பிக்காஸோவின் மண்டைக்குள் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது?
உடலைத் துண்டு துண்டாக வெட்டி
தோள்களில் கால்களைப் பொருத்து
கால்கள் இருந்த இடத்தில் கைகளை வைத்துத் தைத்துவிடு
தொடைக் கவட்டையில் கண்ணை வரை
நெற்றியில் ஆண் பெண் பிறப்புறுப்புகளை நட்டு வை
உருவங்களைச் சிதைத்து விகாரப்படுத்து
காண்போர் கண்களைப் பிடுங்கி தரையில் போட்டு மிதி
விமர்சகர்களின் மண்டையைப் பிள
மூளையை மிளகுத்தூள் இட்டு வாணலியில் வறுத்தெடு
பேயாட்டம் ஆடுகிறது அவரது வல்லமை
கலை வரலாறு பாய்ந்து கடக்கிறது ஆயிரத்தாண்டுகளை
ஒரு தீற்றலில் ஓரு வரைகோட்டில்
புதுமை பரிசோதனை புதிய இஸங்களின் உருவாக்கம்
பல்வேறு ஊடகங்களில் நிபுணத்துவத்தை வெளிப்படுத்தும்
உவர்ப்பு, புளிப்பு, கசப்புச் சுவைகளின் பன்முகத்தன்மை
புற – அக சித்தரிப்புகளினூடாக
காரமான மகிழ்வுகளின் பயணம்
கலையின் பெருவிருந்து
பிக்காஸோவுக்குள் ஆன்மிகம் இல்லை என்கிறார்
கலையில் ஆன்மிகத்தை வலியுறுத்த
ஒரு நூலே எழுதிய காண்டின்ஸ்கி
அப்பட்டமான ஆன்மிகவாதியும் மெய்ஞானத்தின்
பிரதிநிதியுமான நான் கேட்கிறேன்
பிக்காஸோவுக்கு ஆன்மிகம் தேவையா?
அவர் கலையின் புத்தன் அல்ல; ஸோர்பா
நிச்சயமாக, வாழ்விலும்தான்
அவரின் ஒவ்வொரு காதலும் ஒவ்வொரு படைப்பும் கொண்டாட்டமே
வெளிப்பாட்டுச் சுதந்திரம்
கட்டற்ற கலைக்குத் தன்னை ஒப்புக்கொடுத்தல்
ஆனால் ஏன் இந்த விகாரம் கொடூரமான சித்திரவதை?
தனது குழந்தைகளைக் கூட
உருத் திரிபுகளின் கடூரத்தோடு வரையக் காரணம்
கிறுக்குத்தனமா, உளவியல் நோயா, மனவக்கிரமா, catharsis-ஆ?
படைத்தலின் ஒவ்வொரு செயலும்
அழித்தலின் செயலும்தான் பிக்காஸோவுக்கு
அவருக்குள்ளிருந்து பீறிட்ட காட்டாறு
பிரளயமாகி அடித்துச் சென்றது
அழகியல் ரசனைகள் ஓவிய இலக்கணங்கள் கலைக் கோட்பாடுகள்
வரையறைகள் விதிமுறைகள் விமர்சனங்கள் அனைத்தையும்
மரபுகள் ஸ்தம்பிக்கின்றன
நவீனத்துவம் முறுவலித்து நடக்கிறது
தகர்ந்து சிதறிய புனிதங்களின் சிதிலங்கள் மீது
காலப் பெருவெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட முடியாமல் மிதந்துகொண்டிருக்கிறது
பிக்காஸோவின் கபாலம்
அதில் வந்து அமர்கிறது
அவர் வரைந்த ஆலிவ் இலை வெண்புறா.
பூங்கொத்துகளுக்கு விடைகொடுப்பு
நமது விடைபெறல் மௌனமாக நிகழ்கிறது
இன்னும் சிமெண்ட் ஈரம் காயாத கல்லறைக்குள்
அடக்கம் செய்யப்பட்டுள்ள உறவுக்கு
ஒரு நிமிட அஞ்சலி செலுத்துவது போல
விசும்பல் துக்கம் ஆற்றாமை எதுவும் வேண்டாம்
பசுமை வெளிறிய நினைவுகளும் தேவையில்லை
ஆழ்ந்த பெருமூச்சுகளால்
நாசி ரோமங்களைக் கருக்கிக்கொள்வதும் அர்த்தமற்றது
நாட்களோ ஆண்டுகளோ
பத்தாண்டுகளோ ஆயுள் பரியந்தமோ
கசந்த பின் எல்லா உறவுகளும்
வெறும் இன்பச் சிற்றுறவு மட்டுமே
இரவின் ராணி என்று போற்றப்படும் நிஷாகந்தி
மிகவும் தனித்துவமான மற்றும் கவர்ச்சியான மலர்.
நள்ளிரவில் – அதுவும் இலை விளிம்பில் – பூத்து
காலையில் வாடிவிடக் கூடியது
எவ்வளவு நறுமணம் எவ்வளவு நுண்அழகுடன் இருந்தால் என்ன
சூடத் தகாது; பூங்கொத்துகளுக்கும் ஆகாது
அன்பு, பாசம், காதல், நட்பு
உறவுகளின் இனிமைகள் வற்றிக் கசந்து காரமேறும்போது
பிரிவு தவிர்க்க முடியாதது; நல்லதும் கூட
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நமது விலக்கம்
மானசீகக் கையொப்பமிடப்படுகிறது
இறுதியாகக் கைகுலுக்கி
கடைசிப் புன்னகையுடன் விடைபெறும்போது
எடுத்துக்கொள்கிறோம் அவரவர் கொலை ஆயுதங்களை.
பேரற்புதம்
மாயாஜாலக் காளான்கள் முளைத்த அவனது
மூளையிலிருந்து பிரவகிக்கும் சொற்களில்
பிதற்றல்கள் மறைபொருள்கள் மெய்ம்மைகள் கலந்திருக்கலாம்
மிகையுணர்ச்சியின் அதீத அழகியலோடு கட்டமைக்கப்பட்ட வரிகளில்
நீங்கள் ஒவ்வொரு படிக்கட்டுகளாக இறங்குகிறீர்கள்
அவன் இரண்டு மூன்று படிக்கட்டுகளாகத் தாவி ஏறுகிறான்
மொழியின் தேவன், இலக்கியச் சித்தன், எழுத்து ஞானி
என்றெல்லாம் உங்களால் துதிக்கப்படும் அவன்
மனநலக் காப்பகத்தில்
மூன்றாண்டுகள் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தவன்
அமாவாசை பௌர்ணமி கிரகணக் காலங்களில்
மூளைப் புயல்கள் தலை கடக்க
இரவு பகல் இடையறாமல்
பித்தப் பேருண்மைகளைக் கொதி நீரூற்றாகப் பீறிட்டவன்
கபாலத்தில் மூளை குப்புற மிதக்கும் அளவிலான மதுப் பழக்கத்தால்
குடல், கணையம், ஈரல், இத்யாயிகள் பழுதானது
இலக்கிய உலகத்துக்கே தெரியும்.
அவனது அகால மரணம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே
சவ அடக்கத்தில் முப்பதுக்குச் சமீபமானவர்கள் கூடியதுதான்
நம்பவியலாத பேரற்புதம்.