்ஸ் என்னைவிட அகலமானது. என் எனர்ஜியை விட அவருக்கு குறைவாகத்தான் ஆகும். ஆனா, பிராக்டீஸ் இல்லன்னா எப்படி ஓடி கடக்க முடியும்?” என்றார்.
மரியநாதன் சாருக்கு முக்கியமான ஈவண்ட் ரிலே ஓட்டம்தான். மிக நுட்பமாக எப்படி ஓடவேண்டும் என்று விவரிப்பார். தொடர் ஓட்டம் என்பது மனித வாழ்வியலோடு மிகுந்த சம்பந்தம் உடையது என்பதையும், மனிதனின் திறமையை ஒருங்கிணைத்து டீம் ஒர்க்காகச் செயல்படும் போது ஒரு மாபெரும் வெற்றி பரிசாகக் கிடைக்கிறது என்பதையும் எடுத்துச் சொல்வார்.
நமக்கு பின்னால் ஓடிவருபவன் எங்கே வருகிறான் என்பதை மனதால் அனுசரித்து, அவன் நம் அருகில் வந்தவுடன் நாமும் ஓடிக் கொண்டே இடது கையில் பேட்டனை ( தொடர் ஓட்டக் கைக்கம்பு) வாங்கிக் கொண்டு, ஓடும் போதே வலது கைக்கு மாற்றிக் கொள்ளவேண்டும். அதைவிடவும் விளையாட்டு செயல்திட்டங்களில் பேட்டனை வாங்குகிற நேரம் இரண்டு நொடி என்று குறித்திருக்கிறார்கள். அதாவது இரண்டு வினாடிக்குள் வாங்கி விட வேண்டும் என்பார். அதன்பிறகு வேகமெடுத்து ஓடி பேட்டன் கம்பை மாற்றும் போதும் கவனத்துடன் முன்பக்கம் அதிகம் நீட்டி வாங்கக்கூடிய வாக்கில் கொடுக்க வேண்டும்.
பேட்டனை மாற்றும் மற்றும் வாங்கும் தூரத்திற்குள் (advance and exchange zone ) கைமாற்றி விடவேண்டும் ஒவ்வொரு தடவையும் பத்து செகண்ட் எடுத்தால் ஒரு நிமிடத்திற்கு மேல ஓடி 49 -59 செகண்டுகளில் ஓடி முடித்து விடணும். கடைசியில் பெஸ்ட் ஓட்டக்காரன்தான் ஓடணும் என்பார்.
இன்னும் ஒருவருக்கொருவர் வெற்றியை எப்படி அடைவது என்பதில் பகிர்வு மனம் இருக்கணும். நேரமும், வேகமும், செயலும் வாழ்க்கையின் வெற்றிக்கு அடிப்படைன்னு புரிய வைக்கிற விளையாட்டு தொடர் ஓட்டம் என்பார்.
மனோ சார் கல்லூரி படித்து முடித்தவுடன் பெங்களூரில் ஒரு கம்பெனியிலிருந்து வேலைக்கு அழைப்பு வர வேலைககுப் போய்விட்டார். அதன்பிறகு விடுமுறை வந்து விட்டால் ரோட்டோரத்திலும், பார்க்கிலும் அப்பாவும், மகனும் ஆஜராகி விடுவார்கள். அப்படி ஒரு நட்பு அப்பா பிள்ளைக்குள்ளே ஏற்படுவது அபூர்வம்தான். தாயும் மகளும் நண்பிகளாய் இருப்பதைப் பார்க்க முடியும். அதற்கான உடலியல் குறித்த தேவைகள் இருக்கிறது. ஆனால், ஆண்கள் வயதாக வயதாக விலக ஆரம்பித்து விடுவார்கள். சொல்ல முடியாத ரகசியங்கள் மகனுக்குத் தோன்றும். அதை அப்பாவுடன் பகிரமுடியாது. அதைத்தாண்டியும் நட்பாய் இருப்பது அபூர்வம். இடைவெளியற்ற தலைமுறைத் தடையைத் தாண்டி அப்பா – மகன் நட்பு என்பது பார்க்கவியலாது. அது வேறு ஒரு வகை அல்லது மனப்பக்குவம் இருந்தால் மட்டுமே அது நடக்கும்.
“எல்லாரும் வந்தாச்சாப்பா, இன்னிக்கு பாஸ்ட் ரன்னிங் ரெண்டு சுற்றுகள். முதல் அய்ந்து பேருக்கு இன்றையிலிருந்து நேசனல் போக கோச்சிங் ஆரம்பிக்கலாம்.” என்றதும் மகிழ்ந்து கைதட்டினார்கள்.
சிறிது நேரத்தில் எல்லோரும் குழும, ஓட்டம் துவங்கியது. சாருடன் தயாவும் சேர்ந்து ஓடினான். முதலில் வந்த அய்ந்து பேரில் தயாவும் ஒருவன். “நாளையிலிருந்து கோச்சிங் ஆரம்பிப்போம். யாரு, வேணும்னாலும் வரலாம்,” என்றார்.
“தயா, அகல ஸ்டெப் போட்டு ஓடுறது சரிதான். எப்படியும் நேஷ்னல் போகணும் பாத்துக்கோ. “
“நீங்க நேஷனல் போனீங்களா சார்..?”
“அதை ஏண்டா கேக்கிற, அப்பாவுக்கு எப்படியும் என்ன நேஷனல் அனுப்பனும்னு ரொம்ப ஆசை. நானும் அப்பா சொல் எதையும் தட்டாதவன்தானே, எனக்கு பெங்களூர்ல வேல கிடைச்சதும் வேலைக்குப் போறேன்னு சொல்லிட்டுப் போய்ட்டேன். அவுங்களுக்கு ஒண்ணும் சொல்ல முடியல. ஆனா, வேலக்கு போறதுக்கு முன்னாடி நேஷனல் போயிருடான்னு சொன்னாங்க. நா அப்ப வேல கிடைக்கலன்னானு எதிர் கேள்வி போட்டேன், அப்பா மௌனமாயிட்டாங்க. நான் அங்க போன பிறகு ஓடலாம்னு நினைச்சேன். ஆனா, ஆபீசு வேல உளுக்க எடுத்திட்டு. கிரவுண்டுக்கு போக முடியாம போச்சுப்பா. அப்பா சொன்னத கேக்காம வேலைக்குப் போனேன். அவனுவ என்னை அஸ்ஸாம் பார்டருக்கு மாத்திட்டானுவோ. அங்க உள்ள அட்டைகடி வேற. ஓட முடியாம போய்ட்டு. அப்பா சொல்லக் கேட்டிருந்தா நான் நேஷனல் என்னா, அதுக்கு மேலயும் போயிருப்பேன். வேலை பெரிசின்னு அப்பா சொல்லை தட்டிட்டு போயிட்டோமேன்னு இப்பவும் புலம்பிட்டுதான் இருக்கேன்.” என்றார்.
அவனுக்கு ஆச்சரியமா இருந்தது. “எப்போதும் அப்பாவோட இருக்கும் நீங்களா சார் அவுங்க சொல்ல கேக்கல?” என்று ஆச்சர்யமாகக் கேட்டான்.
“ஆமாடா., எல்லோருக்கும் அப்பா அப்பாவாத்தான் இருப்பாங்க. ஆனா, அவர் எனக்கு பெஸ்ட் பிரண்ட்பா. எல்லாத்தையும் பேசிக்கிடவும், பகிர்ந்து கொள்ளவுமான நட்பு. இப்படித்தான். நான் பெங்களூரு வேலைக்குப் போன ஒரு வருஷத்துல ஒரு வடக்கத்தி பொண்ணு என்ன லவ் பண்ணுனா. ரொம்ப அழகா, கலரா இருப்பா. நாம கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டா. நான் பதில் சொல்லல. ஏண்டா பதில் சொல்ல மாட்டேங்குறேன்னு கேட்டா. நா சொன்னேன். எங்கப்பாட்ட கேட்டு முடிவு சொல்றேன்னு சொன்னேன். அவ சிரிச்சா. நான் உன்னோடத்தாண்டா வாழ விரும்புதேன். நீ என்னடான்னா அப்பாட்ட கேக்கணும்ங்கிற அப்டினு சொன்னா. ஆமாம்; அது அவரு முடிவுதான்னு சொல்லி நான் சிரிச்சேன். அந்த வருஷ லீவுல ஊருக்கு வந்தப்போ அப்பாட்ட கேட்டேன். அதுக்கு அப்பா என்ன சொன்னாரு தெரியுமா..?” – மனோ சார் பேச்சை நிறுத்திவிட்டு அவனைப் பார்த்த போது அவன் என்ன பதில் சொல்வது என்று விளங்காமல் மௌனித்தான். இதையெல்லாம் கூட என்னிடம் பேசுகிறாரே என்பது போல அவனுக்குத் தோன்றியது.
“தயா, என்னாச்சி உனக்கு. நான் சொன்னதக் கேட்டல்ல..?”
ஆமாம் என்பது போலத் தலையாட்டினேன். எனது தலையாட்டுதலின் தவிப்பை சடக்கென புரிந்து கொண்டு பேச்சைத் தொடர்ந்தார்.
“ஏய் தயா, உன்ன மாதிரி உங்க சாரு என்ன பயந்து வாழச் சொல்லடா. எதையும் முழுசாத் தெரிஞ்சிக்கணும். சரின்னா உடனே வேகமாச் செயல்படணும். அதைத்தாண்டி உலகத்தில் ஒண்ணுமில்லை. அப்பன் புள்ளைக்கு ஒண்ணுமே தெரியாம வளர்க்கக் கூடாது. புள்ளையும் அப்பாவுக்கு தெரியாதுன்னு நினைக்கக்கூடாது. தயா, எனக்கு அவள் காதலைச் சொன்னவுடன் அந்த மகழ்ச்சியை அப்பாட்ட முதல்ல சொல்லணும்னு தோணிச்சி. உடனே சொன்னேன். அப்பா என்னா சொன்னாங்க தெரியுமா?”.
“டேய். மனுசன்னா லவ் வரும்டா. வராதவன் ஆம்பிளையே கிடையாது. நீயும் லவ் பண்ணியிருக்கணும், அப்பாட்ட வந்து கேக்கிறேன்னு நீ சொன்னதில் இருந்தே, உனக்கு லவ் வரல்லடா. அவளுக்கு இருக்க துணிச்சல் உனக்கு இல்லாததால நீ பண்ணிருக்க மாட்டேன்னுட்டார். அதுக்கப்புறம் அப்பா என்ன சொன்னாரு தெரியுமா. அதுதான் பேச்சோட ஹைலைட். ஏய், எப்போ பொண்ணும், ஆணும் பாத்து தங்களுக்குள்ள கல்யாணம் பண்ணிக்கிறாங்களோ அன்னிக்கித் தாண்டா ஆம்பிளையும், பொம்பிளையும் சுதந்திரமா வாழ முடியும். ஆம்பிளையெல்லாம் இப்போ சம்பாத்யம் பண்ற பொம்பளதான் வேணும்னு நினைக்கிறாங்க. பொம்பளைக்கும் மனசு இருக்குடா, அதுவும் சிந்திக்கும்னு என்னைக்கு ஆம்பிளை நினைப்பானோ அப்பத்தாண்டா சமத்துவம் வரும். நம்ம நாட்டிலும் இப்போதான் கொஞ்சமா மாறிக்கிட்டு வாரோம். எல்லாம் நல்ல விதமாய் நடக்கிற காலம் வரும்ன்னாரு”.
“சாரா இப்பிடி பேசுனாங்க”,
” ஆமாண்டா, நல்ல கிறிஸ்தவன் ஏழைக்கும் இயலாதவர்களுக்கும் முன்னுரிமை கொடுக்கணும். மத்தபடி இந்த வாழ்க்கையில என்னடா இருக்குன்னாங்க”
எனக்கு ஏதோ ஒரு பெரிய சீர்திருத்தவாதி பேசியது போல இருந்தது. அன்று முழுவதும் மரியநாதன் சாரும் அவருக்கு பக்கத்தில் மனோ சாரும் வானத்துக்கும் பூமிக்குமாக நின்றார்கள். அன்று இரவு முழுவதும் இருவரும் மனதிற்குள் நின்று கொண்டே இருந்தார்கள்.
அதிகாலை சூரியன் வரித்துக் கொள்ளும் முன்பே இருள் படிந்த பக்கங்களை அகற்றி விட்டு பறவைகளைப் பாடச் சொல்கிறது. மைதானம் தூக்கக் கண்களை கசக்கியபடி ஓடத் தொடங்குகிறது.
காலையிலேயே மைதானத்திற்கு வந்துவிட்ட அவன் விறுவிறுப்புடன் பயிற்சிகளைச் செய்ய ஆரம்பித்தான். அப்படியே சார் வந்து விட்டாரா என்றும் பார்த்துக் கொண்டான். எப்போதும் நேரத்தோடு வரும் அவர் இன்னும் வந்தபாடில்லை. ஏழு ரவுண்ட் ஓடி முடித்து எட்டாவது ரவுண்டில் சார் வந்து கொண்டிந்தார். மிஷின் கட்டிங் கிராப்புத் தலையோடு, வரிச்சி கம்பு போல நேராக நடந்து வந்து கொண்டிருந்தார்.
“என்ன தயா ஓடி முடிச்சாச்சா. இன்னும் ரெண்டு ஓடு. அதுக்குள்ள நான் வாமப் பண்ணிட்டு வாறேன்,” என்றவர் அவனோடு கலந்து கொண்டு நாலு ரவுண்டு ஓடி முடித்தார். “இன்னைக்கு ஒரு கல்யாண வூடுப்பா. காலையிலேயே போவணும். வா, இஞ்சி டீ பாய்கடைல குடிப்போம் ” என்று அவனை அழைத்துக் கொண்டு போனார்.
“சார், ஒண்ணு கேக்கிறேன் தப்பா நினைக்கக்கூடாது..?”
“சொல்லு. நேத்தே தான் சொன்னேனே. எதையும் மறைக்கக் கூடாது நல்ல பிரண்ட்ஷிப்பா பேசணும்னு. சும்மா சொல்லுடா”
“இல்ல சார் அந்த வடக்கத்திப் பொண்ணு..?”
“ஓ உனக்கும் காதலிக்கிற வயது வந்துட்டுடா. இப்பவே ஆரம்பிச்சுடாதே. நேசனல் ஜெயிச்சிட்டு அப்புறமா வடக்கத்தி என்ன வெளிநாட்டுப் பொண்ணையே பாரு” என்று அவனைப் பார்த்துச் சிரித்தவர், “அப்பா ஓகே சொல்லிட்டாரு. ஆனா, அவளுக்கு இடமாறுதல் வந்து விட்டது. என்னையும் கூப்பிட்டா. எனக்கு போகப் பிரியமில்ல. எனக்கும் காதலுக்கும் சேத்து டாட்டா சொல்லிட்டு போய்ட்டா. என்ன சஸ்பென்ஸ், திரில் எல்லாம் காணாமப் போயிடுச்சா. டேய், ஒழுங்கா ஓடுற வேலயப்பாரு. அப்பா சொலவாங்க, ஓட்டத்த விளையாட்டா தேர்ந்தெடுத்தவன் வாழ்க்கையில ஜெயிக்கிற வரைக்கும் அதிலேயே தான் இருக்கணும். இல்லாட்டி ஓட்டமும் போயி வாழ்க்கையும் போயிரும்டா..”
ஆறுமாசத்தில் என்னை கடும் பயிற்சியில் ஈடுபட வைத்தார். மாவட்ட மாநிலப் போட்டிகளில் வெற்றி பெற்றாகி விட்டது. அவர்களது ரிலே அணியில் வேகமா ஓடும் ஒரு பையன். அப்போது நேஷனல் அத்லட்டிக் போட்டிகள் சண்டிகரில் நடைபெறுவதாக அறிவிப்பு வந்தது. நன்றாக பயிற்சி எடுத்திருந்தான். கண்டிப்பா 1500, 3000 மீட்டர் போட்டிகளில் இரண்டு கப்கள் வாங்குகிற உறுதி இருந்தது. மாநில விளையாட்டு ஆணையத்தில் எல்லா சான்றிதழ்களும் பெற மனோ சார் அவனுடன் இருந்து உதவி செய்தார்.
அன்றிரவு அவனுடன் காலரியில் தனது வாழ்வைப் பேசிக் கொண்டிருந்தார். சாரின் அம்மா திடீரென இறந்த பிறகு அவரது அப்பா எல்லாவற்றையும் இழந்தது போல ஆகிவிட்டார்.
“அப்பா இப்படி இருக்காதீங்க. என்னோட வாங்கன்னு கூப்பிட்டதுக்கும் இல்லப்பா நான் இந்த பள்ளிக்கூடத்தையும் வீட்டையும் விட்டு வரமுடியாதுன்னு சொல்லிட்டு பேசமுடியாமல் அழுதார். அதுலேர்ந்து சரியா ஒரு வருசத்துல எறந்து போயிட்டாங்கப்பா. எனக்கு என் வலதுகைய வெட்டிப் போட்டாப்புல ஆயிடுச்சுப்பா..” சொல்லிட்டு கொஞ்ச நேரம் மவுனமாயிட்டார்.
அன்றிரவு அதுக்கு மேல் இருவரும் பேசிக் கொள்ளவில்லை.
ஊருக்குத் திரும்பிய பத்தாவது நாள் டெல்லி செல்ல அவனுக்கும் கோச்சிக்கும் மட்டும் அழைப்பு வந்தது. மனோ சார் அரசு பயிற்சியாளராய் இல்லாததால் அவருக்கு அழைப்பு இல்லை. அதைப்பற்றி சாரும் கவலைப்பட்டதில்லை.
அவனுக்கு மனம் தாளவில்லை. மனோ சார் வீட்டுக்குப் போய் சண்டிகர் போய்வர அழைத்தான்.
“ஏப்பா.. தயா நீ நல்லபடியா போய் ஜெயிச்சிட்டு வா. அதுதான் எனக்கு வேணும். என் மனசு இப்போ நிறைஞ்சு போயி இருக்குடா. உங்க டிரில் சார் சொன்னத நிறைவேத்தி வச்சிட்டேன் அது போதும். “
“இல்ல சார்.. நீங்க இருந்தீங்கன்னா எனக்கு மாரல் சப்போட்டா இருக்கும் சார்.”
“சின்னப்புள்ளயா பேசாதடா. வெற்றி கோப்பையைக் கொண்டு வரணும். அதைச் செய் முதல்ல”, தோளில் தட்டிக் கொடுத்து அனுப்பி வைத்தார்.
“தயா, எங்கப்பா சாவக் கிடக்கையில ஒண்ணு சொன்னாங்க. அதைச் சொல்றேன் கேட்டுக்கோ. நான் விளையாட்டுல சாதிக்கணும் நினைச்சேன். ஆனா, வறுமை என்னைத் தின்னு போடுச்சி. அதையும் தாண்டி மாவட்ட அளவில் ஜெயிச்சேன். உன்ன பெரிய ஸ்போர்ட்ஸ்மேனா பாக்கணும்னு ஆசைப்பட்டேன். நீயும் ஸ்டேட் லெவல்லே வந்தே. உன்னிட்ட வருகிறவங்க அதுக்கும் மேல போகணும் பாத்துக்கன்னு சொன்னாங்க. அதை நீ நிறைவேதித்தி தரணும். அவ்வளவுதான் எனக்கு வேணும்.” என்ற மனோகரன் சாமுவேல் சார் காலில் அவன் விழுந்தான். அவர் அவன் தோளைப் பிடித்து தூக்கிவிட்டு நெற்றியில் சிலுவையிட்டு அனுப்பி வைத்தார்.
டெல்லி செல்லும் ரயில் எல்லாவற்றையும் பின்னோக்கி தள்ளிவிட்டு அவனோடு ஓடி வருவது போல இருந்தது. மனோ சார் கடைசியாகச் சொன்ன வார்த்தைகள் மட்டும் எனது பிடரியைப் பிடித்து உலுப்பிக் கொண்டே இருக்கிறது.
அவனும் நண்பர்களும் கடுமையாக பயிற்சி எடுத்து தொடர் ஓட்டத்தில் முதல் பரிசு வாங்கி இருந்தார்கள். அவன் 1500மீ ஓட்டத்தில் இரண்டாவது வந்திருந்தான். வெற்றி மேடையில் கைகளை நீட்டும் போது மனோ, மரியநாதன் இருவரும் ஞாபகத்தில் வந்தாரர்கள்.
ஊருக்கு திரும்பி வந்து மனோ சாரை இனிப்புடனும் கோப்பையுடனும் போய்ப் பார்த்தான். அவர் மிகவும் ஆனந்தமாய் உணர்ந்தார். என் ஆசையை நிறைவேற்றி விட்டாய் என்று கண்களில் கண்ணீர் வர நா தழுதழுக்கச் சொன்னார்.
“எனக்கு எங்க அப்பா அதுதான், உங்க சார் ஒண்ணு சொன்னார். அதை நான் உன் மூலமா நிறைவேத்திட்டேன். எனக்காக நீ ஒன்ன நிறைவேத்தி தருவியா?” – மீண்டும் குரல் கம்ம கேட்டார்.
“கண்டிப்பா செய்வேன் சார்” என்றேன் நான். அவர் என்னை ஏறஇறங்கப் பார்த்து விட்டு முகத்தில் நம்பிக்கை ஒளியோடு சொன்னார்.
“என்னோட அப்பா எங்கிட்ட கொடுத்த பேட்டன் இது. இதை தரும் போது அவர் சொன்னது இப்பவும் என் காதுல கேட்டுக்கிட்டேதான் இருக்கு. அந்த வார்த்தைகள் தான் என்னை இதுவரை இயக்கியது. இதை அதனால்தான் உன்னிடம் ஒப்படைக்கிறேன். சரியா?” என்றவரின் முகம் பிரகாசமாகி விரிந்தது.
அப்படி என்ன சொல்லி இருப்பார்? அவர் பேச்சின் இடைவெளி பொறுக்காமல் மனம் அல்லாடியது. அவர் தொடர்ந்தார்.
“தம்பி, இது பேட்டன்னு மட்டும் நினைச்சிடாதே. இதுலதான் நான் கொண்ட ஆசை, கனவு வெற்றி எல்லாம் இருக்கு. அதைத்தான் உன்ட்ட ஒப்படைச்சிருக்கேன். தெரிஞ்சிக்கோ. இந்தக் குச்சி ஒருநாள் உலகப் போட்டிக்குப் போகணும். அதை சரியான ஆள்ட்ட ஒப்படைக்கிற வரைக்கும் ஓடிக்கிட்டேயிரு”.
********