இணைய இதழ் 115கட்டுரைகள்

H.W.நெவின்சனின், ‘இந்தியாவில் புதிய எழுச்சி’ நூல் குறித்த வாசிப்பனுபவம் – பீட்டர் துரைராஜ்

கட்டுரை | வாசகசாலை

வங்கப்பிரிவினை முடிந்தபிறகு இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்த ஆங்கிலேயப் பத்திரிகையாளர் H.W. நெவின்சன் எழுதிய பயண நூல் ‘இந்தியாவில் புதிய எழுச்சி’. இங்குள்ள நிலைமைகள் பற்றி லண்டன் – மான்செஸ்டர் கார்டியன் நாளிதழுக்கு தொடர் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அதன் தொடர்ச்சியாக, தமது அனுபவங்களை ‘The New Spirit in India’ என்ற நூலை 1908-இல் எழுதியுள்ளார். அதன் தமிழாக்கம்தான் – “இந்தியாவில் புதிய எழுச்சி”.

இந்த நூல் பலவிதங்களில் முக்கியத்துவம் வாய்ந்த நூல். ஒரு பயண நூல் என்று இதனை சுருக்கிவிட முடியாது; துள்ளலான நடையில், பத்திரிகையாளருக்கு உரிய, கூரிய பார்வையோடு எழுதப்பட்டுள்ளது. சென்னை, கல்கத்தா, வாரணாசி, ஒரிசா, டாக்கா, அலகாபாத், சூரத் காங்கிரஸ் மாநாடு என பல இடங்களுக்குச் சென்று, அங்குள்ள சமூக, அரசியல் சூழ்நிலையை ஆழமாக நெவின்சன் பேசுகிறார். 1905-இல் நடைபெற்ற வங்கப் பிரிவினையால், இந்திய தேசிய காங்கிரஸ் அதுவரை கேட்டுவந்த பொருளாதார கோரிக்கைகள் என்பதிலிருந்து ‘அந்நிய பொருள் பகிஷ்கரிப்பு’ என்ற இயக்கம் வழியாக அரசியல் வடிவம் பெறுகிறது என்று குறிப்பிடுகிறார்.

நெவின்சன் இயல்பிலேயே சிவில் உரிமைகளை வலியுறுத்துபவர். 1957 கலகத்திற்குப் பிறகு, இந்தியா அரசியின் ஆட்சியின் கீழ் வந்துவிட்ட பிறகு தகுதியுள்ள இந்தியர்களுக்கும் அரசாங்கத்தில் பதவிகளை வழங்க வேண்டும் என்று கூறி வருபவர். பெண்களின் வாக்குரிமைக்காக நடைபெற்று வந்த இயக்கத்தின் முக்கியமான செயற்பாட்டாளர். ஆங்கிலேய அரசின் காவல்துறை, தபால் – தந்தித்துறை மூலம் இந்திய மக்களின் கடிதங்களைப் படித்து உளவறிதல், தந்திகளை அரசியல் நோக்கங்களுக்காக தாமதப்படுத்துதல், நிறுத்தி வைத்தல் போன்ற நடவடிக்கைகளை விரும்பாதவர் என் பல விதங்களில் இந்தியாவின் மீது கரிசனம் கொண்ட ஆங்கிலேயர் ஒருவரின் எழுத்தில் இந்தியாவைப் படிப்பது ஒரு வித்தியாசமான அனுபவம்தான். இந்தியாவில் இவரையும் உளவுத்துறை கண்காணித்து வந்துள்ளது என எழுதுகிறார்.

இவர் வந்தது, சிப்பாய் கலகம் நடந்து முடிந்த ஐம்பதாவது ஆண்டு(1907); அதன் நினைவு நாளை ஆங்கிலோ இந்தியர்கள் நடத்தி இருக்கிறார்கள். (வெற்றி விழா?) அந்த தினத்தில் ஐக்கிய மாகாணத்தில் (உத்திரப் பிரதேசம்) இருந்த ஆங்கிலேயர்கள் பயந்து கோட்டைக்குள் குழுமினார்கள் என்று எழுதுகிறார். லண்டனில் இருக்கும் ஆங்கிலேயர்களுக்கு, இந்தியாவில் இருந்து வரும் ஆங்கில நாளிதழ்கள்தான் செய்தியை அளிப்பவை. அவைகளை ஆங்கிலோ- இந்தியர்கள் நடத்தி வருகிறார்கள். அவர்கள் இந்தியர்களை இழிவாக, எள்ளல் செய்யும், வெறுப்பை உமிழும் செய்திகளைத் தந்து வந்தார்கள் என்று எழுதுகிறார் நெவின்சன். முதல் இந்திய விடுதலைப் போரில் இந்தியா தோல்வியடைவதற்கு, ஆங்கிலோ இந்தியர்கள், ஆங்கிலேயர்களுக்கு அளித்த ஆதரவு முக்கியமானதாகும். எனவே வெறுப்பு தொடர்ச்சியாகவே வந்திருக்கக் கூடும். ஆங்கிலோ இந்தியர்கள் தரும் செய்தி, ஆங்கிலேய அரசின் நடவடிக்கைகளிலும் வரும் என்கிறார் நெவின்சன்.

பொதுவாக அபுனைவு பற்றிய நூல்கள் தமிழ் உலகில் பேசப்படுவது குறைவு. ஒருசில தெரிவுசெய்யப்பட்ட நூட்களையாவது அறிமுகம் செய்வதும், பேசுவதும், அவைகளுக்கு விருது தருவதும் அவசியம் என்று நினைக்கிறேன். காந்தி கல்வி நிலையம் அதன் வாராந்திர புதன் படிப்பு வட்டத்தில் இந்த நூல் குறித்து பேசியிருக்கிறது.

‘சமீபத்திய நிகழ்வுகளின் சுருக்கம்’ என்று முதலில் ஓர் அறிமுகம் தருகிறார். இதைத்தொடர்ந்து இந்தியாவின் சேவகன், நவாப், எலிகளும் மனிதர்களும் (பிளேக் பற்றி), ஒரிஸ்ஸா வெள்ளம், மதராஸ் – தென்னிந்திய மாநகரம், விவசாயிகளின் சுமை, ஆரிய சமாஜம், மூன்று வங்காளிகளும் பத்திரிகைகளும், பின்னுரை போன்ற 17 அத்தியாயங்கள் உள்ளன. வார்த்தைகள் நர்த்தனம் ஆடுகின்றன. பொருத்தமான படங்களும் உள்ளன. இந்த நூல் சமூக, பொருளாதார, வரலாறு பற்றிய ஒரு முக்கியமான ஆவணம் என்றே கருதுகிறேன்.

ஆட்சியாளர்களில் ரிப்பன், மன்றோ ஆகியோரை இந்திய மக்கள் நேசித்ததை இதில் குறிப்பிடுகிறார். ” ‘தீவு’ போன்ற அந்தப் பகுதியில் குதிரை மீது அவர் அமர்ந்திருக்கும் சிலையைக் கடந்து செல்லும் ஹிந்துப் பெண்கள் கையிலிருக்கும் கூடைகளைக் கீழே வைத்துவிட்டு தலைகுனிந்து வணங்கிச் செல்வதைப் பார்த்திருக்கிறேன். நம் ஊரில் அத்தகையச் சிலைகளுக்கு நாம் உரிய மரியாதை செய்வதில்லை. அவர் வரிகளைக் குறைத்தார்; அந்தப் பகுதிக்குத் தண்ணீர் தந்தார்; நீதியை முறையாக நிலைநாட்டினார். அவற்றைப் போல் அவருடைய நினைவும் உயிர்ப்புடன் இருக்கிறது. அவர் கற்பித்த எடுத்துக்காட்டான விஷயங்களைப் பார்க்கையில், ஆங்கிலேயர்கள் நாம் செய்யவேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன என்பதை மக்கள் கருதுகின்றனர்: கழிவுநீர் வடிகால் அமைக்கலாம். பாலங்கள் கட்டலாம், லஞ்சம் வாங்காமல் சச்சரவுகளுக்குத் தீர்வு சொல்லலாம் ” என்று மதராஸ் – தென்னிந்திய மாநகரம் கட்டுரையில் எழுதுகிறார். ‘திருமணமான அனைவருக்கும் தனித்தனி அறைகள் கொடுக்க இயலாத நிலை. எந்த ஜோடி அன்றைக்கு அறையைப் பயன்படுத்திக் கொள்வது என்பதை அந்தத் தாய்தான் முடிவு செய்வார்’ என்று மயிலாப்பூரில் உள்ள ஒரு குடும்பத்தை வருணிக்கிறார். மதராஸ் கடற்கரையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் பற்றியும் (உரைகள் ஆங்கிலத்தில் பேசப்பட்டுள்ளன), அதில் தமிழ்க் கவிஞர் (பாரதி) பாடியது  பற்றியும் கூட எழுதியுள்ளார். இப்படி சுவையான சம்பவங்களையும் போகிற போக்கில் சொல்லிச் செல்கிறார்.

சூரத் நகரில் 1908-இல் காங்கிரஸ் கட்சி மாநாட்டின் போது தீவிரவாதிகளும், மிதவாதிகளும் கடுமையாக மோதிக்கொண்டனர். மேடையில் கைகளை கட்டிக்கொண்டு பார்வையாளர்களைப் பார்த்து நின்றிருந்த திலகர் மீது காலனி வீசப்படுகிறது. இந்த அத்தியாயத்தின் தலைப்பு ‘மராத்திய காலனி’. இந்த மாநாட்டு நிகழ்வுகளை மிகுந்த பொறுப்போடு, முழுமையாக இருந்து எழுதியிருக்கிறார். இரண்டு குழுக்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற இவரது விருப்பம் ஒவ்வொரு வார்த்தைகளிலும் தெரிகிறது.

‘வசந்த விழா’வில் சமஸ்தான அரசர்களை ஆங்கிலேயர்கள் பயன்படுத்திக் கொள்வதைச் சொல்கிறார். ராஜவம்சத்தினர் அதிகாரத்தை பறைசாற்றும் அடையாளமாக சிறிய பீரங்கிகளை வைத்துக் கொள்ள பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவின் பழைய ராஜாக்களை அனுமதித்திருந்தது என்கிறார். ‘இந்தியாவின் சேவகன்’ என்று காங்கிரசின் தலைவராக இருந்த, பூனாவில் ‘சர்வன்ட்ஸ் ஆஃப் இந்தியா’ தொடங்கிய கோபால கிருஷ்ண கோகலேயை விவரிக்கிறார். ‘தீவிரவாதி’ பாலகங்கார திலகர் பற்றி எழுதுகிறார். ‘அவர் பேசும் ஹிந்துயிசம் நடைமுறையில் பெரும்பாலும் முற்போக்கு சக்திகளுக்கு எதிரானது. மேற்குலகிலிருந்து இறக்குமதி ஆகியிருக்கும் பொருள்முதல்வாதச் சிந்தனைகளை எதிர்ப்பதில் அவருக்கு துணை நிற்கிறது’ என்கிறார்.

வெள்ளத்தை, வறட்சியை, வனச்சட்டத்தால் கிராம மக்கள் வாழ்வுரிமை இழந்ததை நுட்பமாக விவரிக்கிறார். ஓர் ஆங்கிலேயர், அதுவும் தற்காலிக சுற்றுப்பயணம் வந்தவர் இப்படி எழுதுவது வியப்புக்கு உரியது. குத்தகைச் சட்டங்கள், கடன், லேவாதேவி கொடுமை, வறட்சி, வெள்ளம், பொதுப் பயன்பாட்டில் இருந்த விளைச்சல் நிலம் வனநிலமாக மாற்றப்பட்டதால் கால்நடை வளர்ப்பில் ஏற்படும் நெருக்கடி, சிலந்தி்வலையை ஒத்த டாக்கா மஸ்லின் துணி என பலவும் இந்த நூலில் வருகின்றன.

ஆங்கிலோ இந்தியப் பத்திரிகைகள், இந்தியர்கள் பற்றி எழுதி வரும் வெறுப்பான செய்திகளை கண்டுகொள்ளாத ஆங்கிலேய அரசு, பிரதேச பத்திரிகைகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கச் சட்டம் போடுகிறது. வங்கப்பிரிவினையின் போது தொடங்கப்பட்ட ஆங்கிலேயப் பொருள் பகிஷ்கரிப்பு என்பது காங்கிரசின் வேலைத் திட்டமாக – நாடு முழுவதும் மாறுகிறது. இந்தியர்களை உதாதீனப்படுத்தும் போக்கினால், காங்கிரசின் நடவடிக்கைகள் தீவிரம் அடைகின்றன என்று இந்தியாவில் ஏற்பட்டு வந்த மாற்றங்களை சரியாகவே அவதானித்துள்ளார் நெவின்சன்.
அக்களூர் இரவி இந்த நூலை நன்றாக மொழிபெயர்த்துள்ளார். பதிகம் பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது.( 350 பக்கங்கள் – ரூ. 275).

ppeterdurairaj@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button